Sunday 17 January 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 24 கே ஏ கேரளீயன் : கம்யூனிச இயக்கத்தின் முன்னோடி

 


நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -- 24

கே ஏ கேரளீயன் : கம்யூனிச இயக்கத்தின் முன்னோடி

--அனில் ரஜீம்வாலே

நியூஏஜ் (2020டிசம்பர் 6 –12 இதழ்)

            அவருடைய உண்மையான பெயர் கடையப்பிரத் குங்கப்ப நம்பியார். கேரளாவின் கண்ணூர் மாவட்டம் சிரக்கல் தாலுக்காவின் செருந்தாழம் கிராமத்தில் 1910 ஏப்ரல் 15ம் நாள் பிறந்தார். (இந்தச் சிரக்கல் தாலுக்காவின் பெருவமூரில் பிறந்தவர் நடிகர் எம் என் நம்பியார்). செல்வம் மிக்கப் பெரும் நிலக்கிழார் குடும்பம். குங்கப்பா ஐந்தாவது பாரத்திற்குப் பிறகு மயிலவிக்கு அழைத்துவரப்பட்டு பேரளச்சேரி ஆங்கில நடுநிலைப் பள்ளியில் படித்தார். அந்தப் பள்ளி புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் ஏ கே கோபாலன் தந்தையார் நிர்மாணித்து நடத்தியது. குங்கப்பாவின் வாழ்வில் அந்தப் பள்ளி பெரும் திருப்புமுனையானது.

            அங்கே பள்ளி ஆசிரியர்களில் ஒருவரான ஏ.கே.கோபாலனைச் சந்தித்தார். பிறகு அவர்கள் நல்ல நண்பர்களாகவும் தோழர்களாகவும் ஆனார்கள். தன்னுடைய மாணவனே தனக்கு அரசியல் குருவானதாக ஏகேஜி கூறுவது வழக்கம்! அதிகாரத்துவம் மிகுந்த தனது மாமன்களோடு பிணங்கி குங்கப்பா தனது தாயை அழைத்துக் கொண்டு 1923ல் மீண்டும் செருந்தாழம் வந்தார். பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து அங்கே தங்கினார். அவருடைய குடும்பம் மாமன்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதால் அவருடை தந்தையால் மனைவியையோ குழந்தைகளையோ தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ள முடியவில்லை. குங்கப்பா பையனூர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 

அரசியலில்

            குங்கப்பாவின் தந்தை V P குஞ்சிராமன் குஞ்சிமங்கலம் கிராம ‘அதிகாரி’ யாக இருந்தார். (தாய் கடையபிரத் பார்வதி அம்மா). பணிநிமித்தம் அநேக இடங்களுக்குச் சென்று வரவேண்டி இருந்த அவர் வீடு திரும்பும் வழியில் தி கேரள சஞ்சாரி, தி கேரள பத்திரிகா, மாத்ருபூமி முதலான பத்திரிக்கைகளை வாங்கி வருவார். அவற்றிலிருந்து குங்கப்பா தேசிய இயக்கம் பற்றிய தகவல்களைப் பெற்றார். தந்தையும்கூட தேசிய இயக்கச் சார்புடையவராக இருந்ததால் தனது மகனின் ஆர்வத்தோடு ஒத்துழைத்தார்.

            1928 மிகவும் முக்கியமான ஆண்டு, சைமன் கமிஷனைப் புறக்கணித்துப் போராட்டங்கள் நாடு தழுவிய இயக்கமாக வெடித்தன. பேரணியில் லாலா லஜபதி ராய் கடுமையாகத் தாக்கப்பட்டு பின்னர் அதன் காரணமாகவே மரணமடைய, நாட்டில் பெரும் போராட்டத் தீ பற்றி எரியத் தொடங்கியது. மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். அந்தப் போராட்டத்தில் குங்கப்பா தீவிரமாகப் பங்கேற்றார்.

            அவருடைய தந்தை அவரைத் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத் திருவையாறு சமஸ்கிருதப் கல்லூரியில் சேர்க்க, அங்கே குங்கப்பா ஆழமாகச் சமஸ்கிருதம் கற்றார்.  அதே நேரத்தில் தேசிய இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்க எண்ணி இயக்க நடவடிக்கைகளில் இறங்கினார். அதனால் கல்லூரியை விட்டு விலகிவிடுமாறு கல்லூரி அதிகாரிகள் அவரை நிர்பந்திக்க, அதை அவரே சொந்தத் தீர்மானமாக மகிழ்ச்சியாக நடைமுறைப்படுத்தி விட்டார்.

தேசியத்தின் இருப்பிடமாக விளங்கிய கங்கன்கார்க் பகுதியின் விக்ஞான் தயினி பள்ளியில் சேர்ந்தார். ‘காந்திஜிக்கு ஜே!’, ‘பாரத் மாதா கீ ஜே!’ என்ற முழக்கங்களோடு அப்பள்ளி 1926 ஏப்ரலில் துவக்கப்பட்டது. தேசியவாதிகளான சி கண்ணன் நாயர், பி கேளு நாயர், K T K R நம்பியார் முதலானவர்களால் நிறுவப்பட்டது. காசர்கோடு–மலபார் பகுதியில் தேசிய இயக்கத்தின் ஒரு மையமாகத் திகழ்ந்தது.

பையனூரில் 1928 ஏப்ரல் 25 –27 தேதிகளில் ஜவகர்லால் நேரு தலைமையில் நடைபெற்ற கேரள பிரதேசக் காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தன்னார்வத் தொண்டனாகப் பணி செய்யும் வாய்ப்பு குங்கப்பாவுக்குக் கிடைத்தது.

ஆங்கிலேயரின் உப்புச் சட்டத்தைத் தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரை மூலம் 1930 ஏப்ரல் 6ல் மீறினார் காந்திஜி. கேரளா முழுவதும் பாத யாத்திரைகள் நடத்தப்பட்டன. சத்தியாகிரகிகள் காளிகட்’டிலிருந்து (தலைச்சேரி, கண்ணூர் வழியாக) பையனூர் வரை 130 கி.மீ. மேற்குக் கடற்கரை ஓரமாக நடந்தனர். (கோழிக்கோடைத்தான் ஆங்கிலேயர்கள் காளிகட் என்றனர்; அங்கிருந்து புத்தக பைண்டிங்கிற்கான காலிகோ துணி ஏற்றுமதியானதால் இப்பெயர் வந்ததாகக் கூறுவர். கள்ளிக்கோட்டை என்றும் கூறுவதுண்டு.) பத்திரிக்கைகளின்வழி செய்தி அறிந்து குங்கப்பா தன்னையும் ஒரு தொண்டராகக் காசர்கோடு மாவட்டத்தின் ஹாஸ்டர்க்- தாலுக்காவில் இருந்து பதிவு செய்தார். கே மாதவன், கே பிஆர் கோபாலன், கிருஷ்ணப் பிள்ளை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காளிகட், வெர்கோட் இல்லத்தில் சத்தியாகிரக முகாம் அமைக்கப்பட்டது. குங்கப்பா உட்பட 33 பாத-யாத்திரிகள் தேர்வு செய்யப்ட்டனர். சென்ற இடமெல்லாம் அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்டத்தை உடைத்துப் பையனூரில் உப்பு எடுத்து மக்களுக்கு விற்றபோது அவர்கள் அதை ஒரு ‘பிரசாதமாக’ பக்திபூர்வமாகப் பெற்றனர்.

குங்கப்பா ‘கேரளீயன்’ ஆனார்

            ஒரு விவசாயத் தலைவரான விஷ்ணு பாரதீயன் (விஷ்ணு நம்பீசன்) குங்கப்பா வீட்டிற்கு வழக்கமாகச் செல்ல, விரைவில் அவர் குங்கப்பாவின் நண்பரானார். கிருஷ்ணப் பிள்ளை மற்றும் கோபாலனும் அவரது நண்பர்கள் குழுவில் இருந்தனர். 

1931ல் காந்தி –இர்வின் உடன்பாட்டில் கையெழுத்திட்டு திரும்பிய பிறகு உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். தேசம் முழுவதும் அதனைக் எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கண்ணூரிலும் எதிர்ப்புக் கூட்டங்கள் நடைபெற்றது மட்டுமின்றி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ‘ஹர்த்தால்’ செய்தனர். குங்கப்பா மிகத் தீவிரமாகச் செயல்பட்டு விளக்கும்தாரா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கெடுத்தார். அங்கிருந்து அவரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் விடுவித்து விடுவதாகப் போலீஸ் கூறியும் அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். 

விசாரணையின்போது விஷ்ணு நம்பீசன் கூறினார்: “நான் பாரதீயன்” (அதாவது நான் பாரதத்திற்காக இருப்பவன்). அதனைக் கேட்டுச் சீற்றமடைந்த மாஜிஸ்டிரேட் கூறினார்: “நான் கூட பாரதீயன்தான்”. விஷ்ணு பதிலடி கொடுத்தான்: “நாங்கள் இந்திய விடுதலைக்காகப் போராடுகிறோம். நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குச் சேவகம் செய்கிறீர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பிடித்துத் தள்ளுகிறீர்கள். நீங்கள் பாரதீயனாக முடியாது.” குங்கப்பா பிரகடனம் செய்தார், தான் இனி ‘கேரளீயன்’ என்று. கேரளீயனுக்கு 9 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும் விஷ்ணுவுக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு குங்கப்பா பெருமைமிக்க ‘கேரளீயன்’ ஆகிப் புகழ் பெற்றார்.

கோவில் நுழைவு இயக்கமும் விடுதலைப் போராட்டமும்

            1931ல் தீண்டத்தகாதோர் மற்றும் தலித்களின் கோவில் நுழைவு இயக்கம் வலுப்பெற அதே ஆண்டு கேளப்பன் மற்றும் ஏ கே கோபாலன் தலைமையில் ‘குருவாயூர் சத்தியாகிரகம்’தொடங்கியது. வடக்கு மலபாரில் தலித்களை முன்னேற்றுவதற்கான இயக்கத்தைக்  கேரளீயன் மற்றும் பிறர் தொடங்கினர்; கேரளீயன், கிருஷ்ணப் பிள்ளை மற்றும் சிலர் தலைமையேற்கப் பெரும்பேரணி பையனூர் கண்டோத் ஆலயத்தை அடைந்தது. அங்கே அவர்கள் கண்டபடி அடித்துத் துவைக்கப்பட்டதில் கேரளீயன் மயிரிழையில் உயிர் தப்பினார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தீண்டாண்மைக்கு எதிரான பிரச்சார இயக்கம் எல்லா இடங்களிலும் பரவியது.

            1932ல் கடகம் காப்புக் காடு வனப்பகுதியில் விறகுக்காகக் காய்ந்த சுள்ளிகள் மற்றும் உலர்ந்த சருகு, செத்தைகளைப் பொறுக்கும் ஆதிவாசிகளின் உரிமைகளைத் தடை செய்தனர். கேரளீயன், கண்ணன் நாயர் மற்றும் கிருஷ்ணப் பிள்ளை மூவரும் அடைய முடியாத அடர்ந்த வனப் பகுதியை இரகசிய பாதைகள் மூலம் சென்றடைந்து ஆதிவாசிகளை ஒன்று திரட்டி, தடை உத்தரவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், மரங்களை வெட்டச் செய்தனர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும்கூட ஒரு கூட்டாளியாகப் பங்கேற்றது.

            1932–34ல் காந்திஜி அறைகூவல் விடுத்த ஒத்துழையாமை இயக்கத்தில் கேரளீயன் பங்கேற்று கள்ளிக்கோட்டை எனப்படும் கோழிக்கோடில் கைதானார். சிறையில் வங்கத்தின் புரட்சியாளர்கள் ஆர்எம் சென்குப்தா, டிஎன் சக்ரவர்த்தி, ஜெய்தேவ் கபூர் மற்றும் பிறரோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.

            1933 ஜனவரி 26ம் நாள் கோழிக்கோடு கடற்கரையில் மூவர்ணக்கொடி பறக்கவிட்டபோது கேரளீயனும் சேகரன் நாயரும் ஒரு பேனரைப் பெருமிதத்துடன் பிடித்திருந்தனர். அவர்கள் கலைந்து செல்ல மறுக்கவே காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். மறுமுறையும் கேரளீயன் மரணத்திலிருந்து தப்பினார்.

சிஎஸ்பி மற்றும் கம்யூனிஸ்ட் குழுவில்

கேரள சிஎஸ்பி அல்லது காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி 1934ல் சி கே கோவிந்தன் நாயர், கேளப்பன், இஎம்எஸ், கே தாமோதரன், என்சி சேகர் முதலானவர்களால் அமைக்கப்பட்டபோது கேரளீயன் சிறையில் இருந்தார். விடுதலைக்குப் பிறகு 1935ல் சிஎஸ்பி அவரை விவசாயிகளை ஒன்றுதிரட்ட நியமித்தது. கேரளீயன் கள்ளியச்சேரியைத் தனது செயல்பாடுகளுக்கான மையமாகக் கொண்டு செயல்பட்டு, கட்சிக்கு இது குறித்த அறிக்கை ஒன்றையும் தயாரித்து அளித்தார்.

1934ல் ஆரோன் கம்பெனியில் ஒரு தொழிலாளி தாக்கப்பட்டதால் தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். மற்றவர்களுடன் சேர்ந்து கேரளீயன் அந்த இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தினார். 1930களில் வில்லியம் ஸ்னீலக்ஸ் (William Snelex), கேபிஆர், கேவிஎன் மாஸ்டர், ஏ வி குங்கம்பு முதலான முன்னணி தலைவர்கள் போல பின்னர் கேரளீயனும் ஆரோன் மில்ஸ், காமன்வெல்த் காட்டன் மில்ஸ், காளிகட், செருவன்னூர் டெயில்ஸ் பாக்டரி முதலான பல தொழிற்சங்கங்களில் முன்னணிப் பங்கு வகித்தார்.

 1936 ஜூலையில் மலபார் தொடங்கி மெட்ராஸ் வரை சுமார் 1500 மைல் தொலைவு பாத யாத்திரையாக நடந்த விவசாயிகள் பேரணியில் கேரளீயனும் கலந்து கொண்டார். யாத்திரை செல்லும் வழியில் அவர் வழிநடைப் பாடல்களைப் புனைந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி அமைத்தல்

            1935ல்   எஸ் வி காட்டே கேரளா வந்தபோது அவரைச் சந்தித்தச் சிலரில் கேரளீயனும் கிருஷ்ணப் பிள்ளையும் அடங்குவர். கேரள காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஏறத்தாழ அனைவரும் கம்யூனிஸ்ட்களே. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மலபார் கிளை 1937ல் இரகசியமாக அமைக்கப்பட்டது. 1939 டிசம்பரில் தலிச்சேரிக்கு அருகே பினரேயில் நடந்த மற்றொரு இரகசியக் கூட்டத்தில் கேரளீயனும் கலந்து கொண்டார். மலபாரின் முழுமையான சிஎஸ்பி பிரிவும் சிபிஐயில் இணைந்தது.

            பிரெஞ்ச் ஆளுகையில் இருந்த மாகே பகுதியினரோடும் அவர் தொடர்பில் இருந்தார். அது மலபாரில் நிகழ்ந்த ’மோரழா சம்பவ’த்திற்குப் பிறகு (Morazha Incident*) அவர் ஆலம்புழா உட்பட பலபகுதிகளில் தலைமறைவாக இருந்து செயல்பட்ட காலம். அவர் காங்கிரஸ் கட்சிக்காகவும் பணியாற்றினார். அந்த மாவட்டத்திலும் பிற இடங்களிலும் மெல்ல கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு பெற்றுவருவதாக மெட்ராஸ் அரசு அறிக்கையில் தெரிவித்தது.

[*Morazha Incident: கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி மலபார் மக்களுக்கு 1940 செப்டம்பர் 15ம் தினத்தை ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு நாளாக’ அனுசரிக்க அறைகூவல் விட்டது; ஆனால் காங்கிரஸ் தலைமை அதனை நிராகரித்து விட்டது. இருப்பினும் அந்த நாளில் வடக்கு மலபார் பகுதியில் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. கண்ணூர் மாவட்ட அந்தூர் முனிசிபாலிட்டியைச் சேர்ந்த மொரழா கிராமம் (அதற்கு முன்பு தலிப்பரம்பா முனிசிபாலிடியின் பகுதியாக இருந்தது) போராட்டத்தின் மையமாக இருந்தது. அங்கு கலவரத்தில் இரு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட அந்த மொரழா சம்பவத்தில் பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் கேபிஆர் கோபாலனுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. காந்திஜி உட்பட பல அரசியல் தலைவர்கள் வற்புறுத்தலால் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 1942 ஆகஸ்ட் வெள்ளையனே வெளியேறு இயக்கமும் மொரழாவில் சிஎஸ்பி தலைவர் டாக்டர் கேபி மேனன் தலைமையில் எழுச்சியோடு நடந்தது. – தகவல் உதவி : விக்கி பீடியா மொழிபெயர்ப்பாளர் இணைத்தது]

1942ல் மெட்ராஸிலிருந்து மோகன் குமாரமங்கலம், பி இராமமூர்த்தி மற்றும் பிறரோடு கேரளீயன் ‘மெட்ராஸ் சதி வழக்கின் கீழ்’ கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் அலிப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

விவசாயிகள் சங்கத்தில்

            கேரளீயன் தலைமையில் கர்ஷகா சங்கம் (விவசாயிகள் சங்கம்), விவசாயிகளுக்கு (வேஸ்ட் லாண்டு எனப் பொருள்படும்) புனம்’ நிலத்தில் இருந்த உரிமைகளைப் பறித்ததை எதிர்த்துப் போராட்டத்தைத் துவக்கியது. (புனம் என்றால் தமிழில் மலையைச் சார்ந்த வயல் என்று பொருள்). அதில் முக்கியமானது 1944 முதல் 1947 வரை மலபார் கூத்தளி எஸ்டேட்டில் நடந்த போராட்டம். அப்போது அவர் பல கவிதைகள் பாடல்களை எழுதினார்; கைகளில் கதிர் அரிவாளை ஏந்திய பெண்கள் வயல்களில் நின்று கொண்டு அதனை அவரது புகழாகப் பாடுவது வழக்கம்.

            கோழிக்கோடில் 1946 நவம்பரில் நடந்த விவசாயிகள் மாநாட்டின் பிரச்சனைகளில் ‘புனம்’ நிலங்களில் விவசாயிகளின் உரிமையும் ஒன்று. 1944 வங்கத்தின் நெட்ரகோனா பகுதியில் நடந்த அகில இந்திய கிசான் சபா மாநாட்டில் கேரளீயன் பங்கு கொண்டார். அம்மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி சி ஜோஷி கலந்து கொண்டு உரையாற்றினார்.

தேச விடுதலைக்குப் பிறகு

            1948ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மலபாரில் தடைசெய்யப்பட்டபோது கேரளீயன்  கட்சிச் செயலாளராக இருந்தார். சிரக்கல் மற்றும் பிற பகுதிகளில் விவசாயிகளின் இயக்கம் மற்றும் பிற இயக்கங்களைக் கட்டியதில் கேரளீயனும் முக்கியமான ஒருவர் என கிருஷ்ணப் பிள்ளை கூறுவார். மலபாரில் கர்ஷகா சங்கம் (விவசாயிகள் சங்கம்) வலிமை பொருந்திய ஒரு சக்தியானது.

            மலபார் கர்ஷகா சங்கத்தின் இதழாகக் ‘கிருஷிகாரன்’ என்ற வாரந்திர பத்திரிக்கையை 1952ல் கள்ளிக்கோட்டையிலிருந்து அதன் ஆசிரியராக இருந்து வெளியிட்டார். கேரளீயன்


‘ஜனயுகம்’ மற்றும் பல பத்திரிக்கைகளில் பணியாற்றினார். 1935 –40 ஆண்டுகளில் மாத்ருபூமியில் மிக அதிகமாக அவர் எழுதிக் குவித்தார். கண்ணூரிலிருந்து வெளியான ஒரு சமஸ்கிருத இதழின் ஆசிரியராகவும் அவர் இருந்துள்ளார்.

            1956 நவம்பர் 1ம் தேதி முதல் கேரளா ஒரு மாநிலமானது. 1956 டிசம்பரில் சோரனூர் மாநாட்டில் கேரள கர்ஷகா சங்கம் உருவானது. கேரளீயன் அதன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரளா கம்யூனிஸ்ட் அரசுகள் நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் விவசாயிகள் சங்கம் பெரும் செல்வாக்கு செலுத்தி முக்கிய பங்காற்றியது. 

            1970ல் தீவிர அரசியலிருந்து கே ஏ கேரளீயன் ஓய்வு பெற்று, தமது எஞ்சிய வாழ்வை முக்கியமாக இலக்கியப் பணிகளுக்கு அர்ப்பணித்தார். ஒரு கம்யூனிசக் குடும்பத்திலிருந்து வந்த அவரது துணைவியார் மறைந்த திருமதி கே கே அம்மிணி ஓர் ஆசிரியர் ஆவார். கோழிக்கோடின் கோவிந்தபுரத்தில் இருந்த அவர்களது இல்லம் தனித்துவச் சிறப்பு மிக்கது, உலகம் முழுவதிலிருந்து ஆய்வாளர்களை அந்த இல்லம் ஈர்த்தது.

            பெரும் கல்வியாளராக இருந்து ஒரு கம்யூனிஸ்டாக விவசாயிகளுக்காக அரும்பாடுபட்ட பெரும் புகழாளர் கே ஏ கேரளீயன் கோழிக்கோடில் 1994 ஜூலை 9ம் நாள் மறைந்தார். 

 பெருந்தகைக்கு நம் செவ்வணக்கம்!

--தமிழில் : நீலகண்டன்,

தொடர்புக்கு 94879 22786

 

 

 

 

No comments:

Post a Comment