Saturday 30 January 2021

25 பகவதி சரண் பாணிகிரகி

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் – 25



பகவதி சரண் பாணிகிரகி :

கம்யூனிச, ஒரிய இலக்கிய இயக்கங்களின் ஸ்தாபகர்

--அனில் ரஜீம்வாலே

நியூஏஜ் (2020 டிசம்பர் 13 –19 இதழ்)

            இவ்வுலகில் 34 ஆண்டுகளே வாழ்ந்தாலும் ஒரிசா மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் தேசிய, கம்யூனிச மற்றும் இலக்கிய இயக்கங்களின் வரலாற்றில் அழிக்க முடியாத அடையாளத்தை பதித்துச் சென்றவர் பகவதி சரண் பாணிகிரகி. பூரி மாவட்டத்தில் 1908ம் ஆண்டு பிப்ரவரி 1ம் நாள் பிறந்தார். பூரி பாலிபட்னாவின் விஸ்வநாத்பூரைச் சேர்ந்த அவருடைய தந்தை ஸ்வப்னேஷ்வர் பாணிகிரகி, ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் வழக்கறிஞரும் ஆவார். தாயார் சரஸ்வதி பாணிகிரகி. தொடக்கக் கல்வியை வீட்டிலேயே பெற்று, தேசியக் கருத்தோட்டத்தின் மையமான சத்தியவாடி தேசியப் பள்ளியில் பின் சேர்க்கப்பட்டார். உத்கல்மணி’ கோப்பந்து தாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் தேசிய உணர்வைப் பரப்பியதுடன் அப்பள்ளியின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினர். நீல்கண்ட், க்ருபாசின்ஹா, ஹரிஹர் மற்றவர்களுடன் சேர்ந்து கோப்பந்து தாஸ் அப்பள்ளியை நிறுவினார். ஒரிசா வரலாற்றில் ‘சத்தியவாடி யுக’த்தின் (‘Satyabadi Juga’) வருகையை முன்னறிவித்தவர் என கோப்பந்து கருதப்படுகிறார்.

            பகவதி மீது ஆழமான பெரும் தாக்கத்தைச் செலுத்தியவர் அவரது சகோதரர்களில் ஒருவரான, முற்போக்கு இலக்கிய ஆளுமை, காளிந்தி சரண் பாணிகிரகி. மேலும் வங்கப் புரட்சியாளர் சத்யேந்திரநாத் குகாவுடனும் பகவதிக்குத் தொடர்பு ஏற்பட்டது. கட்டாக்கில் இளங்கலை பட்டம் படித்தவர், முதுகலை பட்டத்தைப் பாட்னாவில் பெற்றார்.

             ‘சௌஜ யுகா’ என்ற போக்கை ஒடியா மொழியில் துவக்கிய பகவதியும் காளிந்தியும் மகாகவி இரவீந்தநாத் தாகூரின் புனைவிலக்கியக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு 1920ல் சௌஜ சமிதி (Sabuja Samiti) இயக்கத்தைத் தொடங்கினர். சௌஜ என்ற வார்த்தை ‘சௌஜ பத்ர’ என்ற வங்காளி இதழிலிருந்து வந்தது. சௌஜ இயக்கம் ஒடியாவில் முற்போக்கு மற்றும் மார்க்சிய இலக்கியப் போக்கான ’பிரகதி காலம்’  (‘முன்னேற்றம்’) நோக்கி வளர்ச்சியடைந்தது.


         காளிந்தி சரணின் மூத்த மகள் நந்தினி சத்பதி. இடதுசாரி சிந்தனையாளரான இவர் ஒரிசாவின் முதல் பெண் முதலமைச்சர் ஆவார் (ஜூன் 1972 முதல் டிசம்பர் 1976வரை; மேலும் ஒடியா மொழியில் இவர் மொழிபெயர்த்த தஸ்லிமா நஸ்ரின் வங்கமொழி நாவல் ‘லஜ்ஜா’ பெரும் புகழ்பெற்ற ஒன்று).


அரசியலில்

            காந்திஜியின் போதனைகளால் ஆழமான தாக்கம் பெற்ற பகவதி, பின்னர் மெல்ல பல விஷயங்களில் கருத்து வேறுபட்டார். குருசரண் பட்நாயக் மற்றும் நவ கிருஷ்ண சௌத்திரியுடன் இணைந்து 1936ல் ஒரிசாவில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை ஆரம்பித்தவர், விரைவில் அதன் பிரதேசப் பொதுச்செயலாளர் ஆனார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இருக்கும்போது கம்யூனிஸ்ட் அறிக்கையை ஒடியாவில் மொழிபெயர்த்தார். சிஎஸ்பி கட்சியின் ‘க்ருஷக்’ (விவசாயி) என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகச் செயல்பட்டார். பின்னர் அந்த மாகாணத்தின் சிபிஐ கட்சியை நிறுவினார். பகவதி சிலகாலம் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் அலுவலகச் செயலாளராகப் பணியாற்றினார். அக்காலகட்டத்தில் இந்திய தேசியக் காங்கிரஸ் வரலாற்றின் முதல் தொகுதியை மொழிபெயர்த்தார். கக்கோரி சதி வழக்கின் ராஜ்குமார் சின்காவுடன் தொடர்பு கொண்டார். (1925 ஆகஸ்ட் 9ல் கக்கோரி என்ற சிறுகிராமத்தில் புகைவண்டியை நிறுத்தி --புரட்சிகர இயக்கத்திற்கு ஆயுதம் வாங்கக்-- கொள்ளையடித்த நிகழ்வு. இதில் நான்கு புரட்சியாளர்களுக்குத் தூக்கு தண்டனையும், மற்றவர்களுக்கு நீண்டகால சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. – மொழிபெயர்ப்பாளர் இணைத்தது.) 1930களில் இச்செயல்பாடுகளுடன்  இளைஞர் லீக் இயக்கத்திலும் பகவதி ஈடுபட்டார்.

முற்போக்கு இலக்கியம் மற்றும் எழுத்தாளர்கள் இயக்கத்தில்

            முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கம் வெகு காலத்திற்கு முன்பே 1934ல் ஒரிசாவில் செயல்பட்டது என்பது பலருக்கும் வியப்பளிக்கும் செய்தியாகலாம்.கட்டக்கில் உள்ள நவீன்ஷா கல்லூரி வளாகத்தில் பகவதி சரண் பாணிகிரகி தலைமையிலான 8 உறுப்பினர் குழு (‘புதிய சகாப்தத்தின் இலக்கியச் சமூகம்’ என்ற) ‘நவயுக சாகித்ய சம்சத்’ அமைப்பைத் தொடங்கியது. ஆனந்த் பட்நாயக், குருசரண் பட்நாயக், விஜயா சந்திர தாஸ் (Bijaya Chandra Das) மற்றும் சிலர் உடனிருந்தனர். அந்த அமைப்பு கம்யூனிச இயக்கம் மற்றும் கம்யூனிச உணர்வு ஒரிசாவில் கருக்கொண்டு முளைவிடத் தொடங்கியதன் அடையாளமாகும். அந்த அமைப்பு காங்கிரஸ் சோஷலிசக் கட்சியின் கலாச்சார பண்பாட்டு அணியாகச் செயல்பட்டது.

            நவயுக சாகித்ய சம்சத் முறையாகக் கட்டக் நகரில் 1935 நவம்பர் 29 முதல் டிசம்பர் 6ம் நாள் வரை நடந்த எட்டு நாள் மாநாட்டில் தொடங்கி வைக்கப்பட்டது. இவ்வாறாக முற்போக்கு எழுத்தாளர் கூட்டமைப்பு (Progressive Writers Association) லக்னோவில் தொடங்கப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே சம்சத் தொடங்கப்பட்டு விட்டது. பகவதியும்கூட (1936 ஏப்ரல் 10ம் நாள் பிரேம் சந்த் தலைமை தாங்க ஸாஜாத் ஸாஹீர் தலைமையிலான) லக்னோ மாநாட்டில் சம்சத் சார்பில் கலந்து கொண்டார்.

            1936 ல் பகவதி (நவீன என்று பொருள்படும்படியான) ‘ஆதுநிகா’ என்ற இலக்கிய இதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டார். அந்த இதழ் குறைந்த காலமே வெளிவந்தாலும் இலக்கியப் போக்குகளைப் பாதித்துச் செதுக்குவதில் முக்கிய பங்காற்றியது. ‘மொழியியல், இலக்கிய மற்றும் கலாச்சாரம் குறித்த சர்வதேச சஞ்சிகை’ (IJLLC) 2016 செப்டம்பர் இதழில் ஆதுநிகா இலக்கிய இயக்கத்திற்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது எனக் குறிப்பாகப் பதிவிட்டுள்ளது. பகவதி அவரது முதலாவது தலையங்கத்தில் (மே, 1936) சமுதாயம் முன்னேற அதில் நிலவும் முரண்பாடு மோதல்கள் தீர்க்கப்படுவதை நம்பிக்கையோடு எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார் என்று அந்த சஞ்சிகை எழுதியுள்ளது. ஒடியா இலக்கியத்தில் தனித்துவமான அடையாளத்தைப் பதித்துள்ள ஆதுநிகா இதழ் மூலம் ஒரிசாவின் படைப்பூக்கமும் அறிவார்ந்த வாழ்க்கையிலும் பகவதி சரண் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் என இலக்கிய சர்வதேச சஞ்சிகை புகழ்கிறது. அந்த இதழ் ஒடியா இலக்கியத்தைச் ‘சத்தியவதி யுகா’ காலத்தை நோக்கி அழைத்துச் சென்றது.

            தனது குறைந்த வாழ்நாளில் பகவதி பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ளார். ‘ஷிகார்’ (வேட்டையாடப்படும் இரை) என்பது அதில் ஒன்று. அக்கதையில்

ஒரிசாவின் ஆதிவாசிகள் காலனிய மற்றும் நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களால் எப்படிச் சுரண்டப்படுகிறார்கள் என்பதை வர்ணித்திருப்பார். இந்தக் கதையைத்தான் புகழ்பெற்ற சினிமா இயக்குநர் மிருணாள் சென் அவர்கள் ‘மிருகயா’ (பிரபுத்துவ வேட்டை) என்ற பெயரில், 1976ல் பெரும் வரவேற்பைப் பெற்ற, சினிமாவாக எடுத்திருந்தார்.

            பகவதி சரண் உலகச் சரித்திரத்தையும் ஒடியா மொழியில் எழுதியுள்ளார்.

சுதேச மாநிலங்களை எதிர்த்துப் போராட்டம்

            பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஒரிசா மிகவும் பின்தங்கிய பிராந்தியமாக இருந்தது. அப்போது தேங்கனல், நீல்கிரி, ரான்பூர், நயாஹார்க், தாஸ்பல்லா முதலிய எண்ணிறைந்த சுதேச ஆட்சிப் பகுதிகளும் அதில் இருந்தன. சுதேச மாகாணங்களில்  ‘கிழக்கு மாநிலங்களின் ஏஜென்சி’யின் கீழ் இருந்த 21 மாநிலங்கள் காலனிய மற்றும் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு ஊற்றுக் கண்ணாக இருந்தன. சில அரிசி ஆலைகளைத் தவிர பெரிதாக வேறு தொழிற்சாலைகள் எதுவும் ஒரிசாவில் இல்லை. அப்போதைய ‘ஒரிசா மற்றும் பீகார்‘ மாகாணத்தில் சேர்ந்திருந்த ஒரிசாவின் பெரும் பகுதி மெட்ராஸ் மாகாணத்தின் கீழ் இருந்தது.

            ஜமீன்தார்கள், மாஸ்டதார்கள், கவுன்டியாகள், லக்ராஜ்தார்கள் முதலிய பல்வேறு நிலப்பிரபுத்துவ எஜமானர்களால் ஒரிசா ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்தது.

            பகவதி சரண் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். 1938 –39ல் தேங்கானல் நிலப்பிரபுத்துவ அரசை எதிர்த்தப் போராட்டத்தில் சத்தியாகிரகியாகப் பங்கேற்றத்துடன்,  சத்தியாகிரகத் தன்னார்வத் தொண்டர்கள் குழு ஒன்றைத் தனது தலைமையில் போராட்டத்திற்கு நடத்திச் சென்றார். தேங்கானலில் உங்கல் புதபங்கா முகாமிலிருந்து போராட்டச் செயல்பாடுகளை அவர் வழிநடத்தினார்.  ‘ரண பேரி’ (போர் முழக்கம்) என்ற தலைப்பில் சிறு பிரசுரத்தை அவர் மக்களிடம் விநியோகித்தார். போலீஸ் ஐஜி அவருடைய இரசிய அறிக்கைகளில் பகவதி சரணைப் புரட்சிக்காரர், கம்யூனிஸ்ட் என்று வர்ணித்திருந்தார்.

ஒரிசாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிர்மாணித்தல்

            1932ல் பெனாரஸ் எனப்படும் வாரணாசியில் உள்ள காசி வித்யாபீடத்தில் குருசரண் பட்நாயக் மற்றும் பிராண்நாத் பட்நாயக் படித்து வந்தனர். அவர்கள் இருவரும் பகவதி சரணுடன் இணைந்து பகவதியைச் செயலாளராகக் கொண்டு கல்கத்தாவில் முதலாவது கம்யூனிஸ்ட் குழுவை (செல்) அமைத்தனர். அந்தக் குழுவில் ஆனந்த் பட்நாயக், விஸ்வநாத் பாசயத், அசோக் தாஸ், வைத்யநாத் தாஸ், விஜயா சந்திர தாஸ் முதலான பலரும் ஒன்று திரண்டனர். அவர்களில் பலரும் யுகாந்தர் புரட்சியாளர்கள் குழுவிலிருந்து வந்தவர்கள். (அனுசீலன் சமிதி என்ற புரட்சி அமைப்பிலிருந்து பிரிந்து 1906ஆம் ஆண்டு வங்கத்தில் உருவான புரட்சிகர அமைப்பு.  அரவிந்தர், அவரது சகோதரர் பாரின் கோஷ்,  பூபேந்திரநாத் தத்தா, ராஜா சுபோத் மாலிக் ஆகியோர் இதனைத் தொடங்கினர். ‘யுகாந்தர்’ (என்றும் அழிவில்லாதது) என்ற வங்காள இதழை விவேகானந்தரின் சகோதரர் பூபேந்திரநாத் தத்தா நடத்தினார். –நன்றி விக்கி பீடியா)

            ஒரிசாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1936 ஏப்ரல் 1தேதி அமைக்கப்பட்டது. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிக்குள் ஒரு பெரிய சிபிஐ குழு உருவாக்கப்பட்டது. அதில் பகவதி இணைந்தார். மினு மசானி என அறியப்படும் (மூன்று முறை எம்பியாக இருந்த சுதந்திரா கட்சி அரசியலாளர்) மினோசர் ரஸ்டம் மசானி எழுதிய ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிக்கு எதிரான கம்யூனிஸ்ட் சதி’ நூலில், போலீஸ் அறிக்கைகளின் ஆதாரத்தின்படி, காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் 34 முதல் 40 உயர் மட்டத் தலைவர்கள் ‘பகவதியின் சிபிஐ கட்சியுடன்’ இருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

            ஒரிசா கம்யூனிஸ்ட் குழுவின் முதலாவது செயலாளர் பகவதி. அவர் 1938ல் பாம்பே சிபிஐ தலைமையகம் சென்றார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்த கோடைக்கால பயிற்சிப் பள்ளியில் கலந்து கொண்டார். அங்கிருந்து திரும்பி வந்ததும் அவர் சிபிஐ  கட்சியின் ‘நேஷனல் ஃப்ரண்ட்’ இதழைப் பிரச்சாரம் செய்து இளைஞர்களைப் பயிற்றுவித்தார்.

            1940 ஏப்ரலில் பகவதி காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியிலிருந்து ராஜினாமா செய்த நேரத்தில் ஜெயபிரகாஷ் நாராயண் ஒரிசாவின் சிஎஸ்பி கட்சிக் கிளையைக் கலைத்தார். பகவதி முழு நேரத்தையும் சிபிஐ கட்சி அமைப்பிற்காகச் செலவிட்டார். ’ஆகேசல்’ (மேலும் ‘முன்னேறிச் செல்’) என்ற கட்சி இதழை (அச்சடிக்காமல்) சைக்ளோஸ்டில் செய்து பிரதி எடுத்து பகவதி வெளியிட்டார்.

            இவ்வாறு பகவதி சரண் மற்றும் பிற தோழர்களின் அதிகரித்த செயல்பாடுகள் காரணமாக பிரிட்டிஷ் அரசு 1940 ஜூலை 11ல் ஒரிசா கம்யூனிஸ்ட் சதி வழக்கை ஏவியது. பகவதி சரண் உட்பட ஏறத்தாழ கட்சித் தலைவர்கள் முழுமையுமே கைது செய்யப்பட்டு சிறையிலேயே விசாரிக்கப்பட்டனர். இவ்வழக்கு விரிவாகப் பத்திரிக்கைகளில் பரபரப்பாக விளம்பரம் பெற்றது.

            விடுதலைக்குப் பிறகு பகவதியும் மற்ற தோழர்களும் கட்சியை மறுசீரமைக்கத் தொடங்கினர். 1942 –43களில் அவர் மாகாணத்தில் விரிவாகச் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகள் மற்றும் ஏழை மக்களிடையே உரையாற்றினார்.

இரண்டாவது உலக யுத்தமும் பஞ்சமும்

            1939ல் இரண்டாவது உலகப் போர் வெடித்தது, 1941 ஜூன் 22ல் சோவியத் யூனியன் தாக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானிய படைகள் விரைவாக முன்னேறி இந்திய எல்லைகளை நெருங்கியது. 1942 பிப்ரவரி 15ல் சிங்கப்பூரும், அதே ஆண்டு மார்ச் 8ல் ரங்கூனும் ஜப்பானியப் படைகளிடம் வீழ்ந்தன. பர்மாவில் பணியாற்றி வந்த பெரும் எண்ணிக்கையிலான ஒரியர்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினர். அத்தோடு ஒரிசாவின் கடற்கரை மாவட்டங்களை ஜப்பான் தாக்குமோ என்ற அச்சுறுத்தல் மட்டுமல்ல, உள்ளே நுழைந்துவிடும் சாத்தியமும் இருந்தது. மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றத் தொடங்கியும், ஜப்பானின் வான்வழித் தாக்குதலை முறியடிக்க இரவு நேரத்தில் முழுமையாக விளக்குகளை அணைப்பதும் நடைமுறைப்படுத்தப்பட்டன. தோணிகள், படகுகள் முதலான நீர்வழிப் போக்குவரத்து சாதனங்கள் திரட்டப்பட்டன. எந்த மோசமான அசம்பாவித நிகழ்வுகளையும் எதிர்கொள்ள வேண்டி தயாரிப்புப் பணிகளில் முற்போக்கு சக்திகள் தேசிய யுத்த முன்னணியில் பணியாற்றினர். ஜப்பானிய படைகள் உள்ளே நுழையுமென்றால் அதனை எதிர்த்துப் போரிட குடிமக்கள் எதிர்ப்பரண் அமைக்க சிபிஐ அறைகூவல் தந்தது. ஒரிசா பிரிவின் செயலாளர் என்ற முறையில் இப்போராட்டத்தில் பகவதி முனையிலே முகத்து நின்றார். ‘முக்தி யுத்தா’ (விடுதலைப் போர்) கட்சிப் பத்திரிக்கை வெளிவரவும் வழிகாட்டினார்.

            இந்த நேரத்தில்தான் 1943ல் பகவதி பஞ்ச நிவாரணப் பணிகளில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். இக்காலகட்டத்தில் வங்கப் பஞ்சம் வெடித்தது. அதன் பாதகமாக விளைவு ஒரிசா, பீகார் மற்றும் பிற இடங்களிலும் பரவியது. ஒரிசாவில் மட்டும் பஞ்சம் காரணமாக 40 ஆயிரம் மக்கள் இறந்தனர். இப்பெரும் துயருக்கு உலக யுத்தச் சூழலைத் தங்கள் நலன்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் அரசின் கொள்கைகளே காரணம்.

            உணவு தானியங்களைப் பிற இடங்களுக்குக் கொண்டு செல்வது மற்றும் விலைகளைக் கட்டுப்படுத்துவது மீது மாகாண அரசுகளிடமிருந்த உரிமைகளைப் பிரிட்டிஷ் அரசு பறித்தது. விளைவு,  பெருமளவிலான உணவு தானியங்கள் மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டது; மேலும் பெருமளவு கடத்தலும் நடந்தது.

            பஞ்ச நிவாரண நடவடிக்கை பணிகளில் ஈடுபட்ட போழ்துதான் 1943 அக்டோபர் 23ம் நாள் பகவதி சரண் இயற்கை எய்தினார். அவரது இறப்பு குறித்து முரண்பாடான தகவல்கள் உலவுகின்றன. 1943 அக்டோபர் 31 தேதியிட்ட சிபிஐ கட்சிப் பத்திரிக்கையான ‘பியூபிள்ஸ் வார்’ இதழில் பிரசுரித்தபடி (சிங்களா பாக்டீரியா தொற்றின் காரணமாக ஏற்படும் ‘பாசிலரி டயேரியா‘ எனப்படும்) வயிற்றுப்போக்கால், பஞ்ச நிவாரண நடவடிக்கை தொடர்பான கடும் உழைப்பால், உடல்நலம் பாதித்து அவர் இறந்தார். அவர் பட்டினியால் பெரிதும் சத்து குறைபாடு உடையவராக இருந்தார். பிரிட்டிஷ் அதிகாரிகளின் கடுமையான சித்திரவதைகளுக்குப் பின், சந்தேகத்திற்குரிய முறையில் அவரது மரணம் நிகழ்ந்தது என்பது வேறு சில அறிக்கைகளின் கூற்று.

            ஒரிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்
தலைமையகக் கட்டடம்
“பகவதி பவன்” என்று ஆகச் சிறந்த கம்யூனிஸ்ட்டும் முன்னோடியுமான பகவதி சரண் பாணிகிரகி அவரின் பெயரைப் பெருமையோடு தாங்கி நிற்கிறது.


--தமிழில் : நீலகண்டன்,

தொடர்புக்கு 94879 22786

 

No comments:

Post a Comment