Thursday 21 January 2021

தோழர் லெனின் நினைவு நாள்

    

தோழர் லெனின் 150வது பிறந்த நாள் 22—04--2020

அவர்  கண்டுபிடித்தக் கோட்பாடுகளின்  

முக்கித்துவமும், பொருத்தப்பாடும்

 --அனில் ரஜிம்வாலே

(நன்றி : மெயின் ஸ்ட்ரீம், 

தொகுதி LVII எண்19 நியூடெல்லி, 27—04—2019)

                

அடுத்த ஆண்டு உலகம் லெனின் 150வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளது. அறிவின் பேருருவும் புரட்சியை வாழ்நாளெல்லாம் அனுசரித்த நடைமுறையாளருமான அவருடைய கோட்பாட்டுகளின் வரலாற்றுச் சகாப்தப் பங்களிப்பைக் கற்றுணரும் தருணம் இது. ஆனால் துரதிருஷ்டம், பலரும் அதனைப் புறக்கணித்து மறக்கத் தலைப்படுகின்றனர். எனவே இன்றை காலகட்டத்தில் லெனினியத்தின் பொருத்தப்பாட்டை வளர்த்தெடுத்து நிலைநிறுத்துவது மிகவும் முக்கியமானதாகிறது.

நிகழ்வுகள் நிறைந்த வாழ்வு

                விளாதீமிர் இலியிச் உலியானவ் என்பது இயற்பெயர், சைபிரியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பிறகு லெனின். ரஷ்யாவின் சிம்பிர்ஸ்க் என்ற இடத்தில், படித்த முற்போக்கான கருத்தோட்டமுடைய மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் 1870 ஏப்ரல் 22ம் தேதி பிறந்தார். சிம்பிர்ஸ்க் பின்னர் உலியானாவ்ஸ்க் என்று மாறியது. படிப்பில் மிகவும் கூர்மையான அறிவுடைய புத்திசாலியான மாணவர். பள்ளியில் லத்தீன் மற்றும் கிரேக்க மொழியில் சிறப்புற்று முதல்தர மாணவராக விளங்கினார். பின்னர் கழான்(Kazan) பல்கலைக்கழகத்தில் ஜார் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவரது படிப்பு தடைப்பட்டது; அவர் கைதாகி வெளியேற்றப்பட்டார். குடும்பம் சமராவுக்கு இடம் பெயர்ந்தபோது அவருக்கு மார்க்சிய நூல்களுடன் அறிமுகம் ஏற்பட்டது. சட்டப்படிப்பில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார். 1892 –93ம் ஆண்டுகளில் சமராவில் அவர் வழக்குறிஞராகப் பணியாற்றினார். 1893ல் செயிட் பீட்டர்ஸ்பர்க்குக்கு இடம் பெயர்ந்தபோது அங்கும் பொது வழக்கறிஞராக இருந்தார்.  

  மார்க்சிய அறிவில் லெனினின் ஆழ்ந்த புலமை

            1870 தொடங்கி மார்க்சியத்தை அறிமுகப்படுத்தியதால் ஜார்ஜ் பிளிக்கானவ், ’ரஷ்யாவின் மார்க்சியத் தந்தை’ எனப் புகழப்படுகிறார். லெனின் அவரையே தனது வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் நினைந்தார். 1889ல் மார்க்சின் ’மூலதனம்’ நூலைக் கற்று மார்க்சியரானபோது லெனினின் வயது 19 மட்டுமே. 1887லேயே தனது பாதையின் திசைவழி எது என்பதை அவர் தேர்ந்தெடுத்தார். அவருடைய மூத்த சகோதரர் அலெக்சான்டர் ஜாரைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்டார். அதற்காகப் பெரிதும் வருந்தினாலும், லெனின் தனது சகோதரரின் வழிமுறையிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டபோது அவருக்கு வயது 17 மட்டுமே, அவ்வளவு சிந்தனைத் தெளிவோடு இருந்தார் லெனின்.

ரஷ்யாவில் அன்றைய காலத்தில் விவசாயிகளைக் குறித்து நிலவிய ’நரோத்னியம்’ என்ற (மார்க்சியத்திற்கு முன்னோடியாக அமைந்த கருத்தியல்) –தன்னை ’மக்களுக்கு மத்தியில்’ என்று அழைத்துக் கொண்டது --  ஒரு வகையான உடோப்பிய கற்பனாவாத விவசாய சோஷலிசம் குறித்த விமர்சனமாக லெனின் 24 வயதில் ’மக்களின் நண்பர்கள் என்றால் என்ன’ என்ற புத்தகத்தை 1894ல் எழுதினார். புரட்சிக்கான உத்திகளைத் திட்டமிடுவதற்கு முன்பு முதலாளித்துவம் குறித்து ஓர் ஆழமான ஆய்வு நடத்தப்பட வேண்டுமென லெனின் வலியுறுத்தினார்.

1895ல் அவர் புரட்சியாளர்களோடு தொடர்பு கொள்ள ஐரோப்பா அனுப்பி வைக்கப்பட்டார். அது ’தொழிலாள வர்க்க விடுதலைக்கான லீக்’ என்ற அமைப்பு அந்த ஆண்டே உருவாகக் காரணமாயிற்று. அவர் கைது செய்யப்பட்டு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட ஷுசென்ஸ்கோயி சென்றடைய 11 வாரங்கள் பயணம் செய்தார். அங்கே லெனின் நாடஸ்கா குருப்ஸ்கயாவைத் திருமணம் செய்து கொண்டார். அங்கிருந்தபடியே RSDLP எனப்படும் ’ரஷ்யன் சோசியல் டெமாகிரட்டிக் லேபர் பார்ட்டி’யை 1898ல் மின்ஸ்க்-கில் அமைக்கப் பங்களிப்பு செய்தார், அவர் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை. 1900ல் நாடு கடத்தப்பட்டதிலிருந்து விடுதலையானதும் ஐரோப்பா சென்றவர், முன்பே கைதாவதைத் தவிர்க்கும் பொருட்டு 1917 பிப்ரவரி புரட்சிக்குப் பிறகே ரஷ்யாவுக்குத் திரும்ப முடிந்தது.

ரஷ்யப் புரட்சிக்கான உத்திகளையும் தந்திரோபாயங்களையும் திட்டமிடும் பிரச்சனையில் 1903ல் RSDLP கட்சி போல்ஷ்விக்குகள், மென்ஷ்விக்குகள் என இரண்டாகப் பிளவுற்றது. லெனின் வழிகாட்டுதலில் போல்ஷ்விக்குகளே 1917 ரஷ்யப் புரட்சியை நடத்தினர். இந்த இரண்டு பிரிவு கட்சிகளும் பின்னர் ஒன்றுபடவே இல்லை. இஸ்க்ரா, பிராவ்தா, இஸ்வெஸ்தியா எனப்பல இதழ்கள் மற்றும் பத்திரிக்கைளை நிறுவிட லெனின் உதவி செய்தார். அந்த இதழ்களின் வழியே நடைபெற்ற விவாதங்களில் மார்க்சியக் கோட்பாடு மற்றும் நடைமுறை அமலாக்கம் குறித்த மேம்பட்ட வளர்ச்சிக்கு உதவினார்.

மார்க்சியத்தைக் குணாம்ச ரீதியில் உயர் தளங்களுக்கு மேம்படுத்துவதில் லெனின் பங்கு:

            விஞ்ஞானபூர்வக் கோட்பாட்டு கருத்தியலாளராக நிகரற்று விளங்கிய லெனின் மார்க்சியக் கோட்பாட்டைப் புதிய மட்டங்களுக்கு உயர்த்தி, புதிய கோட்பாட்டு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, ரஷ்யப் புரட்சியைச் சாத்தியமாக்கியவர். உலகிலேயே ஹெகலியத் தத்துவத்தில் கரைகண்ட சிலரில் லெனினும் ஒருவர்; மேலும் அந்தச் சிலரிலும் ஹெகலிய இயங்கியலில் நிபுணத்துவம் பெற்ற வெகுசிலரில் லெனின் தனித்துவமானவர். முதலாளித்துவத்தின் அடுத்த உயர் கட்டத்தைக் கண்டுபிடித்துச் சொன்னவர் அவரே, அதுவே ’ஏகாதிபத்தியம்’ என அறியப்படுகிறது. ஏகாதிபத்தியச் சகாப்தத்தில் சோஷலிசத்தை அடைவதற்கான புரட்சியின் வழியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடைப்பட்ட நிலைகளைக் கடந்தாக வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்; அதனை அவர் ஒட்டுமொத்தமாக ’பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி’ என்ற வார்த்தையால் அழைத்தார். ஆனால் அதற்கு மாறாக மென்ஷ்விக்குகள், ’சோஷலிசத்திற்கு நேரடி மாற்றம்’ என்றதால் லெனினுடன் முரண்பட்டார்கள், பூர்ஷ்வா புரட்சியால் ஆகப்போவது ஒன்றுமில்லை என மறுத்தார்கள். இப்படி உருவானதுதான் அவருடைய புகழ்பெற்ற ஆய்வான ’ரஷ்யப் புரட்சிக்கான இரண்டு உத்திகள்’ (ஜுன் -- ஜூலை 1905ல் எழுதியது) என்பது ’சமூக ஜனநாயகத்திற்கான இரண்டு உத்திகள்’ என்று (1907 மீண்டும் பிரசுரமான கட்டுரைத் தொகுப்பிலும் கூடுதல் விபரங்களோடு) விளக்கப்படுகிறது. அதன் முக்கியமான கோட்பாட்டுக் கூறுகள் தற்காலத்திலும் பொருத்தமுடையது.

            நிலப்பிரபுத்துவத்துவத்திற்கு எதிரான மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முடிக்கப்படாத கடமைகளைப் புரட்சி முடித்தாக வேண்டும். ஏகாதிபத்திய நிதிமூலதனம் உழைக்கும் மக்கள் கூட்டத்தை மட்டும் சுரண்டுவதில்லை, அது சொத்துடைமையாளர்களையும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முதலாளிகளையும் சுரண்டுகிறது. (எனவேதான் லெனின் வலியுறுத்தினார்) தொழிலாளி வர்க்கம் நிலஉடைமைக்கு எதிரான, ஜாரின் எதேச்சிகாரத்திற்கு எதிரான மற்றும் காலனியத்திற்கு எதிரான  தனது போராட்டத்தில் சொத்துடைமையாளர்களையும் சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் பூர்ஷ்வா முதலாளி வர்க்கங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

            ’சோஷலிசத்திற்கு’ மட்டுமே உழைப்போம் என்ற அடிப்படையில் மென்ஷ்விக்குகள் இந்த இயக்கங்களில் பங்கு பெறாது விலகியே இருந்தனர்.

 வெற்றிபெற்ற முதல் புரட்சியின் தலைவர்

            அவர்தான் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டார், ரஷ்யப் புரட்சியை நடத்தினார் என்ற போதும் லெனின் கோட்பாட்டளவிலும் நடைமுறையிலும் ஒருபோதும் கட்சி அமைப்பின் முறையான தலைவராக அல்லது செயலாளர் அல்லது பொதுச் செயலாளர் என்ற எந்தப் பதவியையும் வகித்ததில்லை. கட்சியில் எந்தப் பதவிகளும் ஏற்படுத்தப்படவில்லை என்பது பெரிதும் வெளியே தெரியாத உண்மையாகும். ஆரம்பம் முதலே கட்சியில் கூட்டுப் பொறுப்பு தலைமையே இருந்தது; மேலும் புரட்சியின் போதும்கூட முறையான எந்தப் பதவிகளும் உருவாக்கப்படவில்லை.

            1922ல் மத்திய அலுவலகப் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டி ’பொதுச்’ செயலாளர் என்ற பதவி ஏற்படுத்தப்பட்டது. அந்தப் பொறுப்பை வகிக்கும் ஒரு மனிதரிடமிருந்து நாள் தோறும் எதிர்பார்க்கப்படுவதைக் குறிப்பதற்காகவே ’பொது’ என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது. பின்னர் ஸ்டாலினுக்குக் கீழே வந்தபின், அந்த வார்த்தை பலம் பொருந்திய அதிகாரம் என்ற பொருளை அடைந்தது. ஸ்டாலினே முதல் பொதுச் செயலாளர். அந்தத் தகுதியைப் பயன்படுத்தி அவர் அதிகாரத்தைக் குவிக்கத் தொடங்கியபோது அவர் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என லெனின் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு வரலாறு எப்படி எல்லாம் தகவமைத்துக் கொண்டது தனி கதை.

            லெனின் எந்தப் பதவியையும் விரும்பியதும் இல்லை, அதன் பின்னே அலைந்ததும் இல்லை. அவருடைய அறிவார்ந்த வழிகாட்டலில் செயல்பட்டக் கூட்டுத் தலைமையே புரட்சியை வெற்றிகரமாக நடத்தி புரட்சிகரமான அரசையும் அமைத்தது. மிகுந்த தயக்கத்தோடே லெனின் சோவியத் அரசாங்கத்தின் (அமைச்சர்கள் குழுவின் தலைவர்) பிரதமரானார்.

            1918ல் வாயிற் கூட்டத்தில் பேசும்போது இடது சோஷலிசப் புரட்சிகர கட்சியின் (Left SRP) ஓர் உறுப்பினரால் லெனின் சுடப்பட்டுக் காயமடைந்தார். போல்ஷ்விக் கட்சியுடன் கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்த அந்தக் கட்சி, முதலாளிகளிடமும் ஏகாதிபத்தியத்திடமும் லெனின் சரணடைந்ததாகக் குற்றம் சுமத்தியது. அரசிலிருந்து அந்தக் கட்சி வெளியேற்றப்பட்டதும் சோவியத் அரசுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபட்டது. அந்தக் கொலையாளியின் தோட்டாக்கள் உடலில் தங்கிய காயத்தின் காரணமாக லெனின் என்ற புரட்சியாளர் 1924ம் ஆண்டு ஜனவரி 21ம் நாள் இம்மண்ணுலகை விட்டு நீங்கினார்.

தேசிய விடுதலை இயக்கங்கள் மற்றும் சுதந்திரம் குறித்த லெனின் அணுகுமுறை

            ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு உலகப் புரட்சிகர இயக்க நடைமுறைகளின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதியாகச் சுதந்திரத்திற்கானப் போராட்டங்கள் மற்றும் தேசிய விடுதலையை முதன் முதலாக வரலாற்றில் இடம்பெறச்செய்தது லெனின். சுதந்திரத்திற்காகப் போராடும் மக்களுக்கு ஒல்லும் வகையெல்லாம் ஓவாது உதவியைச் செல்லும் வாயெல்லாம் செய்தவர் லெனின்.

            ஏகாதிபத்தியம் குறித்த லெனினின் கோட்பாடு மற்றும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் தவிர்க்க முடியாத ஒரு புது வகையான ஐக்கிய முன்னணியை நோக்கி இட்டுச் சென்றது. இந்தியா, சீனா, வியத்நாம் போன்ற பிற நாடுகளில் காலனியத்திலிருந்தும் ஏகாதிபத்தியத்திலிருந்தும் விடுதலை பெறுவதற்காக நடைபெறும் மக்களின் போராட்டங்களுக்கு உத்வேகத்துடன் ஓர் அரசே  உதவி செய்தது வரலாற்றில் அதுவே முதன் முறை. சோவியத் ரஷ்யா சாத்தியமான அனைத்து வகை உதவிகளையும் அவர்களுக்கு வழங்கியது. வலதுசாரி பிற்போக்கு அணியினர் வேண்டுமானால் நமது சுதந்திரப் போராட்டத்தில் ரஷ்யப் புரட்சி ஏற்படுத்திய தாக்கத்தை மக்களிடமிருந்து மறக்கச் செய்ய விரும்பலாம். திலகர், லாலா லஜபதிராய், காந்தி, நேரு, தாகூர் (தாகூர் 1927ல் ரஷ்யாவிலிருந்து தனது கடிதங்களை எழுதியுள்ளார்), நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், என்.ஜி.ரங்கா, சுவாமி சகஜானந்தர், இராகுல சாங்கிருத்தியாயன் போன்ற நம்முடைய பல தேசியத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சியால் ஆதர்சமும் ஊக்கமும் பெற்றவர்கள்.

            காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைமையில் நடத்தப்பட்ட விடுதலை போராட்ட இயக்கங்களுடன் புரட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டுமென லெனின் வற்புறுத்தினார். காலனிய நாடுகளில் உள்ள முதலாளித்துவ அமைப்புகள் முற்போக்கான ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் என்பது லெனினது கருத்தாகும். எனவேதான் இரண்டாவது அகிலத்தின் (1920) கூட்டத்தில்  காந்தி மற்றும் காங்கிரஸ் பற்றிய எம்.என்.ராயின் குறுகிய குழுப்போக்கு அணுகுமுறையை லெனின் கடுமையாக விமர்சித்தார். எம் என் ராய் முதலில் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து காந்தி தூக்கி எறியப்பட வேண்டும் என விரும்பினாலும், பின்னரே அந்த விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார். இந்தக் குறுகிய குழுப் போக்குக் கோட்பாட்டை லெனின் மிகக் கடுமையாகத் தாக்கி அதனைச் ’சுய அழிப்பு (பாதை) என்றார். கம்யூனிஸ்ட்கள் எப்போதும் தங்களது தனித்துவத்தைப் பேணி ஒழுகும் அதே போழ்து எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் ஜனநாயக ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களில் கம்யூனிஸ்ட்கள் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

            ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனிய எதிர்ப்புக்கான ஐக்கிய முன்னணி அமைத்த வடிவமைப்பாளர் லெனின். காலனிய நாடுகளிலிருந்து புரட்சியாளர்கள் லெனினைச் சந்திகக்கவும் அவரது வழிகாட்டலைப் பெறுவதற்காகவும் ரஷ்யா வந்து திரண்டனர். அவர்களில் பிருத்வி சிங் ஆசாதி, வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா, சவுகத் உஸ்மானி, ராஜா மகேந்திர பிரதாப் போன்ற எண்ணிறந்தவர் அடங்குவர். இரண்டாவது சர்வதேச (கம்யூனிஸ்ட்)

அகிலத்தின் (7வது) சுட்கார்ட் காங்கிரஸ் மாநாட்டில் 1908 மேடம் காமா இந்திய மூவர்ணக் கொடியை விரித்துப் பறக்க விட்டதை லெனின் பெரிதும் உவந்து புகழ்ந்துரைத்து முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினார்.

பாராளுமன்ற போராட்டங்கள் குறித்து லெனின்

            மேற்கு ஐரோப்பிய நாடுகளின் நடைமுறை பாராளுமன்ற ஜனநாயகமும் தேர்தல் வழிப்பட்ட முறைமையும் ஆகும். அங்கே நடைபெறும் போராட்டங்கள் குறித்து லெனின் வித்தியாசமான அணுகுமுறை கொண்டிருந்தார். உண்மையில் அந்த முறைமையை அவர் போற்றிப் புகழ்தார் என்றே சொல்ல வேண்டும். மேற்கத்திய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட்கள் ரஷ்யப் புரட்சியைப் பார்த்து காப்பி அடித்து கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதையும், அந்நாடுகளில் நடைபெறும் பெருந்திரள் மக்கள் பங்கேற்கும் பாராளுமன்ற தேர்தல் போராட்டங்களைப் புறக்கணிப்பதையும் லெனின் விமர்சிக்கிறார். சுதந்திரமான (அச்சு) ஊடகங்களின் முக்கித்துவத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.  அதே போன்று ஆசியாவின் புரட்சியாளர்களை ரஷ்யாவைக் காப்பியடிக்க வேண்டாம் என்றும், அவர்கள் நாடுகளின் எதார்த்த கள நிலைமை முற்றிலும் வேறாக இருப்பதால் ’புரட்சி’க்கு அவசரப்பட்டு முயல வேண்டாம் என்றும் எச்சரிக்கிறார். ரஷ்யப் புரட்சியைப் புகழ்வதை விடுத்து, அவர்கள் தங்கள் நாடுகள் குறித்த தூலமான ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

            லெனினுடைய படைப்புக்களில் ”இடதுசாரி கம்யூனிசம்: ஓர் இளம்பருவக் கோளாறு” போன்ற ஆக்கங்களில் வேறுபட்ட நிலைமைகளுக்கு ஏற்றவாறு அவருடைய நெகிழ்வுப் போக்குள்ள அணுகுமுறையைக் காணலாம். அங்கெல்லாம் அவர் ஜனநாயக உரிமைகளுக்கும் ஜனநாயகப் புரட்சிக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்துவார். மேற்கத்திய நாடுகளில் உள்ள பாராளுமன்றங்கள் பொய் புரட்டோ அன்றி பயனற்ற ஒன்றோ அல்ல என்பதை லெனின் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற தேசங்களில் தேர்தல் முறைமை மிகவும் முக்கியத்துவம் உடையதாகையால் கம்யூனிஸ்ட்கள் அவற்றை முழுமையாகப்  பயன்படுத்தவும், எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு கூடுதலாக இடங்களை வெல்லவும் முயல வேண்டும். இங்கிலாந்து முதலாளித்துவத் தேர்தல் முறையில் உள்ள ஊழலை எதிர்த்துப் போராட வேண்டுமென லெனின், இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் (CPGB) வில்லியம் கலாச்சரிடம் கூறியுள்ளார். வலதுசாரி பிற்போக்குவாதக் கட்சிகளுக்கு எதிராகக் கம்யூனிஸ்ட்கள் முற்போக்கு முதலாளித்துவக் கட்சிகளுடன் இணைந்து கூட்டாகத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

            முதலாளித்துவக் கட்சிகள் உட்பட பிறக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் ஜெர்மானிய கம்யூனிஸ்ட்கள், குறைந்தபட்சத் திட்டத்தின் அடிப்படையில் அவர்களோடு கூட்டாகச் செயல்படுவதை லெனின் வரவேற்றுள்ளார்.  செய்தி ஊடக விரிவான வலைப் பின்னலை ஐரோப்பிய கம்யூனிஸ்ட்களும் பயன்படுத்த வேண்டும். இத்தகைய அமைப்பு வழிமுறை போராட்ட வாய்ப்புகளுக்கான நிலைமை ரஷ்யாவில் குறைவாகவே உள்ள போதிலும் ரஷ்ய கம்யூனிஸ்ட்கள் எங்கெல்லாம் தேர்தல் வாய்ப்பு நிலவுகிறதோ அங்கெல்லாம் அதனைப் பயன்படுத்த வேண்டும்.

            தனித்து ஒதுங்குவது, தூய்மை வாதம் பேசுவது மற்றும் புரட்சிக்காகத் தேவையற்று அவசரப்படுவதை லெனின் எதிர்க்கிறார். தூலமான எதார்த்தக் களஆய்வுகளைக் காவு கொடுத்து, விலையாகத் தந்து,  பொய்யான அதீத நம்பிக்கை உணர்வு நிலையை ரஷ்ய புரட்சி ஏற்படுத்திவிட்டதோ என லெனின் கவலைப்படுகிறார்.

லெனின் போதனைகளின் பொருத்தப்பாடு

            சமூக விஞ்ஞானம், விஞ்ஞானம் மற்றும் புரட்சியின் கோட்பாடு குறித்து லெனின் அற்புதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். அவைகளை ஆழமாகக் கற்றறிய வேண்டும். அவர் ஒருபோதும் வறட்டுக் கோட்பாட்டு பிடிவாதக்காரர் அல்ல; மாறாக, மாறிவரும் சூழ்நிலைக்குத் தக்கவாறு புரட்சிகர விஞ்ஞானக் கோட்பாட்டை மேம்படுத்தி வளர்த்தெடுத்தவர். அவரது சில சொந்தக் கோட்பாடுகளில் மாற்றங்களும், காலத்திற்கேற்பத் திருத்தப்படுவதற்கான தேவையும், வேறு சில மேலும் மேம்படுத்தப்படவும் வேண்டும். எவ்வாறாயினும், குறிப்பாக அவர் பின்பற்றிய முறையும்  அவரது பல கோட்பாடுகளும் இப்போதும் மிகவும் பொருத்தப்பாடு உடையதாக உள்ளன.

            இன்று உலகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் முறையும் அனைத்து வகையான ஊடகங்களும் பொதுவான நிகழ்முறையாக இருப்பதால், ஜனநாயகம் மற்றும் ஜனநாயகப் புரட்சி பற்றிய லெனினுடைய விஞ்ஞானப் பார்வை மிகவும் பொருத்தமுடையதாகிறது. இந்தியாவில் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்தவும், அரசமைப்புச் சட்டம் மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தை வலதுசாரியினரின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் இந்தியாவில் கம்யூனிஸ்ட்களும் முற்போக்குச் சக்திகளும் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாக நேபாளத்தில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளனர். ஒரு டஜனுக்கும் மேற்பட்ட லத்தின் அமெரிக்க நாடுகளில் இடது மற்றும் ஜனநாயகச் சார்புடைய அரசாங்கங்கள் எழுச்சி பெற்று கடந்த இருபது ஆண்டுகளாக அந்நாடுகளில் நேரடியாகத் தேர்தல்கள் மூலம் ஆட்சிக்கு வருகின்றனர்.

            [தற்போது கோவிட்-19 பாதிப்பின்போது கேரள மாநிலத்தின் இடது ஜனநாயக முன்னணியின் சுகாதாரச் செயல்பாடு உலகம் முழுவதும் புகழப்படும் வகையில் ஆர்வத்தோடு நோக்கப்படுகிறது – மொழிபெயர்ப்பாளர் சேர்த்தது]

            வளரும் ஜனநாயகத்தின் முக்கியத்துவம், பாராளுமன்ற முறைமை மற்றும் ஜனநாயக புரட்சி குறித்த லெனினியக் கோட்பாடு சமகாலப் பொருத்தப்பாட்டைப் பெற்று விளங்குகிறது.

லெனினியம் நீடு வாழ்க!   

            --தமிழில் :  நீலகண்டன்,

  என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment