Monday 8 February 2021

விவசாயிகள் பேரெழுச்சி

 

                                                                            

                   சவால்களைச் சந்திக்கஓரணியாய் 

                   எழுந்த விவசாயிகள் பேரெழுச்சி

--டாக்டர் யுகல் ராயலு

            கட்சி அணிகளுக்கு மார்க்சிய கல்வி வழங்க தொடர் நிகழ்வுகளை மணிப்பூர் சிபிஐ மாநிலக் குழு தொடங்கியுள்ளது; நாட்டின் வளர்ச்சிப் போக்குகள் குறித்துச் சரியான புரிதலைப் பெறவும் அதனைப் பொதுமக்களுக்கு விளக்கிட மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்துவதுமே அதன் நோக்கம். அதன் முதல் நிகழ்வு அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் மாநிலக் கட்சியின் தலைமையகமான இம்பால், ராவத் பவனில் 2021 ஜனவரி 8ல் நடந்தது. அதன் முக்கிய சொற்பொழிவாளர் டாக்டர் யுகல் ராயலு, ‘இன்றைய அரசியல் நிகழ்வுகளை மார்க்சிய பகுப்பாய்வு செய்தல்’ என்ற தலைப்பில் பேசினார். கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினர் டாக்டர் நரசிங் தமது அறிமுகவுரையில், ‘‘நம்மைச் சுற்றி நடப்பவைகளைச் சரியாக புரிந்து கொள்ள நாம் மார்க்சியத் தத்துவக் கருவிகளையே பயன்படுத்த வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

            இனி டாக்டர் யுகல் ராயலு உரையிலிருந்து

            “வெகுஜனங்களால் பெரும்பான்மையோடு தேர்ந்தெடுத்த அரசுகளோடு உலகம் முழுவதுமுள்ள மக்கள் நம்பிக்கை இழந்து ஏமாற்றமடைந்துள்ளனர்; யாரிடமிருந்து வாக்குகளைப் பெற்றார்களோ அப்பொதுமக்களுக்கு ஆதரவாக அரசுகள் நடப்பதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் விரைவில் தலைகொழுத்த ஆணவம் பிடித்தவர்களாகி, ஏழைகள் விளிப்புநிலை மக்களைப் பாதிக்கும் கடுமையான பிரச்சனைகளைப் புறக்கணிக்கிறார்கள். விரைவில் அத்தகைய தலைவர்கள் மக்கள் ஆதரவை இழக்கின்றனர். பிரேசில், பிரிட்டன், பிரான்ஸ் அவ்வளவு ஏன், நமது நாட்டிலும் இதுதான் நடந்தது. இத்தகைய சூழல்களில் மக்கள் ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை இழக்கும் வாய்ப்புகள்தான் மிகப் பெரிய அபாயம்; தீவிரவாதக் கொள்கைகள் வேர்கொள்கின்றன. இது சர்வாதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்குப் பாதை சமைக்கின்னறன—ஹிட்லர் காலத்தில் இதுதான் நடந்தது.

            மக்களின் பொருளாதார, சமூக, மருத்துவ மற்றும் மனஅமைதி நலவாழ்வை மேம்படுத்திப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அரசின் கடமையாகும். மக்களின் நலவாழ்வு கொள்கையைச் சரியாகப் புரிந்துகொள்ளாது புறக்கணிக்கும்போது அரசுத் தலைவர்கள் கார்ப்பரேட் பிரிவின் நலனுக்காகச் சேவையாற்றத் தொடங்கி விடுகின்றனர் –அந்தக் கார்ப்பரேட் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை அளித்து வளர்ச்சியைக் கொண்டுவரும் என அரசுத் தலைவர்கள் தவறான நம்பிக்கையில் செயல்படுகின்றனர்.

            வெளிநாட்டினருக்கு 1990ல் சந்தைகள் திறந்துவிடப்பட்டதும், பத்தே ஆண்டுகளில், வெளிநாட்டு நிறுவனங்களின் செல்வாக்கால் நம்முடைய நாட்டின் சொந்த தொழிற்சாலைகள் சில அப்படியே இல்லாது ஒழிந்தன. உதாரணத்திற்கு அழகுசாதன தொழிலில் இன்று இந்திய உற்பத்தியாளர்களைக் காணமுடியவில்லை –அனைத்துப் பொருட்களும் அயல்நாட்டுத் தயாரிப்புகளே. அதேபோல சர்வதேச பிராண்டுகள் இந்தியாவில் நுழைந்ததும் ஆயிரக்கணக்கான தையல்கலைஞர்கள் வாழ்விழந்தனர். பிக் பஜார் போன்ற பெருநிறுவனங்கள் நுழைவால் சிறிய சில்லறை விற்பனையாளர்கள் ஓரிரவில் வர்த்தகத்திலிருந்து அப்படியே தூக்கி எறியப்பட்டனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்தது.

            ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1 ஆட்சியைக் இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரித்தனர். அந்த அரசு வரலாற்றுப் புகழ்மிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு உறுதித் திட்டம், தகவல் உரிமைச் சட்டம், மலைவாழ் பழங்குடி மக்கள் உரிமைச் சட்டம் முதலியவற்றை நிறைவேற்றியது. ஐமுகூ-1 ஆட்சியில் இடதுசாரிகள் மிகுந்த புகழோடு முக்கியப் பங்காற்றினர். இடதுசாரி அணி வெறும் 64 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு அரசை மக்கள் ஆதரவுத் திட்டங்களை நிறைவேற்ற வைத்தது, அதுதான் கம்யூனிஸ்ட்களின் ஆற்றல், பலம். 

இன்றையச் சூழல்

            ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெகுஜன மக்கள் அரசின் துணையோடு ஏகபோக முதலாளிகள் தங்கள் அதிகாரத்தை ஒன்று குவித்துத் திடப்படுத்துகிறார்கள். கம்யூனிஸ்ட் அறிக்கையிலும் ஏனைய நூல்களிலும் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் எதனை விளக்கி இருக்கிறார்களோ அதன் ஏதார்த்த உதாரண வடிவமே இது. பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையின் அப்பட்டமான ஆதரவோடு அம்பானி மற்றும் அதானி இருபெரும் முதலாளிகள், பொருளாதார வர்த்தகச் செயல்பாட்டின் பிற மேல்நிலை நிறுவனங்கள் அனைத்தையும் ஒழித்துவிட்டனர்.  அவர்கள் இருவரும் விமானச் சேவை முதல் பெட்ரோல் எண்ணை வரை அனைத்துப் பிரிவுகளையும் கட்டுப்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் சொத்துக்களை அற்ப விலைக்கு தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு விற்கும் திருப்பணியைச் செய்து வரும் பிரதமர் வெளியே தேசபக்தி போதிக்கும் பாடல்களைப் பாடி வருகிறார். இவ்வாறு இருந்தபோதும் ஒரு பழமொழி இருக்கிறது, “எல்லா மக்களையும் எல்லா நேரங்களிலும் உங்களால் முட்டாள் ஆக்கிவிட முடியாது.” நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவைச் சகாக்களின் திருவிளையாடல் திட்டங்களைத் தற்போது இந்திய மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு விட்டனர்.

வேளாண் நெருக்கடி

            மணிப்பூர் மாநிலத்தின் வேளாண் கட்டமைப்பு நாட்டின் பிற இடங்களிலிருந்து வேறுபட்டது. பாஜக-வின் முகப்புத் தோற்றமாக உரத்துக் கூவும் தேசியம் தேசபக்தி இவற்றைக் கொண்டு இத்தேசத்தின் வேளாண் பெருமக்களை முட்டாள் ஆக்கிவிட முடியாது. வேளாண் பிரிவைக் கார்ப்பரேட்டுகளுக்குக் கையளிக்கும் மோடியின் நயவஞ்சக விளையாட்டை விவசாயிகள்  மிகச் சுலபமாகக் கண்டு விட்டார்கள்.

            இந்தியாவின் இன்றைய விவசாயிகள் கம்யூனிஸ்ட்களின் மொழியைப் பேசுகின்றனர். இது நமது பங்களிப்பு என நாம் பெருமிதம் கொள்ளலாம். விடுதலை பெற்ற உடன் அன்று கோலோச்சிய நிலப்பிரபுத்துவமும் முடிந்து போனது, ஆனாலும் அதன் மிச்ச சொச்சங்கள் எல்லா இடத்திலும் உள்ளன. இந்திய முதலாளியக் கட்சிகளில் உள்ளப் பெருநிலக்கிழார்கள், காலங்காலமாக விவசாயிகளைச் சுரண்டிய அந்த வழக்கொழிந்த பழையமுறை இன்னும் வலுவாக அப்படியே இருப்பதாகக் கருதுகிறார்கள். எந்த மாநிலங்கள் அதிக எண்ணிக்கையில் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்ததோ அம்மாநிலங்களிலெல்லாம் இதனை மாற்றி அமைக்க முடிந்தது.

            விவசாயிகள் நீண்ட 70 ஆண்டு காலம் நீதியைப் பெறக் காத்திருந்தார்கள். முதலாளிய அரசுகள் மேல்பூச்சாகச் சில அழகூட்டும் மாற்றங்களைச் செய்து, சமூகத்தின் பார்வையை உண்மையான நெருகடியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பி விட்டார்கள். அழகாகச் சொல்லி சொற்பமாகச் செய்ததெல்லாம் விவசாயிகளைத் தொடர்ந்து வயல்களில் உழைக்க வைத்து தங்கள் வாழ்விற்கான ஏதோ ஒரு சிறிது வருமானம் ஈட்ட வழிவகுத்தது. மோடி அரசு புதிய மூன்று வேளாண்சட்டங்களைக் கொண்டுவந்து  இவை அனைத்தையும் ஒரேயடியாக மாற்றி விட்டது.

அமெரிக்கச் சோதனையும் விளைவும்

            60ஆண்டுகளுக்கு முன்னர் இதே பரிசோதனை முயற்சியை அமெரிக்கா செய்தது; அதனால் அதுவரை 60 சதவீத அமெரிக்க மக்கள் விவசாயத்தை நம்பி இருந்தது, இன்றைக்கு வெறும் 4 சதவீதமாகக் குறைந்தது. இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் வயல்களிலிருந்து கைவிடப்பட்ட விவசாயிகளை அன்றைய அமெரிக்காவின் உற்பத்திப் பிரிவு உட்கிரகித்து வாழ்வாதாரத்தைத் தொடரச் செய்தது. ஆனால் இந்தியாவில் அந்த நிலை அழிவை முன்னறிவிக்கும் அசரீரி ஆகிவிடும். வளர்ந்த நாடுகளைப் பார்க்க, இந்தியாவின் உற்பத்திப் பிரிவு மிகவும் சிறியது –கோடிக் கணக்கான விவசாயிகள் வெளியேற்றப்பட்டால், அப்பிரிவால் அவர்களுக்கு மறுவேலைவாய்ப்பு அளித்துவிட முடியாது.

எச்சரிக்கை

            வேளாண் பிரிவின் முழுமையான கட்டுப்பாடு ஏகபோக முதலாளிகள் கைகளுக்குச் செல்லுமானால், இந்தியப் பொருளாதாரத்தை அவர்களால் கட்டுப்படுத்த இயலும். மறைமுகமாக இந்தியா புதிய ஏகாதிபத்தியக் குழுமங்களில் வேட்டைக்காடாகிவிடும். மேம்பூச்சாக ஜனநாயகம் அவர்களது நலன்களுக்குச் சேவகம் செய்யும் என்று எச்சரித்த டாக்டர் ராயலு, இறுதியாக இவ்வாறு கூறி தமது உரையை நிறைவு செய்தார்:

            புதிய மூன்று வேளாண் சட்டங்கள் இந்தியாவின் சிறு மற்றும் விளிப்புநிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்குச் சாவுமணி அடிப்பது! இச்சட்டங்கள் அமலாகுமானால் அமெரிக்கா போல குறைந்த எண்ணிக்கை விவசாயிகள் கைகளில் அவர்களது நிலம் விட்டு வைக்கப்படும்; மீதி பெரும்பான்மையான நிலங்கள் கார்ப்பரேட் பகாசுரர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்து, அதன் மூலம் சந்தையையும் பின்னர் பொருளாதாரத்தையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விடுவர்” என எச்சரித்து தனது உரையை நிறைவு செய்தார்.

            கூட்டத்திற்குத் தலைமை வகித்த டாக்டர் நரசிங், கம்யூனிஸ்ட் தோழர்களை நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடக்கும் நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள வற்புறுத்தினார்; ஏனெனில் ஒரு கம்யூனிஸ்ட் என்பவர் நிறைந்த அறிவுத் தகவல்களோடு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார். பொருத்தமான தலைப்பில் நல்லதொரு நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக இம்பால் கட்சித் தோழர்களை அவர் பாராட்டினார். கூட்ட நிகழ்வு ஏற்பாடுகளை அஜாய் குமார், கட்சிக் கல்வியின் மாநிலப் பொறுப்பாளர் ஒருங்கிணைத்துச் சிறப்பாக நடத்தினார்.      

--நியூஏஜ் (பிப்.7--13) இதழ்

--தமிழில் : நீலகண்டன்,

தொடர்புக்கு 94879 22786

No comments:

Post a Comment