Saturday, 23 May 2026

AIPSO வின் பெருமைமிகு 75 ஆண்டுகள்

 

   --பல்லப் சென்குப்தா

தலைவர், உலகச் சமாதானக் குழு,

பொதுச் செயலாளர் AIPSO

மற்றும் தேசியச் செயலாளர் CPI

உலக சமாதானம், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒருமைப்பாடு, ஜனநாயகம் மற்றும் மனிதகுலக் கண்ணியத்திற்காக அர்ப்பணித்த ‘அனைத்திந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம்’ (AIPSO) தனது 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தச் சாதனை மைல்கல் வெறும் கொண்டாட்டத் தருணம் அல்ல; இது 1951 மே 14ல் சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் நிறுவப்பட ஊக்குவித்த கொள்கைகளின் சிந்தனை பிரதிபலிப்பு, அவற்றை மீண்டும் உறுதிப்படுத்தல் மற்றும் மறு அர்ப்பணிப்புக்கான தருணமும் ஆகும். 

AIPSO அமைப்பு மிகுந்த பெருமையுடன் இந்திய விடுதலைப் போராட்டத்தின் காலனிய எதிர்ப்புப் பாரம்பரியங்களை மரபுரிமையாகப் பெற்றுள்ளது. நமது தேசிய விடுதலை இயக்கம், விடுதலைக்கான போராட்டம் தனித்து நடத்த முடியாது என்பதைத் தலைமுறை தலைமுறையாக இந்தியர்களுக்குக் கற்றுத் தந்துள்ளது. உலகின் எந்த இடத்திலும் காலனியம் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், எல்லா இடங்களிலும் நீதி, சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கான  போராட்டங்களுடன்  பிரிக்க முடியாதபடி தொடர்புடையது. எனவே சர்வதேச ஒருமைப்பாடு, சுதந்திர இந்தியாவின் ஜனநாயக மற்றும் முற்போக்கு உணர்வின் உள்ளார்ந்த ஒருங்கிணைந்த பகுதியானது.

சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் சர்வதேச வரலாற்றுக் கட்டத்தில் பிறந்தது. இரண்டாவது உலகப் போரில் பாசிசம் தோற்கடிக்கப்பட்டது, சோவியத் யூனியனின் உச்சபட்ச தியாகங்கள், சோசலிச நாடுகள் உதயம் மற்றும் அணு ஆயுதங்களுக்கு எதிரான உலகளாவிய இயக்கத்தின் வளர்ச்சி ஆகியன உலகம் முழுவதும் சமாதானத்திற்கான சக்தி மிக்க விழைவை ஏற்படுத்தின. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு ஆயுதக் குண்டுவீச்சு ஏற்படுத்திய கொடூரமான  பதற வைக்கும் பேரழிவு அணு ஆயுதப் போரின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்தியது; மற்றொரு உலகப் பேரழிவைத் தடுக்க சமாதானத்தை விரும்பும் மக்களின் உறுதிப்பாட்டை வலிமைப்படுத்தியது. அதே நேரத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் காலனிய மக்கள், ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கினர்.

இந்தச் சூழ்நிலையின் பின்னணியில் புகழ்பெற்ற தேச பக்தர்கள், கற்றறிந்தோர், கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஒன்றாகக் கூடி 1951இல் ‘அனைத்திந்தியச் சமாதானக் கவுன்சி’லை அமைத்தனர்; அந்தக் குழு பின்னர் 1972ல் ‘அனைத்திந்தியச் சமாதான ஒருமைப்பாட்டுக் கழக’மாகப் பரிமளித்தது.

டாக்டர் சைபுதீன் கிச்சுலு, அருணா ஆசப் அலி, அஜாய் கோஷ், ஏ கே கோபாலன், டிடி கோசாம்பி, பால்ராஜ் சஹானி, பிரிதிவிராஜ் கபூர், வி கே கிருஷ்ணமேனன் மற்றும் முல்க்ராஜ் ஆனந்த் போன்ற புகழ்பெற்ற ஆளுமைகள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்திற்கு அடித்தளமிட உதவியவர்கள் மத்தியில் இருந்தனர்.

பல பத்தாண்டுகளில் AIPSO, இந்தியாவில் சமாதான ஒருமைப்பாட்டு இயக்கங்களில் வலிமை மிக்கதாக உருவானது. அது, உலகம் முழுவதும் நடைபெற்ற தேச விடுதலை போராட்டங்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கத்தில் தொடர்ச்சியாக உறுதியாக நின்றது. அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக வியட்னாமிய மக்களின் வீரம் செறிந்த போராட்டத்திற்குப் பெருந்திரள் மக்களின் ஒருமைப்பாட்டு ஆதரவை AIPSO திரட்டியது. அது வங்கதேச விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தது, கியூபா மீது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தனது குரலை உயர்த்தியது; தென்னாப்பிரிக்காவில் நிறவெறி இன ஒதுக்கலுக்கு (அபார்தீட்) எதிரான இயக்கத்துடன் உறுதியாக நின்றது; (வடமேற்கு ஆப்பிரிக்கா சகாரா பாலைவனப் பகுதியைச் பூர்வீகமாகக் கொண்ட ஒரு நாடோடி மற்றும் கலாச்சார இனக்குழுவான) சகராவி இன மக்களின் போராட்டத்தை ஆதரித்தது; தங்களுக்கான சுதந்திரத் தாய் மண்ணிற்குப் பாலஸ்தீனர்கள் நடத்திய நியாயமான போராட்டத்தில் தனது ஊசலாட்டமற்ற ஒருமைப்பாட்டு ஆதரவைப் பாலஸ்தீன மக்களுக்கு அளித்தது. இன்றும் கூட AIPSO பாலஸ்தீனிய மக்களின் தவிர்க்க முடியாத உரிமைகளுக்காகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறது; மற்றும் நாடுகளுக்கு இடையில் சமாதானம் மற்றும் நட்புணர்வுக்காக குறிப்பாக  தெற்காசிய நாடுகளுக்கு மத்தியில் நட்புணர்வுக்காகக் கியூபாவுக்கு எதிரான அமெரிக்காவின் முற்றுகையை எதிர்க்கிறது.

புகழ்மிக்க ஆளுமையாளர்கள் மத்தியில் AIPSOவின் நிறுவன உறுப்பினர் ரொமேஷ் சந்திராவின் பங்களிப்புகள் சிறப்பு இடத்தைப் பெறுகிறது. பனிப்போர் காலத்தின் கடினமான

பல 10 ஆண்டுகளின்போது சர்வதேச சமாதான இயக்கத்தை விரிவுபடுத்துவதிலும் வலிமைப்படுத்துவதிலும் உலகச் சமாதான கவுன்சிலின் தலைவராக ரொமேஷ் சந்திரா அசாதாரணமான பங்காற்றினார். ஏகாதிபத்திய போர்கள், காலனிய ஆக்கிரமிப்பு, இனவெறி மற்றும் அணு ஆயுதங்களுக்கு எதிராகக் கண்டங்களுக்கு இடையே பல நூறு லட்சம் மக்களை  ஒன்றுபடுத்த அவரது தலைமையின் கீழ் உலகச் சமாதானக் கவுன்சில் சக்திமிக்க மேடையானது. அவரது அயராத முயற்சிகள், தேசிய விடுதலை, சமூக நீதி மற்றும் பொருளாதார இறையாண்மைக்கான போராட்டங்களுடன் சமாதானத்திற்காகப் பாடுபடுதலைத் தொடர்புபடுத்தியது. அவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தலைமுறை தலைமுறையான செயல்பாட்டாளர்களை ஊக்குவித்தார். சர்வதேச அளவில் இந்தியச் சமாதான இயக்கத்தின் பெருமையையும் செல்வாக்கையும் அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார்.

இன்று அது நிறுவப்பட்ட 75 ஆண்டுகளுக்குப் பிறகு AIPSO அதன் வலிமையிலும் பொருத்தப்பாட்டிலும் தொடர்ந்து வளர்கிறது. இந்த அமைப்புத் தொடர்ந்து சமாதானம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சூழலியல் பாதுகாப்பு, சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் குறித்த பிரச்சனைகளை எழுப்பி வருகிறது. அதன் மாநாடுகள், கருத்தரங்குகள், ஒருமைப்பாட்டு பிரச்சாரங்கள் மற்றும் பெருந்திரள் மக்களைத் திரட்டுவது இந்த இயக்கத்தின் துடிப்புமிக்க வலிமையைப் பிரதிபலிக்கிறது.

அதே நேரத்தில் சமகால உலகம் கடுமையான மற்றும் இதுவரை சந்தித்திராத சவால்களை முன்னிறுத்துகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் இருந்தபோதும் மனிதகுலம், போர், பசி, சமத்துவமின்மை மற்றும் சுரண்டலில் இருந்து தொடர்ந்து துன்பப்படுகிறது. ஏகாதிபத்தியத் தலையீடுகள், இராணுவக் கூட்டணிகள் மற்றும் மூர்க்கமான போர்கள் உலக சமாதானத்தை அச்சுறுத்துகின்றன. அணு ஆயுதங்கள் தொடர்ந்து மனித நாகரீகத்தை ஆபத்துக்கு உள்ளாக்குகின்றன. பொருளாதார ஆதிக்கமும், செல்வாதாரங்கள் மீது கட்டுப்பாட்டைச் செலுத்துவதற்கான போட்டியும் பிரதேசங்கள் தோறும் மோதல்களைத் தீவிரப்படுத்துகிறது. வகுப்புவாதம், மத அடிப்படைவாதம், மற்றும் பெரும்பான்மைவாத அரசியல் என இவை சமூகங்களில் நஞ்சை விதைக்கிறது மற்றும் ஜனநாயக அமைப்புகளைச் சீர்குலைக்கிறது

தற்காலத்தில் இந்தியாவும்கூட தீவிரமான சவால்களைச் சந்திக்கிறது. பிளவுபடுத்தும் மற்றும் வகுப்புவாதச் சக்திகளின் கீழ் நமது மதச்சார்பற்ற சமூகக் கட்டமைப்பு இழைபின்னல் அழுத்தத்திற்கு உள்ளாகியது. அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களான ஜனநாயகம், சமத்துவம், கூட்டாட்சி மற்றும் சமூக நீதி  மேலும் தாக்குதலுக்கு ஆளாகிறது. மதம், சாதி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்த வெறுப்பு அரசியல் முயற்சிக்கிறது. பொருளாதாரரீதியில் சமத்துவமின்மை இடைவெளிகள் அதிகரிக்கும்போது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விளிம்பு நிலை வகுப்புகளின் உரிமைகள் அரிக்கப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில் சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தை வலிமைப்படுத்தும் பொறுப்பு இன்னும் கூடுதல் அவசரத்தைப் பெறுகிறது.

சமாதானத்தைப் பாதுகாப்பது என்பது இன்று ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களைப் பாதுகாப்பதில் இருந்து பிரிக்க முடியாது. எனவே AIPSO அதன் செயல்பாடுகளைச் சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்கள் மத்தியில் குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் வேண்டும். வகுப்புவாத வெறுப்பு, சர்வாதிகார அதிகாரத்துவம், ராணுவமயவாதம், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக அமைதியை விரும்பும் ஜனநாயக மற்றும் தேசபக்த சக்திகளின் ஒற்றுமையை AIPSO விரிவாகக் கட்டி எழுப்ப வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்ட லட்சியங்களான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டுடன் பாதுகாக்கப்பட வேண்டும்.

சமாதானம் மற்றும் ஒருமைப்பாட்டு நோக்கத்திற்காக ஒன்றுபடும் மக்கள், நிகழ்வு போக்குகளின் மீது செல்வாக்குச் செலுத்த முடியும் என்பதை AIPSOவின் வரலாறு எடுத்துக் காட்டுகிறது. அமைப்பின் 75 ஆண்டு காலப் பயணம், சர்வதேசியம் மற்றும் கூட்டு நடவடிக்கையின் நீடித்து நிலைத்திருக்கும் வலிமைக்குச் சான்று பகரும். வன்முறை, சகிப்பின்மை மற்றும் அதிகரிக்கும் உலகளாவிய நிலையற்றத்தன்மையால் அடையாளப்- படுத்தப்படும் சகாப்தத்தில் சாந்தி சமாதானம், ஒருமைப்பாடு மற்றும் ஒத்துழைப்பின் செய்தி எப்போதையும்விட இப்போது கூடுதல் பொருத்தம் உடையதாகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க AIPSOவின் இந்த ஆண்டு தினத்தில், பல பத்தாண்டுகளாகத் தியாகம் மற்றும் போராட்டத்தின் மூலம் இந்த இயக்கத்தைக் கட்டி வளர்த்த அனைவருக்கும் நாம் அஞ்சலி செலுத்துவோம்! அவர்களின் பாரம்பரியம் சமாதானம், ஜனநாயகம் மற்றும் மனித குல விடுதலை பதாகையை மேலும் முன்னெடுத்துச் செல்ல ஊக்குவிக்கிறது.

அனைத்திந்தியச் சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் 75வது ஆண்டு நிறைவு செயல்படுவதற்கான புதுப்பிக்கப்பட்ட அறைகூவல் ஆகட்டும். இந்தியா முழுவதும் உள்ள அமைதியை விரும்பும் மக்கள் இந்த வரலாற்று இயக்கத்தை வலிமைப்படுத்த ஒன்றுபடட்டும்; அப்போதுதான்  நாம் ஒன்றாக இணைந்து நமது அரசியல் அமைப்புச் சட்டத்தையும், நமது சமூகத்தின் ஜனநாயக இழைப்பின்னல் கட்டமைப்பையும் பாதுகாக்க முடியும்; ஏகாதிபத்தியம் மற்றும் போரை எதிர்க்கவும்;  சமாதானம், நீதி, ஒருமைப்பாடு மனித மகிழ்ச்சி அடிப்படையிலான உலகத்தைக் கட்டுவதற்குப் பணியாற்ற முடியும். 

அகில இந்தியச் சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் ஜிந்தாபாத்! 

“புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட

                   போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!”

–நன்றி : நியூ ஏஜ் (மே 24 –30)

–தமிழில் : நீலகண்டன், 

என் எஃப் டி இ, கடலூர்

No comments:

Post a Comment