Sunday, 10 May 2026

மார்க்ஸை நினைவு கூர்தல் இன்று அரசியல் தேவை --–டாக்டர் அருண் மித்ரா

 

மார்க்ஸை நினைவு கூர்தல்

இன்று அரசியல் தேவை

–டாக்டர் அருண் மித்ரா 

காரல் மார்க்ஸ் 1818 மே 5ல் பிறந்தார். இன்றைய உலகின் கொந்தளிப்பான நிலை மார்க்சின் கருத்துக்களை மீண்டும் பார்க்க நம்மைக் கட்டாயப்படுத்துகிறது, முதலாளித்துவம் குறித்த அவரது விமர்சனம் இன்றும் மிகப் பொருத்தமாக உள்ளது. சமீபத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் ஆக்கிரமிப்பு, சமகால ஏகாதிபத்தியத்தைச் செலுத்தும் அதன் தீவிரப் பேராசையை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்துகிறது. மறைவான அதன் நோக்கம் பின்வருமாறு பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டது: உலகின் பாதிக்கும் அதிகமான மரபார்ந்த கச்சா எண்ணை இருப்பைச் செறிவாகக் கொண்டுள்ள சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் குவைத் அடங்கிய இந்தத் தெற்காசியா பிராந்தியத்தின் விரிந்து பரந்த இயற்கை வளங்களின் மீது கட்டுப்பாட்டைச் செலுத்துவது அதன் நோக்கம்.

பருவமாற்றப் பிரச்சனையைத் தீர்க்க புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பால் உலகமே கூடுதலாகத் திரும்பி உள்ளபோது, சக்தி மிக்க பெரும் கார்ப்பரேஷன்கள் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துச் சற்றும் கவலைப்படாமல் படிம எண்ணெய் (ஃபாசில் ஃப்யூயல்) பயன்பாட்டில் தொடர்ந்து செல்கிறது. இந்த முரண்பாடு, நீடித்த சூழலியல் தன்மை மற்றும் மனிதகுல நலனுக்கு மேலதிகமாக லாபத்தை (கொள்ளை லாபமாக) அதிகபட்சமாக்குவது என்ற முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த தர்க்கத்தைத் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது.

காசாவில் மனிதநேய நெருக்கடி இந்த யதார்த்தத்தை மேலும் விளக்குகிறது. அளவுக்கு அதிகமான இராணுவ நடவடிக்கை, இஸ்ரேலால் 20000 குழந்தைகள் உட்பட பெருமளவு சாதாரண மக்களைப் பலி வாங்குவதில் முடிந்துள்ளது. அத்தகைய வன்முறை மனிதத்தன்மையற்ற விரிவான போக்கையும்; சர்வதேசச் சட்டங்கள் மற்றும் அமைப்புகள் பல நேரங்களில் சக்தி மிக்க அரசுகளைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்த உலக அரசியலில் தண்டனை இன்மையையும் பிரதிபலிக்கிறது.

அனைத்துச் சர்வதேச சட்டங்களையும் மதிக்காமல்  புறந்தள்ளி காசாவுக்கு அப்பாலும் தாக்குதல்கள் நீட்டிக்கப்படுவது உள்ளிட்ட இப்பகுதியில் நீடிக்கும் மோதல்கள், பேராசைகளால் ஏற்படுத்தப்- பட்ட நிலையற்ற தன்மையை வலியுறுத்தி எடுத்துக் காட்டுகிறது. தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் காசாவில் நடக்கும் இன அழிப்புக்காக நெதன்யாகுவைப் பொறுப்பாளியாக்கி உள்ளன.

இந்த நிகழ்வுப் போக்குகள் –மனித வாழ்க்கைக்கு மேலாக லாபத்தை வைக்கும், சூழலியல் சமத்தன்மையைச் சீர்குலைக்கும் மற்றும் முடிவற்று பற்றி எரியும் மோதல்களுக்கு மேலும் எண்ணை ஊற்றும்– முதலாளித்துவத்தின் மிகக் கோரமான முகத்தை வெளிப்படுத்துகின்றன. லாபத்தைக் குவிப்பது மற்றும் போட்டியால் செலுத்தப்படும் முதலாளித்துவம், சமூகம் மற்றும் இயற்கை இரண்டையும் அச்சுறுத்தும் நெருக்கடிகளை உற்பத்தி செய்யும் என்று மார்க்ஸ் எச்சரித்தார். 

பூகோள-அரசியல் மற்றும் பொருளாதார நலன்களின் உப உற்பத்தி பொருளான உலகளாவிய ஆயுதப் போட்டி, சுற்றுச் சூழலியல் மோசமாவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. மனித மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய இயற்கைச் செல்வாதாரங்கள், அதற்கு மாறாக இராணுவமயமாக்குதல் நோக்கி திருப்பப்படுகிறது. இதன் விளைவு சமத்துவமின்மை, பாதுகாப்பு இன்மை மற்றும் சூழலியல் நெருக்கடி துன்பங்களால் அடையாளப்படுத்தப்படுகிறது.

இந்தக் கட்டத்தில் மனித குலத்திற்கு முன் உள்ள சவால், குடிமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் பிற எளிய பிரிவினரின் உரிமைகள் பாதுகாப்பதை உறுதிப்படுத்துவது குறித்தானது. கட்டுப்படுத்தப்படாத லாபத்தை விட, மாறாக நீதி, சமத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சி அடிப்படையிலான முறையை நோக்கிய மாற்றல் இதற்குத் தேவைப்படுகிறது 

இந்த முரண்பாடுகளைப் புரிந்து கொள்வதற்கான சட்டகத்தை மார்க்சியம் வழங்குகிறது. அது, வர்க்க உறவுகளில் உள்ளார்ந்து பொதிந்த சுரண்டலிலிருந்து எழும் சமூகச் சமத்துவமின்மை- களை வலியுறுத்துகிறது; அது மட்டுமல்லாமல் அத்தகைய சமத்துவமின்மைகளை உணர்வுள்ள கூட்டு நடவடிக்கை மூலம் வெற்றி காண முடியும் என அறுதியிட்டு உரைக்கிறது. சமூக முறைமைகள் வரலாற்று சூழல் சார்ந்தவை எனப் பார்க்கும், மற்றும் ஆற்றலுடன் கூடிய வளரும்  கோட்பாடான மார்க்சியம் –உதாரணமாக அடிமைத்தனமும் நிலப்பிரபுத்துவமும் முதலாளித்துவத்திற்கு வழிவிட்டது போல, –முதலாளித்துவமும் கூட சோசலிசம் மற்றும் கம்யூனிசத்தால் மாற்றி அமைக்கப்படும் (என்று வரலாற்றுப் போக்கைக் காண்கிறது)

இன்று செல்வம் தொடர்ந்து உலகின் மேல்மட்ட சிலரது கைகளில் குவிந்து கிடக்கிறது; அதே நேரம் மக்கள் திரளின் பெரும் பிரிவினர்கள், அடிப்படை உரிமைகளுக்காகவும் கண்ணிய வாழ்விற்காகவும் போராடிக் கொண்டிருக்கின்றனர். முன்னேறிய முதலாளித்துவச் சமூகங்களும் கூட சமத்துவமின்மை மற்றும் சமூக நீதி குறித்த அடிப்படை பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தோல்வி அடைந்துள்ளன.

வளர்ந்து வரும் நாடுகள், சக்தி மிக்க நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்களுக்குப் பாதிக்கப்படக் கூடியனவாக இருக்கும்போது, பல நேரங்களில் செல்வாதாரங்கள் மீதான மோதல்கள் வழியே அவை வெளிப்படுகின்றன. கோவிட் பெருந்தொற்று போன்ற மிகத் தீவிரமான சுகாதார நெருக்கடி சூழ்நிலைகளின் போதும் கூட, பெரிய மருந்து கார்ப்பரேஷன்கள் சிறிய நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகளை வழங்கும்போது அச்சுறுத்தி மிரட்டின (பிளாக் மெயில் செய்தன).

இந்தியாவில் சந்தையாலும், ஏகாதிபத்தியச் சக்திகளின் குறிப்பாக அமெரிக்காவின் அழுத்தங்களாலும் செலுத்தப்படும் கொள்கைகளால் சமீபத்திய பொருளாதாரப் போக்குகள் வடிவமைக்கப்பட்டன:  அவை  வேலையின்மை, உண்மை ஊதியம் வீழ்ச்சி மற்றும் கல்வி, சுகாதாரப் பராமரிப்புப் போன்ற அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதைக் குறைத்ததில் பங்களித்தன சமீபத்தில் அமெரிக்கா உடன் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் இந்திய அரசின் பலவீனங்களை அம்பலப்படுத்தி விட்டது.

அத்தகைய நிலைகள் பரவலான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு மறு வினையாக அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தைத் தொடர, ஒடுக்கு முறையை நாடுகின்றனர்; போலி தேசியவாதம், வரலாற்றைச் சிதைப்பது மற்றும் அடையாளம், சமய நம்பிக்கை, இன அடிப்படையிலான சமூகப் பிளவுகளை ஊக்குவித்து வளர்க்கின்றனர். 

இந்தக் கட்டத்தில், அடையாள அடிப்படையிலான போராட்டங்களுடன் விமர்சன ரீதியாக ஆராய்ந்து ஈடுபடும்போது, வர்க்க அரசியலின் முதன்மையை மீண்டும் வலியுறுத்துவது முக்கியமானது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இடையில் ஒற்றுமையைக் கட்டுவது மற்றும் மாற்றுக் கருத்தியல் விவரிப்பை மேம்படுத்துவது, புதிய தாராளமய முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை எதிர்ப்பதை நோக்கிய முக்கிய நடவடிக்கைகளாகும்.

இன்று காரல் மார்க்ஸை  நினைவு கூர்தல் வெறும் அறிவார்த்த நடவடிக்கை அல்ல –அது அரசியல் தேவையாகி உள்ளது. அவரது நுண்ணோக்கு ஆய்வு பார்வை, மேலும் நியாயமான, சமத்துவமான மற்றும் நிலையான உலகம் நோக்கிய பாதையைத் தொடர்ந்து ஒளிபெறச் செய்கிறது.                      

 நன்றி : நியூ ஏஜ் (மே 10 –16)

தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ கடலூர்


No comments:

Post a Comment