Saturday, 8 August 2026

நியூ ஏஜ் தலையங்கம்-- மாணவர் பெருமன்றமும் வெள்ளையனே வெளியேறு இயக்கமும்

 நியூ ஏஜ் தலையங்கம் (ஆகஸ்ட் 9 -15)

மாணவர் பெருமன்றமும்
வெள்ளையனே வெளியேறு இயக்கமும்

இந்த ஆண்டு ஆகஸ்ட் 12 அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (ஏஐஎஸ்எப்) 90ம் ஆண்டு அமைப்பு தினத்தை அடையாளப்படுத்துகிறது. 1936ல் தொடங்கப்பட்டதில் இருந்தே ஏஐஎஸ்எப், தேச

விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டது. 84 ஆண்டுகளுக்கு முன்பு ‘வெள்ளையனே வெளியேறு (குவிட் இந்தியா) இயக்கம்’ தொடங்கப்பட்ட போது 1942 ஆகஸ்ட் 9ல் மாணவர் பெருமன்றம் அதில் முன்னணி பாத்திரம் வகித்தது. சிந்த் மாகாணத்தில் கைது செய்யப்பட்டு தூக்குமரத்தில் ஏற்றப்பட்ட ஆகஸ்ட் கிளர்ச்சியாளர்களில் முதல் தியாகி பெரு மன்றத்திலிருந்து வந்தவர். அவரது பெயர் ஹேமு கலானி, சிந்த் மாகாணத்தின் சுக்கூரில் உள்ள பள்ளியில் இருந்து வந்தவர்.

அப்பகுதியில் ஏஐஎஸ்எப் ‘சுக்கூர் மாணவர் சங்க’த்தின் கீழ்ப் பணியாற்றி வந்தது; அதன் தீவிர செயல்பாட்டாளர்களில் ஒருவரான ஹேமு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இலக்குக்கு

ஆளாகி 1942 ஆகஸ்ட் 24 இரவு கைது செய்யப்பட்டார். பின்னர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அவர், 1943 ஜனவரி 21 அன்று –அவரது உதடுகள் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ போன்ற முழக்கங்களை ஒலித்த வண்ணம் இருக்க– தூக்கிலிடப்பட்டார். அவர் பெயர் சிந்து பிராந்தியத்தில் புகழ்பெற்ற பெயரானது. ஜோத்பூரில் ஒரு பொதுச் சதுக்கம் ‘ஹேமு கலானி சௌக்’ என்று அவரது பெயரைத் தாங்கி நிற்கிறது.

விரைவில் முடிவிலாத பெருவெள்ளமென அலை அலையாய்ப் பையன்களும் பெண்களுமாகத் தியாகிகள் பட்டியலில் இணைந்தனர். நாடு முழுவதுவதுமாக வீசிய வரலாற்று நிகழ்வாக அது மாறியது. (அன்று ஒன்றுபட்ட ஐக்கிய மாகாணம் என்று அழைக்கப்பட்ட) உ.பி., இயக்கத்தின் முக்கிய மையமாக இருந்தது. அந்த இயக்கத்தின் முன்னணி வகித்தவர்களில் சர்ஜூ பாண்டே ஒருவர். அவர் ராமா சிங் போன்ற தனது சகாக்கள் சிலருடன் 1942 ஆகஸ்ட் 15ல் (உபி, காசிப்பூர் மாவட்டத்திலுள்ள) காசிமாபாத் காவல் நிலையத்தை அடைந்தார். அவர்கள் அங்கிருந்த போலீஸ் அதிகாரியைக் கட்டாயப்படுத்தி பிரிட்டிஷாரின் யூனியன் ஜாக் கொடியை இறக்கி மூவர்ணக் கொடியை ஏற்றச் செய்தனர். காசிமாபாத் காவல் நிலையத்தில் முழுமையாக ஒரு வார காலம் மூவர்ணக் கொடி பறந்தது.

சர்ஜூ பாண்டேவைக் கண்டதும் சுட உத்தரவுகள் பறந்தன. அந்த நிகழ்வு எல்லா இடங்களிலும் பிரபலமானது. சர்ஜூவும் அவரது தோழர்களும்‌ கிராமம் விட்டு கிராமம் மாறிச் சென்று நீண்ட காலம் தலைமறைவாக இருந்தனர். கிராமத்தவர்கள் அவர்களை ஒருபோதும் காட்டிக் கொடுக்கவில்லை. அவர்களின் குடும்பங்களைப் போலீஸ் துன்புறுத்தத் தொடங்கியது.

சில மாதங்களுக்குப் பிறகு சர்ஜூ அவரது தோழர் ராமா சிங்குடன் சுசுன்டி கிராமத்தில் கைது செய்யப்பட்டார். முதலில் காசிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்ட சர்ஜூ பின்னர் காசி மற்றும் பிற சிறைகளுக்கு மாற்றப்பட்டார். சிறையில் மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டார், கை கால்களில் விலங்கு பூட்டி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார், மாவு அரைக்கும் மில்களில் பணியாற்றவும் கட்டாயப்படுத்தப்பட்டார். 

சுயநினைவற்று விழும் வரை பிரம்பால் தாக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் அவர் “பாரத மாதா கி ஜெய்” மற்றும் “வந்தே மாதரம்” என்று முழங்கினார். நீதிமன்றத்தில் தனது வழக்கை அவரே வாதாடி நடத்தினார், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டார். அவருக்கு 42 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் பெரும் தொகை அபராதமும் விதிக்கப்பட்டது.

ஏஐஎஸ்எப் செயல்பாட்டாளர்கள் அதே முறையில் மாநிலத்தின் பல பகுதிகளிலும் கிளர்ச்சி செய்தனர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போக, இராணுவம் உள்ளே வரவழைக்கப்பட்டு எட்டு நாட்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தை அது தனது பிடிக்குள் வைத்திருந்தது. காங்கிரஸின் ஷா குழு மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (முகீம்) ஃபரூக்கி குழு ஆகிய இரண்டு மாணவர் சங்க அமைப்புகளும் இணைந்து செயல்பட்டன: சேர்ந்து செயல்பட்ட அவர்கள் தடியடிகள் மற்றும் துப்பாக்கி குண்டுகளைச் சேர்ந்தே சந்தித்தனர் மற்றும் இரு குழுவினர்களும் சேர்ந்தே சிறைக்குச் சென்றனர்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) மாணவர் அமைப்புகள் தங்கள் நடவடிக்கைகளைத் காசியிலிருந்து காசிப்பூருக்கு விரிவுபடுத்தின. ஏஐஎஸ்எப் செயல்பாட்டாளரான விஸ்வநாத் சிங் தலைமையில் மாவட்டத் தலைநகரில் கோட்வாலிக்கு மாணவர்களின் மாபெரும் பேரணி நடைபெற்றது.

ஃபெரோஷாபாத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் பாலிவால், இந்தியத் தாயின் கௌரவத்தைப் பாதுகாக்க தங்கள் உயிரையும் தியாகம் செய்யுமாறும்; அப்போதுதான் அடுத்துவரும் தலைமுறையினர் அவர்களை நினைவு கொள்வார்கள் என்று மாணவர்களிடம் வேண்டி அவர்களை ஊக்குவித்தார். பாலிவால் பின்னர் (ஃபரூக்கி பிரிவு) மாணவர் பெருமன்றத்தின் பிரபல தலைவர் ஆனார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியபோது பீகாரில் சந்திரசேகர் சிங், ராகுல் சாங்கிருத்தியாயன் மற்றும் இந்திரதீப் சின்ஹா உள்ளிட்ட பெரும்பாலான ஏஐஎஸ்எப் தலைவர்கள் நவ்கட்ச்சியா என்ற இடத்தில் நடைபெற்ற மாணவர் பெருமன்றத்தின் பாகல்பூர்

மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். மாநாடு இரண்டு நாட்கள் தொடர்ந்தது; மாநாட்டின் எல்லா விவாதங்களிலும் குவிட் இந்தியா இயக்கம் பிரதான ஆதிக்கம் செலுத்தியது. நவ்கட்சியாவில்தான் அவர்களுக்குக் காந்தி கைதான செய்தி கிடைத்தது. அடுத்த நாளே சந்திரசேகர் சிங் தனது நண்பர்களுடன் பாட்னா சென்றடைந்தார். காந்திஜி மற்றும் பிற தேசியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஒரு நாள் முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய ஏஐஎஸ்எப் அறைககூவல் விடுத்தது.   

ஆகஸ்ட் 12ல் செகரட்டரியேட் முன்பு பீகார் ஏஐஎஸ்எப் பொதுச் செயலாளர் சந்திரசேகர் சிங் தலைமையில் மாணவர்கள் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பிரிட்டிஷ் அரசு தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் இறங்கியது; அதில் ஏழு மாணவர்கள் பலியாகி இரத்த சாட்சி ஆயினர், மற்றும் பலர் காயமடைந்தனர். பெருமன்றச் செயற்பாட்டாளர்கள் அவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர். கார்யானந்த் சர்மா, சந்த் லால் சிங், போகேந்திர ஜா, தேஜ்நாராயணன் மற்றும் பிறர் உள்ளிட்ட ஏஐஎஸ்எப் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

பீகாரின் மாணவர்கள் போராட்டத்தை  நடத்திய சந்திரசேகர் சிங் மற்றும் பிற செயற்பாட்டாளர்கள் தவிர அவர்களில் கிருஷ்ண சந்திர சவுத்ரி, சதுரானன் மிஸ்ரா, கங்காதர் தாஸ், ஜெய்மங்கல் சிங், டாக்டர் ராம்விலாஸ் சர்மா, சியாவர் சரண் முதலானவர்களும் அடங்குவர். மாநிலத்தில் மொத்தம் 122 இடங்களில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. பீகார் பெகுசாராய் மாவட்டத்தில் போலீசுக்கு எதிராக மக்கள் தீவிரமான கடும்  போரிட்டனர். பிகேட் மற்றும் டேக்கரா இடையில் உள்ள சாலையில் மக்கள் மீது போலீஸ் துப்பாக்கியால் சுட அதில் உசித் சிங் என்ற இளைஞர் களபலி தியாகியானார்.

மாணவர் பெருமன்றப் பங்கேற்பின் சுடர்மிகு அம்சங்களில் ஒன்று சத்தாராவில் நிகழ்ந்தது: அங்கு –வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஒரு பகுதியாக– ‘பிரதி சர்க்கார்’ (புகழ்பெற்ற இணையான தலைமறைவு அரசு) ஒன்றை நானா பாட்டில்  நிறுவினார். ஏஐஎஸ்எப்–இன் மாணவச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆறாவது அல்லது ஏழாவது வகுப்பு வரை மட்டுமே படித்த விவசாயிகள் இந்த இயக்கத்தின் பெரும்பான்மை தலைமறைவுப் பணியாளர்களாக அமைந்தனர். பிரதி சர்க்கார் 1946 ஜனவரி வரை தொடர்ந்து நீடித்தது; அது தனது சமூக, அமைப்பு நிலை, நிர்வாகம் மற்றும் நீதித்துறை பணிகள் மூலம் அந்தப் பகுதியிலும் மற்றும் தேசிய இயக்கத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கத்திற்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தனர்.

அகிம்சை முறையில் தொடங்கிய சில அமைப்புகள் 1942 இயக்கத்தில் வன்முறை வழிமுறைகளைக் கையில் எடுத்தன; அதற்கு அந்த அமைப்புகள் ‘சூழ்நிலைக்கு ஏற்ப வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்’ என்ற காந்திஜியின் அறிக்கையைப் பயன்படுத்தின. இவ்வாறு, ஏஐஎஸ்எப்  செயற்பாட்டாளர், புலின் பெஹாரி சென், (மேற்கு வங்கம் கிழக்கு மித்னாபூரின்) கெஜுரி கிராமத்தில் குடிப்படை ஒன்றை (மிலீஷியா –துணை இராணுவப் படை) நடத்தினார்; அதன் இரகசியப் பணியாளர்கள் இளைஞர்களுக்குப் பிரம்பு மற்றும் குறுவாள் பயிற்சி அளித்தனர், மற்றும் புரட்சிகர இதழ்களை விநியோகித்தனர்.

அகமதாபாத்தில் பெருமன்றச் செயற்பாட்டாளரும் காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவருமான ஜெயந்தி தாக்குர் அவரது “ஆசாத் அர”சில் இருந்து  அப்பகுதியில் வீட்டு உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் தலைக்கு ஓர் அணா வீதம்  பங்களிக்க வேண்டும் என்ற உத்தரவை வெளியிட்டார். அதன் மூலம் ரூபாய் 50 திரட்டினார். அடுத்து விரைவில் அவர் அகமதாபாத் நகரின் தலைவராகப் பிரபலமானார். அவருக்குக் கீழ் "போல் நாயக்–கள்" (Pol Nayaks) இருந்தனர்; இவர்கள் "போல்ஸ்" (Pols) என்று அழைக்கப்பட்ட, சாதி அடிப்படையில் அமைந்த தனித்த குடியிருப்புப் பகுதிகளின் தலைவர்களாகத் திகழ்ந்தனர். அவரது மேற்பார்வையில் நகரத்தின் 14 வார்டுகளை 19 தலைவர்கள் கவனித்துக் கொண்டனர். 

சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்புச் செய்த பெருமித உணர்வுடன் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (ஏஐஎஸ்எப்) 90வது அமைப்பு தினத்தைக் கொண்டாடுவோம்!

 (--கிருஷ்ண ஜா)

–தமிழில் : நீலகண்டன், 

என் எஃப் டி இ, கடலூர்