Saturday, 6 June 2026

கம்யூனிஸ்ட் தலைவர்களின் வரலாறு 151 --- பெரின் பரூச்சா, மாணவர் மற்றும் சமாதான இயக்கங்களின் முன்னோடி அமைப்பாளர்

 கம்யூனிஸ்ட் தலைவர்களின் வரலாறு 151 


பெரின் பரூச்சா : மாணவர் மற்றும் சமாதான
இயக்கங்களின் முன்னோடி அமைப்பாளர்

–அனில் ரஜீம்வாலே 


பெரின் பரூச்சா (திருமணத்திற்குப் பிறகு பெரின் ரொமேஷ் சந்திரா) பணக்கார பார்சி குடும்பத்தில் பிறந்தவர்; சுதந்திர மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து, தொடர்ந்து மாணவ, சமாதான மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தலைச் சிறந்த அமைப்பாளர் ஆனவர்.

தொடக்க கால வாழ்க்கையும் கல்வியும் 

பெரின் இப்போது பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான், ச்சாமன் (Chaman) என்ற இடத்தில் ஒரு பார்சி குடும்பத்தில் 1918 அக்டோபர் 2ல் பிறந்தார். அவரது தந்தை லெப்டினன்ட் கர்னல் பைரோஸ் பைராம்ஜி பரூச்சா, ஒரு பிரிட்டிஷ் இந்திய ராணுவ டாக்டர், பின்னர் லாகூரின் சர்ஜன் ஜெனரல் ஆனவர். அவரது தாயார் பெயர் பிலூ. பெண்களுக்கான கின்னார்ட் கல்லூரியிலும் பின்னர் லாகூர் பல்கலைக்கழகத்திலும் பெரின் படித்தார்.

அரசியலில் 

அவரது தந்தை முற்போக்கான தாராளப் பார்வை கொண்டவர்; எனவே முழு குடும்பச் சூழலும் அவ்வாறே இருந்தது. கின்னார்ட் கல்லூரியில் அவருக்குச் சுதந்திரப் போராட்ட வீரர்களுடனும் சுதந்திரப் போராட்டத்துடனும் தொடர்பு ஏற்பட்டது. விரைவில் அவர் திறன்மிக்க அமைப்பாளராக மலர்ந்தார். தன்னைச் சுற்றி அவர் பெரும் குழு உறுப்பினர்களை ஒன்று சேர்த்து லாகூரில் ஓர்-அறை வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கிருந்து செயல்பட்டார். அவர் நிதி திரட்ட உதவியும், நிவாரணங்கள் வழங்கியும் மற்றும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். ஷீலா பாட்டியாவுடன் சேர்ந்து பஞ்சாபின் விவசாயப் பின் நிலப்பகுதிகளுக்குப் பலமுறை விஜயம் செய்ய அவர் ஏற்பாடு செய்தார்.

ஓர் அமைப்பாளராகப் பிறரிடம் மிகக் கடுமையாகப் பணி வாங்குபவராகவும் திறன்மிக்க அணிகளைக் கொண்ட குழுவைக் கட்டி எழுப்பவராகவும் பெரின் இருந்தார்.

அவரது தந்தையின் இராணுவக் கடமைகள்  அவரைப் பல்வேறு இடங்களுக்கும் மாறச் செய்தது. அதன் விளைவாய் அவர் பல்வேறு இராணுவக் கண்டோன்மெண்ட் நகரங்களில் லட்சிய குழந்தமைப் பருவத்தையும், சிம்லாவில் சிறிது காலம் உறைவிட பள்ளி வாழ்வையும்கூட பெற்றார். லாகூர் கல்லூரிக்குச் சென்ற காலகட்டத்தில் அவர் கையால் நூற்று கையால் நெய்யப்பட்ட கதர் ஆடைகளை அணியத் தொடங்கினார்.

லாகூர் மாணவர் சங்கம் (LSU)

லாகூரில் படிக்கும்போதுதான் பெரின் லாகூர் மாணவர் சங்கத்துடன் தொடர்பு கொண்டார். அந்நாட்களில் லாகூர், அரசியல் மற்றும் கருத்தியல் நடவடிக்கைகள் மற்றும் மேலும் மாணவர் நடவடிக்கைகளின் முக்கிய மையமாக இருந்தது. சக்திமிக்க  மாணவர் அமைப்பாக உருவான LSU உடன் ஜவஹர்லால் நேரு, பகத்சிங் மற்றும் பிற பிரபலமான ஆளுமையாளர்கள் தொடர்பில் இணைந்திருந்தனர். 1936ல் அது அனைத்திந்திய மாணவப்  பெருமன்றத்துடன் (ஏஐஎஸ்எப்) இணைப்புப் பெற்றது.

1928 அக்டோபர் 7ல் நடைபெற்ற லாகூர் மாணவர் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவிற்கு நேரு அனுப்பிய செய்தியில், “லாகூர் மாணவர் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவில் நேரில் கலந்து கொள்ள இயலாததற்கு நான் வருந்துகிறேன். போராட்டங்களும் துன்பங்களும் நிறைந்த உலகில் நம்பிக்கை அளிப்பது இளைஞர்களின் விழிப்புணர்வும் கிளர்ச்சியையும்விட வேறு எதுவும் இல்லை. லாகூரின் மாணவர்கள் தங்களை ஒன்று திரட்டி ஒரு சங்கமாக அமைத்து இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்…” என்று கூறினார்.

பகத்சிங்கின் பாரத் நவ் ஜவான் சபா லாகூர் மாணவர் சங்கத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பில் இருந்தது. அத்தகைய அமைப்பில்தான் பெரின் பரூச்சா பணியாற்றத் தொடங்கியிருந்தார்.

அந்தச் சங்கம் பிரபோத் சந்திரா, ராஜ்பன்ஸ் கிருஷ்ணா, வீடி சோப்ரா, ஐ.கே குஜ்ரால், பேராசிரியர் ரன்தீர் சிங் போன்ற பிற தலைசிறந்த மாணவர் தலைவர்களை ஈர்த்தது. கால ஓட்டத்தில் பெரின் எல்எஸ்யு அமைப்பின் வலிமையான தூண்களில் ஒருவரானார்,

லாகூரில் கங்காராம் பள்ளி முதல் தரமான கல்வி நிறுவனம். அதன் முதல்வர் (கவிக்குயில் சரோஜினி நாயுடு மற்றும் சுகாசினி ஜம்பேகார் இருவரின் சகோதரியான) மிராளினி சட்டோபாத்தியாயா. அந்தப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விவாதங்கள் மற்றும் உரையாடல்களின் மையமாக ஆனது. அவர்களில் பெரின் பரூச்சா, ஷீலா பாட்டியா, விமலா டாங்க், பூரண் ஆச்சார்யா, ஸ்னேகலதா சன்யால் மற்றும் பிறர் அடங்குவர்.

பெரின் நினைவு கூறினார்: “இந்தக் காலத்தைச் சுற்றி நாங்கள் மறுமலர்ச்சி கிளப் ஒன்று வைத்திருந்தோம்” அதில் மாணவர் இயக்கத்தில் பின்னர் இணைந்த பலர் சேர்ந்தனர் (இந்தக் கட்டுரையாளருக்கு 1992 ஜனவரி 28ல் அவர் அளித்த பேட்டி). அந்த கிளப் அரசியல் பிரச்சனைகளை விவாதிக்க வாராவாரம் கூடும். அதில் மஸார் அலி, மக்மூத் அலி, ரொமேஷ் சந்திரா, பீஷம் சஹ்னி, ராஜ்பன்ஸ் கிருஷ்ணா மற்றும் பிறருடன் பெரினும் கூட கலந்து கொள்வர்.

பிரபோத் சந்திராவால் எல்எஸ்யு நடத்தப்பட்டு வந்தது. 1938லிருந்து மறுமலர்ச்சி மன்றத்தின் (ரெனெய்சான்ஸ் கிளப்) பலர் பிரபல செயல்பாட்டாளர்கள் ஆனார்கள். மாணவியர்களின் பரவலான பங்கேற்பு அதன் சிறப்பு அம்சம். சுமார் 700 மாணவியர்கள் பங்கேற்புடன் 1940 ஜனவரியில் மிகப் பெரிதும் விளம்பரம் செய்யப்பட்ட மாணவியர்கள் மாநாடு நடைபெற்றது. பெரின், லிட்டோ ராய் (அஜாய் கோஷ் உடன் திருமணமான பிறகு லிட்டோ கோஷ்) மற்றும் மற்றவர்கள் இந்தக் கல்லூரிகளையும் பள்ளிகளையும் தங்கள் செயல்பாட்டிற்கான  அடித்தளம் ஆக்கினர்.

விடி சோப்ரா எல்எஸ்யூ முதலாவது மாநாட்டில் அதன் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஜனவரி 26 ஐ சுதந்திர தினமாக அனுசரித்தபோது அவர் 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

மாணவர் பெரும் மன்றத்தின் முதல் பொதுச் செயலாளராக 1941 –42

1941 டிசம்பர் 31 மற்றும் 1942 ஜனவரி 1ல் பாட்னாவில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (AISF) வரலாற்றுச் சிறப்புமிக்க 7வது மாநாடு நடைபெற்றது.  1941 ஜூன் 22ல்

நாஜிக்கள் சோவியத் யூனியனை ஆக்கிரமித்த பிறகு இரண்டாம் உலக யுத்தத்தின் மாறிய தன்மை மாநாட்டின் முக்கிய உரையாடல் தலைப்பாக அமைந்தது.

AISFன் இந்த மாநாட்டில்தான் ‘மக்கள் யுத்தம்’ என்ற கருத்து பெரினால் முதலில் முன் வைக்கப்பட்டது.  இந்த மாநாட்டில் பஞ்சாப் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மியான் இஃப்திகாருதீன் தலைமை வகித்தார். மாநாட்டில் 600 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எப்போதும் இல்லாத அளவு அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்தது; பொதுவாக மக்களுக்கு வாழ்க்கை மிக மிக கடினமானது. கல்வி சின்னா பின்னமாகி குழப்பத்தில் இருந்தது என  AISFன் தி ஸ்டூடன்ட் இதழில் பெரின் எழுதிய கட்டுரைகளில் சுட்டிக் காட்டினார்.

1943 வங்கப் பெரும் பஞ்சத்தின்போது பெரின் மாணவர் அமைப்பை மாபெரும் நிவாரண பணியில் ஈடுபடுத்தினார். AISFன் நூற்றுக்கணக்கான அணிகளும் உறுப்பினர்களும் பெரும் எண்ணிக்கையிலான நிவாரண சமையல் கூடங்களின் பணிகளைச்  செய்யும் ஆட்களாகச் செயல்பட்டனர்; அந்த நிவாரண சமையல் கூடங்கள் பல்லாயிரம் மக்களுக்கு உணவளித்தது. அந்தப் பஞ்சத்தில் பசியால் 30 லட்சம் மக்கள் மடிந்தனர்.

AISFன் மற்றொரு சிறந்த தலைவரான ஏ பி பரதன் AISF மாநாட்டு நாள்களையும் பெரினின்

தலைமை பண்பையும் பின்வருமாறு நினைவு கூர்கிறார்:

“காலம் ஓடுகிறது. வாழ்க்கை தொடர்ந்து நடக்கிறது. பழைய நினைவுகள் மங்குகின்றன. ஆனால் திடீரென்று ஏதோ நடக்கிறது, சில நிகழ்வுகள் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது, நீண்ட காலம் முன்பு முடிந்துபோன பழைய நாட்களுக்கு நீங்கள் தூக்கி அடிக்கப்படுகிறீர்கள்.”

“ஜனவரி 7 அன்று பெரின் சந்திரா தமது முதிர்ந்த 96 வயதில் மறைந்தார் என்ற செய்தி, 1941ஆம் ஆண்டு முடியும் தருவாயின்போது ஒரு நாள் நிகழ்வின் நினைவை மீண்டும் கிளறி விட்டது. மாணவர் பெருமன்றம் (AISF) பாட்னாவில் மாநாடு நடத்திக் கொண்டிருந்தது. சென்ற ஆண்டுதான் இணைந்திருந்த நான், பழைய மத்திய பிரதேசத்தின் சார்பாக ஒரு பிரதிநிதியாக மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தேன். (பல பெண் பிரதிநிதிகள் வந்திருந்தனர் எனினும்) லாகூரில் இருந்து வந்திருந்த இரண்டு பெண் பிரதிநிதிகள் எங்கள் அனைவரையும் மிகவும் ஈர்த்தனர். ஒருவர் பெரின் பரூச்சா, மற்றவர் லிட்டோ (பின்னர் அஜாய் கோஷ் அவர்களை மணந்தார்)”

பார்சி இனப் பெண்ணான பெரின் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளர் கலந்து கொள்ள இயலாததால் அவர் மாணவர் அமைப்பின் உயர் பொறுப்பில் செயல்பட்டார். திறன் மிக்க அவரது செயல்பாடு மற்றும் பிரபலமான தன்மை AISFன் பொதுச் செயலாளராக அவரைப் பாட்னா மாநாட்டில் தேர்ந்தெடுக்கப் பாதை அமைத்தது. இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்தது 1941-ல் ஹிட்லரின் பாசிஸ்டுகள் சோவியத் யூனியனைத் தாக்கினர். இந்தத் தாக்குதலின் விளைவாகப் போரின் மாறியுள்ள தன்மை மீது பெரின் விவாதங்களை கொண்டு செலுத்தினார்.”

பெரின் AISFன் பொதுச் செயலாளர் பொறுப்பில் 1943 வரை இருந்தார்.

மாணவர்கள் ஒற்றுமை குறித்து பெரின் 

இந்தக் கட்டுரை ஆசிரியருக்குப் பல தருணங்களில் அவர் அளித்த பேட்டிகளில் AISFன் நாக்பூர் மற்றும் பின்னர் பாட்னா அமர்வுகள் மாணவர்கள்  அமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தியதாகவும்; அவை  தடுக்கப்பட்டிருக்கக் கூடும் மற்றும் அவை தடுக்கப்பட்டிருக்க வேண்டும் என பெரின் பரூச்சா கருத்தியதாகக் கூறினார். ஆனால்  “இது (நிகழ்ந்து முடிந்த பின்) பின்னர் ஏற்பட்ட எண்ணம்” என்று கூறினார். (பேட்டி 1992 ஜனவரி 28)

மேலும் அவர் மக்கள் யுத்தம் (பியூப்பிள்ஸ் வார்) என்ற கருத்து பாட்னா மாநாட்டில் மிக அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது என்றும் கூறினார். “இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் மாணவர்கள் ஒற்றுமை குறித்துப் பெரும் முயற்சிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்”  என்று கருத்துத் தெரிவித்தார். (இந்தக் கட்டுரையாசிரியருக்கு 1995 அக்டோபர் 26ல் பெரின் பரூச்சா அளித்த பேட்டி)

பெண்கள் இயக்கத்தில் 

லக்னோவில் நடைபெற்ற ஓர் அனைத்திந்திய மாநாட்டில் அமைக்கப்பட்ட பெண் மாணவர்கள் அசோசியேஷனின் தீவிரமான தேசியத் தலைவர்களில் பெரினும் ஒருவர். அவர்

நர்கீஸ் பாட்லிவாலா, சாந்தா காந்தி, கல்யாணி முகர்ஜி, கீதா முகர்ஜி (படம்) மற்றும் பிறருடன் சேர்ந்து ஒரு வலிமையான குழுவாக அமைந்தது. பெரின் லாகூரில் மாணவர் இயக்கத்தில் இருந்தபோது, லிிட்டோ ராய் (கோஷ்), ஷீலா பாட்டியா மற்றும் பிறருடன் சேர்ந்து லாகூர் மாணவர்கள் சங்கத்தில் பெண்கள் அணி ஒன்றை அமைக்க இளம் பெண்கள் இயக்கங்களிலும் ஈடுபட்டார். அவர்கள் கல்லூரி கல்லூரியாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்த்தனர். மாணவிகளின் மாபெரும் மாநாடுகள் நடத்தப்பட்டன.

பெரின் மற்றும் அவரது தோழியர்களிடம் ராமேஸ்வரி நேரு அனைத்திந்தியப் பெண்கள் மாநாடு அமைப்பில் (AIWC) பணியாற்றும்படி யோசனை தெரிவித்தார். அவரது யோசனைபடி அனைத்திந்தியப் பெண்கள் மாநாடு மற்றும் பெண்களின் சிறிய பாதுகாப்பு கமிட்டி (WSDC) இரண்டு அமைப்புகளும் பஞ்சாபில் ஓர் இணைப்பு மாநாட்டில் ஒன்றாக இணைந்தன.

பஞ்சாபில் WSDC

இரண்டாம் உலக யுத்தத்தின்போது பஞ்சாப் உள்பட இந்தியா முழுவதும் பெண்கள் சுய பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒரு நேரத்தில் மாகாணத்தில் 13 ஆயிரம் உறுப்பினர்களுடன் அது வலிமை வாய்ந்த அமைப்பாக உருவானது. பெரின் மற்றும் மற்றவர்களின் கீழ் அது பெண்கள் மற்றும் மாணவர் இயக்கங்களில் முக்கியமான பங்காற்றியது. பஞ்சாப் முழுவதும் பிரம்மாண்ட மாநாடுகளும் பேரணிகளும் நடத்தப்பட்டன

பெரின் மற்றும் ரொமேஷ்

பெரின் பரூச்சா மற்றும் ரொமேஷ் சந்திரா இருவரும் லாகூர் மாணவர் சங்கம் மற்றும் AISFல் தீவிரமாகச் செயல்பட்டனர் அவர்களின் மாணவப் பருவ நாட்களின்போதே லாகூரிலே

இருவரும்  சந்தித்துள்ளனர். விரைவில் ரொமேஷ் லாகூர் சிபிஐ செயலாளர் ஆனார். 1942 ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும், ஃபெரோஸ் மற்றும் ஷோபா. அவர்களின் மருமகள் சந்திதா சினிமா மற்றும் கலை உலகில் பிரபலமானவர். பெரின் மற்றும் ரொமேஷ் இருவரின் வாழ்க்கை தேசப் பிரிவினையின்போது நிலை குலைந்தது. மிகக் கடினமான சூழ்நிலையில் அவர்கள் முதலில் பம்பாய்க்கும் பின்னர் டெல்லிக்கும் இடம் பெயர வேண்டி இருந்தது. மெல்ல மெல்ல அவர்கள் அங்கு குடியேறினர். 

1940களின் தொடக்கத்தில் பெரின் கட்சி உறுப்பினரானார்.

சுதந்திரத்திற்குப் பின் 

1947 ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டின் சூழ்நிலை முற்றாக

மாறியதுபிசி ஜோஷி தலைமையிலான சிபிஐ இந்திய விடுதலையைப் பரவலாக வரவேற்றது. ஆனால் விரைவில் பிடிஆரின் குழுவாதப் போக்குக் சிபிஐ-யில் செல்வாக்குப் பெற, கட்சி நாட்டின் மைய நீரோட்டத்தில் இருந்து துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு விரைவில் பிடிஆர் நீக்கப்பட்டு அஜாய் கோஷ் (படம்) பொதுச் செயலாளர் ஆனார்.

அவர் தலைமை பொறுப்புக்கு வந்ததும் கட்சியிலும் தேசத்திலும் அமைதி குறித்த பிரச்சனை முக்கியத்துவம் பெற்றது. சமாதான இயக்கத்தில் சேரும்படி பெரினைக் கட்சி கேட்டுக் கொண்டது.

1958ல் தொடங்கப்பட்டு புகழ்பெற்ற விடுதலைப் போராட்ட வீரர் அருணா ஆசஃப் அலி தலைமையிலான இடதுசாரி தினசரியான ‘பேட்ரியாட்’ இதழில் பெரின் குறுகிய காலம் பணியாற்றினார். அங்கே அவர் தொழிலாளர்களைத் தொழிற்சங்க அமைப்பில் திரட்டினார், விரைவில் அவர் சமாதான இயக்கத்தில் இணைந்தார்.

அனைத்திந்திய சமாதான இயக்கம் 

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சமாதான இயக்கம் மக்களின் விரிந்து பரந்த இயக்கமாகும். அது கட்சிக்குள் விழிப்புணர்வைக் கொண்டு வந்தது, கட்சி பெருந்திரள் மக்கள் மத்தியில் நுழைவதை அது சாத்தியமாக்கியது.

ரொமேஷ் சந்திராவைப் பொதுச் செயலாளராகக் கொண்டு 1951ல் அனைத்திந்தியச் சமாதானக் குழு (ஆல் இந்தியா பீஸ் கவுன்சில்) அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் சைஃபுதீன் கிச்சுலு, பண்டிட் சுந்தர்லால், பால்ராஜ் சஹானி, பிரிதிவிராஜ் கபூர், முல்க்ராஜ் ஆனந்த், டிடி கோசாம்பி மற்றும் பலர் இணைந்திருந்தனர். அந்த அமைப்பில் பெரின் ஆர்வமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் சமாதானக் குழுவின் முன்னணித் தலைவரானார்.

1957 கெய்ரோவில் ஆப்பிரிக்க ஆசிய சமாதான ஒருமைப்பாடு அமைப்பு (AAPSO)

உருவானது. பெரினைப் பொதுச் செயலாளராகக் கொண்டு 1972ல் அனைத்திந்தியச் சமாதான ஒருமைப்பாட்டு கழகம் (AIPSO) செயல்பாட்டுக்கு வந்தது. அந்தப் பொறுப்பில் அவர் 1991 வரை இருந்தார்.

அனைத்திந்தியச் சமாதானக் குழு (AIPC) மற்றும் AIPSO மனதில் நிற்கும் பல்வேறு பெருந்திரள் இயக்கங்களை நடத்தியது: ஸ்டாக்ஹோம் வேண்டுதலுக்கான பிரச்சாரம், பாண்டாங் மாநாட்டுக்கான (1955) பிரச்சார இயக்கம், கூட்டு சேரா இயக்கம், வியட்நாம், பங்களாதேஷ், பாலஸ்தீனம் மற்றும் பிறவற்றுடன் ஒருமைப்பாட்டுப் பிரச்சாரம், 1975 பாட்னாவில் 6000 பிரதிநிதிகள் கலந்து கொண்ட பாசிச எதிர்ப்பு மாநாடு போன்ற பல நிகழ்வுகள் நடத்தியதைக் குறிப்பிடலாம்

பெரின் குறித்து பிரமிளா லூம்பா 

பிரமிளா லூம்பா பெண்கள் இயக்கம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம்

(NFIW)ன் பிரபலமான தலைவரும் பெரினின் நெருங்கிய தோழியும் ஆவார். அவர் எழுதினார்: “பெரினுடன் எனக்கு நீண்ட காலத்தொடர்பு உண்டு. அது லாகூர் கினார்டு கல்லூரியில் நான் அப்போது இன்னும் இளங்கலை மனைவியாக இருந்த கடந்த கால நாட்களுக்குக் செல்லும். பெரின் அப்போது ஏற்கனவே நன்கு அறியப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவராகத் .திகழ்ந்தார்.”

“பெரினுடன் எனது முதலாவது சந்திப்பு மங்கலாக நினைவு உள்ளது. அது மயக்கும் வசீகரமான ஒரே நடனக்காரரான உதய் சங்கர் மற்றும் அவரது குழுவினரின் நடன நிகழ்ச்சிக்குப் பிறகு ரீகல் சினிமா தியேட்டருக்கு வெளியே நிகழ்ந்தது.”

“கம்யூனிஸ்டுகள் கலை மற்றும் கலாச்சாரத்தைப் போராட்டத்திற்கான ஆயுதமாக மட்டும் பார்க்காமல், மாறாக வாழ்க்கை மற்றும் பணி குறித்த பார்வையை மேம்படுத்தவும் ஊக்கமும் வலிமையையும் பெறுவதற்கானது என பெரிதும் மதித்த காலம் அது” 

பெரின் ரொமேஷ், லிட்டோ மற்றும் அஜாய் கோஷ் சில வாடகை அறைகளில் படிப்பு வட்டங்கள் அமைத்ததைப் பிரமிளா நினைவு கூர்கிறார். பெரின் இளம் பெண்களின் சிறிய குழுவைத் திரட்டி, அவர்கள் பெண்கள் மத்தியில் பணியாற்ற ஊக்குவித்தும், விடுதலைப் போராட்டத்தில் பணியாற்ற அவர்களுக்கு  அரசியல் உணர்வை எழுச்சி பெறவும் செய்தார்.

வங்கப் பஞ்சத்தில் நிவாரண பணிகளின்போது, “(நிதி முதலியவற்றைத் திரட்ட பஞ்சாப் பகுதியில்) சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தவர் பெரின்: அந்தக் குழுவுக்கு அறிமுகம் செய்து அவர்கள் ஏற்கத்தக்க அளவில் பொறுமையாக ஏகாதிபத்திய எதிர்ப்பு உரைகளை ஆற்றினார்: எனினும் அந்த உரைகள் அந்த மக்களுக்கு நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்த போதுமான அளவு எளிமையாக இருந்தது. நிதி திரட்டல் சுற்றுலாவின் பலன் அற்புதமாக அமைந்தது, ஏராளமான தானியக் குவியல்கள் திரட்டப்பட்டன.”

“பெரின் பணியாற்றும் விரைவு மற்றும் அவரது ஆவணங்கள் மற்றும் கோப்புகளை அவர் நுணுக்கமான நேர்த்தியுடன் பராமரித்தது என்னை மிகவும் ஈர்த்தது.”

“நாட்டில் சமாதான இயக்கத்தை ஆகச் சிறந்த முறையில் அவர் கட்டி எழுப்பியது, அவருக்கே உள்ள தனிச்சிறப்பு”

எழுத்தாக்கப் பணிகள்

பெரின் பல புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதி உள்ளார். அவரது மாணவப் பருவ நாட்களிலும்கூட அவர் AISFன் ‘தி ஸ்டூடண்ட்’ பத்திரிக்கையில் கட்டுரைகளும் அறிக்கைகளும் எழுதினார். அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் ‘தி ஃபயர் ஓர்ஷிப்பர்ஸ்’ (தீயை வணங்குபவர்கள்) நூலை பம்பாய் ஸ்ராண்ட் புத்தக கிளப் பதிப்பித்தது. அந்த நாவல் பார்சி சமூகத்தில் சாதி கலப்புத் திருமணத்தின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டிருந்தது. பெரின்தான் சர்ச்சைக்குரிய கலப்புத் திருமணத்தை முன்னிறுத்திய முதல் பார்சி நாவலாசிரியர். 

புத்தகத்தில் (விமர்சகர்) நோவி கபாடியா கூறியபடி:

“பெரின் இயல்பாகத் தொலைநோக்கு பார்வை கொண்ட தீர்க்கதரிசி. 1960களில் பார்சிகள் மத்தியில் கலப்புத் திருமணங்கள் போக்குச் சொட்டும் நீர் போல அளவில் மிகச் சிறிது; ஆனால் நாவலாசிரியர் மிக நுட்பமாக அது பெரு வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் என்று சுட்டிக் காட்டுகிறார். வெறும் 30 ஆண்டுகள் இடைவெளியில் பார்சி வகுப்பினர் மத்தியில் கலப்புத் திருமணங்கள் வெகுவாக அதிகரித்தது. எனவே இந்த நாவலில் ‘பெஸ்டோன்ஜி தனது மகனின் கலப்புத் திருமணம் (தனது வகுப்பினர் மத்தியில்) புதிய போக்கை ஏற்படுத்தி விடும் என ஆட்சேபிப்பதைக்’ காண்கிறோம்.

கட்சியில் பொறுப்புகள்

பெரின் நீண்ட காலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் கவுன்சில் உறுப்பினராக இருந்தார். பின்னர் மத்திய செயற்குழு (CEC) உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றும் பல்வேறு  வெகுஜன அமைப்புகளில் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

மரணம் 

பெரின் பரூச்சா (சந்திரா) தனது முதிர்ந்த 96வது வயதில் நீண்ட கால நோய்க்குப் பிறகு 2015 ஜனவரி 7ல் மரணம் அடைந்தார்.

இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்தியது. அவரது இறுதி விருப்பப்படி அவரது புகழுடம்பு பம்பாய் கிராண்ட் மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில்தான் அவரது தந்தை மருத்துவம் படித்தார். 

பெரின் பரூச்சா (சந்திரா) நினைவைப் போற்றுவோம்!

–நன்றி நியூ ஏஜ் (2026 மே 24 –30)
–தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

பின்னிணைப்பு

தோழியர் பெரின் பற்றி நியூ ஏஜில் ஒரு கட்டுரை வந்துள்ளது.                      

பெரின் ( பரூச்சா) சந்த்ரா லாகூரில் தனது மாணவப் பருவத்தில் AISFல் சேர்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்த பெண்மணி. 1928ல் லாகூர் மாணவர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். தேச சுதந்திரம் வேண்டிப் போராடிய இளைஞர்களுள் ஒருவர். 1943 வங்காள பஞ்சத்தின்போது மாணவர்களைத் திரட்டி வங்காளத்தில் பணியாற்றியவர். தேசப் பிரிவினையின்போது லாகூரிலிருந்து மும்பைக்கு அகதிகளாக வந்தவர்.  பின்னர் உலக சமாதான இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார்.

1986ல் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமரியில் இருந்து சென்னைக்கு ஒரு நடைபயணம்

நடைபெற்றது. தோழர் ஜெகன் அறிவுறுத்தலின் பேரில் நானும் கலந்து கொண்டேன். பெரின் பல இடங்களில் வந்து கலந்து கொண்டார். பெரின் ஒரு பார்சி. கூட்டங்களில் பெண்கள் இவரை வேடிக்கை பார்த்தனர். “இந்திராகாந்திவந்திருக்கிறார் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

(வாட்ஸ்அப் குழுவில் தோழர் செல்வரங்கன் பதிவு)

அந்தச் சமாதான நடைபயணத்தில் கடலூரில் நாங்களும் கலந்து கொண்டோம். என் நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது, திருநெல்வேலித் தோழர் சங்கர் எழுப்பிய முழக்கங்கள். அந்த முழக்கங்கள் NFTE சங்க வழக்கமான ஆக்ரோஷமான கோஷங்களாக இல்லாமல் ஒரு நதி நடப்பது போல அமைதியாக, மக்கள் மனங்களில் பதிவதாக அமைந்திருந்தன. “கங்கை பாயும் நாட்டினிலே இரத்த ஆறு ஓடுவதா?“ ”காந்தி பிறந்த நாட்டினிலே சாந்தி தவழ வேண்டாமா” என்பது போன்ற முழக்கங்கள் எவ்வளவு வலிமையானவை!

--மொழிபெயர்ப்பாளர் பதிவு

  

 

 

 

 

No comments:

Post a Comment