Thursday, 9 July 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு–152 SS பாட்லிவாலா – ஒரு சோசலிசவாதி, கம்யூனிஸ்ட் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரின் அசாதாரணமான கதை

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு–152

SS
பாட்லிவாலா – ஒரு சோசலிசவாதி, 

கம்யூனிஸ்ட் மற்றும்
சுதந்திரப் போராட்ட வீரரின் 

அசாதாரணமான கதை

–அனில் ரஜிம்வாலே

எஸ் எஸ் பாட்லிவாலா ஓர் அசாதாரணமான மற்றும் திறமை வாய்ந்த மனிதர்; தொடர்ந்து அவர் ஒரு புகழ்பெற்ற விடுதலை வீரராக, ‘காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி’யின் நிறுவனராக, தீவிரக் கம்யூனிஸ்ட்டாக மற்றும் கலை பண்பாட்டு உலகில் செயலூக்கம் மிக்க வாழ்க்கைக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு விலகியவராக சென்று கொண்டே இருந்தார்.

தொடக்க கால வாழ்க்கை : பாட்லிவாலாகள்

18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியா கண்ணாடி பாட்டில்களை உற்பத்தி செய்யவில்லை, அவை பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. 19ம் நூற்றாண்டில் பம்பாயில் ஒரு பார்சி குடும்பம் கண்ணாடி பாட்டில்கள் வர்த்தகத்தை மேற்கொள்ள முடிவு செய்தது; அதனால் ‘பாட்லிவாலா’ என்ற பெயரை வரித்துக் கொண்டு அத்தொழிலில் ஏறத்தாழ ஏகபோகத்தை நிறுவியது! இந்தப் பார்சி குடும்பம் இந்திய விடுதலை இயக்கம் மட்டுமின்றி, பண்பாடு மற்றும் கல்வித் துறைகளிலும் தொடர்ந்து பங்காற்றிய வண்ணம் செயல்பட்டது. 

பாட்லிவாலாகள் குடும்பத்திலிருந்து பின்னர் புகழ்பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டவர்கள் உருவானார்கள், சமூகத்தில் அதன் வழி மரியாதைக்குரிய அந்தஸ்தைப் பெற்றனர்.

அவர்களில் ஒருவர் டாக்டர் சபூக்ஷ் (ஷியாவாக்ஸ்) சொஹ்ராப் பாட்லிவாலா [Dr Shabukhsh (Shiavax) Sohrab Batliwala]. அவர் 1928 மற்றும் 1929ல் பம்பாய் மேயர் ஆனார். பம்பாயில் 1930ல் மரணமடைந்தார். அவருக்கும் திருமதி பாச்சுபாய் அவர்களுக்கும் 1905 மே 19ல் சொஹ்ராப் பிறந்தார். அவருக்கு வரலாற்றுப் புகழ்பெற்ற ஈரானியக் கவிஞர் சொஹ்ராப் என்று பெயரிட்டனர். அவர் சோலி என்ற பெயரில் பிரபலமானார்.

சோலியின் பெற்றோர் வெளிநாடு சென்றதால் சோலி பெரும்பாலும் தனது தாயின் சகோதரி (சித்தி, இந்தியில் ‘மௌசி’) உடன் தங்கினார்.

கல்வி 

சோலி 1911ல் தன்பாய் மற்றும் ரூபாபாய் நடத்திய குஜராத்தி பள்ளியில் சேர்ந்தார். 1921ல் நியூ ஹை ஸ்கூலில் சேர்ந்து மெட்ரிக் தேர்ச்சி பெற்றார். 1922 முதல் 1925 வரை அவர் புகழ் பெற்ற எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்து பி ஏ இளங்கலை பட்டம் பெற்று 1928ல் எல்எல்பி பட்டமும் பெற்றார். மேலும் அவர் வரலாறு மற்றும் பொருளாதாரம் (ஹானர்ஸ்) படித்தார். 

தொழில் ரீதியில் அவர் ஒரு வழக்கறிஞராகி இருக்க வேண்டும்.

மாணவர் இயக்கத்தில் 

அது எல்பின்ஸ்டோன் கல்லூரியில்தான் சோலிக்கு அரசியலில் தொடர்பு ஏற்பட்டது. அந்தக் கல்லூரி மாணவர் இயக்கத்தின் மையமாக இருந்தது. வங்கப் புரட்சி இயக்கம் குறித்து அறிந்த சோலி, அதில் ஆழமாக ஈர்க்கப்பட்டார். அந்நாட்களில் (BSB) என்ற பம்பாய் மாணவர்கள் சகோதரத்துவம் (பிரதர்ஹுட்) அமைப்பு பலம் பொருந்தியதாக இருந்தது. சோலி அந்த அமைப்பிலும், பம்பாய் யூத் லீக் என்ற இளைஞர் அமைப்பிலும் இணைந்தார். அந்நாட்களில் இளைஞர் லீக் அமைப்புகள் இந்தியா முழுவதும் பரவலான வலைப்பின்னலுடன் செயல்பட்டன.

கல்லூரியில் பல கீழ்ப்படியாமை நடவடிக்கைகளுக்குப் பெயரெடுத்தவர் சோலி; அவரது தந்தையின் அந்தஸ்து காரணமாகவே அவர் ஒழுங்கு நடவடிக்கைகளில் இருந்து அரிதாகத் தப்பினார். உதாரணத்திற்கு ‘உள்ளேன் ஐயா, ஆம் ஐயா’ என்று பதிலளிப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை. எனவே அவர் அதைக் கேலி செய்வார் அல்லது சப்தமாகப் பதில் அளிப்பார்! அவரை பெஞ்ச் மீது ஏறி நிற்கச் சொல்லி, ஆசிரியர்கள் அவரிடம் சப்தமிடுவர். அதனால்லாம் அடங்கி போகாத சோலி திரும்பக் கத்துவார், சில ஆசிரியர்கள் பொறுத்து போய் விடுவார்கள்!

அவர் பல்கலைக் கழகப் பயிற்சி படையில் (யுனிவர்சிட்டி ட்ரைனிங் கார்ப்ஸ், UTC) சேர்ந்தார், அது அவரின் எதிர்காலப் புரட்சிகரப் பணிகளுக்குக் கை கொடுத்தது!

இதன் மத்தியில் காதல் பிரச்சனையில் அவர் உணர்வு ரீதியான நெருக்கடிகளுக்கு ஆளானார் – அவர் காதலித்த அந்தப் பெண் பணம், கார் போன்ற லௌகீக விஷயங்களில் அதிக ஆர்வம் உடையவராக இருந்ததால், காதல் இறுதியில் முறிந்து போனது,

மனம் உடைந்து நம்பிக்கை இழந்த சோலி தற்கொலை செய்து கொள்ளவும் எண்ணினார். ஆனால், அபூர்வமான ஒரு வாழ்க்கையை வீணடித்துவிடக் கூடாது என்று பின்னர் ஒரு ‘முடிவு’க்கு வந்தார்!

அவர் உணவைத் ‘துறக்க’வும் கூட நினைத்தார். ஆனால் அந்த எண்ணத்தைத் தேசிய நிகழ்வுகள் தர்க்க ரீதியாகத் தவறு என நிரூபிக்க, விரைவில் அவர் உப்புச் சத்தியாகிரக இயக்கத்தில் இணைந்தார்.

உப்புச் சத்தியாகிரகம்

உப்புச் சத்தியாகிரகம் குறித்த சோலியின் கருத்து, அமைதியான சத்தியாகிரகம் என்ற அந்த இயக்கத்திற்கு எதிராக இருந்தது. சூரத்தில் தராசனா என்ற இடத்தில் பெரும் எண்ணிக்கையிலான உப்பு மூட்டைகள் அடுக்கப்பட்டு முள்வேலியிட்டுப் பாதுகாக்கப்- பட்டன. சோலி தலைமையிலான இளைஞர்கள் குழு ஒன்று ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தி முள்வேலியைத் துண்டித்து உப்பு மூட்டைகளைப் பல தவணைகளில் எடுத்துச் சென்றது.

இதைக் கண்டு திகைத்த உண்மையான சத்யாகிரகிகள், பகுத்தறிவுடன் நடந்து கொள்ள கூற அவர்களிடம் முயன்றனர். அவர்களின் தர்க்கவாதத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த சோலியும் அவரது தோழர்களும் போலீஸ்காரர்கள் அடித்தபோது அதை ‘அமைதியாக’ சந்தித்தனர். அவருக்கு 9 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

1928ன் புகழ்பெற்ற பர்த்தோலி போராட்டத்திலும்கூட சோலி கலந்து கொண்டார். காங்கிரஸ் எவ்வாறு அகிம்சையைப் பின்பற்றியது என்றும், மேலும் ஏன் மற்றும் எவ்வாறு உப்புச் சத்தியாகிரகம் திட்டமிடப்பட்டது என்பதை விளக்கி அவர் தனது பேட்டிகளில் விவரித்துள்ளார்.

காங்கிரஸ் செயற்குழுவின் பிற உறுப்பினர்கள் தீவிரமாக ஆட்சேபித்த போதும் 1930ல் சிவில் ஒத்துழையாமை இயக்கம் எனப்படும் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காந்திஜி தொடங்கியது எவ்வாறு என்பதையும் கூட சோலி விளக்கினார்.

செயற்குழு உறுப்பினர்கள், முன்பு 1920களில் நடத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் வன்முறை காரணமாக விலக்கிக் கொள்ளப்பட்டதைக் காந்திஜியிடம் நினைவூட்டினர். இப்போது 1930களின் தொடக்கத்தில் சூழ்நிலை முன்பை விட, வகுப்புவாத வன்முறை மற்றும் பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் உட்பட வன்முறை நிறைந்ததாக உள்ளது என்றனர். 

பிரிட்டிஷ்க்கு எதிராக மேலும் கூடுதல் சக்தியுடன் வெளியே வர விரும்பும் மக்களின் நாடியை ஒருவர் உணர வேண்டும் என்று அவர்களுக்கு மறுமொழி கூறிய காந்திஜி, மக்கள் செயல்பட விரும்புகிறார்கள், அவர்களுக்கு வழிகாட்ட தலைமை ஏற்பது முக்கியம் என்றார்.

போராட்டத்தைக் கைவிட அவரைச் சமாதானப்படுத்த சோலியின் தந்தை சிறைச்சாலைக்கு வந்தார். ஆனால் சோலி பேசுவதில்லை என்ற மௌன விரத சபதம் செய்திருந்தார். எனவே அவர் ஒரு காகிதத்தில் எழுதினார், மன்னிப்புக் கேட்கும்படி கூற மாட்டேன் என தந்தையும் உறுதிமொழி அளித்தார். உண்மையில் சோலியின் தந்தை ஆழமான சங்கடத்தில் இருந்தார், அதன் விளைவாய் இறுதியில் அவர் மாரடைப்பில் மரணம் அடைந்தார்.

சோலி முதலில் பம்பாய் சிறைக்கும் பின்னர் திருச்சிராப்பள்ளி சிறைக்கும் அனுப்பப்பட்டார்; அங்குப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் பி சுந்தரய்யா அவர்களைச் சந்தித்தார். சோலி 30 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட அவரை விடுதலை செய்ய வேண்டியதாயிற்று.

விடுதலையான பின், சட்ட மறுப்பு இயக்கப் பின்னணியில், சோலி 100 முதல் 150 இளைஞர்களைத் திரட்டி ஒரு குழு அமைத்தார். லத்திகள் முதலியவற்றில் அவர்களுக்குப் பயிற்சி அளித்தது மட்டுமின்றி, கைராட்டை (சர்க்கா), சத்யாகிரகம் மற்றும் சுதேசி குறித்தும் போதிக்கப்பட்டது. இந்தச் ‘சுயம்சேவக்’குகள் (தன்னார்வத் தொண்டர்கள்) சுயராஜ்யம் அடையும் வரை வீட்டுக்குத் திரும்புவதில்லை எனச் சபதம் செய்தனர்! பின்னர் அவர் தலைமறைவானார், ஆனால் கைது செய்யப்பட்டு பிஜாபூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அவரும் அவருடன் சேர்ந்த மற்றவர்களும் போலீஸ் உத்தரவுகளை ஏற்க மறுத்தனர். எனவே அவர் சிறையிலேயே விசாரிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சேபித்தபோதும் சோலி, யூசுப் மெஹ்ரலி மற்றும் இளைஞர்களின் பிற தலைவர்கள் அரசியல் வகுப்புகளை ஏற்பாடு செய்து நடத்தினர்.

ராகுல் சாங்கிருத்தியாயனுடன் இணைந்து சோலி பீகார் சோசலிஸ்ட் கட்சி நிறுவும் முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.

“1938ல் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஒரு மாற்று வரைவு தீசிஸை முன் வைத்தோம். நம்பூதிரி பாத், திங்கர் மேத்தா மற்றும் ஆர் டி பரத்வாஜ் சிபிஐ பொலிட் பீரோ உறுப்பினராலும் அந்தத் தீசிஸ் ஆமோதிக்கப்பட்டது” என முற்போக்கு எழுத்தாளர் சங்க (PWA) நிறுவனரும், சிபிஐயின் பிரபல தலைவருமான சஜ்ஜாத் ஜாஹீர் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்தார்

கம்யூனிஸ்டுகளும் கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடன் செயல்படக்கூடிய ஒரு பரந்த இடதுசாரி மற்றும் ஒன்றுபட்ட சோசலிச அமைப்பாகக் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை வளர்க்க கம்யூனிஸ்டுகள் விரும்பினர். லாகூர் மாநாட்டுக்குப் பிறகு விரைவில் சிபிஐ பொதுச் செயலாளர் பி சி ஜோஷி அத்தகைய ஒரு வாய்ப்பை விவாதிக்க சிஎஸ்பி பொதுச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் அதை முன் வைத்தார்

எம்என் ராய் உடன் மோதல்

எம் என் ராய் மற்றும் சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிஎஸ்பி அமைப்பதற்கு எதிராகத் தீவிரமாக இருந்தனர். இந்த நேரத்தில் இந்தியாவுக்கு வந்த ராய் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தார். ராய் காங்கிரஸ் தலைவர்களிடம் சிஎஸ்பி-ஐ கலைக்க யோசனை கூறினார். இதற்காக அவர் தென்னிந்தியாவிற்கும்கூட விரிவாகப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார்.

எனவே சிஎஸ்பி மத்திய செயற்குழு ராய் பிரச்சாரத்துக்கு எதிராகத் தென்னகத்தில் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய சோலி பாட்லிவாலாவை நியமித்தது. சோலி தீவிரமாகப் பயணம் செய்து ராய் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்தார். ராய் மற்றும் சோலி இருவரும் பேசும் வகையில் ஒரு பொதுக்கூட்டம்கூட இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ராய் கூட்டத்திற்கு வர இயலவில்லை என செய்தி அனுப்பினார்.

கைது செய்ய உத்தரவு

சோலியின் உரையைக் கைதட்டி வரவேற்ற கூட்டத்தினர் அவரைத் தங்கள் தோள்களில்கூட தூக்கினர். அவர்கள் சோலியை ராய் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பேச மறுத்துவிட்ட ராய் சீற்றமடைந்து அவர்களை வெளியேறவும் உத்தரவிட்டார்!

இதன் மத்தியில் மெட்ராஸ் மாகாணத்தின் ராஜாஜி அரசு அவரைக் கைது செய்வதற்கு இரகசியமாக உத்தரவிட்டது. பிரிட்டிஷ் அரசின் தூண்டுதலில் சோலி ஆற்றிய உரை தேச விரோதமாக ஆகும் வகையில் இருந்தது என்பது இதற்காகக் கூறப்பட்ட சாக்கு! இவை அனைத்தும் சோலிக்குத் தெரியாது. சோலி மெட்ராஸ் மாகாணத்திற்கு மீண்டும் வந்தால் அவரைக் கைது செய்ய ராஜாஜி உத்தரவிட்டார்.

சோலி மாணவர்கள் மாநாட்டில் உரையாற்ற மெட்ராஸ் வழியாகக் கோழிக்கோடு (காலிகட்) செல்ல வேண்டி இருந்தது. அது, ராஜாஜியின் உத்தரவைச் செயல்படுத்த போலீஸைச் சுறுசுறுப்பு அடையச் செய்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடியிருந்த இடத்திற்கு அவர்களை வரச் செய்தது. போலீஸ் வருகையை ஏ கே கோபாலன் சோலியிடம் தெரிவித்தார். சோலி அவரிடம், “போலீசிடம் ஹாலில் நுழைய வேண்டாம், மீறி வந்தால் மாணவர்கள் வன்முறையில் இறங்கி சூழ்நிலை மோசமாகக் கூடும்” எனத் தெரிவிக்கக் கூறினார். ஆனால் மிகப் பிடிவாதமாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹாலில் நுழைந்தார். தவிர்க்க முடியாதது நிகழ்ந்தது: அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டது, அவரது உடை கந்தல் கந்தலாகக் கிழித்துத் தொங்கவிடப்பட்டு அவர் பிடித்துத் தள்ளப்பட்டார். எனவே அந்த அதிகாரியைக் காப்பாற்ற சோலி தலையிட வேண்டியதாயிற்று. இறுதியில் சோலி கைது செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வு காங்கிரஸ் கட்சிக்குள் அமளியை ஏற்படுத்தியது. இந்த அளவுகோல் பயன்படுத்தப்பட்டால், நேரு உட்பட எந்தத் தலைவரும் தேசத் துரோகம் என்ற பெயரில் கைது செய்யப்பட முடியும் என்ற கவலை ராஜாஜியிடம் தெரிவிக்கப்பட்டது! எனவே அவரது நடவடிக்கை மூர்க்கத்தனமானது என்றது.

காங்கிரஸ் தலைமை சோலியை விடுதலை செய்ய ராஜாஜியிடம் கூற அவரும் அதை ஏற்று விடுதலை செய்தார்.

சிபிஐயில் இணைதல்: மத்திய குழு உறுப்பினர்

சோலி 1935ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பரிட்சார்த்த உறுப்பினராகச் சேர்ந்தார். உண்மையில், சிஎஸ்பி-யில் இருந்தபோது திரும்பத் திரும்ப கம்யூனிஸ்ட் என குற்றம் சாட்டப்பட்டவர்  அவர்.

சிஎஸ்பி-யில் இருந்த நாட்களில் சோலி கம்யூனிஸ்டுகளுடன் நெருக்கமாக ஒத்துழைப்பிலிருந்தார். ஏற்கனவே அவர் மெட்ராஸில் பி சுந்தரையா உடன் தொடர்பில் இருந்தார். 1940களின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட அவர் ஹிஜிலி சிறைக்கும் பின்னர் தியோலி வதை முகாம்களுக்கும் அனுப்பப்பட்டார்.

அங்கு அவர் எஸ்ஏ டாங்கே, பிடி ரணதிவே, ராகுல் சாங்கிருத்தியாயன், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற தலைச்சிறந்த தலைவர்களைச் சந்தித்தார்.

1942 வாக்கில் டாங்கே மற்றும் சோலி தவிர பெரும்பாலான கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். எரவாடா சிறைக்கு மாற்றப்படும் வரை அவர்கள் மற்றொரு கைதியுடன் தனியே அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் 1943ல் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை ஆனதும் சோலி பம்பாய் கட்சி தலைமையகத்திலும் மற்றும் கட்சியின் கலாச்சாரப் பிரிவிலும் தீவிரமாகப் பணியாற்றினார். 1943 மே –ஜூன் மாதங்களில் நடைபெற்ற சிபிஐ முதலாவது கட்சி காங்கிரஸில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார். இந்தக் கட்சிப் பேராயத்தில் அவர் சிபிஐ மத்திய குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பம்பாயில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (ஏஐஎஸ்எப்) புகழ்பெற்ற தலைவர் நர்கீஸ் பாட்லிவாலாவை அவர் திருமணம் செய்து கொண்டார். தீவிரமான மாணவ மற்றும் கட்சித் தலைவரான நர்கீஸ் ஓர் அமைப்பாளரும் கூட. பின்னர் அவர்கள் பிரிந்தனர்.

சோலி மற்றும் நர்கீஸ் இருவரும் மாணவர்கள் மத்தியில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டனர்.

சுபாஷ் போஸ் தப்பிக்கும் திட்டம்

1939 –40ல் சுபாஷ் போஸ் இந்தியாவிலிருந்து தான் தப்பிக்கத் திட்டமிட உதவி கேட்டு சிபிஐ தலைமையை அணுகினார். பிசி ஜோஷி, டாக்டர் அதிகாரி, சோலி பாட்லிவாலா மற்றும் சிலர் உள்ளிட்ட சிபிஐ தலைவர்கள் போஸ் தப்பிப்பதற்குத் தீவிரமாகத் திட்டமிட்டு அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தினர். நன்கு திட்டமிட்ட இந்தத் தப்பிக்கும் திட்டத்தில் சோலி தகவல் தொடர்பாளராகச் செயல்பட்டார்.

கருத்து வேறுபாடுகள் மற்றும் கட்சியை விட்டு வெளியேறல்

1940களின் மத்தியில் பி சி ஜோஷி மற்றும் சிபிஐயுடன் சோலியின் கருத்து வேறுபாடுகள் தீவிரமாக வளர்ந்தன. இந்தக் கருத்து வேறுபாடுகள் முக்கியமாக இரண்டாவது உலக யுத்தம் குறித்த பரிசீலனையுடன் தொடர்புடையது. அவருடைய குற்றச்சாட்டுகள் திறம்பட பதிலளிக்கப்பட்டன. சோலி பாட்லிவாலா சிபிஐ-யில் இருந்து விலகிச் செல்லத் தொடங்கி தனக்கான தனியான சொந்த வெளியை ஏற்படுத்தினார். எனினும் அவர் தனது அடிப்படை கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளவில்லை.

பண்பாட்டு உலகில்

கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் புலாபாய் தேசாய் நினைவு நிறுவனத்தில் சோலி இணைந்தார். அந்நிறுவனம் 1946-ல் தனது மாமனார் புலாபாய் தேசாய் நினைவாக மாதுரி தேசாய் அவர்களால் தொடங்கப்பட்டது. சோலி பாட்லிவாலா அதனை நிர்வகித்தார். ஏப்ரஹாம் அல்காசி உட்பட பல தலைச்சிறந்த கலாச்சார உலகப் பிரமுகர்களுக்கும்; மற்றும் இந்திய மக்கள் நாடக மன்றத்துடன் (IPTA) தொடர்புடைய ஏ கே ஹேங்கல், ஷியாம் பெனகல், கிரீஷ் கர்னாட், சவுகத் ஆஸ்மி போன்ற பலருக்கும் ஒரு பயிற்சிமுனை மையமாக அது மாறியது.

சோலி, புலாபாயின் மகன் திருபாய் அவர்களுக்குத் தனி உதவியாளர் ஆனார்; ஸ்விட்சர்லாந்துக்கான இந்தியத் தூதராகத் திருபாய் நியமிக்கப்பட்டபோது சோலி அவருடன் பெர்னே சென்றார்.

ஐஎன்ஏ கைதிகளுக்கு ஆதரவாக

(நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்ட ‘இந்தியத் தேசிய இராணுவ’த்தில் (INA) இணைந்த வீரர்களை இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானிய அரசு கைது செய்தது.) கைது செய்யப்பட்ட அந்த வீரர்களுக்கு எதிராக 1945 –46ல் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது சோலி பாட்லிவாலா அவர்களுக்கு ஆதரவாகத் தீவிரமாக ஈடுபட்டு புலாபாய் தேசாய்க்கு உதவியாளராகச் செயல்பட்டார்.

கலாச்சாரப்  பண்பாட்டு நடவடிக்கைகள்

பாட்லிவாலாவுக்கு மருமகள் உறவு உடைய ஜாரின் கம்பட்டா மற்றும் ஃபிரென்ஸி ஆல்பிரிட்ஜ் (Zarine Khambatta and Freny Olbrich) இருவரும் தங்கள் ‘சோலி மாமா’வின் ஒப்பற்ற வாழ்க்கையை ஒன்றிணைத்தனர். பம்பாய் நகருக்குக் காந்திஜி, நேரு மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்ற தலைவர்கள் வருகை தந்தபோது பம்பாயில் 89, பி தேசாய் ரோடில் அமைந்த அவர்களது ‘ஹஸ்மன்’ (‘Hasman’) வீட்டில் சோலி அவர்களைச் சந்தித்தார். ஆல்பிரிட்ஜ் ஸ்காட்லாண்டிலிருந்து எழுதுகிறார்: “சமரசமற்ற நேர்மையான மனிதரான சோலி மாமா காங்கிரசை விட்டு வெளியேறினார்; காரணம், சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ், அவரால் கைவிட முடியாத கொள்கைகளுடன் முரண்பட்டதாகும்”

சிபிஐ-யுடன் கடுமையான வேறுபாடுகள் இருந்த போதிலும் சோலி காங்கிரஸ் தலைவர்களுக்கு, குறிப்பாக அதன் வலதுசாரிகளுக்கு ஒன்றைத் தெளிவுபடுத்தினார் – தனது நீண்ட கால கொள்கைகளைத் தன்னால் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது.

சோலி பாட்லிவாலா பம்பாயில் ஜஹாங்கீர் ஆர்ட் கேலரியை விரிவுபடுத்தக் கடுமையாகப் பாடுபட்டார். மற்றும் அங்கு சிறிய தாழ்வாரச் சிற்றுண்டிச்சாலையான 'சமோவர்' (Samovar) ஒன்றைத் தொடங்கினார்.

வடிவமைப்புக் கலை கல்வியாளரான (design academician) மகேந்திர தக்கர் எழுதுகிறார்: “அவர் அருமையான ஒரு மார்க்சியவாதி”. “இந்தியர்கள் இந்த ‘இசம்’ என்பதை ஜனநாயகச் சோசலிசத்தின் பின்னொட்டாகப் பார்க்கிறார்கள்… சோலி’பாய் நடைமுறையில் கொண்டு வர உதவிய தேசிய ஒருமைப்பாடு இலட்சியத்தைச் சுற்றி ஒவ்வொருவரும் அணி திறள்கிறார்கள்”

ராஜ்பன்ஸ் கிருஷ்ணா லாகூர் மாணவர்கள் சங்கத்தின் புகழ்பெற்ற தலைவர். உஷா ராஜ்பன்ஸ் கிருஷ்ணாவின் மகளும், பால்ராஜ் மற்றும் பீஷம் சஹானியின் மருமகளுமான தேவிகா மோஜ்வானி தங்கள் வாழ்க்கையில் சோலி ஏற்படுத்திய தாக்கத்தை நினைவு கூர்கிறார்.

புத்தகங்கள்

சோலி பாட்லிவாலா சிபிஐ-யில் இருந்தபோதும், சிபிஐ விட்டு விலகி வெளியில் இருந்தபோதும் எண்ணற்ற பல கட்டுரைகள், அரசியல் அறிக்கைகள், கையேடுகள் மற்றும் நூல்களை எழுதினார். அவரது புகழ்பெற்ற படைப்புகளில் ஜெய் ஹிந்த்: இந்தியக் கிளர்ச்சிப் புதல்வி ஒருவரின் நாட்குறிப்பு – ராணி ஜான்சி படையுடன் (1945) என்ற நூல் வித்தல் பாய் கே ஜாவேரி உடன் இணைந்து எழுதியது (Jai Hind: The Diary of a Rebel Daughter of India -With the Rani of Jhansi Regiment (1945), co-authored with Vithal Bhai K Jhaveri;) ஜெய் ஹிந்த் என்ற தலைப்பில் மற்றொரு நூல் (1946). கட்சியை விட்டு விலகிய பிறகு அவர் சிபிஐ உடன் தனது கருத்து வேறுபாடுகள் குறித்தும் கூட எழுதியுள்ளார்.

சோலி பாட்லிவாலா பம்பாயில் 1986ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி இயற்கை எய்தினார்.

–நன்றி : நியூ ஏஜ் (2026, ஜூன் 21 –27)

– தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்.