Friday, 1 May 2026

போர் மற்றும் சமாதானத்திற்கான போராட்டத்தில் லெனின் கருத்துக்களின் பொருத்தப்பாடு

 


போர் மற்றும் சமாதானத்திற்கான போராட்டத்தில் 

லெனின் கருத்துக்களின் பொருத்தப்பாடு





    –பல்லப் சென்குப்தா

தேசியச் செயலாளர், சிபிஐ

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ல் உலகம் முழுவதும் புரட்சியாளர்களும் கம்யூனிஸ்டுகளும் ஏகாதிபத்தியம் குறித்த மாபெரும் கோட்பாட்டாளரும், போல்ஷ்விக் புரட்சியின் தலைவரும், உலகின் முதலாவது தொழிலாளர்களின் அரசை நிறுவியவருமான விளாடிமீர் இலீச் லெனின் பிறந்தநாளைக் கொண்டாடுவர். கம்யூனிஸ்டுகளுக்கு லெனின் வாழ்வும் பணியும் வெறும் வரலாற்றுக் கலைப் பொருட்கள் அல்ல; அவை தற்கால உலகளாவிய இயங்கியலைப் புரிந்து கொள்வதற்கான; மற்றும் சமாதானம், ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தை வடிவமைப்பதற்கான வாழும் வழிகாட்டியாக அமைந்தவை. 

பேரழிவை ஏற்படுத்தும் போர்கள், அதிகரிக்கும் இராணுவமயம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்குள் தீவிரமாக்கும் மோதல்கள் இவற்றால் அடையாளப்படுத்தப்படும் இன்றைய சர்வதேசச் சூழலில் லெனின் கருத்துக்களின் பொருத்தப்பாடு மேலும் கூர்மையாகவும் எப்போதையும்விட இப்போது அவசரத் தேவை மிகுந்ததாகவும் விளங்குகிறது 

மோதல் மற்றும் ஏகாதிபத்திய போட்டி விரோதம் நிறைந்த உலகு

இன்றைய உலகம் பல்வேறு ஆயுத மோதல்கள் மற்றும் பூகோள-அரசியல் பதற்றங்களில் மூழ்கி உள்ளது. உக்ரைனில் நீண்ட காலமாக நடக்கும் போர், காசா மீது இஸ்ரேலின் இன அழிப்பு தாக்குதல், ஈரானுக்கு எதிராக நேரடியாக அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு இராணுவ மோதல், மேற்காசியாவில் பரவும் நிலையற்ற தன்மை, தென் சீனக் கடல் மற்றும் கொரியன் தீபகற்பத்தில் இராணுவப் பதற்றங்கள் அதிகரிப்பு என இவையெல்லாம் உலக சமாதானத்தை எளிதில் பாதிக்கக்கூடிய தன்மைக்குச் சான்று பகர்கின்றன.

இந்த மோதல்கள் தனித்ததொரு விபத்துக்கள் அல்ல; அல்லது இனவெறுப்பு, மத வெறுப்பு வெளிப்பாடுகளும் அல்ல. மாறாக சந்தைகளை, எரிசக்தி பாதைகளை, உற்பத்திக்கான மூலப் பொருட்களை, கேத்திரிய முக்கியத்துவம் உள்ள செல்வாக்கை மற்றும் பூகோள-அரசியல் மேலாதிக்கத்தைக் கைப்பற்ற ஏகபோக மூலதனங்களுக்குள் நடக்கும் உலகளாவிய போட்டிகள் அவை.

ஒரு நூற்றாண்டுக்கும் கூடுதலாக முன்பு தனது மாபெரும் படைப்பாக்கமான “ஏகாதிபத்தியம்– முதலாளித்துவத்தின் ஆக உச்சகட்டம்” என்ற நூலில் லெனின் இத்தகைய காட்சிநிலைகளுக்கு அறிவியல் பூர்வ விளக்கத்தைத் தந்துள்ளார்.

ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் இயல்பான உற்பத்தி பொருளே நவீன போர்கள் என்பதை அவர் எடுத்துக் காட்டினார். குறிப்பாக உற்பத்தி சக்திகள் மற்றும் தேசிய எல்லைகளுக்கு இடையில் முரண்பாடுகள், மூலதன ஏற்றுமதி, காலனியச் சக்திகளுக்கு மத்தியில் உலகம் பிரிக்கப்படுதல் மற்றும் சமச்சீரற்ற முதலாளித்துவ வளர்ச்சி பிரச்சனைகள் தீவிரமாதல் என்பன அதன் விளைபொருளே என்பதை அவர் விளக்கினார். 

லெனின் கருத்துப்படி –தொழிலாளி வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் தலையிட்டு போர்களைப் பெற்றெடுத்து உற்பத்தி செய்யும் முறையைத் தூக்கி எறியாவிடில்– ஏகாதிபத்தியம் தவிர்க்க முடியாதபடி, மனித குலத்தைப் பேரழிவுடன் மிரட்டும் தங்களுக்கு இடையிலான மோதல்களை உற்பத்தி செய்யும்.

தற்போதைய சர்வதேசச் சூழல் மிக வலிமையாக லெனினின் பகுப்பாய்வை எதிரொலிக்கிறது. நேட்டோ போன்ற இராணுவக் கூட்டணிகள் கிழக்கு நோக்கி ஆசியாவுக்குள் விரிவாகின்றன. உலகளாவிய இராணுவச் செலவுகள் சாதனை உச்சத்தைத் தொட்டு ஆண்டுக்கு 2.4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் தொகையைத் தாண்டுகிறது. அணு ஆயுதங்கள் நவீனமாக்கல் திட்டங்கள் வேகம் எடுக்கின்றன. பல லட்சக் கணக்கில் மக்கள் ஏழ்மை, கட்டாயப்படுத்தப்பட்ட இடப்பெயர்வு, பசி மற்றும் சூழலியல் சீரழிவால் துன்பப்படும்போது ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தொழிற்துறை அதீத லாபங்களை அறுவடை செய்கிறது. ‘இராணுவமயமாக்கல் சரியான பாதையில் இருந்து விலகிச் செல்லும் பிழற்வு அல்ல, மாறாக ஏகாதிபத்தியக் கழுத்தறுக்கும் போட்டியின் ஒரு தேவை’ என்ற மாமேதை லெனினின் உள்ளொளிப் பார்வை, இன்றும் அதிர்ச்சியூட்டும் வகையில் மிகச் சரியானதாக விளங்குகிறது

சமாதானத்திற்கான லெனின் பார்வை: (ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் சமாதானத்திற்கான ஆணை என்பதிலிருந்து)

சமாதானத்திற்கான லெனின் பற்றுறுதி வெறும் கருத்தியல் கோட்பாடு சார்ந்ததும் அல்ல; முழுவதும் அமைதி வழிபட்டதும் அல்ல (neither abstract nor pacifist). அது வர்க்கப் பகுப்பாய்வு மற்றும் புரட்சிகர நடைமுறையில் வேர்கொண்டது. 1917 நவம்பர் 8ல், நவம்பர் புரட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய மறுநாளே சோவியத் அரசாங்கம், லெனின் தானே வரைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதானத்திற்கான ஆணையை (historic Decree on Peace) வெளியிட்டது

இந்த ஆவணம் நாடுகளை ஆக்கிரமித்து இணைத்துக் கொள்வதையும் (தோல்வி அடைந்த நாடுகள் மீது) ஈட்டுத்தொகை கோருவதையும் கண்டித்தது; முதலாவது உலகப் போரில் உடனடி போர் நிறுத்தத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. சண்டையில் ஈடுபட்ட அனைத்து நாடுகளின் தொழிலாளர்கள் மற்றும் மக்களுக்கு அவர்களின் சொந்த ஏகாதிபத்திய அரசுகளுக்கு எதிராக எழுவதற்கு வேண்டுகோள் விடுத்தது.

லாபத்தை அதிகபட்சமாக்குவது, பிராந்தியப் போட்டி மற்றும் தொடர்ச்சியான நெருக்கடி அச்சுறுத்தலால் செலுத்தப்படும் முறையான முதலாளித்துவத்தின் கீழ் அமைதியை நிரந்தரமாக அடைய முடியாது என லெனின் உணர்ந்தார். “மூலதனத்தின் அதிகாரத்தைத் தூக்கி எறியாமல் அமைதி சாத்தியமில்லை” என்று அவர் வாதிட்டார். எனவே அமைதிக்கான போராட்டம், கட்டாயம் பிரிக்க முடியாதபடி ஏகாதிபத்தியம், சுரண்டல் மற்றும் சமூக அநீதிக்கு எதிரான போராட்டத்துடன் தொடர்புபடுத்தப்- பட்டுள்ளது. லெனினுக்கு உண்மையான அமைதி என்பது சாதாரணமாகப் போர் இல்லாமல் இருப்பது அல்ல; மாறாக சோசலிசத்தால் மட்டுமே அத்தகைய நிலைமை சாத்தியம் என்பதே.

அதே நேரத்தில் லெனின் சர்வதேசத் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை முழுமையான தேவை என வலியுறுத்தினார். ஏகாதிபத்தியம் திட்டமிட்ட முறையில் தேசியவாதம், பேரினவாதம், இனம், இராணுவப் பிரச்சாரம் மூலம் தொழிலாளர்களைப் பிரிக்க முயற்சி செய்யும் என அவர் புரிந்து கொண்டார். இதற்கு எதிராக அவர், “தொழிலாளர்களுக்குத் தேசம் இல்லை”என்ற கோட்பாட்டை முன் வைத்தார். தேசிய எல்லைகளைத் தாண்டி ஒடுக்கப்பட்டோர் மத்தியில் ஒருமைப்பாடு ஒன்றே ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக நிற்கவல்ல திறன்மிக்க ஆற்றல்.

லெனினியத்தின் சமகாலப் பொருத்தப்பாடு 

இன்றைய உலகமயமான முதலாளித்துவத்தில் லெனின் அடையாளப்படுத்திய முரண்பாடுகள் நீடிப்பது மட்டுமல்ல, அவை தீவிரமடைந்தும் உள்ளன. பொருளாதாரச் சமத்துவமின்மை கோரமான எல்லைகளை அடைந்துள்ளது: 100 கோடிகள் கணக்கில் சொத்துடைய உலகின் முதல் 10 அதி பணக்காரர்கள் மனித குலத்தின் கீழ்  மட்டத்தில் உள்ள 40 சதவீத மக்கள் வைத்துள்ள மொத்த செல்வத்தை விட கூடுதலாக வைத்துள்ளனர். பன்னாட்டு கார்ப்பரேஷன்களும் நிதி ஏகபோகங்களும் அரசுகள் மீதும், ஐஎம்எப் மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உலக ஊடகங்கள் மீதும் அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டைச் செலுத்துகின்றன. சாதாரண ஜனநாயகங்களிலும் கூட ஜனநாயக உரிமைகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும்போது, தொழிலாளி வர்க்க அமைப்பைப் பலவீனப்படுத்த தீவிர வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளோ அவர்களின் பொருளாதாரப் பாதுகாப்பற்ற தன்மையைப் பயன்படுத்திச் சுரண்டுகின்றன. சர்வதேச உறவுகள் இராணுவமயப்படுத்தப்படுவது அதிகரிப்பது குறிப்பாகக் கவலைக்குரிய வகையில் அச்சமூட்டுவதாக உள்ளது. –பருவநிலை தாறுமாறாதல், பெருந்தொற்றை எதிர்கொள்ளும் தயார் நிலை, பெருந்திரள் ஏழ்மை, அகதிகள் நெருக்கடிகள் –போன்ற உடனடி உலக சவால்களுக்குத் தீர்வு காண்பதற்குப்  பதில், அரசுகள் மாபெரும் நிதியாதாரங்களை ஆயுத உற்பத்திக்கும் இராணுவ விரிவாக்கத்திற்கும்  மடைமாற்றி விடுகின்றன. சீனா மற்றும் ரஷ்யாவைச் சுற்றி வளைக்க அமெரிக்க தலைமையிலான முயற்சி, உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ அமைப்பின் போலியான போர், ஜெர்மனியையும் ஜப்பானையும் மீண்டும் இராணுவமயமாக்கல் என இவையெல்லாம் ‘ஏகாதிபத்தியம் போருக்கு இட்டுச் செல்லும்’ என்ற லெனின் கோட்பாட்டை உறுதிப்படுத்துகின்றன.

இந்த வளர்ச்சி போக்குகள் எதிர்பாரா விபத்துகளோ அல்லது பகுத்தறிவு தர்க்கத்திற்குப் புறம்பானதோ அல்ல என்பதை புரிந்து கொள்ள லெனினின் –இயங்கியல் பொருள் முதல் வாதம்– முறை நமக்கு உதவுகிறது. அவை முதலாளித்துவக் கட்டமைப்பு நெருக்கடியின் வெளிப்பாடுகள்: அளவுக்கு அதிகமான மூலதனக் குவிப்பு, லாப விகிதங்கள் வீழ்ச்சி, ஏகாதிபத்தியத்திற்குள் தீவிரமாகும் போட்டிகள், சுரண்டுவதற்குப் புதிய வேட்டைக் காடுகள் தேடல். எனவே போர்களுக்குச் “சர்வாதிகாரிகள்”, “தீவிரவாதிகள்” அல்லது “நாகரிகங்களின் மோதல்” மீது பழி போடும் அதிகாரப்பூர்வ  விவரிப்புகளைக் கம்யூனிஸ்டுகள் நிராகரிக்க வேண்டும். அதற்குப் பதிலாகக் கம்யூனிஸ்டுகள் மோதல்களின் ஆணிவேர் காரணங்களான பூகோள-அரசியல்  மற்றும் பொருளாதரத்தை அம்பலப்படுத்த வேண்டும்

அமைதிக்கான போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு 

இவ்வாறு லெனின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது சமாதானம் மற்றும் சர்வதேச ஒருமைப்பாட்டிற்குக் கம்யூனிஸ்டுகளின் பற்றுறுதியைப் புதுப்பிக்கும் தருணம் ஆகும். இதற்குப் பல்வேறு முனைகளில் உறுதியான அரசியல் நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.

முதலில் கம்யூனிஸ்டுகளும் தொழிலாளர் கட்சிகளும் போர், இராணுவமயமாக்கல் மற்றும் அணு ஆயுதங்களுக்கு எதிராகப் பொதுமக்களின் கருத்தைத் தீவிரமாகத் திரட்ட வேண்டும். ராஜ்ஜிய உறவு தீர்வுகள், அதிகரிக்கும் இராணுவப் பதற்றங்களுக்கு எதிர்ப்பு மற்றும் அபாயகரமான உலக ஆயுதப் போட்டியை நிராகரிப்பது ஆகியவற்றை கோருவதற்கு அவர்கள் தொழிற்சங்கங்கள், சமாதான இயக்கங்கள், இளைஞர் அமைப்புகள், போருக்கு எதிரான  அறிஞர்கள் மற்றும் ஜனநாயகச் சக்திகளை ஒன்றாகக் கட்டி பரந்துபட்ட இணைந்த முன்னணி மேடை அமைப்புகளைக் கட்ட வேண்டும். நேட்டோ (NATO), ஆஸ்திரேலியா, பிரிட்டன் அமெரிக்கா கூட்டணி (AUKUS) மற்றும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா கூட்டணியான  குவாட் (QUAD) போன்ற இராணுவக் கூட்டணிகள் (பாதுகாப்புக்காக அல்லாமல்) எவ்வாறு ஏகாதிபத்திய மேலாண்மைக்கான கருவிகளாக உள்ளன என்பதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் அம்பலப்படுத்த வேண்டும்.

இரண்டாவது, இந்தியச் சூழ்நிலையில் நரேந்திர மோடி அரசின் அதிகரிக்கும் ஏகாதிபத்திய ஆதரவு  நிலைபாடுகளைக் கம்யூனிஸ்டுகள் அம்பலப்படுத்த வேண்டும்.

அமெரிக்க–இஸ்ரேலிய அச்சுடன் இந்தியாவின் கேந்திரியமானக் கூட்டணி, (இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட QUAD) ‘நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை’ அமைப்பில் இந்தியாவின் பங்கேற்பு, காசாவில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டிக்க அதன் தயக்கம் மற்றும் மேற்கத்திய இராணுவக் கூட்டுகளின்பால் அதன் நெருக்கம் காட்டும் முயற்சி என இவை எல்லாம், கூட்டு சேரா கொள்கை மற்றும் காலனிய எதிர்ப்பு ஒருமைப்பாடு என்ற இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க  கொள்கையில் இருந்து விலகிச் செல்லும் அபாயகரமான போக்கை வெளிப்படுத்துகின்றன. 

சிபிஐ, சிபிஐ(எம்), சிபிஐ(எம்எல்) விடுதலை உள்ளிட்ட இந்தியாவின் கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் பிற இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் இந்தக் கொள்கை விலகலுக்கு எதிராகத் தொடர்ச்சியான, கொள்கை சார்ந்த குரலை எழுப்ப வேண்டும். ஓர் ஏகாதிபத்திய முகாமுக்கு எதிராக மற்றொன்றுடன் கூட்டணி சேர்வதன் மூலமாக அல்லாமல், இடதுசாரிகள் ஏகாதிபத்திய சிக்கலான தொடர்புகளை எதிர்ப்பதன் மூலம் இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும்.

மூன்றாவது, முற்போக்கு சக்திகளிடையே சர்வதேசிய ஒருமைப்பாடு அவசரமாக வலிமைப்படுத்தப்பட வேண்டும். தீவிரப்படுத்தப்பட்ட பூகோள-அரசியல் அணி சேர்க்கை அமைப்பு-களின் சகாப்தத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு அகிலத்தைக் கட்ட வேண்டும்– அந்தச் சர்வதேச அமைப்பு ஏகாதிபத்தியப் போட்டிகளில் ஒன்றுடன் சார்புநிலை எடுக்காமல் மாறாக அனைத்து ஏகாதிபத்திய போர்களையும் எதிர்க்கும் ஒன்றாக விளங்க வேண்டும்.. இதற்காகக் காமின்டன் அமைப்பின் போர் எதிர்ப்பு மாநாடுகளின்  உணர்வு புதுப்பிக்கப்பட வேண்டிய தேவையும்;  மற்றும் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் உள்ள கம்யூனிஸ்ட்கள் மத்தியில் ஒத்துழைப்புக்கான புதிய மேடைகள் கட்டப்பட வேண்டிய தேவையும் உள்ளது.

நான்காவது, தேசிய இறையாண்மை, சமாதான சகவாழ்வு மற்றும் சர்வதேசச் சட்டங்களை மதிப்பது ஆகிய கொள்கைகளை –வெறும் கருத்தியல் நெறிகளாக அல்லாமல், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆயுதங்களாக– கம்யூனிஸ்டுகள் பாதுகாக்க வேண்டும். இந்தக் கொள்கைகள் ஐநா சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ளன; ஆனால் திட்டமிட்ட முறையில் சக்தி மிக்க அரசுகளால் மீறப்படுகின்றன: எனினும் இந்தக் கொள்கைகள் போர்களைத் தடுக்கவும் நாடுகளுக்கு மத்தியில் ஒத்துழைப்பைச் சாத்தியமாக்கவும் முக்கியமானவைகளாக நீடிக்கின்றன. அதே நேரத்தில் கம்யூனிஸ்டுகள் (பாலஸ்தீனம் போன்ற) உண்மையான தேசிய விடுதலைப் போராட்டங்கள் மற்றும் பூர்ஷ்வா அரசுகளின் இராணுவ பேராசைகள் இடையில் வேறுபாடுகளைப் பிரித்தறிய வேண்டும்

லெனின் மரபுகளைப் புதுப்பித்தல் 

அமைதி என்பது வெறும் போர்கள் இல்லாமல் இருப்பது அல்ல’ என லெனின் மரபு நமக்கு கற்றுத் தருகிறது. அது சமூக நீதி, சமத்துவம் மற்றும்  உழைக்கும் மக்களின் விடுதலையுடன் பிரிக்க முடியாதது. சாதாரண மக்கள் வர்க்க உணர்வுடன் ஒன்று திறளும்போது மற்றும் எல்லைகளைத் தாண்டி ஒன்றுபடும்போது, சமூகத்தை மாற்றும் சக்தி பெறுகிறார்கள் மற்றும் போர்களை உற்பத்தி செய்யும் முறையை ஒழிக்கிறார்கள் எனத் திரும்பத் திரும்பச் சொல்வதில் லெனின் ஒருபோதும் சோர்வடைந்ததில்லை.

இன்று மனித குலம் இருத்தல் சவால்களைச் சந்திக்கிறது: ஏகாதிபத்தியப் போர்கள் மட்டுமல்ல ஆனால் சூழலியல் சரிவு, ஆழமாகும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பாசிசம் மீண்டும் தலையெடுத்தல் ஆகிய  சவால்களைச் சந்திக்கிறது. இந்த இருள் சூழ்ந்த நிலையில் லெனின் பார்வை ஒளிவிளக்காகத் திகழ்கிறது. அவரது கருத்துக்கள், போர்களுக்கு எதிரான கொள்கை வழிபட்ட எதிர்ப்பு மற்றும் ஜனநாயக புத்தறிவு விழிப்புணர்வு மற்றும் சோசலிச எதிர்காலத்திற்கான  நேர்மறை போராட்டத்துடன் இணைக்க நம்மை வற்புறுத்துகிறது: அந்த எதிர்காலம் சுரண்டல், ஒடுக்குமுறை அல்லது ஏகாதிபத்திய வன்முறை இல்லாதது.

நாம் லெனின் பிறந்தநாளைக் கொண்டாடும்போது கம்யூனிஸ்டுகள் மற்றும் முற்போக்கு சக்திகள் தங்கள் புரட்சிகரப் பற்றுறுதியை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். சர்வதேச ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்துவது மற்றும் அமைதிக்காக மக்களைத் திரட்டுவதன் மூலம், மற்றும் ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்திற்கு எதிராகத் தளர்வின்றி போராடுவதன் மூலம் நாம் லெனினின் புரட்சிகர செய்தியை 21ம் நூற்றாண்டிற்கு முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும்.

லெனினுக்குச் சிறந்த அஞ்சலி அவரை நினைவு கூர்வது மட்டுமல்ல, மாறாக செயல்பாடு அவருக்கான சிறந்த அஞ்சலி: போர் ஒடுக்குமுறை மற்றும் அநீதியிலிருந்து விடுதலை பெற்ற உலகைக் கட்டுவதற்கு ஊசலாட்டம் இல்லாத அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடு. 


செயல்படுவோம்! 

லெனின் புகழ் வாழ்க!

            மே தினம் வாழ்க! 


–நன்றி : நியூ ஏஜ் (ஏப். 26 –மே 2)

–தமிழில் :நீலகண்டன், 

 என் எஃப் டி இ,  கடலூர் 

  .   

 

 
 

No comments:

Post a Comment