Thursday, 7 May 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 148 -- மாலினி துல்புலே

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 148 


மாலினி துல்புலே –உழைக்கும் பெண்கள் இயக்கத்தில்

கம்யூனிசத்தை அறிமுகம் செய்தவர்

–அனில் ரஜீம்வாலே 


மாலினி துல்புலே தனித்துவமான ஆளுமையாளர், பொதுவாகத் தொழிலாளர் இயக்கத்திலும், குறிப்பாக உழைக்கும் பெண்கள் மற்றும் அறிவாளர்கள் மத்தியிலும் அரசியலைக் கொண்டு வந்தவர். பூனா மற்றும் மகாராஷ்டிராவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டிய முன்னணியாளர்களின் அவர் ஒருவர். பூனாவில் ஆகச் சிறந்த குடிமகள் விருது வழங்கப்பட்டவர்.

தொடக்க வாழ்க்கை

பரோடா அரச மாகாணத்தின் மெஹ்சானா கிராமத்தில் 1922 அக்டோபர் 1ம் தேதி பிறந்தார். துவாரகா எனப் பெயர் சூட்டப்பட்டார். அவருடைய தந்தை சங்கர்ராவ் பட்வர்தன் முனிசிபாலிட்டி செயலாளர். குடும்பம் பொருளாதாரத்தில் அவ்வளவு நன்றாக இல்லாதபோதும் அவர் தேசியம் மற்றும் விடுதலைப் போராட்டச் சூழலில் வளர்க்கப்பட்டார். பெரும்பாலும் பையன்கள் மத்தியில் விளையாடி வாழ்ந்ததால் அவர் கூச்ச சுபாவம் இல்லாமல் இருந்தார்.

மராத்தி பேசும் சமூகம் குறைவான எண்ணிக்கையுடன் சிறியது, அதைச் சூழ்ந்து குஜராத்தி பேசும் மக்கள் இருந்தனர். எனவே அவர்களுக்கு ஏராளமான செயல்பாடுகள் இருந்தன, அதில் போதுமான அளவு மாலினி ஆழ்ந்திருந்தார். அவர் மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளைக் கற்றார்.

செவ்வியல் இசை மற்றும்  நுண்கலையில் அதிக விருப்பம் உடைய அவர், நீண்ட தொலைவு பயணம் செய்து பம்பாய்க்குச் சென்று பால்-கந்தர்வாவின் நாடகங்கள் பார்ப்பார். அவரது குடும்பத்தால் இசை, இலக்கியம் மற்றும் அது தொடர்பான துறைகளில் அவருக்குத் தொடர்ந்த முறையான பயிற்சி அளிக்க இயலவில்லை. அவர் ஆஜ்மீர் மத்திய கல்வி போர்டு, நாக்பூர் வித்யா பீடம் மற்றும் பனாரஸ் பல்கலைக் கழகத்திலிருந்து பிஏ மற்றும் எம்.ஏ  பட்டமும் கலைகளில் பட்டமும் பெற்றார். 

திருமணம் 

ஓர் உறவினர் மூலம் வசந்த் துல்புலே உடன் மாலினிக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவர் முதலில் காங்கிரஸிலும் பின்னர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஊழியராகவும் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர  ஊழியர் ஆனவர். அவரது குடும்பமும் அறிவார்ந்தது. அவர்கள் 1944ல் திருமணம் செய்து கொண்டனர் 1946ல் கோபர்கோன் (அகமது நகர் மாவட்டத்தின் ஒரு நகராட்சி) என்ற இடத்தில் வசிக்கத் தொடங்கினர். 

மாலினியின் மாமியார் சரஸ்வதி பாய் தீவிரமான செயல்பாட்டாளரும், திறன் மிக்க ஆளுமையாளரும் ஆவார். மாலினி பின்னர் அவர் குறித்து விரிவான கட்டுரை எழுதியுள்ளார். .மாலினியின் மாமனார் ஒரு புகழ்பெற்ற காங்கிரஸ் தலைவர். எனவே அந்த முழுமையான சூழ்நிலையும் அரசியல் மற்றும் சமூகம்  சார்ந்து இருந்தது.

சரஸ்வதிபாய் சுதேசியைத் தீவிரமாக ஆதரித்தார். அவர் ஒரு கூட்டத்தில் சரோஜினி நாயுடுக்கு முன்பு சில தலைவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினார். இதன் விளைவாய் அவரது குடும்பத்தினர் உட்பட ஒவ்வொருவரும் கதர் உடுத்தத் தொடங்கினர். அவர் கூட்டுக் குடும்பத்தின் குழந்தைகளுக்காகக் கதர் துணிக்கு வண்ணம் தோய்த்து அதில் எம்பிராய்டரி பூவேலைப்பாடுகள் செய்து தந்தார். 1943ல் கஸ்தூரிபாய் இறந்த பிறகு மக்களிடமிருந்து  ஏராளமான நிதி திரட்டினார். 

அரசியல் மற்றும் தொழிற்சங்கச் செயல்பாடுகள் 

காந்தியின் ஆழமான செல்வாக்குக்கு ஆட்பட்ட மாலினி, அகில இந்திய பெண்கள் காங்கிரஸில் பணியாற்ற தொடங்கி தமது பதினாறாவது வயதில் அதன் செயலாளர் ஆனார். பின்னர் அவர் அகமத்நகர் மற்றும் பூனாவில் பீடி மற்றும் சர்க்கரை ஆலை தொழிலாளர்களைத் திரட்டி அமைத்தார். அகமத் நகரில் சட்டவிரோத வரிகளுக்கு எதிராக விவசாயிகளயும் கூட அவர் திரட்டினார்.

இந்திய விடுதலை 

கோபர்கோன் தாலுகா கச்சேரியில் துல்புலே-கள் 1947 ஆகஸ்ட் 15ல் இந்திய விடுதலையைக் கொண்டாடும் வகையில் மூவர்ண கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிடிஆர் காலகட்டம்

பல தோழர்களைப் போல வசந்தராவ் மற்றும் மாலினி துல்புலே உட்கட்சிப் போராட்டத்தில் கடினமான நேரங்களையும், வெளியே ஒடுக்குமுறைகளையும் அனுபவித்தனர்.  வசந்தராவ் கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தனது எம் ஏ பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டிருந்த மாலினி, தேர்வுக்கு இரண்டு மாதங்கள் முன்பிருந்தே அங்கு தங்கியிருந்தார். எனவே அவரைக் கைது செய்ய முடியவில்லை. அவர் திரும்பி வந்ததும் அஹமத்நகரில் தங்க முடிவு செய்தார்.

அவருக்குச் சாந்தாபாய் குல்கர்னி, பாபா கோசாயி, பி எம் மகாஜன், பாய் சத்யா மற்றும் அவர்கள் போன்ற பல தோழர்களுடன் அறிமுகம் ஏற்பட்டது. ஏராளமான கம்யூனிஸ்ட் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாய்சத்யா மராத்தி மொழியில் இன்குலாப் என்ற இதழை வெளியிடத் தொடங்கினார், அதில் மாலினி  விளக்கமாகக் கட்டுரைகள் எழுதினார்.

தலைமறைவு கம்யூனிஸ்ட்டுகளைத் தேடிய போலீஸ், ஏழை மக்களின் சில குடியிருப்புகளைத் தாக்கியது. குறிப்பாகப் பெண்களை மிரட்டி அவர்களைப் பீதியடையச் செய்தது. ஆறு மைல் தொலைவு நடந்து சென்று மாலினி அந்தப் பெண்களை –பயத்தில் மூன்று நாட்களாக சமையல் கூட செய்யாத அப்பெண்களை –சந்தித்தார். மாலினியின் இருப்பே பெண்களுக்குப் பெரும் ஊக்கமாக அமைந்தது.

விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியில் இணைதல்

மார்ச் 1947ல் மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் கூட்டம் ஒன்று நடைபெற்றது; அதில் ஒரு பிரிவினர் காங்கிரஸ், ‘பகுஜன் சமாஜ்’க்கு உதவிகரமாக இல்லை என முடிவு செய்தனர். எனவே வெளியேறி தனி கட்சி அமைக்க அவர்கள் முடிவு செய்தனர். கட்சியை விட்டு வெளியேறியவர்களில் கேசவ்ராவ் ஜெயதே, சங்கர்ராவ் மோர், ஆர்கே கட்டில்கர், நானா பட்டேல் மற்றும் பிறர் அடங்குவர். மகாராஷ்டிராவில் அவர்கள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சியை 1947 ஆகஸ்ட் 3ல் அமைத்தனர்.

அக்கட்சியின் தலைவர்கள் நகருக்கு வந்து பாய்சத்யா இல்லத்தில் ஒரு கூட்டத்தை நடத்த, டவுனில் அக்கட்சி அமைப்பை ஏற்படுத்த ஏதுவாயிற்று. மாலினி அதுவரையில் சிபிஐ கட்சியில் இணையவில்லை. விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி (PWP)யின்பால் மக்கள் ஈர்க்கப்பட்டனர் மற்றும் சிபிஐ நல்ல நிலையில் இல்லை. மாலினி PWPல் இணைந்தார், சிறையில் இருந்து விடுதலையானதும் வசந்தராவும்கூட PWPல் இணைந்தார்.

1950 வாக்கில் வசந்தராவ் மற்றும் மாலினி நகரில் இருந்து பூனாவுக்குக் குடிபெயர்ந்தனர். 1952 தேர்தல்களில் PWP கட்சி மோசமான தோல்வியை அடைய கட்சிக்குள் அது நெருக்கடியை ஏற்படுத்தியது. வசந்த்ராவ் உட்பட கட்சியின் பெரும் பிரிவினர், வேறு பலர் எதிர்த்தபோதும், கட்சியை சிபிஐ உடன் இணைக்க வற்புறுத்தினர்.

விவசாயிகள் தொழிலாளர் கட்சியைக் கலைத்துவிட்டு சிபிஐயுடன் இணைப்பதை மாலினி தீவிரமாக ஆதரித்தார். சிபிஐயில் இணைய அவர் தன்னிச்சையாக முடிவு செய்து PWP பொதுச் செயலாளருக்குத் தனது  ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்தார். அது 1954 ஏப்ரல். அவர் PWP மத்திய கட்சி அலுவலகச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில், ‘மார்க்சியத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில்  இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். இந்த வழியில் மட்டும்தான் ஜனநாயகப் புரட்சிகர முன்னணியை வலிமைப்படுத்த முடியும். பின்னர் அவர் சிபிஐயில் இணைந்தார்.

1955 பிப்ரவரி 8 சங்கிலியில் நடந்த PWP மாநாட்டில் சிபிஐயுடன் இணைக்கும்  முன்மொழிவு தோற்கடிக்கப்பட்டது.

உழைக்கும் பெண்கள் குழு மற்றும் பெண்கள் விடுதலை இயக்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு (ஷ்ராமிக் மகிளா சமிதி மற்றும் ஸ்திரீ முக்தி அந்தோலன் சம்பர்க் சமிதி)

உழைக்கும் பெண்கள் குழுக்கள்

அகில இந்திய பெண்கள் மாநாட்டில் (AIWC) சங்கர்ராவ் மோரின் மனைவி சாந்தாபாய் மோருடன் மாலினி’தாய் வழக்கமாகப் பணியாற்றினார். (‘தாய்’ என்ற பின்னொட்டு மராத்தியில் பெண்களை மரியாதையுடன் அழைக்கும் முறை. மூத்த சகோதரி /அக்கா அல்லது மரியாதைக்குரிய பெண்மணி என்று பொருள்)

சுதந்திரத்திற்கு முன்பு காங்கிரஸ்காரர்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் சோசலிஸ்ட்கள் உட்பட அனைத்து முற்போக்கு பிரிவினர்களும் –பெண்களின் பரந்துபட்ட அமைப்பாக விளங்கிய– அனைத்திந்தியப் பெண்கள் மாநாட்டில் பணியாற்றினர். சுதந்திரமே முக்கிய நோக்கமாக இருந்ததால் அமைப்பும் அதனது ஒற்றுமையைப் பராமரிக்க முடிந்தது.

ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு கருத்தோட்டங்கள் பலவாக, வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கின. வெளியேறிய கம்யூனிஸ்டுகள் ஷ்ராமிக் மகிளா சமிதி (உழைக்கும் பெண்கள் குழு)வை அமைத்தது ஒரு முக்கியமான நிகழ்வு.

முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று ‘பெண்கள் விடுதலைக்கான இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழு’ (ஸ்திரீ முக்தி அந்தோலன் சம்பர்க் சமிதி) அமைக்கப்பட்டது. 1970களில் மாலினி துல்புலே, சாயா தாதர், லீலா போஸ்லே, குமுத் போர், சுலபா பிரம்மி, சவுதாமணி ராவ், நிர்மலா சாத்தே முதலானவர்கள் முன்னெடுப்பில் இந்த அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்புக் குழு, பங்கேற்பாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்ட இரண்டு நாள் பயிற்சி பட்டறையைப் பூனாவில் நடத்தியது. இந்தப் பயிற்சி பட்டறையின்போது பெண் கல்வியாளர்கள் முதல் வயலில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் வரை மற்றும் பெண் உழைப்பாளர்கள் அடங்கிய குழுக்கள் பெண்கள் பிரச்சனைகளை விவாதித்தன. மும்பை, பூனா போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறப் பகுதிகளிலும்கூட பெண்களின் அமைப்புகள் அமைக்கப்பட்டன.

இந்தச் சமிதி பால் விநியோகம் செய்ய, சிறு குழந்தைகளுக்கான பள்ளிகள், எழுத்தறிவு வகுப்புகள், ரேஷன் பொருட்களை ஏற்பாடு செய்தல் முதலியவற்றுக்கான மையங்களை அமைத்ததுடன் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. இந்தப் பெண்களின் குழு ‘இந்திய மாதர் தேசியச் சம்மேளன’த்துடன் (NFIW) இணைப்புப் பெற்றது. மாலினி’தாய் துல்புலே மற்றும் ரோசா தேஷ்பாண்டே இருவரும் பொதுச்செயலாளர்கள் ஆக்கப்பட்டனர்.

1964 மார்ச் 9ல்  பம்பாய் சட்டமன்றம் முன்பு 15ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முக்கிய பிரச்சனை, தொழிற்சாலையில் பணியாற்றும் வரை பெண்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற முன்நிபந்தனையை எதிர்ப்பது. திருமணத்திற்கு எதிரான இந்த நிபந்தனை பரவலாக எதிர்க்கப்பட்டது. இந்த அமைப்பு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துக்களைத் திரட்டி சட்டமன்றத்திற்குச் சமர்ப்பித்தது.

பெண் தொழிலாளர்கள் நிர்பந்தத்ததில் அரசு, பெண் தொழிலாளர்கள் திருமணம் குறித்த முன்மொழிவைத் திரும்பப் பெற்றது.

1965 மற்றும் 1973ல் சமிதியின் பிரம்மாண்டமான மாநாடுகள் நடத்தப்பட்டன.

சம்பர்க் சமிதி (ஒருங்கிணைப்புக் குழு) அமைக்கப்பட்டது மற்றும் மகாராஷ்டிராவில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டதன் மூலம் பெண்களின் இயக்கத்தை ஊக்கம் பெறச் செய்தது. அது முறையான கூட்டங்கள், கருத்துப் பரிமாற்றம், மார்ச் 8ல் பெண்கள் தின விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளைக் கூட்டாக அமைத்து நடத்தியது, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளைக் கூட்டாக மேலே எடுத்துச் சென்றது. 1987-ல் அரசு ‘பெண்களுக்கான தேசிய நெடுநோக்கு திட்ட’த்தைத் தயாரித்தது. பெண்களின் ஒருங்கிணைப்புக் குழு பெண்களுக்கான தினக்கூலி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி தொடர்பான சில முக்கிய  சிபாரிசுகளைச்  செய்தது. 1990ல் இந்த அமைப்புப் பெண்கள் இயக்கத்தின் அறிக்கை (மெனிபெஸ்டோ) ஒன்றையும் பிரசுரித்தது

‘டப்பா-பாட்லிவாலி’ பெண்கள் இயக்கம்

1960 –70களில் சமிதி ‘டப்பா பாட்லிவாலி’ என்ற தனித்துவமான இயக்கத்தை முன்னின்று நடத்தியது (‘டப்பா பாட்லிவாலி’ என்பதன் பொருள் பழைய பாட்டில்கள், பெட்டிகள் மற்றும் பாத்திரங்களை விற்கும் பெண்கள்). அந்த இயக்கத்தில் மாலினி’தாய் தீவிரமாக ஈடுபட்டார். ஏழைப் பெண்கள் வழக்கமாகக் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி வந்து பழைய பாத்திரங்கள் மற்றும் பிற பொருட்களை வாங்குவர். பம்பாயில் தலையில் கூடையுடன் செல்லும் இத்தகைய பெண்கள் ஒரு சாதாரண காட்சி. இப்படி அவர்கள் வாங்கிச் சேகரித்த பொருட்களைக் கொண்டுவரும் அதற்கான இடம்தான் டப்பா-பாட்லிவாலா பஜார். அந்த இடத்தை ஒவ்வொரு ஆண்டும் கார்ப்பரேஷன் காண்ட்ராக்ட்க்கு ஏலம் விடும்.

அவர்கள் அந்த இடத்திற்குப் பல முறை (‘பெரீஸ், ‘pheris’) பழைய பொருட்களைச் சேகரிக்கவோ அல்லது வாங்கவோ திரும்பத் திரும்ப  வரவேண்டி இருக்கும். ஒவ்வொரு முறையும் அவர்கள் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வேலை அவர்களுக்கு ஒரு சிறிய லாபத்தை மட்டுமே தந்தது. 

அது டப்பா-பாட்லிவாலிகள் உட்காருவதற்கான ஒரு இடம் அல்லது அத்தகைய மைதானம். அதற்கு அவர்கள் கட்ட வேண்டிய வாடகை அவர்களுக்கு அதிகமாகவே இருந்தது. எனவே வாடகையைக் குறைக்க அவர்கள் கோரிக்கை எழுப்பினர்.

அதற்காக அவர்கள் எட்டணாவில் இருந்து இரண்டு ரூபாய் வரை செலுத்த வேண்டி இருந்தது. அது தவிர அமரும் இடம் பொருத்தமற்றதாகவும் அழுக்கும் மற்றும் வெயில் மழையிலிருந்து பாதுகாக்க மேற்கூரை இல்லாமலும் இருந்தது. இதற்காகச் சமிதி பிரம்மாண்டமான இயக்கத்தைத் தொடங்க அதன் விளைவாய் ஆறு பைசா வாடகையில் நான்குக்கு நான்கு என்ற அமரும் இடம் கிடைத்தது மட்டுமின்றி, 6 பைசா வாடகைக்கு ரசீதும் தரப்பட்டது. இது ஷ்ராமிக் மகிளா சமிதிக்கு (உழைக்கும் பெண்கள் அசோசியேனுக்கு) மாபெரும் வெற்றி.

மாலினிபாய், சாந்தாபாய், மால்டிபாய் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் வடக்கையைக் குறைக்கவும் மற்றும் சாதகமான பணிச் சூழலை ஏற்படுத்தவும் டப்பா பாட்லிவாலிகளை ஒன்று திரட்ட முன்கையெடுத்தனர். இதன் விளைவாய் உழைக்கும் பெண்கள் ஒரு நாளைக்குச் சுமார் இரண்டு ரூபாய் சேமிக்க முடிந்தது, பெரும் ஆறுதலாகவும் நிம்மதியாகவும் இருந்தது. ஒரு நாளைக்கு ஒவ்வொரு முறை நுழையும் போதும் வாடகை செலுத்தும் முறை நிறுத்தப்பட்டு ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே வாடகை செலுத்தினால் போதும் என்று மாற்றப்பட்டது.

தொழிற்சங்கப் போராட்டங்கள் 

ஏஐடியுசி அமைப்பின் கீழ் இணைக்கப்பட்டிருந்த பல்வேறு தொழிற்சங்கங்களிலும் மாலினி’தாய் தீவிரமாகப் பணியாற்றினார். அவர் மருத்துவமனை தொழிலாளர்கள் சங்கத்தை அமைக்க உதவினார். பூனாவில் செவிலியர்கள் மற்றும் பல்வேறு ஊழியர்கள் மத்தியிலும், மும்பை கே இ எம் ஹாஸ்பிடல், இன்ஜினியரிங் தொழிலாளர்கள், கெமிக்கல் தொழிலாளர்கள் சங்கங்களிலும் மற்றவற்றிலும் அவர் தீவிரமாகப் பணியாற்றினார்.

கோவா சத்தியாகிரகம்

1955ல் நடைபெற்ற கோவா சத்தியாகிரகத்தில் மாலினி’தாய் முன்னணிப் பங்கு வகித்தார். நானாசாஹேப்  கோர், சேனாபதி பாபெட் மற்றும் பிறர் தலைமையில் பங்கேற்ற சத்யாகிரகிகளைப் போர்த்துக்கீசிய காவலர்கள் பிடித்துப்போய் காடுகளில் விட்டனர். வேறு பலரும் (கோவா) அகுடா கோட்டை சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

ராஜாராம் பாட்டில் தலைமையிலான அடுத்த குழுவில் மாலினி’தாய் இருந்தார். பலரும் அவரைத் தடுக்க முயன்று போர்த்துக்கீசிய காவலர்கள் மற்றும் இராணுவத்தின் முரட்டுத்தனத்தைக் கூறி எச்சரித்தனர். ஆனால் மாலினி’தாய் பின்வாங்கவில்லை. “அடி உதைகளையும் சித்திரவதைகளையும் ஆண்கள் சந்திக்கிறார்கள். நானும் அதையே சந்திப்பேன். அதில் என்ன பிரச்சனை?” என பதிலடி கொடுத்தார்

வீரப் பெண்மணியான அவரது மாமியார் அவரைப் பெரிதும் உற்சாகப்படுத்தினார். “நீ போவது என்று முடிவு செய்து விட்டாய்; உன் முடிவில் நீ உறுதியாக இரு. ஒருமுறை முடிவு செய்த பின் உன் முடிவை மாற்றாதே” என்றார். அவரது வார்த்தைகள் அபாரமான தார்மீக ஆதரவாக இருந்தது. கலந்து கொள்வது என மாலினி உறுதியாக முடிவு  செய்தார்.

அவரது குழு அரோண்டா வழியாகக் கடற்படை மாலுமிகள் உதவியுடன் போர்த்துக்கீசிய எல்லையை அடைந்தது. அரசு கட்டிடத்தின் மீது மூவர்ணக் கொடியை ஏற்ற ரகுநாத் சாவன், சதாசிவ கார்க்கனீஸ் மற்றும் சிலர் மெல்ல நழுவினர். போர்த்துக்கீசியர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி பெட்னே என்பவர் மூவர்ண கொடியை வெற்றிகரமாக ஏற்றினார்.

கைது செய்யப்பட்ட சத்தியாக்கிரகிகள் சிறிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு மோசமாக அடிக்கப்பட்டனர். மாலினி’தாய் அடிகளிலிருந்து தப்பினாலும் அவரது கால் ஓர் இராணுவ வீரரின் பூட்ஸ்களால் நசுக்கப்பட்டது. பின்னர் வேறு சில தனி நிகழ்வுகளில் போர்த்துக்கீசிய வீரர்களைச் சந்தித்தபோது அடிபட்டார். போர்த்துக்கீசிய வீரர்களின் கமாண்டர் மான்டேரோ மாலினியின் கீழ்ப்படிதலற்ற பதில்களால் சீற்றமடைந்தார். “ஆம் நான் மீண்டும் வருவேன்!” என்றார் மாலினி’தாய். பின்னர் அவர்கள் ஒரு லாரியில் ஏற்றப்பட்டு அடை மழையில் காடுகளில் விடப்பட்டனர்.

பின்னர் மாலினி’தாய் கோவா சத்தியாகிரகம் குறித்துப் பல்வேறு நிகழ்வுகளை விவரித்து எண்ணற்ற கட்டுரைகள் எழுதினார்

இந்திரா சமூகச் சமையற்கூடம்

இந்திரா சமூகச் சமையற்கூடம் என்ற பெயரில் ஒரு நல்ல மலிவு உணவு திட்டம், 10 உணவு வழங்கும் இடங்களுடன் ஓர் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. உழைக்கும் பெண் உறுப்பினர்கள் மலிவு விலையில் உணவு, மருந்துகள், விலை இல்லா புத்தகங்கள் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை வழக்கமாகப் பெற்றனர். பெண்கள் அமைப்பாகத் திரண்டனர் மற்றும் சில கோரிக்கைகளை அடையவும் செய்தனர். ஏறத்தாழ எல்லா தொழிலாளர்களும், தங்கள் குடும்பங்களால் ஒதுக்கப்பட்டவர்கள் உட்பட, ஏழைப் பெண்கள் ஆவர்.

ஆனால் பின்னர் அந்த உரிமையாளர் நிதியை ஏராளமாக வாரிச் சுருட்டத் தொடங்கினார் மற்றும் தொழிலாளர்களை ஆட்குறைப்புச் செய்தார் அல்லது தொழிலாளர்களுக்குத் தொந்தரவுகளை ஏற்படுத்தினார். அதை அடுத்து மாலினிபாய் மற்றும் மற்றவர்கள் அவர்களின் பிரச்சனையை எடுத்து நீண்ட போராட்டங்களை நடத்தினர்.

வீர் அணைக்கட்டுக்கான போராட்டம்

அந்த அணைக்கட்டு பூனா –சத்தாரா சாலையில் நீர் நதியின் மீது வீர் கிராமத்திற்கு அருகில் அமைந்திருந்தது. அரசு 1956-ல் அணையின் மட்டத்தை உயர்த்த முடிவு செய்தது; இதன் விளைவாய்ப் பல்வேறு கிராமங்கள் மூழ்கும் நிலை வரும்.1956 ஆகஸ்டில் பாதிக்கப்பட்ட மக்களின் மாநாடு ஒன்று முதலில் மக்களுக்கு மறுவாழ்வு பின்னர் அணையின் மட்டத்தை உயர்த்துவது என்று கோரியது. எல்லா கட்சிகளாலும் இந்தக் கோரிக்கை ஆதரிக்கப்பட்டது. அவர்கள் (அணைக்கட்டிற்கு) நிலத்திற்குப் பதிலாக நிலம் கோரினர். இப்போராட்டத்தில் மாலினி’தாய் மற்றும் வசந்தராவ் முன்னணிப் பங்கு வகித்தனர். கிராமத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு ஏக்கர்கள் நிலம் கிடைத்தது.

வீட்டு வேலை செய்யும் பெண்களின் அமைப்பு 

குமுத் போர் மற்றும் பிறருடன் இணைந்து மாலினி’தாய், வீட்டு வேலை செய்யும் பெண்களின் சேவை நிலைமைகளை மேம்படுத்த இந்த அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு 1987 ஜனவரி 9ல் ஊதிய கட்டமைப்பு, போனஸ், கிராஜுட்டியை முறைப்படுத்தல் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கை பட்டியலை வழங்கியது

ஏஐசிபி கட்சியில் இணைதல் 

பின்னர் மாலினி’தாய் துல்புலே அவரது நம்பிக்கையின் காரணமாக அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் (AICP) சேர்ந்தார் –அதே நேரத்தில் அவரது கணவர் வசந்தராவ் துல்புலே சிபிஐ கட்சியில் நீடித்தார். இறுதி நாட்களில் உடல் பலகீனம் மற்றும் சிபிஐயில் இருந்து விலகி இருந்தது காரணமாக மாலினி’தாய் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார் –இருந்த போதும் அவர் ஏஐடியூசி தொழிற்சங்கத்திலும் வேறு சில நடவடிக்கைகளிலும் தொடர்ந்து நீடித்தார்.

மாலினி’தாய் துன்புலே 2009 டிசம்பர் 14ல் இயற்கை எய்தினார்

அவரது எழுத்துப் பணிகள் 

மார்க்சியத்தின் அடிப்படை நூல்கள் உட்பட மாலினி’தாய் ஏராளமாகப் படிப்பவர். அதே நேரத்தில் அவர் பல்வேறு மார்க்சிய நூல்களை எழுதவும் மொழிபெயர்க்கவும் கூட செய்தார். அவர் கட்சிக்கும் மாதர் சம்மேளனத்திற்கும் மற்றும் பிற பெண்கள் அமைப்பிற்கும் பல்வேறு அறிக்கைகள், பிரசுரங்களை எழுதுவது வழக்கம். மற்ற படைப்புகள் தவிர குஜராத்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்து பல்வேறு நூல்களையும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். ஸ்திரீ, கிர்லோஸ்கர் உள்ளிட்ட பல மராத்திய இதழ்களுக்கும் அவர் ஏராளமாக எழுதினார். பூனாவில் தொழிலாளர்கள் இயக்க வரலாறு குறித்து அவர் எழுதினார். மேலும் அவர் தனது கணவர் வசந்தராவ் துல்புலே வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்தும் எழுதினார். பூனா அட்வான்ஸ் ஆய்வுகள் நிறுவனத்தில் அவர் கற்பித்தார். மார்க்ஸ் எழுதிய “லூயிஸ் (நெப்போலியன்) போனபார்ட்டின் பதினெட்டாவது ப்ரூமைர்” நூலை அவர் மராத்தியில் மொழிபெயர்த்தார்.

மாலினி’தாய் நினைவைப் போற்றுவோம்!

--நன்றி : –நியூஏஜ் (மார்ச் 29 –ஏப்ரல் 4) 
–தமிழில் நீலகண்டன், 
என் எஃப் டி இ, கடலூர்
 
பின் இணைப்பு :

     (லூயிஸ் நெப்போலியனின் பதினெட்டாவது ப்ரூமெய்ர் --  என்பது, லூயிஸ் நெப்போலியன் போனபார்ட் (நெப்போலியன் III) 1851-ல் நிகழ்த்திய ஆட்சிக் கவிழ்ப்பை விவரிக்கும் காரல் மார்க்ஸின் புகழ்பெற்ற அரசியல் பகுப்பாய்வு நூல். 1799-ல் முதலாம் நெப்போலியனின் அதிகாரக் கைப்பற்றலை (18 Brumaire, பிரெஞ்சு ரிபப்ளிகன் நாட்காட்டின்படி ப்ரூமெய்ர் மாதத்தின் 18வது நாள்) நினைவுபடுத்தும் வகையில், இந்த நிகழ்வை மார்க்ஸ் "வரலாறு முதலில் சோகமாக நிகழ்ந்த பின், கேலிக்குரிய நகைச்சுவையாக மீண்டும் நிகழ்கிறது" என்று விவரித்தார் –இணையத்திலிருந்து கூடுதல் இணைப்பு

 

 .

 

 

 

 

No comments:

Post a Comment