கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு -147
ஆர் நல்லகண்ணு
–ஜனங்களின்
மீட்பர், முனிவர் மற்றும்
கம்யூனிஸ்ட் தலைவர்
–அனில் ரஜீம்வாலே
ஆர்
நல்லகண்ணு அரிய தலைவர்களின் வகையைச் சேர்ந்தவர், மக்களால் தங்கள் மீட்பர் என்று கருதப்படுபவர்,
சுதந்திரப் போராட்ட வீரர், தமிழ்நாடு மாநில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் ஆக உயர்ந்த தலைவர்களில்
ஒருவர். அவரது வாழ்க்கை, கொந்தளிப்பான விடுதலைப் போராட்டத்திலிருந்து இந்திய விடுதலைக்குப்
பிறகு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த முழுமையான 101 ஆண்டுகளை வாழ்ந்தவர்.
இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட 1925 டிசம்பர் 26ல், தூத்துக்குடிக்கு அருகில் தாமிரபரணி
நதி வளைவின் வளமையான திருவைகுண்டத்தில் பிறந்தார். தந்தை ராமசாமி தேவர், தாயார் கருப்பாயி
அம்மாள். அவர்களது குடும்பம் செழிப்பான விவசாயக் குடும்பம். நீதிமன்ற ஜூரியாகப்
பணியாற்றிய அவரது தந்தை, அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் நீதிமன்றத்திற்குச் செல்லும்போது
வண்டிக்கு முன்னே சைக்கிளில் ஒரு காவலர் செல்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது.
அந்தப்
பெற்றோர்களின் 10 குழந்தைகளில் நல்லகண்ணு மூன்றாவது குழந்தை.
அன்போடு
தோழர் ஆர்என்கே என்றும் அல்லது ஐயா நல்லகண்ணு என்றும் அவரை அழைப்பர்.
கல்வி மற்றும் அரசியல் செயல்பாடுகள்
அந்தப்
பகுதிகளில் இருந்தது ஒரே ஒரு பள்ளி மட்டும்தான், அதைச் சாதாரணமாக ‘ஸ்கூல்’ என்று மட்டும்
அழைப்பர். அவர் இன்டர்மீடியட் மட்டம் வரை தமிழில் படித்தார், மதுரை இந்து கல்லூரியில்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேலே படிக்கவில்லை.
பள்ளியில்
இருந்தபோது மகாத்மா காந்தியால் ஊக்கம் பெற்று மாணவர் இயக்கத்தில் இணைந்தார். பின்னர்
சுதந்திரப் போராட்ட வீரர் ‘அண்ணாச்சி’ சண்முகம் மற்றும் அவரது ஆசிரியர் பலவேசம் செட்டியார்
மூலம் அவருக்கு மார்க்சிய நூல்கள் அறிமுகம் கிடைத்தது.
வெள்ளையனே
வெளியேறு இயக்கத்தின்போது சிறையில் கூட அடைக்கப்பட்டார். வ உ சிதம்பரம் பிள்ளை (வ உ
சி) யின் சுதேசி இயக்கத்தாலும் அவர் உத்வேகம் பெற்றார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைதல்
18
வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர் முழு நேர கட்சி ஊழியர் ஆவதற்காக உடுத்திய
‘ஒரு வேட்டி துண்டுடன்’ வீட்டை விட்டுப் புறப்பட்டார். வேளாண் இயக்கத்தில் பி சீனிவாசராவ்
உடன் நெருக்கமாகப் பணியாற்றினார்; மற்றும் தூத்துக்குடி ஹார்வி மில் தொழிற்சங்கப் போராட்டங்கள்
மற்றும் தமிழறிஞர் திரு வி கல்யாண சுந்தரனார் (திருவிக) எழுத்துக்களாலும் உருவாக்கப்பட்டார்.
விடுதலைப் போராட்டத்தில்
தொழிலாளர் வேலை
நிறுத்தத்துக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் இணைந்தபோதே, நீதி மற்றும் விடுதலைக்கான
போராட்டங்களுக்குள் நல்லகண்ணுவின் தொடக்கமும் முன்பே அமைந்தது
அதனை
அவர் நினைவுகூரும் போது, “நான் குழந்தையாக இருந்தபோது, எனது நகருடன் ஒட்டி இருந்த தூத்துக்குடியில்
மில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அது ஹார்வி குழும ஆலைகளில் ஒன்று. அது பஞ்சாலைத்
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் என்று அழைக்கப்பட்டது. அவர்களை ஆதரிக்க எங்களது
நகரில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அரிசி சேகரித்துத் தூத்துக்குடியில் வேலை நிறுத்தத்
தொழிலாளர்களின் குடும்பங்களுக்குப் பெட்டிகளில் அனுப்புவோம். எங்களைப் போன்ற இளம் பையன்கள்
வீதி வீதியாகச் சென்று அரிசியைச் சேகரிப்போம்” என்ற நல்லகண்ணு, “எனக்கு அப்போது
வெறும் 5 அல்லது 6 வயது இருக்கும்“ என்று மேலும் கூறினார்.
1937 தேர்தல்
1935
ஜூலையில் நீதி கட்சியின் ‘தி ஜஸ்டிஸ்’ பத்திரிக்கை, எல்லா இடங்களிலும் காங்கிரஸின்
கதர்ச் சீருடைகள், காந்தி குல்லாகள் மற்றும் மூவர்ணப் பதாகைகளை ஒவ்வொரு குக்கிராமங்களிலும்
ஒருவர் காண முடியும் என்று குறிப்பிட்டது. அந்த மக்கள் பெரும்பாலும் ஏழைகள் மற்றும்
வாக்குரிமை இல்லாதவர்கள்.
1937ல்
மெட்ராஸ் ராஜதானியில் மாகாணத் தேர்தல்கள் நடைபெற்றன.
“அப்போது
மெட்ராஸில் இரண்டு முக்கிய கட்சிகளே இருந்தன. காங்கிரஸ் மற்றும் நீதிக்கட்சி. சின்னங்களுக்குப்
பதிலாக வாக்குப் பெட்டியின் வண்ணத்தால் கட்சிகள் அடையாளப்படுத்தப்பட்டன. அப்போது நாங்கள்
பிரச்சாரம் செய்த காங்கிரசுக்கு மஞ்சள் பெட்டி, நீதிக் கட்சிக்குப் பச்சை பெட்டி ஒதுக்கப்பட்டன”
என்று ஒரு பேட்டியில் நல்லகண்ணு நினைவு கூர்ந்து விவரித்தார்.
“மஞ்சள்
பெட்டிக்கு ஓட்டு போடுங்க”, “மஞ்சள் பெட்டியைத் தேர்ந்தெடுங்கள்” என்று இளம்பிள்ளைகள்
டமாரங்களை அடித்து ஒலி எழுப்பியபடி கத்துவார்கள், அவர்களில் நல்லகண்ணுவும் ஒருவர்,
அப்போது வெறும் 12 வயது. நிலம் வைத்திருப்பவர்கள் மற்றும் பத்து ரூபாய் அல்லது அதற்கு
அதிகமாக நிலவரி செலுத்துபவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். எனவே எந்த ஒரு தொகுதியிலும்
1000 அல்லது 2000 மேல் வாக்களிக்க மாட்டார்கள்.
மூன்று
ஆண்டுகளுக்குப் பிறகு “பறையடித்து முழக்கங்களை உரத்து எழுப்பும்” தேர்தல் நடைமுறையைத்
தாண்டி அதே நல்லகண்ணு அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளார்!
“நான்
15 வயதிலிருந்து சிபிஐயில் இருக்கிறேன்” என்று கூறுகிறார் நல்லகண்ணு. அவரது நண்பர்களுக்கு
அவர் ‘தோழர் ஆர்.என்.கே’. முறையான கட்சி உறுப்பினர் முறை பின்னர்தான் வந்தது, ஆனால்
அவர் தொடர்ந்து ஆதரவு கோரியது செங்கொடிக்கு –பிற இரண்டு வண்ணங்களுக்கு அல்ல!
பிந்தைய
ஆண்டுகளில் நல்லகண்ணு சிறிய மார்பளவு சிலைகள் மற்றும் உருவ பொம்மைகளை அவரது அறையில்
வைத்திருப்பார்: மார்க்ஸ், லெனின், பெரியார். அம்பேத்கர், சுப்ரமணிய பாரதி மற்றும்
பகத்சிங், சுகதேவ், ராஜகுரு புகைப்படங்கள்.
இவை அனைத்திற்கும் அடுத்து, “குறைந்த தண்ணீரைப் பயன்படுத்துங்கள்!” என்று வேண்டியபடி
ஒரு நாட்காட்டி சுவரில் தொங்கும்.
12ம்
வயதிலிருந்தே அவரது போராட்ட ஆண்டுகளின் ஊடாகப் பாரதி பாடல்கள் அவரை உற்சாகப்படுத்தின.
“அந்தப் பாடல்களில் சிலவற்றை நான் இந்தி பண்டிதர் பலவேசம் செட்டியாரிடம் இருந்து பள்ளியில்
கற்றுக் கொண்டேன்” என்றார் அவர்.
பாரதியார் புத்தகம் ஒன்றைப், பள்ளிக்கு வந்திருந்த சுதந்திரப் போராட்ட வீரர் எஸ் சத்தியமூர்த்தியிடம் இருந்து அவர் பெற்றார். அது பாரதியின் தேசிய கீதம் என்ற கவிதைகளின் தொகுப்பு. ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சியை முதலில் வரவேற்றுப் பாராட்டியவர் அவர். மேலும் அதைப் புகழ்ந்து ஒரு பாடலும் கூடஅவர் எழுதினார் (மகாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள்…)
நல்லகண்ணு மெட்ராஸ் மாகாணத்தில் பி சீனிவாச ராவ் மற்றும் பிறருடன் சேர்ந்து விவசாயிகளின் (கிசான்) அமைப்பை அவரது 25வது வயதில் அமைத்தார். 1946ல் கட்சியின் ஜனசக்தி பத்திரிக்கைக்காகப் பணியாற்ற அவருக்குப் பணி ஒதுக்கப்பட்டபோது, அவர் தன்னை விவசாயிகள் மத்தியில் பணியாற்ற மாற்றும்படி கேட்டுக்கொண்டார்.
உப்பள உரிமையாளர்களுடன் போராடுதல்
அவரது
நகருக்கு அருகில் இருந்த உப்பளங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் பரிதாபகரமான நிலையில்
இருந்தனர். “நாங்கள் இரவு நேரத்தில் கற்களை வீசி உப்பள உரிமையாளர்களுடன் கடும் சண்டைகளில்
ஈடுபடுவோம்” என நினைவு கூர்ந்தார் நல்லகண்ணு. அது 1940களின் காலகட்டம்.
உப்பள
உரிமையாளர்களின் ஏஜெண்டுகளாகப் போலீஸ்காரர்கள் நடந்தனர். ஒரு சப்-இன்ஸ்பெக்டர்
இறந்துபட, போலீஸ்காரர்கள் நடமாடும் கண்காணிப்புக் குழுவை அமைத்து இரவும் பகலும் தொழிலாளர்களைத்
தொல்லைப்படுத்தினர். சில ஆண்டுகள் தொடர்ந்த போராட்டம், 1942 வெள்ளையனே வெளியேறு
இயக்கத்துடன் இணைந்தது.
இதற்காக
நல்லகண்ணு அவரது வீட்டில் அடிக்கடி தண்டிக்கப்பட்டார். மற்றும் சில நேரங்களில்
அவரது தந்தை அவரது பள்ளி கட்டணத்தை நிறுத்தி வைக்கவும் செய்தார்!
நல்லகண்ணு
நினைவு கூர்கிறார்: “பள்ளி கட்டணத்திற்காக அவரை நான் கேட்டால், என்னிடம் கத்துவார்:
‘உன் படிப்பை விட்டு விட்டு, வயல்களில் உன் மாமன்களுக்கு உதவி செய்!’.”
தொடக்கத்தில்
தகரத்தால் செய்யப்பட்ட ஒலிபெருக்கி கருவிகளைப் பயன்படுத்தி, பேச்சாளர்கள் ஏறி நின்று
கூட்டத்தினர் இடையே உரையாற்ற மேசை நாற்காலிகளைத் திரட்டுவது அவர்கள் வழக்கம். “காலம்
செல்லச் செல்ல நல்லதொரு மைக் மற்றும் ஒலிபெருக்கிகளைப் பெறத் தொடங்கினோம். நாங்கள்
முன்னுரிமை தந்து விரும்பிய அந்த மைக், ‘சிக்காகோ மைக்’ அல்லது சிகாகோ ரேடியோ சிஸ்டம்
ஆகும்” என்றார் ஆர் என் கே.
ராயல்
இந்தியன் நேவி (ரின்) என்ற கப்பற்படை வீரர்கள் கிளர்சிக்குப் பிறகு, 1946ல் பிரிட்டிஷ்,
கம்யூனிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தி, கிராமங்களில் இருந்த கட்சி அலுவலகங்களில்கூட
சோதனை நடத்தியது. நல்லகண்ணுவும் தோழர்களும் பல்வேறு தகவல் பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தினர்,
அவற்றில் சில நூற்றாண்டு காலப் பழமையானது. (பதினெட்டாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் எதிர்ப்புப்
போராளியான) மாவீரன் கட்டபொம்மனைப் பின்பற்றி மக்கள், வீட்டின் முன் வேம்பின் சிறு கிளைகளைச்
சொருகி வைத்தல், குழந்தையை அழச் செய்தல், பசுவின் சாணம் அல்லது காய்ந்த சாணம் (வறட்டி)
முதலியவற்றை வீட்டு நுழைவாயிலில் வைத்து, ஒரு வீட்டில் கட்சித் தோழர் இருப்பதை அல்லது
இல்லாததைப் புலப்படுத்தவும், வீட்டில் கூட்டம் நடப்பதை அல்லது ஆபத்து சூழ்ந்திருப்பதைச்
சுட்டுவதற்கு இரகசிய அடையாள, சமிக்ஞையாகப் பயன்படுத்தினர்.
மெட்ராஸ்
மாகாணத்தில் ஜமீன்தாரி முறையை ஒழிப்பதற்கான போராட்டம் முக்கியமான இயக்கம்; அந்த முறையின்
கீழ் (பரம்பரை உரிமையாக நிலம் வைத்திருக்கும்) மிராசுதாரி மற்றும் (ஆட்சியாளர்களால்
இலவசமாக அளிக்கப்படும் நிலங்களை உரிமையாக உடைய) இனாம்தாரி முறைகள் அங்கு சாதாரணம்.
ஆயிரக்கணக்கான ஏக்கர் வளமான (நஞ்சை) நிலங்கள் இந்த முறையில் பெரும் நில உடமையாளர்கள்
வசம் இருந்தது. ஜமீன்தாரி முறையை ஒழிக்கும் இந்தப் போராட்டங்களில் கம்யூனிஸ்டுகள் முன்னணியில்
இருந்தனர்.
நல்லகண்ணு
கூறினார்: “நாங்கள் தீண்டாமையை ஒழிப்பதற்காகப் போராடினோம். ஆலய நுழைவு இயக்கங்களில்
நாங்கள் தீவிரமான பங்காற்றினோம். இந்த நில உரிமை முறைகளில் நூற்றாண்டு பழமையான வழக்கமான
பிரம்மதேயம் மற்றும் தேவதானம் போன்றவைகளும் கூட இருந்தன. [பிரம்மதேயம் என்பது பிராமணர்களுக்கு
இனாமாக / வரிவிலக்கு அளித்து மன்னர்களால் வழங்கப்பட்ட நிலம் அல்லது கிராமம். தேவதானம்
என்பது கோயில்களின் பராமரிப்பு மற்றும் பணிகளுக்காக மன்னர்கள், அதிகாரிகள் அல்லது வணிகர்களால்
கோயில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும்.] பிரம்மதேயத்தின் கீழ் பிராமணர்கள்
பெரும் லாபங்களைக் குவித்தனர். தேவதானத்தின் கீழ் குத்தகைதாரர்களும் தொழிலாளர்களும்
அவர்களின் இரக்கத்தைச் சார்ந்து இருக்க வேண்டி இருந்தது, நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுவதையும்
அவர்கள் சந்தித்தனர்.
மடங்களின்
வசம் ஆறு லட்சம் ஏக்கர் நிலம் இருந்தது மக்களின் போராட்டங்கள் அவர்களின் அதிகாரத்தைக்
குறைத்தது.
1948ல்
தமிழ்நாடு ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. 1947 –49 இடைப்பட்ட ஆண்டுகளில்
கோயில் நிலங்களில் இருந்து ஏராளமானோர் வெளியேற்றப்- பட்டனர். 1948 --1960 இடைப்பட்ட
ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டங்கள் இந்தக் கோயில்கள் மற்றும் மடங்களின் அதிகாரங்களை
உடைந்து நொறுங்கியததைக் கண்டது.
ஒரு
கோயிலில் ஓர் இரவு நடந்த எதிர்ப்புப் போராட்டங்களை நல்லகண்ணு விவரிக்கிறார்: போராடிய விவசாயிகள், கோயில் தேர்த்திருவிழா
நடைபெறும்போது பெரும் வடகயிறு மூலம் கோயில் தேர் /அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை இழுத்துச்
செல்பவர்களும் ஆவர். நிலங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவது தொடரும் என்றால்
மற்றும் விதைப்பதற்கு நெல்மணிகள் கொடுக்கப்படாவிட்டால் நாங்கள் தேரை இழுக்க முடியாது
என்று மறுத்துவிட்டனர்.
தலித் மக்கள் மீது அட்டூழியங்கள்
1943ல்
தலித் தொழிலாளர்கள் இன்னும் சாட்டையால் அடிக்கப்பட்டு, பிறகு அந்தக் காயங்களின் மீது
பசுவின் சாணி கரைசல் ஊற்றப்பட்டது. எப்போது சேவல் கூவுகிறதோ அப்போதே அந்த விடியலின்
4 அல்லது 5மணிக்கு அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். மிராஸ்தார் நிலங்களில்
கால்நடைகளைக் குளிப்பாட்டி, சாணியை அகற்றி, நிலத்திற்கு நீர் பாய்ச்ச வேண்டும்.
(இந்தக் கொடுமைகள் தாங்காமல்) தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள
ஒரு கிராமத்தில் அவர்களின் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.
சீனிவாச
ராவ் மற்றும் நல்லகண்ணு தலைமை ஏற்க, அங்குக் கிசான் சபாவின் மாபெரும் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. ‘செங்கொடிகளை ஏந்திச் சென்றதற்காக மிராசுதார்களின் அடியாட்கள் தாக்குவார்கள்
எனில், அவர்களைத் திருப்பித் தாக்குங்கள்’ என்று விவசாயிகளிடம் கூறப்பட்டது. இறுதியில்
திருத்துறைப்பூண்டியில் மிராசுதார்கள் மற்றும் முதலியார்கள், சாட்டையால் அடித்துச்
சாணிப்பால் ஊற்றும் பழக்கத்தை ஒழித்த ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
பி சீனிவாச ராவ் அவர்களைத் தொடர்ந்து தமிழ்நாடு அனைத்திந்தியக் கிசான் சபாவின் தலைவராக ஆர் என் கே ஆனார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் (சிபிஐ– எம்) இணைந்த தோழர் சங்கரய்யா உடன் நல்லகண்ணு மிகவும் நெருக்கமானவர்.
நெல்லை சதி வழக்கு
1948 –50களின் பிடிஆர் குழுவாதப் போக்கு காலகட்டத்தில் சிபிஐ மிகக் கடுமையாகப்
பாதிக்கப்பட்டது; அதன் ஆயுதப் போராட்டத்திற்காகக் கம்யூனிஸ்ட் கட்சியைப் அடித்து நொறுக்க
போலீசுக்கு வாய்ப்பு அளித்தது. 1949ல் நாங்குநேரி புலியூர்குறிச்சி கிராமத்தில்
23 வயதான நல்லகண்ணு கைது செய்யப்பட்டு சிறைக் காவல் சித்திரவதைகளுக்கு ஆட்பட்டார்.
ஒரு போலீஸ் அதிகாரி பற்ற வைத்த சிகரெட் அடிக்கட்டையால் நல்லகண்ணுவின் மீசையைத் தீய்த்துப்
பொசுக்க, உதட்டின் மேல் நிரந்தர வடுவின் அடையாளம் ஏற்பட்டது: அதன் பிறகு அவரால் மீசையை
வளர்க்க முடியவில்லை. நல்லகண்ணு கூறினார்: “போலீஸ் சிகரெட்டால் பொசுக்கி எனது மீசையை
நீக்கியது. அது, கிருஷ்ணமூர்த்தி என்ற மெட்ராஸ் நகரப் போலீஸ் இன்ஸ்பெக்டரால் என் மீது
நடத்தப்பட்ட சித்திரவதைகளின் ஒரு பகுதி. நடு இரவு 2 மணிக்கு என் கைகளைக் கட்டியவர்
அடுத்த நாள் காலை 10 மணிக்குத்தான் அவிழ்த்து விட்டார் பிறகு தனது குறுந்தடியால்
என்னை நீண்ட நேரம் அடித்தார்”
இந்த நிகழ்வை நினைவு கூறிய அவரிடம் தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்பும்
இல்லை, தன்னை சித்திரவதை செய்தவர்கள் பால்
எந்தப் பகையும் அவரிடம் இல்லை.
மதுரை மத்தியச் சிறையில் கைதி எண் 9658 என்ற எண்ணுடன் இருந்த நல்லகண்ணு,
சிறைக் காவலில் சித்திரவதைகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தைக் கண்டித்துப் போராட்டங்களை நடத்திய அதே நேரத்தில் சிறைவாசிகளுக்காக இலக்கிய நிகழ்ச்சி- களையும் நடத்தினார்.1956ல்
விடுதலை செய்யப்பட்டார். நீண்ட பல நாட்கள் ஒரே சிறையறையில் அடைபட்டுக் கிடந்ததையும்,
அந்த அறையின் கதவுகள் ஒவ்வொரு காலையும் சிறிது நேரம் மட்டுமே திறந்திருந்தது என்பதையும்
அவர் நினைவு கூர்ந்தார்.
திருமணம்
நல்லகண்ணு 1958ல் ஓர் அரசு பள்ளி ஆசிரியை ரஞ்சிதம் என்பவரைத் திருமணம் செய்து
கொண்டார். அந்தப் பெண்மணி அப்போதைய திருநெல்வேலி சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் அண்ணாசாமியின் மகள் ஆவார். அவரது திருமணம் ஒரு மதக்கலப்பு திருமணம் ஆகும். ரஞ்சிதம் ஒரு கிறிஸ்தவர். நல்லகண்ணு 30 ரூபாய் மாத ஊதியத்தில் கட்சி முழு நேர ஊழியர், குடும்பத்தை மனைவி கவனித்துக் கொண்டார்.அவர்
1982ல் காலமானார் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் (ஒருவர் ஆண்டாள் மருத்துவராக
உள்ளார்; மற்றொருவர் காசி பாரதி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்)
தேர்தல்கள் மற்றும் கட்சி பொறுப்புகள்
மென்மையாகப்
பேசும் எளிய மனிதரான நல்லகண்ணு சமரசமற்ற மதச்சார்பு அரசியல் மற்றும் தனிப்பட்ட நேர்மையை
அடையாளப்படுத்துகிறார். 1967 மற்றும் 1977-இல் அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து
சட்டமன்றத்திற்கும் 1999ல் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார்.
அவற்றில் வெற்றி பெற இயலாத போதும் ஒருபோதும் அவர் வருந்தியது இல்லை. 1992 முதல்
2005 வரை தமிழ்நாடு சிபிஐ மாநிலச் செயலாளராக அவர் பணியாற்றினார்.
அவர்
2005ல் சென்னையில் ஒரு வாடகை குடியிருப்பில் எளிமையாக வாழ்ந்தார்.
அவர்
[கட்சி வழங்கிய ரூ ஒரு கோடி நிதியைக் கட்சி இடமே திரும்ப அளித்தார்; மற்றும் மாநில
அரசு 2007ல் ‘அம்பேத்கர் விருது’டன் வழங்கிய ஒரு லட்சத்தை கட்சிக்கும் விவசாய சங்கத்திற்கும்
அளித்தார்;] தமிழக அரசு 1922ல் ‘தகைசால் தமிழர் விருது’டன் அளித்த ரூபாய் 10 லட்சம்
முழுவதையும் –ஏன் அந்தத் தொகையுடன் தனது கைப்பணம் ரூபாய் 5 ஆயிரத்தை சேர்த்து– முழுவதையும்
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
சூழலியல் பாதுகாப்பதற்காக
நல்லகண்ணு
கூறுவார் : “ஆறுகள் மறையும்போது, முதலில் இழப்புக்கு ஆளாவது மிகவும் பரம ஏழைகள்”. அடியோடு
ஆற்று மணலைச் சுரண்டி எடுப்பதையும், நிலப் பரப்புகளைப் பலவீனமாக்கும் அச்சுறுத்தும்
திட்டங்களையும் உறுதியுடன் எதிர்த்தார்.
அவருக்குச்
சூழலியல் ஒரு நீதி நெறி சார்ந்த பிரச்சனை; சூழலியல் என்பதன் பொருள் நிலம் மற்றும் நீரைச்
சார்ந்து இருக்கும் சாதாரண மக்கள். வயது முதிர்ந்த நிலையிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு
அவர் பயணம் செய்து கிராமவாசிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் அக்கறையோடு
விசாரித்துக் கேட்டறிவார். அது ஒரு பொழுதுபோக்கு கவர்ச்சிகர ஆர்வம் அல்ல, ஆனால் அவருக்கு
அது ஒரு சமூக நீதிப் பிரச்சனை.
அரசியலுக்கும்
சுற்றுச்சூழல் இயக்கங்களுக்கும் இடையில் ஓர் அபூர்வ இணைப்புப் பாலம் அவர்.
சாதி பாகுபாட்டுக்கு எதிராக
இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் “ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்” அமைப்புக்கும் கூட தலைமையேற்ற
அவர், வாழ்நாள் முழுக்க தீண்டாமைக்கு எதிரான போராளியாக இருந்தார், சாதிகளைக் கடந்த
மற்றும் மதங்களைக் கடந்த கலப்புத் திருமணங்களை ஆதரித்தார்.
அவரது
மாமனார் அண்ணாசாமி 1995ல் (தலித்களுக்குத் தனி கிளாஸ் பயன்படுத்தும்) ‘இரட்டை குவளை
முறை’யை எதிர்த்து ஓர் இயக்கம் தொடங்கினார்; அந்தப் பாகுபடுத்தும் முறையைக் கண்டித்து
தானே சொந்தமாக ஒரு டீக்கடை திறந்தார். சாதிக் கலவரம் வெடித்தது, அதில் அவர் கொடூரமாகக்
கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு முன்பு நல்ல கண்ணு பாதிக்கப்பட்ட
பகுதிகளில் அமைதிப் பேரணி நடத்தினார். மாமனாரின் இறப்புக்கு அரசு அளித்த நிவாரணத் தொகையைப்
பாதிக்கப்பட்ட இரண்டு சமூகத்தினரின் குழந்தைகளை ஆதரிக்கப் பயன்படுத்தினார். அவரது ஆலோசனை
பேரில் திமுக அரசு, (சாதி மோதல்களைத் தவிர்க்க தலைவர்களின் பெயரில் இருந்த) மாவட்டங்கள்,
போக்குவரத்துக் கழகங்களுக்கு மறுபெயர் சூட்டியது.
மேனாள்
தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒருமுறை, தனக்கு “தந்தை பெரியார் ஒரு கண்
மற்றும் நல்லகண்ணு மற்றொரு கண்” என்று குறிப்பிட்டார்.
(சூழலியல்
போராளியான) அவர் 2018ல் தனது 95வது வயதில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு முன் நேரடியாக
வாதிட்டு வழக்கை வென்றார் –தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவது தடை செய்யப்பட்டது.
2019-ல்
நல்லகண்ணு மற்றும் அவரது குடும்பம், பொது வாழ்வில் அவரது பங்களிப்பை அங்கீகரித்து ஒரு
நன்றி அறியதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டை காலி செய்யும்படி கோரப்பட்டது.
பரவலாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அந்த நடவடிக்கைக்கு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
திமுக தலைவர் எம் கே ஸ்டாலின் நல்லகண்ணுக்கு மாற்று இல்லம் வழங்கப்பட வேண்டும்
என்று தெரிவித்தார்.
விருதுகள்
நல்லகண்ணு
பெற்ற விருதுகள் வருமாறு:
2007
ஆகஸ்ட் 14ல் தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து சக யோகி புரஸ்கார்
விருது; 2008 அக்டோபர் 3ல் அனைத்திந்திய மகாத்மா காந்தி சமூக நல ஃபோரம் அமைப்பிடமிருந்து
அவரது சமூகச் சேவைக்காக காந்திய விருது; அம்பேத்கர் விருது மற்றும் 2009 ஜனவரி 21ல்
மாவட்ட எழுத்தாளர்கள் அமைப்பு வழங்கிய ஜீவா விருது.
2022
சுதந்திர தினத்தில் தமிழ்நாடு அரசு ஆர் என் கே அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது
வழங்கியது. 2021ல் நிறுவப்பட்ட தமிழ்நாட்டின் அந்த ஆக உயர்ந்த விருதுடன் 10 லட்ச ரூபாய்
பண முடிப்பும் தோழர் ஆர்.என்.கே அவர்களிடம் முதலமைச்சர் எம்கே ஸ்டாலின் செயின்ட்
ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இருந்து வழங்கினார்.
திரைப்படம்
2019-ல்
சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான சமுத்திரக்கனி “அதனால்தான் அவர் நல்லகண்ணு” என்ற தலைப்பில்
ஒரு வாழ்க்கை வரலாறு திரைப்படம் தயாரித்தார்.
எழுத்தாக்கங்கள்
நல்லகண்ணு தீவிரமான வாசகர் மற்றும் ஒரு எழுத்தாளரும் கூட. உதாரணத்திற்குச்
சீனிவாசராவ் வாழ்க்கை வரலாற்று நூலையும் வேறு பல நூல்கள் மற்றும் கட்டுரைகளையும் எழுதி
உள்ளார்.
மறைவு
தோழர் ஆர் நல்லகண்ணு 2026 பிப்ரவரி 25ல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலமானார். வயது முதிர்வு மற்றும் பல உள் உறுப்புகள் செயலின்மையால்
பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகள் ஆதரவில் இருந்தார். கட்சிகளைக் கடந்து அவரது மறைவுக்கு அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்தனர். முதலமைச்சர் எம் கே ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் அவர் புகழுடம்புக்கு மலர் வளையம் வைத்து (செவ்வணக்கம் முழங்கி) அஞ்சலி செலுத்தினார். நல்லகண்ணுவுக்கு அரசு இறுதி மரியாதை அளிக்கப்பட்டது. மருத்துவ ஆய்வுக்காக அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்குத் தானம் அளிக்கப்பட்டது.ராகுல்
காந்தி நல்லகண்ணுவின் நினைவுக்கு பெரும் புகழஞ்செலி செலுத்தினர்.
அவரது
மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ”நல்லகண்ணு சமூகத்தின் அனைத்து
பிரிவு மக்களாலும் மிக உயர்வாக மதிக்கப்பட்டார். அதுபோலவே குறிப்பிடத்தக்கது அவரது
எளிமை. எனது பரிவும் இரங்கலும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு உரித்தாக்குக”
என்று கூறினார்.
நல்லகண்ணு இவ்வாறு தனது வாழ்க்கையில் லட்சியத்தை வெளிப்படுத்தினார்:
“கம்யூனிசம் சமூகத்தின் தேவை. ஒரு நாள் சமூகம் அதை ஏற்றுத் தழுவிக் கொள்ளும். ஒடுக்கப்பட்ட மக்களின் நல வாழ்வுக்காக நாம் போராடுகிறோம். நாம் எதற்காகப் போராடினோமோ அதை அவர்கள் நுகர்ந்து மகிழ்வதை காண்பதே எனது ஆகப் பெரிய சொத்து”
[சிராவயலில்
தோழர் ஜீவாவைச்
சந்தித்த காந்தி, “நீங்கள் தான் தேசத்தின் சொத்து” என்று கூறியதைப் போல
நமது தோழர் நல்லகண்ணு தேசத்தின் சொத்து. வாழ்க அவர் புகழ்!]








No comments:
Post a Comment