Monday, 23 March 2026

நியூ ஏஜ் தலையங்கம் (2026, மார்ச் 22 –28) -- ‘மாபெரும் தியாகி’ பகத்சிங்

 நியூ ஏஜ் தலையங்கம் (2026, மார்ச் 22 –28) 

‘ஷாஹித் -இ- ஆசம்’ பகத்சிங்
(‘மாபெரும் தியாகி’ பகத்சிங்)

நூற்றாண்டுக்கு ஐந்தாண்டு குறைவாக 1931 மார்ச் 23 அன்று பகத்சிங் அவரது தொடக்க இளமை காலத்தில் தியாகியாக்கப்பட்டார். காலனிய அடிமைத் தளையில் இருந்து தேசத்தை விடுதலை செய்யும் பாதையை, வெளிப்படையான புதிய கருத்துக்களுடன் பின்பற்றிய நகர்ப்புறத்து இளைஞர்களில், தனது தோழர்களுடன் ‘இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு இராணுவம்’ (HSRA) என்ற அமைப்பை உருவாக்கிய பகத்சிங் ஒருவர். பின்னர் மார்க்சியத் தத்துவச் செல்வாக்கின் கீழ் வந்தபின், அவர்கள் அமைப்பின் கடைசி சொல், இராணுவம் (ஆர்மி) என்பது ‘அசோசியேஷன்’ என மாற்றப்பட்டது.

 (உச்சபட்ச தண்டனை அளிக்கப்பட்ட வழக்கின்) விசாரணை நீதிமன்றத்தில் நடந்த போது பகத்சிங் கூறினார், “புரட்சி மனித குலத்தின் பிரிக்க முடியாத உரிமை. சுதந்திரம் அனைவருக்கும் பிறப்புரிமை. சமூகத்தைத் தாங்கி உண்மையில் இயங்கச் செய்பவர்கள் உழைப்பாளர்கள். …எந்தத் தியாகமும் ஆக அற்புதமான நோக்கத்திற்காகச் செய்வது மிகப்பெரிது அல்ல.” மேலும் புரட்சி என்பது அவருக்கு வெடிகுண்டு துப்பாக்கி கலாச்சாரம் அல்ல என்று விளக்கிய பகத்சிங் தொடர்ந்து கூறினார், “அது, இறுதியில் வெளிநாட்டு மற்றும் இந்திய முதலாளித்துவத்தைத் தூக்கி எறிந்து, உழைக்கும் பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தை நிறுவுகின்ற முழுமையான சமூக மாற்றம்.”

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரண தண்டனைக்குக் காத்துக் கொண்டிருந்த பகத்சிங், அப்போது 23 வயது தான்; நேரத்தை வீணடிக்காமல் மார்க்சியத்தை படிப்பதில் பொழுதை ஈடுபடுத்திக் கொண்டான் அந்த இளைஞன்.

பகத்சிங்கும் அவரது தோழர்களும் அதே பாதையைப் பகிர்ந்தனர், அதே கோட்பாடுகளைப் பின்பற்றினர்; உடன் அடைக்கப்பட்டு இருந்த பிற அரசியல் கைதிகள் சந்தித்த மோசமான இருள் சூழ்ந்த நிலைமைகளை மேம்படுத்த அவர்கள் இடை விடாது தொடுத்த போராட்டங்கள், குறிப்பாக வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஏறத்தாழ அவர்களை மாவீரர்கள் ஆக்கியது.

நாட்டிற்கு உள்ளேயும் நேர்மறையான நம்பிக்கை மிகவும் துடிப்புடன் இருந்தது. பாம்பே டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் மிக பிரம்மாண்டமான வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர், அது ஆறு மாதங்களுக்கு நீடித்தது. கல்கத்தாவிலும் கான்பூரிலும் கூட தொழிலாளர்கள் பாம்பே

தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். 1926ல் பகத்சிங் மற்றும் அவரது நண்பர்கள் ‘பாரத் நவஜவான் சபா’ என்ற அமைப்பைத் தொடங்கினர். வெகு விரைவிலேயே அந்தச் சபா  வலிமை பொருந்திய அமைப்புகளில் ஒன்றானது –பஞ்சாபில் இருந்த இளைஞர்களைத் தீவிரப் படுத்துவதில் அது முக்கிய பங்காற்றியது. பகத்சிங் சில காலம் ‘கீர்த்தி’ (Kirti) பத்திரிக்கை ஆசிரியர் குழுவினரோடு ஈடுபட்டார். சோஹன் சிங் ஜோஷ் அவர்களால் நடத்தப்பட்ட அந்தப் புரட்சிகரப் பஞ்சாபியப் பத்திரிக்கை ஒரு சோசலிச இதழாகும்.

விரைவில் HSRA  அமைப்பு மறு சீரமைக்கப்பட்டது, அவரது முக்கிய நோக்கம் நாட்டை 

விடுவித்து ஒரு சோசலிச அரசை அமைப்பதாகும். இதில் முக்கியமான பிரச்சனை விடுதலை மற்றும் சோசலிசத்திற்கு எப்படிப் போராட்டத்தைத் தொடுப்பது். சோசலிசம் அவர்களது லட்சியம். பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த பலரும் அவர்களின் அந்த நோக்கத்தில் வந்து இணைந்தார்கள். அஜாய் கோஷ் அவர்களில் ஒருவர், அவர் பின்னர் சிபிஐ பொதுச் செயலாளர் ஆனார். 


 சூழ்ந்திருந்த இருளின் அடர்த்தி மெல்ல விலகி அதன்  விளிம்புகளில் வாய்ப்பின் வெளிச்சம் மின்னியது. மக்கள் போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டனர். அங்கங்கே இளைஞர் லீக் அமைப்புகள் தொடங்கப்பட்டன, தொழிலாளர் வர்க்கம் பெரும் கிளர்ச்சியைத் தொடங்குவதில் மும்முரமாக இருந்தது. அடுத்து விரைவில் கம்யூனிஸ்டுகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களைக் கைது செய்ய வாரண்டுகள் வந்தன. 

அலகாபாத் பல்கலைக்கழக மாணவரும் இளைஞர் வீக் அமைப்பின் தலைவருமான பிசி ஜோஷி கைது செய்யப்பட்டார். அதன் விளைவாய் மாணவர்கள்   ஓர் அணியாய்த் திரண்டுத் தீவிரக் கண்டனப் போராட்டத்தில் இறங்கினர், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் பல்கிப் பெருகின.

விரைவில் அந்தத் தருணமும் வந்தது, பகத்சிங்கும் தோழர்களும் தாங்கள் கம்யூனிஸ்களுடன் இணைந்து அவர்களுடன் செயல்பாட்டு ரீதியில் கூட்டுச் சேர்ந்து பணியாற்ற முடியும் என உணர்ந்தனர். வேறுபாடுகள் இருந்த போதிலும், ஒன்றுபட்ட தன்மைகள் குறித்து அவர்களிடம் விழிப்புணர்வு இருந்தது. இருவரும் ஏகதிபத்தியத்திற்கு எதிராக இருந்தனர், சோசலிசத்தை நோக்கி நகரும் இலட்சியத்தைத் தங்களின் இறுதி நோக்கமாகப்  பின்பற்றினர்.

 இதில் HSRA அமைப்பும் கம்யூனிஸ்டுகளும் ஒன்று. கம்யூனிஸ்டுகளைக் கைது செய்வது தங்களுக்கும் கூட ஓர் அச்சுறுத்தல் என்று இப்புரட்சிகரப் பிரிவுகளால் கருதப்பட்டது. எதிர்ப்பைத் தொடங்குவது என அவர்கள் தீர்மானித்தனர், அது மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் முழுமையான ஏகாதிபத்திய கொள்கைக்கு  எதிரானது.

தொழில் தகராறு மசோதாவை நிறைவேற்றியது அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்று. அதை எதிர்ப்பதற்காக அதனை விளக்கி ஒரு சுற்றறிக்கையை விநியோகிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. நாடு முழுவதன் கவனத்தை ஈர்க்க சட்டமன்ற மத்திய  ஹாலில் ஒரு வெடிகுண்டை வெடிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. வெடிகுண்டை வீசுவது யாரையும் கொல்வதற்காக அல்ல; மாறாகச் செய்தியைப் பிரகடனம் செய்து –பகத்சிங்கின் தோழர் பட்டுகேஷ்வர் தத் உடன் இந்த முழு நடவடிக்கைக்கும் பொறுப்பேற்று– பின்னர், பகத்சிங் எழுதிய விளக்க அறிக்கையைச் சட்டமன்றத்தில் விநியோகிப்பது என்பது திட்டம். 

குண்டு வெடிப்புக்குப் பின் அங்கு ஒரே குழப்பம்  ஒவ்வொருவரும் அவையைவிட்டு வெளியேறினர். துண்டுப் பிரசுரங்கள் சுற்றிலும் சிதற விடப்பட வேண்டியதாயிற்று. அது பகத்சிங்கால் அவரே எழுதிய அறிக்கை, அதில் அவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்றனர். பகத்சிங்கும் பட்டுகேஸ்வர் தத்தும் அந்த இடத்திலிருந்தே கைது செய்யப்பட்டனர்.

1929ல் லாகூர் சதி வழக்கு தொடங்கியபோது, பகத்சிங் மற்றும் தோழர்களுக்கு விசாரணையைப் புரட்சிகரப்  பயன்பாட்டாக்க வேண்டும் என்பது தெளிவானது. எப்போதெல்லாம் அத்தகைய வாய்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம் பிரிட்டிஷ் அரசு அம்பலப்படுத்தப்பட வேண்டும். மற்றும் அதனைப் புரட்சியாளர்களின் வெல்ல முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

‘நாங்கள்’ சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து பாடுபடுவோம், மக்களை எழுச்சி பெறச் செய்து கொண்டே இருப்போம் என்று அவர் கூறினார். புதிய தலைமை எழுவதற்கான அடிப்படையை ஏற்படுத்தும் உதாரணத்தை அவர்களின் தலைமுறை படைப்பதாக இந்தப் புரட்சியாளர்கள் நம்பினார். சோசலிசம் அவர்களுக்கு ஒரு லட்சியம், அவர்களை வழிநடத்தும் கோட்பாடு, இந்தியா விடுதலை பெற்ற பிறகு சமூகத்தை மறு கட்டமைப்பு செய்வது.

பகத்சிங் தீவிரமான வாசகர் குறிப்பாகச் சோசலிச நூல்கள்; மற்றும் ஒருக்கால் அந்தக் குழுவினர் மத்தியில் சோசலிசத்தின் பால் ஈர்க்கப்பட்ட முதலாமவர் அவர். சிறைக்கு வெளியே

நடக்கும், சோலாப்பூர் எழுச்சி, பெஷாவர் கிளர்ச்சி, சந்திராசிங் கார்வாலி தலைமையில் கார்வாலி வீரர்களின் துணிச்சலான நிலைபாடு போன்ற எல்லா முக்கிய நிகழ்வுகளையும் அவர் அறிந்திருந்தார். அவரது விசாரணையின்போது நீதிமன்றத்தில் அவர் கூறினார்: “எங்களது போராட்டம், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் அடிப்படையிலானது அல்ல; மாறாக, எங்கு ஒவ்வொருவரும் அவரவர் அடிப்படை தேவையைப்  பூர்த்தி செய்யப் போதுமானவைகளைப் பெற்ற ஒரு சமூக மாற்றத்தின் மீது –சுருக்கமாகச் சோசலிசத்தின் பால் – அடிப்படையாகக் கொண்டது எங்கள் போராட்டம்”

ஏராளமான நூல்களை, குறிப்பாகச் சிறையில், படித்த படிப்பு,  அவர்களின் பார்வையை விரிவாக்க உதவியது. எப்போதும் அவர்கள் சோவியத் யூனியனை வியந்து போற்றிப்

புகழ்ந்தனர்; 1930 நவம்பர் புரட்சி நாளின்போது (அவர்கள் அதை அக்டோபர் புரட்சி என்று அழைத்தனர்) சோவியத் யூனியனுக்கு, அதன் வெற்றிகளைப் புகழ்ந்து வாழ்த்துச் செய்தி அனுப்பினர்; மற்றும் அதன் எல்லா பகைவர்களுக்கும் எதிராக அவர்களுக்கு ஆதரவாக  இருப்போம் எனவும் உறுதியும் கூறினர்.

1931 மார்ச் 23 அன்று, காங்கிரஸின் கராச்சி அமர்வு நடப்பதற்கு சற்று முன், பகத்சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை (தூக்கு தண்டனை) நிறைவேற்றப்பட்டது. மாபெரும் தியாகி பகத்சிங்குக்கு அப்போது வயது வெறும் 24.

            வாழ்க சாஹித் -இ- ஆசம் பகத்சிங்

இன்குலாப் ஜிந்தாபாத்!

–தமிழில் : நீலகண்டன், 
என்எப்டிஇ, கடலூர்.

   

   

No comments:

Post a Comment