Saturday, 7 March 2026

சர்வதேசப் பெண்கள் தினம் -- பெண்கள் நாம் அணி திரள்வோம்

 மகளிர்தின சிறப்புக் கட்டுரை

வன்முறைக்கு எதிராகவும், உரிமைகள், நீதி,  
உலக அமைதிக்காகவும்

பெண்கள் ஒன்று திரள வேண்டும்

--டாக்டர் பி வி விஜயலெட்சுமி

        ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, டெக்ஸ்டைல் மில்களில் பணியாற்றிய பெண் தொழிலாளர்கள், “வேலை நேரத்தை வரையறுத்திடுக“ கோரிக்கையுடன் உறைய வைக்கும் (அமெரிக்க நியூயார்க் நகரின்) மன்ஹாட்டன் வீதிகளில் இறங்கியது உலகை உலுக்கியது. பசித்த வயிறுடன் சுரண்டப்பட்ட அவர்கள் உழைக்கும் வர்க்கப் பெண்கள் –பொருளாதார, சமூக நீதியில்லாமல் கண்ணியமான வாழ்க்கை இருக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டவர்கள். இன்று நாம் ‘சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம்’ அனுசரிப்பதற்கு அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வேலைநிறுத்தம் அடித்தளம் அமைத்தது. அதற்கு முந்தைய கிளாரா ஜெட்கின் போன்ற சோஷலிசத் தலைவர்களால் ஊக்கம் பெற்றும், ஐரோப்பா முழுவதும், ஆசியா மற்றும் அமெரிக்காவில் உள்ள பெண்களால் நிறைவேற்றப்பட்டும், வர்க்கப் போராட்டம், வாக்குரிமை கோரிய இயக்கங்கள் மற்றும் தொழிலாளர் வர்க்க பெண்கள் கூட்டுச் சக்தியில் மார்ச் 8, பெண்கள் தினம் பிறந்தது. இன்று சர்வ தேசியப் பெண்கள் தினத்தை நாம் அதன் வரலாற்று வேர்களுக்குத் திரும்பச் சென்று அடையாளப் படுத்துவோம் : பெண்கள் நாளை, விழா கொண்டாட்டச் சடங்குகளால் அல்ல, மாறாகப் போராட்டத்திற்கான அறைகூவலாக அனுசரிப்போம்! வன்முறைக்கு எதிராகவும், உரிமைகள், நீதி, உலக அமைதிக்காகவும் பெண்கள் நாம் ஒன்றிணைவோம்!

வாக்குரிமையிலிருந்து சோஷலிசத்திற்கு

    உலகப் பெண்கள் தினம் அறக் கொடையிலிருந்து அல்லது கருணையிலிருந்து உருவாகவில்லை. அது ஆலைத் தளங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சோஷலிச மாநாடுகளிலிருந்து உருவானது. பெண்கள், வாக்களிக்கும் உரிமை, சம ஊதியம், குறைந்த வரையறுக்கப்பட்ட வேலை நேரம், மகப்பேறு பாதுகாப்பு வசதிகள், போருக்குப் பதிலாக அமைதி போன்ற கோரிக்கைகளை எழுப்பினர். வாக்குரிமை மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்கான இயக்கங்கள், 1908ல் நியூயார்க் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திலிருந்து கோபன்ஹேகனில் சோஷலிசப் பெண்கள் மாநாடுகள் வரையான நிகழ்வுகளிலிருந்து பிரிக்க முடியாதவை. பரிசாக வழங்கப்பட்டதால் அல்ல, மாறாகப் பலநாடுகளில் வாக்குரிமையைப் பெண்கள் வென்றதற்குக் காரணம், அவர்கள் ஓர் அமைப்பாக ஒன்று திரண்டு, பேரணிகள் நடத்தி, வேலையை நிறுத்தியதால்தான் அது சாத்தியமானது. மார்ச் 8ஐ ஐக்கிய நாடுகள் சபை 1975ல் சர்தேசப் பெண்கள் ஆண்டாக அங்கீகரித்தது, உழைக்கும் வர்க்கப் பெண்கள் ஏற்கனவே வரலாற்றுப் புகழ்பெற்றதாகச் சாதித்தவைகளை நிறுவனப்படுத்தியது. ஆனால் எப்போதும் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும், உரிமைகள் ஆளும் வர்க்கங்களால் வழங்கப்படுபவை அல்ல, மாறாக அவர்களிடமிருந்து நாம் கைப்பற்றுவதே உரிமைகள்.

இந்தியா : வர்க்கப் போராட்டத்தின் முன்னணிப் படையில் பெண்கள்

சரித்திரத்தில் பெண்கள் செயல்பாடின்றி வெறும் பார்வையாளர்களாக இந்தியாவில் கலந்து கொண்டவர்கள் இல்லை. அவர்கள் பிரிட்டிஷுக்கு எதிராகக் காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில், தெலுங்கானா ஆயுதப் போராட்டம் மற்றும் (குத்தகைதாரர்கள் நில உரிமையாயர்களுக்குத் தர வேண்டிய பங்கை ‘மூன்றில் ஒரு பங்கு’ என குறைப்பதற்கு வங்கத்தில் கிசான் சபையால் நடத்தப்பட்ட) தேபகா போராட்டங்கள் மற்றும் விவசாய எழுச்சிகளிலும் ஆண்களுடன் தோளோடு தோள் இணைந்து நின்றவர்கள். விவசாய உழைப்பாளியிலிருந்து ஆலைத் தொழிலாளர் வரை; அங்கன்வாடி பணியாளர்களிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் வரை உழைக்கும் பெண்களின் உரிமைகளைத் தொடர்ச்சியாகப் பெண்கள் முன்னிலைப்படுத்தினர். ஆனால் எதார்த்த உண்மை இன்று அப்பட்டமாக உள்ளது.

இந்தியாவின் உழைக்கும் சக்தியில் குறைந்தபட்சம் 93 சதவீதம் அமைப்புசாரா பிரிவுகளில் பணியாற்றுகின்றனர். இந்த அமைப்புசாரா தொழிலாளர்களில் பாதிபேர் பெண்கள். இந்தப் பெண்கள் வயல்களில், கட்டுமானத் தளங்களில், வீட்டு வேலைகளில், ஜவுளித் தொழில் பிரிவுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், நலவாழ்வு திட்டப்பணிகளில் பங்கேற்று நமது இந்திய நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுகின்றனர் – இருப்பினும் கொள்கை சார்ந்த முன்னுரிமைகளில் அவர்கள் கண்ணுக்குப் புலனாவதில்லை

தொழிலாளர் குறுங்குறி தொகுப்புகள் : சீர்திருத்தமா அல்லது பின்னடைவா?

      இதுவரை நடைமுறையில் இருந்த தொழிலாளர் நலச் சட்டங்கள் நான்கு தொழிலாளர் தொகுதிகளாக (லேபர் கோடு) –தொழில் உறவுகள் தொகுப்பு 2020, சம்பளம் குறித்த தொகுப்பு

2019, தொழில் சார்ந்த பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் தொகுப்பு 2020 மற்றும் சமூகப் பாதுகாப்பு தொகுப்பு 2020 என –தொகுக்கப்பட்டுள்ளன. (முந்தைய நலச் சட்டங்களை ரத்து செய்து) இப்படித் தொகுத்ததை, “தொழில் நடத்துவதைச் சுலபமாக்குதல்” (“Ease of Doing Business”) என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால் யாருக்குச் சுலபமாக்குவது மற்றும் அதற்கு என்ன விலை தருவது? என்பது முக்கியமான கேள்வி. இதில் பெண் தொழிலாளர்களுக்கான கவலைகள் ஆழமானவையும் கடுமையானவையும் ஆகும்.

        முதலில் அனைவருக்குமான மகப்பேறு சலுகை வசதிகள் பெறும் தகுதி இல்லை. முந்தைய மகப்பேறு நன்மைகள் சட்டம் 1961 சில நிறுவனங்களில் பெண்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஊதியத்துடன் மகப்பேறு விடுமுறையை வழங்கியது. புதிய சட்ட ஆளுகையின் கீழ், அரசால் நிதியளிக்கப்படும்  மகப்பேறு வசதிகள் அனைத்து உழைக்கும் பெண்களையும், குறிப்பாக முறைசாரா அல்லது ஒப்பந்தப் பணியில் இருக்கும் பெண்களை உள்ளடக்கியதாக உறுதியளிக்கப்படவில்லை. இன்று முக்கிய துறைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் தனியார் பிரிவு தொழில்நிபுணர்களும் கூட குறைந்த கால ஒப்பந்தத்தில் நியமிக்கப்படுகிறார்கள். இந்தப் பெண் பணியாளர்களில் பலரும் கொடூரமான தேர்வைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தைச் சந்திக்கின்றனர்: ‘மகப்பேறு விடுமுறை எடுங்கள், பணி ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத ஆபத்தை அனுபவியுங்கள்‘; அல்லது ’பணியில் நீடிக்க வேண்டுமானால், குழந்தை பிறந்த உடனே பணிக்குத் திரும்புங்கள்’. அவர்களுக்கு எந்தப் பணி பாதுகாப்பும் இல்லை. நீட்டிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட கால பணியுடன் (ஃபிக்சட் டேர்ம் எம்ப்ளாய்மெண்ட்), ஆட்குறைப்பு செய்வதற்கான அனுமதிக்கு (முந்தைய 100 பணியாளர்கள் வரை என்ற உச்சவரம்பு 300 பேர் வரை என) தகுதி உச்சவரம்பு உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டதால், முதலாளிகள் (சட்டப்படியான) நீண்டகால கடப்பாடுகளைத் தவிர்க்க முடிகிறது. ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமை என்பது தற்போது வேலைநீக்கத்திற்கு மாற்றாகி உள்ளது. கர்பிணிகள் அல்லது மணமான பெண்களின் ஒப்பந்தம் வெகு சாதாரணமாகத் தற்போது புதுப்பிக்கப்படுவதில்லை.

ஊதியம் மற்றும் மிகுதி நேரப்படி எளிதில் பாதிக்கப்படுதல்  

    பணி நேரம் நீட்டிக்கப்படுவது சாதாரணமாக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் தொழிலாளர்கள் பலரும் நீண்ட பணி ஷிப்டுகளில், அதற்கேற்ப மிகுதிநேரப்படி ஈடு வழங்கப்படாது, பணிக்கு வருகின்றனர். சேவைகால இறுதிப் பயன்கள் அரிக்கப்படுகிறது; குறைந்த காலத்திற்கான ஒப்பந்தத்தின் கீழ், துண்டு துண்டாக்கப்பட்ட சேவைக் காலம் ஊழியரின் பணிக்கொடை, பிராவிடெண்ட் ஃபண்டு மற்றும் ஆட்குறைப்பு நட்டஈடு முதலயவற்றை நிச்சயமற்றதாக்கி விட்டது.

தொழிலாளர் கண்காணிப்பு அதிகாரியால் (லேபர் இன்ஸ்பெக்டர்) சட்டங்கள் பின்ற்றப்படுவதைக் கண்காணித்துத் தொழில் நிறுவனங்களில் ஆய்வு நடத்தும் பாரம்பரிய அமலாக்க முறை தற்போது “ஆய்வாளர் மற்றும் வழிகாட்டுநர்” (இன்ஸ்பெக்டர் -கம் – ஃபெசிலிடேட்டர்) முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆய்வில் தவறு கண்டுபிடிககப்பட்டால் தண்டனை என்பதற்கு மாறாக, ஆய்வு ஆலோசனை வழங்கும் அமைப்பாகி உள்ளது, சட்டத்திற்கு இணங்கி நடப்பதைப் பலவீனப்படுத்தியுள்ளது. பெண் தொழிலாளர்களைப் பொருத்தவரை இதன் பொருள், ‘உரிமைகள் காகிதத்தில், ஆனால் பாதுகாப்பின்மை நடைமுறையில்’ என்பதேயாகும். இது தொழிலாளர் சீர்திருத்தம் அல்ல, மாறாகத் தொழிலாளர் வர்க்கத்தைப் பலி கொடுத்துத் தொழில் நடத்துவதை எளிமையாக்குவதாம். பாலின இடைவெளி மற்றும் மனித மேம்பாட்டுக்குச் சமத்துவமின்மையே உண்மையான அச்சுறுத்தல். இந்தியாவின் வளர்ச்சிக் கதை அதன் பாலினச் சமத்துவமின்மைகளை மறைக்க முடியாது. ஐநா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (UNDP) 2023 –24ம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, இந்தியாவின் மனித வளர்ச்சிக் குறியீடு (HDI) 0.644 புள்ளிகளுடன் 193 நாடுகள் பட்டியலில் 134வது இடம்.

UNDPன் ’பாலினச் சமத்துவமின்மை குறியீட்டில்’ 193 நாடுகள் பட்டியலில் இந்தியா 108வது இடம். உலகப் பொருளாதார ஃபோரத்தின் ‘உலகப் பாலின இடைவெளி குறியீட்டில்’ 2025ம் ஆண்டில் 148 நாடுகள் பட்டியலில் இந்தியா 131வது இடம்; அதன் பொருள், இந்தியா பாலினச் சமத்துவத்தைச் சுமார் 64 சதவீதம் மட்டுமே சாதித்துள்ளது. உழைப்புச் சந்தையில் பெண்களின் உழைப்புச் சக்தி பங்கேற்பு ஆண்களைவிட தீடீரென்று குறிப்பிடத்தக்க அளவு மிகக் குறைவாகியுள்ளது – இது பொருளாதாரக் கட்டமைப்பில் பெண்கள் விலக்கப்படுதலைப் பிரதிபலிக்கிறது. பாலின நீதி இல்லாதப் பொருளாதார வளர்ச்சி என்பது முழுமைபெறாத வளர்ச்சி மட்டுமே.

[மேலே உள்ளப் பத்தியில் இரண்டு குறியீடுகள் ஒன்றுபோலத் தோன்றினாலும் இரண்டும் தனித்தன்மை வாய்ந்தன. பாலினச் சமத்துவமின்மைக் குறியீடு (GII, ஜென்டர் இனிக்குவாலிடி இன்டெக்ஸ்) ஐநா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வெளியிடப்படுவது. இது பாலினச் சமத்துவமின்மை காரணமாக மனித மேம்பாட்டில் விளையும் நட்டத்தை அளவிடுகிறது. பூஜ்யம் புள்ளி சமத்துவத்தையும், 1 புள்ளி கூடுதல் சமத்துவமின்மையைக் குறிக்கும். இதில் மகப்பேறு பிரசவகால இறப்பு விகிதம் மற்றும் இளம் பருவ கருவுறுதல் ஆகிய இனப் பெருக்கச் சுகாதாரம் மற்றும் (நாடாளுமன்ற சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடங்கள் மற்றும் கல்வி வாய்ப்பு ஆகிய) பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்கு முக்கிய இடம் பெறுகிறது.

 உலகப் பாலின இடைவெளி குறியீடு (GGGI) உலகப் பொருளாதார ஃபோரத்தால் வெளியிடப்படுவது. இதன் நோக்கம் நான்கு முக்கிய பிரிவுகளில் பாலினச் சமத்துவத்தை அடைவதில் தேசிய முன்னேற்றத்தை அளவிடுவது. அவை பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்பு; கல்வித் தகுதி அடைவது; சுகாதாரம் மற்றும் உயிர்வாழ்தல்; மற்றும் அரசியலில் அதிகாரப்படுத்தல்  ஆகிய பிரிவுகள்.இடைவெளி அடைக்கப்பட்ட சதவீதத்தை அதிகபட்சம் 1 புள்ளி சமத்துவத்தையும், பூஜ்யம் என்பது முழுமையான இடைவெளியையும் குறிக்கிறது. பொதுவாக இந்தக் குறியடு பெண்களின் திறனை நாடுகள் பயன்படுத்தும் வளர்ச்சிப் போக்கைப் படம் பிடிக்கிறது. –மொழிபெயர்ப்பாளர் கூடுதல் இணைப்பு]

நீதி மறுக்கப்பட்டது : பிரத்யுஷா வழக்கு

     பலநேரங்களில் இந்தியாவில் நீதி பரிபாலனம் நகரும் வேகம் காயத்தை இன்னும் ஆழப்படுத்துகிறது. 2002ல் ஆந்திர இளம் (டாலிவுட்) நடிகை பிரத்யுஷா பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டது தேசத்தை அதிர்ச்சி அடையச் செய்தது. இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவரை இறுதியில் விசாரணைக்கு வரவழைந்துச் சரணடையச் செய்தது 24 ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே நடந்தது. 20ஆண்டுகளுக்கும் மேலாக குற்றம் சாட்டப்பட்டவர் அவரது வாழ்வின் இளமையான முக்கிய காலத்தை இயல்பாகவே வாழ்ந்தார். பாதிக்கப்பட்ட நடிகை குடும்பமோ துக்கத்திலும், நீதிமன்றத் தேதிகளிலும், வழக்கு தள்ளிவைத்தல்களிலும், விடையளிக்கப்படாத கேள்விகளிலும் வாழ்ந்து வந்தது. ஒரு தலைமுறையைத் தாண்டி தாமதமாக வந்த தீர்ப்பு என்பதன் பொருள் என்ன நீதியோ? இத்தகைய வன்முறைகளைச் சந்திக்கும் எண்ணிறைந்த பெண்களுக்குத் தாமதிக்கப்படும் நீதி, அநீதியையும் சேர்ந்தே வழங்கப்படுவதாகும்

1975 : சர்வதேசப் பெண்கள் ஆண்டு மற்றும் 50வது ஆண்டில் ICDS திட்டம்

          1975ல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேசப் பெண்கள் ஆண்டைப் பிரகடனம் செய்தபோது இந்தியா, (மகப்பேறு காலத்தில் /பிரசவத்தின்போது அல்லது பிரசவத்துக்குப் பிறகு 42 நாள்களில் தாய் இறக்க நேரிடும்) மகப்பேறு மரணம் மற்றும் (ஒரு வயதுக்குள் பிறந்த குழந்தை

இறக்கும்) சிசு மரணத்தைக் குறைக்க ‘ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்ட’த்தை (ICDS) அறிவித்தது. இன்று 50 ஆண்டுகளுக்குப் பின் ICDS திட்டம், குழந்தை ஊட்டச்சத்து மற்றும் உயிர் பிழைத்து வாழ்தலில் குறிப்பிடத்தக்க மேம்டுபாடுகள் ஏற்பட பங்களிப்புச் செய்தது. பல பத்தாண்டுகளில், குறிப்பிடத்தக்கஅளவு மகப்பேறு மரண விகிதம் (Infant Mortality Rate) சரிந்தது; சிசு மரண விகிதம் பெருமளவு குறைந்தது. இருப்பினும் ICDS திட்டமாகத் தொடர்கிறதே தவிர, அனைவருக்குமானதாக மற்றும் உரிமைகள் அடிப்படையிலான உரிமைத் தகுதியாக நிரந்தரம் ஆக்கப்படவில்லை.

            தொழிலாளர் பாதுகாப்பற்ற மோசமான நிலைமையை எதிர்த்துப் போராடும் உழைக்கும் பெண்களிலிருந்து ஊட்டச் சத்து மற்றும் சுகாதார வசதிகள் கோரும் தாய்மார் வரை; வன்முறை மற்றும் பாலின வன்புணர்வில் தப்பியவர்கள் நீதி வேண்டி நிற்பதிலிருந்து போரை எதிர்க்கும் சமூகங்கள் வரை, நமது போராட்டங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று உள்இணைந்த தொடர்புள்ளவை. தொழிலாளர் உரிமைகளை நீர்த்துப் போவதற்கு எதிராக அந்த உரிமைகளைப் பாதுகாக்க நமது பற்றுறுதிப்பாட்டை நாம் மீண்டும் உறுதி செய்வோம். அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் மகப்பேறு கால வசதிகள் மற்றும் சமூக பாதுகாப்பைக் கோரவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைவான நீதியை உறுதி செய்யவும், நலவாழ்வு திட்டங்களை உறுதியளிக்கப்பட்ட உரிமைகளாக மாற்றுவதற்கும், ஏகாதிபத்தியப் போர்களை எதிர்த்து உலக அமைதிககாக நிற்கவும் நாம் உறுதி ஏற்போம். ஒரு நூற்றாண்டிற்கு முன்பு பெண்கள் அனுமதிக்காகக் காத்திருக்கவில்லை. அவர்கள் பேரணியாகச் சென்றார்கள், சரித்திரம் மாறியது.

            நாமும் அந்த அதே உணர்வுடன் மீண்டும் எழுவோம்!

                            என பாரதியின் புதுமைப் பெண்களாக நாம் மீண்டும் எழுவோம்!

அனைவருக்கும் சர்வதேசப் பெண்கள் தின புரட்சிகர வாழ்த்துகள்!

--நன்றி : நியூஏஜ் (2026, மார்ச் 8 –14)

                 --தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment