நியூஏஜ் தலையங்கம் (மார்ச் 8 –14)
ஆர் நல்லகண்ணு – வெல்லற்கரிய தலைவர்
அது, தனது
தகுதியை இன்னும் நிரூபிக்க வேண்டிய 23 வயதிலான இளைஞர் ஒருவரைக் குறித்துப் புகழ்பெற்ற
விவசாயிகளின் தலைவர் பி
சீனுவாச ராவ் கூறியது,
“… நல்ல உடற்கட்டுடன், கிராமத்தில்
வளர்ந்த நல்லகண்ணு அசாதாரணமான கட்சி ஊழியராக வருங்காலத்தில் உருவாவார்“. வருவதை முன்னுணர்ந்து உரைத்த அவரது தீர்க்கதரிசனமான வார்த்தைகள்
காலச் சூழல் மாற்றங்களை எல்லாம் கடந்து நின்றன. ஒரு நூற்றாண்டுக்குச் சற்று கூடுதலாக
வாழ்ந்த தோழர் நல்லகண்ணு, கொள்கையில் ஒரு போதும் சமரசம் செய்ததில்லை. 18 வயதில் அவர்
தேர்ந்தெடுத்த வாழ்க்கை, உள்ளும் புறமுமாக முழுவதும் சவால்கள் நிறைந்ததாயினும், தளராத
மன ஊக்கம் உடையவராக அவர் தொடர்ந்து விளங்கினார். கட்சியுடன் அவரும் பிறந்தார், வாழ்ந்தார்,
கட்சி ஒரு நூற்றாண்டை நிறைவு செய்ய இறுதியில் (2026, பிப்.25ல்) விடைபெற்று மறைந்தார்.
1925
டிசம்பர் 26ல் தூத்துக்குடிக்கு அருகில் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில்
இராமசாமி மற்றும் கருப்பாயி அம்மாள்
தம்பதியருக்கு மகனாக நல்லகண்ணு பிறந்தார்;
எப்போதும் அநீதிக்கு எதிராகப் போராடும் இளைஞராக வளர்க்கப்பட்டார். கட்சியில் 80 ஆண்டுகளுக்கும்
மேலான அவரது வாழ்க்கை, பிரிட்டிஷ் காலனியவாதிகள் அடிமைப்படுத்தி இருந்த தேசத்தில் ஜனநாயகத்தை
நிறுவும் விருப்பத்தைப் போராடி வலிமைப்படுத்துவதில் செலவிடப்பட்டது. அவரது எதிர்காலத்
திட்டத்தில் விஞ்ஞான சோஷலிசம் இறுதி லட்சியமானது. தடைகள் பல இருந்த நிலையில் அது நேர்கோட்டில்
அமையாது, நிலப்பிரபுத்துவ மற்றும் காலனிய அட்டூழியங்களை எதிர்த்த எழுச்சிகள் ஊடாகவும்,
மற்றும் இறுதியில் வலதுசாரி சக்திகளுக்கு எதிராகவும் நகர்ந்தது. ஏகாதிபத்தியச் சக்திகளுடன்
சமசரம் செய்து கொண்ட எதிரிகளான அவர்கள் சவால் மிக்கவர்களாக இருந்தனர். அவர் சமூக மற்றும்
பொருளாதாரச் சமத்துவமின்மை குறித்த விழிப்புணர்வு பெற்று இளமையிலேயே பொது வாழக்கையில்
இணைந்தார். அரசியல் சுதந்திரம் மூலம் மட்டும் சமூகத்தில் சமத்துவமின்மையை ஒழித்துவிடப்
போதுமானதில்லை என்பதை அவர் வெகு இளமையிலேயே
உணர்ந்தார். சமூகத்தில் சாதிய முறை ஆழமாகப் புரையோடியிருந்தது; சமூகத்தில் பெரும்பான்மை
மக்கள் அதற்கு எதிரான போராட்டத்தில் இணைந்தால் மட்டுமே அதை வேரோடும் வேரடி மண்ணோடும்
அகற்ற முடியும்.
நல்லகண்ணு விரைவில் வஉ சிதம்பரம் பிள்ளை மற்றும் சுப்பிரமணிய பாரதியின் சுதேசி லட்சியங்கள்பால் ஈர்க்கப்பட்டார். இறுதியில் அவர் மார்க்சியத்தை ஏற்க முடிவு
செய்தார்.மேலும் வர்க்க சத்திகளான, நாளெல்லாம் உழைத்துக் களைத்து உழலும், விவசாயத் தொழிலாளிகள், ஏழை மற்றும் விளிம்புநிலை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் முதலில் ஒன்று திரட்டப்பட வேண்டும் என்பதையும் அவர் உணர்ந்தார். அந்தக் காலக்கட்டம், திரு வி கல்யாணசுந்தரம் (திருவிக)தலைமையிலான தொழிற்சங்க இயக்கத்தின் தொடக்கக் கட்டமும் ஆகும். (ஆளுமையை, வாழ்க்கை இலட்சியத்தை உருவாக்கிய) இந்தச் செயல்பாடுகளில் தூத்துக்குடி ஹார்வி மில்லில் தொடக்க கால தொழிற் சங்கங்கள் அமைக்கப்பட்டது முதலியன அடங்கும்.நல்லகண்ணு நேரத்தை வீணடிக்காது அவர்கள் மத்தியில் பணியாற்றத் தொடங்கினார். அவர் தென்மாவட்டங்களையும் இணைத்துக் கொண்டார். அவரது செயல் திட்டம் மீண்டும் நிலங்களைப் பகிர்ந்தளித்தல், குறைந்தபட்ச கூலி கோரிக்கைகளை எழுப்பி இறுதியில்
நிலப்பிரபுத்துவச் சுரண்டல் வழக்கங்களுக்கு முடிவு கட்டுவது. அவர், சகஜானந்த சரஸ்வதியும் மற்றவர்களும் நிறுவிய கிசான் சபா எடுத்த நடவடிக்கைகளைப் பின்பற்றி பணியாற்றினார். அவர்களின் “உழுபவர்களுக்கே நிலம் சொந்தம்“ என்ற மையமான கோரிக்கை, அவர்கள் பிரச்சார இயக்கங்களுக்கு முதன்மை முழக்கமானது. முன்னோக்கிய ஒவ்வொரு அடியுடன், வர்க்க உணர்வு குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டள.அக்கால கட்டம் கம்யூனிசச் செல்வாக்கு வலிமை பெறத் தொடங்கிய தருணமும் ஆகும். அரசு அதிகார அமைப்பு அது குறித்து அறியாமல் இல்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களின் இலக்கானது, ஒடுக்குமுறைகளைச் சந்தித்தது. இறுதியில் கட்சி தடை செய்யப்பட்டது. ஒடுக்குமுறை தீவிரமானது. 1948ல் சிபிஐ சட்டவிரோதமானது எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு நல்லகண்ணு தலைமறைவானார். இறுதியில் நெல்லை சதி வழக்கில் 1949 டிசம்பர் 20ல் கைது செய்யப்பட்ட அவர் வாழ்நாள் சிறைதண்டனை விதிக்கப்பட்டார். சிறையில் மனிதத்தன்மையற்ற சித்திரவதைகளைச் சந்தித்தார், தனது வாழ்வின் உடனடி மற்றும் நீண்டகால இலக்குகளுக்குத் தனனை தயார்படுத்தினார். தனது வாழ்நாள் நம்பிக்கையாக மார்க்சியத்தைத் தழுவி, கருத்தியல் தெளிவைப் பெறத் தொடங்கினார். அவரது ஆளுமை உருவாக்க நிகழ்வுகள் தெரியாததல்ல. ஆர்வமூட்டும் அந்தக் கதைகள் மக்கள்
மத்தியில் மிகவும் பிரபலமானவை. மிக இளம் வயதான 5 வயதிலேயே நல்லகண்ணு ஒரு பருத்தி ஆலை தொழிலாளர்கள், ஏழ்மையான உடையில் மற்றும் பசியுடன் –ஆனால் எளிதில்தணித்திட முடியாத கொழுந்துவிடும் தீச்சுடருடன் வேலைநிறுத்தம் செய்ததைப் பார்த்தார். அவர் மகாகவி பாரதியாரின் கவிதைகளையும் படித்தார். அக்கவிதைகள், அரசியலில் பங்கேற்று மக்கள் நலனுக்குப் பாடுபட அவரை ஊக்குவித்தன. அதுமுதல் அவர் மக்களின் மனிதராக இறுதி வரை திகழ்ந்தார். தமிழ்நாட்டின்
தூத்துக்குடி மாவட்டக் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட மிகப் பெரிய
போலீஸ் நடவடிக்கைகளில் ஒன்று நெல்லை கம்யூனிஸ்ட் சதி வழக்கு (திருநெல்வேலி வழக்கு).
அது சுதந்திரத்திற்குப் பிந்தைய நாட்களில் நடத்தப்பட்ட விரிவான ஒடுக்குமுறைகளின் ஒரு
பகுதி. “உழுபவர்களுக்கே நிலம் சொந்தம்” போராட்ட இயக்கத்தை நடத்தியதற்காக, அதை
அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பது எனக் குற்றம் சாட்டி நல்லகண்ணு கைது செய்யப்பட்டார்.
ஏழு ஆண்டுகளைக் கடுங்காவல் சிறை தண்டனையில் கழித்தபின் அவர் 1956ல் விடுதலை செய்யப்பட்டார்.
கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் அந்தக் காலகட்டம் தீவிர ஒடுக்குமுறை மற்றும் எதிர்ப்பின்
காலம் என அந்த வழக்கு நினைவு கூரப்படுகிறது.
மனித குலத்திற்கு அவரது அன்பையும் பேராசை இன்மையும் தொட்டுணர்த்தும் பல
நிகழ்வுகள். ஒரு நிகழ்வு, அவரது 80வது பிறந்தநாளில் கட்சி அவருக்கு ஒரு மகிழுந்து மற்றும் ஒரு கோடி ரூபாய் பரிசளித்தபோது, அவை மக்களுக்கு மட்டுமே சொந்தம் என்று கூறி அவை இரண்டையும் அவர் கட்சியிடம் திரும்ப அளித்தார். தமிழ்நாடு அரசு அவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருதையும் ரூ10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கி கௌரவித்தது. அவர் அந்தப் பரிசுத் தொகையுடன் தனது சொந்தக் கணக்கிலிருந்து ஐயாயிரம் ரூபாயைச் சேர்த்து ரூ10 லட்சத்து 5ஆயிரமாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்தார். தோழர்
நல்லகண்ணு கருத்தியல் தெளிவுடன் தனிப்பட்ட நேர்மை மற்றும் மென்மை குணத்தின் அபூர்வமான
கலவை.
தமிழ்நாட்டில்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள் பொறுப்பு வகித்த அவர், கிராமப்புறக்
கட்சி கட்டமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களை வலிமைப்படுத்தினார்; விவசாயிகள் மற்றும்
கிராமப்புறச் சமூகத்தினர் சந்திக்கும் நெருக்கடிகள்,
தொழிலாளர் உரிமைகள், விலைவாசி உயர்வு மற்றும் பொதுத்துறை பங்கு விற்பனை பிரச்சனைகளில்
போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தினார். அவர் – கோயம்புத்தூர் தொகுதி 1999 நாடாளுமன்ற
மக்களவைத் தேர்தல் உட்பட தேர்தல்களில் போட்டியிட்டாலும் ஒருபோதும் சட்ட மன்றங்களுக்குத்
தேர்ந்தெடுக்கப்படவில்லை.
தோழர்
நல்லகண்ணு கருத்தியல் உறுதிப்பாட்டுடன் தனிப்பட்ட நற்பண்புகளை இணைப்பதில் நம்பிக்கை
கொண்டிருந்தார். ஒரு தருணத்தில் அப்போது வ உ சிதம்பரனார் மாவட்டம் என்று இருந்த
(தற்போது தூத்துக்குடி) மாவட்டத்தில் நான்கு கிராமவாசிகள் கொலை செய்யப்பட்டனர். பலியானவர்களில்
ஒருவர், தூங்கும்போது கொலை செய்யப்பட்ட 84 வயதான அவரது மாமனார். துக்கமும் கோபமும்
எளிதில் அவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடிய அந்த நேரத்தில் நமது நல்லகண்ணு
பயணம் மேற்கொண்டு கசப்பின் எந்தச் சுவடும் இல்லாமல் அமைதிப் பேரணியில் இணைந்து கொள்வதைத்
தேர்ந்தெடுத்தார்.
வெல்லற்கரிய மனிதர் தோழர் நல்லகண்ணு
என்றும் மக்கள் மனங்களில் வாழ்வார்!
தோழர் ஆர்
நல்லகண்ணு புகழ் நீடு வாழ்க!
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்
.






No comments:
Post a Comment