Friday 30 December 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 76 -- எம் என் ராய்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 76                          


                               
எம் என் ராய் – கம்யூனிஸ்ட்  அகிலத்திலிருந்து ‘தீவிர மனிதநேய’த்திற்கு

--நன்றி : நியூஏஜ் (டிசம்பர் 4 –10) 

--அனில் ரஜீம்வாலே

        இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தாஷ்கண்ட் மற்றும் இந்தியாவிலும் ‘நிறுவியவர்’ எம் என் ராய் என்ற தவறான கற்பிதக் கண்ணோட்டம் பரவலாக நிலவுகிறது. அப்பிரச்சனை மீது தொடர்ந்து நாம் தெளிவை ஏற்படுத்துவோம்.

         முன்பு உண்மையில் நரேந்திரநாத் பட்டசாரியா என்றிருந்த மனவேந்திர நாத் ராய் (எம் என் ராய்) ஒரு தலைச்சிறந்த புரட்சியாளர், வெளிநாட்டில் கம்யூனிஸ்ட் ஆனவர், கம்யூனிஸ்ட் அகிலத்தில் பணியாற்றியவர், இறுதியில் ‘தீவிர மனிதநேய’ கோட்பாடு சிந்தனை கருத்தியல் வழியை நிறுவியவர். அவர் தீனபந்து பட்டாசாரியா மற்றும் வசந்த குமாரி தேவி (பசந்த குமாரி தேவி) இணையருக்கு மேற்கு வங்க, 24வது பர்க்கானாவின் ஆர்பேலியா கிராமத்தில் 1887 மார்ச் 21ம் நாள் பிறந்தார். அவர்களுடையது ஒரு புரோகிதக் குடும்பம்.

தொடக்கக் கல்வி

        தொடக்கக் கல்வியை ஆர்பேலியா கிராமத்திலும், பின் 1898ல் கோடலியாவுக்கு மாறி அங்கு ஹரினாவி ஆங்கில – சமஸ்கிருதப் பள்ளியிலும் நரேன் படிப்பு தொடர்ந்தது. ஸ்ரீஅரபிந்தோ தேசியக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டவர் பின் பெங்கால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு மாறி பொறியியல் மற்றும் இரசாயனப் பாடம் படித்தார். அந்தக் கல்வி நிறுவனம் பின்னாட்களில் ஜாதவ்பூர் பல்கலைக் கழகமாக மாறியது.

புரட்சிகர இயக்கத்தில்

    பக்கிம் சந்திரர், (படம்) விவேகானந்தர் மற்றும் பிற தீவிர ஆளுமையாளர்களின் ஆழமான

செல்வாக்குக்கு ஆட்பட்ட நரேன் 14 வயதில் தலைமறைவு அனுஷீலான் சமிதியில் சேர்ந்தார், பின் ஜதீன் முகர்ஜியின் ஜூகாந்தர் குழுவில் இணைந்தார். எதிர்காலப் புரட்சியாளர்களான சத்கௌரி பானர்ஜி, சைலேஷ்வர், ஷியாம் சுந்தர் போஸ், பானி, நரேந்திர சக்ரவர்த்தி முதலானவர்களையும் மற்றும் த்யோகரில் பரேன் கோஷ் என்ற புகழ்பெற்ற புரட்சியாளருடன் தொடர்பு கொண்டார்.

       1907–09ல் சிங்கிரிபோடா, நேத்ராவில் நடத்தப்பட்ட அரசியல் தாக்குதல் நடவடிக்கைகளில் அவர் பங்கேற்றார்.

        1910 ஜனவரியில் ஹௌரா குழுவினர் வழக்கு (ஹௌரா -ஷிப்பூர் விசாரணை)யில் கைது செய்யப்பட்ட  நரேன், 1911 பிப்ரவரியில் விடுதலை செய்யப்பட்டார். நரேனின் குழுவில் பாரிஸால் மற்றும் ஆத்மோன்நதி குழுக்கள் இணைய, அது ரோட்டா மற்றும் கம்பெனியில் ஆயுதக் கொள்ளைக்கு ஏதுவாயிற்று (கல்கத்தா, 1914, ஆகஸ்ட் 26). அதில் ஜூகாந்தர் மற்றும் அனுஷீலன் உறுப்பினர்கள் துப்பாக்கி வியாபாரியிடமிருந்து ஏற்றுமதிக்காக வைத்திருந்த மௌஸர் வகை கைத்துப்பாக்கி குவியல்களை இடைமறித்துக் கவர்ந்தனர்.

        1915 பிப்ரவரியில் நரேன் மீண்டும் கார்டன் ரீச் மோட்டார் கொள்ளை காரணமாக கைது செய்யப்பட்டார்.

        முதல் உலகப் போரின்போது, ஜெர்மன் ஆயுதங்களுக்காகத் தூது செல்ல நரேனை அவரது குழு தேர்ந்தெடுத்தது. பாதுகாவலிலிருந்து தப்பிய நரேன் 1915ல் (இந்தோனேஷியா) படாவியாவுக்குக் கப்பல் ஏறினார். திரும்பிய பின் ஜாவா செல்ல மீண்டும் 1915 ஆகஸ்ட்டில் பயணமானார்; இந்த முறை பல நிகழ்வுகளை உள்ளடக்கிய சரித்திரத்தை ஏற்படுத்திய பிறகு 1930ல்தான் திரும்பினார்.

சான் பிரான்சிஸ்கோவில்

        உதவி கிடைக்கும் என நம்பி இந்தோனேஷியாவைவிட்டு நரேன் ஜப்பான் சென்றார், புகழ்பெற்ற சீனத் தலைவர் சன் யாட் சென் (படம்)அவர்களைச் சந்தித்தார், விரைவில்

அங்கிருந்து கொரியா மற்றும் சீனாவுக்குச் சென்றார். ஒரு ஜெர்மன் கப்பலின் ரகசிய அறையில் நுழைந்து ஜப்பானுக்குத் திரும்பினார். பின் அமெரிக்கா விசா பெற்று சான் பிரான்சிஸ்கோ கப்பல் ஏறினார். பலோ ஆல்டோவில் தங்கியவர், (சாந்தி தேவி என்கிற) ஈவ்லின் லியோனரா ட்ரென்ட் அவர்களை மணம் புரிந்தார். மறைவாக இருக்க வேண்டி அவர் தனது பெயரை (மனவேந்திர/) ‘மனபெந்திர நாத் ராய்’ (எம் என் ராய்) என மாற்றிக் கொண்டார். நியூயார்க்கு மாறியவர், நியூயார்க் நகரப் பொது நூலகத்தில் மார்க்ஸியம் படித்தார்.அங்கே லாலா லஜபதி ராயைச் சந்தித்தார்.

        ராய் கூறியுள்ளபடி, அவருக்கு லாலா லஜபதி ராய்காரல் மார்க்ஸ் மற்றும் பிற சோஷலிச செவ்விலக்கிய நூல்களை வாங்கி”க் கொடுத்து அவரை மார்க்ஸின் ‘மூலதனம்’ படிக்கச் செய்தார். ராய் ஒரு சோஷலிசவாதியானார். இதன் மத்தியில் லஜபதி ராயின் கூட்டத்திலிருந்து அமெரிக்கப் போலீஸ் அவரைக் கைது செய்தது. காவலிலிருந்து தப்பிய ராய், புகைவண்டியைப் பிடித்து மெக்ஸிகோ எல்லையில் உள்ள சான் ஆன்டோனியோ சென்றார். அங்கிருந்து ரியோ கிரான்டே நதியைக் கடந்து மெக்ஸிகோ சென்றார்

பொதுச் செயலாளர், மெக்ஸிகோ கம்யூனிஸ்ட் கட்சி

        ராய் மெக்ஸிகோ சென்றபோது, அந்நாடு புரட்சித் துடிப்பு வலியின் விளிம்பில் இருந்தது, அங்கு நவம்பர் இறுதியிலிருந்து 1919 நவம்பர் தொடக்கம் வரை தங்கினார். அங்கே ‘சான் பிரான்சிஸ்கோ சதி வழக்கில்’ கைது செய்யப்பட்டாலும் விரைவில் விடுதலையானார். மெக்ஸிகோவின் தீவிரவாத கவர்னருக்கு அவர் அறிமுகக் கடிதம் கொண்டு சென்றதால், ராய் அந்நாட்டு அதிபர் கார்ரன்ஸா (Carranza) உடன் நட்பு கொண்டார். மெக்ஸிகோவிலிருந்து ஒரு முறை தப்ப முயன்றார். ஆனால் கப்பலைத் தவறவிட்டவர் பிறகு மீண்டும் முயற்சிக்கவில்லை.

   ராய், சோஷலிசக் கட்சிப் பத்திரிக்கை ‘லா லுசா’ (போராட்டம்) நடத்த உதவினார், அப்பத்திரிக்கை தொடர்ந்து 8 பக்கம் கொண்ட முறையான வார இதழானது. மேலும் அவர் கொலம்பியாவின் பார்ரன்கொய்லா நகரை மையமாகக் கொண்டு வட்டார மொழியில் ‘எல் ஹெரால்டோ’ என்ற பத்திரிக்கையை ஆசிரியராக இருந்து வெளியிட்டார். (அப்பத்திரிக்கை, (ஆங்கில தி ஹெரால்டு பத்திரிக்கையின் வட்டார மொழி பதிப்பாகும்)

    1918 மத்தியில் சோஷலிசக் கட்சி, எம்என் ராய் தயாரித்து லா லுசாவில் வெளியான அரசியலறிக்கையை (மெனிஃபெஸ்டோ) அடிப்படையாகக் கொண்டு, பெருந்திரள் தொழிலாளர்கள் கட்சியாக மாறியது. டிசம்பர் 1918ல் நடைபெற்ற மற்றொரு மாநாட்டில் அக்கட்சி கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியது. அக்கட்சியின் முதல் பொதுச் செயலாளராக எம்என் ராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றும்கூட, அக்கட்சி தலைமையகத்தில் அவருடைய பெயர் பொறிக்கப்பட்ட பலகை வைக்கப்பட்டுள்ளது.

    மெக்ஸிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ராய் பலமுறை அதிபர் கார்ரன்ஸாவைச் சந்தித்தார்.

இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலப் பேராயம், 1920

    1919ன் தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் (‘Comintern’) புகழ்பெற்ற பிரதிநிதி மைக்கேல் பொரோடினை மெக்ஸிகோவில் ராய் சந்தித்தார். அமெரிக்காவிலே இருந்த பொரோடின் போலீசிலிருந்து தப்ப மெக்ஸிகோ சென்றார். கையில் பைசா காசில்லாமல் அவர் ராயின் நிழலில் தங்கினார். ராய் அவரை அதிபருடன் தொடர்பு கொள்ளச் செய்தார். எதிர்வரும் இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலப் பேராயத்தில் கலந்து கொள்ள பிரதிநிதிகளை அனுப்புமாறு மெக்ஸிகோ கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு வந்தது. கட்சி அனுப்பிய இரண்டு பிரிதிநிதிகளில் எம் என் ராய் ஒருவர். பெர்லின் அடைந்த அவர் பின் 1919 இறுதி மற்றும் 1920 தொடக்கத்தில் மாஸ்கோ சென்றடைந்தார்.

    பெர்லின் குழு புரட்சியாளர்கள்; ஜெர்மனி, ரஷ்யாவைச் சேர்ந்த மற்றவர்களையும்; வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா, அபானி முகர்ஜி, பூபேன் தத், செம்பக் பிள்ளை (செண்பக ராமன் பிள்ளை), சவுகத் உஸ்மானி முதலானவர்களையும் ராய் சந்தித்தார்.

        அகிலத்தின் பேராயம் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பே ராய் லெனினைச் சந்தித்தார். விவாதங்களுக்குப் பிறகு, ‘காலனியப் பிரச்சனைகள் மீது துணை ஆய்வறிக்கை (தீசிஸ்)’ தயாரிக்கும்படி லெனின் எம் என் ராயைக் கேட்டுக்கொண்டார்.

ராய் மீது லெனின் விமர்சனம்

        1920 ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 7 வரை இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் பேராயம் மாஸ்கோவில் நடைபெற்றது. இம்மாநாடு, லெனின் தயாரித்தளித்த தேசிய மற்றும் காலனியப் பிரச்சனைகள் குறித்த ஆய்வறிக்கையை விவாதித்தது. இப்பிரச்சனை மீதான துணை ஆய்வறிக்கை எம் என் ராய் அவர்களால் எழுதப்பட்டது. ஆய்வறிக்கைகள் மற்றும் விவாதத்தின் நோக்கம், காலனிய நாடுகளின் விடுதலை இயக்கங்களின் குணாம்சங்களைத் தொகுப்பதும் அதற்கேற்ப தந்திரோபாயம் மற்றும் செயல்திட்டங்களை உருவாக்குவதுமாகும்.

    ராயின் துணை ஆய்வறிக்கை அவதானிப்புகளை லெனின் கூர்மையாக விமர்சித்தார்; காரணம், அவை முற்றாக குழுவாதப் போக்குடையதாக இருந்தது; மேலும், இதனால் புரட்சியாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள், விடுதலை இயக்கத்திலிருந்து தனிமைபட வேண்டி வரும். டைப் செய்யப்பட்ட ராயின் ஆய்வறிக்கையிலிருந்து பெரிய பத்திகளை லெனின் தன் கைப்பட அடித்து நீக்கினார். (ஆதாரம் காண்க, சிபிஐ வரலாறு ஆவணங்கள், டாக்டர் அதிகாரி ஆசிரியராக இருந்து தொகுத்தது, தொகுதி 1, 1917 –22, பக்கங்கள் 173 –177, ராய் தீசிஸின் போட்டோ ஒளி நகல்)

      பூர்ஷ்வா ஜனநாயக இயக்கங்கள் ‘மக்கள் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த-வில்லை’ என்று குறிப்பிட்ட எம் என் ராய், “இந்தியாவில் பெருந்திரள் மக்கள் பூர்ஷ்வா தலைவர்களுடன் இல்லை,” அவர்கள் புரட்சியின்பால் நகர்ந்து வருகிறார்கள் என்றார். “… பூர்ஷ்வா ஜனநாயக இயக்கங்கள் பொதுமக்கள் திரளின் உணர்வுகளையும் விழைவுகளையும் வெளிப்படுத்துகின்றன எனக் கருதுவது ஒரு தவறாகிவிடும்” எனக் கூறினார். ‘காந்திஜி மற்றும் காங்கிரசைத் ‘தூக்கி எறிந்து விட்டுவிடுதலை இயக்கத் தலைமையைக் கம்யூனிஸ்ட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றும், ‘பூர்ஷ்வா தேசியத்தை ஆதரிப்பது வர்க்கப் போராட்டத்தை நீக்கி அழித்துவிடும்’ என்றும் கூறினார் ராய்.

    இவற்றையும் மற்றும் ராய் ஆய்வறிக்கையின் பிற முக்கிய பத்திகளையும் லெனின் நிராகரித்தார். லெனினும் காமின்டர்ன் பேராயமும், (காலனிய நாடுகளின்) “கம்யூனிஸ்ட்கள் உள்நாட்டு சுதேசி பூர்ஷ்வா ஜனநாயக இயக்கத்திற்கு ஆதரவு அளித்தாக வேண்டும்” எனவும்

அவர்களுடைய புரட்சிகரப் பங்கு (இன்னும்) தீர்ந்துவிடவில்லை எனவும் தெளிவாகக் கூறினர். இவ்வாறாக, லெனின் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணி என்ற புதுமை கருத்தை முன் வைத்தார். கீழ்த்திசை நாடுகளின் கம்யூனிஸ்ட்களிடம் லெனின் கூறினார்: “விழிப்புற்று வரும் பூர்ஷ்வா தேசியத்தில், அந்த மக்கள் மத்தியில், நீங்கள் உங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது –அது, அதனது வரலாற்றுபூர்வ நியாயத்தைக் கொண்டிருக்கிறது” (லெனின் எழுத்து திரட்டு 30, பக்.162). அத்தகைய ஓர் இயக்கத்தில் ‘கம்யூனிஸ்ட் வண்ணத்தை’த் திணிப்பதற்கு எதிராக அவர் உறுதியாக இருந்தார் (நூல் திரட்டு 31, பக்.149)

    மேலும், காலனிய நாடுகளில் (சூழ்நிலை கனிவதற்கு முன்) ஒருவகையில் பிஞ்சிலே பழுப்பதாய்க் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைப்பதையும் லெனின் உறுதியாக எதிர்த்தார், காரணம் (கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதற்கு ஏற்ற) வர்க்கச் சமூக உருவாக்கம் இன்னும் மலர வேண்டிய மொட்டு அரும்பும் பருவத்திலே இருப்பதாகும். மகாத்மா காந்தி, சன் யாட்-சென், (கமால்) பாஷா மற்றும் அவர்களைப்போன்ற பிற ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர்களையும் லெனின் பெரிதும் உயர்வாகப் பாராட்டினார்.

    அதற்கு மாறாக எம் என் ராய், “தேசிய பூர்ஷ்வாகள் ஏகாதிபத்தியத்தின்பால் ‘சென்று விட்டதாக’வும், காங்கிரஸ் ‘ஏகாதிபத்தியத்தின் ஏவலாளி’யாக மாறி விட்டதாகவும் கருதினார். இவ்வாறாக, எம் என் ராய் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் குழுவாத மற்றும் வரட்டுக் கோட்பாடு போக்கிற்கு அடித்தளம் அமைத்து, எதிர்காலத்தின் மீது பள்ளம் பறித்து வடு ஏற்படுத்தினார்.

ராய் தாஷ்கண்ட் ‘சிபிஐ’ கட்சியை எதிர்த்தார்

        எம் என் ராய் தாஷ்கண்ட் நகரில் (1920) சிபிஐ அமைப்பதற்குத் தொடக்கம் செய்தார் எனப் புரிந்து கொள்வது உண்மைத் தரவுகளின்படி தவறானது. உண்மையில், அவர் அதை எதிர்த்தார். அதுபோலவே இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிறுவனராக அவரை முன் நிறுத்துவதும் தவறானது.

        (1920ம் ஆண்டு அக்டோபர் 17நாள் தாஷ்கண்டில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் எம் என் ராய், MPBTஆச்சார்யா, அபானி முகர்ஜி, முகமது ஷஃபீக் உள்பட ஏழுபேர் மற்றும் பிறர் கலந்து கொண்டனர். ஷஃபீக்கைச் செயலாளராக்கி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதாக அக்கூட்டம் அறிவித்தது. அதே தாஷ்கண்ட் நகரில் மற்றொரு கூட்டம் 1920 டிசம்பர் 15ம் நாள் நடைபெற்றது. –ஆசிரியரின் மற்றொரு கட்டுரையிலிருந்து)

    தாஷ்கண்டில் ’சிபிஐ’ அமைக்கும் யோசனையை எம்என் ராய் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை அவரது சொந்த வார்த்தையில் காணலாம். அக்கூட்டத்தில் கலந்து கொண்டாலும் ராய் தமது நினைவுக் குறிப்பு நூலில் இவ்வாறு எழுதினார்: இடம் பெயர்ந்து வந்த சில தனிநபர்கள் தங்களைக் கம்யூனிஸ்ட் கட்சி என அழைத்துக் கொள்வதில் பொருள் ஏதும் இல்லைஅது பெயருக்குத்தான் இருக்கும் ஒன்று என்பதை முழுமையாக அறிவார்கள்... ஏற்பட்டுவிட்ட சில அபிப்ராயங்களை மறுக்கும்  வகையில் ராய் மேலும் எழுதுகிறார் : புலம் பெயர்ந்து வெளிநாடு வந்தவர்கள் (‘முகாஜீர்கள்’) கம்யூனிஸ்ட் கட்சி அமைத்ததை நான் ஒப்புக்கொள்ளவில்லை; அந்தக் கட்சிக்கு இந்தியத் தொழிலாளர்கள் சார்பாகப் பேசுவதற்கே உரிமை இருப்பதாக நான் நம்பவில்லை எனும்போது ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்கள் சார்பாகப் பேசவும் உரிமை இல்லை எனத் தனியாகக் குறிப்பிடத் தேவையில்லை. (நினைவுக் குறிப்புகள், பக்.465)

     டாக்டர் கங்காதர் அதிகாரி கூற்றின்படி அந்த நேரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதில் ராய் ஆர்வமாக இல்லை (சிபிஐ வரலாற்று ஆவணங்கள், தொகுதி 1, பக்.240); காரணம், இந்திய புரட்சியாளர்களுக்கான இராணுவப் பள்ளி ஒன்றை அமைத்திட அவர் விரும்பினார்.

       1920 தாஷ்கண்ட்டில் சிபிஐ அமைக்கும் யோசனை உண்மையில் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வந்த ‘முகாஜீர்கள்’ குழு மற்றும் பிற புரட்சியாளர்களிடமிருந்து வந்தது.

        இந்த ஆதாரங்கள், எம்என் ராய் தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார் என்ற பரவலான தவறான கருத்தை ஒதுக்கி வைக்கும். டாக்டர் அதிகாரி, டாங்கே, காட்டே, முஸாஃபர் அகமது மற்றும் பிறர் உள்ளிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட்களுடன் ராய் மோதல் போக்கிலேயே இருந்தார், மேலும் 1925ல் கான்பூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு மாநாட்டையும் ராய் விரும்பவில்லை.

    தாஷ்கண்ட் குழு சில பிரச்சாரங்களை முன்னெடுப்பது என்ற வகையில் பயனுள்ள பங்களிப்பைச் செய்தது என்றாலும், உண்மையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாகச் செயல்படவில்லை. விரைவில் இந்தியாவோடு தொடர்பு இல்லாமல், ஒருங்கிணைப்பு அல்லது எந்த நடவடிக்கையும் இல்லாமல் தாஷ்கண்ட் கட்சிவிரைவில் மறைந்தது.

(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தாஷ்கண்ட் குழுவுக்கு முறையான மதிப்பு மரியாதை கொடுத்து, அக்குழுவை வெளிநாட்டு அலுவலகமாக (‘Foreign Buro’) நடத்துகிறது. -- ஆசிரியரின் மற்றொரு கட்டுரையிலிருந்து)

காமின்டர்ன் தலைமையில்

          கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழுவிற்கும் (ECCI) அதன் தலைமைக் குழுவுக்கும் எம் என் ராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். அகிலத்தின் காலனிய பீரோவுக்கு அவர் செயலாளர். அவர் (ஒரு நாட்டின் சிறு நிர்வாகப் பகுதியான) கான்டன், சீனா மற்றும் காமின்டர்ன் பிரதிநிதியாக 1927 பிப்ரவரி கூட்டத்திற்கும் அனுப்பப்பட்டார். இந்திய பூர்ஷ்வா முதலாளிகளுக்குப் பிரிட்டிஷ் ‘சலுகைகள்’ காட்டும் சர்ச்சைக்குரிய ‘டி-காலனைசேஷன் தியரி’யின் ஆதரவாளராக இருந்தார். [இந்த ஆய்வறிக்கை(தியரி)யின் அவதானிப்பு காலனிய நாடுகளில் ஏகாதிபத்தியத்தால் முன்னெடுக்கப்படும் தொழில்மயமாக்கல், அந்நாட்டின் ஏகாதிபத்தியச் சார்பு நிலையைக் குறைத்து, காலனியத்தைக் கட்டவிழ்க்கிறது என்கிறது. பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தக் கோட்பாடு மார்க்சிய தொழில்மயமாக்கலுக்கு எதிரிடையானது என அதனை நிராகரித்தது – புரிதலுக்காக இணைத்தில் திரட்டியது].

கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழுவிலிருந்து ட்ராஸ்கி வெளியேற்றப்படுவதற்கு ஆதரவாக அவர் வாக்களித்தார் – ஆனால் ஒரு வரலாற்று முரண்நகை, அவரே (1928ல்) 6வது கம்யூனிஸ்ட் அகிலப் பேராயத்திற்குப் பிறகு அதன் உறுப்பினராகத் தொடரவில்லை; இதற்குக் காமின்டர்னில் பரவலான ஸ்டாலினிய அந்தஸ்து குறைப்பு நடவடிக்கைகளும் பகுதியளவு ஒரு காரணம். 1929 தொடக்கத்தில் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு அணி (Brandler-Thalheimer)குழுவினரின் முகாமுடன் ராய் தொடர்பில் இருக்கத் தொடங்கினார், காமின்டர்னின் ஆதரவிலிருந்து வெளியே வீழ்ந்தார்.

     டிசம்பர் 1929ல் காமின்டர்னிலிருந்து ராய் வெளியேற்றப்பட்டதைக் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பத்திரிக்கை Inprecorr’ (சர்வதேச பிரஸ் தகவல் தொடர்பு) அறிவித்தது. பெர்லின் செல்ல அவர் அனுமதியைப் பெற்றார்.

இந்தியாவுக்குத் திரும்புதல்

        15 ஆண்டுகளுக்குப் பிறகே 1930 டிசம்பரில் எம் என் ராய் இந்தியா திரும்பினார். நேரு, போஸ் மற்றும் பிற தலைவர்களை அவர் சந்தித்தார். 1924 வாரண்டின் கீழ் 1931 ஜூலையில் கைதான அவர் 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். பெரெய்லி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டவர், இறுதியில் ஐந்தாண்டு நான்கு மாதங்கள் ஐந்து வெவ்வேறு சிறைகளில் அனுபவித்தார். அவரது உடல்நிலை நிரந்தரமாகச் சீர்குலைந்தது.

     1936 நவம்பரில் விடுதலையான பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1936 டிசம்பரில் நடந்த காங்கிரஸின் ஃபைஸ்பூர் அமர்வில் கலந்து கொண்டார், அரசியலமைப்பு வரைவுக்கான சட்டமன்றத்தை அமைக்க ஆலோசனை முன்வைத்தார். வரலாற்று விநோதம், காங்கிரஸைத் ’தூக்கி எறிய’ வலியுறுத்திய ஒருவர், அதே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததுதான். மெட்ராசில் சிங்காரவேலர் இல்லத்திற்கு 1936ல் விஜயம் செய்த ராய், அவரது இல்லத்தில் தங்கினார்.

‘தீவிர மனிதநேயம்’

        விரைவில் காங்கிரசுடன் கருத்து வேறுபாடு வளர்ந்தது, (இன்டிபென்டென்ட் இந்தியா) ‘சுதந்திர இந்தியா’ என்ற வார இதழை வெளியிடத் தொடங்கினார். அவர் எலன் காட்ஸ்சாக் (Ellen Gottschalk) என்பவரை இரண்டாவது மணம் புரிந்த பிறகு டேராடூனில் குடியமர்ந்தார். ‘தீவிர காங்கிரஸ்காரர்கள் லீக்’ அமைப்பை நிறுவினார். அவர் தனது ‘பகுத்தறிவு, புனைவியல் மற்றும் புரட்சி’ (Reason, Romanticism and Revolution’) என்ற புத்தகத்தில் குழப்பமான கருத்தியல்களின் கலவையான ‘தீவிர மனிதநேயம்’ (‘radical humanism’) என்பதை வளர்த்தெடுத்து அமைத்தார். அவருடைய சிறிய குழு சொந்தமான தொழிற்சங்க அணியைக் கொண்டிருந்தது, மேலும் காங்கிரசிலும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்திலும் (AISF) பணியாற்றினர்.

        ‘சுதந்திர இந்தியா’ இதழ், 1949ல் ‘தி ரேடிகல் ஹூமானிஸ்ட்’ என்று மாற்றப்பட்டு, பின்பு இந்திய மறுமலர்ச்சி நிறுவனத்தின் மாத இதழானது. 1945 முதல் சுதேந்திரநாத் தத்தாவுடன் இணைந்து ‘மார்க்ஸிய வழி’ என்ற காலாண்டு இதழையும் ஆசிரியராக இருந்து வெளியிட்டார் – அந்த மாதாந்திர இதழும் ‘தி ஹூமானிஸ்ட் வே’ என மாற்றப்பட்டது.

  1947ல் அவர் ‘புதிய மனிதநேயம்’ என்ற தனது சொந்த அரசியலறிக்கையை (மெனிஃபெஸ்டோ) எழுதினார். டேராடூனிலிருந்து அவர் ‘ரேடிகல் ஹூமானிஸ்ட்’ இதழைக் கொண்டு வந்தார். புகழ்பெற்ற ஆளுமைகளான TM தார்குண்டே, VB கார்னிக் முதலானோர் அவருடன் கூட்டு சேர்ந்திருந்தனர்.

        ராய் தனது குழுவினருடன் 1940ல் காங்கிரசைவிட்டு வெளியேறி, தீவிர ஜனநாயகக் கட்சி (RDP) நிறுவினார். 1946 டிசம்பரில் பம்பாயில் நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் 22 அம்ச அடிப்படைக் கொள்கைகளை அல்லது ‘தீவிர ஜனநாயகத்தின்’ அரசியலறிக்கையை  அளித்தார். பின்னர், ‘கம்யூனிசத்திற்கு அப்பால்’ மற்றும் ‘புதிய மனிதநேயம் – ஓர் அறிக்கை’ என்பதை வெளியிட்டார்.

    இறுதியில், கட்சி அரசியல் தனது (புதிய மனிதநேய) ஜனநாயகக் கோட்பாட்டுடன் பொருத்தமற்றது என்ற முடிவிற்கு வந்தார். இதன் விளைவாய்த் தொடர்ந்து தீவிர ஜனநாயகக் கட்சி, அதனது கல்கத்தா மாநாட்டில் 1948 டிசம்பரில் கலைக்கப்பட்டது.

        ராய் டேராடூனில் இந்திய மறுமலர்ச்சி நிறுவனத்தை நிறுவினார். அம்ஸ்டர்டாமில் 1952ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மனித நேய மற்றும் நன்நெறி சங்கம் (The International Humanist and Ethical Union (IHEU)அமைப்பின் தொடக்கப் பேராயத்தில் கலந்து கொள்ள இருந்த எம் என் ராய், எதிர்பாராத வகையில் 1952 ஜூனில், பேராயக் கூட்டத்திற்குச் சற்று முன்பு, 50 அடியிலிருந்து கீழே விழுந்து விபத்துக்கு ஆளானார். டேராடூன் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர், பெருமூளை இரத்த உறைவு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அவர் கலந்து கொள்ளாமலேயே மனிதநேயப் பேராயத்தில் அவர் IHEU சங்கத்தின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எழுதிய கடைசி கட்டுரை 1954 ஜனவரி 24ல் வெளியானது.

        எம் என் ராய் தமது 67வது வயதில் டேராடூனில் மாரடைப்புக் காரணமாக 1954 ஜனவரி 25ல் இயற்கை எய்தினார்.

ராய் எழுதிய நூல்கள்

   மாஸ்கோ மற்றும் பெர்லினிலிருந்து ஏராளமாக எழுதிக் குவித்து, ‘வேன்கார்டு’ (முன்னோடி) மற்றும் ‘தி மாஸஸ்’ (மக்கள் திரள்) உள்ளிட்ட பல புத்தகங்கள் மற்றும் இதழ்களை வெளியிட்டார். மேலும் ‘நினைவோடைகள்’,மாறிவரும்நிலையில் இந்தியா’ (இந்தியா இன் ட்ரான்ஸிஷன்), ‘பொருள்முதல் வாதம்’, ‘தீவிர மனிதநேயம் பற்றி’, ‘இஸ்லாத்தின் வரலாற்றுப் பங்கு’, ‘இந்தியாவின் செய்தி’ முதலிய நூல்களையும், ‘நவீன விஞ்ஞானத்தின் தத்துவப் பின்விளைவுகள்’ என்ற புத்தகத்தையும் எழுதினார்.

இறுதிக் கட்ட வாழ்வு

        அவரது இறுதிக் காலகட்டம் ஆன்மிகத்தைச் சுற்றித் திரும்பியது, வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தில் நம்பிக்கை அகன்றது, பொருள்முதல் வாதத்திலிருந்து இயக்கவியலைப் பிரித்தது, பிரபஞ்சத்துக்கு ‘பின்னால் மற்றும் முன்னால்’ ஆழ்நிலை இருப்பைக் கண்டறிய விரும்பினார் (to discover transcendental being ‘behind and above’ the universe), வரலாற்றின் மனிதநேய விளக்கத்தை முயன்றார்; கம்யூனிசம் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகம் இரண்டையும் எதிர்த்தார், ‘மக்கள்’ எதிர்காலச் சமூகத்தை நடத்துவர் என்பனபோல எண்ணினார்.

       அவர் தனது வாழ்வைப் பலபல கோட்பாடுகள், ஆதார மூலங்களிலிருந்து தேர்ந்து எடுத்துத் தொகுத்த கருத்தோட்டங்களின் கலவையாக (eclectical) முடித்துக் கொண்டார்.

(அந்நூல்களின் வழி, கம்யூனிஸ்ட் அகிலத்திலிருந்து ‘தீவிர மனிதநேய’த்திற்கு வந்தவாராக, எம்என் ராய் வாழ்கிறார்)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment