Sunday 11 December 2022

ஹனாய் சமாதானக் கூட்டத்தில் ஆனி ராஜா முழக்கம்

 


  இறையாண்மை, சமத்துவம், சமூக நீதி, சமாதானம்  

  ஆகிய கொள்கைகளுக்கு நம்மை  அர்ப்பணிப்போம்!

--ஹனாய் சமாதானக் கூட்டத்தில் ஆனி ராஜா முழக்கம்

  நவம்பர் 25ல் வியத்நாம் நாட்டின் ஹனாய் நகரில் உலகச் சமாதானக் குழு சார்பில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் (NFIW) பொதுச் செயலாளரும், பெண்கள் சர்வதேச ஜனநாயக சம்மேளனத்தின் (WIDF) உதவித் தலைவருமான ஆனி ராஜா ஆற்றிய மாநாட்டு முக்கிய உரை வருமாறு:

வியத்நாம் குறித்துப் பெருமிதம்  

      பெண்கள் சர்வதேச ஜனநாயக சம்மேளனத்தின் (WIDF) சார்பாக அனைவருக்கும் எனது புரட்சிகர வாழ்த்துகள். இச்சமாதான மாநாட்டை ஹனாய் நகரில் கூட்டியதற்காக வியத்நாம்

மாதானக் குழுவைப் பாராட்டுகிறேன். வியத்நாம் வீரம் செறிந்த வெற்றிகரமான தேசம், உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கான அதன் ஆழமான உறுதிப்பாடு மற்றும் 1975ல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தோற்கடிக்க அதன் வீரம் செறிந்த போராட்டங்களுக்காக மட்டுமின்றி, நாட்டு மக்கள் தம் குழந்தைகளைச் சுதந்திரமாகவும் சமாதானத்திலும் வளர்க்கச் செய்ததற்காக நாங்கள் அனைவரும் வியத்நாம் குறித்துப் பெருமிதம் கொள்கிறோம். 

        சம்மேளனம் நிறுவியது முதல் சமாதானத்திற்கான நமது போராட்டம் தினசரி நிகழ்வானது. இச்சம்மேளனத்தின் முன்னோர்கள் இங்கே ஆசியாவில், வியத்நாமிய பெண்களுக்குத் தங்களின்


ஆகச் சிறந்த ஆதரவை அர்ப்பணித்தனர்; “ஏஜென்ட் ஆரஞ்சு” ஏற்படுத்திய விளைவுகளை ஏற்க மறுத்து நடத்திய போராட்டங்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவை அளித்தோம். (“ஏஜென்ட் ஆரஞ்சு”, 1975போரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவ நோக்கத்திற்காகப் பயன்படுத்திய இலை உதிர்ப்பி (defoliant) தாவர இன அழிப்பு இரசாயனப் பொடியாகும்; அது உடல் ஊனமாகக் குழந்தை பிறப்பு, கேன்சர் முதலான நீண்டகாலப் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாகும்)

இன்றைய காலகட்டத்தில் கூட்டத்தின் முக்கியத்துவம்

     அபாயகரமான உலக, தேசிய மற்றும் உள்ளூர் நிலைமைகளின் பின்னணியில் இத்தகைய கூட்டம் மிக முக்கியமானது. சமத்துவம், நீதி மற்றும் சமாதானத்திற்காகப் போராட நமது உறுதியை இங்கே பிரகடனம் செய்வோம். செல்வாதாரங்களைப் பகிர்தல், உணவு, உடை, வசிப்பிடம், கல்வி மற்றும் வீட்டு வசதி போன்ற அடிப்படை தேவைகள் கிடைப்பது என்பதன் அடிப்படையில் உலகம் மேலும் சமமற்றதாக உள்ளது. போர்க்கால ஆண்டுகளில் மனித குலம் பஞ்சங்கள், பெரும் நோய் தொற்றுகள் எனப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்ததை நாம் நினைவு கொள்வோம். தற்போதைய சகாப்தத்தில் அத்தகைய பேரழிவை ஏற்படுத்தும் பருவநிலை அவசர நிலையானது ஏற்கனவே பிரச்சனைகளால் அல்லாடும் உலகில், செங்குத்து மலையில் ஏறுவது போல, இன்னும் கூடுதலாக்குகிறது. இன்று மேலும் ஒன்றிணைக்கப்பட்ட உலகில், ரஷ்யா–உக்ரைன் போரின் காரணமாகக் கருங்கடல் பகுதியின் உக்ரைனிய ஒடிசா துறைமுகத்தில் ஒரு சாதாரண முற்றுகை, பல பத்து லட்சம் ஆப்ரிக்கர்களைப் பட்டினியில் தள்ளிவிடும்.

போரும் பருவநிலை பாதிப்பும்

      போரின் காரணமாக அத்தியாவசியப் பொருள் வழங்கல் சங்கிலித் தொடரில் தடை மற்றும் பருவநிலை அவசரநிலைகள் பல கோடி மக்களை எளிதில் பாதிப்படையச் செய்யும். அமேசான்

காடுகளை எரிக்கவும் மரங்களை வெட்டவும் பிரேசிலின் அதிதீவிர வலதுசாரித் தலைவரான ஜெயிர் போல்சொனாரோ மௌனமாக அனுமதித்தபோது, உலகின் அனைத்து மூலைகளிலும் அதன் தாக்கத்தை உணர முடிந்தது. உலக வெப்பமயமாதல் அதிகரிப்பின் காரணமாகக் கடுமையான வெள்ளம், வறட்சி மற்றும் கடும் மழைப் பொழிவுடன் லட்சோப லட்ச மக்கள் பருவநிலை பாதிப்பு அகதிகளாகின்றனர். மனிதக் குடியிருப்புகள் பல மேலும் மேலும் வாழத் தகுதியற்றதாக்கி மக்களைப் புலம் பெயரச் செய்கிறது. ஐரோப்பாவில் காட்டுத் தீ நிகழ்வுகள், வெப்ப அலை மற்றும் வறட்சி எப்போதையும்விட சாதாரண நிகழ்வாகி விட்டன; எதிர்பாராத திடீர் பருவ கால நிலைகள் வேளாண்மையை முன்பைவிட கடினமாக்கி உள்ளது. முன்பு எந்தச் சகாப்தத்தையும்விட நாம் இப்போது மேலும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தப்பட்டவர்களாக உள்ளோம். இத்தகைய உள் இணைப்புத் தொடர்பு நம்மை நம்பிகை கொள்ளவும் செய்கிறது, எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்காகவும் ஆக்கி உள்ளது. 

            ஏறத்தாழ அரை நூற்றாண்டாக ஒப்பீட்டளவில் அமைதி மற்றும் நிலைத்தன்மை நீடித்த பிறகு போர் அச்சுறுத்தல் மேலும் சூழ்கிறது. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என அதிகாரம் மிக்க அரசுகளும் பிரதேச சக்திகளும் தங்கள் விருப்பம்போல எல்லைகளை மாற்றி அமைக்க, பிற நாடுகளைக் கட்டாயப்படுத்த தன்னிச்சையான இராணுவ வல்லாண்மையைப் பயன்படுத்தினால், பின் சர்வதேச ஒழுங்கமைப்பு முறை வீழும். வலிமைமிக்க ஏகாதிபத்திய அரசுகள் சிறிய நாடுகளின் தேசிய உரிமைகளை அழிக்க முயற்சி செய்வதால் சர்வதேசச் சட்டங்கள் உண்மையாக நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. அது பாலஸ்தீன சுய நிர்ணய உரிமை அல்லது ரஷ்ய – உக்ரைன் போர்ப் பிரச்சனை எதுவானாலும் இந்தப் பெரியண்ணன் நாடுகள் எந்த வகையான கூட்டு எதிர்ப்பை மறித்துத் தடுக்கவும், அமைதியான தீர்வை ஏற்படுத்த கூட்டான முயற்சி உருவாவதைத் தடுக்கவும் செய்கின்றன. அதிகாரம் மிக்க நாடுகளின் அடாவடிப் போக்கு வலிமை குறைந்த நாடுகளையும் இராணுவமயமாக்கி பிற கூட்டுப் பாதுகாப்புக் குழாம்களில் சேரச் செய்கிறது. இத்தகைய உலகளாவியப் பிரச்சனைகளில் எவ்வாறு ஜி – 20 அமைப்பு வரும் நாட்களில் செயல்படப் போகிறது என்பதை இனிதான் பார்க்க வேண்டும்.

இராணுவச் செலவு அதிகரிப்பும், பாதிப்பும்  

      2021ல் ஆகக் கூடுதலாக இராணுவத்திற்குச் செலவிட்ட ஐந்து பெரும் நாடுகள் அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் மற்றும் ரஷ்யா; இவை ஐந்தும் உலக மொத்த இராணுவச் செலவில் கூட்டாக 62 சதவீதம் செலவிட்டுள்ளன. 2021ல் உலகின் ஐந்து பிரதேசங்களில் மூன்றில் இராணுவச் செலவீனங்கள் அதிகரித்துள்ளன.

   இன்றைய உலகின் ஏழ்மை, உணவு மற்றும் எரிபொருட்களின் விலைவாசி உயர்வு, பருவநிலை மாற்ற அதிர்ச்சிகள் மற்றும் உலகைப் பெரிதும் சூழ்ந்திடும் பொருளாதார வீழ்ச்சி போன்ற நிலைமைகளின் பின்னணியில், இத்தகைய இராணுவச் செலவு அதிகரிப்பது ஒரு தற்கொலை முயற்சியே. உலகப் பன்முக பரிமாண அளவீட்டு ஏழ்மைக் குறியீட்டின்படி, 111 நாடுகளில் 120கோடி மக்கள், பன்முக அளவீடுகளின்படி கடும் ஏழ்மையில் உள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேல் 18வயதிற்குக் குறைவான குழந்தைகள். தெற்காசியாவை அடுத்து ஆப்ரிக்க கண்டத்தின் சகாரா கீழமை ஆப்ரிக்காவில் மிக அதிக எண்ணிக்கையில் ஏழை மக்கள் வாழ்கிறார்கள். ஏழைகளில் ஏறத்தாழ பாதி மக்கள் தொகையினருக்கு (47 கோடி) சத்துணவு, சுகாதாரம் இரண்டுமே மறுக்கப்பட்டிருக்கிறது. மேலும் பாதிக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு (59 கோடி) அதே நேரம் சமையல் எரிபொருள் மின்சாரமும் மறுக்கப்பட்டுள்ளது.

   இவற்றோடுகூட அரசுகள் தொடர்ந்து சுகாதாரம், கல்வி, அடிப்படை உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்புப் போன்ற அடிப்படை பொதுத்துறை பிரிவுகளிலிருந்து விலகுவதன் காரணமாக, உலகின் பெரும்பான்மை மக்கள் தொகையினர் பன்முகப் பரிமாணப் பாதிப்புக்களுக்கு ஆளாகின்றனர். அவற்றிலிருந்து அவர்களால் பாதுகாத்துக் கொள்ள இயலாது உள்ளனர். சந்தேகமில்லாமல் இவற்றின் கூட்டு பாதிப்பு, உலகின் பெரும்பான்மை நாடுகள் பின்பற்றும் புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் விளைவே ஆகும். இதற்கு மேல் இனிமேலும் இக்கொள்கைகளை எதிர்ப்பின்றி விட முடியாது என்பதைச் சமீபத்தில் இந்தியாவில் விவசாயிகள் நடத்திய போராட்டம் உலகிற்குக் காட்டியது.

இந்திய விவசாயிகள் போராட்டம்

        இந்தியாவின் பெரும்பான்மையினவாத வலதுசாரி தீவிர (போலி) தேசியப்பற்று கட்சியான ஆளும் பாஜக, தனது இந்தியக் கார்ப்பரேட்டுகளுக்கு வேளாண்மைப் பிரிவை விற்பதன் மூலம் அழிப்பது எனப் பிடிவாதம் பிடிக்கிறது. பெரும்பாலான இந்திய ஏழைகள் பொது விநியோக முறையை (ரேஷன் பிடிஎஸ்) சார்ந்துள்ளனர்; பிடிஎஸ் முறை, விவசாய உற்பத்திப் பொருட்களை உறுதியளிக்கப்பட்ட ஆதரவு விலையில் (எம்எஸ்பி), கொள்முதல் நிலையங்கள் மூலம், அரசு கொள்முதல் செய்வதால் நடைபெறுகிறது. ஆரோக்கியமான இத்திட்டம் குறைந்த பட்சச் சமூகப் பாதுகாப்பு வளையத்தைப் பெரும்பான்மை இந்திய ஏழைகளுக்கு வழங்குகிறது. இந்திய விவசாயிகள் தலைமையில் நடத்தப்பட்ட வீரம் செறிந்த போராட்ட இயக்கத்திற்குப் பிறகு, ஆளும் கட்சி இந்த விவசாய விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டி வந்தது.

த்தீன் அமெரிக்காவும், ஐரோப்பாவும்

நண்பர்களே, பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி சக்திகளின் எழுச்சி நமக்கு நம்பிக்கை அளிக்கிறது. தற்போது, லத்தீன் அமெரிக்காவின் மக்கள் தொகை அதிகமுள்ள ஏழு நாடுகளான பிரேசில், மெக்ஸிகோ, கொலம்பியா, அர்ஜென்டினா, பெரு, வெனிசுலா மற்றும் சிலி ஆகியவை இப்பிரதேசத்தின் 80 சதவீத மக்கள் தொகையுடன் இடதுசாரித் தலைவர்களின் தலைமையில் அமைந்த அரசுகளால் ஆளப்படுகின்றன. அவர்கள் கூட்டாகப் புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்குப் பெரும் சவாலை முன் வைக்கின்றனர்.

     லத்தீன் அமெரிக்கா நமக்கு நம்பிக்கை அளித்தாலும், இன்றைய நாட்களில் ஐரோப்பா வலதுசாரி அரசுகள் பக்கம் செல்வது அதிகரிக்கிறது. இத்தாலியில் சமீபத்தில் ஜியார்ஜி மெலோனி தேர்ந்தெடுக்கப்பட்டது, மற்றும் அவரது ‘பிரதேர்ஸ் ஆப் இத்தாலி’ கட்சி அதன் வேர்களை வெளிப்படையாகப் பாசிசத் தலைவர் பெனிடோ முஸோலினியிடம் கொண்டுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த ஃபிரான்சு அதிபர் தேர்தலில் அதி தீவிர வலதுசாரி தலைவர் மரைன் லே பென் 41 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். ஐரோப்பாவில் அதி தீவிர வலதுசாரி கட்சிகள் தங்கள் தேசியவாத வார்த்தை ஜாலங்கள், புலம்பெயர்ந்து வருவோருக்கு எதிரான வன்முறை வெறிஉணர்ச்சி ஊட்டல், அதிகாரத்துவப் போக்குகள், பன்முக கலாச்சார எதிர்ப்பு, பாலின உரிமைக்கு எதிர்ப்பு மற்றும் தனித்த தேசிய அடையாளத்தில் உழலுதல் இவற்றோடு குறிப்பிடத்தக்க வேகம் பெற்று வருகின்றன.

போர்களும் இராணுவக் கூட்டுகளும்

            ரஷ்ய – உக்ரைன் போரின் காரணமாக எரிபொருள் மற்றும் உணவு விலைகள் எகிறுவது

ஏற்கனவே இருக்கும் ஐரோப்பாவின் பாதிப்புகளை மேலும் அதிகரிக்கப் போகிறது. (இரண்டாம் உலகப் போரின்) 1945குப் பிறகு, ஐரோப்பிய கண்டத்தின் இராணுவமயமாக்கல் வேகம் அதிகரிக்கிறது, அதனுடன் இராணுவத் தொழில் கூட்டு வளாகங்கள் செழிக்கத் தொடங்கியுள்ளது. (அதாவது, இராணுவத் தளவாட உற்பத்தி மூலம் கொள்ளை லாபம் காண அதற்கேற்றபடி வணிகச் செயல்பாட்டைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுடன் இணைக்கும் கோட்பாடு)

      அமெரிக்காவின் இராணுவ தொழில் வளாகம் பதற்றத்தை ஏற்படுத்தவும், பனிப்போர் மற்றும் போர் போன்றதொரு நிலையைத் திணிக்கவும் முயற்சிக்கிறது. எனவேதான், நேட்டோ இராணுவக் கூட்டு மற்றும் பிற பிரதேசக் கூட்டுகளை வற்புறுத்துவது ஆயுதப் போட்டியையும்  மோதல்களையும் ஏற்படுத்தும் என்று நாம் பார்க்கிறோம். ரஷ்யா – உக்ரைன் போரில் அல்லது சமீபத்திய தைவான் – சீனா மோதலில் அல்லது ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா நாடுகளுடன் அமெரிக்கா கட்ட முயற்சிக்கும் கூட்டணி (க்வாட் அமைப்பு) போன்றவற்றில் அதனை நாம் காணலாம்.

சுற்றுச் சூழலியலில் பாதிப்பு

நண்பர்களே, நமது ஒட்டுமொத்த சுற்றுச் சூழல் காரணமான பெரும் துன்பத்திற்குப் புதிய தாராளமயக் கொள்கைகள் நேரடியாகத் தொடர்புடையது. உலகளாவிய சுற்றுச் சூழலியல் நிலைமை தீவிரமாகக் கவலை அளிப்பதாகும்; அது உடனடியாக அனைத்து அரசுகளும்

கூட்டாக நடவடிக்கை எடுக்கக் கோருகிறது. ஐநா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயல் திட்டம் (யுஎன்இபி) வெளியிட்ட வாயுகள் ‘வெளியேற்ற இடைவெளி அறிக்கை, 2022’, “பாரீஸ் பருவநிலை உடன்பாட்டு இலக்குகளை அடைவதில் இன்னும் பின் தங்கி இருக்கிறோம்” என்று குறிப்பிடுகிறது.  [‘வெளியேற்ற இடைவெளி அறிக்கை’ என்பது சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் கார்பன் டை ஆக்ஸைடு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றுவதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட இலக்கிற்கும், நடைமுறைக்கும் உள்ள இடைவெளியின் அளவீடாகும். அவ்வாறு கட்டுப்படுத்தப்படாவிடில் புவி வெப்பமயமாதல் மோசமாக அதிகரிக்கும் –மொழிபெயர்ப்பாளர்.]

     உலகின் தொடரும் வெப்ப அதிகரிப்பு தீவிரமான பருவநிலைகளை ஏற்படுத்துகிறது. வறட்சி, கடும் வெள்ளம், புயல்கள் மற்றும் பற்றி எரியும் காடுகள் என ஏற்கனவே உலகம் முழுவதும் மனித வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பேரழிவுக்கு உள்ளாக்கி உள்ளன. பருவநிலை அழிவை நிறுத்துவதற்கு நமக்குத் தேவை அரசியல் உறுதி மற்றும் கூட்டு நடவடிக்கை; அந்தத் தேவையைப் பொருத்தவரை நமது உலகத் தலைமையிலும் தேசியத் தலைமையிலும் பற்றாக்குறையே நிலவுகிறது.

நாம் என்ன செய்ய வேண்டும்?

        கூட்டான போராட்டம் மூலம் மட்டுமே நியாயமான மற்றும் அமைதியான உலகிற்கான நமது கண்ணோட்டம் நனவாக்க முடியும். பல நாடுகள் மற்றும் அரசு அமைப்புகளில் நிலவும் சமூக மற்றும் பொருளாதாரச் சமத்துவமின்மைக்கான காரணங்களின் மூல வேரை (‘நோய் முதல் நாடுவது’ போல) நேரடியாகத் தாக்கினால்தான் நியாயமான உலக ஒழுங்கு முறையை ஏற்படுத்த முடியும். அந்தந்த தேசங்களில் சமூகச் சமத்துவமின்மைக்கு எதிரான கூட்டுப் போராட்டங்கள் மற்றும் வலுவான சுகாதாரக் கட்டமைப்புகள், கல்வி முறை மற்றும் உணவு எரிபொருள் பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளுக்கான நமது இணைந்த போராட்டம் உலக ஒழுங்குமுறையில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

     தோழர்களே! பெண்கள் சர்வதேச ஜனநாயக சம்மேளனம் (WIDF), அமைதி, தேசிய இறையாண்மை, ஜனநாயகம் மற்றும் வளர்ச்சிக்கான விரிவான போராட்டத்திலிருந்து, பெண்களின் சமத்துவத்திற்கான போராட்டம் பிரிக்க முடியாது என நம்புகிறது. அதற்கு, அனைத்து வகையான பாரபட்சம் மற்றும் ஒடுக்கு முறையிலிருந்து விடுதலை பெறுவது என்பது ஒரு முக்கியமான அம்சம். உலகம் முழுவதுமுள்ள மக்கள் கடினமான காலத்தில் வாழ்ந்து வருகிறார்கள். தீவிரவாதம், அடிப்படைவாதம், ஏழ்மை, வேலையின்மை முதலிய பிரச்சனைகள் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு தினசரி ஆபத்தை ஏற்படுத்துகின்றன. நெருக்கடியான இந்த எல்லாச் சூழ்நிலைகளிலும் மிக மோசமான பாதிப்புக்கு ஆளாவோர் பெண்களும் குழந்தைகளுமே. நம் முன் இருக்கும் வழி என்ன?

நம்முன் இருக்கும் வழி

      அதற்கான பதில் இதோ, இங்கே வியத்நாமில் 1966ல் பெண்கள் சம்மேளனத்தின் உதவியுடன் நிறுவப்பட்ட மருத்துவ நிறுவனமாகும். அது தாங்கி நிற்கும் பெயர் ‘ஹூ-நெகிப்பூநு’ (HU-nghiPhunu), வியத்நாமிய சொல்லின் பொருள், “நட்பைத் தவிர வேறில்லை.”  இறையாண்மை, சமத்துவம், சமூக நீதி மற்றும் சமாதானத்திற்காக நாம் நம்மை அர்ப்பணிப்போம்! வன்முறை ஆக்கிரமிப்பு, அதிகாரத்துவம் மற்றும் ஏகபோகங்களுக்கு ஆதரவுக்காக மூர்க்கமான போர்க் கொள்கைகளுடன் விளங்கும் ஏகாதியபத்தியத்திற்கு எதிராகப் போரிடுவதற்காக நாம் நம்மை அர்ப்பணிப்போம்!

 


சர்வதேச ஒருமைப்பாடு மற்றும் சமாதானம் நீடு வாழ்க! 

உலகச் சமாதானக் குழு (WPC) நீடு வாழ்க!

பெண்கள் சர்வதேச ஜனநாயக சம்மேளனம்(WIDF) நீடு வாழ்க!

--நன்றி : நியூஏஜ் (டிச.11 –17)
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

.

 

No comments:

Post a Comment