Saturday 24 December 2022

நியூஏஜ் தலையங்கம் -- தனியார் பிரிவின் குரலைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஜி 20 நாடுகள்

 நியூஏஜ் தலையங்கம் (டிச.25 –31)

                                                               தனியார் பிரிவின் குரலைப்
பிரதிநிதித்துவம் செய்யும் ஜி 20 நாடுகள்

         சமீபத்தில் இந்தியத் தலைமைப் பொறுப்பின் கீழ் ஜி –20 அமைப்பின் வளர்ச்சி செயல் குழு கூட்டம் மும்பை பந்த்ரா –குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ உலக மையத்தில் டிசம்பர் 13 –16ல் நடைபெற்றது.  மாநாட்டில் அமைப்பின் உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கலந்து கொண்டனர்.

        ஜி-20 பிரமுகர்கள் விஜயம் செய்யவிருந்த 11 முனிசிபல் வார்டுகளை அழகுபடுத்த ரூ24.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகு விழா கொண்டாட்ட நிகழ்வுகளை மும்பையில் வசிப்பவர்கள் பலமுறை சந்தித்துள்ளனர். ஆனால் இவை நிலையாக இருக்கும் என்ற எந்தத் தோற்ற மயக்கமும் அவர்களுக்கு இல்லை என்பதுடன், வரி கட்டுபவர்கள் என்ற முறையில் அதற்கான இந்தச் செலவுகளையும் அவர்கள்தான் சுமக்கப் போகிறார்கள்.

      மும்பை சாந்தாகுரூஸ், போரிவளி இடையே பாதுகாப்பு நடவடிக்கை பெயரில் – புகழ்பெற்ற மும்பை சேரிப்பகுதிகளில் கோலோச்சும் துன்ப துயரங்களைப் போர்த்தி மூட -- வெள்ளை

துணிகளால் மறைக்கப்பட்ட பல்வேறு பகுதிகள் முளைத்தன. மூடிய திரைகளுக்குப் பின்னே மலையாய் சேறும் சகதியுமான குப்பைகளின் குவிப்பு எனச் செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். அதற்கு மேலும், பல இடங்களுக்குப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்ற கார்கள், தெருக்களில் குழந்தைகள் ஓடியாடியபோதும், ஆபத்தைப் பொருட்படுத்தாது அதி வேகத்தில் சென்றன. இதனை மேற்பார்வை செய்தவர்களின் ‘செய்ய வேண்டிய செயல்களின் பட்டியலில்’ இந்த ஆபத்துகள் பற்றிய கவலைக்கு இடமில்லை. முழுமையாக இப்பகுதியில் இருந்து தினசரி வியாபாரம் செய்வோர் விரட்டப்பட, ஆக்கிரமிப்பாளர்களின் இடங்கள் புல்டோசரால் இடிக்கப்பட்டு, எங்கேயும் செல்ல முடியாதாவாறு கேட்டுக்குள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

      இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஜி-20 தலைவராகத் தேர்தெடுக்கப்பட்ட பின் நடக்கும் முதலாவது கூட்டத்தில், அரசுகள் மற்றும் உலகின் பெரும் பொருளாதாரங்களின் 19 வங்கி ஆளுநர்கள், ஐரோப்பிய யூனியன் கலந்து கொள்கின்றன. ஜி 20 அமைக்கபட்டது முதலாகப் பொருளாதார அதிகாரத்தின் விளிம்பிற்கு வெளியே உள்ள நாடுகளைத் தவிர, உலகிற்கான பொருளாதார வழிகாட்டுதல்களை வழங்குவதற்காகத் தானே நியமித்துக் கொண்ட குழுவாக உள்ளது. பன்னாட்டுக் கார்ப்பரேஷன்கள் ஜி-20குள், அதன் சிபார்சுகள் மற்றும் முடிவுகளில் மட்டுமின்றி, பெண்களுக்குப் பொருளாதார ரீதியில் அதிகாரம் அளித்தல் போன்ற பிரச்சனைகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றன. சிறப்பு அழைப்பாளர்களில் சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் வழக்கமாக அழைக்கப்படுகின்றனர்.

    கூட்டாக மேற்கண்ட அனைவரும் சுதந்திர வர்த்தகப் பிராந்தியங்களுக்காக மற்றும் பொருளாதார வளர்ச்சியை முக்கிய நிகழ்ச்சி நிரலாக வைத்து முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கின்றனர். சமூக மற்றும் பொருளாதார நீதி மற்றும் மனித உரிமைகளுக்கு இங்கே இடமில்லை. சுதந்திர வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான உடன்பாடுகள் பொதுவாக மக்களின் வாழ்வை மட்டுமின்றி, சுற்றுச் சூழலியலையும் பாழ்படுத்தி அழிப்பதாக நிரூபிக்கப்பட்டிருப்பது தெளிவு. மக்கள்கூட்டத்தின் அதி பணக்காரப் பிரிவுகளுக்கு மட்டும் உதவி, அதன் நலன்களுக்கு ஆதரவாக ஜி-20 இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை அவ்வமைப்பு மற்ற பெரும்பான்மை மக்களின் நலன்களைப் பலியிட்டே செய்கிறது.

    1999ல் அமைக்கப்பட்டபோது, உலகப் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியைத் தீர்பபதற்கு உதவும் வகையில், சரியான கொள்கைகளை வடிவமைத்து திருத்தங்களை மேற்கொள்ள அரசுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் சந்திக்கும் கூட்டமாக நடத்துவதே அதன் நோக்கம். ஜி-20ன் தலைமைப் பொறுப்பை இந்தியா இந்த ஆண்டு டிசம்பர் 1 முதல் 2023 நவம்பர் 30வரை வகிக்கும். இந்தத் தலைமைப் பொறுப்பு, அமைப்பில் இடம் பெற்ற நாடுகளுக்குச் சுழற்சி முறையில் ஓராண்டிற்கு வழங்கப்படுகிறது. உறுப்பு நாடுகள் ஜி-20 நாடுகளுக்குள், எந்நாட்டிலும் முதலீடு செய்ய எத்தடையும் இல்லை.

    ஜி-20ன் ஒவ்வொரு நாடும் அதற்கான சொந்த சமூக-பொருளாதார முறைமையைக் கொண்டுள்ளன; அது ஒரு சில நாடுகளைத் தவிர அவசியம் ஜனநாயக முறையில் இல்லை. அவற்றுள் பல நாடுகளில் சர்வாதிகாரம் அல்லது ஏதேச்சிகாரம்கூட ஆட்சியில் உள்ளன. மேலும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் முழுமையான அதிகாரம் உடைய மன்னர்களால் ஆளப்படுகின்றன.

    தலைமை வகிக்கும் நாட்டின் மீது அத்தலைமை, பெருமைமிகு மணிமகுடம் எதனையும் அணிவித்ததாக எங்கும் சுட்டிக்காட்ட முடியாது – கூட்டங்களில் / விவாதங்களில் கலந்து கொள்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க அந்நாடு செய்யும் மிகப் பெரிய செலவுத் தொகை ஒன்றைத் தவிர, வேறெதுவும் இல்லை. ஜி 20 அமைப்புக்கு அதிகாரம் இல்லை என்பது, தலைமை ஒவ்வொரு ஆண்டும் மாற்றி அளிக்கப்படுவதன் முக்கியமான அடையாளம். எனவே ஒவ்வொருவருக்கும் சுழற்சி முறையில் வரிசையில் தலைமை கிடைக்கும் என்பதே பொருள். தலைமை அளிக்கப்படுவதற்கான ஒரே குணாம்சம், அதன் சொந்த செலவில் மற்றவர்களை மகிழ்ச்சியாக வரவேற்று நடத்தும் தகுதி என்பதே.

    வர்த்தகம் குறித்து விவாதிக்க அமைக்கப்பட்ட ஜி 20ல், தற்போது வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள (அமெரிக்கா மற்றும் சீனா) நாடுகள் அல்லது மற்றவர்களுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடுகளும் இடம் பெற்றுள்ளன. பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்க

கடமைப்பட்ட ஜி20 அமைப்பில், பருவநிலை பாதிப்புக்குக் காரணமான கார்பன் உமிழ்வைத் தொடர்ந்து செய்யும் பருவநிலை வில்லன்களான நாடுகளும் இடம் பெற்றுள்ளன. இராணுவ உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்ட (ஐரோப்பா மற்றும் அமெரிக்கா) நாடுகளும் இடம் பெற்றுள்ளதன் பொருள், ஒருவர் மீதான போர் தாக்குதல் மற்ற அனைவர் மீதும் தாக்குதலைத் தொடங்குவதாகும் என்பதே. குறிப்பான நாடுகளுக்கு (ரஷ்யா) எதிராக உடன்பாடுகளைக் கையெழுத்திட்டுள்ள நாடுகளும் மற்றும் அந்நாடுகளுக்கு எதிராக ஆயுதங்களை அளிக்கும் விரோதிகளும் ஜி 20ல் உள்ளன. மேலும் இந்த அமைப்பில் தங்களுக்குள் எல்லைப் பிரிவுகள் இல்லாமல் மக்கள் சுதந்திரமாகச் செல்லவும், பணியாற்றவும், ஒருவருக்கொரு நாட்டில் சுதந்திரமாக முதலீடு செய்யக் கூடிய நாடுகளும் (ஐரோப்பிய யூனியன்) இடம் பெற்றுள்ளன.

ஜி 20ன் இப்பின்னணியில், நாம் நினைவில் கொள்ள வேண்டியது, இந்நாடுகளுக்கே கார்ப்பரேட்கள் வருவது வளர்ச்சிக்கான நல்ல செய்தி. வர்த்தகம்20, அல்லது B20 (Business20) தன்னை ஜி 20 சமூகத்திற்கு “தனியார் துறையின் குரலாக” முன்நிறுத்துகிறது. உலகின் மிகப் பெரிய கார்ப்பரேஷன்கள் ஜி20 நாடுகளிலே தளம் அமைத்து, குறிப்பிடத்தக்க பொருளாதார அதிகாரத்தையும் கொண்டுள்ளன என்பது சுட்டிக் காட்ட வேண்டிய முக்கிய விஷயமாகும்.

1990களின் பிற்பகுதியில், பொருளாதாரப் பிரச்சனைகள் மேற்கத்திய எல்லைகளோடு நின்றுவிடாது என்பது கொள்கை வகுப்பாளர்களுக்குத் தெளிவாகப் புரியத் தொடங்கியது. மேலும் ஏழு நாடுகள் குழுவின் (ஜி 7) மரபார்ந்த கூட்டங்கள் புதிய சவால்களுக்கு, ஈடுகொடுக்க முடியாத, தவறான பொருத்தப்பாடு உள்ளவை எனப் புரிந்தது. அதனைத்தான் வலிமிகுந்த மெக்சிகோ பெசோவின் (மெக்சிக்கோவின் நாணயம்) வீழ்ச்சியும் ஆசிய நிதி நெருக்கடியும் மற்றும் உருவாகி வளர்ந்து வரும் பொருளாதாரங்களும் அடிக்கோடிட்டு உணர்த்தின.

மேற்கத்திய நாடுகள் தாங்களே சொந்தமாகக் கையாள முடியாத மேற்கத்திய நெருக்கடிகளின் காரணமாகவே ஜி 20 என்ற அமைப்பு இருக்கிறது.

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்  

 

.

 

No comments:

Post a Comment