Sunday 1 January 2023

நியூஏஜ் தலையங்கம் -- லெனின் வழியில் ஒன்றுபடுதல் மற்றும் போராடுதல்...

 

நியூஏஜ் தலையங்கம் (2023, ஜன.1—7)

லெனின் வழியில்

ஒன்றுபடுதல் மற்றும் போராடுதல் …

            

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1925, டிசம்பர் 26ல் அமைக்கப்பட்டது. இன்னலுற்ற இந்திய மக்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியச் சக்திகளுக்கு எதிராக எப்படி ஒன்றுபட்டனர், போராடினர் என அந்த நாள் நமக்கு நினைவுறுத்துகிறது. வர்க்க வேறுபட்ட சமூகத்திற்கும் சுரண்டலுக்கும் முடிவு கட்டி, மக்களுக்கான ஒரு புதிய சமூகத்தைப் படைக்கப் போராடும் உறுதிப்பாடு கடந்து வந்த பல்லாண்டுகளில் நம்மை உயிர்ப்பாய் வைத்துள்ளது. இவ்விழுமியங்களுக்காகவே வாழ்ந்தோர் மற்றும் உயிர்த் தியாகம் புரிந்தோர் அனைவருக்கும் நாம் செவ்வணக்கம் செலுத்துவோம்!

            கடந்துவந்த ஆண்டுகளில் தத்துவம் மற்றும் செயல்பாட்டின் வழி, காலத்திற்கேற்ற மாற்றங்களுடன், போராட்டத்தின் கட்டங்கள் மேலும் வலிமைபடுத்தப்பட்டன. அதிலிருந்து ஒவ்வொரு கட்சிப் பேராயத்திலும் ஒற்றுமை மற்றும் போராட்டத்திற்கான கட்டாயமான தேவை வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது.

        (போராட்டக்) கட்டங்களுக்காக, நமது நாடு உட்பட தேசிய இயக்கத்தை ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளின் பரந்துபட்ட முன்னணியாக லெனின் வரையறுத்தார். இரண்டாவது சர்வதேசக் கம்யூனிச அகிலத்தில் (காமின்டர்ன்) காலனிய நாடுகளின் கம்யூனிஸ்ட்கள் கடமைகளை எடுத்துரைத்தபோது லெனின் அவ்வாறு வரையறுத்தார். அத்தருணத்தின் தேவையாய் இருந்த ஐக்கிய முன்னணியின் முக்கியத்துவத்தைச் சிபிஐ நன்கு உட்கிரகித்துத் தனது திட்டங்களில் உண்மையான லெனினியவாதியாக அதற்கேற்ப முடிவெடுத்தது. காலனியத் தாக்குதல்களை எதிர்கொண்டு, இந்திய மக்கள் கூட்டம் விடுதலைக்கான போராட்டத்தின் நடுவே இருந்தபோது, காலனிய ஆட்சிக்கு எதிராக நாடாளுமன்ற மற்றும் அரசியல் அமைப்புச் சட்ட வழியில் அமைந்த ஆட்சிக்கு அவர்கள் உறுதியளிக்கப்பட்டார்கள்.

         ஏழாவது உலகப் பேராயத்தின்போது, இந்தியச் சூழ்நிலைகளில் கம்யூனிஸ்ட்களின் கடமை குறித்துப் பேசிய ஜார்ஜ் டிமிட்ரோ, “…(கம்யூனிஸ்ட்கள்) தங்கள் அரசியல் மற்றும் அமைப்புச் சுதந்திரத்தைக் கொண்டிருக்கும்போதே இந்தியத் தேசியக் காங்கிரஸ் இயக்கத்திற்குள், அவர்களிடையே தேசியப் புரட்சிகர அணி ஒன்று திரண்டு அமையும் நிகழ்முறைக்கு வசதியாக, (கம்யூனிஸ்ட்கள்) தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்” என்றார். மேலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒட்டுமொத்த மக்களின் தேசிய புரட்சிகர இயக்கத்தை வளர்ப்பதற்கும் அது முக்கியம் என்றார்.

            இரண்டாவது உலகப் போரின் கருமேகங்கள் சூழத் தொடங்கிய 1935ல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பொதுச் செயலாளர் ஜார்ஜ் டிமிட்ரோ, தமது புகழ்பெற்ற ஐக்கிய முன்னணி தியரி (ஆய்வறிக்கை)யுடன் வந்தார். ஏகாதிபத்தியம் எதார்த்தமான சக்தியாக, அதுதான் பாசிசமாக, உருவெடுத்து ஒரு புதிய திருப்பத்தை மேற்கொண்ட சூழ்நிலை அது. உலகத்தின் ஒவ்வொரு ஜனநாயக அமைப்பு முறைமைக்கும் சவாலை முன்னிறுத்தி பாசிசச் சக்திகள் வளர்ந்தன. அதனை அடக்க பிரதான தேவை பதிலடியாகப் பாசிச எதிர்ப்பு முன்னணி வளர்ந்தது. அதன் பின்னர் மூன்றாண்டுகளில் 1939களில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.

       

     உலகின் முதலாவது பாசிச எதிர்ப்பு அணிவகுப்பை நடத்திய பெருமை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியையே சாரும் –மும்பை வீதிகளில் கிர்ணி காம்கர் தொழிற்சங்கத்தின் 70ஆயிரம் தொழிலாளர்களும் அந்நகரின் மக்களுமாகப் பாசிசத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பி நடந்த அணி வகுப்பை 1939ல் ஏற்பாடு செய்து நடத்தியது, சிபிஐ.

    காமின்டர்னின் மேடையிலிருந்து டிமிட்ரோ என்ன பேசினாரோ அந்த வழிகாட்டலில், சிபிஐ தலைமையின் கீழ் தேசிய முன்னணிக் கோட்பாடு – தேசியப் பரப்பில் முற்போக்குச் சக்திகள் ஒன்றுபட்டதுடன் இணைந்து – உருவானது என்பது தெளிவு. எழுத்தாளர்கள், மாணவர்கள் மட்டுமின்றி கலாச்சார ஊழியர்களும் அமைப்பு ரீதியாகத் திரண்டனர். இந்தியக்

கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கட்சிப் பேராயம் 1943ல் நடைபெற்றபோது பண்பாட்டு மறுமலர்ச்சி கட்டத்துள் சிபிஐ நுழைந்தது – இந்திய மக்கள் நாடக மேடை  (இப்டா) பிறந்தது. அதன் பிறப்பு வீழ்த்த முடியாத நம்பிக்கையின் அடையாளம், மற்றும் அதனோடு நிற்கவில்லை. 1946 –47ல் அனைத்திந்திய கிசான் சபா மேற்கு வங்கத்தில் விவசாயிகளின் போராட்டத்தை நடத்தியது. அது மட்டுமா சிபிஐ தலைமையில் வரலாற்றுப் புகழ்மிக்க தெலுங்கானா ஆயுதப் போராட்டமும் (1946 –51) நடைபெற்றது.

            வங்கப் பஞ்சத்தின் கொடுமைகள், போர் மற்றும் கிளர்ச்சி செய்த மக்களுக்கு எதிரான காலனிய ஆட்சி அட்டூழியங்களின் ஊடாகவும் விடுதலைக்கான தேசிய நீரோட்டமே அதன் ஒன்றுபட்ட போராட்டத்தை உயிர்ப்பாய் நடத்தியது. முழுமையான சுதந்திரத்திற்கான தங்களின் கனவு நனமாகப் போகிறது, விடியல் நெருங்கி விட்ட தருணம் அது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

            1947 ஆகஸ்ட் 15ல் நாடு தேசிய விடுதலை பெற்றது. 1952ல் முதலாவது பொதுத் தேர்தல். நாடாளுமன்றத்தில் சிபிஐ முக்கிய எதிர்க்கட்சியாக உருவானது. தேசியப் பரப்பில் முக்கிய மாற்றங்கள் அரங்கேறின, வர்க்க உறவுகள் புதிய மட்டங்களுக்கு மாறின. பரிசீலனை மற்றும் செயல்பாட்டிற்கான வரைபடத்தைத் தயாரிக்க வேண்டியதன் தேவை இருந்தது. ஏறத்தாழ குறைந்த மட்டங்களில் தேசத்தின் பொருளாதாரம் மந்த கதியில் நடந்தது;

வேளாண்மையை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலை, வேளாண் துறை மட்டுமே தேசப் பொருளாதாரத்திற்கு 48.1 சதவீதப் பங்களிப்பை வழங்கியது. தொழில்துறை உற்பத்தி வெறும் 3 சதவீதம் மட்டுமே. மத்தியில் தேசிய பூர்ஷ்வா மட்டுமே முழுமையாக அதிகாரத்தில் இருந்தது. மத்தியதர வர்க்கத்தின் பெரு முதலாளித்துவம் வலிமையான நிலப்பிரபுத்துவத் தொடர்பில் இருந்தது, ஆட்சியிலும் பங்கு வகித்தது.

            புதிய பாதைக்கான தேடுதல் விரைவாகத் தொடங்கப்பட்டது. வேகமான பொருளாதார மீட்பைக் கொண்டு வருவதில் முதலாளித்துவப் பாதை தோல்வி அடைந்து, தேக்கநிலையில் சரிந்து வீழ்ந்தது. முற்போக்கு நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் வலதுசாரி பிற்போக்கு எதிர்க்கத் தொடங்கியது. ஆனால் தேசிய பூர்ஷ்வாகள் மத்தியில் தேசபக்த உணர்வுடைய பலர் அதிகாரப் பகிர்வில் அங்கம் வகித்ததால், அவர்கள் முற்போக்கு இலக்குகளை அடைவதில் ஆதரவளித்தனர் என்பதும் உண்மை. அவர்கள் இந்திய ஏகபோகவாதிகளான ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் நிலப்பிரபுக்களுடன் விரோத எதிர் உறவுகளைக் கொண்டிருந்தனர்; இது ஏகபோக விரோத, நிலப்பிரபுத்துவ விரோத மற்றும் ஏகாதிபத்திய விரோதச் சக்திகளுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வாய்ப்பாகி, வலதுசாரிக்கு எதிரான வலிமையான அமைப்பானது.

ஜனநாயகப் புரட்சியை நோக்கிய இந்திய மக்கள் பயணத்தின் நகர்வு தொடங்கியது. இதில் இலாபங்களும் ஏற்பட்டன. ஜனநாயக அமைப்பு நிறுவனங்கள் கட்டி எழுப்பப்பட்டன. ஆராய்ச்சி நிறுவனங்கள் விஞ்ஞான அறிவின் மரபுகளுக்குப் பங்களித்தன. அரசு பொதுத் துறை நிறுவனங்கள் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய எஃகு, உரம், மருந்துகள், ஜவுளி,
சிமெண்ட் முதலான உற்பத்தியில் முந்திச் சென்றன. அப்படி உற்பத்தி செய்த ஆலைகளை அன்றைய
பிரதமர் ஜவகர்லால் நேரு இந்தியாவின் நவீன ஆலயங்கள் என்று பெருமையுடன் அழைத்தார். அப்படிப் போற்றிப் புகழ்ந்த நேருவுக்குத் தெரியாது, அதே ஆலயங்கள் ஒரு காலத்தில் சந்தையில் கூவி விற்பனைக்கு வைக்கப்படும் என்பது. கடந்த பல ஆண்டுகளாக ஆளும் சக்திகள் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொள்வதை நாடு சந்தித்து வருகிறது.

            நமது கட்சியின் 24வது பேராயம் விஜயவாடா நகரில் 2022 அக்டோபர் 14 முதல் 18 வரை நடைபெற்றது. அம்மாநாட்டில் இக்கேள்விகள் விரிவாக விவாதிக்கப்பட்டு ஜனநாயக உரிமைகளுக்கான நமது போராட்டம்,

ஜனநாயகப் புரட்சியிலிருந்து வேறுபட்ட ஒன்றல்ல என்றும்; அதற்கு மாறாக, அவை ஜனநாயக அமைப்புகளை வலிமைப்படுத்துவதற்கான உகந்த சூழல்களை உருவாக்கும் பரந்துபட்ட ஜனநாயகப் புரட்சியின் பிரிக்க முடியாத அங்கமாகும் என்ற இறுதித் தீர்மானத்திற்கு வந்தது. பேராயத்தில் நடைபெற்ற விவாதங்களில் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் அச்சுறுத்தும் பங்கு சரியாக வலியுறுத்தப்பட்டது. வகுப்புவாதப் பாசிசம் மற்றும் அதன் வலதுசாரி ஆட்சியும் தெளிவாக வரையறுக்கப்பட்டது.

       இன்றைய கடினமான நாட்களில் சாத்தியமான பரந்துபட்ட ஐக்கிய முன்னணி கட்டி அமைக்கப்பட வேண்டும். இவை அனைத்திலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை அடிப்படையில் சுதந்திரமான பங்களிப்பை வழங்கும்.

            தொடங்கியுள்ள புத்தாண்டில் நமது இலக்குகளில் வெற்றிபெற அயராது உழைப்போம், அனைவருக்கும் புத்தாண்டு புரட்சிகர வாழ்த்துகள்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர் 

No comments:

Post a Comment