Saturday 17 December 2022

நியூஏஜ் தலையங்கம் (மற்றும் சூழலியல்) -- வளர்ச்சி மற்றும் இயற்கையின் இயங்கியல்

 நியூஏஜ் தலையங்கம் (டிச.18 --24)

வளர்ச்சி மற்றும் இயற்கையின் இயங்கியல்

            

    பெரும்பாலான அனைத்து வளர்ச்சி நடவடிக்கையிலும் அடிநீரோட்டமாக எங்கோ ஒரு நட்டம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு அடுத்த தொடக்கமும் அதற்கு முன்பு இருந்த நிலையை மறுப்பதன் அடிப்படையில் அமைகிறது. நம் கண் எதிரே உறுத்தும் ஓர் உதாரணம்,

புவி வெப்பமயமாதல். அடர்ந்து பரவும் (ஆலை மற்றும் வாகனங்களின்) புகை, நூற்றாண்டுகளாக மனித வாழ்வின் நாகரீகத் தொட்டில்களாய் ஓடிய நதிகள், ஆறுகள், ஓடைகள் வறண்டு கிடக்க, விளைவு சூழலியல் கடுமையாக மாறி, புவியைக் காக்கும் ஓசோன் படலம் அரித்து அழிக்கப்படுகிறது; மரங்களைப் பயன்படுத்தவும், விளை நிலங்களுக்காகவும் – அமேசான் உட்பட-- வெப்ப மண்டலக் காடுகள் வெட்டி அழிக்கப்படுகின்றன; மேலும் கடல்வாழ் மீன் உயிரினங்கள் மற்றும் பிற பொது பயன்பாடு செல்வாதாரங்கள் வீழ்ச்சி அடைந்து அழித்தொழிக்கும் விகிதம் அதிகரிக்கிறது,

        இந்த இடத்தில்தான் ஃபெடரிக் ஏங்கெல்ஸ், தமது இயற்கையின் இயங்கியலில் விவரித்த இயற்கைக்கு விரோதமான மனித இயல்பு பற்றிக் கூறியதன் பொருத்தப்பாடு வருகிறது: “…மனிதர்கள் அதை (இயற்கையை) அழித்து, அப்படிச் சரிசெய்யப்பட்ட மண்ணில் விதைக்கிறார்கள் அல்லது மரங்கள் அல்லது கொடிகளைப் பயிரிடுகிறார்கள்.” மனிதர்களின் எல்லா நடவடிக்கைகளும் ஏறத்தாழ திட்டமிட்டவாறு நடத்தப்படும்போது, விலங்குகள் திட்டமிடுவதில்லை. ஏங்கெல்ஸ் கூறுகிறார், “விலங்குகள் வெறுமே சுற்றுச்சூழலைப் பயன்படுத்துகின்றன, தங்கள் இருப்பால் அச்சூழலில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன; தான் ஏற்படுத்திய மாற்றங்கள் மூலம் அதன் மீது மனிதன் ஆளுகை செலுத்தி, தன் தேவைக்குச் சேவையாற்றச் செய்கிறான். அதுதான் மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையே உள்ள இறுதி முக்கியமான வேறுபாடு: மீண்டும் ஒரு முறை மனித உழைப்பே இந்தக் குறிப்பான வேறுபாட்டைக் கொண்டு வந்தது.”

    இதனோடு நிறுத்தாத ஃபெடரிக் ஏங்கெல்ஸ் தொடர்ந்து சொல்கிறார், “எனினும், இயற்கையின் மீது மனிதன் சாதித்த அளப்பரிய வெற்றிகளுக்காக நம்மை நாமே அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து தற்பெருமை பேசி தருக்கித் திரிய வேண்டாம். அத்தகைய ஒவ்வொரு வெற்றிக்காகவும் இயற்கை நம்மீது பழிவாங்க உள்ளது. ஒவ்வொரு வெற்றியும், முதலாவதாக நாம் விரும்பிய பலனைத் தருகிறது, உண்மைதான்; அடுத்த இரண்டாவது மூன்றாவது கட்டத்தில், அது மிக வித்தியாசமான மற்றும் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது –பல நேரங்களில் அந்த விளைவு முதலாவதை (பலனை) ரத்து செய்வதாக உள்ளது.”

    ஏங்கெல்ஸ் மேலும் சுட்டிக் காட்டுகிறார், இயற்கையின் விதிகளை நன்கு புரிந்து கொண்டால், இயற்கையின் மீது நமது நடவடிக்கைகளின் உடனே மற்றும் நீண்ட கால

விளைவுகளைப் பற்றி சமூகம் மேம்பட்ட பார்வையைப் பெறும். இயற்கையான மற்றும் சமூக ரீதியான அம்சங்கள் இடையேயான தொடர்புகளில் உள்ள சிக்கல்களைப் பற்றியும் விவாதிக்கும் அவர், இரண்டாவதான சமூக அம்சங்களுக்குப் பெரும் முக்கியத்துவம் தருகிறார். செவ்வியல் அரசியல் பொருளாதார மட்டத்தில் எழும் கேள்விகளை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பது, மிகுந்த முக்கியத்துவம் உடையது. ‘‘முதலாளித்துவத்திலும், முதலாளித்துவத்திற்கு முந்தைய பிற எல்லா சமூக -பொருளாதார அமைப்புகளிலும், ஒருவரின் முக்கியமான அல்லது உடனடி அக்கறை, உழைப்பு மற்றும் உற்பத்தியின் நேரடியான மற்றும் உடனடி விளைவுகளைப் பற்றியதாகவே இருந்தது, அவர்கள் நீண்ட காலச் சூழலியல் தாக்கங்கள் குறித்துக் கவலைப்படவில்லை’’ என்கிறார்.

        உற்பத்தித் தளங்கள், பண்டமாற்றை மட்டுமே நோக்கிய உடனடி உற்பத்தி மற்றும் இந்தப் பண்டங்களில் விற்பனைகள் மீதான மனிதச் செயல்பாடுகளின் சமூக விளைவுகளைப் பற்றி மட்டுமே செவ்வியல் அரசியல் பொருளாதாரம் ஆராய்கிறது’ என்கிறார் ஏங்கெல்ஸ். க்யூபாவில் ஸ்பானிய தோட்டத் தொழிலாளர்கள், மொட்டையாக பாறை தெரியுமளவு வயல்களை எரித்தது மட்டுமே அவர்களின் அக்கறையாக இருந்தது என்ற உதாரணத்தைச் சுட்டிக் காட்டும் அவர், “தற்கால உற்பத்தி முறையில் உடனடி மற்றும் மிக உறுதியான முடிவுகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்ளப்படுகிறது” என்கிறார்.

        காரல் மார்க்சும் பிரிட்டிஷ் முதலாளித்துவச் சமூகத்தின் சுற்றுச்சூழலியல் ஓட்டைகள் குறித்த விரிவான தகவல்களை வெளிப்படுத்தினார். சுற்றுச் சூழல் மாசடைதல் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் விபரங்களை ஏங்கெல்சுடன் சேர்ந்து வாதிடும் மார்க்ஸ், தொழில்துறை உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தி இரண்டிற்கும் இடையே வலிமையான தொடர்பு இருப்பது

முக்கியமானது என்றார். உண்மையில், தத்துவவாதிகளும் விஞ்ஞானிகளுமான மார்க்சும் ஏங்கெல்சும் சமூகத்தை ஆராய்ந்து பரிசீலித்து, “கவலை அளிக்கும் நிலைக்கு முதலாளித்துவ சமூகமே பொறுப்பு” என நிறுவியுள்ளனர். சுரண்டும் சமூக -- பொருளாதார முறைமையில் மாற்றத்தைக் கோர, ஒடுக்கப்பட்ட மக்கள் திரளை விஞ்ஞான முறைப்படி திரட்டுவதற்கான செயல்திட்ட வரைபடத்தை, மார்க்ஸ் –ஏங்கெல்ஸ் ஆகிய இரட்டையர்களே தயாரித்து அளித்தார்கள். தொழில் துறை சமூகத்தின் சுற்றுச் சூழலியல் ஆபத்துகளை விஞ்ஞான முறைப்படி ஆராய்ந்து முன்கணித்து அவர்கள் கூறிய அனைத்தும் (அடுத்தடுத்து) உண்மையாயின.

        சுனாமி, நிலநடுக்கங்கள், வறட்சி மற்றும் பெரும் வெள்ளம் என எல்லாம் இப்போது சாதாரணம்; ஒவ்வொரு நிமிடமும் காடுகளின் நீண்ட பரப்புகள் பற்றி எரிகின்றன, நச்சு வாயுகள் தொற்றுகளைப் பரப்பி சூழலை விஷமாக்கி பெருந்தொற்றுகளை அதிகரிக்கின்றன. அராஜக (முறை) ‘வளர்ச்சி’யின் பின்விளைவுகள் கட்டவிழ்த்து விடப்படுவதையே இந்த அனைத்துப் பேரழிவுகளும் சுட்டிக் காட்டும் உண்மை. சுற்றுச் சூழலியல் பிரச்சனைகளை முதன்மை அக்கறையுடன் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இயற்கையின் மீதான அச்சுறுத்தல், புவி வாழ்வின் மீதான அச்சுறுத்தலாகிவிட்டது. பிரபஞ்சத்தின் பல அடுக்குகளான வளி மண்டலம் (atmosphere), புவியின் உயிரினங்கள் வாழும் பரப்பு (biosphere) மற்றும் அதன் இரண்டின் மீது கட்டப்படும் தத்துவார்த்த மனித உணர்வுநிலை நுஸ்பியர் (noosphere) எனப் பல்வேறு பரிமாணங்களில், ஒருக்கால், முழுமையான மாற்றம் தேவைப்படலாம். நவீனத்துவத்தின் இறுதியில் நாம் நுழைந்து, பின்நவீனத்துவ நாட்களின் உதவியையும் ஈடுபாட்டையும் கோரி நிற்கும்போது, கூட்டுச் சிந்தனை மெல்ல கடந்த காலத்திற்குத் தள்ளப்பட்டுவிடுகிறது. (அதாவது, பின்நவீனத்துவம் ஒருவகையில் சுற்றுச் சூழலியல் பாதிப்பை அக்கறையின்றி புறக்கணிக்கிறது எனலாம். ‘புவிவெப்பமயம், அதனால் வெள்ளம், வறட்சி வருகிறது … அதனால் என்ன’ என்பது போன்ற மேம்போக்கு –மொழிபெயர்ப்பாளர் இணைப்பு)

            கடைசி வாய்ப்பை ஒரேயடியாக ஆட்சி அதிகாரம் எடுத்துக் கொள்கிறது. முழுமையான அணுகுமுறை சுயநலவிரும்பிகளின் நலன்களுக்குச் சேவை செய்யும் வழிமுறைகளை நோக்கி மடை மாற்றப்படுகிறது. இதனை அம்பலப்படுத்தி வெட்ட வெளிச்சமாக்குகிறது, சமீபத்திய வன நிலங்கள் விற்பனை. வனநிலங்களின் விற்பனை பேரம் முடிந்து, விலை வசூலிக்கப்படும், ஆனால் அந்தப் பிரச்சனை பொதுப் பட்டியலின் கீழ் இருப்பது உண்மையானாலும், உள்ளூர் அரசுகளுடன் அது பற்றிய விபரங்கள் எதுவும் பகிர்ந்து கொள்ளப்படாது – இத்தகைய நிகழ்வுகள் பல. இதில் பாத்தியதையுள்ள பாதிக்கப்பட்ட வனத்தில் வசிக்கும் வனவாசிகளின் ஒப்புதல் பெறுவதைப் பற்றி அக்கறை ஏதுமில்லை, அதன் சட்டரீதியான பக்கமும் காற்றில் பறக்கவிடப்படுகிறது.

        சூழலியலைப் பாதுகாக்க நாட்டின் பரப்பில் குறிப்பிட்ட சதவீத காடுகள் இருப்பது அவசியம். காடுகள் அழிக்கப்படாமல் பாதுகாக்க, வனநிலங்கள் பிரத்தேக ஒதுக்கீட்டிற்கான சட்டங்கள் உண்டு. ஆனால் இன்றைய தருணத்தின் சூழல் நெருக்கடியைச் சமநிலைக்குத் 

திரும்ப கொண்டு வருவதற்கு மிக முக்கிய தேவைக்கு மாறாக, ஒதுக்கீடு செய்யப்பட்ட வனநிலங்களை, காடுகளின் பயன்களுக்கு அல்லாத பிற பயன்பாட்டிற்கு அனுமதிக்கும் வகையில்  சட்டங்கள் திருத்தப்படுகின்றன. குரல்வளையை நெரிப்பதுபோல விரைவாக நிலைமை கடுமையாக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் வனங்கள் (பாதுகாப்பு) விதிகள், 2022ல் கொண்டுவர உத்தேசித்துள்ள மாற்றங்களின் பொருள், வனவாசிகளை வாழ்வின் இறுதிக்குத் தள்ளுவதே; இதன் விளைவு, காடுகளில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே அல்ல, மாறாக ஒட்டு மொத்த சூழலியலுக்கே இறுதியாகிவிடும்.

இயற்கை அதன் அத்தனை கொடைகளையும் ஏறத்தாழ இழந்து நிற்கிறது. அது, “இனிய பொழில்கள், நெடிய வயல்கள்  எண்ணரும் பெரு நாடு / கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றி தரும்” நாட்டின் காடுகள், நதிகள் மற்றும் மலைகள் மட்டுமே செல்வாதாரங்களை இழந்து நிற்கவில்லை; ஆனால் முழுமையான மனித வாழ்விடம் சவாலைச் சந்திக்கிறது – அசாதாரணமான மிகப் பெரிய அளவிலும் மற்றும் ஏறத்தாழ கண்ணுக்குப் புலப்படாமலும் சவால் நிற்கிறது! புவி காக்கப் புறப்படுவீர்!

--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

           

No comments:

Post a Comment