Tuesday 20 December 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 75 -- காளிசரண் கோஷ்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 75                                                    

 
                            காளிசரண் கோஷ் –
ஃபிரெஞ்ச் எதிர்ப்புப் போராட்டத் தலைவர்

                                                                   --அனில் ரஜீம்வாலே

-- நன்றி : நியூஏஜ் (நவ.6 –12)

          தலைமறைவு புரட்சிகர இயக்கத்தில் ஈடுபட்ட காளிசரண் கோஷ், திங்கோரி முகர்ஜி, பவானிமுகர்ஜி, உமேஷ் நந்தி போன்ற புரட்சியாளர்களால் சந்தன்நாகூரின் கம்யூனிஸ்ட் கட்சி  தலைமை தாங்கப்பட்டது. (படம் நன்றி தி இந்து, ஒரு புத்தக மேல் அட்டை)

        1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் இந்தியா விடுதலை அடைந்தாலும், பிரான்ஸ் மற்றும் போர்த்துகீசிய காலனிய ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளின் மக்கள் தங்கள் சுதந்திரப் போராட்டத்தை அதன் பிறகும் தொடரவே செய்தனர். அவர்கள் தங்கள் விடுதலையை முறையே 1954 மற்றும் 1961ல் பெற்றனர்.

        ஃபிரெஞ்ச் இந்தியா என அறியப்படும் பகுதியில் நடந்த விடுதலைப் போராட்டத்தின் பிரபலத் தலைவர்களில் காளிசரண் கோஷ் ஒருவர். ஃபிரெஞ்ச் இந்தியா என்பது, மேற்கு வங்கத்தில் உள்ள சந்தன்நாகூர் (சந்தர்நாகூர் எனவும் அறியப்படும்), பாண்டிசேரி, ஏனாம் (ஆந்திரப் பிரதேசம்), மாஹே (கேரளா) மற்றும் காரைக்கால் (தமிழ்நாடு) பகுதிகள் அடங்கியது. காளிசரண் கோஷ் சந்தன்நாகூர் மற்றும் பிற ஃபிரெஞ்ச் பகுதிகள் மட்டுமின்றி பிரிட்டிஷ் இந்தியா மற்றும் சுதந்திர இந்தியாவின் கம்யூனிஸ்ட் இயக்கத் தூண்களில் ஒருவராகவும் விளங்கினார்.

    அவரது வாழ்க்கை வரலாறு குறித்த மிகக் குறைந்த விபரங்களே கிடைக்கின்றன. எவையெல்லாம் கிடைக்கிறதோ அவற்றை நாம் குறிப்பிடுவோம். அவரது பங்களிப்புப் பற்றி விவாதிக்கும் முன், வரலாற்றுபூர்வமாக அவர் போராடிய சந்தன்நாகூரில் நடந்த விடுதலைப் போராட்டப் பின்னணியைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

பின்னணி

        சந்தன்நாகூர், கல்கத்தாவிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் செல்லும் சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிறிய பேரூர். அன்றைய வங்கத்தின் நவாப் இப்ரஹிம் கான் ஒப்புதலோடு 1673ல் ஒரு ஃபிரெஞ்ச் காலனியாக அமைக்கப்பட்டது. ஹூக்ளி நதியின் வலது கரையில் அவர்கள் வணிக வளாக இடத்தை அமைத்தனர். 1688ல் அது பிரான்சின் நிரந்தரக் குடியிருப்பானது. அதனை 1756 ஆங்லோ – ஃபிரெஞ்ச் போரில் பிரிட்டிஷ் கப்பற்படை கைப்பற்றியது; 1763ல் பிரான்சுக்குத் திரும்ப கிடைத்தாலும் 1794ல் பிரிட்டிஷ் அதை மீண்டும் கைப்பற்றியது.

          1757ல் வங்க நவாப் மீர் ஜாஃபர் பிரிட்டிஸாரை எதிர்த்துப் போரிட (நெதர்லாண்டு)  டச்சு கிழக்கிந்திய கம்பெனியைப் படைகளைக் கொண்டு வருமாறு அழைப்பு விடுத்தார். டச்சுப் படைகள் சந்தன்நாகூருக்கு அருகே சின்சூர்ச் வந்தடைந்தது, ஆனால் போர்க்களத்தில் பின்வாங்கியது. 1816ல் சந்தன்நாகூர் மற்றும் அதைச் சுற்றி 7.8 சதுர கிமீ பரப்பு மீண்டும் பிரான்சிடம் அளிக்கப்பட்டது. 1954வரை அது பிரான்சின் கீழ் இருந்தது. அதுவரை அது ஃபிரெஞ்ச் இந்தியாவின் பகுதியாக அரசாளப்பட்டது.

விடுதலைக்கான போராட்டம்

        1915ல் சந்தன்நாகூரிலிருந்து சுமார் 20பேர் முதல் உலகப் போரில் ஈடுபட்டனர். இதுவும் காந்திஜி மற்றும் பிற தலைவர்களின் விஜயம் போன்ற நிகழ்வுகள் அப்பகுதியில் சில நவீன உணர்வைக் கொண்டு வந்தன. 1925 மற்றும் 1927ல் சந்தன்நாகூருக்குக் காந்திஜி விஜயம் செய்தார். காந்திஜியின் தண்டி யாத்திரை மற்றும் உப்பு சத்தியாகிரகத்தைச் சந்தன்நாகூரின் யுவ சமிதி தீவிரமாக ஆதரித்தது. ஃபிரெஞ்ச் அரசின் கீழ் கமிஷனர் ஜென்ரலான டாக்டர் ஹிரேன் சாட்டர்ஜி தலைமையின் கீழ் 1930களில் கம்யூனிஸ்ட் இயக்கம் பேரூர்களில் வலிமை பெறத் தொடங்கியது. சிபிஐ, சந்தன்நாகூரை அதன் மாவட்டத் தலைமையகமாக்கியது.

        20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அனுஷீலான், ஜூகாந்தர் மற்றும் பிற குழுக்கள் உடன் தொடர்புடைய புரட்சிகர இயக்கங்கள் வளரத் தொடங்கின. 1908 முஸாஃபர்பூர் வெடிகுண்டு வழக்கில் ஈடுபட்டவர் பிரபலமான புரட்சியாளர் கனைலால் தத்தா. (சந்தன்நாகூரில் பிறந்தவர், ஜூகாந்தர் இயக்கத்தைச் சேர்ந்தவர்). ராஷ்பிகாரி போஸ், சிரீஷ் சந்திர கோஷ், அரவிந்த கோஷ் (மாணிக்டலா வெடிகுண்டு வழக்கில் ஈடுபட்டவர்), மோதிலால் ராய் மற்றும் பிறருக்குப் ஃபிரெஞ்ச்சின் உறைவிடக் குடியிருப்பான (enclave) சந்தன்நாகூர் ஓர் உகந்த அடைக்கலப் பகுதியானது. பிரவார்தக் சிங் எண்ணற்ற சமூக மற்றும் புரட்சிகரப் பணிகளை ஆற்றினார்.

சந்தன்நாகூர் கம்யூனிஸ்ட் கட்சி

        புரட்சியாளர்களால் தலைமைதாங்கப்பட்ட சந்தன்நாகூரின் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கமாக வெளியிட்டுவந்த ‘சுதேசி பஜார்‘ இதழில் கோஷ் எழுதுவது வழக்கம். அவரது கட்டுரைகளில் ஒன்று தேச விரோதமாகக் கருதப்பட்டது. விளைவு, இதழின் ஆசிரியர் துர்க்கா தாஸ் மற்றும் பதிப்பாளர் ரமேஷ்வர் தே இருவரும் கைது செய்யப்பட்டு ஆறு மாத காலத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

     மற்றொரு எதிர்காலக் கம்யூனிஸ்ட் தலைவரான பவானி முகர்ஜியும் துர்க்காதாஸ் சேத் உடன் தொடர்பு கொண்டு தேசிய இயக்கத்தின் அங்கமானார். அவருக்கு மார்க்ஸியக் கருத்துகள் காளிசரண் கோஷ் அவர்களாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.

        காளிசரண் கோஷ் சந்தன்நாகூரில் ஓர் இளைஞர் அமைப்பை நிறுவினார், அது பின்னர் மாநகராட்சித் தேர்தல்களில் பங்குபெற்று வென்றது. அவர் 1930ல் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக மித்னாப்பூரிலிருந்து கைது செய்யப்பட்டார். பின்னர் சந்தன்நாகூருக்குத் திரும்ப வந்த அவர் ‘ஸ்பூலிங்கா’ அல்லது ’தீப்பொறி’ என்ற இதழை வெளியிட்டார். சில இதழ்கள் வெளியான பிறகு அது அரசால் நிறுத்தப்பட்டது.

        இரகசியமாக அவர் மித்னாப்பூருக்கு இடம் மாற்றிக் கொண்டார். சில நாட்களுக்குப் பின் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டார். பெரும் கொடுமைகளுக்குப் பெயர்போன தியோலி, ஹிஜிலி, புக்ஸா முதலிய தடுப்புக் காவல் முகாம்களில்  அடைத்து வைக்கப்பட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியில் இணைதல்

        இந்தக் காலக் கட்டத்தில்தான் காளிசரண் கோஷ் கம்யூனிசம் பால் ஈர்க்கப்பட்டார். 1937ல் கம்யூனிஸ்ட் கட்சி ஹூக்ளி மாவட்டக் குழுவில் அவர் சேர்ந்தார். மாவட்டத்தின் கிராமங்களுக்குப் பயணம் செய்து விவசாயிகள், மற்றும் பிறருடன் தொடர்பு கொண்டார். சந்தன்நாகூர் மக்கள் அவரைப் பெரும் மரியாதையுடன் பார்த்தனர். ‘காளி-தா (ஜி போல ’தா என்பது வங்கமொழியின் மரியாதை விகுதி) என்று மிக்க அன்புடன் நன்கு அறியப்பட்டார். அவர் மக்களைத் திரட்டி அமைப்பதில் திறமையும், வங்க மொழி, ஆங்கிலத்தில் சக்திமிக்க சொற்பொழிவாற்றும் ஆற்றலும், இலக்கியம் மற்றும் பண்பாட்டில் தேர்ந்த பயிற்சியும் பெற்றிருந்தார். திருமணம் ஆகாத அவர் உயர்ந்த ஒழுங்கு கட்டுப்பாடுடன் வாழ்ந்தார். அவருடன் தொடர்கொண்ட எவருக்கும் மார்க்சியக் கல்வியைப் போதிப்பதில் எப்போதும் கருத்தாக இருந்தார். தனிப்பட்ட முறையில் எண்ணற்ற தோழர்களை அவர் தெரிந்திருந்தார்.

ஃபிரெஞ்ச் இந்தியாவில் போராட்டம்

      ஃபிரெஞ்ச் பகுதிகளான பாண்டிச்சேரி, சந்தன்நாகூர், ஏனாம், மாஹே மற்றும் காரைக்காலில் விடுதலைப் போராட்டம் 1940களில் கூர்மை அடைந்தது. 1942ம் ஆண்டு பல மாதங்கள் காளிசரண் பாண்டிச்சேரியில் தங்கி இருந்தார், மற்றவர்களுடன் இணைந்து இயக்கத்தை வழிநடத்தினார். பாண்டிச்சேரி வீதிகளில் அவர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்.

        ஃபிரெஞ்ச் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி (Parti communiste de l’Inde francaise), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய ஒத்துழைப்பில் பணியாற்றியது. (மக்கள் தலைவர்)

சுப்பையா அதன் செயலாளர், மற்றும் காளிசரண் கோஷ் அதன் முன்னணி செயற்பாட்டாளர். இரண்டாம் உலகப் போரின்போது கட்சி பிரபலமாக எழுந்தது. போர் வெடித்தபோது கட்சி சொத்துகள் கைப்பற்றப்பட்டு, கட்சி தடைசெய்யப்பட்டதால் அலுவலகங்கள் சூறையாடப்- பட்டன. பிரான்ஸ் தேசத்தில் ஃபிரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சி (FCP) போர் முயற்சிகளுக்கு ஆதரவளித்ததால் (ஃபிரெஞ்ச் இந்தியாவில்) 1940 செப்டம்பரில் தடை விலக்கிக் கொள்ளப்- பட்டது. காளிசரண் கோஷ், திங்கோரி முகர்ஜி, பவானி முகர்ஜி மற்றும் பிற  கம்யூனிஸ்ட்கள் மற்றும் புரட்சியாளர்களுடன் தனித்த நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள சுப்பையா சந்தன்நாகூர் சென்றார். அங்கே சுப்பையா கொண்டலபாரா சணல் ஆலை தொழிலளர்கள் சங்கம் மற்றும் பிறருடன் கூட்டங்களில் உரையாற்றினார். எல்லா நேரமும் காளிசரண் தீவிரமாகச் செயல்பட்டார்.    

        அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளையும் ஃபிரெஞ்ச் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி, ‘தேசிய ஜனநாயக முன்னணி’ (NDF) என்ற பதாகையின் கீழ் ஒன்று திரட்டியது. முதற்கண் 1946 ஜனவரியில் முறையாகப் பிரதிநிதிகள் மாநாட்டைக் கூட்டியது. தேசிய முன்னணியின் கீழ் சந்தன்நாகூரின் கம்யூனிஸ்ட் கட்சி, மகாஜன சபை மற்றும் அனைத்து சக்திகளையும் ஒன்றுபடுத்திக் கொண்டு வந்தது. சந்தன்நாகூர் அமைப்பு பாண்டிச்சேரி ஜனநாயக முன்னணியுடன் நெருக்கமாகப் பணியாற்றியது. என்டிஃஎப் அமைப்பில் கம்யூனிஸ்ட் கட்சியே முக்கியமான சக்தியாக இருந்தது.

       மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் வெகுஜன பெருந்திரள் அமைப்புகளை ஃபிரெஞ்ச் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி அமைத்தது.

   பாண்டிச்சேரியில் 1946 ஏப்ரல் 7, 8ல் ஃபிரெஞ்ச் இந்தியா தொழிலாளர்கள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் காளிசரண் கோஷ், எஸ்எஸ் மிராஜ்கர், ப ஜீவானந்தம் (ஜீவா), சந்தன்நாகூரின் முல்லீப் மற்றும் என்டிஎஃப் சார்பில் ஃபிரெஞ்ச் நாடாளுமன்றத்திற்கு வென்ற உறுப்பினர் லம்பெர்ட் சரவணனே முதலானவர்கள் உரையாற்றினர். அழைப்பின் பேரில் ஆளுநர் பாரோண் (Barron) அவர்களே அதில் உரையாற்றினார்.

   ஆர்வத்தைத் தூண்டும் ஆளுமையாளரான பாரோண், ஸ்ரீ அரபிந்தோ கோஷ் (ஸ்ரீஅரவிந்தர்) தத்துவத்தின் செல்வாக்கில் ஈர்க்கப்பட்டவர், 1937ல் பாண்டிச்சேரியில் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்துக்குப்   வழக்கமாக விஜயம் செய்பவர். ஆனால் அவர் கம்யூனிட்களை எதிர்த்தவர். கம்யூனிஸ்ட்களைத் தவிர்க்கும்போதே என்டிஎஃப் அமைப்புடன் கூட்டாகச் செயல்பட முயன்றவர். அவ்வமைப்பின் சில தலைவர்கள் அவருடன் நெருக்கமாக இருந்தனர்.

    என்டிஎஃப் தலைமையின் கீழ் இருந்த மாநகராட்சிக் கட்டடத்தில் 1946 ஜூலை 14ல் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டது. அதைக் கண்டும் காணாததுபோல நிர்வாக ஆணையர், மாநகராட்சி மேயரிடம் அதை ஃபிரெஞ்ச் கொடியுடன் வைக்கச் சொன்னார்! தங்களது இறுதி நாட்கள் எண்ணப்பட்டு வருவதைப் பிரெஞ்சுகாரர்கள் நன்கு உணர்ந்தனர்.

    பிரிட்டிஷ் இந்தியாவின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 1947 ஜனவரி 21ல் இங்கே மாணவர்கள் “வியத்நாம் நாள்” அனுசரித்தனர்.

    ராயல் இந்தியக் கப்பற்படை எழுச்சியின் ஆண்டு விழாவிற்காக 1947 ஜனவரி 25ல் ஆர்பாட்டங்சகள் நடத்தி, சில மாணவர்கள் குழுவாக நிர்வாக ஆணையர் அலுவலகத்திற்குப் பேரணியாகச் சென்றனர். அவர்களை மத்திய காவல் போலீஸ்படை சுற்றி வளைத்தது. மாணவர்கள் ‘ஃபிரான்ஸ் ஏகாதிபத்தியம் வீழ்க, வீழ்க’ என முழக்கமிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக கொண்டலப்பாரா சணல் ஆலைத் தொழிலாளர்கள் சேர்ந்து கொண்டனர்.

 மெல்ல அதிகார மாற்றம்     

    போருக்குப் பின், ஃபிரெஞ்ச் பகுதிகளில் விடுதலைப் போராட்டம் வேகம் பெற்றது. காளிசரண் கோஷ் காரைக்கால் விடுதலை இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார். 1947 டிசம்பர் 21ல் காரைக்காலில் அகமது நைனார் மரைக்காயர் தலைமையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், காளிசரண் ஃபிரெஞ்ச் இந்தியர்கள் தங்கள் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கிட அறைகூவல் விடுத்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். காரைக்கால் இணைப்பு ஐக்கிய முன்னணியிலும் அவர் தீவிரமாகப் பங்கேற்றார்.

     1938ல் சந்தன்நாகூர் நிர்வாக அதிகாரியாக பாரோண் இருந்தார். பின்னர் அவர் அதன் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்திய விடுதலை நெருங்கி வருவதால், இந்த நகரின் மக்கள் ஃபிரெஞ்ச் ஆட்சியின் கீழ் இனியும் தொடரும் மனநிலையில் இல்லை. நகரில் இருந்த அரசியல் கட்சிகள், 1947 ஆகஸ்ட் 8க்கு முன் சந்தன்நாகூர் விடுதலை பிரகடனம் செய்யப்படாவிடில், மக்கள் பேரணியாகச் செல்ல நேரிடும் எனப் ஃபிரெஞ்ச் ஆட்சிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தன. ஆனால் பிரான்ஸ் அரசு காது கொடுத்துக் கேட்கவில்லை.

        ஃபிரெஞ்ச் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்து மாநகராட்சி அதிகாரிகளுக்கும் 1947 ஆகஸ்ட் 15ல் ஃபிரெஞ்ச் கொடியை இறக்கிவிட்டு, இந்திய மூவர்ணக் கொடியை ஏற்ற அறைகூவல் விடுத்தது. கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் பார்வர்டு பிளாக் மக்கள் போராட்டத்தில் இணைந்தன; சந்தன்நாகூர் மக்கள் ஃபிரெஞ்ச் நிர்வாக அதிகாரியை ஓட ஓட விரட்டினர், அதிகாரத்தை ஏற்றுக் கொண்டுவிட்டதன் அடையாளமாக இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றினர். மாநகராட்சியின் தலைவரை நிர்வாக அதிகாரியாக நியமித்தனர்.

         காந்திஜி அமைதி காக்கும்படிக் கேட்டுக் கொண்டார்.

        பெருந்திரள் போராட்டத்தின் வீரியத்தை அற்றுப் போகச் செய்ய பிரான்சு அரசு ஒரு தந்திர நடவடிக்கையை எடுத்தது. அது இரண்டு ஆணைகளை-- 1947 ஆகஸ்ட் 12ல் ஒன்று, ஆகஸ்ட் 20ல் மற்றொன்றும் -- வெளியிட்டது. இந்த ஆணைகள் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட வழி செய்தது. மாநகராட்சி சட்டமன்றமாக மாற்றப்பட்டது. இதற்கு முன்பு 1947 ஜூன் 30 மற்றும் ஜூலை 14ல் பிரான்சு அரசு, ஆளுநர் பாரோண் அவர்களுக்கு மாநகராட்சி சட்டமன்றம் மற்றும் நிர்வாக (அமைச்சரகக்) குழு ஏற்படுத்தக்கூடிய வகையில் செய்தி அனுப்பியது. இது அப்போது கவனத்தைத் திசை மாற்றிய ஒரு தந்திரம்.

    இதன் மத்தியில், ஃபிரெஞ்ச் குடியேற்றமான ஐந்து நகரங்கள் ‘சுதந்திர நகர்களாக’ப் பிரகடனப்படுத்தப்பட்டன; உண்மையில், தொடர்ந்து அவை ஃபிரெஞ்ச் குடியேற்றமாகவே நீடித்தன.

ஃபிரெஞ்ச் அரசு 1948 ஜூன் 8ல் இந்திய அரசுடன் உடன்பாடு செய்தது; அதன்படி, ஃபிரெஞ்ச் இந்திய மக்கள் தங்கள் சொந்த அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உடையவர்களாக

அறிவிக்கப்பட்டனர். 1949 ஜூன் 19ல் சந்தன்நாகூரில் நடத்திய கருத்துக் கணிப்பு தேர்தலில் 97 சதவீத மக்கள் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.  7463 வாக்குகள் ஆதரவாகவும் 114 எதிராகவும் பதிவாயின. நகரின் நிர்வாகம் 1950 மே 2ல் இந்திய அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஃபிரான்ஸ், இந்தியா இடையே 1951 பிப்ரவரி 2ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் அந்நகர் இந்தியாவுக்குப் பிரித்து அளிக்கப்பட்டது. அது சந்தன்நாகூர் பிரிப்பு உடன்பாடு என்றழைக்கப்படும். 1952 ஜூன் 9ல் சந்தன்நாகூர் இந்தியாவின் சட்டப்படி உரிமையாக (transferred to India de jure) மாற்றப்பட்டது. எல்லா அரசு ஊழியர்களும் 1952ஆகஸ்டில் இந்திய அரசு ஊழியர்களாக ஆனார்கள். சந்தன்நாகூர் மக்களின் விருப்பங்களை உறுதிப்படுத்திக்கொள்ள டாக்டர் அமர்நாத் ஜா தலைமையில் 1953 நவம்பர் 19ல் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. சந்தன்நாகூர் இணைப்புச் சட்டம் (1954) மூலம் 1954 அக்டோபர் 2ல் சந்தன்நாகூர் நகர் மேற்கு வங்கத்துடன் இணைந்தது.

1952 மத்தியில் ஃபிரெஞ்ச் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புக் குழு கூட்டம் (தமிழ்நாடு) கடலூரில் நடைபெற்றது. அதில் ஃபிரெஞ்ச் பகுதிகள் விடுதலைக்காக ஒரு நகல் செயல்திட்டம் (ப்ரோகிராம்) நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஃபிரெஞ்ச் கைப்பற்றி ஆட்சி புரிந்த அனைத்துப் பகுதிகளின் விடுதலைக்காகவும், பின்னர் அப்பகுதிகளை இந்திய மாநிலங்களுடன் இணைக்கவும் போராடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதிகார மாற்றம் சம்பந்தமாக ஃபிரெஞ்ச் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1954 செப்டம்பர் 4ல் இந்தியப் பிரதமரிடம் ஒரு மகஜர் அளித்தது. அந்த மனுவில் (அதிகாரம் மாற்றித் தரப்படும்) இடைக்காலத்திற்கான முன்மொழிவுகள் அடங்கி இருந்தன.

1954 நவம்பர் 1ல் ஃபிரெஞ்ச் ஆட்சியாளர்கள் இந்தியாவைவிட்டுச் சென்றனர்.

தலைமறைவு நடவடிக்கைகளும் பின்னர் கட்சி செயல்பாடுகளும்

    இந்தியக் கம்யயூனிஸ்ட் கட்சி ‘பிடிஆர் கால’த்தின் போது தடை செய்யப்பட்டது. தலைமறைவான காளிசரண் அவரது ‘பதுங்கு இட’த்திலிருந்து கைது செய்யப்பட்டார். இக்காலத்தின்போது அவர் காச நோயால் பீடிக்கப்பட்டார், அவரது கால்களில் ஒன்று வெட்டி எடுக்கப்படவும் வேண்டியதாயிற்று.

        காளிசரண் கோஷ் சந்தன்நாகூர் முனிசிபல் கார்ப்பரேஷனுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1957 முதல் 1967வரை பணியாற்றினார். பின்னர் அவர் மேற்கு வங்கச் சட்டமன்றக் குழு உறுப்பினராகவும் இருந்தார்.

    அவருக்கு நுரையீரலின் ஒரு பகுதியை அகற்றும் அறுவை சிகிச்சை (lobectomy) மேற்கொள்ப்பட்டது. [மனிதனின் வலது நுரையீரலில் lobe எனப்படும் மூன்று பகுதிகளும், இடது நுரையீரலில் இரண்டு பகுதிகளும் இருக்கும். இதில் நோயுற்ற பகுதியை வெட்டி அகற்றும் அறுவை சிகிச்சை] சிகிச்சையைத் தொடர்ந்த பிரச்சனைகளால் அவர் நீண்ட காலம் துன்பப்பட்டார். வேலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

      அந்தப் புரட்சியாளர் காளிசரண் கோஷ், காளி’தா 1973 ஜனவரி 30ல் மறைந்தார். அவருக்குச் செவ்வணக்கம்!

--தமிழில் : நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர்

1 comment:

  1. அறியப்படாத வரலாறுகள் இதுபோல் அதிகம் உள்ளன. நன்று !

    ReplyDelete