Friday 9 December 2022

சிபிஐ விஜயவாடா காங்கிரசில் சிபிஐ (எம் எல்) வாழ்த்து

 


                     
“ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்! பாசிசத்தை முறியடிப்போம்!”

                                         --சிபிஐ கட்சிப் பேராயத்தில் சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர் வாழ்த்து

            

        சமீபத்தில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது பேராயத்தில் சிபிஐ (எம்எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாசார்யா (கீழே படம்) வழங்கிய வாழ்த்துச் செய்தி:

   அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்! கட்சிப் பேராயத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்குத் தோழர் டி ராஜாவுக்கு நன்றி. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சியம் –லெனினியம்) மத்தியக் குழு மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக உங்கள் மாநாடு வெற்றிபெற வாழ்த்துவதில் மகிழ்ச்சி. உங்கள் கட்சியின் ஆகப் பெரும் தலைவர்களான தோழர்கள் சி ராஜேஸ்வர ராவ், இந்திரஜித் குப்தா, ஏ பி பரதன், ஜகந்நாத் சர்க்கார், சதுரானந்த் மிஸ்ரா மற்றும் போகேந்திர ஜா உள்ளிட்ட தலைவர்களுடன் விவாதித்து உரையாடிய ஞாபங்களை நான் நினைந்து போற்றி மகிழ்கிறேன். மறைந்த இப்பெரும் சிபிஐ தலைவர்கள் மற்றும் வரலாற்றுப் புகழ்மிக்க தெலுங்கானா ஆயுதம் தாங்கிய எழுச்சி மற்றும் அதன் பின் ஒன்றுபட்ட ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மற்றும் பிற இடங்களில் நடைபெற்ற போராட்ட அலைகளில் உயிர்ப்பலியான பெரும் தியாகிகள், தோழர்கள் அனைவருக்கும் மரியாதை மிக்கப் புகழஞ்சலிகளைச் செலுத்துகிறேன்.

     தோழர்களே, உலகம் பெரும் பிரச்சனைகளைச் சந்தித்துவரும் நேரத்தில் நாம் கூடியுள்ளோம். உலகம் மீண்டும் பெரும் போர்ச் சூழலில் இழுக்கப்பட்டு, உலக முதலாளித்தும் ஆழமான நீண்ட பொருளாதாரப் பின்னடைவில் சிக்கியும், கோவிட் 19 பெரும் தோற்று விளைவித்த அழிவு மற்றும் தீவிர சீர்குலைவிலிருந்து இன்னும் மீண்டு எழுந்து வராத நிலையிலும் கூடியுள்ளோம். சுமார் எட்டுமாதங்களாக ரஷ்யா ஒருதலைபட்சமாக உக்ரைன் நாட்டை ஆக்கிரமித்து, லெனினின் மரபுரிமையாய் பெற்ற அந்நாட்டின் சுதந்திரத்தைத் தவறானது எனவும் அதைச் சரிசெய்ய வேண்டிய தேவை உள்ளது எனவும் கூறி வருகிறது. நியாயமற்ற இப்போர் ஏற்கனவே ஏற்படுத்திய இழப்புகள் ஏராளம்; உக்ரைனின் இறையாண்மைக்கு மதிப்பளித்து அதனைப் பாதுகாக்க உறுதி அளிக்கும் வழியில் இப்போர் விரைவாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். ஐரோப்பாவில் வெளிப்படையாக வலதுசாரிக்கு மாறும் சங்கடப்படுத்தும் அடையாளங்களுக்கு நடுவில் இடதுசாரிகள், லத்தீன் அமெரிக்காவில் புதுப்பிக்கப்பட்ட மறுமலர்ச்சி அடைந்தும், ஈரானில் பெண்கள் சக்திமிக்க வகையில் தங்களை நிலைநிறுத்தி வருவதன் மூலம் அடக்குமுறை மதவாத ஆட்சிக்கு எதிராக அது மக்கள் பேரெழுச்சியாக  வளரும் நிகழ்வுகளிலிருந்து நாம் உற்சாகம் பெறுகிறோம்.

     தொடர்ச்சியாக மோடி இரண்டாம் முறை மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து எல்லாப் பக்கங்களிலும் பாசிசத் தாக்குதல் தீவிரமாகி வருவதை சந்தித்து வருகிறோம். 2014 தேர்தலிலிருந்து ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்று முழங்கிய ஆட்சி, இப்போது ‘எதிர்க்கட்சி இல்லாத ஜனநாயக’மாக இந்தியாவை மாற்றத் தலைகீழாக நின்று முயற்சிக்கிறது. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்த விலைக்கு வாங்கப்படுகிறார்கள்; எதிர்க்கட்சி தலைமையிலான மாநில அரசுகள் கவிழ்ப்பு தொடர்கிறது; எதிர்க்கட்சிகள், அதன் தலைவர்கள் (அமலாக்கத்துறை, சிபிஐ புலனாய்வு போன்ற) மத்திய அமைப்புகளால் துன்புறுத்தப் படுகின்றனர். இயக்கச் செயற்பாட்டாளர்கள், பொய்ச் செய்திகளை அம்பலப்படுத்தும் பத்திரிக்கையாளர்கள், நீதியை நிலைநாட்ட உழைக்கும் வழக்கறிஞர்கள் வேட்டையாடப்பட்டுச் சிறை செய்யப்படுகின்றனர். நாளும் பொழுதும் முஸ்லீம்களைப் பொல்லாதவர்களாகச் சித்தரித்து, வெறித்தனமாக இனப்படுகொலை செய்யவும் மிக வெளிப்படையாக, அடிக்கடி உரத்த குரலில் அழைப்பு விடுக்கப்படுகிறது. தலித் மக்கள் மீது அதிகரிக்கும் கொடுமைகள் மற்றும் ஒதுக்கித் தடைசெய்யப்படும் அட்டூழியங்களைச் சந்திக்கின்றனர். சமீபத்திய சரியான உதாரணம், அசோகா விஜயதசமி தினத்தன்று டெல்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் இராஜேந்திர பால் கௌதம், பௌத்ததிற்குப் பெரும்திரளாக மதம் மாறும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக அவரை அவமானப்படுத்தி துன்புறுத்தியதாகும்.

     அவர்கள் கனவு காணும் இந்தியா எப்படி இருக்கும் என்பதை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார்கள்: இந்தியாவில் இனி பாஜக ஒரு கட்சி மட்டுமே இருக்கும் என மார்தட்டுகிறார் ஜெபி நந்தா; அமித்ஷாவோ அடுத்த 50 ஆண்டுகளுக்கு இங்கே பாஜக ஆளப் போகிறது என்கிறார்; அதே நேரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்திய நாடு, இந்து இராஷ்டிராவாக அல்லது இந்து தேசமாக இருக்க வற்புறுத்துகிறார்; (பிரதமருக்குத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக உள்ள மேனாள் ஐபிஎஸ் அதிகாரியான) அஜித் தோவல், போரில் குடிமைச் சமூகமே புதிய எல்லை முன்னணியாகச் செயல்படும் என்கிறார் – இதுதான் அவர்களின் கனவு இந்தியா.

    இந்த வகுப்புவாதப் பாசிச இந்தியக் கனவு நமது சுதந்திரப் போராட்ட இயக்கத்தால் நிராகரிக்கப்பட்ட ஒன்று. போராட்டத்தில் விடுதலை அடைந்த இந்தியா தொடர்ந்து அரசியல் அமைப்புச் சட்டத்தை நிறைவேற்றி, மதசார்பற்ற, ஜனநாயகக் குடியரசு முறையைத் தேர்வு செய்தது. இறையாண்மை மிக்க சோஷலிச மதசார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்ற இந்த அரசியலமைப்புச் சட்டக் கண்ணோட்டத்தைச் சீர்குலைத்து, தலைகீழாகப் புரட்டிக் கவிழ்க்க, இன்று அரசதிகாரம் என்ற வாய்ப்பான நிலையில் இருக்கும் சங்–பாஜக அமைப்பு இராப்பகலாகக் கூடுதல் நேரம் வேலை செய்து வருகிறது. அதன் மூலம் இந்தியாவை அதனுடைய வகுப்புவாத பாசிசச் சட்டகத்தில் அடைத்துச் சிறைபடுத்த நினைக்கிறது.

    1925ல் நிறுவப்பட்ட நாளிலிருந்தே ஆர்எஸ்எஸ் இந்தத் திட்டத்திற்காகவே பாடுபட்டு வருகிறது; அதன் காரணமாகவே அக்கெடுமதி திட்டத்தை -- மோடி அரசின் அரசதிகாரம் மூலம் -- இன்று தேசத்தின் மீது திணிக்கத் திறன் பெற்றுவிட்டது; அது மட்டுமா, இந்த அரசதிகாரத்தைத் தெருக்களில் கோலோச்சும் தனது கண்காணிப்பு கும்பல் படை அதிகாரத்துடன் சாமர்த்தியமாக இணைக்கும் திறனும் உடையது ஆர்எஸ்எஸ்.

ஒன்றியத்தில் மோடி அரசின் கைகளில் அதிகரிக்கும் அதிகாரக் குவிப்பு இந்தியக் கூட்டாட்சி மற்றும் ஜனநாயக அமைப்புக்களைப் பலவீனப்படுத்துகிறது; சங் பரிவார் படையான கண்காணிப்பு கும்பல் படைக்குக் கூடுதல் ஆதரவு மற்றும் தண்டனையிலிருந்து பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. அதிகாரத்தின் மற்றொரு ஊற்றுக்கண், இந்தியாவின் அதிபணக்கார பல நூறுகோடி சொத்துடையவர்கள் கைகளில் முன்பு எப்போதுமில்லாத அளவு செல்வம் குவிக்கப்படுகிறது. எந்த அளவுக்கு அவர்களிடம் பணம் குவிகிறதோ, அந்த அளவுக்கு அரசு மேலும் அந்த அதிபணக்காரர்களின் எடுபிடியாகக் கூனிக் குறுகுகிறது: அரசு நிர்வாகம் அதி பணக்காரர்களின் அரசாக, அதிபணக்காரர்களைக் கொண்டு, அதி பணக்காரர்களுக்காகவே நடைபெறுகிறது.

  இந்தச் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அழிவின் பின்விளைவுகளிலிருந்து இந்திய தேசத்தை நாம் மீட்க வேண்டும்; மேலும் பகத் சிங் மற்றும் அம்பேத்கர், பூலே (படம்),  பெரியார் கனவுகளை நனவாக்க

 ஆழமான ஜனநாயக அடித்தளம் மற்றும் வலிமையான அடிப்படையில் இந்தியாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். இந்துத்வச் சக்திகள் மற்றும் இந்தியாவின் கம்யூனிஸ்ட்கள் பயணமும் ஏறத்தாழ 1920களில் தொடங்கியது என  எண்ணிப் பார்ப்பதை நம்மால் தவிர்க்க முடியவில்லை. இன்று ஆட்சி அதிகார வலிமையைத் திரட்டிய ஆர்எஸ்எஸ், தனது சூழ்ச்சித் திட்டத்தை நாட்டின் மீது திணிக்கும்போது, இந்தியக் கம்யூனிஸ்ட்களாகிய நமக்கு அத்தீய திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பு இருக்கிறது; மேலும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி ஆகிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதை நோக்கி இந்தியாவை வழிநடத்திச் செல்லும் பொறுப்பும் உள்ளது. இந்தப் போராட்டம் இரண்டாவது சுற்று விடுதலைப் போராட்டம் போல மிக நீண்டதாக இருக்கும் என்பதை நாம் நன்கு புரிந்திருக்கிறோம். (அதற்கு) கம்யூனிஸ்ட்களாகிய நாம், நமது வலிமை அனைத்தையும் ஒற்றுமைபடுத்த வேண்டிய தேவையும், இத்தருணத்தில் நம் துணிச்சல் மற்றும் நம் சக்தி அனைத்தையும் இணைத்து ஒன்றெழுந்து நிற்கவும் வேண்டிய தேவை உள்ளது.

இந்திய விடுதலைப் போராட்ட மரபுரிமை  

    விடுதலைப் போராட்டத்தின்போதும், பின்னர் விடுதலை அடைந்த இந்தியாவின் பெரும்பகுதி பயணமும் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஓரத்திற்குத் தள்ளப்பட்டு விளிப்பில் இருந்தது. கம்யூனிஸ்ட்களாகிய நாம் மீண்டும் ஒருமுறை அவர்களை விளிம்பிற்குத் தள்ள வேண்டும். இந்திய விடுதலைப் போராட்டத்தின் தீவிர மரபுரிமையான முழுமையான பின்புலத்திலிருந்து நாம் ஊக்கம் பெறுவோம்: அப்பின்புலம், ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு முதல், சாதி எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவு எழுச்சியின் செழிப்புமிக்க மரபுகள் வரையும்; மற்றும் இந்தியாவின் கலாச்சாரப் பன்மைத்துவமும் விரிவான தீவிரச் சமூக மாற்றம் மற்றும் ஜனநாயகம் பாதுகாக்கவும் விடுதலைபெற்ற இந்தியாவில் நடத்தப்பட்ட எண்ணிறைந்த சக்திமிக்க போராட்டங்களின் காட்சிகளும் நிரம்பியது.

எந்த அளவு பரந்துபட்டதாக நம்மால் முடியுமோ அவ்வளவு விரிவாக மக்களின் அன்றாடப் போராட்டங்களில் நாம் மக்களைத் திரட்ட வேண்டும்; நாட்டில் அதிகரித்துவரும் கார்ப்பரேட் கொள்ளை மற்றும் பொதுச் சொத்துகள் மற்றும் சேவைகளைத் தனியார் மயப்படுத்தலுக்கு எதிரான பெருந்திரள் மக்கள் எதிர்ப்பை வலிமையாகக் கட்ட வேண்டும். மேலும் ஒன்றுபட்ட அப்பெருந்திரள் மக்கள் போராட்ட வலிமையைக் கட்டி, பல்வேறாகப் பிரிந்து கிடக்கும் தீவிர எதிர்ப்புச் சக்திகளின் இணைப்பு மற்றும் பரந்துபட்ட செயல்பாட்டு ஒற்றுமையை நாம் கட்ட வேண்டும். அந்த ஒன்றுபட்ட உறுதியான எதிர்ப்பின் மூலம் பாசிசவாதிகளைத் தனிமைப்படுத்தி தோற்கடிக்க வேண்டும்!

  இந்த இலக்கை நோக்கி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராயம் அனைத்து வெற்றிகளையும் பெற நான் மீண்டும் வாழ்த்துகிறேன்! இன்று நாம் சந்திக்கும் முன் எப்போதுமில்லாத சவால்களை முறியடிக்க எங்களது சிபிஐ (மார்க்சியம் -லெனினியம்) கட்சியின் சார்பாக எங்களது முழுமையான ஒத்துழைப்புக்கு நான் உறுதி அளிக்கிறேன்.

       போராடும் அனைத்துச் சக்திகளின் ஒற்றுமை நீடு வாழ்க!

      ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் பாசிசத்தை முறியடிக்கவும் கம்யூனிச இயக்கம் அனைத்தும் மீண்டும் புத்துயிர் பெற்று எழுக!

--நன்றி : நியூஏஜ் (டிச.4 –10)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

No comments:

Post a Comment