Friday 5 August 2022

தாயின் மணிக்கொடி, தாழ்ந்து பணிவோம்! -- நியூஏஜ் தலையங்கம்

 

நியூஏஜ் தலையங்கம் (ஆக.7 –13)

இந்தியத் தாயின் மணிக்கொடி,

செம்மாந்து வணங்குவோம்!

        

    நாட்டின் 75வது சுதந்திர தினத்தில் ஆளும் பாஜகவிடமிருந்து அசாதாரணமான முன்னெடுப்புக்களை இந்தியா சந்திக்கிறது. தேச விடுதலைப் போராட்டம் மற்றும் தேசியக் கொடிக்குத் தங்கள் விஸ்வாசத்தை வெளிப்படுத்த அவர்கள் கூடுதல் சிரமங்களை எடுத்துக் கொள்கிறார்கள். ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் கும்பலின் பாஜகவும் சரி, அதன் முன்னோர்களும் சரி, மூவர்ணக் கொடியால் உத்வேகம் பெற்ற தேசிய விடுதலை இயக்கத்தில் எந்தப் பங்கும் வகித்ததில்லை, எந்தச் சிறு துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை என்பதை, நமது வரலாற்றை ஓரளவு புரிந்து கொண்ட எவரும் நன்றாகவே அறிவார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் கலாச்சார தேசியத் தத்துவத்தை ஏற்ற அந்த அனைத்துச் சக்திகளும் நாட்டின் விடுதலைக்கான வீரம் செறிந்த தேசியப் போராட்ட இயக்கங்களில் பங்கேற்காமல் விலகித் தனியே ஒதுங்கி நின்றன.

நாட்டு விடுதலை இயக்கத்தை அவர்கள் ஓர் அரசியல் நடவடிக்கை என முத்திரை குத்தி, தங்களின் கலாச்சார அமைப்பிற்கு அது குறித்த எந்த அக்கறையும் கவலையும் இல்லை என்றனர். எந்த அளவுக்கு அவர்கள் வறட்டுப் பிடிவாதக்காரர்கள் எனில், தேசியக் கொடியை அவர்கள் கையால்கூடத் தொடமாட்டார்கள். விடுதலைக்காக விண்ணில் உயர்ந்த மூவர்ணக்கொடி எழுப்பிய மக்கள் பேரெழுச்சியின் பக்கத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதனைப் பின்பற்றுபவர்கள் ஒருபோதும் வந்தது இல்லை.

        விடுதலை அடைந்த பல பல ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்களின் அணுகுமுறை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு ஆதரவாக இருந்தது குறித்தும் அவர்களுக்குக் கூச்சம் ஏதுமில்லை. மக்கள் அனைவரும் ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று’ பள்ளுப் பாடி, விடுதலை அடைந்த நாடு ஆகஸ்ட் 15ஐயும், மூவர்ணக் கொடியையும் கொண்டாடியபோது, அவர்களிடம் எந்த அசைவும் இல்லை. விடுதலை அடைந்து நீண்ட 52 ஆண்டுகளுக்கு ஆர்எஸ்எஸ் – பாஜக தங்கள் அலுவலகங்களின் அருகில் எங்கேயும் தேசியக் கொடியை ஏற்றிப் பறக்க விடுவது குறித்து ஒருபோதும் எண்ணியதும் இல்லை. அவர்கள் தங்களுக்கென்று அதற்கான வினோத விளக்கங்கள் வைத்திருந்தனர். இப்போது திடீர் ஞானம் வந்து உதித்ததுபோல ஆர்எஸ்எஸ் – பாஜக அமைப்புகள் தேசியக் கொடியைக் கொண்டாடும் சாம்பியன்களாக வெறித்தனமான உற்சாகத்தில் காணப்படுகின்றன.

        பிரதமர் தாமே முன்வந்து நாட்டு மக்களிடம் ஆகஸ்ட் 13ம் தேதியே சுதந்திரத் திருநாள் கொண்டாட்டங்களைத் தொடங்கும்படி வேண்டுகோள் விடுக்கிறார். இந்த வேண்டுகோளை ஜூலை 22ல் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதில் பிரதமர் மிக கவனமாக இருந்ததற்குக் காரணம் 1947ல் அதே நாளில்தான் மூவர்ணக் கொடி இந்திய தேசத்தின் தேசியக் கொடியாக அங்கீகரிக்கப்பட்டது. அனைத்து இந்தியர்களும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். அரசு தேசியக் கொடியைக் கொண்டாடப் பல்வேறு விழாக்களைத் திட்டமிட்டுள்ளது. ஏராளமான எண்ணிக்கையில் கொடியைத் தயாரிக்க வசதியாக இந்தியக் கொடி ஒழுங்குமுறை விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இந்தியக் கொடி மக்களுக்குத் தடையின்றி கிடைக்கப் பெருமளவில் பாலியெஸ்டர் துணி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது நிரூபிக்கப்பட்டத் திறன்களுடன் இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் புதிய வரலாற்றை எழுத அவர்கள் பலவிதச் சித்து விளையாடல்களில் இறங்கியுள்ளனர். வரலாற்றைப் புதிதாக அவர்கள் எழுதுவதன் நோக்கம், மெய்யான உண்மைகளை குழி தோண்டி மூடி மறைக்கவும், பாஜகவின் விருப்பத்திற்கிணங்க ஒரு புதிய வரலாற்றை படம் பிடித்துக் காட்டுவதற்கும்தான்.

        விடுதலைப் போராட்டத்தின்போது காந்தி அடிகள் தலைமையில் காங்கிரஸ் 1931ல் தேசியப் பெருமித அடையாளமாக மூன்று வர்ணங்களால் ஆன கொடியை ஏற்றுக்கொண்ட போதிலிருந்தே மூவர்ணக் கொடி இந்திய இதயங்களில் நீங்கா இடம் பெற்றுவிட்டது. மூவர்ணக் கொடி குறித்த ஆர்எஸ்எஸ்-ன் ஆட்சேபணையை அதன் நிறுவனத் தலைவர்கள் தொடக்கம் முதலே வெளிப்படுத்தினார்கள். தேசியக் கொடி எதிர்ப்பில் வசைமாறி கசப்பைக் கொட்டுவதில் ஆர்எஸ்எஸ்-ன் ஹெக்டேவார் மற்றும் கோல்வால்கர் முன்னே நின்றனர்.

        நடுவே ‘ஓம்’ பொறிக்கப்பட்ட காவிக் கொடிக்காகப் பரிந்து அவர்கள் பிரச்சாரம் செய்தனர். அவர்களது அக்கொடிதான் இந்தியாவின் கலாச்சார உணர்வைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக அவர்கள் வாதிட்டனர். அவர்களது கூற்றின்படி மகாபாரதக் காலத்திலிருந்தே இந்தியக் கோவில்களில் நடைமுறைப் பயன்பாட்டில் இருந்துவரும் காவிக் கொடிதான் தேசத்திற்கும் இயல்பான தேர்வாக இருக்க வேண்டும் என்றனர்.

        1931 ஜனவரியில் மூவர்ணக் கொடியை ஏற்றும்படி காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்தபோது ஆர்எஸ்எஸ் வெளிப்படையாக அதனை எதிர்த்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் முதலாவது (சர் சங் சாலக்) முதன்மைத்

தலைவரான ஹெக்டேவார், அதனது அனைத்து ஷாகாக்களிலும் (கிளைகளிலும்) மூவர்ணக் கொடிக்குப் பதிலாகப் ‘பகவா துவஜ்’ (காவிக் கொடி) ஏற்றும்படி குறிப்பாணை வெளியிட்டார். (பகவா துவஜ், பகவான் மகாதேவரைப் பின்பற்றியவர்களான மராட்டிய பேரரசின் கொடியாகும்.) வரலாறு நெடுக ஆர்எஸ்எஸ் அமைப்பு தேசிய இயக்கம் குறித்த தனது இணையான கருதுகோளை உயர்த்திப் பிடிப்பதில் ஆர்வம் உடையதாக இருந்தது; மேலும், தேசியக் கொடி மீதான வேறுபாடு அவர்களுக்கு மிகமிக முக்கியத்துவம் உடையதாக இருந்தது.

        1946 ஜூலை14ல் நாக்பூரில் கூடிய ஸ்வயம் சேவக்குகளிடம் உரையாற்றிய கோல்வால்கர் இவ்வாறு வற்புறுத்தினார்: “காவிக் கொடி மட்டும்தான் பாரதக் கலாச்சாரத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும். அது கடவுளின் உருவகம். ஒரு நாள், இறுதியில் இந்தத் தேசம் முழுவதும் தேசியக் கொடியின் முன் வணங்கும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” மேலும் அவர் எழுதிய “சிந்தனைக் கொத்து” நூலில் கோல்வால்கர், ‘நிலைபெற்ற அடிப்படை’ என்ற தலைப்பிட்ட கட்டுரையில் அவர் எழுதினார்: “உதாரணத்திற்கு நமது தலைவர்கள் நமது நாட்டிற்கான புதிய கொடியை அமைத்துள்ளார்கள். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள்? அது வெறும் தட்டிக் கழித்தல் மற்றும் (அடுத்ததைப்) போலச்செய்தல்…அவ்வளவே. இந்தக் கொடி எவ்வாறு வந்தது? பிரெஞ்ச் புரட்சியின்போது பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் கொடியில் நீளவாட்டத்தில் மூன்று (வண்ணப்) பட்டைகளை –‘சமத்துவம்’, ‘சகோதரத்துவம்’ மற்றும் ‘சுதந்திரம்’ – என்ற மூன்று கருத்துக்களை வெளிப்படுத்த வைத்தார்கள் …. இதனால் மூன்று பட்டைகள் நமது விடுதலை வீரர்களுக்கும் ஒரு வகையான ஈர்ப்பைத் தந்தது … எனவே காங்கிரஸ் அதை எடுத்துக் கொண்டது. அதன் பிறகுதான் பல்வேறு வகுப்பினரின் ஒற்றுமையை – குங்குமப்பூ வண்ணம் இந்துக்களுக்கும், பச்சை வண்ணம் முஸ்லீம்களுக்கும், வெண்மை மற்ற அனைத்து வகுப்பினருக்கும் என-- அது சித்தரிப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்துக்கள் அல்லாத வகுப்பினர்களில் முஸ்லீம்களை மட்டும் சிறப்பாகப் பெயரிட்டு குறிப்பிட்டதற்குக் காரணம், அநேகப் பெரும் தலைவர்கள் மனதில், முஸ்லீம் முக்கியமாகவும், அந்தப் பெயரைக் குறிப்பிடாமல் நமது தேசியம் முழுமை பெறாது என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்!”

        மேற்கண்ட வகுப்புவாத விஷம் தோய்ந்த தவறான விளக்கத்தில் மூவர்ணம் குறித்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணுகுமுறை நன்கு தெரிகிறது. மூவர்ணக் கொடி பிரதிபலித்த எதார்த்த உண்மை மற்றும் தேசபக்தக் கருத்துக்களைக் காண மறுத்து தன் நெஞ்சறிய வேண்டுமென்றே அவர்கள் கண்களை மூடிக் கொள்கிறார்கள். வெறுப்புத் தத்துவத்தால் பயிற்சி அளிக்கப்பட்டு பாடம் படித்த அவர்கள் எப்போதும் தேசியக் கொடியின்பால் ஒருவகை பழிவாங்கல் உணர்வைக் கொண்டிருக்கிறார்கள்.

கொடியின் வண்ணங்கள் இந்தியச் சமூகத்தின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதைச் சுட்டிக்காட்டி ‘பாங்கின் எழுதித் திகழ்ந்து –செய்ய பட்டொளி வீசிப் பறக்குது பாரீர்!’ அதன் இயல்பான, கலாச்சார மற்றும் தத்துவ விழுமியங்களின் அழகை மாபெரும் தேசத்தின் மாபெரும் மக்கள் தழுவி அதை தேசியக் கொடியில் உட்பொதிந்து பொறித்து வைத்தனர். (அதனால்தான் ‘தாயின் மணிக்கொடி, தாயின் மணிக்கொடி’ என்று உற்சாகமாகப் பாடத் தொடங்கினால், இயல்பாக அதைத் தொடர்ந்து ‘ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த்’ என்று சேர்ந்திசை முழக்கம் ஒலிக்கிறது.) தேசியக் கொடியால் பிரதிபலிக்கப்படும் இச்சமுதாய நெறிமுறை உணர்வுகளிலிருந்து ஆர்எஸ்எஸ்–பாஜக எப்போதும் உணர்வு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தன்னைத் தொலைவில் தள்ளி வைத்துக் கொள்கிறது.

  ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூரில், இந்தியாவின் பிரதமராக அடல் பிகாரி வாஜ்பாய் இருந்தபோது, 2002ல்தான் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றினார்கள். பல தருணங்களில் பாஜக தலைவர்கள் இந்தியத் கொடி நெறிமுறை விதியை மீறி தேசியக் கொடிக்கு அவமரியாதை இழைத்துள்ளார்கள். உபி முன்னாள் முதல்வர் மற்றும் ராஜஸ்தான் மாநில ஆளுநருமான கல்யாண் சிங் இறுதி யாத்திரையின்போது அவர் மீது போர்த்தப்பட்டு இருந்த தேசியக் கொடியைப் பாஜக கட்சிக் கொடிகளால் பாதி மறைத்தார்கள். (பிரமுகர்கள் மறைவில் அளிக்கப்படும் அரசு மரியாதைகளில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை) இப்படி அப்பட்டமாக மீறியதைப் பிரதமர் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ்-பாஜக பெரும் தலைவர்கள் எவரும் கவலைப்படவே இல்லை.      

        இப்போது இரவும் பகலும் அவர்கள் மூவர்ணக் கொடியைப் போற்றிப் புகழ்ந்து பாடுவதை மக்கள் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். ஆர்எஸ்எஸ் – பாஜக தங்கள் காவிக் கனவுகளை, இந்த நேரத்திற்கு அவர்கள், மூவர்ணக் கொடியால் மறைக்க விரும்புகிறார்கள். அவர்களைப் பொருத்தவரை எல்லாமும் பிரச்சாரத்திற்கானவை. தேசம், தேசிய நெறிமுறை உணர்வுகள், தேசியக் கொடி அனைத்துமே ஒரே நோக்கத்திற்காக – அவர்களின் அரசியல் சித்து விளையாட்டு மற்றும் அதிகாரத்தில் அமர்ந்திருப்பது– என்பதற்காகவே வெளிப்படுத்துகிறார்கள்!

தேசத்தின் மூவர்ணக் கொடி செம்மாந்து பட்டொளி வீசிப் பறக்கட்டும் என்றென்றும்!

அனைவருக்கும் 75வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

No comments:

Post a Comment