Saturday 20 August 2022

கம்யூனிஸ்ட்தலைவர்கள் வரலாறு 69 -- டாக்டர் ராஜ் பகதூர் கௌர்

                                                                                                                             கம்யூனிஸ்ட்தலைவர்கள் வரலாறு 69


       
ராஜ் பகதூர் கௌர் --

பன்முக ஆளுமை கொண்ட தலைவர்
மற்றும் மனிதரில் இரத்தினம்

                                                               --அனில் ரஜீம்வாலே

ராஜ் பகதூர் கௌர் பன்முக ஆளுமை மற்றும் அத்தனை குணங்களும் நிரம்பிய தலைச் சிறந்தோர்களின் மத்தியில் விளங்குகிறார்.

ஹைதராபாத் கௌளிபுராவில் 1918 ஜூலை 21ல் ஸ்ரீ ராய் மகபூப் ராய் கௌரின் மூத்த மகனாகப் பிறந்தார். தாய் திருமதி அமராவதி கௌர் காசியைச் சேர்ந்தவர். அவரது தாத்தா 1850களில் தனது இரண்டு சகோதரர்கள் மற்றும் சகோதரியுடன் 1850வாக்கில் உ.பி., ஃபைசாபாத் மாவட்டத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர். அவர், புகழ் பெற்ற உருது மற்றும் பாரசீக மொழி கவிதைகளை இயற்றிய  கலிப் (வெற்றியாளர்) அல்லது மிர்சா கலிப் என்ற ஆசியாவின் தலை சிறந்த உருது, பாரசீகக் கவிஞர், கலிபுல் மாலிக் கலிப் சாங் அவர்களிடம் சேவை புரிந்தார். ராஜ் பகதூர் மூன்று வயதாக இருக்கும்போது தாயை இழந்தார். தாய் இறந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தந்தை மறுமணம் செய்தார், இம்முறை அது கலப்புத் திருமணமாக இருந்தது.

கல்வி

          ராஜ் பகதூர் மூன்றாம் வகுப்பிலிருந்து ஷாலிபந்தா நடுநிலைப் பள்ளியில் உருது வழியில் தொடக்கக் கல்வியையும் பின்னர் ஏழாம் வகுப்பிலிருந்து சந்தர்காட் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழியில் கற்று, விடுதியில் தங்கி மெட்ரிக் தேர்வை 1936ல் முதல் வகுப்பில் தேர்வானார். அவரது இறுதி காலம் வரை தனது ஆசிரியர்களை மிகுந்த அன்புடன் நினைவு கொண்டார். புத்தகங்களின் மீது தீராத காதலை வளர்த்துக் கொண்ட அவர் ஹைதராபாத் அபிட்ஸ் அரசு நூலகத்திற்குச் சென்று ஏராளமான நூல்களைக் கொண்டு வந்தார், தனது வீட்டிலேயே ஒரு நூலகமும் வைத்திருந்தார்.

            அவர், கலிப் மற்றும் இக்பால் முதல் பிரேம் சந்த் மற்றும் ஹஸ்ரத் மொஹானி வரை படைத்த இலக்கியங்களைப் படித்தார்; அரசியல் படைப்புக்களை எம்என் ராய், ஜெய்பிரகாஷ் நாராயணன் எழுதிய “சோஷலிசம் ஏன்?” மற்றும் அலகாபாத் சோஷலிஸ்ட் புக் கிளப்பிலிருந்து மற்றவர் எழுத்துக்கள் முதல் கம்யூனிஸ்ட்கள் வரையிலும் படித்தார், ஏராளமான இதழ்களையும் படித்தார். மாணவப் பருவ நாட்களில் அவர் ஆரிய சமாஜ் கூட்டங்களில் கலந்து கொண்டார். ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது கணேஷ் உற்சவக் கூட்டம் ஒன்றில், ‘மனிதன் கடவுள் உருவாக்கிய மிருகம்’ என்று கலிஃபா அப்துல் ஹக்கீம் கூறும்போது சௌகே உடனே, ‘மனிதன் கடவுளைக் கொல்லும் மிருகமும் கூட!’ எனக் குறிப்பிட்டதாகச் சொல்லக் கேட்டார். அவர் உடனே புக்காரினிடம் திரும்பி அவரது ‘வரலாற்றுப் பொருள்முதல் வாதம்’ நூலையும் எம்என் ராயின் ‘லோகாயதம்’ (மெட்டீரியலிசம்) நூலையும் படித்து மெல்ல சோஷலிசத்தின்பால் நகரலானார்.

           பள்ளிக் கல்விக்குப் பின் ராஜ் பகதூர் விடுதிகளில் தங்கி 1943 செப்டம்பரில் உஸ்மானிய பல்கலைக்கழகத்திலிருந்து எம்பிபிஎஸ் மருத்துவப் பட்டம் நிறைவு செய்தார். படிக்கும் காலத்தில் அவருக்கு இலவச உதவிகள் மட்டுமின்றி சிறந்த மாணவர்களுக்கு அளிக்கப்படும் ‘பர்சரி’ (இலத்தீன் வேர்ச் சொல்), கல்வி உதவித் தொகை ரூ 17ம் பெற்றார்.

            பின்னர் சிட்டி கல்லூரியில் அவர் ஆசிரியரானார்.

அரசியலில்

     ஹைதராபாத் காங்கிரஸ் 1938ல் நிறுவப்பட்டு, அதன் நிழல் குழுவின் கூட்டம் ராஜ் பகதூரின் வீட்டிலேயே நடக்கும்! அதன் தாக்கத்திலிருந்து அவரால் தப்ப இயலவில்லை. சிவில் உரிமைகள் மற்றும் பொறுப்பான அரசுக்காகச் சத்தியாகிரக இயக்கத்தைக் காங்கிரஸ் தொடங்கியது. அதில் சேர விரும்பிய ராஜ் பகதூரும் சுவாமி இராமானந்த் தீர்த்தரைச் சந்தித்தார். நிஜாம் அதைத் தடை செய்ததால் 1939ல் ‘வந்தே மாதரம்’ இயக்கம் தொடங்கப்பட்டது. அதில் ராஜ் பகதூர் தீவிரமாகப் பங்கேற்றார்.

            ராஜ் பகதூர் 1938ல் விடுதலைக்கான போராட்டம் குறித்த தனது முதலாவது அரசியல் கட்டுரையைப் பயம் (‘செய்தி‘ என்று பொருள்படும் பாரசீரகச் சொல்) உருது நாளிதழில் எழுதினார். 1939ல் மாணவர்கள் சங்கத்தில் சேர்ந்து 1940ல் ஏஐஎஸ்எப் நாக்பூர் மாநாட்டில் மக்தூமுடன் கலந்து கொண்டார். மாநாட்டில் முஷ்டாக், முகர்ஜி மற்றும் பரதனுடன் தொடர்பு கொண்டார். 1941 ஏஐஎஸ்எப் பாட்னா மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

       1941ல் உஸ்மானியா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சங்கத்தின் துணைத் தலைவரானார். கல்லூரி இதழின் ஆசிரியர் பொறுப்பையும் வகித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில்

            1939ல் காம்ரேடுகள் அசோஸியேஷனில் சேர்ந்து, விரைவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். சையத் ஆலம் கூன்டுகிரி, மக்தூம், சையத் இம்ராகிம், மாணிக்லால் குப்தா, ஆசன் மிர்ஸா மற்றும் நாகோ ராவ் உட்பட பல சிபிஐ கட்சி ஆதரவாளர்களால் 1938 –39ல் காம்ரேடுகள் அசோஸியேஷன் அமைக்கப்பட்டது. விரைவில் நிஜாம் சமஸ்தானத்தின் கம்யூனிஸ்ட் குழுவை நிறுவியது. 1942 --43ல் காம்ரேடுகள் அசோஸியேஷன் செயலாளர் மற்றும் 1943 –44ல் ராஜ் அதன் தலைவராகவும் ஆனார்.  காம்ரேடுகள் அசோஸியேஷன் பற்றி பாம்பே மாகாண உள்துறை அமைச்சர் கேஎம் முன்ஷி சந்தேக அச்சம் கொண்டார். ராஜ் பகதூர், சரோஜினி நாயுடு மற்றும் ஜவகர்லால் நேருவின் ஆழமான செல்வாக்கிற்கு ஆட்பட்டார். 1940 முதலாக விரைவில் கேஎல் மகேந்திராவுடன் சேர்ந்து ஆந்திர மகாசபா அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டார்.

                       மக்தூம் மொகிதீன் சிபிஐ கட்சியின் ‘நேஷனல் ஃப்ரண்ட்’ இதழை வினியோகிக்க

ஏற்பாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார், அந்த இதழ் மக்களிடையே பிரபலமாக இருந்தது. மக்தூம் நகரத்தின் முதலாவது கட்சிக் கிளை செயலாளராகவும் ராஜ் பகதூர்  துணைச் செயலாளராகவும் இருந்தனர்.    


தொழிற்சங்க இயக்கத்தில்

          ஏற்கனவே அவரது கல்லூரி இதழில் மருத்துவப் பட்டதாரிகளுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதை ராஜ் பகதூர் விமர்சனம் செய்து எழுதியதை மருத்துவச் சேவைகளின் இயக்குநர் ஆட்சேபித்தார். இவ்வாறு அவர் தொடக்கம் முதலே தொழிலாளர் பிரச்சனைகளில் பொங்கியெழும் உணர்வுடையவராக இருந்தார். எம்பிபிஎஸ் மருத்துவம் படிக்கும்போதே, மருத்துவத் தொழிலை மேற்கொள்வதில்லை, கட்சி / தொழிற்சங்க முழு நேர ஊழியராகப் பணியாற்றுவதென்று அவர் முடிவு செய்து விட்டார்.

       நிஜாம் (சமஸ்தான) அரசு இரயில்வே தொழிலாளர்கள் சங்கம், ஹைதராபாத் டெக்ஸ்டைல் மற்றும் பிற தொழிலாளர்கள் அமைப்புகள், குல்பர்கா, நான்டெட், வாராங்கல் முதலான இடங்களிலும் தொழிலாளர்களை ஒன்று திரட்டும் அமைப்பாளர்கள் மத்தியில் அவர் பணியாற்றினார். மேலும் அவர் ஆலம்புழா மெட்டல் தொழிலாளர்கள், ஷாகாபாத் சிமெண்ட் தொழிலாளர்கள் மற்றும் மற்றவர்களை அமைப்பாகத் திரட்டினார்.

       அனைத்து ஹைதராபாத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (AHTUC) 1945ல் மக்தூம், ராஜ் பகதூர், மகேந்திரா, ஜாவேத் ரிஸ்வி, குலாம் ஹைதர் மற்றும் பிறர் தலைமையில் அமைக்கப்பட்டது. தொடக்கம் முதல் அமைப்பின் செயலாளராக ராஜ் பகதூர் இருந்தார்.

          அந்நேரத்தில் ஹைதராபாத் அரசில் தொழிற்சங்கச் சட்டங்கள் எதுவும் இல்லை. உலக யுத்தத்திற்குப் பிறகு விலைவாசி ஏற்றம் வேலைநிறுத்த அலைகளைக் கூர்மையாக எழச் செய்தது. அப்போராட்டங்களில் ராஜ் பகதூர் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். அவர் மாணவராக இருக்கும்போதே டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் போன்ற இயக்கங்களில் பங்கேற்க நான்டெட் மற்றும் வாராங்கல் சென்றிருக்கிறார்.

            1946 குல்பர்காவில் எம்எஸ்கே மில் தொழிலாளர்கள் சங்கம், டிபிஆர் மில் சங்கம், ஹைதராபாத் நூற்பு மற்றும் நெசவு ஆலைகள் சங்கம் முதலானவற்றுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார்.

ஒடுக்குமுறை எதிர்ப்பு தினம், 1946

            1946 அக்டோபர் 16ம் நாளை ஒடுக்கு முறை எதிர்ப்பு தினம் (ஆன்டி-ரெப்ரஷன் டே) என அனுசரிக்கப்பட்டது, தொழிலாளர்கள் ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் செய்தனர். ராஜ் பகதூர், மக்தூம், ஜாவேத் ரிஸ்வி முதலானவர்க்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராஜ் பகதூர் மற்றும் ரிஸ்வி தலைமறைவாகச் சென்றாலும் விரைவில் கைதாயினர். 1946 நவம்பர் 15ல் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. ஹைதராபாத் மத்திய சிறையிலிருந்து மருத்துவப் பரிசோதனைக்காக உஸ்மானிய மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றபோது ராஜ் பகதூர் மற்றும் ஜாவேத் ரிஸ்வி மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றனர். தப்பிச் செல்லும் முழுமையான திட்டத்தை பிஎஸ் பரஞ்பே, ரஃபி அகமது மற்றும் மாணவர் சங்கத்தின் பசித் உடன் இணைந்து கே எல் மகேந்திரா தீட்டினார். 1951 ஏப்ரல் 24வரை தலைமறைவாக இருந்த ராஜ் பகதூர், ராஜ்கொண்டா (ராச்சாகொண்டா) மலைகளிலிருந்து கைது செய்யப்பட்டார்.

            இதன் மத்தியில் கட்சி, மக்கள் அமைச்சரவை மற்றும் மாகாணத்தில் அரசியலமைப்பு அஸம்பளிஅமைக்க வேண்டும் என்ற முழக்கங்களை முன்னெடுத்துச் சென்றது. பின்னர் கிரேட்டர் (ஒன்றுபட்ட) ஆந்திராவில் மக்கள் ஆட்சி என்ற முழக்கத்தைத் தந்தது.

பம்பாய் விஜயம் : ஆயுதப் போராட்டம்

          நிஜாமின் நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு எதிராக 1947 செப்டம்பரில் ஆயுதங்களை எடுப்பது என்று மாநிலத்தில் இருந்த கட்சி முடிவு செய்தது. இம்முடிவை மத்திய கட்சி ஒப்புக் கொள்ளச் செய்ய ராஜ் பகதூர் பம்பாய் சென்று பொதுச் செயலாளர் பிசி ஜோஷியுடன் விவாதித்து அவரது ஒப்புதலைப் பெற்றார். பல கட்சிகளின் பல்வேறு தலைவர்களைச் சந்தித்த அவர், நரசிம்ம ரெட்டி என்ற மாற்றுப் புனைப் பெயரில் அகமது நகரில் ஒரு பொதுக் கூட்டத்திலும் உரையாற்றினார். அவர் சோஷலிச ஆதரவுத் தலைவர்களான சந்திரகுப்த சௌத்திரி, வி டி தேஷ்பாண்டேவையும் சந்தித்தார். சோலாப்பூரில் கட்சித் தலைவர்களைச் சந்த்தித்த பிறகு அவர் விஜயவாடா திரும்பினார்.

        தலைமறைவு வாழ்வின்போது 1948 ஏப்ரல்/ மே மாதங்களில் ஹைதராபாத் நகரத்தின் கட்சி செயலாளர் பொறுப்பை ஏற்றார். 1950ல் பொறுப்பை மக்தூமிடம் ஒப்படைத்துவிட்டு ஆயுதக் குழுக்களுடன் சேர்ந்து கொள்ள ராஜ்கொண்டா மலைகளுக்குச் சென்றார்.

      ஏப்ரல் /மே 1948ல் கைது வாரண்ட் உத்தரவுகளைத் திரும்பப் பெறுவதாக ஏமாற்றும் அறிவிப்பை நிஜாம் வெளியிட்டார். இந்தச் சூழ்ச்சி விளையாட்டைக் கட்சியின் நகரக் குழு சுல்தான் பஜாரில் பொதுக்கூட்டம் நடத்தி அம்பலப்படுத்தியது. பி நரசிங்க ராவ் கூட்டத்தின் அமைப்பாளர். தலைமறைவாக இருந்த ராஜ் பகதூர் திடீரென்ற தோன்றி ஓர் உரையை நிகழ்ந்தினார்; உரை முடிந்ததும் விளக்கு அணைக்கப்பட்டது, ராஜ் பகதூர் போலீசார் கண்ணில் மண்ணைத் தூவி ஒரு வீட்டின் வழியே தப்பி மறைந்தார்.

பிடிஆர் பாதை, பயனற்ற ஆயுதப் போராட்டம்

            ராஜ் பகதூர் கலந்து கொண்ட கட்சியின் (இரண்டாவது) காங்கிரஸ் மாநாடு 1948 பிப்ரவரியில் பிடிஆர் பாதையை ஏற்று சாகசப் பாதையில் வழி நடத்தப்பட்டது. ராஜ் பகதூர் பிடிஆர் பாதையை ஆதரித்தார். அப்பாதை ஹைதராபாத் மற்றும் தெலுங்கான பகுதிகளின் கட்சியை ஆயுதப் போராட்டத்தைத் தொடர நிர்பந்தித்தது; அதுவும் இந்திய இராணுவம் 1948 செப்டம்பரில் (’போலீஸ் நடவடிக்கை’) நுழைந்த பிறகும் –‘சோஷலிசப் புரட்சி’யைச் சாதிப்பதன் பகுதியாக – ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்தது. விவசாய மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பெரும் பகுதியினரிடமிருந்து போராட்டம் தனிமைப்படுத்தப்பட்டு, கிராமங்களிலிருந்து காடுகளுக்கு இடம் மாற்றிச் செல்ல வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது. ‘போலீஸ் நடவடிக்கை’க்குப் பிறகும், மற்றும் நிஜாம் தப்பி ஓடிய பின்னரும் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்தது உண்மையான பேரழிவு.

   ஹைதராபாத்துக்குள் இந்திய இராணுவம் நுழைந்த பிறகும் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வது குறித்துக் கட்சிக்குள் வேறுபாடுகள் வளரத் தொடங்கியது. குறிப்பாக 1950ல் பிடிஆர் நீக்கப்பட்ட பிறகு, கட்சி ஆழமாக விவாதித்து இறுதியில் ஆயுதப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றது, முதல் பொதுத் தேர்தல்களில் பங்கேற்றது.

      ராஜ் பகதூர் கௌரும்கூட ஆயுதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றே கருத்தினாலும், அதே நேரம் நிஜாமுக்கு எதிரான போராட்டத்தின் பலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார். மத்திய கட்சி அவரைத் தோழர்களிடம் பேச ராஜ் கொண்டா மலைகள், தேவரகொண்டா காடுகளுக்கும் (1951 மார்ச்–ஏப்ரல்) அனுப்பியது. அப்போது ஆயுதம் தாங்கிய குழுக்கள் ஜன்கௌண், போன்கிர் மலைப் பகுதிகளுக்கும் ராச்சகொண்டா காட்டுப் பகுதிகளுக்கும் பின்வாங்கிச் சென்றிருந்தது. அங்கே பல மாதங்கள் தங்கியிருந்த அவர் ஏராளமான அனுபவங்களைப் பெற்றார். அவர் கே கிருஷ்ணமூர்த்தி மற்றும் மற்றவர்களின் ஸ்க்வாடில் இருந்தார்.

            ரால்ல ஜன்கௌண் அருகே நான்கு நாட்கள் அரசியல் மற்றும் இராணுவப் பயிற்சி முகாமை நடத்தி முடித்த பிறகு பங்கேற்றவர்கள் கலைந்து சென்றாலும் சற்று தாமதப்படுத்தி விட்டார்கள். கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேறு சிலருடன் இணைந்து ராஜ் பகதூர் பக்கத்து மலைக்குப் புறப்பட்டுச் சென்றார். தங்கள் காலடித் தடத்தைத் தேடி மற்ற உறுப்பினர்கள் நேரத்தில் உண்மையில் புறப்பட்டு விட்டார்களா, இல்லையா என்பதை அறிய பின்னோக்கி வந்தனர். வரும் வழியில் ஓடையிலிருந்து தண்ணீர் அருந்தும்போது இராணுவப் பிரிவுகள் குறுக்கிட்டதால் திரும்ப வேண்டியதாயிற்று; அப்போது ராஜ் பகதூர் தனது மார்க் 4 ரைஃபிள் துப்பாக்கியைத் தொலைத்துவிட்டார். அவருடன் மற்ற இருவரையும் இராணுவம் துரத்திப் பிடித்து விட்டது; அவர்கள் இராணுவத்திடம் பிடிபட்டதை மலைகளுக்குப் பின்னால் இருந்து கிருஷ்ண மூர்த்தியால் பார்க்க முடிந்தது.

ராஜ் பகதூரின் இரண்டு தோழர்களான பைலா இராமச்சந்திர ரெட்டி மற்றும் குட்டா சீதாராமி ரெட்டி இராணுவ முகாமில் பிடித்து வைக்கப்பட்ட பிறகு சுட்டுக் கொல்லப்பட்னர். ஹைதராபாத் அரசு விடுதலைப் போராட்டத்தின் உயர்ந்த தலைவரான ராஜ் பகதூர் சுட்டுக் கொல்லப்படுவதிலிருந்து தப்பினார். காங்கிரஸ் தலைவர்கள், எஸ் இராதாகிருஷ்ணன் மற்றும் பிறரும் தலையிட்டு அவரது உயிரைப் பாதுகாக்க உதவினர்.

       ரைஃபிளின் அடிப்பக்கக் கட்டையால் இராணுவ ஆட்கள் அவரைத் தாக்கினர். விலங்கிட்டு கால்களைச் சங்கிலியால் பிணைத்து அவரை வாராங்கல் முகாமிற்கு மாற்றினர். தொடர்ந்து மூன்று நாட்கள் அவர் கொடுமைகளுக்கு ஆளானார். பின்னர் அவர் ஹைதராபாத் சிறைக்கு மாற்றப்பட்டபோது அங்கு மக்தூம் மற்றும் பலரைச் சந்தித்தார். இதன் மத்தியில் கட்சி ஆயுதப் போராட்டத்தை விலக்கிக் கொண்டு தேர்தல்களில் பங்கேற்க முடிவெடுத்தது.

திருமணம்

            1943லிருந்து பிரிஜ் ராணி, ராஜ் பகதூர் இருவரும் ஒருவரொடு ஒருவர் அறிமுகம் ஆனவர்கள். அந்நேரத்தில் ராணி கட்சி உறுப்பினராகி பெண் ஊழியர்கள் மத்தியில் தீவிரமாக இருந்தார். காங்கிரஸ் சத்தியாகிரகத்தில் பங்கேற்றது மட்டுமின்றி சிறையில் அடைக்கப்பட்ட அவர், தலைமறைவு வாழ்விலும் சென்றார். தலைமறைமாக இருந்தபோது இருவரும் 1948ல் திருமணம் செய்து கொண்டனர்.

அதற்கு முன் ராஜ் பகதூருக்கு 1939ல் அஸாம்கர்க்கைச் சேர்ந்த சன்ஜோகிதாவுடன் திருமணம் நடந்தது. ஆனால் அவரது அரசியல் நடவடிக்கைகள் காரணமாக அவர்களது திருமண வாழ்வு சுமுகமாகச் செல்லவில்லை, இருவரும் மணமுறிவு பெற்றனர்.

தேர்தல்களும் அதற்குப் பிறகும்

          1951ல் கட்சி ஆயுதப் போராட்டத்தை விலக்கிக் கொண்டது, மேலும் தேர்தல்களில் போட்டியிடுதெனத் தீர்மானித்தது. ராஜ் பகதூர் கௌர் சிறையில் இருந்தபடி முஷிராபாத் தொகுதியிலிருந்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார், ஆனால் உரிய நேரத்திற்குள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இயலவில்லை. பின்னர் மே 1952ல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; நாடாளுமன்ற தொடங்க நாளில் கலந்து கொள்ள வசதியாக 1952 மே 13ல் சிறையிலிருந்து விடுதலையானார்.

இந்தியாவின் துணை குடியரசுத் தலைவரும் மக்களவைத் தலைவருமான டாக்டர் (சர்வபள்ளி) எஸ் இராதாகிருஷ்ணன் அவையின் எந்த உறுப்பினரும் சிறையில் இருக்கலாகாது
என வற்புறுத்தினார். அதனை ஆட்சேபித்த கோபால சுவாமி அய்யங்காரிடம் இராதாகிருஷ்ணன் கூறினார்,
“ஒவ்வொரு முனிவருக்கும் ஒரு கடந்த காலம் உண்டு, ஒவ்வொரு பாவிக்கும் ஓர் எதிர்காலம் உண்டு!” இரண்டாவது முறை 1956ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ் பகதூர் கௌர், மூன்றாவது முறை வாய்ப்பு வழங்கப்பட்டபோது மறுத்து விட்டார், ஏனெனில் அப்போது ஹைதராபாத் நகரத்தின் கட்சி செயலாளராக ஆகி இருந்தார்.

கட்சியில் வகித்த பொறுப்புகள்

        அவர் 1940களிலும் பின்னர் 1962ல் ஹைதராபாத் நகரத்தின் கட்சி செயலாளர், கட்சி பிராந்தியக் குழு உறுப்பினர், கட்சி மாநிலக் குழுவின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்; 1969 முதலாக சிபிஐ தேசியக்குழு உறுப்பினராகவும், 1988ல் ஓய்வு பெறும் வரை 1975லிருந்து சிபிஐ சிஇசி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். மத்திய கட்சி உருது மொழியில் நடத்திய ‘கம்யூனிஸ்ட் ஜெய்ஸா’ (கம்யூனிஸ்ட் ரிவியூ) மாதாந்திர இதழின் ஆசிரியராகவும் 1978லிருந்து கட்சி தொழிற்சங்க இலாக்காவின் பொறுப்பாளராகவும் செயல்பட்டார்.

    70 வயதை எட்டியதிலிருந்து ஒவ்வொரு பதவியையும் கைவிடத் தொடங்கினார். மாநிலத்திலும் மற்றும் நாடு முழுவதிலும் எண்ணிறந்த முக்கியத் தொழிற்சங்க அமைப்புகளின் பதவிகளை வகித்த அவர் பிரபலமான தலைவராக விளங்கினார். 1954ல் ஏஐடியுசி பேரியக்கத்தின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 1986லிருந்து அதன் துணைத் தலைவராக இருந்தார்.

     அவரே புகழ்பெற்ற எழுத்தாளராகவும் இலக்கியவாதிகள், கலைஞர்கள் பலருடன் தொடர்பில் இருந்ததுடன் முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.  

            எண்ணிறந்த புத்தகங்கள், கையேடுகள் மற்றும் கட்டுரைகளை அவர் எழுதினார்.

       ராஜ் பகதூர் கௌர் 93வது வயதில் 2011 அக்டோபர் 7ம் நாள் இயற்கை எய்தினார். அவருடைய புகழ் உடம்பு மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக உஸ்மானிய மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

       விடுதலைப் போராட்டம் மற்றும் சமூகப் பணிக்களுக்கு டாக்டர் ராஜ் பகதூர் கௌர் ஆற்றிய தலைச்சிறந்த பங்களிப்புக்களுக்காக அவருக்கு ‘யுத்தவீரர் நினைவு விருது’ (யுத்வீர் மெமோரியல் அவார்டு) அளிக்கப்பட்டது.

நினைவில் வாழும் அவரது வாழ்வும் பணியும் இத்தேசத்தின் இளம் கம்யூனிஸ்களுக்கு என்றென்றும் ஆதர்சமாக விளங்கும்!

-- நன்றி  : நியூஏஜ் (ஜூலை 17 –23)

                      --தமிழில் : நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர்

 

No comments:

Post a Comment