Wednesday 3 August 2022

சுற்றுச்சூழல் -- 2006 வன உரிமை சட்டத்தில் திருத்தத்தைக் கைவிடுக --டாக்டர் சோம மார்லா

2006 வன உரிமைகள் சட்டத்தைச் சீர்குலைப்பது
பெரும் கார்ப்பரேட்
குழுமங்களுக்கு உதவிடவே

--டாக்டர் சோம மார்லா

            

          திருமதி திரௌபதி முர்முவைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தபோது பாஜக தன்னைப் பழங்குடி மலைவாழ் இன மக்களின் பாதுகாவலராகப் பெருமை அடித்தது. எனினும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக அவர்கள் பயன்பெறும் வகையில் 2006 வனஉரிமைகள் சட்டத்தில் மாற்றங்களை முன்மொழிந்த அரசு, தான் உரிமை கொண்டாடிய அந்தப் பெருமைக்கு நேர் எதிரிடையாகப் பழங்குடி மக்களுக்குப் பாதகமாகச் செயல்படுகிறது.

            நாடாளுமன்ற நடப்பு மழைக் காலக் கூட்டத் தொடரில் 2006 வனஉரிமைகள் சட்டத்தில் புதிய விதிகள் முன்மொழியப்பட உள்ளன. இந்த மாற்றங்கள் பழங்குடி மக்களின் நலன்களுக்கும், காடுகள் பாதுகாப்புக்கும் எதிரானது, மற்றும் பெரும் கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்வதற்காக மட்டுமே கொண்டு வரப்படுவது. வனச்சமூகத்திற்கு உரிமையான காடுகள் தனியார் சுரங்கம் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் கையளிப்பதற்காகவே 2006 சட்டத்தில் இத்திருத்தங்களுக்கான மசோதா ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சரகத்தால் அறிமுகப்படுத்தப்படுகிறது.

வனஉரிமைகள் சட்டம்

            அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசால் இடதுசாரி கட்சிகளின் உறுதியான ஆதரவுடன் பழங்குடி மக்களின் நலங்களைப் பாதுகாப்பதற்காக இச்சட்டம் 2006ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தியக் காடுகள் 20கோடி மக்களின் தாய் வீடு மற்றும் காடு என வகைப்படுத்தப்பட்ட நிலங்களில் சுமார் 10கோடி மக்கள் வாழும் நிலையில் அவர்களின் அடிப்படை வாழ்வாதாரம் நேரடியாகக் காடுகளைச் சார்ந்து உள்ளது. சுருக்கமாக வனங்களில் வாழும் அதிவாசிகள்தான் உயிரியல் ஆதார வளங்களின் உண்மையான பாதுகாவலர்கள்.

புதிய விதி

            புதிய 2022 வனப் பாதுகாப்பு விதிகளில் சுற்றுச்சூழல் அமைச்சகம் விதி 6(b)(ii)யை அறிமுகம் செய்துள்ளது; அவ்விதி, 2006 வன உரிமைகள் சட்டத்தைப் பொருட்படுத்தாது வனநிலங்களைத் தனி நபர்களுக்கு மாற்றுவதைத் தாராளமாக்கியுள்ளது. புதிய விதியின்படி வனநிலங்கள் அடங்கியுள்ள கிராம சபா அனுமதியைப் புறம்தள்ளி மாவட்டக் கலெக்டருக்கு மேலதிகமான அதிகாரமளிக்கிறது; அவர் வன நிலங்களை ஹெக்டேருக்குச் சொற்பக் கட்டணத்தைப் பெற்ற பிறகு தனியாருக்கு மாற்றித் தருவதற்கும் அதிகாரமளிக்கிறது. அப்படி வன நிலங்களைப் பெற்ற தனிநபர்கள் அந்நிலத்தை நிலத்தடிச் சுரங்கம் தோண்டுவது, கட்டடங்கள் கட்டுவது உட்பட பயன்படுத்துவதற்காக அங்கே உள்ள மரங்களை வெட்டவும் வனவிலங்குகளை விரட்டவும் வரையறையற்ற சொத்துரிமை பெற்றவராகிறார்கள்.

காலனிய காலத்தில்…

            பிரிட்டிஷ் காலனிய காலத்தில் 1878 இந்திய வனச் சட்டம், வனங்களின் உற்பத்திப் பொருட்களை இடம் பெயர்த்து எடுத்துச் செல்வதை ஒழுங்குபடுத்தவும் மரப்பலகைகள், மரங்கள் மற்றும் வனப் பொருட்கள் மீது வரி விதிக்கவும் கொண்டுவரப்பட்டது; மேலும் அதன் மூலம் பெருமளவில் மரங்களை வெட்டவும் ஏராளமான வனச் செல்வத்தை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதும் அவர்கள் நோக்கம். 1810 முதல் 1950 வரையான காலத்தில் பலபல பத்தாண்டுகளாக இந்தியாவின் காடுகளின் பரப்பு சுமார் 40 சதவீதம் சுருங்கி விட்டது; இதன் விளைவாய் இந்தியத் துணைக் கண்டத்தில் பருவநிலை அமைவின் மாற்றங்கள், பஞ்சம் பற்றாக்குறை மற்றும் வறுமை ஏற்பட்டது. நூற்றாண்டுகளாக வனங்களின் இயற்கையான பாதுகாவலர்களாக விளங்கிய பழங்குடி இனங்கள் தங்கள் மூதாதையர் வனநிலங்களையும் இனப் பண்பாட்டு கலாச்சார உரிமைகளையும் இழந்தனர். அடிமைப் படுத்திய காலனிய எஜமானர்களால் அவர்கள் காடுகளிலிருந்து விரட்டப்பட்டனர். 

            2006 வன ஒழுங்குமுறை சட்டம் அன்றைய யுபிஏ அரசால், முக்கியமாகக் காலனிய

பிரிட்டிஷ் இந்திய வன சட்டம் 1878 ஆதிவாசிகள் மீது தொடுத்த வரலாற்று அநீதியைத் துடைத்து அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டது. வனங்களில் வசிக்கும் பழங்குடிகள் மற்றும் பரம்பரையாகக் காடுகளில் வாழும் பிற மக்கள் சமூகத்தினருக்கு வன வள செல்வாதாரத்தின் மீதான உரிமைகளை அச்சட்டம் அங்கீரித்தது. அம்மக்களின் வாழ்வாதாரம், வாழிடம் மற்றும் பிற சமூக கலாச்சாரத் தேவைகளுக்கும் அவர்கள் காடுகளை நம்பியே வாழ்ந்தார்கள்.

சர்வதேச உடன்பாடுகளுக்கு எதிராக

            மேலும், இன்று அச்சட்டம் அளித்த பலன்களைச் சீர்குலைக்கும் வகையில் கொண்டு வந்துள்ள 2022 வனச் சட்டம் திருத்த மசோதாவின் பிரிவு 6(1A) மற்றும் (1B), ஐநா மன்றத்தின் உயிர் பன்மைத்துவ மாநாட்டின் உடன்படிக்கை மற்றும் “பயன்களைப் பெறுதல் மற்றும் பகிர்தல் மீதான நகோயா மாநாட்டு உடன்படிக்கை” (ஷரத்து 5) வலியுறுத்தும் உயர்நோக்க உணர்வுகளுக்கு எதிராகச் செல்வதுமாகும். இந்தச் சர்வ தேச உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

[புவி உச்சி மாநாடு என்று சிறப்பாக அழைக்கப்படும் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா மாநாடு ரியோ-டி-ஜெனிரோ நகரில் 1992-ஆம் ஆண்டு ஜூன் 3 முதல் 14 வரை நடைபெற்றது. தொடர்ந்து பல மாநாடுகள் உலக மக்கள் சம பங்கு, சம உரிமையுடன் வாழ்வதற்கான பல தலைப்புக்களில் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் ஜப்பானின் நகோயா நகரில் நடந்த மாநாட்டில் ஓர் உடன்பாடு எட்டப்பட்டது.

நகோயா விதிமுறைகள் என்பது 1992 உயிரியல் பன்மைய மாநாட்டு முடிவுகளின் கீழ் 2010ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட, உயிரியல் பன்மையத்தைப் பயன்படுத்துவது பற்றிய துணை உடன்படிக்கை, நகோயா விதிமுறைகள் ஆகும். மரபியல் மூல வளங்களை நியாயமாகவும், சமமாகவும் அணுகி, பயன்களை நியாயமாகவும், சமமாகவும் பகிர்தல் குறித்த விதிமுறைகளை இது கொண்டுள்ளது.

இம்மாநாட்டில் கலந்து கொண்டு பேச வாய்ப்புப் பெற்ற திருச்சி மாணவி லாவண்யா, “உயிரியல் வேறுபாடு நம்மால் உருவாக்கப்படவில்லை. எனவே, உயிர்களை அழிக்கும் உரிமை நமக்கில்லை. நம்முடைய கடமை, அதைக் காத்து, அடுத்த சந்ததியினருக்குக் கொண்டு செல்வதுதான்” என்று குறிப்பிட்டார், தமிழ் மண்ணின் கிரேட்டா துன்பர்க்! –-கூடுதல் இணையத் தகவல்கள்]

2022 வனப் பாதுகாப்புப் புதிய விதிகள் உறுதி செய்யும் “விழுந்த மரங்கள்/ கிளைகள் சுத்தம் செய்தல்” (க்ளீயர் ஃபெல்லிங்) என்பது உண்மையில் 40 ஹெக்டேர் அல்லது அதற்கு மேற்பட்ட வன நிலத்தில் “இயற்கையாக வளர்ந்த மரம் செடி கொடி தாவரங்கள் அனைத்தையும் அகற்றுவது” என்பதே ஆகும்; இதன் மூலம் தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எஸ்டி இனத்தவர் மற்றும் காடுகளில் வசிக்கும் பிற பாரம்பரிய மக்களின் உரிமைக்களைப் பாதுகாத்தல் என்ற தனது அரசியலமைப்புக் கட்மைகளைக் கைவிடுகிறது.

‘வணிகம் செய்தலை எளிமையாக்கல்’ என்ற பெயரில் அமைச்சரகம் தற்போது கிராம சபைகள், மாநில அரசுகள், பல்வேறு (பாதிக்கப்பட்ட) மக்கள் குழுக்களுக்குப் பதிலாகத் “தட்டையான ஓர் அமைப்பை’ சில குறிப்பிட்ட அதிகாரிகள் மற்றும் ஆலோசனைக் குழுவை மட்டும் கொண்டு அமைச்சரகத்தில் ஏற்படுத்தியுள்ளது. தொகுத்துக் கூற, வன நிலங்களை மாற்றுவது (டைவர்சிஃபிகேஷன்) குறித்த முன்மொழிவுகளின் அனைத்து ஒப்புதல்களையும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதிலாக வன நிர்வாக அதிகாரத்துவ அமைப்பு கட்டுப்படுத்தும். மேலும், வன நிலங்களை மாற்றுவதற்குக் கிராம சபையின் அனுமதியைக் கட்டாயமாக்கிய உச்சநீதிமன்றத்தின் 203 தீர்ப்பையும் உத்தேசிக்கப்பட்ட திருத்தங்கள் மீறுகின்றன.

பிரதமர் அலுவலகத் தலையீடு

பழங்குடி இன விவகாரத் துறையின் அமைச்சரகம் வன உரிமைகள் சட்டத்திற்கு அதிகாரம் பெற்ற அமைப்பு (நோடல் பாடி) தானே என்று உறுதிபடக் கூறி சுற்றுச்சூழல் துறை அமைச்சரகத்தை விமர்சித்தது; எனவே சுற்றுச்சூழல் அமைச்சரகத்தின் அத்தகைய உத்தரவுகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்றது. இந்தத் தருணத்தில்தான் பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) பழங்குடி இன விவகாரத் துறை அமைச்சரகத்தின் ஆட்சேப எதிர்ப்புக்களை நிராகரித்தது. பிரதமர் அலுவலக அறிவுறுத்தல்படி சுற்றுச் சூழல் அமைச்சரகம் 2006 வன உரிமைகள் சட்டத்திற்குத் தற்போதைய திருத்தங்களை வரைந்துள்ளது.

நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தியக் காடுகள் சுமார் 17ஆயிரம் பூக்கும் தாவர இனங்கள் மற்றும் வன விலங்குகளுக்கு வசிப்பிடமாகும். இத்திருத்தங்களை எதிர்த்து உயிரியலாளர்கள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வனப் பாதுகாப்புக் குறித்த தற்போதிருக்கும் விதிமுறைகளைத் தளர்த்துவது வனப் பாதுகாப்பு, உயிரி பன்மைத்துவ முயற்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் வன வளத்தின் செல்வாதாரம் மற்றும் வர்த்தகப் பலன்களை உள்ளூர் பழங்குடி இனச் சமூகத்தினருடன் பகிர்தல் என்ற கொள்கைக்கு எதிராகவும் அமையும் என எச்சரிக்கின்றனர். ஆதிவாசிகள் உயிரி செல்வ வளத்தைப் பாதுகாக்கும் அறங்காவலர்கள். திருத்த மசோதாவின் பிரிவு 6(1A) மற்றும் (1B), ஐநா மன்றத்தின் உயிர் பன்மைத்துவ மாநாட்டின் உடன்படிக்கை மற்றும் “பயன்களைப் பெறுதல் மற்றும் பகிர்தல் மீதான நகோயா மாநாட்டு உடன்படிக்கை” (ஷரத்து 5) வலியுறுத்தும் உயர்நோக்க உணர்வுகளுக்கு எதிராகச் செல்வதுமாகும். இவ்வுடன்பாடுகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

நம் நாட்டு சட்டமியற்றும் முறையில் குறிப்பிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் முன் அது குறித்த மக்களின் கருத்தறிவது தேவை எனச் ‘சட்டம் இயற்றும் முன் ஆலோசனை கொள்கை’ நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த மசோதா இந்திய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், பொது மக்கள் கருத்தறியும் எந்தவிதமான முன் ஆலோசனைகளையும் நடத்தாமலேயே, அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வனங்கள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?

வனங்கள் ‘புவிக் கோளின் நுரையீரல்கள்’ என அடிக்கடி குறிப்பிடப்படக் காரணம், பொதுவாக அவை கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு நாம் சுவாசிக்க ஆக்ஸிஜனை வெளியிடுகின்றது என்பதே. அதிக அளவு மழைப் பொழிவுள்ள மழைக்காடுகள் உலக ஆக்ஸிஜன் தேவையில் 40 சதவீதத்தை உற்பத்திச் செய்கின்றன.

. இவ்வாறு காடுகள் பூமிப் பந்தின் சுவாசப் பைகளாக வரையறுக்கப்படுகிறது. காடுகளை அழிப்பதை ஊக்குவிக்கும் எந்தச் சட்ட நடவடிக்கையும் இன்றைய உலகின் தற்போதைய வெப்பமயமாதலை விரைவுபடுத்தும். அத்தகைய வெப்பமயமாதலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நம் நாடு உட்பட உலகின் பல நாடுகளும் ஐநா சர்வதேசச் சுற்றுச் சூழல் உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளன. அதற்கு எதிராக நடப்பது சர்வதேச விதி மீறல். இந்நிலையில் பெருமளவில் சுரங்கங்கள் வெட்டுவது, மருந்து உற்பத்தித் தொழில் பயனடைவதற்காக 2006 வன ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்களை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும் காடுகளை அழிப்பதைத் தவிர்த்து பழங்குடி இன மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.

பழங்குடி இனத்தைச் சேர்ந்த திருமதி திரௌபதி முர்மு அவர்களைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாடும் நாட்டில் பழங்குடி இன மக்களின் பாரம்பரிய உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்!

--நியூஏஜ் (ஜூலை 31 –ஆக.6)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

   

 

No comments:

Post a Comment