Wednesday 10 August 2022

கம்யூனிஸ்ட் தலைவ்ர்கள் வரலாற்று வரிசை 68 -- புர்குலா நரசிங் ராவ்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 68

        
புர்குலா நரசிங் ராவ் --

சீர்திருத்தவாதி, தலைச் சிறந்த மாணவர் இயக்க மற்றும்
நிஜாம் எதிர்ப்புப் போராட்டத் தலைவர்

                                             அனில் ரஜீம்வாலே

                “என்னை அரசியல் உணர்வுடையவனாக, சுற்றியுள்ள உலகைக் குறித்த விழிப்புணர்வு உடையவனாக மாற்றியதில் இருவருக்கு நான் நன்றிக் கடன்பட்டவனாவேன்: ஒருவர் நரசிங் மற்றவர் வைதீஸ்வரன். அவர்கள் இன்றேல் நான் உள்ளூர் கிணற்றுத் தவளையாக என் சிந்தனை வரையறைக்கு உட்பட்டிருக்கும்!”--(புகழ்பெற்ற சினிமா இயக்குநர் ஷ்யாம் பெனகல்

            B நரசிங் ராவின் முன்னோர்கள் குறைந்தபட்சம் ஏழு தலைமுறையாக ஹைத்தராபாத் நகரிலிருந்து 68 கிமீ தொலைவில் உள்ள புர்குலா கிராமத்தில் வசித்தார்கள். குத்ப் ஷாகியின் கீழ் கோல்கொண்டா மன்னராட்சியின் இறுதி ஆண்டுகளில் அவர்களில் சிலர் வைரம் மற்றும் முத்து வணிகத்திற்கு மாறினார்கள். நரசிங்கின் முன்னோர்கள் மக்தேதார்கள் (தனிஅதிகாரம் பெற்ற ஒப்பந்தக்காரர்கள்), ஜாகீர்தார் (ஜமீன்தார்)களால் சில கிராமங்களின் தொகுப்புக்கள் வழங்கப்பட்டவர்கள். நரசிங்கின் தாத்தா அத்தகைய ஒரு மக்தேதார்.

            புர்குலா நரசிங் ராவ் புர்குலா கிராமத்தில் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்த குடும்பத்தில் 1932 மார்ச் 14ம் நாள் பிறந்தார். பி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் நீலா தேவியின் ஒன்பது குழந்தைகளில் மூத்த மகனாகப் பிறந்தார் நரசிங். எண்ணிறைந்த மக்களுக்கு அவர்களது இல்லம் ஒரு திறந்த இடமாகவும் தங்குமிடமாகவும் இருந்தது. அத்தகு  கணக்கற்ற மக்களுக்கு நீலா தேவி ஓர் அன்னையாக உணவளித்தார். அவரது தந்தை பி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் மாமா, தந்தைக்கு மூத்த சகோதரரான பி இராமகிருஷ்ண ராவ் மற்றும் சிலர் நிஜாமுக்கு எதிரான போராட்டத்திலும் சுதந்திர இயக்கத்திலும் ஈடுபட்டனர்.

           ‘இம்ரோஸ்’ (இன்று/இப்போது) என்ற தேசிய உருது நாளிதழ் முகமது ஷூபுல்லாஹ் கான் அவர்களை ஆசிரியராகக் கொண்டு அவர்கள் வீட்டிலிருந்து வெளியிடப்பட்டது. நரசிங்கின் மாமா, டாக்டர் புர்குலா இராமகிருஷ்ண ராவ் முன்பு இருந்த ஹைத்தராபாத் அரசின் முதலாவது முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கல்வி

            சுற்று வட்டாரத்தில் பள்ளிகள் எதுவும் இல்லாத நிலையில், நரசிங்கின் தந்தை தனது இல்லத்திலேயே பள்ளியைத் திறக்க, அங்கேயே நரசிங் தொடக்கக் கல்வியைப் பெற்றார். அவர் ஆங்கிலம், உருது, தெலுங்கு, பெர்ஷியன் மற்றும் சமஸ்கிருத மொழிகளைக் கற்றார். நிலப் பிரச்சனை காரணமாகக் குடும்பம் ஹைத்தராபாத்துக்குச் சென்றது. தேசியவாதியான அவரது தந்தை காங்கிரசுடன் நெருக்கமாக இருந்தார்.

            நரசிங் 1941 லிருந்து 1946 வரை ஹைத்தராபாத் விவேக் வர்த்தினி பள்ளி என்ற தேசியப் பள்ளியில் சேர்ந்து படித்தார். காதி ஆடை அணியத் தொடங்கினார். 1942ல் மாணவர்களின் ஒரு பெரும் பேரணியில் கலந்து கொள்ள, அவருக்கு லத்திகள் அடி மற்றும் கண்ணீர் புகை அறிமுகமானது: அது வெள்ளையனே வெளியேறு இயக்கம். விரைவில் அவர் ஆந்திர மகாசபா அமைப்பில் சேர்ந்தார். வார்தாவில் 1945ல் காங்கிரசின் ராஷ்ட்ரிய சேவா தள் அமைப்பு ஏற்பாடு செய்த தேசிய முகாமிலும் அவர் கலந்து கொண்டார்.

ஷூபுல்லாஹ் படுகொலை

ஷூபுல்லாஹ் கான் ‘இம்ரோஸ்’ உருது நாளிதழின் ஆசிரியர். அவரைப் படுகொலை செய்தது நிஜாமின் ஆயுதம் தாங்கிய அடியாட்கள் தலைவனான காசிம் ரிஜ்வீயின் கீழ்ச் செயல்பட்ட மஜ்லிஸ்-இ-இத்திகாதுல் முஸ்லீமீன் ரஜகார்கள் (ஆயுதப் படையினர்). [அவர்கள் இந்தியாவுடன் இணையாது ஹைத்தராபாத்தைத் தனி முஸ்லீம் அரசாக நீடிக்க விரும்பியவர்கள். இந்துக்களை மட்டுமல்லாது, அவர்களோடு உடன்படாத தேசிய முஸ்லீம்கள் மற்றும் கம்யூனிஸ்ட்களையும் குறிவைத்துத் தாக்கினர்.] ‘போலீஸ் நடவடிக்கை’ அல்லது ஹைத்தராபாத்துக்குள் இந்திய இராணுவம் நுழைந்த ‘ஆப்பரேஷன் போலோ’ நடவடிக்கைக்குப் பிறகு காசிம் ரிஜ்வீ, நிஜாமுக்கு எதிராக யார் எழுதினாலும் அவர்களைத் தீர்த்துக் கட்டுவேன் என மிரட்டினான். பி இராமகிருஷ்ண ராவ், ஹைத்தராபாத், குச்சிகுடா, சாப்பல் கடைவீதியில் இருந்த தனது இல்லத்திலிருந்து ‘இம்ரோஸ்’ நாளிதழை அதன் வெளியீட்டாளராக வெளியிட்டார்.

அந்நாளிதழில் வெளியான ‘கழுதையின் பிரியாணியும் துணி வெளுப்பவர் எரிச்சலும்’ (கட்ஹோன் கி பிரியாணி, தோபியோன் கி பரேஷானி) என்ற தலையங்கத்தின் தலைப்பே ஷூபுல்லாஹ் மீது ரஜகார்கள் தாக்குதல் நடத்துவதற்கான உடனடிக் காரணமாயிற்று. அப்போதுதான் அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்ற நரசிங், திடீர் சப்தங்களைக் கேட்டுத் திரும்ப, ஷூபுல்லாஹ் மீது ரஜகார்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதைப் பார்த்தார். அவரது வலது கையைத் துண்டிக்க அது சில அடிகள் தள்ளி விழுந்தது, தொடர்ந்து அவர்கள் அவரது நெஞ்சில் மூன்று துப்பாக்கித் தோட்டாக்களைச் செலுத்தினர். 1948 அந்த ஆகஸ்ட் 22ல் அவரது மைத்துனரின் இடது கையையும் அவர்கள் வெட்டினர். ஷூபுல்லாஹ்வை உஸ்மேனியா மருத்துவ மனைக்கு நரசிங் கொண்டு சென்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. நரசிங்கிடம் அவர் கூறிய கடைசி வார்த்தைகள், “பாபு, நான் சென்று வருகிறேன்!”

இந்தப் படுகொலை, ஹைத்தராபாத் மற்றும் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மாணவர் இயக்கத்தில்

            மாணவர் இயக்கத்தின் தீவிர அமைப்பாளராகி நரசிங் ராவ் ‘அனைத்து ஹைத்தராபாத் மாணவர்கள் சங்கம்’ (AHSU)வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 16 மட்டுமே. 1949ல் 17வயதிலேயே கைது செய்யப்பட்ட அவர் மோசமான நிலையில் இருந்த சன்சால்குடா சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாதங்களில் விடுதலையான பிறகு தலைமறைவு இயக்கத்தில் ஏராளமான பணிகளைச் செய்தார். ஒரு மாணவர் தலைவராக நரசிங் 1953 –54ல் அவரது சொந்த மாமாவான முதலமைச்சர் பி இராம கிருஷ்ண ராவ் காரை மறித்து நின்றார்.

     (பிற்காலத்தில் மாணவர்களின் போராட்டம் பற்றிய விவரங்களைத் திரும்ப விவரிக்கும்போது, அதில் ஈடுபட்ட புகழ்பெற்ற மாணவர் தலைவரான அவர் கண்களில் பரவும் தீச்சுடர், முதலமைச்சரான தனது மாமாவின் மருமகனாகத் தான் அவருடனே எவ்வாறு மாணவர்களின் கோரிக்கைகளை வற்புறுத்திப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது என்பதை விவரிக்கும்போது சட்டென்று அந்தக் கண்கள் எளிதாக மின்னத் தொடங்கும். – நன்றியுடன் www.thehansindia.com இணையக் கட்டுரையில் உமா மகள்)

            வடக்கிலிருந்து புலம் பெயர்ந்து வருவதை ஊக்கப்படுத்தக் கூடாது என்ற ‘மண்ணின் மைந்தர்கள் உள்ளூர் ஆட்சி’ (முல்கி ரூல்) அங்கே உருவாகியது. 1952 பொதுத் தேர்தலுக்குப் பிறகு அரசு சேவையில் வெளியிலிருந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்க, இதன் விளைவாய் அதிருப்தியும்கூட வளர்ந்தது. அப்போது ஆந்திரா மெட்ராஜ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆந்திரா ஊழியர்கள் ஹைத்ராபாத்துக்குள் படையாக வரத் தொடங்கினர்.

            முல்கி இயக்கம் (ஹைத்தராபாத் அரசின் வேலை வாய்ப்புக்களில் உள்ளூர் மக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த இயக்கம்) உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை கோரியது. நரசிங் ராவ் தலைமை ஏற்று நடத்திய மிகப் பெரிய போராட்ட இயக்கம் செப்டம்பர் 3ல் தொடங்கியது; அதில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிலர் கொல்லப்பட்டனர். உஸ்மானியா மருத்துவமனையில் ஆயிரக் கணக்கானவர்கள் கூடி கொல்லப்பட்ட போராளிகளின் உடல்களைக் கோரினர். மீண்டும் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட நரசிங் ராவும் மற்றவர்களும் நயாபுல் பாலத்திற்கு அடியில் புகலிடமாகக் கொண்டனர். இந்தப் போராட்ட இயக்கம் இரண்டு மாதங்களுங்களுக்கு மேல் நீடித்தது.

            நரசிங் கூறினார் : “வாராங்கல்லில் தொடங்கிய போராட்ட இயக்கம், ஹைத்தராபாத், அவுரங்காபாத், மராத்வாடா எனப் பரவி முழு மாகாணத்தையும் மூழ்கடித்தது. நான் நிஜாம் கல்லூரி மாணவர்கள் சங்கத்தின் தலைவர். நாங்களும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தோம். நாங்கள் குறுகிய மனம் கொண்டவர்கள் இல்லை, ‘ஆந்திரர்களே வெளியேறு என்பன போன்ற முழக்கங்களை நாங்கள் ஆதரிக்கவில்லை. நாங்கள் விரும்பியது எல்லாம் உள்ளூர்வாசி (முல்கி) களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதே.”

            பேச்சுவார்த்தை நடத்தப் பிரதமர் நேரு, கல்வி அமைச்சர் மௌலானா ஆஸாத் முதலானவர்கள் நேரடியாக ஹைத்தராபாத் வந்தனர். நிஜாம் கல்லூரி கூட்டம் ஒன்றில் நேரு பேசினார். நடவடிக்கைக் குழுவின் தலைமைப் பொறுப்பாளர் மற்றும் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் நன்றி உரை வழங்கிய நரசிங் ராவ் நேருவைப் புகழ்ந்தார். நேரு உடனடியாக நரசிங் ராவை அப்படியே தூக்கினார்! என்ன காரணம்? நரசிங் கூறுகிறார் : “நான் நன்றி உரையாற்றிய மைக் வேலை செய்யவில்லை, நான் பேசியதைக் கூடி இருந்தவர்கள் கேட்ட முடியாததால், மாணவர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. அப்படியே என்னைத் தூக்கிய நேரு என்னை மற்றொரு மைக் முன் நிறுத்தினார்! அது என் வாழ்வில் மிக மிக உற்சாகக் கிளர்ச்சியூட்டிய தருணங்களில் ஒன்று!”

            அனைத்து ஹைத்தராபாத் மாணவர்கள் சங்கத்தின் தீவிரச் செயற்பாட்டாளராகிய நரசிங் பின்னர் அதன் பொதுச் செயலாளர் ஆனார்.

            பேட்டி ஒன்றில் நரசிங் ராவ் 1947 ஆகஸ்ட் 15ல் நடந்த நிகழ்வொன்றை, ‘அன்று விவேக் வர்தினி பள்ளி மாணவர்கள் எவ்வாறு போலீசாருடன் சண்டையிட்டு சுல்தான் பஜாரில் இருந்த மாணவர் சங்க அலுவலக வளாகத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்கள்’ என்பதை விவரித்தார். அப்போது நிஜாம் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதைத் தடை செய்திருந்தார். அன்று சங்க அலுவலகத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றியது, ரஃபி அகமது.

            1948 டிசம்பரில் இந்தோனேஷியாவை டச்சுக்காரர்கள் கைப்பற்றியதை எதிர்த்து ஓர் இயக்கம் நடைபெற்றது. ஊர்வலம் அலுவலகத்தை அடைந்ததும், சில அடியாட்கள் லத்திகளால் தாக்கத் தொடங்கினர். நரசிங் காயமடைந்தார். சில நாட்களுக்குப் பிறகு அதே கும்பல் அலுவலகத்தை மீண்டும் தாக்கி நரசிங் மற்றும் வித்தலை மிக மோசமாக அடித்ததில் அவரது முகம் வீங்கியது.

ஏஐஎஸ்எஃப் மாணவர் அமைப்பின் தலைவராக

1955 ஜனவரி 5 முதல் 8 வரை லக்னௌவில், கோவா விடுதலைப் போராட்டப் பின்னணியில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (ஏஐஎஸ்எஃப்) 14வது மாநாடு நடைபெற்றது. அமைப்பைக் கட்டுவதில் மாநாடு சிறப்புக் கவனம் செலுத்தியது. புதியதொரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில், மாணவர்களும் இளைஞர்களும் கோவா விடுதலைக்காக நாடு தழுவிய சத்தியாகிரக இயக்கத்திற்கு மும்முரமாகத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்த ஆண்டின் மத்தியில் அந்த இயக்கம் எப்போதையும்விட மிகப் பெரிய மக்கள் இயக்கங்களில் ஒன்றாக மாறியது, ஏஐஎஸ்எஃப் அதில் முக்கிய பங்காற்றியது. பின்னர் மாணவ சத்தியாகிரகி-களுக்கு உதவிட சி கே சந்திரப்பன் மற்றும் சுகேந்து மஜூம்தார் போன்ற ஏஐஎஸ்எஃப் தலைவர்கள் கோவா எல்லைகளில் முகாமிட்டனர்.

இந்த மாநாட்டில் பி நரசிங் ராவ் ஏஐஎஸ்எஃப் அமைப்பின் தலைவராகவும் சுகேந்து மஜூம்தார் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக அவரும் சிஹெச் அனுமந்த ராவும் இணைந்து மெட்ராசில் ஒரு வாரம் நடைபெற்ற ஏஐஎஸ்எஃப் செயற்குழுவில் கலந்து கொண்டனர். அனுமந்த ராவ் பொருளாதாரப் பாடத்தில் தனது எதிர்காலத்தைத் தேர்வு செய்வதில் நரசிங் ராவ் உதவினார்.  

நரசிங் ராவ் மாணவர் இயக்கத்தில் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்தினார். பட்ஜெட், வேலையில்லா திண்டாட்ட நிலை, கல்விக்குப் பட்ஜெட் ஒதுக்கீடு போன்ற பல விஷயங்களில் நரசிங் ராவின் விமர்சனக் கருத்தைப் பத்திரிக்கைகாரர்கள் வேண்டிப் பெற்றனர். ‘சியாசட்’ (அரசியல்) செய்திப் பத்திரிக்கை அவர் கருத்துக்களைப் பெரிய தலைப்புகளில் வெளியிட்டது.

நரசிங் டாக்டர் மங்குதா என்பவரைக் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். 1950களின் பிற்பகுதி மற்றும் ’60களில் பல்வேறு கல்லூரிகளில் அவர் அரசியல் விஞ்ஞானம் கற்பித்தார்.

தெலுங்கானா ஆயுதப் போராட்டம் குறித்து நரசிங் ராவ் (நிஜாமின்) ரஜகார்களை எதிர்த்துப் போரிடுவது வேறு, இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போரிடுவது வேறு என வாதிட்டு, இந்தியப் படைகள் நுழைவுக்குப் பிறகு ஆயுதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்- பட்டிருக்க வேண்டும் என்றார்.

முன்மாதிரியான கம்யூனிஸ்ட்

            1940களில், மாணவராக இருக்கும்போதே, புர்குலா நரசிங் ராவ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இறுதி மூச்சுவரை கம்யூனிஸ்ட்டாகவே இருந்தார். பெரும் புகழுடன்

நினைவில் நீங்காது இருக்கும் ராஜ் பகதூர் கவுர் (படம்), மக்தூம் மொகியுதீன், கே எல் மகேந்திரா, கைஃபி ஆஸ்மி, ஜாவத் ரிஜ்வி, டாக்டர் ஜெயசூர்யா, டாக்டர் கண்ணபிரான் போன்ற எண்ணற்ற தலைவர்கள் குழாமில் அவர் இருந்தார். 1952ல் நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தல்களில் தீவிரமாகப் பணியாற்றினார்.

            மேல் படிப்புக்காக இங்கிலாந்து சென்ற அவர் 1959ல் நாடு திரும்பினார். மங்குதாவும் அவருடன் இணைந்து கொண்டார். சில வருடங்கள் அன்வர் உல் லூம் கல்வி நிறுவனத்தில் நரசிங் அரசியல் விஞ்ஞானம் கற்பித்தார். ஆசிரியர்கள் அமைப்பான TACTA வுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

மக்தூம் நினைவுகள்

            பிரஜா சாஹிதி (மாதாந்திர இதழ்) மக்தூம் மொகியுதீன் குறித்தச் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டது. அப்போது எழுதும் நிலையில் இல்லாத நரசிங் தான் எழுத நினைத்ததைச் சொல்ல, குறிப்புக்களை நிர்மலானந்த், ரவி பாபு மற்றும் தீவி குமார் எடுக்க, தீவி குமார் அவற்றைத் தொகுத்துக் கட்டுரை வடிவில் செப்டம்பர் 2003ல் பிரஜா சாஹிதி சிறப்பு மலரில் வெளியானது. அந்தக் கட்டுரையில் மக்தூமின் இலக்கியப் பரிணாமம்*, தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சி, காம்ரேட்ஸ் அசோஸியேஷன் அமைக்கப் பட்டது, ஆந்திராவில் தொழிற்சங்க இயக்கம் மற்றும் அனைத்து ஹைத்தராபாத் மாணவர் சங்கம் போன்றவை உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை அவர் தொகுத்துக் கூறியிருந்தார்.

                     (*மக்தூமின் ஈரடிக் கவிதை இரண்டை உமா மகள் கட்டுரையில் மேற்கோள்

காட்டியிருந்தார்: “உயிர்ப்புடன் இருக்கும் அனைத்தையும் எடுத்துக் கொள், அனைத்துப் படைப்புக்களையும் எடுத்துக் கொள்; மேலே மேற்கொண்டு நீங்கள் செல்வதென்றால், உங்களுடன் உலகின் அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்!” இந்தக் கவிதையைப் படித்தால், பாவேந்தர் பாரதிதாசனின், எங்கும் பாரடா இப்புவி மக்களை! பாரடா உனது மானிடப் பரப்பை! பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்! மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்! அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு! விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை! அணைந்துகொள்! உன்னைச் சங்கம மாக்கு! மானிட சமுத்திரம் நானென்று கூவு!” என்ற கவிதை வரிகள் நினைவில் வரும்.

அதிகம் அறியப்படாத மக்தூமின் மற்றொரு கவிதை, நரசிங் கால இத்தலைவர்கள் குழு எப்படி விமர்சனபூர்வமாக நிகழ்வுகளை மதிப்பிட்டது என்பதைத் தொகுத்துக் கூறும் அந்த வரிகள்: “வலியின் சப்தம் எதுவும் அங்கே இல்லை, பிணைத்த சங்கிலியின் ஓசை இல்லை, இன்று சிறையில் என்ன வெளிப்பட்டு விரியும், அந்தச் சிறை மௌனமாய் இருக்கும்போது?” –பேட்டியின்போது உமா மகள் அவர்களிடம் நரசிங் பகிர்ந்து கொண்டது)

வளர்ச்சிப் பணிகள்

            புர்குலா காட்டன் டிரஸ்ட் அமைப்பு 2007ல் நரசிங் ராவால் –அவரது புர்குலா கிராம வளர்ச்சிக்காக – தொடங்கப்பட்டது. கிராமத்தில் சிறு நூற்பு மற்றும் நெசவுத் தொழில் தொடங்குவதற்கான நிதிக்கு அவர் ஏற்பாடு செய்தார். அது ஒரு வகையில் கிராம சுயராஜ்யம் மற்றும் தொழில்மயமாவதின் அற்புதக் கலவையாகும். அது கபாஸ் முதல் கப்டா வரை’ (பருத்தி முதல் ஆடைவரை) என்பதன் முன்மாதிரி வேலை வழங்கும் கொள்கையைப் பின்பற்றியது.

            தெலுங்கானா தியாகிகள் நினைவு அறக்கட்டளை மற்றும் ராவி நாராயண் ரெட்டி அறக்கட்டளை அமைப்பின் (ஃபவுண்டேஷன்) தலைவராக நரசிங் ராவ் இருந்தார்.

            புர்குலா கிராமத் தலைவராக (சர்பன்ஞ்ச்) ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நரசிங் ராவ் அப்பொறுப்பில் 1976 முதல் 1995வரை செயல்பட்டார். பஞ்சாயத்து கட்டடம், தொடக்கப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துதல், நீர்க்கசிவுக் குட்டைகள் கட்டுவது, பாரம்பரிய மருந்துகள் அறிமுகம் எனப் பல வளர்ச்சிப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன. பள்ளிக்கூடம் கட்ட இடம், ஆரம்ப சுகாதார மையம் மற்றும் சாலைகள், கட்டடங்கள் அமைப்பதெனப் பல்வேறு பிற திட்டங்களுக்கும் தனது நிலத்தை அவர் நன்கொடையாக வழங்கினார். 1993ல் அவருடைய முன்னோர்களின் பாரம்பரிய நிலச் சொத்துக்களான பல நூறு ஏக்கர் நிலங்களின் சொத்துரிமை பத்தர ஆவணங்களை – ஒரு பைசா பெறாமல் – அவர் நன்கொடையாக வழங்கினார்.

            அவர் கிராமத் தலைவரான நாளிலிருந்து தொடர்ந்த விடா முயற்சியின் பலனாகவே 1994ல் இரயில்வே நிலையம் அமைக்கப்பட முடிந்தது. தனது கிராமத்தவர் தங்கள் விளை பொருட்களை நகரத்தில் விற்க வேண்டும் என அவர் விரும்பினார். அதற்கான அனுமதியை அவர் 1992ல் பெற்றார், மக்கள் தங்கள் சுயவிருப்பத்தில் உழைப்பை (‘ஷ்ரம்-தான்’) நல்கி பிளாட்பார மேடை மற்றும் டிக்கெட் வழங்கும் அறையைக் கட்ட உதவினர். பல்வேறு இடங்களில் அவர் ஏழு தண்ணீர் தொட்டிகளைக் கட்டினார்.

            பல ஆண்டுகளாக உழுது பயிரிட்டு வந்த நிலத்தைப் பல நிலமற்ற மக்கள் பெற்றனர். அவரே விவசாயத்தில் ஈடுபட்டு நெல் மற்றும் பிற தானியப் பயிர்களைப் பயிரிட்டும், மாந்தோப்புச் சோலை மற்றும் சிறுதானியங்களையும் வளர்த்தார். பின்னர் அக்கிராமத்திற்கு அவரது சகோதரி அங்கே கிராமத் தலைவி ஆனார்.

            ஒரு தலித் குடும்பத்தின் உறுப்பினர்களில் ஒருவரான குண்டோலா நரசிம்ஹா என்பவர் புர்குலா கிராமத்திலிருந்து வந்தவர், அங்கே ‘வெட்டி சக்கிரி’ அல்லது கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். தனது சொந்த அனுபவங்களை இணைத்து அவர் கூறினார், ‘மரியாதையின்றி நடத்தப்பட்ட  பெரும் எண்ணிக்கையிலான கொத்தடிமைகள் விடுவிக்கப் பட்டதற்கு நாங்கள் புர்குலா நரசிங் ராவுக்கு நன்றிக் கடன்பட்டவர்கள் --அவராலேயே நாங்கள் விடுவிக்கப்பட்டோம்’ என்றார்.

            கிராமத் தலைவர் என்ற முறையில் நரசிங் நிலப்பிரபுக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுத்தார். தலித்கள் மற்றும் பிற்பட்டவர்களுக்கு அவர் பெரும்பான்மையான தனது சொந்த நிலத்தைத் தானமாக அளித்து அவர்களுக்கு ‘பட்டாக்கள்’ வழங்கினார். ‘ஒரு பேருந்து வழித்தடத்திற்காகத் தனது நிலத்தின் வழியே சாலை அமைக்க அனுமதி அளித்ததில் கிராமத்திலேயே அவர்தான் முதல் மனிதர்’ என்று கூறினார் குண்டோலா

            “நரசிங் ராவுக்கு முன்பும் புர்குலா கிராமம் இருந்தது, நரசிங் ராவுக்குப் பிறகும் புர்குலா கிராமம் இருக்கிறது” என்று கூறிய குண்டோலா, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு (ரிப்பேரான) தனது காருடன் அவர் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்ததே தான் அவரைச் சந்தித்த முதல் முறை என்று ஞாபகப்படுத்தினார். அப்போது புர்குலா நரசிங் ராவ் அவரை அழைத்துக் கூறினார்: “பாபு இங்கே வாருங்கள், இந்தக் காரைத் தள்ள எனக்கு ஒரு கை உதவுங்கள்.” இப்படித் தொடங்கியதுதான் எங்கள் முப்பதாண்டு காலம் நீண்ட நட்புறவு. அவர் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி கட்ட விரும்பினார். “கிராமத்தில் நாங்கள் அவரை ஒரு தேவ புருஷராக, புனித மனித ஆத்மாவாகக் கருதுகிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் குண்டோலா.

            மலைப்பாறைகளிலும் ஹைத்தராபாத்திலும் எடுக்கப்பட்ட ஒரு டாக்குமெண்டரியின் போது நரசிங் ராவ் கூறினார், ‘பாறைகள் ஹைத்தராபாத்தின் ஒருங்கிணைந்த பாகம்: “எல்லா இந்தியப் போராட்டங்களிலும் கற்கள் மிகவும் முக்கியம்!” என நகைத்தபடி கூறினார் நரசிங். “அவ்வளவு ஏன், புகழ்பெற்ற ஹைத்தராபாத் மூத்த குடிமகனான நானே ஒருமுறை கற்களை வீசியிருக்கிறேன்!”

            ஆதிவம்மா போன்ற பல உழைக்கும் பெண்களை மைய நீரோட்ட இயக்கத்தில் அவர் அறிமுகம் செய்திருக்கிறார். ஆதிவம்மா 1940 –50களில் DBR மில்களின் ஒரு தொழிலாளி மட்டுமல்ல தெலுங்கானா ஆயதப் போராட்ட இயக்கத்தில் பங்குபெற்றவரும்கூட.

விழிப்புணர்வுடன் கூடிய மார்க்ஸியர்

            தனது முதிர்ந்த வயதிலும்கூட அவர் அரசியல் ரீதியிலும் தத்துவார்த்த ரீதியிலும் மிகவும் தெளிவான விழிப்புணர்வுடன் இருந்தார். வகுப்புவாத ஆபத்தை எதிர்த்துப் போரிட பரந்துபட்ட முன்னணி அமைப்பதற்கு அவர் ஆதரவாக இருந்தார், குழுவாதப் போக்கு அணுகுமுறையை எதிர்த்தார். மத்திய கல்வி பள்ளியின் முகாம்களில் அவர் விடுதலை, மாணவர் மற்றும் இளைஞர் இயக்கங்கள் குறித்துப் பல்வேறு உரைகளை ஆற்றியுள்ளார். அது மட்டுமின்றி ஏராளமாக எழுதியும் குவித்தார்.

கூடுதல் இணைப்பு

            (புர்குலா நரசிங் ராவ் எப்போதும் தெலுங்கானாவின் உண்மையான மைந்தர் என்றும் விஸ்வாசமான ஹைத்தராபாத்வாசி (a true-blue Hyderabadi) என்றும் புகழப்படுபவர். ஹைத்தராபாத் பாறைகளில் நடைபெற்ற எங்களது ஆய்வு படப்பிடிப்புக்காகப் பலமுறை நான் (உமா மகள்) அவரைச் சந்தித்திருக்கிறேன். அந்தச் சந்திப்புக்களில் அவரது நேரத்தை ஒதுக்கித் தருவதிலும் பரந்து விரிந்த நிலத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தத் தனது அறிவைப் பகிர்ந்து கொள்ளும் அவரது திறமையிலும் அவர் தாராளச் சிந்தையராக இருந்தார். வீரம் மிகுந்த அப்பகுதியுடன் பின்னிப் பிணைந்த வரலாற்று நிகழ்வுகளின் சொந்த அனுபவங்களை விவரிப்பார், அவர் மிகச் சிறந்த கதைசொல்லி.

ஹைத்தராபாத் நகரம் கண்ட மிகச் சிறந்த கூர்மையான மதிபடைத்தவர்களில் ஒருவர். மிகுந்த நகைச்சுவை உணர்வும் பண்பட்ட இயல்பும் உடைவர், எனினும் மண்ணின் மைந்தர். புர்குலா நரசிங் ராவ் முன்மாதிரியான வகையினர் எனக் கூறுவது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை. ஹைத்தராபாத்துக்கு அவரது மறைவு ஈடுஇணையில்லாத இழப்பு. அவருடைய மறைவில் நாம் அனைவரும் அவருடைய கூர்மையான அறிவு, தெறிக்கும் நகைச்சுவை, அறிவைப் பகிர்ந்து கொள்வதில் தாராளம், மண்ணுக்கும் மக்களுக்கும் நன்மை செய்வதில் தீவிர உறுதிப்பாடு என அனைத்தையும் இழந்து நிற்கிறோம். ஆழமான அன்பு மற்றும் முழுமனதான மரியாதையை நாம் அவருக்கு நன்றியறிதலாகச் சமர்ப்பிப்போம்! -- நன்றியுடன் www.thehansindia.com இணையத்தில் உமா மகள் கட்டுரையிலிருந்து)

புர்குலா நரசிங் ராவ் என்ற இந்த அற்புதமான கம்யூனிஸ்ட் நீண்டகாலம் உடல்நலமின்றி சென்ற ஆண்டு 2021 ஜனவரி 18 அன்று கோவிட் பெருந்தொற்று காரணமாக தனது 89ம் வயதில் இயற்கை எய்தினார்.

வாழ்க அவர் புகழ்!

            --நன்றி : நியூஏஜ் (ஜூலை 3 –9)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment