Sunday 14 August 2022

75வது சுதந்திரத் திருநாள் சிறப்புக் கட்டுரை -- கிராந்தி ஸிம்ஹா நானா பாட்டீல்

 

75வது சுதந்திரத் திருநாள் சிறப்புக் கட்டுரை

--விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பக்கங்களிலிருந்து…

கிராந்தி ஸிம்ஹா நானா பாட்டீல்
:
புரட்சியை முன்னறிவித்து முழங்கிய சிங்கம்

--நியூஏஜ் (ஆக.14 –20)

            1942 ஆகஸ்ட் 9ம் நாள் இந்திய மக்கள் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை நோக்கி நாட்டை விட்டு அவர்கள் வெளியேற வேண்டிய தருணம் இது என எச்சரித்தனர். பிரிட்டிஷ் காலனியவாதிகளுக்கு மகாத்மா காந்தி விடுத்த அந்த அறைகூவலுக்கு மக்கள் பெருந்திரள் பெருமளவில் ஆதரவாகத் திரண்டனர். அந்த அறைகூவல் முழக்கத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட மகாராஷ்ட்டிரா சத்தாரா மாவட்ட மக்கள், தங்கள் மண்ணிலிருந்து பிரிட்டீஷ் ஆட்சியின் அடிமை நுகத்தடியைத் தூக்கி எறிய, அடுத்த நாளே உடனடியாகப் போராட்ட இயக்கத்தைத் தொடங்கினர்.

            காந்திஜி கூறிய வண்ணம் வெள்ளையனே வெளியேறு (க்விட் இந்தியா) இயக்கம் வன்முறையற்ற (அமைதியான) முறையில் தொடங்கியது. ஆனால் பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் சத்தாரா மாவட்டத்தில் ஐந்து வெவ்வேறு இடங்களில் பதினொரு தேசபக்தர்களைக் கொல்லும் காட்டுமிராண்டிதனத்தைத் தேர்ந்தெடுத்தனர். அடக்குமுறை போலீஸ் படை, நிலப்பிரபுக்கள் மற்றும் குற்றவாளிகள், போக்கிரிகள் அடங்கிய அவர்களின் உள்ளூர் படைகள் பின்பலமாக இருக்க, பிரிட்டீஷ் காலனியவாதிகளுக்குக் கிளர்ச்சியாளர்களை அடக்கிச் சமாளிக்க முடிந்தது; ஆனால் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே. ஏனெனில் ஒட்டு மொத்தமாகப் வெள்ளையர்களை எதிர்க்க வேண்டும் என்ற அந்த முழுமையான முன்னெடுப்பும், கொடுமையான அரசியல், அடக்குமுறை சமூகக் கட்டமைப்புக்களிலிருந்து விட்டு விடுதலையாக வேண்டும் என்ற மக்களின் பெரும் விழைவின் தகிப்பின் வெளிப்பாடு அது. ஒடுக்குமுறை நடவடிக்கைகளை நீண்டகாலம் தொடர்வது இயலாததாயிற்று. மக்கள் கூட்டம் வீரம்மிக்க நானா பாட்டீல் தலைமையில் வழி நடத்தப்பட்டது, அவர் மக்கள் நெஞ்சங்களில் தொடர்ந்து புரட்சி நெருப்பை மூட்டி, புதிய உற்சாகத்துடன் எதிர்ப்புக் கிளர்ச்சியை முன்னின்று நடத்தினார். நானா பாட்டீல் 1900ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் நாள் பிறந்தார். 1976 டிசம்பர் 6ல் இயற்கை எய்தினார்.

        நானா பாட்டீல் வாழ்நாள் முழுவதும் மண்ணில் புரட்சிகரப் போராட்டங்களில் பல வடிவங்களை வளர்த்தெடுத்தார்.

            இந்த ஆயுதக் கிளர்ச்சி இந்தியாவில் அந்நேரத்தில் நடந்த பிற போராட்டங்களிலிருந்து பெரிதும் அடிப்படையான கூடுதல் மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மையிலானது. ஒருபுறம் தனிநபர் சத்தியாகிரகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மறுபுறம் பிரிட்டீஷ் ஆட்சியைத் தூக்கி எறிய பலரும் ஒன்றிணைந்த முயற்சிகளை மேற்கொண்டனர். பல வேறுபட்ட வடிவங்களில் போராட்டங்கள் உருவாகின. பகல்பூர், பலியா, மித்னாபூர், (தற்போது பங்களா தேசத்தில் இருக்கும்) குமில்லா மற்றும் சம்பரான் போன்ற இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

            1930ல் மகாராஷ்ட்டிரா சோலாப்பூர் மாவட்ட டெக்ஸ்டைல் ஊழியர்கள் சோலாப்பூர் நகரைப் பிரிட்டீசாரின் பிடியிலிருந்து சில நாட்கள் விடுதலை செய்தனர். சோலாப்பூர் கம்யூன் ஏற்படுத்தும் சோதனை முயற்சி மல்லப்ப தன்ஷெட்டி, ஸ்ரீகிருஷ்ணா சாரதா, குர்பான் ஹூசைன் மற்றும் ஜகந்நாத் ஷிண்டே ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். ருஷ்ய போல்ஷ்விக் புரட்சியின் தாக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சோலாப்பூர் கம்யூன் உருவாக்கப்பட்ட நிகழ்வு உலகிற்குப் பாரீஸ் கம்யூன் நிகழ்வை நினைவுபடுத்தியது.

            காற்று மாறி அடித்ததைச் சோலாப்பூர் கிளர்ச்சியில் பார்த்தாலும் அவை தனியொரு நகருக்குள் வரையறுக்கப்பட்டதாக இருந்தது. பின்னர் வந்த நாட்களில் அவை மாபெரும் புயற்காற்றாய் அருகமைந்த சத்தாரா மாவட்டத்தில் சுழன்றடித்தது. ஷாக் அடிக்கும் திறந்த மின் கம்பியான தனிநபர் நானா பாட்டீல், மக்களின் உறங்கிக் கிடந்த விடுதலைக்கான விருப்பத்தை வெற்றிகரமாகத் தூண்டிவிட்டு மிகப் பெரும் சக்தி ஆக்கினார். நானா பாட்டீல் மக்களின் பங்கேற்புடன் பிரம்மாண்டமான கிராமப்புற கம்யூன் அமைப்பை -- ஓரிரு நாட்கள், மாதங்கள் அல்ல –ஆகஸ்ட் 1943 முதல் 1946 மே மாதம் வரை, மூன்றாண்டு காலத்திற்குக் குறையாமல் வெற்றிகரமாக உருவாக்கி நடத்தினார். நானா பாட்டீலின் இயக்கம், ஏனைய அனைத்து ஆயுதக் கிளர்ச்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்துவமானது: அதன் முலம் பிரிட்டீஷ் அடிமைத் தளையிலிருந்து நூற்றுக் கணக்கான கிராமங்களை –அங்கே அவர்கள் பிரிட்டிஷ் படைகளால் சூழப்பட்டிருந்தாலும் --விடுதலை செய்தார். அது வியத்தகு அற்புத நிகழ்வுக்குச் சற்றும் குறைந்தது அல்ல. இந்த இயக்கம், ‘மாற்று அரசு இயக்கம்’ எனப் பொருள்படும், ‘பிரதி சர்க்கார் இயக்கம்’ என்று அழைக்கப்படுகிறது.

   இந்த இயக்கத்தின் தனித்துவத்தைப் புரிந்து கொள்ள ஒருவர் இப்பகுதியின் பூகோள அமைப்பு மற்றும் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்பகுதி எதிர்காலக் கண்ணேட்டமுடைய சிவாஜி மகராஜ் மன்னரின் நேர்மையான ஆட்சியைச் சந்தித்திருக்கிறது. இப்பகுதியில்தான் மகாத்மா பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே பிறந்த முறையே கட்குன் மற்றும் நய்கௌண் போன்ற கிராமங்களைக் கொண்டுள்ளது. மேலும் இங்கே 19ம் நூற்றாண்டின் பெரும் சீர்திருத்தவாதி கோபால் கணேஷ் அகர்கர் (படம்) இப்பகுதியின் கராட் தாலுக்கா டேம்பூ என்ற கிராமத்தில் பிறந்தார்.                                                     (இந்து தமிழ் இதழில் அகர்கர் குறித்த 10 தகவல்கள் காண https://www.hindutamil.in/news/blogs/180773-10.html)

            இப்பகுதி ஒருபுறம் முகலாயர்களுக்கு எதிரான சத்திரபதி சிவாஜியின் விடுதலைப்

போராட்டங்களையும், மறுபுறம் சாதி அமைப்புக்கு எதிரான “சத்தியஷோதக்” (உண்மையைத் தேடுபவர்கள் அமைப்பு) இயக்கப் போராட்டங்களின் வரலாற்று மரபைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் சமூகத்தில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் மேலும் சமூகத்தில் நிலவிய நிலப்பிரபுத்துவ அமைப்பு முறைக்கும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் புதிய விழிப்புணர்வு எழுச்சி பரவியது.

            (சத்திய ஷோதக் சமாஜ் ஒரு சமூக சீர்திருத்த அமைப்பாகும். புனாவில் 1873 செப்டம்பர் 24ல் ஜோதிபா பூலே நிறுவிய இவ்வமைப்பு மகாராஷ்ட்டிரா சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சலுகை மறுக்கப்பட்ட குழுவினர்கள் கல்வி பெறுவதை ஆதரித்ததுடன் அவர்கள் சமூக மற்றும் அரசியல் உரிமைகளை அடையவும் பாடுபட்ட இயக்கம். மேலும் விவசாயிகளின் கிளர்ச்சிகள் மற்றும் பிராமணர் அல்லாதோர் இயக்கத்திலும் செல்வாக்கு செலுத்தியது. இதன் தலைவர்கள் இந்தியக் காங்கிரஸ் இயக்கத்திற்குச் சென்றுவிட சமாஜ் 1930களில் கலைக்கப்பட்டது)

         இப்பகுதி, கர்மவீர் பாவ்ராவ் பாட்டீல் உருவாக்கிய சமூக மாற்றத்தையும் கீழ்ச் சாதியினர் உட்பட மக்கள் திரளுக்குப் பள்ளிக்கூட வலைப்பின்னல் கட்டமைப்புக்கள் மூலம் கல்வியறிவு வழங்கிட அவர் மேற்கொண்ட அற்புதமான முயற்சிகளையும் கண்டது. அண்ணல் டாக்டர் அம்பேத்கரும்கூட அவரது கல்விக்காகச் சத்தாராவில் வாழ்ந்திருக்கிறார். இதே பகுதியில்தான் கர்மவீர் வித்தல் ராம்ஜி ஷிண்டே சாதிய முறையை ஒழிக்க மக்களைத் திரட்டினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியின் கீழ் தோழர் விவி சித்தாலே கிராமப்புற மக்களைத் திரட்டினார். இவை எல்லாம் விடுதலை இயக்கங்களுக்கான மிகவும் நிலைத்த சாதகமான சூழலை உருவாக்கின. எல்லா விடுதலை சக்திகளின் ஒட்டுமொத்த கலவையை நானா பாட்டீல் பிரதிநிதித்துவப்படுத்தி, புரட்சிகரமான காலத்தைத் தொடங்கி வழிநடத்தினார்.

            நீண்ட காலமாக மக்களை ஒடுக்கிய நிறுவப்பட்ட அதிகார அமைப்புகளுக்கு எதிராக பிரதி சர்க்கார் (மாற்று முறை ஆட்சி) இயக்கம் மோதலையும் மேற்கொண்டது. கிராமப்புறச் சமூகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்தி ஆதிக்க அதிகார அமைப்புக்கள் மற்றும் அவற்றின் அடுக்கு முறை வழக்கங்களுக்குச் சவால் விடுத்த இந்த இயக்கத்துடன் ஒப்பிடக்கூடிய ஓர் இயக்கத்தை அரிதாகத்தான் காண முடியும். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் தலைமையின் கீழ் ஒரு புதிய சமுதாயத்தை ஏற்படுத்துவதே, பிரதி சர்க்கார் இயக்கத்தின் நோக்கம். அங்கே வகுப்பு, சாதி, பாலினம் மற்றும் சமயம் என்ற அடிப்படையில் “பிரிவிலை, எங்கும் பேதமில்லை,” சுரண்டல் இல்லை.

அதிகார மையங்களைத் தாக்கி அழித்தல்

            இந்தப் புரட்சிகர இயக்கம் சாதித்த மாபெரும் மாற்றங்களை ஒருவர், ஐரோப்பாவுக்கு (17வது 18வது நூற்றாண்டு) அறிவொளி எழுச்சி பெற்ற (என்லைட்மெண்ட் ஏஜ்) காலம்

ஏற்படுத்திய மாற்றங்களுடன் ஒப்பிடலாம். “தேசிய விடுதலை கட்டமைப்புகள் மற்றும் ஹிட்லர் பாசிச சக்திகளுக்கு எதிரான ஐரோப்பிய போராட்டங்கள்” என்ற தலைப்பில் பகத்சிங் எழுதிய கட்டுரையால் நானா பாட்டீல் ஊக்கம் பெற்றார். பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற அவர்களின் அதிகாரம் எந்தெந்த மையங்களில் அழுத்தமாகக் குவிக்கப்பட்டிருக்கிறது என்பதை அடையாளம் கண்டு, அவ்ற்றைத் தாக்கி அழிக்க வேண்டும் என அவர் உணர்ந்தார். காவல் நிலையங்கள், அப்பகுதி நிலப்பிரபுக்கள் மற்றும் அவர்களின் கேடுகெட்ட குற்றவாளிப் படைகள் என அம்மூன்று அதிகார மையங்கள் மூலமாகவே பிரிட்டீஷ் அதிகாரம் செயல்படுவதை அவர் அடையாளம் கண்டார். ஒரு பயிற்சி பெற்ற மல்யுத்த வீரரான அவர், இந்த அதிகார மையங்களைத் தாக்கி அழித்தால், பிரிட்டீஷ் ஆட்சி சரிந்து வீழும் என்பதை அறிந்திருந்தார். இவ்வாறு நூற்றுக் கணக்கான கிராமங்களில் பிரிட்டீஷ் ஆட்சியின் அந்த அதிகார மையங்களை ஒழித்து விரட்டுவதை அவர் சாதித்தார்.

            முதலாவதாக, இளைஞர்களை ஒழுங்குபடுத்தப்பட்ட இராணுவமாக அமைத்தார். டூஃபேன் சேனா (சுழற்காற்று அல்லது புயற்காற்றுப் படை) என அழைக்கப்பட்ட அந்தப் படையினர் போலீஸ் நிலையங்களைத் தாக்குவர், காவலர்களைச் சிறைப் பிடித்து அவர்களின் ஆயுதங்களைப் பறித்துச் செல்வர். மற்றொரு முறையிலான போராட்டத்தில் அரசு கருவூலங்களைக் கொள்ளையடிப்பர். அந்தக் காலங்களில் வரியாகப் பெருந்தொகை வசூலிக்கப்பட்டு அரசு ஊழியர்களுக்கான ஊதியத்திற்கான பெரும்நிதி புகைவண்டிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. புரட்சியாளர்கள் ரெயில்களைத் தாக்குவர், கஜானாப் பெட்டிகளில் உள்ள நிதியை எடுத்துச் சென்று தங்களின் புரட்சிகர நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவர். அத்தகைய தாக்குதல்கள் தூலே மாவட்டம் முதல் சத்தாரா மாவட்டத்தின் குந்தால் போன்ற சிறு கிராமங்கள் வரை பரவி இருந்தது. மேலும் புரட்சியாளர்கள் இரயில்வே நிலையத்தையும் தீக்கிரை ஆக்குவர். இந்த நடவடிக்கைகள் எல்லாம் பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை அனுப்பி, அவர்களது நம்பிக்கையைக் குலைத்தது.

            அப்பகுதியின் பல்வேறு நிலப்பிரபுக்கள் பிரிட்டீஷ் ஏஜென்டுகளாக வேலைசெய்து அவர்களுடன் கூட்டு சேர்ந்து ஏழை விவசாயிகளை ஒடுக்கினர். பாடுபடும் இந்த விவசாயத் தோழர்களே நானா பாட்டீலின் புரட்சிகர விடுதலைப் படையின் வீரர்களாக மாறினர். அவர்கள் தாக்குதல் நடத்துவதற்கு முன் அரசு அதிகாரிகள் மற்றும் பிற மாநிலங்களின் பாட்டீல், தேஷ்முக் போன்ற ‘வாடன்டார்’கள் பலவீனமாக்கப்பட்டனர். (வாடன் என்றால் சிறு நிலம்; வாடன்டார் என்பது ‘நில உரிமையாளர்’ எனப் பொருள்படும் மராட்டிய கோலி சாதியினருக்கு வழங்கப்படும் பட்டம்). சத்தியஷோதக் இயக்கம் ஏற்கனவே பட் பிக்க்ஷூஷாஹி (BhatBhikshukshahi பிராமண குருமார்கள் மற்றும் புரோகிதர்களின் ஆட்சி) அதிகாரத்தைப் பலவீனமாக்கியிருந்தது.

லேவாதேவிக்காரர்கள் மீது தாக்குதல்

            கிராந்தி சிங் நானா பாட்டீலின் விடுதலைப் படை, அநியாய வட்டிக்குக் கடன் வழங்கி

ஏழை விவசாயிகளைக் கொடூரமான கடன் வலையில் சிக்க வைத்த லேவாதேவிக் காரர்களின் அதிகாரக் கொட்டத்தைத் தாக்கியது. பிரதி சர்க்கார் இயக்கம் வட்டிக் கடைக்காரர்களின் வீடுகளைத் தாக்கிக் கோப்புகளை அழித்துக் கடன் பத்திர ஆவணங்களை விவசாயிகளிடம் வழங்கினர். இக்கடன்களிலிருந்து விவசாயிகள் விடுதலை பெற்றதாக அறிவித்தனர். 1936ம் ஆண்டில் அமைக்கப்பட்ட அகில இந்திய கிசான் சபா, கடன்களை ரத்து செய்யவும், நிலமற்ற விவசாயிகளுக்கு நிலங்களைச் சமமாகப் பகிர்ந்தளிக்கவும் கோரி அறைகூவல் விடுத்தது. இக்கோரிக்கைகளை ஏற்ற பிரதி சர்க்கார் உடனே அதனை அமலாக்கி செயல்படுத்தியது. இது விவசாயிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்தது. மேலும் புகை வண்டிகளிலிருந்து கொள்ளை அடித்த நிதிகளையும் ஏழைகளிடம் பகிர்ந்தளித்தனர்.

சமூகப் பணிகள்

            இவற்றைத் தவிர பிரதி சர்க்கார் இயக்கம் ஆற்றிய மற்றுமொரு முக்கியமான பணி சமூகச் சீர்திருத்தம் தொடர்பானது. சாதிய முறையை ஒழிப்பது, கலப்புத் திருமணங்களை ஆதரித்து நடத்துவது, கைம்பெண்கள் மறுமணம், மது விலக்கு மற்றும் கைதிகள் விடுதலை என பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப் பாடுபட்டது. திட்டங்களைத் தீவிரமாக அமைத்து அவர்கள் தங்கள் கருத்துக்களை நடைமுறைப்படுத்தினர். தங்கள் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்ய பல்வேறு கலைவடிவ நிகழ்ச்சிகளை உருவாக்கினர். இளம் கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் நடிகர்களைக் கொண்ட குழுக்களை அமைத்துப் பல்வேறு ஜல்சாக்களை (இசையும் பாடல்களும் கொண்டு நடத்தப்படும் கலைநிகழ்ச்சி) நடத்தி, தங்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் புதிய உளச் சான்று எழுச்சி உணர்வை ஏற்படுத்தினர் . (மக்கள் ஒன்றுகூடும் இடம் என்று பொருள்படும் ஜல்சா என்ற அரபிச் சொல், இன்னும் அதே பொருளில் உருதுமொழியில் பயன்பாட்டில் உள்ளது. பிற மொழிகளில் அந்தச் சொல்லின் உண்மையான பொருள் சற்றுத் திரிந்து விட்டது.) இந்தக் கலைமுயற்சி பாரம்பரிய வடிவங்களுக்கு எதிராக நன்கு திட்டமிட்டு ஒரு மாற்றுக் கலாச்சார முன்னணியை உருவாக்க முன் வைக்கப்பட்டது.

            இவ்வாறு, பிரதி சர்க்கார் என்பது மக்கள் வாழ்க்கையின் அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார அம்சங்கள் அனைத்தையும் தழுவிய முழுமையான புரட்சியானது. அது

மக்களிடம் மக்கள் மொழியில் நேரடியாகப் பேசியது. மார்க்ஸ், லெனின், பூலே மற்றும் அம்பேத்கரின் சிந்தனை கருத்துகளைக் கவி முனிவர்களின் ஜனரஞ்சகமான மொழியில் மக்களிடம் கொண்டு செல்ல அவர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் விளைவாய் இந்திய விடுதலையின் மூவர்ணக் கொடி ஒவ்வொரு சாவடியிலும் (பிரிட்டீஷ் நிர்வாகத்தின் கிராமப்புற மட்டத்தில் அமைந்த அலுவலகங்கள்) மாதக் கணக்கில் பறந்தது.

மாற்று ஆட்சி முறை

            பிரதி சர்க்கார் கவிஞரின் வெறும் கனவோ அன்றி ஒரு பிறழ்வோ அல்ல. அது மக்களின் ஆட்சியை, அந்த வார்த்தையின் முழுப் பொருளில், பிரதிநிதித்துவப்படுத்தியது. அந்த இயக்கம் விஞ்ஞான அறிவியல் சிந்தனையின் பலமான அடித்தளத்தில் கட்டப்பட்டது. புதிய அரசுக்கு பல நிர்வாக அமைப்புகள் உருவாக்கப்பட்டன. கொரில்லா யுத்த தந்திரத்தில் நிபுணத்துவம் வாய்ந்த அர்ப்பணிப்பு மிக்க வீரர்கள் அடங்கிய இராணுவப் படைஇருந்தது. மக்களின் வாழ்வை மேம்படுத்த நிதி நிர்வாக இலாக்கா உருவாக்கப்பட்டது. மக்கள் மத்தியில் நடைபெற்ற பணிகளை மேற்பார்வையிட அமைப்புக் குழு இருந்தது. நீதிபதிகள் மூலம் நேர்மையான முறையில் வழக்குகளைக் கையாண்டு நீதி வழங்கும் நீதிபரிபாலன முறை செயல்படுத்தப்பட்டது. மேலும் மக்கள் மத்தியில் செய்திகளைப் பரப்பும் பஹீர்ஜி நாயக் கமிட்டி, தகவல் போக்குவரத்துக்கு ஒரு குழுவும், மக்கள் அவர்களின் அணியினருக்கு பயிற்சி அளிக்கப் பள்ளிகளும் புதிய ஆட்சியில் இருந்தன. (பஹீர்ஜி நாயக், மராட்டிய சாம்ராஜ்யமும் முகலாய சாம்ராஜ்யமும் போரிட்டபோது சத்ரபதி சிவாஜி இராணுவத்தில் இருந்த 17வது நூற்றாண்டு இந்திய உளவு மற்றும் இராணுவக் கமாண்டர் ஆவார். உளவறியும் அவரது மாபெரும் செயல்பாடுகளைப் பாராட்டி சிவாஜி அவருக்கு நாயக் பட்டம் அளித்தார்.)

            இந்த அமைப்புக்களில் மிகமிகப் புகழ்பெற்றதும் பிரபலமானதும் டூஃபேன் சேனா. அவர்கள் அமைத்த செயல்வீரர்கள் குழுக்கள் சிலவற்றில் எண்ணிக்கை குறைவானதாகவும், சில நேரம் 150பேர்களைக் கொண்ட குழுவாகவும் இருக்கும். குழுக்கள் அதற்கானத் தனித் தலைவர்களுடன் தொகுப்புக்களாகப் பிரித்து அமைக்கப்பட்டன. குழுக்களில் மூத்த மட்டத்தில் தலைவர்களும் அதற்கும் மேல் ‘டிக்டேட்டர்’ (சர்வாதிகாரி) என்றழைக்கப்பட்ட அவர்களைக் கட்டுப்படுத்துபவர்களும் இருந்தனர். இதுதான் அவர்களது அரசும் நிர்வாகக் கட்டமைப்பும் ஆகும். அது சிறப்பாகவும் துல்லியமாகவும் செயல்பட்டது. அமைப்புக்களின் பல்வேறு மட்டங்களில் செயல்பட்ட இந்த அனைத்து அமைப்பு முறைமைகளுடன் பிரதி சர்க்கார் இயக்கம் மக்களுக்கான ஒரு முன் மாதிரி அரசு ஆட்சி முறையை வழங்கினர். இந்தச் செயல்பாடு சாதிய சுரண்டல் ஒழிப்பை நாடும் ஒரு முறைமையை ஏற்படுத்துவதற்கானது.

ந்திய விடுதலைக்குப் பிறகும் தொடர்ந்த புரட்சி

            இந்தியா விடுதலை அடைந்த பிறகும் நானா பாட்டீல் இந்த மரபைத் தொடர்ந்தார். தெலுங்கானா போராட்டத்தின்போது அவர் ஆயுதங்களை அனுப்பி விவசாயிகளுக்கு உதவியது, கம்யூனிசப் புரட்சி மீது அவர் கொண்ட ஆழமான பற்றுறுதியின் மெய்சிலிர்க்கும் உதாரணம். மேலும் அவர் கோவா மற்றும் ஹைத்தராபாத் விடுதலை இயக்கங்களுக்கும் உதவினார். அவர் மகாராஷ்ட்டிராவின் ‘சம்யுக்த மகாராஷ்ட்டிரா இயக்கத்தின்’ உறுதியான தலைவராக விளங்கினார். (‘சம்யுக்த மகாராஷ்ட்டிரா சமிதி’, மேற்கு மற்றும் மத்திய இந்தியா பகுதியில் மராத்தி பேசும் பகுதியைத் தனி மாநிலமாக அமைக்க வேண்டும் எனக் கோரிய இயக்கம். இதன் தலைவர் எஸ் ஏ டாங்கே. 1956முதல் 60வரை போராட்டம் நடைபெற்றது.) நானா பாட்டீல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ஆனார், 1955ல் அகில இந்திய கிசான் சபா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகப் பிரபலமாக இருந்த அவர் 1957ல் சத்தாரா தொகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக 1967ல் மராத்வாடா பகுதியிலிருந்து வெகு தொலைவில் இருந்த பீடு மாவட்டத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

            பிரதி சர்க்கார் இயக்கம் கிராந்தி அக்ரானி ஜி டி பாபு லேடு, கிராந்திவீர் நாக்நாத் அண்ணா நைக்வாடி, பார்டே மாஸ்டர், ஷேக் காகா, உயிர்த் தியாகம் செய்த பாபுஜி பட்நாகர், டி ஜி தேஷ் பாண்டே, சாந்தாராம் கரூட் போன்ற பல ஆகப் பெரும் ஆளுமைத் தலைவர்களை வழங்கியது.

மண்ணில் தொடரும் நானா பாட்டீல் பாரம்பரியம்

            சுரண்டலுக்கு எதிரான போராட்டம் இன்றும்கூட இந்த மண்ணில் தொடர்கிறது. இப்போராட்ட முயற்சிகளின் ஊடாகப் பிரதி சர்க்கார் இயக்கத்தின் தத்துவம் மற்றும் செயல்பாட்டுப் பாரம்பரியம் தொடர்ந்து செயல்படுகிறது. இந்தக் கடினமான தருணங்களில் விவசாயிகளின்பால் அவர்களின் பற்றுறுதி குறிப்பிடத்தக்கது. இன்றைய நாளில் நம் நாடு மிகக் கொடுமையான அடக்குமுறை மற்றும் அதிகரிக்கும் பாசிச ஆட்சிப் பின்னணிக்கு எதிராக நானா பாட்டீலின் மரபு தனித்துவமாக நிமிர்ந்து நிற்கிறது.

            ஏகாதிபத்தியம் மற்றும் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய காலங்களில் நானா பாட்டீல் மற்றும் அவரது தோழர்களின் பிரதி சர்க்கார் ஓர் அழகிய சோஷலிசக் கனவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதை மகாராஷ்ட்டிரா கண்டது. நமது சோஷலிச இயக்கம் இந்த மாபெரும் தலைவர்களின் காலடித் தடத்தை பின்பற்றும். 

தாயின் மணிக்கொடியுடன் வீரர்களின் தியாகத்தையும் வணங்குவோம்

          இந்தியத் திருநாட்டின் இந்த 75வது சுதந்திர நாளில் நானா பாட்டீல் மற்றும் அவரது தோழர்களுக்குச் செவ்வணக்கம்!

            ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றத்தின் மக்கள் அவையில் மராத்தியில் பேசிய முதல் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்.

            விடுதலைப் போரில் வீழ்ந்த மலர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தச் சுதந்திரத் திருநாளில் அஞ்சலி செய்வோம்!

நன்றி --‘அனைத்திந்திய கிசான் சபா’ தொகுத்த களஞ்சித்திலிருந்து

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

         

             

No comments:

Post a Comment