Friday 26 August 2022

இந்திய விடுதலையின் 75 ஆண்டுகளும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் --டாக்டர் பி கே காங்கோ

 

இந்திய விடுதலையின் 75 ஆண்டுகளும்,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும்

--டாக்டர் பி கே காங்கோ

            நாடு 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிவரும் வேளையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது கிளை அமைப்புகள் அனைத்தும் அதனைச் சிறப்பாகக் கொண்டாட அறைகூவல் விடுத்தது. போஸ்டர், புகைப்படக் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், கவியரங்கங்கள் ஏற்பாடு செய்து, அவ்விழாக்களில் விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்திரை அழைத்துக் கட்சியின் பல்வேறு மாவட்டக் கிளைகள் அவர்களுக்கு மரியாதை செய்து கௌரவித்துள்ளன. அதே நேரம் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் கட்சி மற்றும் அதனது செயல் மறவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்கினை வலியுறுத்தி கையேடுகள் மற்றும் கடடுரைகளும் எழுதப்பட்டன. (புகைப்படத்தில்பாலன் இல்ல’த்தில் பெரியவர் தோழர் நல்லகண்ணு 75வது சுதந்திர தின மூவர்ணக் கொடியை ஏற்ற, மாநிலச் செயலாளர் தோழர் ஆர் முத்தரசன் உரையாற்றுகிறார்)

            எடுத்த எடுப்பில் பெருமிதத்துடன் நாம் குறிப்பிடலாம், இந்தியாவின் உழைக்கும் வர்க்கமும் அதன் தேசிய அமைப்பான அனைத்திந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் (ஏஐடியுசி) பேரியக்கமும்தான் 1923லேயே “பூரண சுதந்திரம்” என்பதற்கான முதல் முழக்கத்தைத் தந்தது; உழைக்கும் வர்க்கத்தின் முதல் அரசியல் கட்சி தொடக்கத்தில் குழுக்களாகவும், மற்றும் பிறகு 1925 டிசம்பர் 26ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியாக ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தியது.

    எனினும், பிறந்ததிலிருந்தே கம்யூனிஸ்ட் கட்சியையும், மார்க்ஸிய நூல்களையும் பிரிட்டிஷ் அரசு தடை செய்தது. மேலும் பல்வேறு வழக்குகளைத் தொடுத்து அணிகளை ஒடுக்கியது. கட்சித் தலைவர்களைக் கைது செய்து அவர்களுக்கு எதிராகப் பல்வேறு சதி வழக்குகளைப் புனைந்தனர். கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி, பெஷாவர் வழக்கு என்பன போன்ற நன்கு அறியப்பட்ட வழக்குகள் மற்றும் பிறவும் தலைவர்கள் மற்றும் கட்சியினர் மீதான அடக்குமுறை சித்திரவதைக் கொடுமைகளையும் அவற்றை எதிர்கொண்ட கம்யூனிஸ்ட் தலைவர்-களின் நெஞ்சுரத்தையும் கதை கதையாய்ச் சொல்லும்!

    தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடி இன மற்றும் பாடுபடும் மக்கள் கூட்டத்தை விடுதலை இயக்கத்தில் ஈடுபடச் செய்து அதனை முழுமையான மக்கள் இயக்கமாக்கிய பெருமை கம்யூனிஸ்ட்களையே சாரும். இந்த ஈடுபாடு, காங்கிரஸ் இயக்கத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்தவர்கள் மீது செல்வாக்கு செலுத்திய மகாத்மா காந்திஜியின் பெரும் பங்களிப்புடன் ஒன்றிணைய, இயக்கத்தின் மையமாக பொது மக்கள் திரள் பங்கேற்க விடுதலை இயக்கம் வீறுநடை போட்டது.

         கம்யூனிஸ்ட்கள் பல வெகுஜன மக்கள் அமைப்புக்களை ஏற்படுத்த முன் முயற்சி எடுத்தனர்; மாணவர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள் மற்றும் கலைஞர்களை விடுதலை இயக்கத்தில் திரட்ட கம்யூனிஸ்ட்கள் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (ஏஐஎஸ்எப்), அனைத்திந்திய கிசான் சபா (ஏஐகேஎஸ்), முற்போக்கு எழுத்தாளர்கள் அமைப்பு மற்றும் இந்திய மக்கள் இயக்கம் போன்ற அமைப்புக்களை நிறுவினர். 1936ம் ஆண்டில் இந்த அனைத்து அமைப்புக்களும் நிறுவப்பட்டபோது, பாஸிச மேகங்கள் உலக வானத்தை இருளடையச் செய்யத் தொடங்கி இருந்தன.

     1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் (க்விட் இந்தியா) கம்யூனிஸ்ட்கள் பங்கேற்கவில்லை எனப் பொத்தாம் பொதுவாக இடம், பொருள், சூழலைக் குறிப்பிடாமல் இடதுசாரிகளின் எதிரிகள் அடிக்கடி தேய்ந்துபோன ரெக்கார்டாகக் குற்றம் சாட்டுவார்கள். அன்றைய சூழல் மனித குலம் முழுமையும் அச்சுறுத்திய பாஸிசச் சக்திகளை எதிர்த்துப் போரிடும் முடிவைக் கம்யூனிட்கள் மேற்கொள்வதில் ஈடுபடச் செய்தது. கம்யூனிஸ்ட்களைப் பொருத்தவரை, மனிதகுல விடுதலைக்காக, அன்றைய பாஸிசச் சவால் அச்சுறுத்தலை எதிர்த்து முறியடிப்பதே தங்களின் உலகு தழுவிய பரந்த போராட்டக் கடமை எனக் கருதினர். இரண்டாம் உலகப் போரின் நாட்கள் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கூட்டங்களுக்குச் சொல்லொண்ணா கடும் துன்ப துயரங்களை ஏற்படுத்தியது.

            காங்கிரசும் அதன் ஆதரவாளர்களும் பாஸிச ஆபத்துக் குறித்து அறியாமல் இல்லை என்ற உண்மையைச் சுட்டிக்காட்ட வேண்டும். அப்படியும் காங்கிரஸ், சுதந்திரமான இந்தியா பாஸிசத்திற்கு எதிராக முக்கியப் பெரும் பங்காற்ற முடியும் என்று கருதியது: அதனால்தான், சுதந்திரத்திற்காகப் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து நடத்தும் போரில் பாஸிஸ்டுகளை நண்பர்களாகக் கருதி நடத்த வேண்டும் என்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கொள்கையைக் காங்கிரஸ் ஆதரிக்கவில்லை.

            மேலும் குறிப்பிட வேண்டிய ஒரு செய்தி, 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் அருணா ஆஸஃப் அலி, காம்ரேட் கிராந்திசிங் நானா பாட்டீல் மற்றும் அவர்களின் ‘டூஃபென் சேனா’ தோழர்கள், மற்றும் ஷாஹீத்-இ-ஆஸாத் பகத்சிங் கூட்டாளிகளான அஜாய் கோஷ் போன்றவர்கள், மற்றும் கதார் கட்சியின் சோகன் சிங் ஜோஷ் போன்ற தலைவர்களும் மற்றவர்களும் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். (க்விட் இந்தியா இயக்கத்தின் ஆளுமைகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டைப் புரிந்திருந்தனர் என்பதுதானே அதன் பொருள்)

       1946 கப்பற்படை வீரர்கள் எழுச்சியின்போது கம்யூனிஸ்ட்களின் பங்களிப்பைப் பெருமிதத்துடன் குறிப்பிடலாம். ஜனநாயகம் மற்றும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான போராட்டமே இந்திய விடுதலைக்கான போராட்டம் என்பதை நாம் நிளைவில் கொள்ள வேண்டியது அவசியம்; எனவேதான், பிரிட்டிஷாருடன் தனி ஆட்சி நடத்திய 571 சமஸ்தானங்களின் இந்திய நிலப்பிரப்புக்களின் ஆட்சியை எதிர்த்தப் போராட்டங்களில் கம்யூனிஸ்ட்கள் முன்னணிப் பாத்திரம் வகித்து முக்கிய பங்காற்றினர். கம்யூனிஸ்ட்கள் ஜனநாயகத்திற்காக மக்கள் போராட்டத்தைக் கட்டியமைத்து நடத்தினர். குறிப்பாக ஹைதராபாத் நிஜாமை எதிர்த்துக் கம்யூனிஸ்ட்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தைக் குறிப்பிட வேண்டும். அப்போராட்டத்தில் தெலுங்கானா பகுதியின் 3000 கிராமங்களில் விவயாயிகளுக்கும், நிலமற்ற ஏழைகளுக்கும் கம்யூனிஸ்ட்கள் நிலத்தைப் பகிர்ந்தளித்தனர். மக்களைச் சுரண்டி ஒடுக்கிய நிலஉடைமை ஜாகிர்தார்கள் ஓட வேண்டியதாயிற்று.

    இப்போராட்டத்தின் விளைவாய் மாநில அரசுகள் நில உச்சவரம்புச் சட்டத்தையும், குத்தகைதாரர்கள் சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாயின. இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்திற்கு விழுந்த மரண அடி இது.

      இன்று, நாம் 75வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடிவரும் தருணம், விடுதலைப் போராட்டக் காலத்தில் வளர்ந்து உருப்பெற்ற “இந்தியா என்ற கருத்தாக்கம்” அபாயத்தில் அச்சுறுத்தலில் உள்ளது. சமூகத்தின் செல்வாதாரச் சலுகைகளை அனுபவித்து வந்த பிரிவுகள், உலகம் முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இயக்கத்தால் உற்சாகம் பெற்ற மக்களின் ஜனநாயக எழுச்சியைக் கண்டு, குறிப்பாக 1917 ரஷ்யப் புரட்சியைக் கண்டு, பீதி அடைந்து தங்களின் வசதிகள் ஆபத்தில் இருப்பதாகக் கருதினர்; எனவே தாங்களும் அமைப்பாக ஒன்று திரள வேண்டிய தேவை தீவிரமாக இருப்பதாக உணர்ந்தனர். இவ்வாறு, அவர்களின் குறுகிய தன்னல நலன்களைப் பாதுகாக்க இராஷ்ட்ரிய சுயம்-சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) என்ற அமைப்பு பிறந்தது.

            ஆர்எஸ்எஸ் “பலசாலி பாரத்” (வலிமையான இந்தியா) என்ற கோட்பாட்டை வளர்த்து முன்னிறுத்தியுள்ளது; ஆனால் இந்த வலிமை உயர் சாதி மற்றும் மேல் வர்க்கத்தினரின் சலுகைகளை /செல்வ நுகர்வைப் பாதுகாப்பதிலிருந்து வருகிறது: குறிப்பாக, உழைக்கும் பெருந்திரள் மக்கள் நலன்களைப் பலியிட்டு பெரும் ஏகபோகங்கள் மற்றும் அன்னிய மூலதனத்தைப் பாதுகாப்பதிலிருந்து வருகிறது. கலாச்சாரத் தேசியவாதம் (ஹைப்பர் நேஷனலிசம்) என்ற இந்துத்துவப் போர்வையில் வலிமையான இராணுவத்தை வலியுறுத்துவதுடன் இந்தக் கோட்பாட்டின் ஆதார முதுகெலும்பு அமைகிறது.

     எனவே இன்று இந்திய விடுதலையின் 75வது ஆண்டு பவளவிழாவைப் பெருமிதத்துடன் கொண்டாடும்போது இந்தியா என்ற கருத்தாக்கத்திற்கு மீண்டும் செல்ல வேண்டிய அவசியத் தேவை உள்ளது; அந்தக் கருத்தாக்கத்தின் பொருள், மக்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் உண்மையான ஜனநாயகம் எதுவோ அதுவே சுதந்திரம்: அதுதான் உலக மக்களின் விடுதலைக்கு உதவும், ஆதிக்கத்திற்கு அல்ல. விடுதலை என்பது மக்களுக்கானதே தவிர பாஸிச மற்றும் வலதுசாரி பிற்போக்குச் சக்திகள் பிரச்சாரம் செய்வது போல, மக்கள் தேசத்திற்கானவர்கள் இல்லை. அது பாஸிசவாதிகளின் பொய் முகமூடி. 75வது சுதந்திர நாளில் நாம் இன்னும் விழிப்புடன் இருக்கச் சமதமேற்போம்! சுதந்திரத்தை மட்டுமன்று, விடுதலைப் போராட்ட இயக்கம் உருவாக்கித் தந்த இந்தியா என்ற கருத்தாக்கத்தையும் கண்ணின் மணியாய்ப் பாதுகாப்போம்!

--நன்றி : நியூஏஜ் (ஆக.21 – 27)

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

No comments:

Post a Comment