Tuesday 26 July 2022

வரலாற்றுப் புகழ்பெற்ற கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கு -- புத்தக மதிப்புரை

 புத்தக மதிப்புரை

                                                      
                              வரலாற்றுப் புகழ்பெற்ற கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கு

--திக்காராம் சர்மா

            உலக வரலாற்றில் மிகப் பெரிய நிகழ்வுகளில் ஒன்றான ரஷ்யப் புரட்சி, இயக்கங்களைப் பொதுவாகவும், விடுதலை இயக்கங்களைக் குறிப்பாகவும் ஆழமாகச் செல்வாக்கு செலுத்தியது. இந்தியா உள்ளிட்ட காலனிய நாட்டு மக்களைக் காலனிய ஆட்சிக்கும் சுரண்டல்வாதிகளுக்கும் எதிரான தங்களின் போராட்டங்களைத் தொடர உற்சாகப்படுத்தியது. அதன் விளைவாய் இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் பங்கேற்புடன் ஒரு புதிய அரசியல் இயக்கம் உருக்கொண்டது. இதனால் மிரண்டுபோன பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இந்தியா மீது அக்டோபர் புரட்சியின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, உளவுத் துறையில் “போல்ஷ்விக் இலாக்கா” என்றொரு புதிய பிரிவை ஏற்படுத்தினர்.

            மற்றொரு தாக்கம், கல்கத்தா, பாம்பே, மெட்ராஸ், லாகூர், ஒன்றுபட்ட மாகாணம் முதலான பல்வேறு நகரங்களில் அமைந்த கம்யூனிஸ்ட் குழுக்களாகும்; அந்தக் குழுக்களில் பாம்பேயின் எஸ்ஏ டாங்கே குழு, வங்கத்தில் முஸாஃபர் அகமது குழு, லாகூரில் இக்பால் குழு, உபியில் மற்றொரு குழு, மெட்ராஸில் சிங்கார வேலர் குழு போன்றவை சில உதாரணம். இது தவிர இந்தியாவில் கம்யூனிஸ்ட் கோட்பாடுகளைப் பரப்ப வெளிநாட்டிலிருந்து தீவிரமாகச் செயல்பட்ட எம் என் ராய், அவருடன் நேரடியாகத் தொடர்பு கொண்ட சௌகத் உஸ்மானி போன்ற சில இளைஞர்களுக்குக் கம்யூனிஸ்ட் பிரச்சாரம் செய்யப் பயிற்சி அளித்தார்.

எம் என் ராய் மற்றும் இந்தியாவில் கம்யூனிஸ்ட் பிரச்சாரம்  

            நரேந்திர நாத் பட்டாசார்ஜி என்கிற மணவேந்திர நாத் ராய் (எம் என் ராய்) 1915 பிப்ரவரியில் இந்தியாவைவிட்டுப் புறப்பட்டு ஐரோப்பாவைச் சென்றடைந்தார். மெக்ஸிகன்

நாட்டின் பெண் ஈவ்லின் (Evelyn) என்பவரை மணம் முடித்தார். 1921ம் ஆண்டிற்கு முன்பே கம்யூனிஸ்ட் ஆன அவர் விரைவில் கம்யூனிஸ்ட் மூன்றாவது அகிலத்தின் உறுப்பினராகி அதனது கீழை நாடுகளின் துறையின் தலைவரானார். 1921 மே 15ல் பெர்லினில் “இந்தியச் சுதந்திரத்திற்கான முன்னோடி” (தி வேன்கார்டு ஆப் இந்தியன் இன்டிபென்டன்ஸ்) என்ற கம்யூனிஸ்ட் பத்திரிகையைத் தொடங்கினார். பின்னர் பத்திரிக்கை தலைப்பு வேன்கார்டு என்பதிலிருந்து அட்வான்ஸ் கார்டு (முன்னணிப் படை) என மாற்றப்பட்டது. பத்திரிக்கையின் நகல்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன. அதன் விளைவு உடனே வெளிப்பட்டது; கல்கத்தா அமிர்த் பஜார் பத்திரிக்கா தொடர்ச்சியாகக் கட்டுரைகளை வெளியிட்டது, அது வேன்கார்டு பத்திரிக்கை தந்த உற்சாகத்தின் விளைவே என்பது வெளிப்படை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரச்சாரம், பிற செயல்பாடுகளுக்கு நாடு முழுதும் முகவர்கள் / தொடர்பு கொண்டிருந்தார் ராய். அவர்கள் இந்தியாவில் கம்யூனிச செய்தித்தாள்கள், இலக்கியங்களை விநியோகிப்பதை வழக்கமாகக் கொண்டனர்.

கான்பூர் சதிவழக்கு பின்னணி

            நான்காவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து பிரதிநிதிகளைப் பங்கேற்கச் செய்ய ராய் மேற்கொண்ட ஆகச் சிறந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. பிறகு அவர் பெர்லினில் ஒரு மாநாடு நடத்தும் யோசனையை முன் வைத்து டாங்கே, சிங்கார வேலர், மற்றும் குலாம் ஹாசனைப் பங்கேற்க வேண்டினார், ஆனால் அதுவும் சாத்தியமாகவில்லை. இருவார பத்திரிக்கையான வேன்கார்டு ஆசிரியர் பொறுப்பிலிருந்து அதை வெளியிட்டதுடன் ராய் பின்வரும் தலைப்புக்களில் மூன்று சிற்றேடுகளை வெளியிட்டார்: “மாற்றத்தின் வாயிலில் இந்தியா”, “இந்தியாவின் பிரச்சனைகளும் தீர்வும்” மற்றும் “நமக்கு என்னதான் வேண்டும்?” என்ற பிரசுரங்களைப் பிரச்சாரத்திற்காகவும் தேச விடுதலை மற்றும் உரிமைகளுக்காக இந்தியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வெளியிட்டார். அவரது குழு, விவசாயிகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தைத் திரட்டி அவர்களிடையே தத்துவார்த்த பற்றுறுதியை மலரச் செய்வதை ஆதரித்தது. பிரிட்டிஷ் அரசு முக்கிய மையங்களில் அவர்களது செயல்பாடுகளை முடக்கவும், ராய் மற்றும் இந்தியாவில் அவரது முகவர்களை இழிபடுத்தவும் முடிவு செய்தது. இந்த அனைத்து வளர்ச்சிப் போக்குகளையும் நசுக்க பிரிட்டிஷ் அரசு கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கை ஜோடிக்கத் தொடங்கியது.

            ஒரு நீதிபதி நியாயமற்று நடந்து கொள்வதிலிருந்து தடுக்க அங்கே சான்றோர் அவை போன்ற ஜூரி முறை இல்லாத காரணத்தால் வழக்கைக் கான்பூரில் நடத்துவது என முடிவாயிற்று. செஷன்ஸ் நீதிபதி ஹெச் இ ஹோம்ஸ்-உம் அதேபோல கொடுமையான மனிதன், ஒரு வருடம் முன்புதான் உபி மாநில கோரக்பூர் சௌரி சௌரா வழக்கில் அவர் 172 விவசாயிகளுக்கு மரண தண்டனை விதித்தார். தற்போது 1924 மே 20ல் மத்திய உளவு அமைப்பின் இயக்குநர் 13 பேர்கள் அடங்கிய பட்டியலை அரசு வழக்கறிஞரின் கருத்தை அறிவதற்காகத் தாக்கல் செய்து, அவர்களுக்கு எதிராகச் சதி வழக்கைத் தொடுத்தார்.

குற்றச்சாட்டும் குற்றம் சாட்டப்பட்டவர்களும்

            மாட்சிமை தங்கிய பேரரசரின் பிரிட்டிஷ் இந்தியா இறையாண்மையை மறுத்தார்கள் என்பது அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், எனவே இந்தியக் குற்றவியல் சட்டம் 121 ஏ பிரிவின் கீழ் அவர்கள் சட்டப்படி விசாரிக்கப்பட வேண்டியவர்கள். ஆவணங்களைப் பரிசீலித்த பிறகு பட்டியலிருந்து 5 பேர்கள் விடப்பட்டு மீதமுள்ள எம் என் ராய், முஸாஃபர் அகமது, சௌகத் உஸ்மானி, குலாம் ஹாசன், ஸ்ரீபத் அம்ரித் டாங்கே, சிங்காரவேலுச் செட்டியார், ராம் லால் சர்மா மற்றும் நளினி குப்தா ஆகிய எண்மர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

எஸ் ஏ டாங்கே

            இந்தியாவில் ராய் கட்சியின் தலைமைப் பொறுப்பில் பாம்பேவிலிருந்து எஸ் ஏ டாங்கே

நியமிக்கப்பட்டார். “சோஷலிஸ்ட்” என்ற இதழின் ஆசிரியராக அவர் இருந்தார். ‘காந்தி எதிர் (ஒப்புமை) லெனின்’ என்ற அவர் எழுதிய சிறுபிரசுரம் எம்என் ராயின் கவனத்தை ஈர்க்க அவர் தமது குறிக்கோள் திட்டத்தை டாங்கேவிடம் மாற்றினார். டாங்கேவின் சீடர்களில் ஒருவரான சத்யபக்த்(தா), ‘பிராண்வீரா’ என்ற சமூக வெளியீட்டை நாக்பூரிலிருந்து தயாரித்து வந்தார். பாம்பேயில் 1924 மார்ச் 6ல் டாங்கே கைதானார். “இந்தியாவில் கம்யூனிசத்தைச் செலுத்தும் ஊக்க உணர்வாக டாங்கே காட்சியளிக்கிறார்” என்பது டாங்கே குறித்த உளவு அமைப்பு (இன்டலிஜென்ஸ் பீரோ) இயக்குநர் சிசில் காயே கருத்து. பம்பாய் அரசின் செயலாளர் இந்திய அரசின் உள்துறைக்கு, “டாங்கே ஓர் இழிவான பெயரெடுத்த (நொட்டோரியஸ்) கம்யூனிஸ்ட் மற்றும் கிருத்துவத்துக்குப் புனிதத் திருமுழுக்கு யோவான் அல்லது புதிய அருளப்பர் போல இந்தியாவில் கம்யூனிசத் தத்துவத்தைப் பரப்பும் புனித ஜான் ஆவார்” என்று எழுதினார்.

            முகமது சௌகத் உஸ்மானி இராஜஸ்தான் பிக்கானீரைப் பூர்வீகமாகக் கொண்டவர். தாஷ்கண்ட்டில் ராயைச் சந்தித்து அவருடன் மாஸ்கோ சென்று “புரட்சிகரப் பள்ளி”யில் ஒரு
பாடத்திட்டத்தைக் கற்றார். 1922 மத்தியில் பம்பாய் அடைந்தவர் காசி மற்றும் கான்பூரில் கட்சிக் கிளைகளை அமைப்பதில் வெற்றிபெற்றார். காசியில் அவரது பெரும்பாலான ஆதரவாளர்கள் பல்கலைக் கழக மாணவர்களும்
சம்பூரானந்த் என்றப் பேராசிரியருமாவர். ஓர் அரசியல் கிளச்சியாளர் எனப் பரவலாக அறியப்பட்ட பேராசிரியர் சுற்றுக்குவிட்ட “ஸ்வராஜ்” என்ற செயல் திட்டம் போல்ஷ்விக் மனப்போக்குகளை வெளிப்படுத்தியது. 1923 மே 8ம் நாள் கான்பூரிலிருந்து கைது செய்யப்பட்ட உஸ்மானிக்கு எதிராகப் பெஷாவர் சதி வழக்கில் பிடியாணை இருந்ததால் அவர் பெஷாவர் சிறைக்கு மாற்றப்பட்டார். ஆளால் நீண்ட கடும் தாமதம் காரணமாகப் பெஷாவர் சதி வழக்கு பின்னர் கைவிடப்பட்டது.

            நளினி குப்தாவின் முழு பெயர் நளினி பூஷண் தாஸ் குப்தா; வங்கத்திலிருந்து வந்த அவர்

ராயின் அறிவுறுத்தலின் கீழ் போல்ஷ்விக்குகளுடன் தூதராகத் தொடர்பில் இருந்தவர். 1921 டிசம்பரில் கொழும்பு வழியாக அவர் இந்தியா வந்தடைந்தார். கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்க கம்யூனிஸ்ட் கருத்துக்களைப் பரப்பவும், தேசியவாதிகள் அல்லது புரட்சியாளர்களின் ஆதரவை வென்றிடுவதற்குமான பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது, ஆனால் அந்தக் கடமைமையை நிறைவேற்றுவதில் அவர் தோல்வியடைந்தார். அவருடைய பங்கிற்கு ஒரே வெற்றி முஸாஃபர் அகமதைச் சந்தித்து அவரை ராயின் செயல் திட்டத்தில் இணைத்ததுதான். அவர் கைதானார் ஆனால் பின்னர் பிரிட்டிஷ் தகவல் உளவாளியாக வேலை செய்தார். என்றாலும் (காட்டிக் கொடுத்த) இந்தச் செயல் அவருக்கு உதவவில்லை: அவருக்கும் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் சில காலம் சென்று நோய்வாய்ப்பட, 1925லேயே விடுதலை ஆனாலும் அதன் பின்னர் அரசியல் இயக்கத்தில் அவர் எங்கும் தென்படவில்லை.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

            மெட்ராஸ் உயர்நீதிமன்ற முன்னணி வழக்கறிஞரான எம் சிங்காரவேலு செட்டியார்

மெட்ராஸில் ஒரு கம்யூனிஸ்ட் குழுவை நடத்தி வந்தார். இந்துஸ்தான் தொழிலாளர் விவசாயக் கட்சியை அங்கே அமைத்துக் கட்சியின் அறிக்கை (மெனிஃபெஸ்டோ) வரைவு அமைப்பு விதிகளை உருவாக்கினார். கம்யூனிசம் குறித்தப் பல கட்டுரைகளை “ஹிந்து” பத்திரிக்கையில் அவர் எழுதினார். இதன் விளைவாக எம் என் ராய், அவரைப் பின்பற்றும் எஸ்ஏ டாங்கே மற்றும் பிறரைப்போல சிங்காரவேலு செட்டியாரையும் அணியில் சேர்த்துக் கொண்டார். 1924 மார்ச் 6ம் நாள் எம் சிங்காரவேலு செட்டியாருக்கு எதிராகப் பிடியாணை கைது உத்தரவிடப்பட்டது. எனினும் மார்ச் 7ம் நாளே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு அவரது வீட்டிலேயே இருக்க அனுமதிக்கப்பட்டார். மருத்துவரீதியாகத் தகுதியில்லாத காரணத்தால் அவர் மீதான குற்ற விசாரணை நடத்தப்படவில்லை, மேலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் ரத்தாயின.

            கல்கத்தாவின் கம்யூனிஸ்ட் குழு ஒரு பத்திரிக்கையாளரான முஸாஃபர் அகமதால்
தொடங்கப்பட்டது. 1922ன் தொடக்கத்தில் நளினி குப்தா அவரைச் சந்தித்தார். அதுநாள் முதலாக அவர் ராயுடன் நேரடிக் கடிதத் தொடர்பில் இருந்ததுடன் அவரிடமிருந்து வழக்கமாகச் சிறு தொகையும் பெற்றார்.
“பூம்கேது” என்ற செய்திப் பத்திரிக்கையின் தயாரிப்புக்குப் பொறுப்பான சில தனிநபர்கள் குழுவுடன் அவர் தொடர்பு கொண்டார். இரண்டு முறை அந்தப் பத்திரிக்கை மற்றும் தொழிலாளர் தலைவர்கள் முகண்ட லால் சிர்கார் மற்றும் ஜெ என் விஸ்வாஸ் இருவருக்கு எதிராகவும் அரசு நடவடிக்கை எடுத்தது. சிங்கார வேலுவும் உடன் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் அவருடைய முதிய வயது மற்றும் அவரது உடல் நலன் கருதி குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

தண்டனை மேல்முறையீடு

             சதி வழக்கால் பாதிக்கப்பட்ட நளினி குப்தா, முஸாஃபர் அகமது, ஸ்ரீபாத அமிர்த் டாங்கே மற்றும் சௌகத் உஸ்மானி ஆகிய நான்கு பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நால்வரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அது நிராகரிக்கப்பட்டது. எம் என் ராய் மற்றும் ராம் சரண் லால் சர்மா நாட்டிற்கு வெளியே இருந்ததால் அந்த நேரத்திற்கு விசாரணை கைவிடப்பட்டது. எனினும் 1931 ஜூலை 1ம் நாள் பம்பாயில் ராய் கைது செய்யப்பட்டார். கூடுதல் செஷன்ஸ் நீதிபதி முன் அவரை விசாரணைக்குக் கொண்டு வந்தபோது, நீதிமன்றத்திற்கு வருவதைத் தவிர விசாரணை நிகழ்வு எதிலும் பங்கேற்பதில்லை என்ற நிலைபாட்டை எடுத்தார். இபிகோ 121-ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் இழைத்ததாக அவரைக் குற்றவாளி என அறிவித்த நீதிபதி (நாடு கடத்துவதுபோல நாட்டிற்குள்ளேயே நீண்ட தொலைவில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும்) சிறைக்குக் கடத்தி (ட்ரான்ஸ்போர்ட்டேஷன்) 12 ஆண்டுகள் அடைத்து வைக்கும் தண்டனை விதித்தார், பின்னர் மேல்முறையீட்டில் அது ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. ராம் சரண் லால் சர்மாவைக் கைது செய்ய முடியவில்லை. குலாம் ஹாசன் தானாகப் போலீஸில் சரணடைந்து எம் ஷஃபீக் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாகச் செயல்பட்டார்.

நூலாசிரியர் குறித்து

            இந்நூலின் ஆசிரியர் ஆர் எஸ் யாதவ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர், கட்சியின் இந்திப் பத்திரிக்கையான ‘முக்தி சங்கார்ஷ்’ (விடுதலைப் போராட்டம்) இதழின் பத்திரிக்கையாளர். இந்தியாவில் தொழிலாளர் பிரச்சனைகள், இந்தியப் பொருளாதாரம் இந்திய அரசியல் முறைமை, வரலாறு முதலான பல்வேறு தலைப்புக்களில் கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் எழுதியவர். ஆசிரியரின் இந்த நூல் அளப்பரிய மதிப்பும் முக்கியத்துவமும் உடையது.

            இந்நூல், விடுதலைப் போராட்டம் மற்றும் ரஷ்யப் புரட்சிக்குப் பின் பொதுவாக நாட்டிலும் குறிப்பாகக் கான்பூரிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருக்கொள்ளத் தொடங்கிய துவக்க ஆண்டுகளின் நிகழ்வுகள் தொடர்பான காட்சிகளின் மிகச் சிறந்த விவரிப்பாக உள்ளது. இவை தவிர நான்கு முக்கியமான ஆவணங்கள் ‘ஜாயிண்ட் மேஜிஸ்டிரேட்டின் தி கமிட்டல் ஆர்டர்’, ‘செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பு’, ‘மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு’, ‘எம் என் ராய் வழக்கில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பு’ இவை நூலின் பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ளன. நூலின் மொழி நடை எளிமையாகவும் படிப்போர் சுலபமாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளது. பெரும் மதிப்புடைய தகவல்களைத் திரட்டுவதில் நூலாசிரியர் எடுத்துக் கொண்ட சிரமங்கள், புத்தகத்தை மேலும் ஆர்வமுடையதாகப் படிக்கத் தூண்டுகிறது. நிச்சயமாக இந்நூல் சாதாரண வாசகர்களால் விரும்பப்படும் என்பதுடன் வரலாற்று மாணவர்கள் மற்றும் ஆய்வறிஞர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

(நூலாசிரியர் ஆர் எஸ் யாதவ், 

பியூபிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியீடு, அக்டோபர் 2021, விலை ரூ400/=)

--நன்றி : நியூஏஜ் (ஜூலை17 –23)

--தமிழில் நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர் 

                                               

 

                

 

No comments:

Post a Comment