Tuesday, 31 May 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாற்று வரிசை 64 -- இராமச்சந்திர பாபாஜி மோர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 64

        இராமச்சந்திர பாபாஜி மோர்– 

    அம்பேத்கரைத் தீவிர அரசியலுக்குக்  

          கொண்டு வந்த கம்யூனிஸ்ட் 

                                      --அனில் ரஜீம்வாலே


         கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு, இராமச்சந்திர பாபாஜி மோர் பம்பாயில் ஒரு பொதுக் கூட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் உரையாற்றிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டு பாதையில் நின்றிருந்தார். அம்பேத்கர் அப்போது வைஸ்ராய் கவுன்சிலின் செயற்குழு உறுப்பினர். திடீரென்று ஆர்பி மோரைப் பார்த்த அம்பேத்கர் அவரை மேடைக்கு வருமாறு அழைத்தார். மோர் வர மறுத்தபோது அம்பேத்கர் அவரது தொண்டர்களுக்கு வலுக் கட்டாயமாக அவரை மேடைக்குக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்! கூட்டத்தினருக்கு மோரை அறிமுகப்படுத்தி அவர் இவ்வாறு கூறினார் : “இவர் இராமச்சந்திர மோர், மிகப் பெரும் மனிதர். என்னை அரசியல் வாழ்வில் நுழைய வைக்க முயற்சி செய்த சிலரில் ஆர் பி மோர் ஒருவர்!” 

         இதுதான் இராமச்சந்திர மோர், ஓர் அசாதாரணமான கம்யூனிஸ்ட்.                                        

          இராமச்சந்திர பாபாஜி மோர் 1903 மார்ச் மாதம் 1தேதி மிகமிக ஏழ்மையான தலித் மகர் குடும்பத்தில், இன்றைய மகாராஷ்ட்டிராவின் லடவ்லி கிராமம், கொங்கன், கொலாபா மாவட்டம் மகத் தாலுக்காவில் பிறந்தார். தந்தையின் கிராமம் தாஸ்கௌண். அனைத்து வகைகளிலும் அவர்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டார்கள். முன்பு சிவாஜி மோராக இருந்த இராமச்சந்திரா, தந்தையை இழந்ததும் மிக இளம் வயதிலேயே வயலில் தொழிலாளியாகப் பணியாற்றினார்.

          இருப்பினும் இராமச்சந்திராவுக்குப் புத்தகங்களின் மீது விருப்பம் அதிகம். தொடக்கக் கல்வியைக் கிராமப் பள்ளியில் பெற்றார். மேலும் உள்ளூர் சாது ஒருவரிடமிருந்து நிறைய ‘மந்திரங்களை’க் கற்று விரைவில் மிகவும் சமய நம்பிக்கை உடையவராகி, வாரம் இரண்டு நாட்கள் ‘உபவாசம்’ இருந்தார்! பின்னர் இரண்டு கல்வி உதவித் தொகைகளைப் பெற்றார். நடுநிலைப் பள்ளிப் படிப்பு மகதில் முடித்தார். மாவட்டத்திலேயே மகர் சமூகத்திலிருந்து வந்த ஒரு பையன் ஆங்கிலம் படித்தது என்பது இராமச்சந்திராதான்.

சாதிக் கொடுமை

          கல்வி உதவித் தொகையை வென்றிருந்தும் மகத் உயர் நிலைப் பள்ளியில் 11 வயதில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு அவர் ஒரு தபால் அட்டையில் அந்தப் பள்ளிக்கு மானியத்தை நிறுத்துமாறு மாவட்ட செய்திப் பத்திரிக்கைக்குக் கடிதம் எழுதினார்! அந்தக் கடிதம் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி, பள்ளி அவரை அனுமதிக்கும் கட்டாயத்திற்கு ஆட்பட்டது.

         மகர் என்பதால், இராமச்சந்திரா கடுமையான வலிநிறைந்த பாகுபாடுகளைச் சந்தித்தார். 11 வயதிற்குக் கீழ்ப்பட்டோர்க்கான கல்வி உதவித் தொகை தேர்வு எழுதும்போது அவரை மட்டும் தேர்வு அறைக்கு வெளியே அமர வைத்தனர். ஏன்? ஏனெனில் அவர் ‘தீண்டத்தகாதவர்’! ஒரு தொலைவில் இருந்து கேள்வித் தாள் அவரிடம் வீசி எறியப்பட்டது; அவர் தேர்வு எழுதி முடித்த விடைத் தாள்களையும் அவர் தள்ளிவிடத்தான் வேண்டும். ஒரு தொலைவிலிருந்து அவை எடுக்கப்படும், உடலைத் தொட்டுவிடாது இருக்கவாம்! 200 பேர் மாணவர் பட்டியலில் ‘டாப்’பில் வந்த இராமச்சந்திரா மாதம் ரூ 5 உதவித் தொகை பெற்றார்.

          உதவித் தொகையை வென்றது புதிய பிரச்சனைகளை ஏற்படுத்தியது. அவர் ஆங்கிலப் பள்ளியில் சேர மகத் சென்றபோது பள்ளிக் கட்டடத்தின் சொந்தக்காரர், இராமச்சந்திராவுக்கு அனுமதி கொடுத்தால், தனது இடத்தைப் பள்ளிக்குத் தர மாட்டேன் என்றார். மூத்த மாணவர்கள் அறிவுரைபடி அதிகாரிகளுக்கு அவர் கடிதம் எழுத, பத்திரிக்கைளில் வெளிவந்த அது விரும்பிய பலனைத் தந்தது, அவருக்கு அனுமதி கிடைத்தது.

பம்பாயில்

       அவரது மாமாக்களில் ஒருவர் அவரைப் பம்பாயில் அம்பேத்கரிடம் அழைத்துச் செல்ல, அதுவே அந்தப் பெரும் அளுமையுடன் அவருக்குக் கிடைந்த முதல் தொடர்பாயிற்று. பம்பாயில் வேலையில்லாமல் பசியில் உழன்றிருக்கிறார்; பின்னர் சில அணாக்களுக்காக இரயில்வே ஸ்டேஷன் உட்பட பல இடங்களில் கூலியாகப் பணியாற்றினார்; பிறகு கப்பல் மேற்ப் புறத்திலிருந்து பெயிண்ட்டைச் சுரண்டி எடுக்கும் வேலையையும் இராணுவத்தில் ஒரு எடுபிடி பியூன் ஆகவும் பணியாற்றியிருக்கிறார். ஆனால் அவருடைய மாமனார் அவரது அந்தச் சொற்ப வருமானத்தையும் அவரிடமிருந்து பறித்துச் சென்றுவிடுவார்!

          பூனா மிலிட்டரி நிர்வாகத்திற்கு ஓடிய இராமச்சந்திரா அங்கே கூலியாகவும், ஏன் மொழி பெயர்ப்பாளருமாகக்கூட வேலை செய்தார். இதன் மத்தியில் 1920ல் திலகர் மரணமடைய, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள எவரிடமும் சொல்லாமல் இராமச்சந்திரா பூனா சென்றார். சொல்லத் தேவையில்லை, இவ்வாறு தனது வேலையை இழந்தார். விரைவில் தாஸ்கௌனிலேயே ஓர் ஆசிரியரானார். பின்னர் மகத்திலேயே தீண்டத்தகாதவர்களுக்காகக் காங்கிரஸ் கட்சி தொடங்கிய ஒரு பள்ளியிலே பணியாற்றி தனது தாய் மற்றும் தங்கைக்கு இப்படி ஏதோ உதவி செய்தார். எல்பின்ஸ்டோன் உயர்நிலைப் பள்ளியிலிருந்து மெட்ரிக் தேர்வுக்கு அவர் தயாரித்தார்.

      இதன் மத்தியில் இராமச்சந்திரா தீண்டத்தகாதவர்களின் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்த மராத்தி இருவார பத்திரிக்கையான ‘மூக் நாயக்’ (குரலற்றவர்களின் தலைவன்) இதழில் எழுதத் தொடங்கினார். அவர் கவிதைகளும் எழுதினார்.[டாக்டர் அம்பேத்கர் 29 வயதில் 1920ல் தொடங்கிய பத்திரிக்கை ‘மூக் நாயக்’]. தீண்டத்தகாதவர் இயக்கங்களில் மோர் மெல்ல இணைந்தார். அந்நாட்களில் மகத் பகுதியில் மோட்டார் பொது போக்குவரத்தில்  உட்கார்ந்து பயணிக்கவும், டீ கடைகளில் டீ அருந்தவும் தீண்டத் தகாதவர்களை அனுமதிக்க மாட்டார்கள். இது வலிமையான போராட்டங்களுக்கு வித்திட்டது.

   அவரும் அவரது நண்பர்களும் தண்ணீர் குடிப்பதில் பிரச்சனைகளைச் சந்தித்தனர், காரணம் அது தீண்டத்தகாதோர் காலனியிலிருந்து தொலைவில் இருந்தது.

படை கலைப்பில் பணி இழந்த வீரர்களும் உணர்ச்சிப் பரவலும்

     முதல் உலகப் போர் முடிந்த நிலையில் 111வது மகர் ரெஜிமெண்ட் (இராணுவப் படைப் பிரிவு) கலைக்கப்பட்டதால் பணியிழந்த இராணுவ வீர்கள் பெரும் எண்ணிக்கையில் மகத்துக்கு வரத் தொடங்கினர். அவர்கள் வயல்வெளிகளில் வேலை செய்யும் கட்டாயத்துக்கு ஆளாயினர். ஆனால் வீரர்கள் உலக அனுபவம் பெற்றிருந்ததால் துணிச்சல், வீரம் இதனுடன் மராத்தி மற்றும் ஆங்கிலமும் அறிந்திருந்தனர். எனவே அவர்களைச் சுலபமாக அடிமையாக நடத்த முடியவில்லை. பணிய மறுத்த அவர்களின் உறுதியான உரிமை நிலைநாட்டல் வளர்ந்தது.

          இதற்கு முன்பே பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பல மகர்கள் தாஸ்கௌண் மற்றும் மகத்தில் குடி அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு இருந்த குறிப்பிட்ட அந்தஸ்துகளில் பிரிட்டிஷ் அரசிடமிருந்து சிறிது பென்ஷன் வந்ததும் ஒன்று. பின்னர் அவர்களில் பலரும் மகாத்மா பூலே, ஷாகுஜி மகராஜ் முதலான ஆளுமைகளுடன் தொடர்பில் இருந்தனர். ஆர்பி மோரின் தாத்தாவும் டாக்டர் அம்பேத்கரின் தந்தையும்கூட அந்தப் பகுதியில் வாழ்ந்தார்கள்; பிராமணிய சக்திகளின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் மீண்டும் மகர்களைப் படைப்பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற பிரச்சனையை எடுத்து வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து சமூகச் சீர்திருத்த இயக்கம் அந்தப் பகுதியில் மிக சக்திமிக்கதாக மாறியது.

மகத் சத்தியாகிரகம்: ஆர்பி மோரும் டாக்டர் அம்பேத்கரும்

          1927ல் புகழ் பெற்ற மகத் சத்தியாகிரகம் நடைபெற்றது. அந்தப் போராட்டம்

டாக்டர் அம்பேத்கர் தலைமையேற்று நடத்தியது என்றாலும், அதற்கே உரிய சரித்திரப் பின்னணியும் அதில் ஆர்பி மோர் முக்கிய தலைமைப் பங்கு வகித்த வரலாறும் உடையது. சத்தியாகிரகத்தின் நோக்கம் அங்கிருந்த சவுதார் குளத்தின் தண்ணீரைப் பயன்படுத்த தீண்டத்தகாத மக்களுக்கும் உரிமை உண்டு என நிலைநாட்டுவதே. (மேல் சாதியினரின் தாக்குதலைச் சந்தித்து) தொடர்ந்து போராடி நீதிமன்ற சட்டப் போராட்டங்களின் வழி நீதியை நிலை நாட்டிய தீண்டத்தகாத மக்களின்  முக்கிய வரலாற்று நிகழ்வானது அந்தச் சத்தியாகிரகம்.    

          பம்பாய் சட்டமன்ற கவுன்சில் உறுப்பினரான சிகே போலே (ராவ் பகதூர் சீத்தாராம் கேசவ் போலே) 1923ல் சட்டமன்றத்தில் “பொது நீர் தேக்கங்கள் மற்றும் அரசால் நிதியளித்துப் பராமரிக்கப்படும் தர்மசாலாக்களைத் தீண்டத்தகாதோர் எனப்படும் தலித்களுக்குத் திறந்துவிட வேண்டும்’ என்ற மசோதாவைத் தாக்கல் செய்து சட்டமாக்கினார். இராமச்சந்திரா மோர் அதனைப் படித்தார். முன்பு மோரின் அனுமதியைத் தடுக்க முயன்ற தாரப் என்பார்தான், ‘சவுதார் குளத்திலிருந்து தலித்துகள் நீரைப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமனறத்தில் வழக்குப் பதிவு செய்தார்’

          1923ல் மகத் பகுதி தலித்கள் மாநாடு ஒன்றை நடத்த முடிவு செய்தனர். 1924ல் மோர் மகத் தாலுக்காவின் தேர்ந்தெடுத்த தலித் செயல்பாட்டாளர்கள் கூட்டத்தைக் கூட்டி “கன்வென்ஷன் ஆப் அவுட்-காஸ்ட்ஸ்” (விலக்கப்பட்ட சாதியினர் மாநாடு) நடத்தவும் அதற்குத் தலைமை ஏற்க 

டாக்டர் அம்பேத்கரை அழைக்கவும் முடிவெடுத்தனர்.

 1924ல் இராமச்சந்திரா மோர் டாக்டர் அம்பேத்கரை அழைக்க பம்பாய் சென்றார். முதலில் அம்பேத்கர் தயங்கினாலும் பின்னர் ஒப்புக் கொண்டு இறுதியில் 1924 மார்ச் மாதம் அந்த மாநாடு டாக்டர் அம்பேத்கர் பங்கேற்போடு நடந்தது.

டாக்டர் அம்பேத்கர் சகோதரர் பல்ராம் தாதாவுடன்கூட இராமச்சந்திரா உரையாடினார்.

மகத் தலித் விடுதலை மாநாட்டின் அமைப்பாளராக ஆர்பி மோர்

          தனது சொந்த கிராமமான தாஸ்கௌனில் 1926 டிசம்பர் 4ம் நாள் இராமச்சந்திரா நூற்றுக் கணக்கான தலித்களுக்குத் தலைமை தாங்கி அழைத்துச் சென்று (கேப்டன்) கிராஃபோர்டு பொது குளத்தின் தண்ணீரை அருந்தும் அவர்களின் உரிமையை நிலைநாட்டினார். (மராட்டிய கொங்கன் பகுதியில் வாழ்வோர்களைக் குறிக்கும்) “கோகனஸ்தா மகர் சேவா சங்கம்” என்ற அமைப்பை அவர் தொடங்கினார். ஆர்பி மோர் அதன் முதல் பொதுச் செயலாளராகவும் பிகாஜி கெய்க்வார்டு முதல் தலைவராகவும் செயல்பட்டனர். 

          மோர் மற்றும் தோழர்கள் பெரும் முயற்சிகளுக்குப் பிறகு 1927 மார்ச் 19 மற்றும் 20 இரு நாட்கள் பம்பாய், தானே, கொலாபா மற்றும் ரத்னகிரி பகுதிகளிலிருந்து சுமார் 5000 தலித்கள் கலந்து கொள்ள மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. அதன் முக்கிய அமைப்பாளரான ஆர்பி மோர் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் மற்றும் ஆனந்தராவ் சைத்ரே, பாபு சஹஸ்ரபுத்தே மற்றும் சித்தாராம் ஷிவ்டார்கர் போன்ற அவரது பிற தோழர்களையும் அறிமுகம் செய்தார். 1927 மார்ச் 19ல் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரை கூட்டத்தினரை மின்னலாய் எழுச்சிபெறச் செய்தது. மார்ச் 20, மாநாட்டின் இரண்டாம் நாளில் ஆயிரக்கணக்கான தலித்கள் ஆர்பி மோர் மற்றும் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் மகத் சவுதார் குளத்திற்குப் பேரணியாகச் சென்று நூற்றாண்டுகளாக இருந்த தடையை உடைத்து அந்தக் குளத்தின் நீரைக் குடித்தார்கள். (மகாத்மா காந்திஜியின் தண்டி யாத்திரை உப்புச் சத்தியாகிரகத்திற்கு நிகரானது அப்போராட்டம் எனக் குறிப்பதுண்டு.) தலித்களின் வரலாற்றுப் புகழ்மிக்க விடுதலைப் போராட்டம் தொடங்கியது.

   உடனடி எதிர்விளைவாய், பழமைவாத சாதி இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் கும்பலாய்ச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்; கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்டு தலித் வீடுகள், கடைகள் இடித்து அழிக்கப்பட்டன. காட்டுத் தீயாய் அச்செய்தி, டாக்டர் அம்பேத்கர், ஆர்பி மோர் மற்றும் பிற தலைவர்கள் பெயர்களுடன்  நாட்டில் பரவியது. இந்தச் சத்தியாகிரகத்துப் பிறகுதான் தீண்டத்தகாதோர் விடுதலைக்காகத் தனது வாழ்வை அர்ப்பணிக்க டாக்டர் அம்பேத்கர் சபதம் ஏற்றார்.

          அந்த ஆண்டின் பிற்பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சத்யாகிரக இயக்கத்தை மீண்டும் நடத்த வந்தார். இம்முறை ஆர்பி மோர் அருகே நிற்க ‘மனுஸ்மிருதி’ எரிக்கப்பட்டது.

          இராமச்சந்திர மோர் சமதா சைனிக் தள் (சமத்துவத்திற்கான படை வீரர்கள்) என்ற அமைப்பைப் பம்பாயில் நிறுவியதுடன் ஏராளமாக எழுதினார். 1928 –30ம் ஆண்டுகளில் ஆர்பி மோர் ‘பகிஷ்கிருத்’ (--சாதியிலிருந்து—‘விலக்கப்பட்டவர்கள்’ அதாவது தீண்டத்தகாதோர்) மாநாடுகள் பல நடத்தினார்.

மோர் சிபிஐ கட்சியில் சேர்தல்

          இதன் மத்தியில் ஆர்பி மோரின் கருத்துகள் வளர்ச்சியடைந்தன. பம்பாயில் அவர் இருந்தபோது அப்போது 1920களில் எழுச்சிபெற்று வந்த தொழிலாளர் வர்க்க இயக்கத்துடன் தொடர்பு கொண்டார். 1926லிருந்தே இராமச்சந்திரா பெரும்பாலும் பம்பாயில்தான், பொதுத் தொழிலாளர்கள் மத்தியில், டியூஷன் மற்றும் சிறு பணிகளைச் செய்து கொண்டு வசித்தார். 1931ல் இரத்னகிரியில் இரண்டு கிசான் மாநாடுகளில் கலந்து கொண்டார், கேத் பகுதியில் நடைபெற்ற மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். பம்பாயில் தரூண் மஸ்தூர் சங் (இளம் தொழிலாளர் சங்கம்) திரட்டி அமைத்தார்.

          சிபிஐ மூத்த தலைவர்கள் மீரட் சிறையில் இருந்தனர். டாக்டர் அதிகாரியின் இளைய சகோதரர் ஜெகந்நாத் அதிகாரி மற்றும் பிற கம்யூனிஸ்ட்களைச்

சந்தித்தார். அவர் ஆசிரியராக வெளியிட்ட தொழிலாளர்களுக்கான ‘ஆவான்’ (சவால்) என்ற வாராந்திரப் பத்திரிக்கையில் டாக்டர் அம்பேத்கருக்கு ஒரு பக்கம் ஒதுக்கினார். ‘கிராந்தி’ (புரட்சி) மற்றும் ‘இரயில்வே ஒர்க்கர்’ பத்திரிக்கைகளிலும் மோர் எழுதினார். பின்னர் அவர் ஆர்டி பரத்வாஜ், ஜம்பேகார், பிடி ரணதிவே, அதிகாரி முதலானவர்களைச் சந்தித்துப் பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.

          1936ல் அகில இந்தியக் கிசான் சபா (AIKS) அமைப்பு மாநாட்டில் ஆர்பி மோர் கலந்து கொண்டார். கொலாபா மாவட்டத்தில் நடைபெற்ற சாரி கிசான் இயக்கத்திலும் அவர் கலந்து கொண்டார். [சாரி கிசான் இயக்கம் என்பது ஆறு ஆண்டுகள் நடைபெற்ற மராட்டிய விவசாயிகளின் வரலாற்றுப் புகழ்பெற்ற போராட்டமாகும். மகாராஷ்ட்டிரா கொங்கன் பகுதியில் அமலில் இருந்த கோட்டி (Khoti) முறை என்ற சுரண்டல் கொடுமையை எதிர்த்து நடந்தது. பிரிட்டிஷ் அரசுக்கு வரி வசூல் செய்து தரும் உரிமை பெற்ற பெரும் நில உடைமையாளர்கள்  கோட்டி என அழைக்கப்பட்டனர். அந்த வேலை நிறுத்த இயக்கம் ராய்காட் மாவட்டம், அலிபேக் அருகே சாரி என்ற கிராமத்தில் முதன் முறை தொடங்கியது. விவசாய மற்றும் தொழிலாளர் தலைவர் நாராயண் நாகு பாட்டில் தலைமையில் நடைபெற்ற அந்த நீண்டநெடிய போராட்டம் பிரிட்டிஷ் அரசை மண்டியிடச் செய்தது. டாக்டர் அம்பேத்கர் போரட்டத்தை ஆதரித்தார். –இணையத்தில் மொழிபெயர்ப்பாளர் திரட்டியது.]

          1939 –43 காலகட்டத்தில் அவர் தலைமறைவாக இருந்தார். இராமச்சந்திரா ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ மற்றும் பிற மார்க்சிய நூல்களைப் படித்தார். ‘ஏழைகளிலும் பரம ஏழை’களான தலித் மக்கள் தொழிலாளர் வர்க்கத்தின் மிகப் பெரும்பகுதியாக அமைகின்றனர் என அவர் கூறினார்.

          வியப்பையும் ஆர்வத்தையும் தூண்டக்கூடிய செய்தி டாக்டர் அம்பேத்கரைச் சந்தித்து ஆர்பி மோர் ‘தான் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையப் போவதாக’க் கூறினார் என்பது. அம்பேத்கர் கோபம் அடையவில்லை. மோரிடம் கூறினார்: “நல்லது, நீங்கள் உங்களுக்குரிய மரியாதையுடன் நடத்தப்படுவீர்கள் என நான் நம்புகிறேன்.” ஒருபோதும் அம்பேத்கர் இயக்கத்திலிருந்து விலகி மோர் பிரிந்துவிடவில்லை.

          ஆர்பி மோர் பல பகல் இரவுகளைத் தனது குடும்பத்துடன் நடைபாதையில் கழித்தது உட்பட பெரும் துன்ப துயரங்களை ஒரு கம்யூனிஸ்ட்டாகப் பொறுத்துத் தாங்கிக் கொண்டார். அவர் சிறையில் இருந்தபோது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் எல்பின்ஸ்ரோடு ரயில்வே மேம்பாலத்திற்குக் கீழே வசித்திருந்தனர். மற்ற தோழர்கள் அவர்களுக்கு உதவினர்.

      அவர் புகழ்பெற்ற பாடகர் (கவிஞர், தொழிலாளர்களின் இசைப் பாடகன் ஷாகிர்) அமர் ஷேக் (1916 –1969) உடன்
மிக நெருக்கமாக இருந்தார். அம்பேத்கரிய மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஓர் இணைப்புப் பாலமாக விளங்க அவர் முயன்றார்.

            1942 முதல் 1945 வரை இராமச்சந்திரா இந்தியப் பெருந்தீபகற்ப (GIP, கிரேட் இந்தியன் பெனிசுலா) இரயில்வே தொழிலாளர் சங்கச் செயலாளராகவும் இருந்து நான்காம் பிரிவு தூய்மைப் பணியாளர்களைத் (சஃபாய் ஒர்க்கர்ஸ்) திரட்டியும் பணியாற்றினார். 1945ல் பாரீஸில் நடைபெற்ற சர்வதேசத் தொழிலாளர்  (ILO) மாநாட்டில் என்எம் ஜோஷியுடன் கலந்து கொண்டார். வைஸ்ராய் எக்ஸ்சிக்யூடிவ் கவுன்சில் அமைச்சரவையில் (1942 --46) தொழிலாளர் அமைச்சரான டாக்டர் அம்பேத்கர் அவரை மாநாட்டிற்கு அனுப்பிட சிறப்பு முயற்சி எடுத்தார். ஐஎல்ஓ மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய அவரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் ஷெட்யூல்டு சாதிகளின் சம்மேளனமும் பாராட்டி கௌரவித்தன.

          மோரின் மனைவி சீதாபாய் ஒரு கட்சி உறுப்பினர். அவர்களுடைய மகன் சத்யேந்திரா மற்றும் மகள் கமல் ஏஐஎஸ்எஃப் மாணவர் பெருமன்றத்தில் தீவிரமாகச் செயலாற்றியதுடன் அமர் ஷேக், காவ்ஹங்கர் மற்றும் அண்ணாபாவ் சாத்தேவின் கலாச்சாரக் குழுக்களிலும் பணியாற்றினர். கட்சியின் முழுநேர ஊழியர்கள் என்ற வகையில் முதன் முதலாக முறையான கட்சி ஊதியம் பெற்றவர்களில் ஆர்பி மோரும் ஒருவர். 1943 சிபிஐ முதலாவது கட்சிக் காங்கிரஸ் அவரது குடும்பத்தை ஒரு “கம்யூனிஸ்ட் குடும்பம்” என்று பாராட்டியது.

சாதி மீது நிலைபாடுகள்

          இராமச்சந்திரா மோர் சாதி பிரச்னையின் மீது கூடுதல் கவனம் செலுத்த கட்சியைத் தொடர்ந்து வலியுறுத்தினார். 1953 மூன்றாவது கட்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்பு தீண்டாமை மற்றும் சாதி (சமூக) அமைப்பு முறை குறித்துச் சிறப்புக் குறிப்பினைத் தயாரித்துத் தலைவர்களுக்கு அனுப்பினார். கட்சி அந்தக் குறிப்பை மாநிலக் குழுக்களுக்குச் சுற்றுக்கு அனுப்பி, பொருத்தமான தகவல்கள், விமர்சனங்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டது. 1957 மற்றும் 1964ல் மீண்டும் திருத்தப்பட்ட குறிப்பை ஆர்பி மோர் அனுப்பினார். சாதி மற்றும் சமூக ஒடுக்குமுறை பிரச்சனைகளை வர்க்கப் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாக அவர் கருதினார். டாக்டர் அம்பேத்கர் குறித்துச் சமச்சீர் மதிப்பீட்டை அவர் (கட்சியிடம்) கோரினார். இப்பிரச்சனைகளை அஜாய் கோஷ், இஎம்எஸ் முதலான கம்யூனிஸ்ட் பெருந்தலைவர்களுடன் அவர் விவாதித்துள்ளார். 1959 மற்றும் 1964ல் இந்தியக் குடியரசுக் கட்சி (RPI) மற்றும் சிபிஐ கட்சிகள் இணைந்து நடத்திய நிலமற்ற விவசாய உழைப்பாளிகள் மற்றும் ஆதிவாசிகளின் மாநிலம் தழுவிய பெருந்திரள் சத்தியாகிரகப் போராட்டங்களில்  ஆர்பி மோர் தீவிரமாகப் பங்கேற்றார். பல ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடிகளும் ஆர்பிஐ கட்சியின் நீலக் கொடிகளும் ஒன்றாகப் பறந்தன.

          1964 கட்சி பிளவுக்குப் பிறகு இராமச்சந்திர பாபாஜி மோர் சிபிஐ (எம்) கட்சியில் இணைந்தார். சிபிஐஎம் மகாராஷ்ட்டிரா மாநிலக் குழுவுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மாநிலக் கட்சி பத்திரிக்கையான ‘ஜீவன்மார்க்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அம்பேத்கர் மற்றும் ஆர்பி மோர் மறைவு

          ஆர்பி மோர் 1972 மே 11ம் மறைந்தார்.

     1956 டிசம்பர் 6ம் நாள் டாக்டர் அம்பேத்கர் மறைந்ததும் மிக பிரம்மாண்டமான அஞ்சலிக் கூட்டங்களில் ஒன்றை ஆர்பி மோர் பம்பாயில் ஏற்பாடு செய்தார். முன்னணி கம்யூனிஸ்ட் மற்றும் அம்பேத்கரிய தலைவர்கள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர். இராமச்சந்திர மோரே இறந்ததும் அவருக்கு அஞ்சலி செலுத்த அம்பேத்கரியர்களும் கம்யூனிஸ்ட்களும் மீண்டும் ஒன்றாய் இணைந்தார்கள்.

          அம்பேத்கரிய இயக்கத்தின்பால் ஆர்பி மோரின் அணுகுமுறை குறித்துப் பல கருத்து வேறுபாடுகளும் விவாதங்களும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும், பின்னர் சிபிஐ(எம்) கட்சியிலும் நடைபெற்றன.

    அவைகளின் அணுகுமுறைகளில் வேறுபாடு இருந்திருக்கலாமே தவிர, அனைத்து மக்களையும் சமமாக ஒரே அந்தஸ்து மற்றும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்ற உணர்வில் என்றும் மாறுபாடு இல்லை. இனியும் இருக்கப் போவதில்லை. அத்தகைய சோஷலிசச் சமூகத்தை அமைக்கும் போராட்டத்தில் இராமச்சந்திர பாபாஜி மோரின் வாழ்க்கை நமக்கு என்றென்றும் ஆதர்சமாய் விளங்கும்!

--நன்றி : நியூஏஜ் (மே 8 --14)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்   

       

Saturday, 28 May 2022

ஆளுமைகளை அபகரிக்கும் ஆர்எஸ்எஸ் – பாஜக -- ஓர் எச்சரிக்கை

ஆளுமைகளை அபகரிக்கும் ஆர்எஸ்எஸ் – பாஜக

அவர்களின் அபகரிப்பு  

நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கை

--ஆர் எஸ் யாதவ்

நமது மாபெரும் ஆளுமையாளர்களை அபகரிக்க ஆர்எஸ்எஸ் / பாஜகவும் தந்திரமான கொள்கையைப் பின்பற்றுகின்றன; அந்த ஆளுமைகளின் கொள்கைகள் அவர்களுக்கு நேர் எதிரிடையாக இருப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. பகத் சிங்கைப் புகழ்ந்து பாடியும், ஏதோ அவர்கள் சுவாமி விவேகானந்தரைப் பின்பற்றுபவர்கள் போலவும், சுதந்திரத்திற்குப் பிறகு பல பத்தாண்டுகளாகவும் ஏன் அதற்கு முன்பும்கூட யாரை அவமதித்து வருகிறார்களோ அந்தக் காந்திஜியைக்கூட இப்போதெல்லாம் வழிபடுவதாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

சுவாமி விவேகானந்தர்

வெகு காலத்திற்கு முன்பே வரலாற்றுச் சிறப்புடைய  ‘நான் ஒரு சோஷலிஸ்ட்’ என்ற தனது சிறு பிரசுரத்தில் தன்னை ஒரு சோஷலிஸ்டாக இந்தியாவில் முதன் முதலாக அழைத்துக் கொண்டவர் சுவாமி விவேகானந்தர். வெளிப்படையாக அவர் தன்னைச் சோஷலிஸ்ட் எனப் பிரகடனப்படுத்தியவர். சுவாமி விவேகானந்தரை அபகரித்துச் சொந்தம் கொண்டாட வேண்டுமானால் ‘சோஷலிச’த்தைத் தாங்கள் நம்பும் கொள்கையாக ஏற்கும் துணிவை அவர்கள் பெற வேண்டும். சோஷலிசத்தை ஏற்க அவர்கள் தயாரா? அப்படி இல்லை என்றால், சுவாமி விவேகாந்தர் ஆதரித்துப் பிரச்சாரம் செய்த கொள்கைகள் மற்றும் தத்துவத்துடன் தங்களுக்கு ஏதோ நெருக்கம் இருப்பதாகச் சொந்தம் கொண்டாட முயற்சிக்கக் கூடாது. 1893 செப்டம்பர் 11ல் அமெரிக்க மண்ணில் மதங்களின் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது சிங்கம்போல முழங்கி அவர் விடுத்த வலிமையான அழைப்பு, அனைத்து மதங்களின் அடிப்படையான ஒற்றுமையை வலியுறுத்தியது; ஒருவரது சொந்த மதத்தின் பெருமையை மட்டும் வலியுறுத்தி பிற மதங்களைப் பழிக்கும் அன்றைக்கு நிலவிய போக்கைக் கடுமையாக விமர்சனம் செய்தது.

மதங்களின் ஒற்றுமை

மதங்களின் அடிப்படையான ஒற்றுமையில் ஆர்எஸ்எஸ்–பாஜகவுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லை, அவர்களால் அது முடியாது. பிற மதங்களைப் பின்பற்றுபவர்களை, குறிப்பாக முஸ்லீம்களை, இழிவுபடுத்துவதுதான் அவர்களின் மிக விருப்பமான உத்தி; அதனைத் தங்கள் தேர்தல் ஆதாயத்திற்காக மக்களைப் பிளவுபடுத்தப் பயன்படுத்துகின்றனர். இந்த இடத்தில் சிந்தையைக் கிளரும் சுவாமி விவேகானந்தரின் வாக்கை நினைக்காமல் இருக்க முடியாது. சுவாமி கூறுகிறார்: “ஒரு கிருஸ்துவர், இந்து அல்லது புத்த மதத்தவராக வேண்டாம்; அன்றி ஓர் இந்துவோ அல்லது பௌத்தரோ கிருஸ்தவராக மாற வேண்டாம். ஆனால் ஒவ்வொருவரும் பிறரது நல்லுணர்வை உள்வாங்க வேண்டும், அதே நேரத்தில் தங்கள் நம்பிக்கையின் தனித்துவத்தையும் பாதுகாக்க வேண்டும்; மற்றும் ஒவ்வொருவரும் அவரவர் சொந்த வளர்ச்சி விதிகளின்படி வளர வேண்டும். அனைத்து மதங்களும் மிகமிக உயர்வான பண்பு நலன்களுடன் அமைந்த ஆண்களையும் பெண்களையும் உருவாக்கியுள்ளது. இந்த நிதர்சனமான சாட்சியத்தின் முன்னால், எவரொருவராவது தனது சொந்த மதம் தனித்துவமாக நீடிக்கவும், பிற மதங்கள் அழியவும் கனவு காண்பாராகில், அவர்களுக்காக எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து நான் பரிதாபப்படுகிறேன்.”

சுவாமி விவேகானந்தரின் மேன்மையான கருத்தை உள்வாங்கி தன்வயமாக்க பாஜக -   ஆர்எஸ்எஸ் தயாரா? சிறுபான்மையினர் மற்றும் தலித்கள்பால் வெறுப்பு அணுகுமுறையைக் கைவிட்டு தூக்கி எறிய அவர்கள் தயாரா? இல்லை, அவர்கள் தயாரில்லை. ஓர் இஸ்லாமிய நண்பருக்குச் சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதத்தை நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். இந்தியாவின் இரு பெரும் சமூகத்தினரிடையே ஒற்றுமையை வலியுறுத்தி அவர் எழுதினார்: “நமது சொந்த தாய் மண்ணிற்காக, இந்துயிசம் மற்றும் இஸ்லாம் எனும் இரண்டு பெரும் முறைமைகளின் சங்கமம், --வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும்தான்—ஒரே நம்பிக்கை.”

மீண்டும் நாம், சிகாகோவில் நடைபெற்ற மதங்களின் உலக நாடாளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் உண்மையான பிரச்சனையை மிகக் கூர்மையாகச் சுட்டிக் காட்டி  உரைத்ததைப் பார்க்கலாம்: “(இந்தியாவில்) அவர்களுக்குப் போதுமான மதம் இருக்கிறது – ஆனால் தண்ணீருக்குத் தவித்துக் காய்ந்துபோன தொண்டை வரள பல லட்சக்கணக்கான மக்கள் உணவுக்காகக் கதறித் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பசியால் துடிக்கும் மக்களுக்கு மதத்தை வழங்குவது பெரும் அவமரியாதை. பசிக்கு உணவு அளிக்க முடியாத கடவுள், எனக்குச் சொர்க்கத்தில் நிலைத்த பேரின்பத்தை அளிப்பார் என்று நான் நம்பவில்லை” என்று அவர் பிரகடனம் செய்தார்.

திசை திருப்பல்

இன்று, பிரதமர் உட்பட பாஜக – ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தாங்கள் அயோத்தியில் ‘பாவ்ய’ ராம் மந்திர் (பிரம்மாண்டமான இராமர் கோயில்) எழுப்பி வருவதாகத் தொடர்ந்து தற்பெருமை அடித்துக் கொள்கிறார்கள், ஏதோ அப்படிக் கட்டுவது வீதிகளில் வேலைதேடி அலையும் கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் அளித்துவிடும் என்பதைப் போல. 120 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சுவாமி விவேகானந்தர் இந்தியாவுக்குத் தேவைப்படுவது பிரெட் (ரொட்டி/ உணவு/ வாழ்வாதாரமே) தவிர தேவாலயங்களோ அல்லது கோயில்களோ அல்ல என உறுதிபட முழங்கினார்.  

நம் நாட்டு மக்கள் உயரும் விலைவாசி, வேலைவாய்ப்புக் குறைதல், வருமானம் குறைதல் மற்றும் வேலைஇல்லாத் திண்டாட்டம் கடுமையாக உயர்வது போன்ற பிரச்சனைகள் காரணமாக கவலைகளில் ஆழ்ந்துள்ளனர். இப்பிரச்சனைகளைக் களையத் தீவிரமான நடவடிக்கை எடுப்பதில் அரசு தோல்வியடைந்துள்ளது. உண்மையில் அரசு பின்பற்றும் கொள்கைகளால் இப்பிரச்சனைகள் மேலும் கடுமையாகின்றன. எனவே இந்த உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை அவர்கள் அயோத்தியில் பிரம்மாண்ட இராமர் கோயில் மீது திசை திருப்புகின்றார்கள். அவர்களைப் பின்பற்றுவோர் மதுராவில் ‘கிருஷ்ண ஜன்ம பூமி’ என்றும், வாரணாசியில் ‘ஞானவாபி’ என்றும், தாஜ் மகால் மீதே ஆபத்தான உரிமைகளைக் கோரும் அளவு புதிய பிரச்சனைகளைத் தூண்டிவிடுகின்றனர்.

ஆர்எஸ்எஸ் – பாஜக கூட்டத்தினர் வேறுபட்ட சமூகங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த புதிய பிரச்சனைகளைத் தொடர்ந்து உண்டாக்குவார்கள், தங்கள் பிரச்சாரத்தையும் தொடரவே செய்வார்கள். அவர்கள் சுவாமி விவேகானந்தர் போன்ற நமது பெருமக்களின் புகழைத் திருட்டுத்தனமாக அபகரிக்க குயுக்தியாகக்கூட முயற்சிப்பர். என்ன ஒரு பித்தலாட்டம்!

  முஸ்லீம் ஆட்சியின்போது பெருமளவு மதமாற்றம் நடைபெற்றதாக அபத்தமான அனைத்து வகையான குற்றச்சாட்டுகளையும் அவர்கள் கூறுவார்கள். அந்த அபத்தங்களுக்கு மாறாக, “எதிர்கால பாரதம்“ என்ற தனது கட்டுரையில் சுவாமி விவேகானந்தர் எழுதுவார் : ”முகமதிய ஆட்சியை ஏழைகளும் ஒடுக்கப்பட்ட மக்களும் ஒரு விடுதலை அனுபவமாக உணர்ந்தனர். அப்படித்தான் நம் மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் முகமதியர்கள் ஆனார்கள். இந்த மக்கள் அனைவரும் வாள் முனையிலும் பயமுறுத்தியும் (இஸ்லாமிய மதத்திற்குக்) கொண்டு செல்லப் பட்டார்கள் என நினைப்பது வெறும் பைத்தியக்காரத்தனம்.”

உச்சத்தில் வெறுப்புப் பிரச்சாரம்

  ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக சங்பரிவார் கூட்டம் மற்ற மதத்தைப் பின்பற்றுபவர்கள் குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை வெட்கமின்றி நடத்தி வருகின்றனர். அவர்களுடைய சீட கோடிகள் ‘தர்மத்தின் மாநாடு’ (தர்ம சன்சத்) என்ற பெயரில் அமைத்து நடத்தி வருகிறார்கள்; சமீபத்தில் 2021 டிசம்பர் 17 முதல் 20வரை ஹரித்துவாரில் ஒரு கூட்டமும், 2022 ஜனவரி 30ல் பிரயாக்ராஜ் (பழைய அலகாபாத்) இடத்தில் மற்றொன்றும் நடத்தப்பட்டன: அதன் ஒரே நோக்கம் மத நம்பிக்கை அடிப்படையில் மக்களிடையே பகைமை மற்றும் பிளவை ஏற்படுத்தி, தேர்தல் ஆதாயத்திற்காக வாக்காளர்களைப் பாரதூரமாகப் பிளவுபடுத்துவதுதான். ஹரித்துவாரில் பேசியவர்களின் பிற விஷமத்தனமான மற்றும் வகுப்புவாத ஆத்திரமூட்டும் பேச்சுகளைத் தவிர முஸ்லீம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என அறைகூவல் அழைப்பும் விடுத்துள்ளனர்.

பிரயாக்ராஜில் பேசியவர்கள் இந்தியா ஏற்கனவே ’இந்து ராஷ்ட்டிராதான்’ எனப் பிரகடப்படுத்தினர். ஏதாவது பிற மதத்தைச் சேர்ந்த சில அமைப்புகள் அத்தகைய சொற்பொழிவுகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தால், காவல் துறை மற்றும் தேசியப் புலனாய்வு முகமை இந்நேரம் பல மக்களைத் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்திருக்கும். ஆனால் அதை நடத்திய ‘தர்ம சன்சத்’ என்று அழைத்துக் கொள்பவர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு நெருக்கமானவர்கள் ஆயிற்றே. எனவே அவர்களுக்கு ‘மேலிட’ப் பாதுகாப்புக் கிடைக்கிறது. இப்படிப்பட்ட நடத்தையையும் கொள்கையையும் இன்னமும் பிரச்சாரம் செய்து ஆட்டம் போட முயற்சி செய்யும் ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல், சுவாமி விவேகானந்தர் மற்றும் அவர் கொள்கைகளை மதித்துப் போற்றுகிறோம் என்பது ஏமாற்று பொய் பித்தலாட்டம் தவிர வேறில்லை.

காந்திஜி

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தேசத்தின் சூழ்நிலையை நஞ்சாக்கி, முஸ்லீம்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை, தனது மனிதத்தன்மையற்ற கொடூரமான இந்துத்துவா கொள்கைகளைப் பரப்புவதன் மூலம் நடத்தி வருகின்றன. அவர்கள் காந்திஜியையே அபகரிக்க முயல்கிறார்கள்; மகாத்மா காந்திஜி கொல்லப்பட்டது வேறு யாராலும் அல்ல, இந்துத்துவக் கோட்பாட்டைப் பின்பற்றும் ஒருவராலேயே கொல்லப்பட்டார்.

இந்துக்களுக்கு இந்தியாவின் மீது சிறப்பு உரிமை இருப்பதாக ஆர்எஸ்எஸ் கோருவது போல அல்லாமல், காந்திஜி எந்த மத நம்பிக்கை உடையவரானாலும் மக்கள் அனைவருக்கும்

தேசம் மற்றும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்திலும் சம உரிமை இருப்பதாக  காந்திஜி நம்பினார். காந்தியின் நீதிபோதனை சார்ந்த பார்வை மற்றும் அவர் அரசியலில் பின்பற்றியது இரண்டும் இந்த அனைவரையும் உள்ளடக்கிய இந்தியக் கருத்தாக்கத்தை உருவகப்படுத்தியது. இது தொடர்பாக 1945ல் பதிப்பிக்கப்பட்ட அவரது கட்சியின் “ஆக்கபூர்வமான திட்டம்” பற்றிய சிறு பிரசுரத்தை நாம் பரிசீலிக்கலாம். அந்தத் திட்டத்தின் முதல் அம்சம் “வகுப்பு ஒற்றுமை”.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய சில மாதங்களுக்குப் பிறகு 1915 ஏப்ரலில் வேறுபட்ட பல்வேறு மதப் பின்னணியிலிருந்து வந்த மக்களிடையே டெல்லியில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். காந்தியை உருவாக்கிய அவரது

குருநாதர் கோபால கிருஷ்ண கோகலே புனாவில் சில வாரங்களுக்கு முன்புதான் இறந்தார். காந்தி கூறினார் : “கோகலே ஓர் இந்து, ஆனால் சரியான மாதிரி இந்து. ஒரு முறை இந்து சன்னியாசி ஒருவர் அவரிடம் வந்து ஒரு யோசயை முன் வைத்தார்; அது, இந்து அரசியல் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதுடன், முகமதியர்களை அடக்கியும் வைக்கும்; அந்தத் தன்னுடைய யோசனையைப் பல்வேறு மதரீதியான காரணங்களுடன் விரிவாக முன் வைத்து வற்புறுத்தினார். பின்வரும் வார்த்தைகளில் கோகலே பதில் கூறினார்: “ஓர் இந்துவாக இருக்க வேண்டுமானால், நீங்கள் விரும்புவதுபோல நான் நடந்தே ஆக வேண்டும் என்றால், தயவு செய்து வெளிநாடுகளில், ‘நான் ஓர் இந்து அல்ல’ எனப் பதிப்பித்து வெளியிடுங்கள்!” என்றார்.

‘ஆர்எஸ்எஸ் முழுமையாக ஒரு பாஸிச அமைப்பு’ –வினோபா பாவே

            காந்திஜி கொல்லப்பட்ட சில வாரங்களில் அவரைப் பின்பற்றுவோர் குழு ஒன்று அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்பதை விவாதிக்கச் சேவா கிராமத்தில் சந்தித்தது. இந்த விவாதங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புக் குறித்த அம்சமும் வந்தது; அது, காந்திஜியைக் கொன்ற கொலையாளி கோட்ஸே ஓர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்பதால் மட்டுமே அல்ல; ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்சங்க்சாலக் (முதன்மைத் தலைவர்) கோல்வால்கர், காந்திஜி கொலைக்கு அடுத்த வந்த சில நாட்களில் விஷமத்தனமான வகுப்புவாத உரைகளை நிகழ்த்தி இருந்தார் என்பதன் காரணத்தாலேயே சேவாகிராமக் கூட்டத்தில் விவாதத்திற்கு வந்தது.

            1948 மார்ச் மாதம் சேவாகிராமத்தில் நடைபெற்ற காந்தியர்கள் கூட்டத்தில் (பூமிதான இயக்கத் தலைவர்) வினோபா பாவே உணர்ச்சி மேலிட மனம் வெதும்பிக் கூறினார்: “நான் பிறந்த (சித்பவன் பிராமணர்கள் என்ற) மராட்டிய பிராமண வகுப்பு இப்போது மறைந்து விட்டாலும், என் சக சாதியினர் செல்வாக்கில் இருக்கும் ஓர் அமைப்பு (ஆர்எஸ்எஸ்) ஆழமான நம்பிக்கை இன்மைக்கு ஆளாகி விட்டது”. ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சித்துப் பாவே

கூறினார்: “அந்த அமைப்பு நாட்டில் குறுக்கும் நெடுக்குமாக ஆழமாக வேர் ஊன்றி பெரும் திறனுடன் பரவி உறுதியாக நிற்கிறது. அதன் குணம் முழுமையாகப் பாஸிசமாக உள்ளது. அந்த அமைப்பின் உறுப்பினர்கள் மற்றவர்களை நம்புவதில்லை. காந்திஜியின் கொள்கை உண்மையைச் சார்ந்து இருக்கிறது; இந்த நபர்களின் கொள்கை உண்மை அல்லாத பொய்ம்மையைப் பற்றி நிற்கிறது. இந்தப் பொய்ம்மை அவர்களின் உத்தி மற்றும் அவர்களின் தத்துவத்தின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த ஒரு பகுதி” என்றார்.

            காந்தி தலைமையேற்ற தேசிய இயக்கத்திற்கும் இந்துத்துவ ஆதரவாளர்களின் இயக்கத்திற்கும் இடையே இருக்கும் ஆகப் பெரும் இடைவெளியை வினோபா தொடர்ந்து விளக்கினார். அவர் இவ்வாறு கூறினார்: “ஆர்எஸ்எஸ் அமைப்பின் இயங்குமுறை எப்போதும் நம்முடைய முறைக்கு எதிரிடையானது. (விடுதலைப் போராட்டத்தில்) நாம் சிறைக்குச் சென்றபோது, அவர்களது கொள்கை வெள்ளை ஆட்சியின் இராணுவம் அல்லது போலீஸ் படையில் சேர்வதாக இருந்தது. இந்து – முஸ்லீம் கலவரம் நடக்கக்கூடிய எந்த இடத்திலும் எப்போதும் அவர்கள் விரைவாக வந்து குதித்து விடுவார்கள். இவர்களது இந்நடவடிக்கைகளில் எல்லாம் அந்த நாளின் ஆட்சி (பிரிட்டிஷ் ஆட்சி) தனக்கு அனுகூலமாக இருக்கக் கண்டது; வெள்ளை ஆட்சி அவர்களுக்கு ஆதரவு தந்து உற்சாகப்படுத்தியது; இப்போது நாம் அதன் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்” என்றார் வினோபா பாவே.

நன்றி: நியூஏஜ் (மார்ச் 29 –ஜூன் 4)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்


 

 
 



 

Thursday, 26 May 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 63 -- சவுகத் உஸ்மானி

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 63

          சவுகத் உஸ்மானி –

மீரட் சிறையிலிருந்து இரண்டு முறை

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டவர்

                                                              --அனில் ரஜீம்வாலே

            சவுகத் உஸ்மானி வழக்கத்திற்கு மாறான ஒரு புரட்சியாளர் மற்றும் அசாதாரணமான வர்ணச் சிதறல் காட்சி (கிளைடோஸ்கோப்) அனுபவங்களுடன் கூடிய கம்யூனிஸ்ட்.  அவரது இயற்பெயர் மௌலா பக்ஷ் உஸ்தா. 1901 டிசம்பர் 20ல் இராஜஸ்தான் பிக்கானீர் நகரத்தில் ஓர் உஸ்தா ராஜபுத்ர –முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். அந்தக் குடும்பம் பிக்கானீரின் புகழ்பெற்ற கலையான மிக நுட்பமான ஓவிய, கலைப் பொருட்கள் செய்வதில் ஈடுபட்டதால் ‘உஸ்தா’ என்ற பெயர். அக்கலைஞர்கள் நகாஷி, மனோட்டி மற்றும் மீனாகரி நுட்பங்களைப் பயன்படுத்தினர்.

[நகாஷி (naqqashi) முறையில் ஓவியம் தீட்ட வேண்டிய உலோகப் பரப்பில் வடிவத்தை டிரேஸ் செய்து மேலோட்டமாக வரைந்து திட்டமிடுவர். பின்னர் அந்த உலோகப் பரப்பில் சுத்தியலால் அடித்தும் செதுக்கியும், தோண்டியும் வலைப் பின்னல் (நெட்) போன்ற பின்னணியில் ஓவியத்தை அமைப்பர். பல நாட்கள் உழைத்து மிகுந்த நேர்த்தியும் சிக்கலான நுட்பமும் நிறைந்த கலைப் படைப்பை உருவாக்குவார்கள். முகலாய கலை படைப்பை ஒத்த பிக்கானீர் ஓவியங்கள் அதனினும் நுட்ப வேலைபாடுகள் மிக்கது.

        மனோட்டி (Manoti) புடைப்பு வடிவத்தில் மெல்லிய தங்க மேற்பரப்பு உடையன. அரண்மனை, பெரிய மாளிகைகளின் சுவர்கள், விதானம், கோட்டைத் தூண்களில் மட்டுமல்லாமல் பயன்படு பொருட்களின் மேலும்  நிபுணத்துவம் உடைய கலைஞர்கள் இவற்றைத் தீட்டி உருவாக்குவார்கள்.

            மீனாகரி (Meenakari) என்பது உலோகம் மற்றும் பீங்கான் பரப்புகளின் மேல் வர்ணங்களையும் ஓவியம் தீட்டுவதில் எனாமலிங் முறையையும் பயன்படுத்துவது. –இணையத்தில் தேடி இணைத்தது]

      மேற்கண்ட நுட்பங்களைப் பயன்படுத்தி மிகச் சிறிய வடிவத்தில் சிக்கலான பெரும் நுட்பமான கலை படைப்புகளைத் தங்க முலாம், ஒளிவீசும் கற்களைப் பதித்து உண்டாக்குவதில் (படம்) அக்குடும்பத்தினர் விற்பன்னர்கள் என்பதால் உஸ்தாத் என அழைக்கப்பட்டனர்.

     இளம் பருவத்திலேயே சவுகத் பெற்றோர்களை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். பாட்டியார் சிறுவன் சவுகத்துக்குத் தான் வாழ்ந்து சந்தித்த 1857 கிளர்ச்சியைப் பற்றி கதை கதையாய் சொல்லியதைக் கேட்டு சவுகத் உருவானார். முதலில் மசூதி பள்ளியில் கல்வியைத் தொடங்கியவர் பின்னர் ஜெயின் பள்ளியிலும், அதன் பிறகு துன்கர் நினைவு ஆங்கிலக் கல்லூரியிலும் படித்தார். பிக்கானீர் பிரிட்டிஷுக்கு விஸ்வாசமான ஒரு சமஸ்தான அரசு.

            அவருடைய பெயர் முகமது சவுகத் என மாற்றப்பட்டது. அவரே பிறகு ‘முகமது’ என்ற முன்னொட்டை விட்டுவிட்டு உஸ்மான் (உஸ்தாத்) என்ற தனது பாட்டனாரின் பெயரைத் தழுவினார். பிறகு அதுவே உஸ்மானி என்றாகி இவ்வாறாக இப்போது சவுகத் உஸ்மானி என அவரது வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது.

தேசியவாதச் செல்வாக்கு

            மையநூலகத்தில் கிடைத்த ‘பம்பாய் கிரானிகல்’, ’இன்டிபென்டெண்ட்’ முதலிய தேசியப் பத்திரிக்கைகளைச் சவுகத் படித்தார்.  (1916 – 1921ல் கவர்னர் ஜெனரல் மற்றும் இந்திய வைஸ்ராய் ஆக இருந்த) லார்டு செம்ஸ்போர்டு பிக்கானீர் விஜயம் செய்தபோது, 9வது படித்துக் கொண்டிருந்த சவுகத் மற்றும் மற்றவர்களுக்குக் கோட்டைக்கு வரும் தொலைபேசி அழைப்புகளைப் பெறும் பணி, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அளிக்கப்பட்டது. சிலர் அந்நிகழ்வை மதச்சாயம் பூசி கல்லூரியில் அசைவ உணவு பிரச்சனையாக்க முயன்றனர். டாக்டர் சம்பூரானந்த் முதல்வராக வந்த பிறகு தேசியக் கருத்துகளைப் பரப்ப உதவினார்.

            சவுகத் தேசியவாத இலக்கியங்களை விநியோகித்தார். 1919ல் தேர்வுக்காகச்  சவுகத் அஜ்மீர் சென்றபோது அங்கே திலகரும் மற்றவர்களும் கலந்து கொண்ட அரசியல் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சவுகத் தீவிரமாக அதில் பற்கேற்றார்.

       பூரி (Bhuri) என்ற பெண்ணுடன் மிக இளம் வயதிலேயே சவுகத்துக்குத் திருமணம் நடந்து, 18 வயதிலேயே உஸ்மான் கனி என்ற மகனும் பிறந்தான். சவுகத்தின் தாயின் பெயரும்கூட பூரி.

‘ஹிஜரத்’தில் பங்கேற்றல்

       1918 –20ம் ஆண்டுகளில் நடந்த ஆப்கான் --பிரிட்டிஷ் போரில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று, இந்திய விடுதலை இயக்கத்திற்குத் தார்மிக ஆதரவைப் பிரகடனப்படுத்தியது. ஆப்கானிஸ்தானின் அமீரான (அரசுத் தலைவர்) அமானுல்லா கான் பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் வாழப் பிடிக்காத முஸ்லீம்களை ஆப்கானிஸ்தான் வருமாறு அழைத்தார். முஸ்லீம்களுக்கு மத்தியில் அப்போது ‘ஜிகாத்’ அல்லது (பிரிட்டானியர்களுக்கு எதிரான) புனிதப் போர் அல்லது நாட்டைவிட்டு வெளியேறி  இஸ்லாமிய தேசம் ஒன்றிற்குச் செல்வது என்ற இயக்கம் இருந்தது. இது ‘ஹிஜ்ரத்’ (அரபு வார்த்தை, ‘புலம்பெயர்தல்’) என அறியப்படுகிறது. அதன்படி சுமார் 36ஆயிரம் மக்கள் (தாங்கள் கொண்ட இஸ்லாமிய கொள்கைகளைப் பின்பற்றுவதற்காக) ஆப்கானிஸ்தானுக்குச் சென்றனர். 1918 –20 காலகட்டத்தில் நடந்த கிலாஃபத் இயக்கம் முஸ்லீம்கள் மத்தியில் தேசிய உணர்வை ஊட்ட உதவியது. (கிலாஃபத் என்ற சொல்லுக்குப் பொதுவாக ‘வாரிசு’ மற்றும் குறிப்பாக நபிகளார் மறைவுக்குப் பிறகு ‘இஸ்லாமிய சமூகத்தின் தலைமை’ என்பது பொருள்.)

   சவுகத் உஸ்மானி மூன்றாவது புரட்சிகர ‘ஹிஜ்ரத்கள்’ குழுவில் சேர்ந்து கொண்டார். ‘அரசியல் மாநாடு ஒன்றில்’ கலந்து கொள்ள டெல்லி செல்வதாகத் தனது குடும்பத்தினருக்கு ஒரு சிறிய கடிதம் எழுதிவிட்டு 1920 மே 7ம் நாள் புகைவண்டி மூலம் ஃபெரோஸ்பூருக்கு ஒரு ‘மோச்சி’யாக (காலணி செய்பவராக) மெல்ல புறப்பட்டு விட்டார்.

ஆப்கானிஸ்தானத்திற்குள் நுழைதல்

            பெஷாவரில் ஹிஜ்ரத் கமிட்டியின் விருந்தினர் இல்லத்திற்குச் சென்ற அவர், ரஃபிக் அகமது, ஃபாஸல் இலாஹி மற்றும் ஃபெரோஜுத்தின் இவர்களுடன் ஆப்கானிஸ்தானத்தின் ஜலாலபாத் நகருக்குள் நுழைந்தார்.

       எல்லை வாயிலில் இருந்த ஒரு சீக்கிய வீரர் ‘ஒரு நாள் இந்தியப் படை, விடுதலைப் போராடடத்திற்கு ஆதரவாக நிற்கும்’ என வாழ்த்தினார். புலம்பெயர்ந்தவர்களில் (எமிகிரேர்ஸ்) மியான் அக்பர் ஷா, அப்துல் மஜீத், ஃபெரோஜுதீன் மன்சூர் முதலான புகழ்பெற்ற பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அவர்கள் ஆயுதம் பெறுவதற்காக ஜெனரல் நாடீர் கானைச் சந்தித்து, இரண்டு வாரங்கள் தங்கி பிறகு காபூலுக்குக் குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் சிறு ‘டோங்கா’களில் புறப்பட்டபோது 50ஆக இருந்த எண்ணிக்கை 300ஆக உயர்ந்தது. அக்பர் கான் குரேஷியைத் தலைவராகக் கொண்டு அயல் மண்ணில் ஒரு குழு (எக்ஸைல் கமிட்டி) அமைக்கப்பட்டது. பெஷாவர் சதி வழக்கில் அவர்தான் முதலில் கைது செய்யப்பட்டார்.

            இராணுவப் பயிற்சி அந்தக் குழுவினருக்கு உதவியது; 40 மைல்கள் நடந்து ஜெபால்-உல்-சிராஜ் நோக்கிப் புறப்பட்டவர்கள் பின்னர் மேலும் 300 மைல்கள் உறைய வைக்கும் குளிரில் கிராமங்களின் வழியாக, மலைகளும் பனி பொழியும் மலைத் தொடர்கள் நிறைந்த மிக மிகக் கடினமான பாதைகளை கடந்து (ஆப்கானிஸ்தானத்தின் நான்காவது பெரிய நகரமான) மஸார்-இ-ஷரீப் அடைந்தனர். வழியில் சுட்டுப் பொசுக்கும் பாலைவனத்தையும் கடந்தனர். அந்நகரிலிருந்து ஆப்கான் பக்கத்தைச் சார்ந்த ஆக்சஸ் நதியை அடைந்தனர். நதியின் எதிர்க்கரையில் சோவியத் யூனியனின் தப்ரீஸ் (கிழக்கு அஜர்பைஜானின் தலைநர்) இருந்தது.

சோவியத் யூனியனில்

      ஆப்கான் அரசு எதிர்த்தாலும், மஸார்-இ-ஷரீப் நகரில் இருந்த சோவியத் தூதரகம் மற்றும் நகரின் கவர்னர் உதவிட ஆக்சஸ் நதியைக் கடந்து சோவியத் யூனியனுக்குள் சென்றனர். ரெவ்காம் அல்லது ரெவலூஷனரி கமிட்டி அவர்களை வரவேற்றுத் தங்குவதற்கு முகாம் ஒதுக்கித் தந்தனர். முதன் முறையாகச் சம மனிதர்களாக அவர்கள் நடத்தப்பட்டனர். 

      எதிர் புரட்சி உள்நாட்டுப் போர் காரணமாக தப்ரீஸ் துண்டிக்கப்பட்டிருந்தது. சிலர் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது புறப்பட விரும்பினர்; எனவே குழுவினர் படகு மூலம் கிர்கி நகருக்குச் செல்ல வேண்டி வந்தது; எதிர்புரட்சியாளர்கள் அவர்களை சூழ்ந்து கைது செய்தனர்.

 அடித்துத் துவைத்து, சாட்டையால் விளாசி பல வகைகளில் கொடுமைபடுத்தப்பட்டனர். கனமான சங்கிலிகளுடன் வெயிலிலும் குளிரிலும் பல மைல்கள் ஓட வைக்கப்பட்டனர். இறுதியில் கடத்திச் சென்றவர்கள் 82 முகாஜீர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற முடிவெடுத்தனர். (முகாஜீர் அரபு வார்த்தைக்குப் புலம்பெயர்ந்தவர் என அர்த்தம்). எங்கோ கேட்டத் துப்பாக்கிச் சத்தம் மரண தண்டனை நிறைவேற்ற வந்தவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. கைதிகளை மீண்டும் கைகளிலும் கால்களிலும் சங்கிலிகளைப் பூட்டி மிக மோசமான நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு அடைத்து வைத்து இரக்கமற்று அலைக்கழித்தனர். கழுத்துகளில் இரும்பு வளையங்களையும் கைகளில் விலங்குடனும் மிக மிக மோசமான அடிமைத்தனக் கொடுமைகளை அவர்கள் அனுபவித்தனர்.

      இதன் மத்தியில் போல்ஷ்விக்குகள் பொக்காராவைக் கைப்பற்ற சூழலின் சமநிலை மாறியது, மொத்தமாக 57 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

கிர்கி சண்டை : செஞ்சேனையில்

    விரைவில் அந்தக் குழு கிர்கியில் போல்ஷ்விக்குகளுடன் செஞ்சேனையில் இருந்தனர். அவர்களில் சிலர் எச்சரிக்கைகளை மீறி துருக்கி புறப்பட்டனர். கிர்கி எதிர்புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது. சவுகத் உட்பட 36 இந்தியர்கள் செஞ்சேனையுடன் சேர்ந்து போரிட்டனர். அவர்களோ 300 வீரர்கள் மட்டும், எதிர்ப்புரட்சியாளர்களான ‘வெள்ளையர்கள்’ எண்ணிக்கையோ சுமார் 5000. கிர்கியின் இந்தியப் பாதுகாவலர்களின் வீரம் எதிர்ப் புரட்சியாளர்களாலும் மெச்சப்பட்டது. அந்தப் பகுதியை விரைவில் செஞ்சேனை விடுவித்தது.

   ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தியர்கள் புகாரா, பின்னர் தாஷ்கண்டிற்கும் புறப்பட்டனர். அங்கிருந்த ‘இந்திய இல்லம்’ மற்றும் ‘புக்காரா இல்ல’த்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அபானி முகர்ஜி, முகமது அலி செப்பாசி, எம் என் ராய், MPBT ஆச்சார்யா, அப்துல் ரப் மற்றும் பிறரை இந்தியன் ஹவுஸில் ஒரு கூட்டத்தில் சவுகத் உஸ்மானி சந்தித்தார்.

‘தாஷ்கண்ட் சிபிஐ’ அமைப்பு 

          ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி’ அமைப்பதற்காக 1920 அக்டோபரில் தாஷ்கண்ட் நகரில் இந்தியப் புரட்சியாளர்கள் சிலரின் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது; தவறான தயாரிப்புகளுடன் எடுக்கப்பட்ட அத்துணிகர முயற்சி எடுபடாது தோல்வியடைந்தது. ராய் அதில் கலந்து கொண்டிருந்தாலும், அவருடைய நினைவலைகள் நூலில் அந்த யோசனைக்கு எதிராகத் தான் இருந்ததாக எழுதியுள்ளார். அதன் நோக்கங்கள் மற்றும் இலக்குகள் பற்றி எவருக்கும் தெளிவு இல்லை. சவுகத் உஸ்மானி அதில் சேரவில்லை. அவர்களில் பலருக்கும் சோவியத் செஞ்சேனை உதவியுடன் இந்தியாவை விடுவிப்பது பற்றிய சிறுபிள்ளைத்தனமான உடோபியக் கனவுகள் கருத்தாக இருந்தன! அவர்களை ஊக்கப்படுத்தாது யோசைனையைக் கைவிடச் செய்ய சோவியத் தோழர்கள் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளும் செய்தனர்.

ராயும் இத்தகைய சாகசத் திட்டங்கள் சிலவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். உஸ்மானி மற்றும் 15 பேர் இந்திய இராணுவப் பள்ளியில் சேர்ந்தனர். ஜெனரல் ப்ளுகேர் (General Blukher) போன்ற இராணுவ கமாண்டர்கள் அவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.

1921 ஜனவரி தொடக்கத்தில் உஸ்மானி மாஸ்கோவின் அரசியல் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். புகழ் பெற்ற ஆளுமைகள் ஜப்பானின் Sen Katayama, பிரிட்டனின் Tom Quelch, பின்லாந்தின் Otto Kuusinen, மற்றும் சோவியத் யூனியனின் Willie Munzenburg, Borodin போன்றவர்கள்  அங்கிருந்தனர். என்வர் பாஷா கூட விஜயம் செய்தார்.

மாபெரும் கம்யூனிஸ்ட்டான லெனினைச் சவுகத் உஸ்மானி பல முறை

சந்தித்தார், அவரது அலுவலகத்திற்கு ஒரு குழுவாகச் சென்றார். (அந்தச் சந்திப்புப் பற்றி) உஸ்மானி கூறுகிறார் : “லெனினைப் பற்றி எனக்குக் கிடைத்த  மிக்க ஒளிபொருந்திய நினைவு யாதெனில், மின்னிச் சிமிட்டும் கண்களுடன், வெல்லும் புன்னகையும், வெறுக்க முடியாத காந்தமாய்க் கவர்ந்து ஈர்க்கும் தன்மையுடைய ஒரு மனிதர் மற்றும் குழந்தைபோல ஒருவர்” என்று வர்ணித்துள்ளார்.

இந்தியாவுக்குத் திரும்புதல்

    விரைவில் மாஸ்கோவில் இருந்த கிழக்கத்தியப் பாட்டாளிகள் பல்கலைக்கழகத்தில் (University of the Toilers of East) உஸ்மானி சேர்ந்தார். 1921ல் அங்கு மாஸ்கோவில் நடைபெற்ற இந்தியப் புரட்சியாளர்களின் ‘உச்சி மாநாடு’ கூட்டம் அவர்களிடையே மூன்று குழுக்கள் இருப்பதைக் காட்டியது. எம்என் ராயுடன் கடுமையான வேறுபாடுகள் வளர உஸ்மானி அவரைவிட்டு விலகத் தொடங்கினார்.

      அங்குத் தங்கியிருப்பதில் பெரும் பயன் இல்லாததால் உஸ்மானி இந்தியா திரும்ப விரும்பினார். ஸ்டாலின் உட்பட பலரையும் இதன் பொருட்டு சந்தித்தார். செவஸ்ட்டோகோல், பாகு, இரான் முதலிய நாடுகள் வழியாக நீண்ட பயணத்தை மேற்கொண்டு 1922 ஜனவரி 22ல் பம்பாய் திரும்பினார், உடனடியாகத் தலைமறைவாகவும் சென்றார். அவருடைய பெயரைக் கூறாது விட்டுவிட்டு அவரது அறிக்கைகள் பதிப்பிக்கப்பட்டதைக் கண்டு வியப்படைந்தார்! கம்யூனிஸ்ட் இலக்கியங்களைப் பரப்பும் பணியை அவர் மேற்கொண்டார். காசி மற்றும் கான்பூருக்குச் சென்றவர், டாக்டர் சம்பூர்னானந்த் மற்றும் கணேஷ் சங்கர் வித்யார்த்தியைச் சந்தித்தார்; பெர்ஷியா சென்றவர் நான்கு மாதங்களுக்குப் பிறகு உடனடியாகத் திரும்பினார். புரட்சிகர மற்றும் மார்க்ஸிய இலக்கியங்கள் கிடைப்பதில் தனக்கு உஸ்மானி உதவியதாக சம்பூர்னானந்த் குறிப்பிட்டுள்ளார்.

    வித்யார்த்தி அவரைக் கான்பூரில் ஒரு முஸ்லீம் பள்ளியில் ஆசிரியராகப் பணியமர்த்தச் செய்தார். ஆசிரியர் பணி செய்து கொண்டே இரகசியமாகத் தொழிலாளர்கள் மத்தியிலும் செயல்பட்டார். மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களைத் திரட்டக் கல்கத்தா, அலிகார் மற்றும் ரோஹ்டக் புறப்பட வேண்டியிருந்தது. ரோஹ்டக்கில் இராணுவ வீரர்களைக் கவர்ந்து ஈர்த்தார். 1923ல் கைது செய்யப்பட்டவர் மிக மோசமான நிலைமையில் பெஷாவர் சிறைக்கும் பின்னர் கொடுமைக்குப் பெயர்போன அப்போட்டாபாத் சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டார்; அங்கே கைகளில் விலங்கும் கழுத்தில் இரும்பு வளையங்களும் மாட்டி தரையில் இழுத்துச் செல்லப்படுவது வழக்கம்.

   1924 மார்ச் மாதத்தில் கான்பூர் சதிவழக்கின் கீழ் அவர் கான்பூருக்கு மாற்றப்பட்டார்; அங்கு எஸ் ஏ டாங்கே, முஸாஃபர் அகமது மற்றும் நளினி குப்தா ஆகியோரைச் சந்தித்தார். 27 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட உஸ்மானிக்குக் கட்டாயப்படுத்தி உணவு திணிக்கப்பட்டது. சிறைக் கைதிகளில் கழுத்தைச் சுற்றி மரப்பலகைகளைக் கட்டப்பட்டன. 1927ல் அவர் விடுதலையானார். டாங்கே மற்றும் பிறர் உரையாற்றிய ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார்; மேலும் 1927ல் சென்னையில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

      மெட்ராஸில் எம் சிங்காரவேலு இல்லத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் குழுக்களின் கூட்டங்களில் கலந்து கொண்டார். சிங்காரவேலுவுடன்தான் அவர் தங்கி இருந்தார்.  

1928 மாஸ்கோ, காமின்டெர்ன் காங்கிரஸ் மாநாட்டில்

           ஸ்ரீனிவாச அய்யங்கார் மற்றும் மதன் மோகன் மாளவியா உதவியுடன் 1928ல் மாஸ்கோ புறப்பட்ட உஸ்மானியின் பயணச் செலவுகளைக் கணேஷ் வித்யார்த்தியும் மற்றவர்களும் ஏற்றனர். காமின்டர்னின் ஆறாவது காங்கிரஸில் உஸ்மானி பங்கு பெற்றது மட்டுமல்ல, அவர் தலைமைக் குழுத் தோழர்களில் ஒருவராக ஸ்டாலின், க்ளாரா ஜெட்கின், டோக்லியாட்டி (Ercoli’), எபெர்ட் (ஜெர்மனி), லவ்ஸ்டோன் (அமெரிக்கா) மற்றும் பிற தலைவர்களுடன் அமர்ந்திருந்தார். புக்காரின் அதிபராக இருந்தார். அந்த நேரத்தில் உஸ்மானிக்கு வெறும் 27 வயதுதான், அவருக்குச் ‘சிக்கந்தர் சூர்’ என்ற (சிறப்புப்) பெயரைத் தழுவியிருந்தார். காங்கிரஸின் பல்வேறு அமர்வுகளிலும் தீவிரமாகப் பங்கேற்றார். ‘காலனியத்துவ நீக்கம் பற்றிய அறிக்கை’யை (‘Theses on Decolonization) எதிர்த்தார். (காலனியத்துவ நீக்கம் என்பது பொய்யாக விடுதலைக்கு மாற்றாக வைக்கப்படுவது. விடுதலைக்குப் பிறகும் பழைய காலனிய நாடுகளை ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட திட்டம் என்பது எதிர்ப்பிற்கான காரணங்களில் ஒன்று -–இணைத்திலிருந்து மொழிபெயர்ப்பாளர் திரட்டியது)

     ஐரோப்பாவில் நீண்ட பயணம் செய்த பிறகு 1928 டிசம்பரில் பம்பாய் திரும்பினார். அவருக்கு டாங்கேயுடன் நெருங்கிய தோழமை வளர்ந்திருந்தது.

    1928 டிசம்பர் இறுதியில் கல்கத்தாவில் விவசாயி தொழிலாளி கட்சி (PWP) மற்றும் சிபிஐ கூட்டங்களில் உஸ்மானி கலந்து கொண்டார். அங்கே சிபிஐ செயற்குழு கூட்டம் அவருக்கு வடக்கு–மேற்கு எல்லை இரயில்வே தொழிலாளர்களைத் திரட்டும் பொறுப்பை வழங்கியது.

1929, மீரட் கைதியாக

            1928 இறுதியில் கல்கத்தா ஏஐசிசி அமர்வில் கலந்து கொண்டார். அங்கே ‘இராணுவச் சீருடை’யில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருந்தார். பல இடங்களில் அவர் பேசினார். 1929 மார்ச் 20ல் பம்பாயிலிருந்து டாங்கே, காட்டே மற்றும் மற்றவர்களுடன் கைது செய்யப்பட்டவர் விக்டோரியா டெர்மினஸ் ஸ்டேஷனிலிருந்து மீரட் சதி வழக்கில் மீரட் கொண்டு வரப்பட்டார். உஸ்மானி அவருடைய அறிக்கையில் கூறினார்: “மார்க்ஸிசம் –லெனினியம் கொள்கை எனக்கு ஏற்புடையதாக உடன்படுகிறேன்; நான் ஒரு கம்யூனிஸ்ட். சோவியத் யூனியனின் கம்யூனிட்களின் படையணியில் சேர்ந்தேன்…” அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது, ஆனால் 1935 ஜூலை 1ம் தேதியே விடுதலையானார்.

 மீரட் சிறையிலிருந்து பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டி

       அவருடைய புகழையும், போராட்ட உணர்வையும் உணர்ந்த கிரேட் பிரிட்டனின் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) சவுகத் உஸ்மானியைக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தல்களில் நிறுத்தியது; அப்போது மீரட் சிறையில் இருந்த உஸ்மானியும் தேர்தலில் போட்டியிடச் சம்மதித்தார். அவர் ஸ்பென் பள்ளத்தாக்கு (Spen Valley) தொகுதியிலிருந்து போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்திற்கான அவரது மனு நிராகரிக்கப்பட்டது. தேர்தல்களில் பில்லி பிரைன் அவரது பிரதிநிதியாக இருந்தார்.

1931ல் மீரட் சிறையிலிருந்து உஸ்மானி மீண்டும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு தென்கிழக்கு செயின்ட் பான்கிராஸ் தொகுதியிலிருந்து போட்டியிட்டார். சென்ற முறையைவிட 50 சதவீதம் அதிகமாக இம்முறை 75000 வாக்குகள் பெற்றாலும், அவர் மீண்டும் தோல்வி அடைந்தார்.

ஆர்எஸ்பி கட்சியில்

     மீரட் சிறையிலிருந்து விடுதலையான பின் உஸ்மானி BB&C இரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தில் பணியாற்றினார். 1940 ஜூலை 14ல் ஆக்ராவில் கைது செய்யப்பட்டவரைத் தியோலி முகாம் பின்னர் பெய்ரைலி, ஃபட்டேஹார்க் முதலான சிறைகளுக்கு மாற்றி 1945 ஜனவரி 8ல் விடுதலை செய்தனர். 1946 RIN கப்பற்படை கிளர்ச்சியின்போது தேசியக் கடலோடிகள் சங்கத்திற்கு (National Seafarers’ Union) பொதுச் செயலாளர் ஆனார். புரட்சிகர சோஷலிட் கட்சி (RSP) உறுப்பினராக முயன்றார், ஆனால் கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கண்டார். ஆர்எஸ்பி தலைவர்கள் வேண்டுகோளை ஏற்று பாக்கிஸ்தான் சென்ற அவர், பாக்கிஸ்தான் குடிமகனாக மறுத்துவிட்டார். இந்தியா திரும்ப அவர் அனுமதிக்கப்படாததால் 1952 செப்டம்பரில் லண்டன் சென்றவர், 72 நாட்கள் கழித்து பம்பாய் திரும்பினார். ஒரு நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றியவர் மீண்டும் 1955ல் லண்டன் சென்று, சில சில்லறை வேலைகளைச் செய்தபடி, நாள்தோறும் பிரிட்டிஷ் மியூசியம் நூலகம் சென்று ஆய்வுப் பணிகளைத் தொடங்கினார்.

பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியில்

            உஸ்மானி பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியில் சேர்ந்து அதன் செயற்குழுவிலும் இடம் பெற்றார். தொழிலாளர் கட்சி மேடையைப் பயன்படுத்தி கோவா விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டிப் பிரச்சாரம் செய்தார். அதே நேரத்தில் தனது ஆய்வையும்1961வரை தொடர்ந்தார்; இதன் விளைவாய் “பழங்கள், காய்கறிகள், கொட்டைகளின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் உணவு குணப்படுத்துகிறது” என்ற புத்தகம் வெளிவந்து பரவலாகப் பாராட்டப்பட்டது. பிரிட்டிஷ் குடியுரிமை வழங்க முன்வந்தபோதும் அதை மறுத்து 1962ல் இந்தியா திரும்பினார். பிறகு 1964ல் எகிப்து நாட்டின் கெய்ரோவுக்குச் சென்றவர் 1974வரை அங்கே இருந்தார்; அப்போது ‘எகிப்து கெஜட்’, ஆப்ரிக்க – ஆசிய மக்கள் ஒருமைப்பாட்டு அமைப்பின் (AAPSO) கலாச்சார மற்றும் அரசியல் பத்திரிக்கையான ‘லோட்டஸ்’ முதலான பத்திரிக்கைகளில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார். பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO)வின் அல் ஃபத் (Al Fatah) அமைப்பிலும் பணியாற்றினார்.

சிபிஐ-க்குத் திரும்புதல்

            1974ல் இந்தியா வந்ததும் உஸ்மானி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அவருடன் மீரட்டில் சக கைதியாக இருந்த டாக்டர் அதிகாரியுடன் சில காலம் அஜாய் பவனில் பணியாற்றினார். அவருடைய 75வது பிறந்த நாளைக் கொண்டாட பிக்கானீரில் இருந்த சிபிஐ தோழர்கள் விரும்பி வேண்டியபோது அவர் 1976ல் பிக்கானீர் சென்றார். பிக்கானீரை விட்டு அவர் சென்றது 1920ல்.

            சவுகத் உஸ்மானி 1978 பிப்ரவரி 26ல் மரணமடைந்தார். அவருடைய மகனும் பிற குடும்ப உறுப்பினர்களும் மோசமான ஏழ்மையில் வாழ்ந்தனர்.

எழுத்துப் படைப்புகள்  

       உஸ்மானி பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார், அவற்றில் பல தொலைந்து போனது. ஆங்கிலம், உருது மற்றும் இந்தியில் அவரது சில படைப்புகள் வருமாறு:

ஒரு புரட்சியாளனின் வரலாற்றுப் பயணங்கள்; நான்கு யாத்திரிகர்கள்; விலங்குகள் மாநாடு; அன்மோல் ஹகானியான் (விலைமதிப்பில்லா கதைகள்); ஃபௌஜி சித்தாரா; கிரகணத்தின் இரவு; நான் ஸ்டாலினை இரண்டு முறை சந்தித்தேன்; பழங்கள் முதலியவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு; பெஷாவரிலிருந்து மாஸ்கோவிற்கு; பெர்ஷியா தொழிற்சாலை சர்வே; பாலஸ்தீன வரலாற்றின் பார்வைகள்; சுயசரிதை (பதிப்பிக்கப்படாதது) முதலியன.

    மேற்கண்ட நூல்களின் ஆங்கிலத் தலைப்பு வருமாறு : Historic Trips of a Revolutionary; Four Travellers; Animal Conference; Anmol Kahaniyan; Fauji Sitara; Night of the Eclipse; I Met Stalin Twice; Nutritive Values of Fruits etc; Peshawar to Moscow; Industrial Survey of Persia; Glimpses of History of Palestine; Autobiography (unpublished), etc.

  ஒரு புரட்சியாளனின் வாழ்க்கைப் பயணம் நமக்குப் பாதையைக் காட்டட்டும், படித்துப் பயன்பெறுவோம்!

--நன்றி : நியூஏஜ் (ஏப்ரல் 24 –30)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

.