Monday 21 March 2022

உண்மையான ‘புதிய இந்தியா’ படைக்க இன்னுயிர் கொடுத்த தியாகி, பகத் சிங்


            உண்மையான ‘புதிய இந்தியா’ படைக்க 

இன்னுயிர் கொடுத்த தியாகி, பகத் சிங்

--ஆர் எஸ் யாதவ்

    1931 மார்ச் 23, லாகூரின் மத்திய சிறையில் புரட்சியாளர்கள் – பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜ குரு– மூவரும் தூக்குமேடையில் ஏறி நின்று ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ முழங்கினர். அப்போது பகத்சிங் வயது வெறும் 24. இந்திய விடுதலை வேள்வியில் புரட்சியாளர்களும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலரும் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாகத் தந்தார்கள். அவர்கள் அனைவரும் மிகப்பெரிதும் மதித்துப் புகழ்ந்து கொண்டாடப்பட்டனர். அத்தகைய தியாகிகள் நிறைந்த வான்பரப்பில் பகத்சிங் தனித்த இடம் வகிக்கிறார். எது அவரைத் தனித்துவமாகக் காட்டுகிறது? அது, எதிர்காலம் பற்றிய அவரது பார்வை, அதுவே இந்திய மக்களால் அவரை மிகவும் நேசிக்கச் செய்தது. ‘ஷாகீத்-இ-ஆஸாம்’ (மாபெரும் தியாகி) என இந்தியமக்கள் அவரை அங்கீகரித்தனர்.

அவரது கண்ணோட்டம், எதிர்காலத் தொலைநோக்குப் பார்வைதான் என்ன?

            இந்தியச் சுதந்திரத்திற்காக மட்டுமே பகத்சிங் போராடவில்லை. அவரது போராட்டம் புதிய இந்தியா படைப்பதற்கானதும்கூட. இக்காலத்தில் பலமுறை ‘புதிய இந்தியா’ என்பதைப் பிரதமர் நரேந்திரமோடி முதலிய தலைவர்களிடமிருந்து நாம் கேட்கிறோம். மோடியின் ‘புதிய இந்தியா’ கருத்தாக்கம், நாட்டின் சொத்துக்களை உள்ளூர் மற்றும் அயல்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கையளிப்பதைக் கனவு காண்கிறது. அவரது ‘புதிய இந்தியா’ மேலும் மேலும் முதலாளித்துவத்தை இந்தியாவில் வலிமைபெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. ‘தேசியப் பணமாக்கும் பாதை’ (NMP, நேஷனல் மானிடைசேஷன் பைப்லைன்) திட்டமே மோடி பிராண்டு ‘புதிய இந்தியா’வின்  தொலைநோக்குப் பார்வை.

பகத்சிங்கின் புதிய இந்தியா கருத்தாக்கம், ‘முதலாளித்துவம், வர்க்க வேறுபாடுகள் மற்றும் சலுகைகளுக்கு சாவு மணி அடிக்கப்படும்’ எனக் கற்பனை செய்கிறது. இந்துஸ்தான் குடியரசு அஸோசியேஷன் (HRSA) என்ற புரட்சிகர அமைப்பின் ‘வெடிகுண்டு தத்துவம்’ (பிலாசபி ஆப் பாம்) என்ற வரலாற்று ஆவண வரைவறிக்கை தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்ட பகத்சிங் கூறுகிறார்: “…(சமூக வாழ்வில்) அது புதிய ஒழுங்குமுறையை வழிநடத்தும். முதலாளித்துவம், வர்க்க வேறுபாடுகள் மற்றும் சலுகைகளுக்கு அது சாவு மணி அடிக்கும். கொடுமையான இந்திய மற்றும் அயல்நாட்டு சுரண்டல்வாதிகளின் அடிமை நுகத்தடியின்கீழ் இன்று பட்டினியில் உழலும் லட்சோப லட்ச மக்களுக்கு மகிழ்ச்சியையும் வளமையையும் கொண்டு வரும். புரட்சி, பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தை நிறுவும், சமூக ஒட்டுண்ணிகளை அரசியல் அதிகார அரியணையிலிருந்து நிரந்தரமாக ஒழிக்கும்…” என்றெல்லாம் அந்த ஆவணம் பிரகடனம் செய்கிறது.

பகத்சிங், மார்க்சியம் மற்றும் கம்யூனிசத் தத்துவத்தை நம்பினார். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தங்கள் அரசியல் லாபத்திற்காக பகத்சிங்கின் பெயரையும் புகழையும் நேர்மையற்ற விஷமத்தனமான முறையில் அபகரிக்க முயல்கிறது. ஆனால் அவரது அரசியல் கொள்கை பற்றி வாயை இறுக மூடிக்கொள்கிறது. பகத்சிங்கின் தேசபக்தி, துணிச்சல், வீரம் மற்றும் ஆகப்பெரிய தியாகம் இவற்றின்மீது போற்றிப் பாடல் இசைக்கும் அவர்கள், தந்திரமாக அவரது தத்துவங்களைத் தவிர்க்கிறார்கள். அவர்களால் அதைப் பேசவும் முடியாது, காரணம் –அவரது தத்துவத்தை அவர்கள் வெறுக்கிறார்கள்.

பகத்சிங் படங்களைப் போஸ்டர்களிலும், பெயரைத் தங்கள் உரைகள் முதலியவற்றிலும் அவர்கள் பயன்படுத்துவார்கள் எனில், அவரது தத்துவம் மற்றும் எதிர்காலக் கண்ணோட்டம் முதலியவற்றில் தாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். ‘முதலாளித்துவத்திற்குச் சாவு மணி அடிக்க வேண்டும்’ என பகத்சிங் விரும்பினார். ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் அது தலைமையேற்கும் என்டிஏ அரசு மிகத் தீவிரமாக முதலாளித்துவத்தைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த லட்சணத்தில் பிறகு எந்த உரிமையில் பகத்சிங் பெயரை அவர்கள் பயன்படுத்துகிறார்களோ!

விடுதலை பெற்ற இந்தியாவுக்கு சோஷலிச அமைப்பு முறையிலான சமுதாயத்தைப் பகத்சிங் கனவு கண்டார்; அவர் கண்ட விடுதலைபெற்ற அந்தச் சமுதாயத்தில் அநீதியும் சுரண்டலும் அகற்றப்பட்டு அந்த இடத்தில் சமத்துவமும் சகோதரத்துவமும் கோலோச்சும். (அங்கே, ‘குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு, குடிமை நீதி…அடிமைக்குத் தளை இல்லை, யாருமிப்போது அடிமை இல்லை’.)

 பகத்சிங்கின் மேன்மையான இந்த எண்ணத்திற்கு மாறாக, ஆர்எஸ்எஸ் தத்துவத்தின் அடிப்படையாக தங்குதடையற்ற முதலாளித்துவ வளர்ச்சி, வகுப்பு வாதம் மற்றும் இந்துத்துவா கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறது; அதில் சிறுபான்மை முஸ்லீம்கள் மட்டுமல்ல, இந்து மக்கள்தொகையின் பெரும் பகுதியாக விளங்கும் ‘சதுர்வர்ண’ (நால் வருண) கீழ்மேல் படிநிலையில் கீழ்நிலையில் இருப்பவர்கள், குறிப்பாக தலித்துகள் இழிவுபடுத்தப்பட்டு மிக அலட்சியமாக நடத்தப்படுவார்கள்.

ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் எப்போதாவது தங்கள் லட்சியமாக ‘சோஷலிச’த்தை ஏற்றிருக்கிறார்களா? அவர்களது தலைமையிலான ஒன்றிய அரசு 2014 மே மாதத்திலிருந்து ஆட்சியில் இருக்கிறதே, பகத்சிங் தத்துவத்தின் மீது ஏதாவது மரியாதை இருந்தால், ‘சோஷலிச பாணியிலானச் சமுதாயத்தை’ இந்தியாவில் அமைக்க அவர்கள் செயல்படட்டும். அதற்கு அவர்கள் தயாரா? இல்லை என்பதே பதில். அவர்களால் முடியாது, சோஷலிசம் அவர்களுக்கு எட்டிக்காய். ஆனால் ஏதோ தங்களுக்கு பகத்சிங் மீதும் அவர் தத்துவத்தின் மீதும் பெரும்அன்பு இருப்பதாக நாட்டு மக்களை முட்டாள் ஆக்க முயற்சி செய்கிறார்கள்.

பகத்சிங் சோஷலிசத்தைத் தனது லட்சியமாகப் பிரகடனம் செய்தவர். ஆர்எஸ்எஸ் /பாஜக-வோ சோஷலிசம் மற்றும் கம்யூனிசத் தத்துவத்திற்கு மிகப் பெரிய எதிரிகள். சமீபத்தில் பிரதமர் மோடி இடதுசாரி கோட்பாட்டை ‘மிக ஆபத்தானது’ என விமர்சித்திருந்தார். அப்படிக் கூறும்போது உண்மையில் அவர் பகத்சிங்கையும் அவருடைய கோட்பாட்டையும் இழிவு செய்கிறார் இல்லையா?

பகத்சிங், “செல்வத்தைச் சமமாகப் பகிர்ந்து கொடுத்தல், சாதியத் தடைகள் மற்றும் சமத்துவமின்மைகளை ஒழித்தல் மற்றும் வகுப்புவாதத்தையும் மதரீதியான சகிப்பின்மையை அழிப்பதையும்” வற்புறுத்துகிறார். ஆர்எஸ்எஸ்/ பாஜக என்ன செய்கின்றன? சாதியத் தடைகள் மற்றும் சமூக சமத்துவமின்மைகளைச் சட்டரீதியாக நியாயப்படுத்தும் ‘சதுர் வர்ண’ (பிராமணன், ஷத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் என்ற நான்கு வருண) முறையைக் கட்டாயமாக அமல்படுத்துவதை வற்புறுத்தும் ‘மனுஸ்மிருதி’ கோட்பாடுகளை ஸ்தாபிக்க ஆர்எஸ்எஸ் சபதம் செய்கிறது. (இந்தியாவில் முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றி வாய் திறவாத ஆர்எஸ்எஸ், மிகச் சமீபத்தில் ‘இந்துக்களைப் பாதுகாப்பதில் வங்கதேச அரசு தோல்வி’ என்று குற்றம் சாட்டியது.)

‘வகுப்புவாதம் மற்றும் மத சகிப்பின்மை அழிப்பை’ பகத்சிங் வற்புறுத்துகிறார். ஆனால் ஆர்எஸ்எஸ் எப்போதும் வகுப்புவாதப் பிளவைத் தூண்டிவிட்டு வளர்க்கிறது. அது எப்போதும் மத ரீதியான சகிப்பின்மை நெருப்பை விசிறிவிடுவதன் காரணமாக அதன் அணிகள் சிறுபான்மையினரை, குறிப்பாக முன்னாள் ஆர்எஸ்எஸ் பிரச்சாரக் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசு ஆட்சிக்கு வந்தநாள் முதல், தலித்துகள் மீதும் கும்பல் தாக்குதல்களை நடத்துகின்றன.

தொழிலாளர் வர்க்கம் மற்றும் தொழிற்சங்க உரிமைகளைத் ‘தொழிற் சங்க தகராறு மசோதா’ மூலம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வரையறுத்துக் குறைக்க முயற்சி செய்தனர். அப்போது பகத்சிங்கும் அவரது இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசு அஸோசியேஷன் அமைப்பும் அதற்கு எதிராகத் தங்கள் எதிர்ப்புக் குரலை உயர்த்தினர். அவர்கள் அதனைக் காது கொடுத்து கேட்க மறுத்தபோது பகத்சிங் மற்றும் பி.கே. தத், அப்படிக் கேளா காதினர் கேட்கும்படி, அக்கறையற்று புறக்கணிப்போருக்கு தக்க நேரத்தில் எச்சரிக்கை’ விடுவதாய் ‘தேசியச் சட்டமன்ற’ மைய மண்டபத்தில் வெடி குண்டுகள் வீசினர்.

மோடி அரசு அதைவிட மிக மிக மோசமான திருத்தங்களைத் தொழிலாளர் சட்டங்களில் செய்து, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்தது; அதற்குப் பதில் அந்த இடத்தில் நான்கு தொழிலாளர் குறுங்குறிகளைக் கொண்டு வந்துள்ளது. தொழிலாளர் விரோதக் குறுங்குறிகளைச் சட்டமாக நிறைவேற்றியதன் மூலம் மோடி அரசு தொழிலாளர் வர்க்கத்தின்பால் மேலும் கொடூரமானது என்பதை நிரூபித்துள்ளது. பகத்சிங் போல தொழிலாளர்களின் குரலைக் கேட்கச் செய்ய நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசத் தேவையில்லை, மாறாக தொழிலாளர்கள், 2022 மார்ச் 28, 29 இரண்டு நாட்கள் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம் செய்ய, தோள் தட்டித் தயாரிப்புகளில் இறங்கி விட்டனர்!

தொழிலாளர் வர்க்கத்திற்கு விரோதமான மோடி அரசும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தங்கள் உதடுகளில் மாவீரன் பகத்சிங் பெயரை உச்சரிக்கக்கூட உரிமையற்றவர்கள்.

1925ல் இந்துஸ்தான் குடியரசு படை (பின்னர் அது இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசு அஸோசியேஷன் என மறு அவதாரம் எடுத்தது) ஒரு சிறு கையேடு ஒன்றை ‘தி ரெவலூஷனரி’ (‘புரட்சியாளன்’) என்ற தலைப்பில் வெளியிட்டது. அதில், இரயில்வே, பிற போக்குவரத்து சாதனங்கள், தகவல் தொடர்பு மற்றும் பெரிய ஆலைத் தொழில்களைத் தேசியமயமாக்குவது பற்றிய நடவடிக்கைகளுக்கு யோசனை தெரிவித்திருந்தது. மோடி அரசு அவற்றிற்கு நேர் எதிராகச் செயல் பட்டுவருகிறது. இந்தியா விடுதலை பெற்றதும் தேசியமயமாக்கப்பட்ட இரயில்வே துறையை மோடி அரசு தற்போது தனியார்மயமாக்குகிறது. ஏற்கனவே ஏர் இந்தியா விமான நிறுவனத்தையும் பல பொதுத்துறை நிறுவனங்களையும் விற்றுவிட்டது. இப்போது அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் பிற தேசியசொத்துக்களையும் ‘ஹோல் சேல்’ மொத்த விற்பனைக்கு ‘நேஷனல் மானிடைசேஷன் பைப்-லைன்’ திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்நடவடிக்கைகளின் விளைவு, ‘நாட்டை விற்பனை செய்வதே’. வரலாற்றுப் பக்கங்களின் கடைந்தெடுத்த துரோகிகள் ஜெய் சந்த் மற்றும் மீர் ஜாஃபர் போன்றோரும்கூட (இந்தத் துரோகத்தைப் பார்த்து) தங்கள் கல்லறைகளில் சங்கடத்தில் நெளிவார்கள்!

[சன்யோகிதாவைத் திருமணம் செய்ய இயலாது தன்னைத் தோற்கடித்த பிரிதிவி ராஜ் சௌகானை முகமதுகோரியை அழைத்து வந்து தரைன் போரில் பிரிதிவிராஜைக் கொன்று பழிதீர்த்தவன் ஜெய்சந்த் என்ற இராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவன்.

மீர் ஜாஃபர், பிரிட்டிஷ்காரர்கள் ஆதரவுடன் சூழ்ச்சியாக ப்ளாசே போரில் சிராஜ்-உத்-துல்லாவை வீழ்த்தி வங்காளத்தின் முதல் நவாப் ஆனவர். பின்னர் அவர் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் முரண்பட அவரைத் தூக்கி எறிந்த கம்பெனியார் மிர் காசிமை நவாப் ஆக்கினர். --மொழிபெயர்ப்பாளர் இணைத்தது]

அவர்கள் தூக்கு மேடை ஏறுவதற்குச் சில நாட்கள் முன்பு பகத்சிங் சுக தேவுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில், “நீங்களும் நானும் வாழ முடியாது போகலாம், ஆனால் நமது மக்கள் நிச்சயம் ஜீவித்து வாழ்வார்கள். மார்க்ஸிசம் மற்றும் கம்யூனிசம் வெல்வதற்காகவே தோன்றின” என்ற உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.

பகத்சிங்கின் இந்தக் கனவை நிச்சயம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பகிர்ந்து கொள்ள முடியாது; அது மட்டுமல்ல, அந்தக் கனவுக்கு எதிராகவும் அவர்கள் செயல்படுவார்கள்.  அப்படி பகத்சிங்கின் கனவு மற்றும் தத்துவத்திற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டே தாங்கள் அவனைப் பின்பற்றுவதாகவும் தங்களைக் காட்டிக் கொள்வார்கள். இது அவர்களின் கபட நாடகத்தின் உச்சம் என்பதைத் தவிர வேறில்லை.

 

பகத்சிங்கின் கொள்கைகளை இந்த நாட்டின் இளைஞர்கள் உண்மையாக உயர்த்திப் பிடிப்பார்கள். அவர்களது கனவை நிறைவேற்றப் பாடுபடுவார்கள், 
“இன்குலாப் ஜிந்தாபாத்”


--நன்றி: நியூஏஜ் (மார்ச் 20 –26)

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர் 

                                                                                  

No comments:

Post a Comment