Sunday 6 March 2022

போர் எதற்கும் தீர்வல்ல -- நியூஏஜ் தலையங்கம்

 

நியூஏஜ் தலையங்கம் (மார்ச் 6 –12)

போர் எதற்கும் தீர்வல்ல

         உக்ரைன் மீது சூழ்ந்துள்ள யுத்தக் கருமேகங்கள், இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளில் விவரிக்க முடியாத கவலைகள் தவிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மையான மாணவர்கள் உள்ளிட்ட பல்லாயிரம் இந்தியக் குடிமக்கள், போர் தாக்குதல்களுக்கு ஆளான உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மற்றும் ஊர்களில் சிதறி சிக்கித் தவிக்கின்றனர். அவர்களது பரிதவிக்கும் தொலைபேசி அழைப்புக்களும் தகவல்களும் இந்தியக் குடும்பத்தினரிடம் நாளும் இரவு பகலாக வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே இரண்டு அரிய உயிர்களை இழந்தோம், தாமதமின்றி அங்குள்ள இந்தியர்களைப் பாதுகாக்க இந்திய அரசு ஆவண அனைத்தும் செய்ய வேண்டும். உக்ரைனில் படிக்கும் நம் மாணவர்களின் கற்கும் திறன் பற்றியெல்லாம் விவாதிக்க இதுவல்ல நேரம். இது தொடர்பாக அமைச்சர்களின் விமர்சனம் முற்றிலும் பொருத்தமற்றது மட்டுமல்ல, அது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுமாகும்.

            மாணவர்களைக் காப்பாற்ற ‘ஆப்ரேஷன் கங்கா’ என்ற செயல்திட்ட நடவடிக்கை ஏற்கனவே தொடங்கினும், மிகக் கடுமையான பிரச்சனையின் விளிம்பைக்கூட அது இன்னும் நெருங்கவில்லை. ஆயிரக்கணக்கான இந்தியர்களின் உயிர்கள் மற்றும் எதிர்பார்ப்பு நம்பிக்கைகளை நேரடியாகப் பாதித்துள்ள கடும் நெருக்கடியைக் கையாளுவதில் இந்திய அரசு பரிதாபகரமாகத் தோல்வியடைந்துள்ளது. இத்தகு போர் மோதல் சூழலில் வாய்ச்சவடால்கள் எந்தப் பலனையும் அளிக்காது என்பதை அரசை வழிநடத்துபவர்கள் உணர வேண்டும். (இந்தியர்களைப் பாதுகாக்கும்) நோக்கத்தை நிறைவேற்ற அறிவார்ந்த, திறன்மிக்க ராஜீய உறவுகளும், புதிய கற்பனைச் செயலூக்கம் மிக்க நடைமுறை திறமைகளும் பயன்படுத்தப்பட வேண்டும். கடும்போர் நடக்கும் இடத்திலிருந்து ‘எங்கள் உயிர்களைக் காப்பாற்று’ எனக் கதறும் நமது குழந்தைகள் உதவிக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்கள் அழுகுரலை ஆன்மசுத்தியோடு கேட்டு, முதல்முன்னுரிமை தந்து உண்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

            போரின் மனிதத்தன்மையற்ற கோர முகத்தையும் சோகத்தையும் இம்முறை உக்ரைனில், உலகம் மீண்டும் சந்திக்கிறது. திடீரென யுத்தம் மூண்டுவிடவில்லை, அது நீண்ட காலமாக நிலவிய பதற்றத்தின் விளைவு. அமெரிக்கா-- ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக அதிகரித்த முரண்பாடு மோதல் போக்கில் போர் உருவாகி வந்தது. (ருஷ்ய இனத்தவர்கள் அதிகமாக வாழும் உக்ரைனின் கிரிமியா பிராந்திய அரசின் சட்டமன்றம், ரஷ்ய ஒன்றியத்துடன் இணைய வாக்களித்ததால் ஏற்பட்டுள்ள) கிரிமியா பகுதி நெருக்கடி மற்றும் டோநெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ் குடியரசுகளின் நிகழ்வுப்போக்குகள் எரியும் தீயில் எண்ணை ஊற்றியதாய்ப் பதற்றத்தை முற்றச் செய்துள்ளது.

தற்போது நடப்பது ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர்போலத் தோற்றமளிக்கிறது; ஆனால், பொதுவாக அப்படிப் புரிந்து கொள்வதுபோல, அது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. யுத்த களத்தில் நேரடியாக அமெரிக்கா காட்சி அளிக்காதபோதும் அவர்களது உலகளாவிய அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் ஐரோப்பாவில் மேலாதிக்கத்தை அடையும் பேராசையும், உக்ரைன் நாட்டின் உள்ளேயும் வெளியேயும் நெருக்கடியை அதிகரிப்பதில் மறுக்க முடியாதபடி நிச்சயமான பங்கு வகிக்கிறது. இருப்பினும், உக்ரைனுக்கு எதிராக முழு அளவிலான போரைக் கட்டவிழ்த்துள்ள ரஷ்யாவின் புடின் அரசு நிர்வாகத்தைக் கண்டிக்கத்தான் வேண்டும். ரஷ்ய ஆக்கிரமிப்புப் படைகள் தொடர்ச்சியாக குண்டுகளைப் பொழிந்து தாக்குவதில், மனிதக் குடியிருப்புகள் மற்றும் அப்பாவி மக்களையும் விட்டு வைக்கவில்லை. இரண்டு பெரிய வல்லரசுகளும் அடிப்படையான ஓர் உண்மையைக் காண மறுத்துக் கண்களை மூடிக்கொள்கின்றன: உண்மை யாதெனில், தற்காலத்தின் எந்தவொரு தகராறு, பூசல்கள், பிரச்சனைகளுக்கும் -- உலகின் எப்பகுதியிலும் – போர் என்பது தீர்வல்ல. 

            சோவியத் யூனியன் சிதறியதிலிருந்து, போர் வெறியர்களான அமெரிக்கா நேட்டோ கூட்டமைப்பை (‘வடஅட்லாந்து ஒப்பந்த அமைப்பு’ என்ற இராணுவக் கூட்டமைப்பு, 1949 ஏப்ரல் 4ல் நிறுவப்பட்டது) மீண்டும் புத்தாக்கம் செய்யவும், கிழக்கே விஸ்தரிக்கவும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. பனிப்போர் நிலவிய காலத்தில் அவர்கள் வழங்கிய உபதேசங்கள் எல்லாம் பச்சை பொய்கள். சோவியத் யூனியனை எதிர்க்கும் பெயரில் ஆயுதப் போட்டியை மேம்படுத்தி வளர்க்கிறார்கள். சோவியத் யூனியன் மற்றும் ஐரோப்பிய சோஷலிச முகாம் மறைந்த பிறகும், ஆயுதப் போட்டியைக் கைவிட்டு அதற்கு விடைகொடுக்க அவர்கள் தயாரில்லை.

அமெரிக்கப் போர் இராணுவத் தலைமையகமான பென்டகன், உலகின் பல்வேறு பகுதிகளில் யுத்த தயாரிப்புகள் மற்றும் பிராந்திய மோதல் பிரச்சனைகளை வளர்க்க ஆராய்ச்சிகள் நடத்துகிறது. கொள்கைகளை வகுக்கும் வெள்ளை மாளிகையில் தங்கள் பலமான செல்வாக்கைப் பயன்படுத்தி இராணுவ ஆயுத உற்பத்தியாளர்களும், ஆய்வு நடவடிக்கைகளில் நெருக்கமான ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், தங்கள் பகாசுர லாப பேராசையைத் திருப்திப்படுத்த, போர்கள் அத்தியாவசியம்.

சோவியத் யூனியன் மறைந்த பிறகு, பனிப்போர் (கோல்டு வார்) முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆயுதங்கள் மற்றும் அழிவுக்காகப் பயன்படுத்தப்பட்ட நாடுகளின் பெரும் செல்வாதாரங்களை மடைமாற்றி, மக்களின் வாழ்க்கை, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக அமைதி வழியில் மறுகட்டமைப்புகளுக்குச் செலவிட வேண்டும் என்பதே வெள்ளந்தியான மனம் படைத்த சாதாரண மக்களின் தேர்வும் விருப்பமும் ஆகும். 

            ஆனால், வரையறையற்ற லாபத்திற்கு அலையும் முதலாளிகளின் பேராசைக்குப் போர் தவிர்க்க முடியாத ஒரு பகுதி. அதன் காரணமாகவே நேட்டோ (NATO) அமைப்பை முன்னிறுத்த அவர்கள் முயற்சி செய்கிறார்கள். நேட்டோ கூட்டமைப்பு நாடுகளோடு (புதிதாக) உக்ரைன் இணைந்தால், ரஷ்ய எல்லைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும், பாதுகாப்பற்றதாகிவிடும். விளாதிமிர் புடின் தலைமையிலான ரஷ்ய அதிகாரிகள் இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண –அவர்கள் சொந்த வழி(?)யில் – முயற்சி செய்கிறார்கள். நீண்டகாலமாக உக்ரைனைச் சுற்றி வளர்ந்து வந்த முரண்பாடுகளுக்கு அமைதியான தீர்வு காண அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை. நீண்டகால பதற்றம் இறுதியில் தற்போது போராக முடிந்துள்ளது, ஆண்களும் பெண்களுமாக அப்பாவி மக்களே அதனால் பாதிப்படைந்து இழப்புக்களை அனுபவிக்கிறார்கள்.

            இன்றைய புதிய உலகில், பிராந்திய மோதல்கள் பல பகுதிகளிலும் அதிகரிக்கின்றன. எல்லா இடங்களிலும் போரிடும் குழுக்கள் ஒன்றை ஒன்று அழித்தொழிக்க ஆயுதங்களை நாடுகின்றன. அதற்கான பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்பவர்கள் -- சர்வநாசம் விளைவிக்கும் சாவு வியாபாரிகள்-- இந்த அழிவு விளையாட்டுக்களிலிருந்து பெருமளவு பயன் அடைகின்றனர். மலைபோன்ற செல்வாதாரங்களை விழுங்கும் போர்களில் அனைவருமே நட்டமடைகிறார்கள். பலகோடி மக்களின் வாழ்வைப் பசியும் ஏழ்மையும் வேட்டையாடும்போது இவ்வுலகில் எங்கேயும் நியாயமான போர் போன்ற ஒன்று இருக்க முடியாது.

            இந்த வரலாற்றுத் தருணத்தில்தான் ஐ.நா. மன்றம் மேலும் மேலும் உதவிட முடியாத கையறு அமைப்பாக மாறுவதை நம்மால் காண முடிகிறது. ஐநா மன்றத்தை அமைதியின் தூதுவராக மக்கள் வழக்கமாகப் பார்த்த ஒரு காலம் இருந்தது.  இன்றைய புதிய தாராளமய காலத்தில் ஐ.நா. பெருமன்றம் பலமிழந்த ஒரு பார்வையாளராக, சில நல்உபதேசச் சொற்பொழிவுகளைச்

 செய்யும் அமைப்பாக மட்டுமே உள்ளது – அதன் அறிவுரைகளை யாரும் அக்கறையோடு செவிசாய்ப்பதுமில்லை, பொருட்படுத்துவதுமில்லை. இத்தகு தருணங்களில் பொது மக்களின் கருத்து மேலும் பொருத்தப்பாடு உடையதாகிறது. மக்கள் போருக்காக நிற்பதுமில்லை, ஆதரிப்பதுமில்லை. அவர்களுக்குச் சாந்தியும் சமாதானமும் அமைதியும் வேண்டும். ரஷ்யாவும் உக்ரைனும் போரை உடனடியாக நிறுத்த சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். போர் எதற்கும் தீர்வல்ல.

                போருக்கு எதிராக 
                நம் குரல்களை ஓங்கி ஒலிப்போம்!        

           “புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட

          போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!”   

      --தமிழில் : நீலகண்டன்   என்எப்டிஇ, கடலூர்  

 

No comments:

Post a Comment