Friday 18 March 2022

மார்ச் 28, 29 பொது வேலைநிறுத்தம் -- தொழிலாளர் வர்க்க அறைகூவல்

 

தொழிலாளர் வர்க்க அறைகூவல்

மார்ச் 28, 29 நாடு தழுவிய 

பொது வேலைநிறுத்தம்

--ஆர் எஸ் யாதவ்

            இந்தியத் தொழிலாளர் வர்க்கமும் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சுதந்திரமான துறைவாரி சம்மேளனங்கள், அமைப்புகளின் பொதுமேடையும் இணைந்து எதிர்வரும் மார்ச் 28, 29 இரண்டு நாட்கள் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. பொது வேலைநிறுத்தத்தின் முக்கிய முழக்கம்: “மக்களைப் பாதுகாப்போம்! தேசத்தைப் பாதுகாப்போம்! கோரிக்கைகளையும் அதன் பின்னணி விளக்கங்களையும் இனி காண்போம்.

            பாஜக தலைமையிலான என்டிஏ அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் வர்க்க விரோத, தேச விரோதப் பேரழிவு ஏற்படுத்தும் கொள்கைகளை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் 2021 நவம்பர் 11ல் தேசியக் கருத்தரங்கு நடத்தியது. அரசின் அத்தகைய கொள்கைகளை எதிர்த்து நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்குவது எனக் கருத்தரங்கம் முடிவு செய்தது.

            அம்முடிவிற்கேற்ப மத்திய தொழிற்சங்கங்கள் கடந்த பிப்.23, 24 இரு நாட்கள் வேலைநிறுத்தம் அறிவித்தது. தற்போது அதனை எதிர்வரும் மார்ச் 28, 29 என மாற்றியுள்ளது. தொழிலாளர் வர்க்கத்தின் இணைந்த போராட்டம் மக்களின் உரிமைகள், வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல; அது நாட்டின் பொருளாதாரம், ஜனநாயக நடைமுறைகள் மற்றும் தற்போதைய எதேச்சிகார ஆட்சியாளர்களால் அழிவை நோக்கி உந்தித் தள்ளப்படும் சமூகத்தைப் பாதுகாப்பதற்கும் எனத் தொழிற்சங்கங்கள் பிரகடனப்படுத்தின. ஆதிக்கம் செலுத்தும் அரசியல் அதிகாரத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து ஆதரவு கிடைத்து வருகிறது.

            இணைந்த வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ள ஒன்றுபட்ட மேடையில் AITUC, CITU, HMS, AIUTUC, UTUC, TUCC, AICCTU, UTUC, TUCC, AICCTU, SEWA மற்றும் LPF என 10 மத்திய தொழிற்சங்கங்கள், சுதந்திரமான சம்மேளனங்கள், அமைப்புகளும் அடங்கும். பொது வேலைநிறுத்தத்தில் ஆர்எஸ்எஸ்/ பாஜகவைச் சார்ந்த மத்திய தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங் (BMS) இணையவில்லை.

வேலைநிறுத்தக் கோரிக்கை பட்டியல் வருமாறு:

1. புதிய தொழிலாளர் குறுங்குறிகளை (Codes) ரத்து செய்க! பாதுகாப்புச் சேவை அவசரநிலை சட்டத்தை (EDSA) ரத்து செய்க!

2.   வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, ‘ஒன்றுபட்ட விவசாயிகள் முன்னணி’ (SKM) முன்வைத்த 6 அம்ச கோரிக்கை சாசனத்தை ஏற்றிடுக!

3.   அமைப்புசாரா பிரிவு தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு வழங்குக!

4.   எந்த வடிவிலும் தனியார்மயம் அனுமதியோம்! நாட்டின் சொத்துக்களை விற்பதன் மூலம் அமல்படுத்த உள்ள ‘தேசிய பணமாக்கும் வழிமுறை’ (NMP) திட்டத்தை ரத்து செய்க!

5.   வருமான வரி கட்டாத எளியபிரிவு குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் உணவு மற்றும் குடும்ப வருமானத்திற்கு ஆதரவாக மாதம் ரூ7,500/- வழங்கிடுக!

6.   மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு நிதிஒதுக்கீடுகளை அதிகரித்திடுக! வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கிடுக!

7.   அங்கன்வாடி, ஆஷா (சுகாதாரப் பணியாளர்கள்), மதிய உணவு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பிற திட்டம் சார்ந்த தொழிலாளர்களுக்கும் சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்திடுக!

8.   தொற்றுகாலத்தில் மக்களுக்கு உற்றுழி உதவும் முன்களப் பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு வசதிகளை வழங்கிடுக!

9.   விவசாயம், கல்வி, சுகாதாரம் மற்றும் கேந்திரமான பிற பொது நலப் பிரிவுகளில் அரசு முதலீட்டை அதிகரிக்கவும், தேசியப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நாட்டின் அதிபணக்காரர்கள் மீது செல்வ வரி முதலிய கூடுதல் வரிகளை விதித்திடுக!

10.  பெட்ரோலிய பொருட்கள் மீது மத்திய (எக்ஸ்சைஸ் டூட்டி) சுங்கவரியைக் குறைத்து விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திட தீர்வு நடவடிக்கைகளை விரைவில் எடுத்திடுக!

11.  ஒப்பந்தத் தொழிலாளர்கள், திட்டம் சார்ந்த (ஸ்கீம்) ஊழியர்கள் சேவை முறைப்படுத்தி பணிநிரந்தரம் செய்திடுக! அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியத்தை வழங்கிடுக!

12.  புதிய பென்ஷன் திட்டத்தை (NPS) ரத்து செய்து முந்தைய பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்திடுக! தொழிலாளர் பென்ஷன் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தைப் போதுமான அளவு அதிகரித்திடுக!

மேற்கண்ட கோரிக்கைகளுடன் ஒன்றுபட்ட மேடையின் மத்திய தொழிற்சங்கங்கள், சம்மேளனங்கள், அமைப்புகள் ஏற்கனவே முறைப்படுத்தி வலியுறுத்திய பிற கோரிக்கைகளும் உள்ளன.

போராட்ட வரலாறும், இன்றும்

            இந்தியப் பாட்டாளி வர்க்கம் விடுதலைக்கு முன்பும் பின்பும் எண்ணிறைந்த பல போராட்டங்களை நடத்தி மாபெரும் தியாகங்கள் மூலம் பல உரிமைகளையும் அடைந்துள்ளது. அந்த உரிமைகள் தொழிலாளர் நலச் சட்டங்களின் பல கூறுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன. அவ்வுரிமைகளைப் பறித்து/ பலவீனப்படுத்தி; முதலாளிகளின் உரிமைகளை அதிகரித்தும் அவர்களின் பொறுப்புக்களைக் குறைத்தும் இன்றைய மோடி அரசு, 29 தொழிலாளர் நலச் சட்டங்களை ரத்து செய்து, அந்த இடத்தில் நான்கு தொழிலாளர் குறுங்குறிகளைக் கொண்டு வந்துள்ளது. தொழிலாளர் சீர்திருத்தம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள அம்மாற்றங்கள் தொழிலாளர்களைத் திரட்டி சங்கம் அமைப்பதை, நடத்துவதை மிகக் கடினமாக்கியுள்ளது; ஒரு நாளைக்கு 12 மணிநேரம் என்ற அளவுகூட பணி நேர அதிகரிப்பு மற்றும் எஞ்சிய பணி பாதுகாப்பையும் அபககரிப்பதற்கான தெளிவான முயற்சிகள் நடக்கின்றன; முதலாளிகள் சரியோ தவறோ எதை உத்தரவிட்டாலும் அதை ஏற்று இன்றைய தொழிலாளர்களை அடிமையாக உழல வைத்துள்ளது; அதற்கும் மேல் அந்த அடிமை சிறிது முணகினால் அல்லது எதிர்த்தால் அவனை வேலைநீக்கம் செய்யவும் வழி செய்துள்ளது.

மாற்றம் செய்யும் பாதகம்

            இந்த மாற்றங்களின் விளைவாய் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் தொழிலாளர் சட்ட வரம்பிலிருந்து வெளியேற்றப்படுவர்; ’வாடகைக்கு எடு, பயன்படுத்து, தூக்கி எறி’ என்ற (ஹையர் அண்ட் பயர்) கொள்கை சாதாரண நடைமுறையாகிறது; தொழிலாளர்கள் பலரும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக அல்லது கால வரம்புப் பணி நியமனம் செய்யப்படுபவர்களாக (ஃபிக்செட் டேர்ம் எம்ப்ளாய்மெண்ட்), அல்லது தற்காலிக கேசுவல் கூலிகளாக மாற்றப்படுவர். முறையான நிரந்தரப் பணி நியமனம் என்பது ஒப்பந்த நியமனங்கள் அல்லது அவுட் சோர்ஸிங் முறைக்கு மாறி மேலும் மேலும் தொழிலாளர்கள் முறைசார தொழிலாளர்களாக ஆக்கப்படுவர். நலச்சட்டங்கள் திருத்தப்பட்டதால், அவர்களது பணிச் சூழல் மற்றும் பாதுகாப்பு நீர்த்துப் போகும்; தூய்மையற்ற பணிச்சூழலின் கீழ், பாதுகாப்பற்று பணியாற்ற நேர்வது மட்டுமின்றி அதனால் கை, கால் இழப்பு ஊனம் அல்லது உயிரிழப்பும் ஏற்படலாம். அக்காயங்கள் அல்லது உயிரிழப்புக்கான உரிய நட்ட ஈடு, நிவாரணம் ஏதும் வழங்கப்படாது. காரணம், பாதிக்கப்பட்ட அத்தொழிலாளர்கள் தங்களால் நேரடியாக சம்பளப் பட்டியலில் நியமிக்கப்பட்டவர் இல்லை, மாறாக அவர்கள் சில ஒப்பந்தக்காரர்களால் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்ற அனுப்பி வைக்கப்பட்டவர்களே எனச் சாதாரணமாகக் கூறி, முதலாளிகள் பொறுப்பிலிருந்து தப்புவதற்கு, புதிய சட்டங்களின் இந்த மாற்றங்கள் வழிவகுத்துள்ளன. வேலை நிறுத்த முதலாவது கோரிக்கையே மிக மோசமான இந்த அநீதி மற்றும் கொடுமைக்கு எதிரானது.

பாதுகாப்புச் சேவையில் போராட்டங்களுக்குத் தடை

            மிகச் சமீபத்தில் மோடி அரசு ‘அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் சட்டம்’ (EDSA) என்பதை நிறைவேற்றியுள்ளது. அதன் ஷரத்துகள் பாதுகாப்புத் துறையில் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்குத் தடை விதித்துள்ளது. தேசப் பாதுகாப்பிற்கு அத்தியாவசிய ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை உற்பத்தி செய்து சேவையாற்றும் பொதுத்துறை நிறுவனமான ‘ஆர்டனன்ஸ் ஃபாக்ட்ரீஸ்’ தொழிற்சாலைகளைக் கார்ப்பரேஷன் அமைப்பாக மாற்றுவதென முடிவெடுத்த பிறகே அந்தச் சட்டம் குறிப்பாக கொண்டுவரப்பட்டது. ஆர்டனன்ஸ் ஆலைகளைப் பங்கு விற்பனை செய்வதற்கான முன்னோட்டமே அந்த முடிவு.

    ஆலைகளைத் தனியார்மயம் செய்வதற்கு எதிராகப் பாதுகாப்பு ஊழியர்கள் ஒன்றாகப் போராடுகிறார்கள் என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் அந்தச் சட்டம். அந்தக் காட்டுமிராண்டித்தனமான கொடுஞ்சட்டம் பல கடுமையான ஷரத்துக்களைக் கொண்டுள்ளது: வேலைநிறுத்தத்தில் சேரும் ஊழியருக்கு ஓராண்டு சிறை அல்லது 10ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்; வேலைநிறுத்தத்தைத் தூண்டுபவருக்கு இரண்டாண்டு சிறை அல்லது 50ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும்; வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர் / தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்கள் வேலைநீக்கம் செய்யப்படுவர்; மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி விசாரணை நடத்துவது சாத்தியமில்லை என்று கருதினால் விசாரணை இன்றியும் அவர்களை வேலை நீக்கம் செய்யலாம். இந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் ஊழியர்கள் மற்றும் சங்கப் பொறுப்பாளர்களுக்குப் பிணை வழங்கப்படாது போன்ற பல ஷரத்துகள்.

முந்தைய சட்டங்களை முறியடித்தோம்

            வேலைநிறுத்தங்களைத் தடை செய்யவும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களைத் தண்டிக்கவும் ஏற்கனவே ‘எஸ்மா’ என்றொரு சட்டம் இருந்தது. தொடர்ந்து உழைக்கும் வர்க்கம் எஸ்மா சட்டத்தை ரத்து செய்ய வற்புறுத்தி வந்தது. மாறாக, எஸ்மாவைவிட மேலும் கடுமையும் கொடுமையும் நிறைந்த மேற்கண்ட EDSA சட்டத்தை அரசு நிறைவேற்றியது.

            இத்தகைய சட்டங்களைக் கண்டு உழைக்கும் வர்க்கம் ஒருபோதும் பயந்ததில்லை எனச் சொல்லத் தேவையில்லை, இப்போதும் தொழிலாளர் வர்க்கத்திற்கு அச்சமென்பது இல்லையே! தொழிலாளர் வர்க்கத்தின் வரலாறு ஏராளமான போராட்டங்கள் நிறைந்தது; எல்லாவிதமான கொடுமையான சட்டங்களையும் அடக்குமுறைகளையும் ஏன் துப்பாக்கித் தோட்டாக்களையும் சந்தித்துத் தொடர்ந்து வேலைநிறுத்தங்களில் ஈடுபட்ட உதாரணங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் எழுதப்பட்டு வருகிறது. இரயில்வே தொழிலாளர்களின் வீரம் செறிந்த மே 1974 வேலை நிறுத்தத்தை யார்தான் மறக்க முடியும்? அரசு எஸ்மா-வைப் பிரகடனப்படுத்தியது. அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. ஆயிரக் கணக்கான இரயில்வே ஊழியர்கள் சேவையிலிருந்து வேலைநீக்கம் செய்யப்பட்டனர். “நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும் தாளம் படுமோ? தறிபடுமோ? யார் படுவார்” என பாரதியார் பாடியது போல ஊழியர்கள்பட்ட துன்பங்கள் கொஞ்சமோ? ஆனால் இறுதி முடிவு என்ன? இரயில்வே ஊழியர்களுக்குப் போனஸ்’ என்ற தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கை ஏற்கப்பட்டது.

            சில ஆண்டுகளுக்குப் பின் வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களும்கூட மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். வேலைநிறுத்தம், இரயில்வே தொழிலாளர்களுக்கு மட்டும் போனஸ் பெற்றுத் தரவில்லை; அதுவே மற்ற அரசு ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் கிடைப்பதற்குத் தூண்டுகோலாய், ஆயுதமாய் இருந்தது. அரசு எஸ்மாவைக் கொண்டு வந்தபோதும் வேலைநிறுத்தங்கள் நடந்தன. EDSA சட்டம் வரட்டுமே, பாதுகாப்புப் பிரிவு தொழிலாளர்களை மண்டியிடச் செய்து விடுமா? தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்த போதும், ஆர்டனஸ் ஆலைகளைத் தனியாரிடம் அரசு விற்க முனையும்போது –எவ்வளவு துன்பங்களை எதிர்கொண்டாலும் சரி-- ஆலைகளைப் பாதுகாப்பது தங்கள் தேசபக்த கடமை என்று அத்தொழிலாளர்கள் கருதுகிறார்கள். EDSA ஒடுக்குமுறை சட்டம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, அவர்கள் தங்கள் போராட்ட இயக்கங்களை முன்னெடுத்துச் செல்ல உறுதியாக முடிவெடுத்துவிட்டார்கள்.

துணிந்துவிட்ட விவசாயிமுன் அடக்குமுறை சட்டங்கள் தூள், தூள்

            அபாயகரமான கொரோனா பெருந்தொற்றை நாட்டு மக்கள் சந்தித்தபோது, மோடி அரசு அதைத் தகுந்த வாய்ப்பாகப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு எதிரான, கார்ப்பரேட்கள் ஆதரவு வேளாண் சட்டங்களை அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றியது ஒரு முரண்நகை. கரோனா நோய் பயத்தில், அதன் சிகிச்சை மற்றும் அகால மரணங்களில் மக்கள் மிக மோசமாக மூழ்கி இருக்கும்போது, வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அவர்களுக்கு நேரமிராது என அரசு தப்புக் கணக்கு போட்டது. மாறாக, இத்தேசத்தின் வேளாண் பெருங்குடி மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். விவசாயிகள், குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உபி மேற்கு மாவட்டங்கள் மட்டுமின்றி ராஜஸ்தான் மற்றும் உத்தர்காண்ட்டை சேர்ந்த விவசாயிகள் தலைநகரை நோக்கி தங்கள் டிராக்டர்களில் பேரணியாகச் சென்றனர். மோசமான தடைகள், அடக்குமுறைகளைப் பயன்படுத்தி அவர்களை டெல்லிக்குள் நுழையவிடாது அரசு தடுத்து நிறுத்தியபோது, எங்கே தடுக்கப்பட்டனரோ அங்கேயே முகாமிட்டு ஆயிரக்கணக்கில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தைத் தொடர்ந்தனர். அது ஓராண்டிற்கும் மேல் தளர்வின்றி நீடித்துப் புதுமையான போராட்ட வரலாறு படைத்தது.

வேளாண் போராட்டத்தின் வெற்றி

            பிரதமர் வருத்தம் தெரிவித்து மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்ற பிறகே விவசாயிகள் தலைநகர் எல்லையை விட்டு தங்கள் மாநிலங்களை நோக்கித் திரும்பினர். போராட்டம் நீடித்தால் எதிர்வரும் ஐந்து மாநிலத் தேர்தல்களில் தனது கட்சி கடுமையான நட்டமடைய நேரிடும் என்பது பிரதமரின் அச்சம். விவசாயிகளின் உறுதிப்பாடு மற்றும் போராட்டத்தின் விளைவாய் பெரும்அரசியல் விலை தரவேண்டியிருக்கும் என்ற நிர்பந்தம், பிரதமரைச் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறச் செய்தது. சட்டங்களை ரத்து செய்தது மட்டுமின்றி வேறுசில கோரிக்கைகளையும் அவர் ஏற்றார். குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) குறித்துப் பரிசீலிக்க உடனடியாக ஒரு குழு நியமிக்க உறுதியளிக்கப்பட்டது. ஆனால் விவசாயிகளின் 6அம்ச கோரிக்கைகள் மீது அளிக்கப்பட்ட உறுதிமொழிகளில் தற்போது அரசு ஏமாற்றிவிட்டது. தேசத்தின் அன்னதாதாக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகளுக்கு ஆதரவாகத் தொழிலாளி வர்க்கத்தின் வேலைநிறுத்தக் கோரிக்கை அழுத்தமாக வற்புறுத்துகிறது.

            ஓராண்டுக்கு மேல் நீடித்த விவசாயிகளின் போராட்டத்திற்குத்  தனது முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தொழிலாளி வர்க்கம் நல்கியது. இந்தியா முழுவதும் உழைக்கும் வர்க்கம் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் இறங்கும்போது விவசாயிகள் அவர்களுக்கு ஆதரவாக முன் வருவார்கள் என்பது திண்ணம்.

கூவிக்கூவி விற்கப்படும் தேசிய சொத்துகள்

             ‘நவஇந்தியாவின் ஆலயங்களான’ ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனத்தையும் மோடி அரசு, பங்குவிற்பனை என்ற பெயரில் விற்று வருகிறது. இப்போது ’தேசிய பணமாக்கும் வழிமுறை’ (NMP, நேஷனல் மானிடைசேஷன் பைப்லைன்) என்ற புதிய திட்ட வரைபடத்தைத் தீட்டியுள்ளது. அதன்படி, இரயில்வே, சாலை போக்குவரத்து, துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம் கொண்டு செல்லும் கம்பிப் பாதைகள், சுரங்கங்கள், எண்ணெய் நிறுவனங்கள், இந்தியச் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தை (ITDC) சேர்ந்த ஹோட்டல்கள் எனத் தேசியச் சொத்துகள் விற்பனைக்குக் கடை விரிக்கப்பட்டுள்ளன. ’நாளும் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ’ என்று தேசியச் சொத்துகள் விற்பனைக்கு எதிராகக் கொதித்தெழுந்து, இந்தியத் தொழிலாளி வர்க்கம் தனது கண்டனக் குரலை உரத்து ஒலிக்கிறது, வேலைநிறுத்தத்தின் கோரிக்கை 4: “எந்த வடிவிலும் தனியார்மயம் அனுமதியோம்! தேசிய சொத்துக்களை விற்பதன் மூலம் அமல்படுத்த உள்ள ‘தேசிய பணமாக்கும் வழிமுறை’ (NMP) திட்டத்தை ரத்து செய்க!”  

அரசு ஊழியர்களுக்கான பென்ஷன்

            பாஜக தலைமையிலான முந்தைய என்டிஏ ஆட்சியில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, 2004 ஏப்ரல் 1 தேதியிலிருந்து பணியில் சேர்பவர்களுக்குப் புதிய பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. பெரும் மதிப்புடைய சமூகப் பாதுகாப்பைப் பறித்து, அதற்குப் பதில் கொண்டுவந்த பங்கு மார்க்கெட்டுடன் இணைந்த புதிய பென்ஷன் திட்டம் அரசு ஊழியர்கள் மீதான பெரும் கொடூரத் தாக்குதல். உண்மையில் அது ஓய்வூதியத்தை உறுதி செய்யவில்லை, ஆபத்திற்கே உள்ளாக்கியுள்ளது. மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பது பொது வேலைநிறுத்தத்தின் கோரிக்கைகளில் ஒன்று.

            தற்போது இது முக்கிய அரசியல் பிரச்சனையாகவும் ஆகி வருகிறது. இந்த அநீதியை எதிர்த்துத் தொழிலாளர் வர்க்கத்தின் தொடர் போராட்டத்தின் காரணமாகப் பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் இராஜஸ்தான் மாநிலஅரசு, ஒன்றிய அரசின் நிலைபாட்டைப் பொருட்படுத்தாமல், தனது ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.

எளிய பிரிவினர்களுக்கு ரொக்கமாக நிவாரணம்

            கரோனா தாக்கம் காரணமாகக் கடும் பாதிப்புக்கு ஆளான, வரி செலுத்தும் வரம்பிற்குள் வராத, எளிய பிரிவு மக்களுக்கு உதவிட மாதம் தோறும் ரூ7500/- ரொக்கமாக அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை காரியசாத்தியமற்ற, நியாயமற்றது எனச் சிலருக்குத் தோன்றலாம். ஆனால் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர்கள் பலரும் ஏறத்தாழ ஒருமனதாக அத்தகைய யோசனையைக் கூறியுள்ளனர்; அதற்கு அவர்கள் தரும் விளக்கம் பின்வருமாறு: எளிய குடும்பங்கள் செலவிட பணம் வழங்கி உதவினால், அது பொருளாதாரச் செயல்பாடுகளில் தொடர் விளைவுகள், பலன்களை ஏற்படுத்தும்; மக்களின் நுகர்வு அதிகரிக்கும், சந்தையில் பொருட்களுக்கான தேவை கூடும், எனவே உற்பத்தி அதிகரிக்கும்; இறுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் என்பதே அறிஞர்கள் வாதம். தனிநபர்கள் நுகர்வு மற்றும் சந்தையில் டிமாண்ட் அதிகரிக்காமல் பொருளாதாரம் மீண்டும் சீர்படுவது கடினம். நமது பொருளாதாரம் உண்மையில் தற்போது, மிக மிக அதிகமான வேலையில்லா திண்டாட்டம், உச்சத்தைத் தொடும் விலைவாசி இவற்றோடு மக்கள் தொகையில் 84 சதவீதத்தினரின் வருமானமும் வீழ்ச்சி அடைந்த நிலையில் உள்ளது.

அமெரிக்க முன்னுதாரணம்

            பண உதவி என்பது ஏதோ கற்பனையான கோரிக்கை அல்ல. கரோனா தொற்று பரவல் ஊரடங்கின்போது வேலையில்லாத மக்களுக்கு அமெரிக்கா போன்ற நாட்டிலும்கூட அந்த அரசு ஒருமுறை ரொக்க நிவாரணம் வழங்குவது என முடிவு செய்தது. பொருளாதாரத்தில் எளிய பிரிவு குடும்பங்களின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 1400 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ98ஆயிரம்); அதுமட்டுமின்றி அமெரிக்க அரசு வேலையில்லா உதவித் தொகையை வாரத்திற்கு 400 டாலரிலிருந்து 700 டாலராக (சுமார் 52,500 ரூபாய்) உயர்த்தியது.

            இன்று எதையும் வாங்க இயலாத பண வறட்சி, பற்றாக்குறையில் இந்திய மக்கள் உள்ளனர். வாங்குவது குறையும்போது உற்பத்தி வீழ்ச்சி அடையும்; வேலை இழப்புகள் தொடர் விளைவாகும். பண ஊக்கம் அளிப்பது தனிநபர் நுகர்ச்சியை மேம்படுத்தும், உற்பத்தியை அதிகரிக்கும். இது நோயுற்ற பொருளாதாரத்தை மீட்டு உயிர்ப்பிக்க மிகவும் பொருத்தமானது.

வேலை உறுதியளிப்புத் திட்டம்

            கிராமப்புறப் பகுதிகளில் அமல்படுத்தப்படும் “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்” (MNREGA) திட்டத்திற்கு கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் நகர்ப்புற வேலை இல்லாதவர்களுக்கும் அதுபோன்ற திட்டத்தையும் தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 2016 நவம்பரிலிருந்து இந்தியப் பொருளாதாரம் சரிந்து வருகிறது. கரோனா ஊரடங்குகளால் அந்நிலைமை மேலும் மோசமடைந்தது. கோடிக் கணக்கானவர்கள் வேலையிழந்து, அவர்களில் பலரும் தங்கள் சொந்த கிராமங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். இதன் காரணமாக மகாத்மா காந்தி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்கு டிமாண்ட் அதிகரித்தது; எனவே நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். திட்டத்தில் தற்போது அளிக்கப்படும் 100 வேலை நாட்கள் என்பதை உடனடியாக உயர்த்த வேண்டும். அது தவிர மேம்பட்ட ஊதியம் என்பது நீண்ட நாள் கோரிக்கை. தற்போது நாட்டில் இது அரசியல் கோரிக்கையாக, சமீபத்தில் இராஜஸ்தான் அரசு அதிகபட்ச வேலை நாட்களை ஆண்டிற்கு 125 நாட்களாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர்கள் நிலைமை

            இத்தொழிலாளர்களின் பரிதாப நிலை, அற்பமான குறைந்த கூலி, பணிபாதுகாப்பு/ சமூகப் பாதுகாப்பு இல்லாத நிலைமைகளை அனைவரும் அறிவோம். சமூகப் பாதுகாப்பு பற்றி நிறைவேற்றப்பட்ட புதியதொழிலாளர் கோடு சட்டம், அமைப்புசாரத் தொழிலாளர்களில் பெரும்பகுதியினருக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்குமென ஒன்றிய அரசு பெருமை பேசுகிறது. ஆனால் அது ஒரு பொய் பிரச்சாரம். அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்படி சமூகப்பாதுகாப்பைக் கோரும் தொழிற்சங்கங்கள் அவர்களையும் முறைசார்ந்த தொழிலாளர்களாக மாற்ற வற்புறுத்துகிறது. அமைப்புசாரா தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில், இக்கோரிக்கை ஓரடி முன்னே எடுத்து வைத்ததாகும்.

திட்டம் சார்ந்த பணியாளர்கள்

            இன்று நாட்டில் எங்கு சென்றாலும் அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு தொழிலாளர்கள் மற்றும் பிற திட்டம் சார்ந்த தொழிலாளர்கள் முக்கியப் பணிகளை ஆற்றிக் கொண்டிருப்பதை அல்லது கண்டன எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கலாம். இவர்களில்

பெரும்பான்மையோர் பெண்கள். அவர்களின் பணிக்கு மிகக் குறைவான மதிப்பூதியத்தை, எந்தவித சமூகப் பாதுகாப்பும் இன்றி பெறுகிறார்கள். ஊதியம்தான் குறைவே தவிர, கடினமான கடமைகளை ஆற்ற அவர்கள் பணிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் கரோனா பெருந்தொற்று பரவலின்போது அங்கன்வாடி மற்றும் (சுகாதாரப் பணியாற்றும்) ஆஷா தொழிலாளர்கள் அவரவர் பகுதிகளில் வீடு வீடாக விஜயம் செய்து கணக்கெடுக்கும் பணி, தொற்று பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் நியமிக்கப்பட்டார்கள்.

அவரவர் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரையும் தனிமனித இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தியபோது, உறவினர்கள் இல்லங்களுக்கே செல்ல மக்கள் அஞ்சிய நிலையில், இத்தொழிலாளர்கள் அனைத்து வீடுகளுக்கும் –தங்கள் சொந்த உடல் நல ஆபத்து, குடும்ப உறுப்பினர்கள் உயிருக்கு

அச்சுறுத்தல் ஏற்படுவதைப் பற்றி கவலைப்படாமல் – மக்கள் நலப் பாதுகாப்புப் பணிகளைச் செவ்வனே ஆற்றினார்கள். (எந்த அளவு பொறுப்பாகச் செயலாற்றி இருந்தால் பிரபல‘ஃபோர்ப்ஸ் இந்தியா’ பத்திரிக்கை ஒடிஷாவின் மதில்டா குல்லூ என்ற ஆஷா ஊழியரை ஆண்டின் சிறந்த பத்து பெண்மணிகளில் ஒருவராகத் தேர்வு செய்து பாராட்டு வழங்கியிருக்கும்?)

      இத்தகைய தொழிலாளர்களுக்குச் சட்டபூர்வமான குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பைத் தொழிற்சங்கங்கள் கோருவதில் என்ன தவறு? இத்தொழிலாளர்களை நியாயமாக நடத்தி குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பை அவர்களுக்கு அளிப்பது (நலவாழ்வு) அரசின் பொறுப்பும் கடமையும் அல்லவா? இந்த முன்களப் பணியாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு மற்றும் முழுமையான காப்பீட்டு வசதி செய்து தர வேண்டாமா? இவர்களின் நலன்களைப் புறக்கணிப்பது மனிதத்தன்மையற்ற செயல்!

பணக்காரர்கள் மீது செல்வ வரி

            தொற்று மற்றும் பொருளாதார பாதிப்பில் துன்பப்படும் மக்கள் சமூதாயத்தின் வேளாண்மை, கல்வி, சுகாதார நலன் மற்றும் பொதுமக்களுக்கான பயன்படு சேவைகளை மேம்படுத்தக் கூடுதல் நிதி தேவை. அதற்காக நாட்டின் அதி பணக்காரர்கள் மீது மீண்டும் செல்வவரி மற்றும் தேவையெனில் கூடுதல் பிற வரிகள் விதிப்பையும் கொண்டுவர வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் கோருகின்றன.

கோரிக்கையின் பின்னணி

            விடுதலைக்குப் பின் நம் நாட்டின் வேறு எந்த அரசும் இந்த அளவு மோடி அரசைப்போல தேசப் பொருளாதாரத்தைச் சீரழித்ததில்லை. அவர்களின் தற்பெருமை பிரச்சாரத்திற்கு மாறாக, ஆட்சிக்கு வந்ததும் பொருளாதாரமும் சரிவுப் பாதையில் நுழைந்தது. அரசின் முட்டாள்தனமான பணமதிப்பிழப்பு (டி-மானிடைசேஷன்) முடிவால் அச்சரிவு வேகமெடுத்தது, 2019 -20ம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 3.1 சதவீதமாகக் குறைந்தது. சொச்ச அழிவைக் கரோனா தொற்று விளைவித்தது. ஜிடிபி வளர்ச்சி விகிதம் உலகிலேயே மிகக் குறைந்த அளவாக எதிர்மறையில் (நெகடிவ்) 24 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. உண்மை இவ்வாறு இருக்க, ஆளும் அரசு இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி அடையும் பொருளாதாரம் என (பாசிச ஹிட்லர் அரசின் கோயபல்ஸ் போல) ஓயாமல் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.

இன்றைய பிரச்சனைகளுக்குத் தீர்வு?

          அரசின் உரத்த முழக்கங்களுக்கு மாறாக, தனியார் பிரிவு மேலும் முதலீடுகளுடன் முன்வரவில்லை. இந்நிலையில் தேசியப் பொருளாதார மீட்புக்கும், சமூகத்தின் தேவையான கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு போன்றவற்றிற்குக் கூடுதல் செலவு செய்யவும் மிக முக்கிய  தேவை கூடுதல் பொது முதலீடு அதாவது அரசு மேற்கொள்ள வேண்டிய கூடுதல் முதலீடு. ஆனால் முதலீடு செய்ய அரசிடம் பணம் இல்லை. பிறகு என்னதான் தீர்வு?

            2016ல் ஒழிக்கப்பட்ட செல்வவரி விதிப்பை அரசு மீண்டும் கொண்டுவர வேண்டும். அதைத்தான் தொழிற்சங்கங்கள் கோருகின்றன.

            சில ஆண்டுகளுக்கு முன்பு கார்ப்பரேட் வரிவிகிதம் 35 சதமாக இருந்தது. தற்போது அது 25 சதவீதம், புதிய ஆலை நிறுவனங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே. மோடி ஆட்சிக்கு வந்தபோது 30சதவீதமாக இருந்தது. ஒன்றிய அரசு கார்ப்பரேட் வரியைத் தாராளமாகக் குறைக்க அரசு பணப் பற்றாக்குறையில், வறட்சியில் வாடுகிறது. (நாட்டில் கோடீஸ்வர அதிபணக்காரர்கள் எண்ணிக்கை மட்டும் அதிகரித்தபடி உள்ளது. உலகின் முதல் பத்து பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 9வது இடம் பிடித்துள்ளார்.) இன்று பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையில், பொதுச் சேவைகளுக்காக அரசு மேலும் கூடுதல் முதலீட்டைச் செய்ய வேண்டிய கட்டாய நிலையில், கார்ப்பரேட் வரியை 35 சதவீதமாக அதிகரிப்பது நல்ல வழி இல்லையா? அதி பணக்காரர்கள் மீது மேலும் சில கூடுதல் வரிகள் மற்றும் செல்வவரியை மீண்டும் விதிப்பது பற்றி சிந்திக்க வேண்டாமா? மிகச் சரியாக அதைத்தான் தொழிற்சங்கங்கள் கோருகின்றன.

விலைவாசி உயர்வு

            இந்தியாவின் பற்றி எரியும் பிரச்சனை விலைவாசி உயர்வு. அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் விண்ணைத் தொடும்போது சாதாரண மக்களின் வாழ்க்கை துன்பக் கேணி ஆகிறது. விலைகள் தொடர்ந்து உயரும்போது சாதாரண மக்களின் வருமானம் குறைக்கப்படுகிறது அல்லது தேங்கி நிற்கிறது. ‘விலைவாசியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடு’ என தொழிற்சங்கங்கள் கோருகின்றன.

            மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது சமையல் எரிவாயு உருளை விலை ரூ410, தற்போது சுமார் ஓராயிரமாக உயர்ந்துள்ளது. அப்போது லிட்டருக்கு டீசல் ரூ50, பெட்ரோல் ரூ66 என்பது இன்று டீசல் சுமார் 100 மற்றும் பெட்ரோல் ரூ100ஐ தாண்டி விற்கிறது. என்டிஏ ஆட்சிகாலத்தில் ஒரு முறை கச்சா எண்ணெய் பீப்பாய் 20 டாலரென மிகக் குறைவாக இருந்தும் நுகர்வோர்க்கு அதன் பலனை அளிக்கவில்லை. சென்ற ஐக்கிய முற்போக்கு ஆட்சிகாலத்துடன் இதனை ஒப்பிடலாம்: அப்போது கச்சா எண்ணெய் பீப்பாய் 140 டாலராக மிக அதிகமாக இருந்தபோதும் பெட்ரோல் விலை லிட்டருக்குச் சுமார் ரூ 75 என இருந்தது.

            பெட்ரோல் டீசல் மீதான எக்சைஸ் தீர்வை அதிகரிப்பதன் மூலம் மோடி அரசு மக்களைக் கொள்ளை அடிக்கிறது. 2018 -19 தொடங்கிய மூன்று தொடர்ச்சியான நிதியாண்டுகளில் பெட்ரோல் டீசல் எக்சைஸ் தீர்வையில் அரசு ரூ8.02 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 2021ல் ரூ3.71 லட்சம் கோடி எக்சைஸ் தீர்வை என்பது மக்கள் மீதான எத்தகைய பெரும் கொள்ளை! இக்கொள்ளையை உடனே நிறுத்த உழைக்கும் வர்க்கம் கோருகிறது.

ஒப்பந்தக் கூலி முறை

            இன்றைய காலகட்டத்தில் ஒப்பந்த வேலை என்பதே நடைமுறையாகி உள்ளது. ஆலைகள், தொழில் நிறுவனங்களில் என்று மட்டுமில்லாமல், தற்போது அரசுப் பணியிலும் மேலும் மேலும் பணிகள் ஒப்பந்த முறைக்கு மாறி வருகிறது. அரசுக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில்கூட விரிவுரையாளர்கள் மற்றும் பேராசியர்கள் கான்டிராக்டில் / தற்காலிகமாக/ அட்ஹாக் அடிப்படையில் –நிரந்த ஊழியர்களின் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கு என-- மிகக் குறைந்த ஊதியத்தில் நியமிக்கப்படுகிறார்கள். நிரந்தர ஊழியர்கள் செய்யும் பணியைத்தான் கான்டிராக்ட்/ தற்காலிய/ அட்ஹாக் அடிப்படையில் நியமிக்கப்படுவோரும் ஆற்றுகின்றனர். ஆனால் மிகக் குறைந்த ஊதியமே தரப்படுவது மிகப் பெரும் அநீதி அல்லவா?

தேசம் தழுவிய மாபெரும் போராட்டத்திற்கு அறைகூவல்

இந்த அநீதிகளுக்கு எதிராக இந்திய உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட்டு தன் எதிர்ப்புக் குரலை ஒலிக்கிறது… போராட்ட அறைகூவல் விடுக்கிறது…

எதிர்வரும் மார்ச் 28, 29 இரு நாட்கள் பொது வேலைநிறுத்தம்!

ஒன்றிணைவோம்! வேலை நிறுத்தத்தை மாபெரும் வெற்றிபெறச் செய்வோம்!


--நன்றி: நியூஏஜ் (மார்ச் 6 –12)

--தமிழில் : நீலகண்டன்,

(என்எப்டிஇ) தேசியத் தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனம்,

கடலூர்

No comments:

Post a Comment