Sunday 13 March 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாற்று வரிசை 59 --பிலிப் ஸ்ப்ராட்

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 59


பிலிப் ஸ்ப்ராட்

பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து சிபிஐ கட்சிக்கு

--அனில் ரஜீம்வாலே

            பிலிப் ஸ்ப்ராட் ஒரு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட், இந்தியாவில் குடியேறி இங்கே கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்க இயக்கங்களைக் கட்ட உதவியவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முறையான உறுப்பினராக இல்லாதபோதும் அதனோடும் ஏஐடியுசி தொழிற்சங்கத்துடனும் ஓர் அங்கமாக அவற்றின் வளர்ச்சிக்கு உதவி ஏராளமான பங்களிப்புகளைச் செய்தவர். பிற்காலத்தில் அவர் கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து விலகிச் சென்றார்.

            கிரேட் பிரிட்டனின் கேம்ப்பர்வெல் என்னுமிடத்தில் 1902 செப்டம்பர் 2ல் பிறந்தார். (வீக்கி பீடியா தகவல்படி 1902 செப்டம்பர் 26) அவரது பெற்றோர் ஹெர்பர்ட் ஸ்ப்ராட் மற்றும் நோரா ஸ்ப்ராட். மதஉணர்வு மிக்க அறிவார்ந்த நடுத்தர வர்க்கக் குடும்பம். பிலிபின் மத மறுப்பு 17வயது இளம்பருவத்திலேயே ஏற்பட்டது. அவர் கூறினார்: “சுமார் 17வயதிலேயே 19ம் நூற்றாண்டு பௌதீக அறிவியல் அறிவைப் பெற்றேன், சொந்தமாகவே சிறிதளவு உயிரியல் பற்றியும் படித்தேன்.” ஞாயிறு மாலை வேளைகளில் அருகில் நடை உலாவின்போது, விஞ்ஞானம் மற்றும் மதம் பற்றிய விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம். “நான் மிக நிச்சயமான முடிவுக்கு வந்தேன், மதக் கோட்பாடுகள் சொல்பவை அடிப்படை காரண காரிய ஆழமற்றவை”

            கணிதப் பாடம் படிக்க கேம்ப்பிரிட்ஜ் டவுனிங் கல்லூரியில் சேர்ந்தார், 1921ல் பல்கலைக் கழகக் கல்வி உதவித் தொகையையும் வென்றார். கணிதம் மட்டுமின்றி தத்துவம், மானுடவியல் (ஆந்த்ரபாலஜி) உட்பட பல்வேறு பிரிவுகளில் தானே சோதனைகளிலும் ஈடுபட்டார். (கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கப்படி இளங்கலை பயிலும் மாணவர், பட்டம் பெறுவதற்கு முன்பு தகுதிபெற வேண்டிய, தனது துறைசார்ந்த) மேதமேட்டிக்ஸ் டிரிப்போஸ் தேர்வில் தகுதி பெற்று முதல் வகுப்பு இளம்கலை பட்டம் வழங்கப் பெற்றார்.

அரசியல் மன்றங்களில் சேர்தல்

            பல்கலைக்கழக லேபர் கிளப் போல அரசியல் மற்றும் விவாத மன்றங்கள், யூனியன் சொஸைட்டி மற்றும் ‘தி ஹெராடிக்ஸ்’ என்னும் அதிகாரபூர்வமற்ற விவாதக் குழுவோடும் பிலிப் தொடர்பு கொண்டார். லண்டன் பல்கலைக்கழகத்தின் கம்யூனிஸ்ட் குழுவில் பிலிப் ஸ்ப்ராட் தவிர, மௌரீஸ் டோப், ஜெடி பெர்னல், ஆலன் ஹன்ட், ஏஎல் மோர்ட்டான், பெர்னட் வூல்ஃப், மைக்கேல் ராபர்ட்ஸ் முதலானோர் இருந்தனர். ‘ஒர்க்கர்ஸ் வீக்லி’ என்ற கட்சிப் பத்திரிக்கையை இரயில்வே தொழிலாளர்களிடம் ஸ்ப்ராட், ராபர்ட்ஸ் மற்றும் வூல்ஃப் விற்றனர். ஸ்ப்ராட் மெட்ரோபாலிடன் பகுதி டெப்ஃபோர்டின் தொழிலாளர் ஆய்வுத் துறையில் பணியாற்றினார். அவர் பல்கலைக்கழகத் தொழிலாளர் கட்சியின் உறுப்பினராகவும் இருந்தார்.

இந்தியாவுக்குப் பயணம்

            இந்தியாவில் தொழிற்சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களைத் திரட்டியமைக்க உதவியாக இந்தியா செல்லும்படி புகழ்பெற்ற பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் ஆர்பி தத்-துடைய மூத்த சகோதரர் க்ளமென்ஸ் தத்-தால் ஸ்ப்ராட்1926ல் 24ம் வயதில் கேட்டுக் கொள்ளப்பட்டார். அவருடன் பென் பிராட்லே மற்றும் லெஸ்டர் ஹட்சின்சன் பயணம் செய்தனர்; அம்மூவரும் பின்னர் மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டனர். ஸ்ப்ராட் 1926 டிசம்பர் 30ல் பாம்பே வந்து சேர்ந்தார். மற்றொரு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் ஜார்ஜ் அல்லிசன் (டோனால்டு கேம்ப்பெல்) ஏற்கனவே பாம்பேயில் இருந்தார்.

தொழிலாளர் விவசாயிகள் கட்சி (WPP) மற்றும் இளம் ஒர்க்கர்ஸ் லீஹ்

          ஒருசமயம் ஸ்ப்ராட் பம்பாய் மற்றும் பிற இடங்களில் தொழிலாளர் விவசாயிகள் கட்சி  அமைப்புப் பணிகளில் ஈடுபட்டார். பின்னர் அக்கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கு உயர்ந்தார். இளம் தோழர்கள் அமைப்பு மற்றும் பிறகு யங் ஒர்க்கர்ஸ் லீஹ் என்ற இரண்டு சக்தி வாய்ந்த தனித்துச் செயல்படும் ஜனரஞ்சக முன்னணிகளை WPP கட்சி 1927 –30களில் ஏற்படுத்தியது. அவற்றின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளில் ஸ்ப்ராட் முக்கிய பங்காற்றினார். அது குறித்து அவர், WPP கட்சி முன்னெடுத்த லீஹ் அமைப்புகள் நாட்டில் விரிவாகப் பரவியது என எழுதியுள்ளார்.

            காங்கிரஸ் கட்சி ‘நடைமுறையில் செயலற்று இறந்து போன’தாக இருப்பதால், WPP கட்சி காங்கிரஸ் கட்சிக்கு இணை அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்பது எம்என் ராயின் மதிப்பீடு. அந்த மதிப்பீட்டை WPP கட்சியில் பிலிப் ஸ்ப்ராட்டும் மற்றவர்களும் ஏற்கவில்லை. இடதுசாரி கொள்கைகளை வலுப்படுத்த காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து பணியாற்றுவது மற்றும் அதே சமயம் சுதந்திர அமைப்பாகவும் செயல்படுவது என்பது அமைப்பு விதிகள்படி WPP கட்சியின் திட்டமாகும். 

‘இந்தியா – சீனா’ சிற்றேடு விசாரணை

            ஸ்ப்ராட் ‘இந்தியா மற்றும் சீனா’ என்ற தலைப்பில் ஒரு சிறு பிரசுரத்தை (புக் லெட்) எழுத அதை எஸ்எஸ் மிராஜ்கர் WPP கட்சியின் சார்பில் வெளியிட்டார். இதன் காரணமாக அவர் மீது விசாரணை நடந்தது. 1927ல் சீனாவில் புரட்சி முன்னேறி வந்தது, இந்திய விடுதலை இயக்கத்தின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மேடம் சன் யாட் சென் உட்பட சீனப் புரட்சியாளர்களை ஜவகர்லால் நேரு புரூசெல்ஸில் ‘ஏகாதிபத்தியத்திற்கு எதிரான லீஹ்’ அமைப்பு மாநாட்டின்போது சந்தித்தார்.

            பாம்பேயில் இருந்த கம்யூனிஸ்ட்கள் ‘நேஷனல் ஹெரால்டு’ நாளிதழில் சீனா குறித்துப் பல கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டது. பிலிப் ஸ்ப்ராட்டும் தொடர்ச்சியான பல கட்டுரைகளை ‘ஒரு சர்வதேசியவாதி’ என்ற தலைப்பில் எழுத, அக்கட்டுரைகளே மே 1927ல் மேலே குறிப்பிட்ட சிறு கையேடாக வெளியானது. அப்பிரசுரத்தின் அறிமுக உரையைப் பிரபல ஷக்லத்வாலா அளித்திருந்தார். அச்சிற்றேடு சக்திமிக்க தாக்கத்தை ஏற்படுத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதனைத் தடை செய்தனர். மிராஜ்கர் வீடு, WPP கட்சி அலுவலகம் மற்றும் செய்தித்தாள் அலுவலகங்களிலும் நாடு முழுதும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 1927 செப்டம்பர் 6ல் பாம்பே YMCA விடுதியில் ஸ்ப்ராட் வசிப்பிடத்திலும் சோதனை நடத்தி கையால் எழுதப்பட்ட சில ஆவணங்களைக் கைப்பற்றினர். ஸ்ப்ராட் மற்றும் மிராஜ்கர் ‘கிராந்தி’ மராத்தி இதழ் அலுவலகத்தில் சட்டப் பிரிவு 124–ஏ வின் கைது செய்யப்பட்டனர். ஆர்தர் ரோடு சிறையில் இரண்டு மாதங்களுக்கு மேல் ஸ்ப்ராட் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். ஸ்ப்ராட்டை ஜூரிகள் விசாரிப்பதிலிருந்து அரசுத் தரப்பு வழக்கறிஞரால் தடுக்க முடியவில்லை. விசாரணையின் முடிவில் ஜூரிகள் ஸ்ப்ராட் ‘குற்றமற்றவர்’ என அறிவித்தனர். வேறுவழியின்றி ஸ்ப்ராட்டை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஃபாசெட் விடுவிக்க வேண்டி வந்தது. விசாரணையில் ஸ்ப்ராட்டுக்கு ஆதரவாக வாதாடியவர் தலையார்கான்.

            அந்த வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றும்படியும், வழக்கில் ஐரோப்பிய ஜூரியை வற்புறுத்துவதை ஸ்ப்ராட் கைவிட்டு அதனை இந்திய ஜூரியால் மாற்றியமைப்பதற்கு ஒப்புக்கொள்ளும்படி முகமது அலி ஜின்னா சரோஜினி நாயுடுவுக்கு அறிவுறுத்தினார்; பின்னர் அதுதான் நடந்தது. பாம்பே தோழர்கள் சரோஜி நாயுடுவை “அம்மா” என்று அழைப்பார்கள்! விடுதலை இயக்கத்துடன் கம்யூனிஸ்ட்கள் உறவின் நெருக்கம் அந்த அளவு பிணைக்கப்பட்டது.

            ஸ்ப்ராட் 1927ல் சில இரகசிய கடிதங்களுக்காகக் கைது செய்யப்பட்டார்; ஆனால் இந்த சிறு பிரசுரத்திற்காகத் தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டார்.

            1927 நவம்பர் 28ல் பேட்டர்சீ வடக்குத் தொகுதி பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர் ஷபூர்ஜி சக்லத்வாலா,  இந்திய அரசின் அண்டர் செக்ரட்டரி ஏர்ல் வின்டர்டன் அவர்களிடம், “ஸ்ப்ராட்டின் விசாரணைக்கு சில வாரங்களுக்கு முன்பே, எந்த ஜூரியும் குற்றம் இழைத்ததாக முடிவு செய்யாதபோதே, அவரை முறைதவறி சிறையில் அடைத்திருப்பது பற்றியும் அவருக்குப் பிணை தர மறுத்தது பற்றி”யும் கேள்வி எழுப்பினார். ‘ஸ்ப்ராட்டுக்குப் பிணை மறுத்தது பாம்பே உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் தேவர்; எனவே நீதிமன்றத்தின் அதிகாரத்தில் தலையிடுவது முறையல்ல’ என்று பதிலளித்த வின்டர்சன், மேற்கொண்டு எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க மறுத்து விட்டார்.

            ஸ்ப்ராட் விடுதலை செய்யப்பட்ட பிறகும் பாம்பேயின் அரசு, வழக்கில் ‘அரசுத் தரப்பு (ப்ராஸிகூஷன்) சட்ட நியதியில் சரியாக நடந்து கொண்டதா’ என்பது பற்றி உறுதியற்று இருந்தது!

             ‘1927 –28ல் இந்தியா’ என்பது பற்றிய பிரிட்டிஷ் அரசின் அதிகாரபூர்வ ஆண்டு வெளியீட்டில் பிலிப் ஸ்ப்ராட் (இந்தியாவில்) வலிமையான செல்வாக்கு செலுத்தினார் எனக் குறிப்பிட்டது.

ஏஐடியுசி அமர்வுகள்

            தொழிற்சங்கங்களைத் திரட்டி அமைப்பதிலும் ஏஐடியுசி அமைப்பிலும் ஸ்ப்ராட் தீவிரமாகப் பங்குபெற்றார். ஏஐடியுசி-யின் 7வது ஆண்டு மாநாடு டெல்லி இந்து கல்லூரியில் 1927 மார்ச் 12–13 தேதிகளில் நடைபெற்றது. அம்மாநாட்டில் விவி கிரி, எஸ்வி காட்டே, லாலா லஜபதி ராய், மிராஜ்கர், நம்கர், ஸ்ப்ராட் மற்றும் பிற தலைவர்கள் கலந்து கொண்டனர். அம்மாநாடு பற்றி விரிவான தகவல்களைப் பதிவிட்ட ஸ்ப்ராட் மாநாட்டில் தீவிரமான பங்காற்றினார்.

            1928 நவம்பரில் கான்பூரில் நடைபெற்ற ஏஐடியுசி-யின் 8வது மாநாட்டில் எஸ்ஏ டாங்கே, விவி கிரி, என்எம் ஜோஷி, பிலிப் ஸ்ப்ராட் மற்றும் பிறர் கலந்து கொண்டனர். பிரிட்டிஷ் தொழிற்சங்க கவுன்சில் சார்பில் ஜோன்ஸ், பூர்செல் மற்றும் ஹால்ஸ்ஒர்த் கலந்து கொண்டனர். ‘இந்தியா–சீனா‘ சிறு பிரசுர வெளியீட்டின் மீதான பிரச்சனையில் ஸ்ப்ராட்டின் வழக்குக்கு ஆதரவாக ரூ 1000 ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டது.

            அந்த அமர்வில் ஸ்ப்ராட் விசாரணை உட்பட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தருணத்தில், இடதுசாரி அணி வலுவடைந்திருந்தது; உண்மையில் இடதுசாரி குழுவின் செயல்பாடு குறித்து ஏஐடியுசியில் எல்ஏ டாங்கே தனியான ஓர் அறிக்கை தாக்கல் செய்தார். மாநாடு தேர்ந்தெடுத்த நடவடிக்கை குழுவில் ஸ்ப்ராட் ஓர் உறுப்பினராகத் தேர்வானார்.

            இந்தியத் தொழிற்சங்க இயக்கம் பற்றி ஒரு பரிசீலனை ஆய்வறிக்கையை ‘லேபர் மத்லி’ 1927 அக்டோபர் இதழில் ஸ்ப்ராட் வெளியிட்டார். அதில் தொழிற்சங்க அமைப்பு, அதன் கட்டமைப்பு, சங்க வாரியாகவும் தொழிற்சாலை வாரியாகவும் உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் ஆலைவாரியாகவும் பிரிவு வாரியாகவும் (நடத்தப்பட்ட) இயக்கங்கள் என விரிவான பல தகவல்களை அளித்தார்.  

            மிராஜ்கர், ஜோக்லேக்கர், மாயேக்கர், ஸ்ப்ராட் மற்றும் பிறர் அப்பல்லோ, மான்ஸ்செஸ்டர் மற்றும் பாம்பேயின் பிற ஆலைகளிலும் பேரணிகள் மற்றும் வேலை நிறுத்தங்களை நடத்தினர். கிர்ணி காம்கர் மகாமண்டல் மற்றும் பாம்பே டெக்ஸ்டைல் தொழிற்சங்கத்தை இணைப்பதற்கான முயற்சிகள் நடந்தன; அம்முயற்சிகளின் விளைவாய்ப் பின்னர் 1928ல்   ‘கிர்ணி காம்கர் யூனியன்’ (GKU) என்ற ஒன்றுபட்ட அமைப்பு மலர்ந்தது.

            இந்திய எக்ஸிக்யூடிவ் கவுன்சில் மற்றும் தொழிற்சங்க இயக்கத்திற்குத் தாக்கல் செய்வதற்காக ‘இந்தியத் தொழிலாளர் அமைப்பு விதிகள்’ (லேபர் கான்ஸ்டிடீயூஷன் ஆப் இந்தியா) என்ற வரைவு நகலை உருவாக்க துணைக்குழு அமைக்கப்பட்டது; அதில் டாங்கே, என்எம் ஜோஷி, தேவான் சமன்லால் மற்றும் மற்றவர்களுடன் ஸ்ப்ராட்டும் இணைத்துக் கொள்ளப்பட்டார். அந்த வரைவறிக்கை பரவலாக விவாதிக்கப்பட்டது. அது குறித்த விரிவான முன்மொழிவுகள் மற்றும் கட்டுரைகளை ஸ்ப்ராட் எழுதினார்.

            இத்தருணங்களில் கல்கத்தா, பாம்பே மற்றும் பிற இடங்களில் நடைபெற்ற சணல் ஆலைகள் மற்றும் பிற தொழிலாளர் போராட்டங்களில் ஸ்ப்ராட் கலந்து கொண்டார்.

அரசியல் நிர்ணய சபை முழக்கங்கள்

            1927ல் மெட்ராசில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டு அமர்வில் ஸ்ப்ராட் கலந்து கொண்டார். பிலிப் ஸ்ப்ராடுடன் ஆலோசித்து முஸாஃபர் அகமது தயாரித்த WPP அறிக்கை’ (மெனிபெஸ்டோ ஆப் WPP) அந்த அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு 1928ல் வெளியிடப்பட்ட அவ்வறிக்கை டிசம்பர் 1928 WPP கட்சியின் கல்கத்தா மாநாட்டில் முறையாக ஏற்கப்பட்டது. அதன் மத்திய செயற்குழுவில் ஸ்ப்ராட் இடம் பெற்றார். அரசியல் நிர்ணய சபையை அமைக்கவும், வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடத்தவும் அது மிக முக்கியமாக அறைகூவல் விடுத்தது.

            ‘மெட்ராஸ் அமர்வுக்கான அறிக்கை’ (மெனிபெஸ்டோ)வின் முதல் பக்கத்தில் ‘தேசிய அரசியல் நிர்ணய சபை’, ‘வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை’ மற்றும் ’பூரண விடுதலை’ போன்ற முழக்கங்கள் இடம் பெற்றன.

அனைவரும் அறிந்த வரையில், வரையறுக்கப்பட்ட வாக்குரிமை அடிப்படையில் அரசியல் நிர்ணய சபை அமைக்க வேண்டும் என்பதற்கான முழக்கம், 1927ல் காங்கிரஸ் தலைவராக இருந்த எஸ் ஸ்ரீனிவாச அய்யங்காரால் தரப்பட்டதாகும். எம்என் ராயும்கூட 1928ல் அயல்நாட்டிலிருந்து தனது இதழில் அத்தகைய முன்மொழிவை எழுப்பியிருந்தார்; என்றாலும் அது முழுமையாகக் குழுவாதப் போக்கில் அமைந்த ஒன்றாகும். ஏனெனில், முழு விடுதலை தீர்மானம் காங்கிரஸால் நிறைவேற்றப்பட்டதால்  ‘மெட்ராஸ் (அமர்வில்) மேலெழுந்தவாரியாக வெற்றி” பெற்றதாக தேசியப் புரட்சியாளர்கள் தவறாக வழிநடத்தப்பட்டுவிடக் கூடாது என்று அவர் கருத்து கொண்டிருந்தார்.

1928ல் கல்கத்தாவில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களின் இரண்டு வேலை நிறுத்தங்களுக்கு ஸ்ப்ராட் பொறுப்பாக இருந்தார்.

(1929 –33) மீரட் சதி வழக்கில்

            1929 மார்ச் 20ல் நாடு முழுவதும் மற்ற 31பேர்களுடன் மீரட் சதிவழக்கில் பிலிப் ஸ்ப்ராட் கைது செய்யப்பட்டு மீரட் சிறையில் அடைக்கப்பட்டார். முதலில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டாலும் பின்னர் அது குறைக்கப்பட்டது. 1929 ஜூன் 20ல் மீரட் சிறையில் ஸ்ப்ராட், ப்ராட்லே, ஹட்சின்சன் மற்றும் அதிகாரியைத் தான் சந்தித்ததாக சுகாசினி சட்டோபாத்யாயா தனது சகோதரி மிராளிணிக்கு எழுதினார். தங்கள் தரப்பு வழக்கு ஆவணத் (டிஃபன்ஸ் கேஸ்) தயாரிப்பில் ஸ்ப்ராட் ஆழமாக ஈடுபட்டார். மார்க்சின் மூலதனம் உட்பட மாக்ஸியம் குறித்த தங்களது நூல்களைத் திரும்ப வழங்கும்படி ஸ்ப்ராட்டும் முஸாஃபர் அகமதும் சேர்ந்து ஒரு மனுவை அளித்தனர். ஆனால் வினோதமான காரணம் கூறி அந்த மனு நிராகரிக்கப்பட்டது: அந்நூல்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களின் திருப்தியின்மையைக் கிளறித் தூண்டிவிடப் பயன்படுத்தப்படலாம் என்று காரணம் காட்டினார்கள்!

மீரட் சிறையில் தனக்குக் கிடைத்த பொழுதை ஸ்ப்ராட் நன்கு பயன்படுத்தினார். இந்தி மொழியைக் கற்றார், அவர் படித்த புத்தகங்களில் முதலாவது காந்திஜியின் ‘ஆத்மகதா’ (சுயசரிதை). அவை தவிர, சௌகத் உஸ்மானி எழுதிய “பெஷாவரிலிருந்து மாஸ்கோவுக்கு : ஓர் இந்திய முஹாஜிரீன் நாட்குறிப்பிலிருந்து சில பக்கங்கள்” என்ற நூலுக்கு ஸ்ப்ராட் முன்னுரையும் எழுதியுள்ளார். [முஹாஜிரீன் என்றால் முகமது நபி அவர்கள் மெக்காவிலிருந்து மதினா சென்றபோது (ஹஜீரா) முகமதைப் பின்பற்றி தொடர்ந்து அவருடன் சென்றவர்கள் என்று பொருள். எனவே பொதுவாகப் புலம் பெயர்ந்த முஸ்லீம்களைக் குறிக்கும்.]

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதம்

            மீரட் சதி வழக்கு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆப் காமன்ஸ் எனப்படும் மக்கள் பிரதிநிதிகள் சபையில் பல முறை விவாதங்கள் நடைபெற்றன. பிலிப் ஸ்ப்ராடின் நிலைமை குறித்து 1935 மார்ச் 7ல் விவாதிக்கப்பட்டது. டோனர், இந்தியாவுக்கான அரசுச் செயலாளரிடம், ‘பிலிப் ஸ்ப்ராட் பாம்பே மாகாணத்தின் பெல்காம் கோட்டையில் எமர்ஜென்சி பவர்ஸ் ஆக்டின் கீழ்  சிறை வைக்கப்பட்ட உண்மை குறித்து அவருக்குத் தெரியுமா என்றும் அவர் திருப்பி அனுப்பப்படுவாரா’ என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

            பட்லர் அதற்குப் பதில் கூறும்போது, எமர்ஜென்சி பவர்ஸ் ஆக்டின் பிரிவு 4ன்படி கோட்டையின் எல்லைக்குள்ளே வைக்கப்பட்டுள்ள அவருக்கு பொருத்தமான வீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். ஆனால் ஸ்ப்ராட், இந்தியாவை விட்டுச் செல்ல தனக்கு வழங்கப்பட்ட அந்த வாய்ப்பை மிக உறுதியாக மறுத்துவிட்டார்.

            ஹெச் வில்லியம்ஸ் கேள்வி எழுப்பினார் : “நான் ஒரு சதியில் ஈடுபட்டு, (அதற்கான) தண்டனை காலத்தை அனுபவித்து முடித்தால் எனக்கு ஒரு வீடு வழங்கப்படுமா?“!

            நைனி சிறையிலிருந்து ஸ்ப்ராட் 1934 அக்டோபரில் விடுதலையானார்.  

சிறையிலிருந்து விடுதலையான பிறகு

            அங்கிருந்து கல்கத்தா சென்றவர் சிபிஐ தலைவர் அப்துல் ஹலீம் உட்பட பல்வேறு தலைவர்களுடன் தங்கினார். அப்போது பல குழுக்களாகப் பிரிந்திருந்த கம்யூனிஸ்ட்களின் பல கூட்டங்களில் அவர் கலந்து கொண்டார்.

            1934 அக்டோபர் தொடக்கத்தில் ஜான்சி சென்று ஜோக்லேக்கர் மற்றும் அயோத்யா பிராஸாத்துடன் இரயில்வேத் தொழிலாளர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். 1934 பாம்பே காங்கிரஸ் அமர்வில் விடுதலை குறித்து அவர் ஆற்றிய உரையின் நகல்கள் சுற்றறிக்கையாக வழங்கப்பட்டது. ஜோக்லேக்கருடன் 1934 அக்டோபர் 8ல் பாம்பே அடைந்த அவரை யங் ஒர்க்கர்ஸ் லீஹ் அலுவலகத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். 1934 அக்டோபர் 21ல் பாம்பேயில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் சோஷலிஸ்ட்களின் பொது அமர்வில் (ஓபன் செஷன்) கலந்து கொண்டார்.  அக்டோபர் 28ல் பத்திரிக்கை தொழிலாளர்கள் சங்கத்தின் கூட்டத்திலும் பின்னர் அக்டோபர்31ல் பல்வேறு தொழிற்சங்கங்களின் இணைந்த கூட்டத்திலும் கலந்து கொண்டார். ‘ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அனைவருக்கும் ஒரு வேண்கோள்’‘ என்பதை அவர் வெளியிட்டார்.  

            நவம்பர் 14ல் வார்தாவுக்குப் புறப்பட்ட ஸ்ப்ராட் அங்கே காந்திஜியைச் சந்தித்து அவருடன் மூன்று நாட்கள் உரையாடினார். நவம்பர் 18ல் மெட்ராஸ் வந்தடைந்தவர் யங் ஒர்க்கர்ஸ் லீஹ் மற்றும் சிபிஐ உறுப்பினர்களைச் சந்தித்தார்.

            மக்களின் சட்ட மறுப்புப் போராட்ட இயக்கத்தை அடக்குவதற்காகக் கொண்டுவந்த கடுமையான அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஸ்ப்ராட் 1934 டிசம்பரில் மீண்டும் கைதானார். பெல்காம் கோட்டையில் அடைக்கப்பட்டவர் 1936 ஜூன் 6ல்தான் விடுதலையானார்.

            1934ல் மெட்ராஸில் ‘தென்னிந்தியாவின் முதலாவது கம்யூனிஸ்ட்’ என்ற பெரும் புகழ்பெற்ற சிந்தனைச் சிற்பி ம சிங்காரவேலு அவர்களுடன் தொடர்பு கொண்டார். அதே வருடம் அவருக்குச் சிங்காரவேலரின் உடன்பிறந்தார் பேத்தியான சீத்தா உடன் பழக்கம் ஏற்பட்டது. 1939ல் பிலிப்பும் சீத்தாவும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு நான்கு குழந்தைகள்: ஹெர்பர்ட் மோகன் ஸ்ப்ராட், அர்ஜுன் ஸ்ப்ராட், ராதா நோரா ஸ்ப்ராட் மற்றும் இராபர்ட் ஸ்ப்ராட் ஆகியோர்.

            பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குள் நடைபெற்ற இரகசியக் கடிதப் போக்குவரத்துக்களில் ஸ்ப்ராட் குறித்து, “இந்தியாவில் இருக்கும் இந்திய அரசுக்கு மிக மிக அபாயகரமான எதிரி” என்று குறிப்பிட்டுள்ளனர்.

கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து விலகிச் செல்லல்

            ஸ்ப்ராட் இங்கிலாந்து திரும்பிச் செல்லவில்லை, இந்தியாவிலேயே தங்கி விட்டார். தொடர்ந்து தீவிரச் செயல்பாடுகளில் ஈடுபட்ட வாழ்வை மேற்கொண்டாலும், அவர் மெல்ல மெல்ல இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து விலகிச் செல்லத் தொடங்கினார். (ஆளும் காங்கிரஸ் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள் மீது, சந்தைப் பொருளாதார ஆதரவாளரான அவருக்கு விமர்சனம் இருந்தது.) மீரட் வழக்கின்போது அவருக்குச் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இரண்டாம் உலகப்போர் நெருங்கும்போது சோவியத் யூனியன் குறித்து அவர் மேலும் விமர்சனம் செய்து சிபிஐ கட்சியுடன் கூர்மையான வேறுபாடுகளும் வளர்ந்தன.  

            1943ல் எம்என் ராயின் ‘தீவிர ஜனநாயகக் கட்சி’யில் சேர்ந்தார். ஆனால் அதற்கு முன் (இதே) எம்என் ராய் மீது அவர் விமர்சனம் செய்திருந்தார். அந்தக் கட்சி நீடித்திருந்த 1948வரை ஸ்ப்ராட் அக்கட்சியில் இருந்தார். ‘கலாச்சார விடுதலைக்கான இந்தியக் காங்கிரஸ்’ அமைப்பின் செயலாளர் ஆனார். பெங்களூருவிலிருந்து வெளியான ‘மைஸ்இந்தியா’ (MysIndia) என்றழைக்கப்பட்ட (டி என் ஹோசாலி நிறுவிய அமெரிக்க ஆதரவு) வலதுசாரி வாரப் பத்திரிக்கையின் ஆசிரியராக 1964வரை இருந்தார். பின்னர் அவர் மெட்ராசுக்கு இடம் பெயர்ந்து சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரி (மூதறிஞர் ராஜாஜி) நிறுவிய சுதந்திரா கட்சியின் இதழான “சுயராஜ்யா” இதழின் ஆசிரியரானார். பன்மொழி அறிந்த ஸ்ப்ராட் தமிழ், ஜெர்மனி, பிரெஞ்ச், சமஸ்கிருதம் மற்றும் இந்தியிலிருந்து புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

தன் வாழ்க்கைச் சம்பவங்களைச் சுயசரிதையாக ‘இந்தியாவில் (தென்றலாய்) வீசினேன்’ (‘Blowing up India’) என்ற நூலாக 1955ல் எழுதினார்.

            வாழ்க்கை முழுவதும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த செயல்பாடு மிக்க வாழ்வை வாழ்ந்த பிலிப் ஸ்ப்ராட், கேன்சர் நோய் காரணமாக, மெட்ராசில் 1971 மார்ச் 8ம் நாள் மண்ணுலக வாழ்வைவிட்டு நீங்கினார்.

            அந்தக்கால நிகழ்வுகளின் பதிவாய் அவர் எழுதிக் குவித்தவைகள் மறுவாசிப்புக்காகக் காத்திருக்கின்றன!

நன்றி : நியூஏஜ் (பிப்.06 --12)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

  

No comments:

Post a Comment