Tuesday 22 February 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 58 -- பூபேஷ் குப்தா

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 58



பூபேஷ் குப்தா – தலைச் சிறந்த பாராளுமன்ற ஆளுமை,

கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டியவர்

--அனில் ரஜீம்வாலே

நன்றி : நியூஏஜ் (ஜன.23 --29)

            பூபேஷ் குப்தா இந்திய நாடாளுமன்றத்தின் ‘புயல் கடற்பறவை’, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒளிரும் அரிய நட்சத்திரம், ஆகச் சிறந்த சொற்பொழிவாளர். கிழக்கு வங்கத்தின் (தற்போதைய பங்களாதேஷ்) மைமென்சிங் மாவட்ட இட்னா என்ற ஊரில் 1914 அக்டோபர் 20ம் நாள் பிறந்தார். அவருடைய தந்தை ஸ்ரீ மகேஷ் சந்திர குப்தா பணக்கார பெருநிலக்கிழார். செல்வம் மிக்க குடும்பத்தில் பிறந்தாலும் அது குறித்து அக்கறைப்படாது 16 வயதிலேயே தேசிய இயக்கத்தில் குதித்தவர், பின்னர் ஒருபோதும் திரும்பிப் பார்க்கவில்லை. திருமணம் செய்து கொள்ளாது வாழ்நாள் முழுவதும் தேச சேவை மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நன்மை என்ற ஒரே திட சிந்தனை அர்ப்பணிப்புடன் ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.

            இளமையில் படிக்கும் காலம் முழுமையும் பூபேஷ் புத்திசாலி மாணவராகக் கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்காட்டிஷ் சர்ச் காலேஜ் (சுவாமி விவேகானந்தர் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் இக்கல்லூரியின் பழைய மாணவர்கள்) மற்றும் லண்டன் யுனிவர்சிட்டி காலேஜில் கல்வி கற்றார். தனது எஃப்.ஏ., மற்றும் பி.ஏ., தேர்வுகளைப் பெஹ்ராம்பூர் தடுப்பு முகாமிலிருந்து சிறப்புத் தகுதியுடன் தேர்வானார். பெஹ்ராம்பூர் முகாமின் ஒரே அறையில், சிபிஐ கட்சியைப் பீகாரில் நிறுவியவரான சுனில் முகர்ஜியுடன் ஒன்றாய், அவர் நான்கு ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார்.

புரட்சிகர இயக்கங்களிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும்

            விரைவில் பூபேஷ் தேசியப் புரட்சியாளர்களின் மேஜிக் வட்டத்திற்குள் ஈர்க்கப்பட்டு சுரேந்திர மோகன் ஹோஷ் தலைமையிலான அனுஷீலன் (ஆயுதப்) புரட்சிக் குழுவில் சேர்ந்தார். ஒத்துழையாமை இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார். 1930, 31 மற்றும் 1933ம் ஆண்டுகளில் பலமுறை கைதாகி 1937வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போதுதான் அவருக்கு மார்க்ஸியத் தத்துவக் கோட்பாடுகளுடன் அறிமுகம் ஏற்பட்டது.

          அவருடைய தந்தையோ அரசியலிலிருந்து அவர் விலகியிருக்க விரும்பினார். எனவே மேல் படிப்புக்காகப் பூபேஷை இங்கிலாந்து அனுப்பும்படி அரசுக்குக் கடிதம் எழுதினார்; அரசும் அதனை ஏற்க பூபேஷ் சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றார். சட்டக் கல்விக்கான இங்கிலாந்தின் நான்கு அமைப்புகளில் ஒன்றான லண்டன் மிடில் டெம்பிளிலிருந்து அவர் அழைக்கப்பட்டார். (பாரிஸ்டர்களாக இங்கிலாந்து பார் கவுன்சிலிலுக்குத் தங்கள் உறுப்பினர்களைப்  அழைக்க உரிமைபெற்ற The Honourable Society of the Middle Temple தவிர மற்ற மூன்று அமைப்புகள் இன்னர் டெம்பிள், கிரேஸ் இன் மற்றும் லிங்கன்ஸ் இன்)

            ஆனால் இங்கிலாந்தில் அவருக்குக் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) மற்றும் மாணவர் இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட கம்யூனிஸ்டாக மாறினார். இந்தியக் கம்யூனிஸ்ட்கள் உள்பட மிகப் பெரும் எண்ணிக்கையிலான கம்யூனிஸ்ட்களை அங்கே அவர் சந்தித்தார். 1941ல் இந்தியா திரும்பிய பூபேஷ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராகத் தன்னை அர்ப்பணித்தார். தொடக்கத்தில் சிபிஐ தலைமறைவுத் தலைமையகத்தில் பணியாற்றினார். 1941ல் நிறுவப்பட்ட “சோவியத் யூனியன் நண்பர்கள்” (FSU) அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராக அவர் விளங்கினார்.

1943ல் வங்கத்தின் பெரும் பஞ்சத்தின்போது ‘ஜன ரக்க்ஷ சமிதி’ (மக்கள் பாதுகாப்புச் சபை) அமைப்பின் உறுப்பினராக பூபேஷ் ஏராளமான பெரும் பணிகளை ஆற்றினார். ‘மக்கள் நிவாரணக் கமிட்டி’யின் நிறுவனராகவும் இருந்தார். 1946ல் குற்றம் சாட்டப்பட்ட தேபகா விவசாயிகளுக்கு ஆதரவாக வாதாடினார். இந்தியப் பாதுகாப்பு விதிகளின் கீழ் 1946ல் கட்டாய நடுவர் தீர்ப்பு விசாரணையில் டெல்கோ உட்பட ஜாம்ஷெட்பூர் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் அவர் வாதாடினார்.

பிடிஆர் காலத்திலும் மற்றும் நாடாளுமன்றத்திலும் பூபேஷ்

            கட்சிக்குப் பெரும் சேதத்தை விளைவித்த 1948 –50களில் பிடிஆர்-இன் (படத்தில் பாலச்சந்திர திரியம்பக் ரணதிவே) இடதுசாரி குழுவாதச் சாகசப் போக்கு பாதையின்போது பூபேஷ் தலைமறைவாகச் சென்றார்.

            1947ல் சிபிஐ-யின் மேற்கு வங்க மாகாணக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951ல் கட்சி வங்காளமொழி தினசரியான ‘ஸ்வாதின்தா’ (சுதந்திரம்) ஆசிரியர் குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். அரசு சிபிஐ கட்சியைச் சட்டவிரோதம் என அறிவித்ததால் 1951ல் கைது செய்யப்பட்ட அவர் 1952 ஏப்ரல் வரை சிறையில் இருந்தார்.

            தேர்தலில் போட்டியிடுவது எனக் கட்சி முடிவெடுத்த பிறகு மாநிலங்கள் அவைக்கு அவர் 1952ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிலிருந்து அவர் மறையும்வரை நீண்டகாலம் அந்த அவையின் உறுப்பினராக அவர் சேவையாற்றினார். 1977 ஜூன் 22 அன்று மக்களவையின் (ராஜ்ய சபா) வெள்ளிவிழா மற்றும் அந்த அவையின் 100வது கூட்டத் தொடரில் பூபேஷ் குப்தா தனித்துவமாகப் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டார்.

           

அனைத்திந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் (AIPSO) மற்றும் சமாதான இயக்கத்தில் அவர் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். 1979ல் இனவாதம் மற்றும் இனஒதுக்கல் குறித்து அவர் ஆற்றிய அற்புதமான சொற்பொழிவுக்குப் பிறகு கிங்ஸ்டன், ஜமைக்கா போன்ற நகர்களின் நாளிதழ்கள் அவரைக் காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டின் கதாநாயகன் என்று புகழ்ந்து கொண்டாடின.

கட்சியில் வகித்த பொறுப்புகள்

            1953 –54ல் மதுரையில் நடைபெற்ற மூன்றாவது கட்சி காங்கிரசில் பூபேஷ் குப்தா சிபிஐ மத்திய குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 பாலகாட் காங்கிரசில் முதன் முறையாக அவர் பொலிட் பீரோவுக்குத் தேர்வானார். 1958 அமிர்தசரஸ் மாநாட்டில் கட்சி அமைப்பு மாற்றியமைக்கப்பட்ட பிறகு மத்திய செயலகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பூபேஷ் 1981ல் அவர் மறையும்வரை அப்பொறுப்பை வகித்தார்.

            1954 முதல் 1957 வரையிலும் மற்றும் 1966லிருந்து அவர் மரணமடைந்த 1981வரை கட்சியின் நியூஏஜ்’ இதழின் ஆசிரியராக இருந்தார். குறிப்பாக ஞாயிற்றுகிழமைகளில் நியூஏஜ் இதழுக்கான அவரது தலையங்கங்கள் மற்றும் கட்டுரைகளை 1937ல் இங்கிலாந்திலிருந்து அவர் வாங்கி வந்த அக்காலகட்டத்தின் ரெமிங்டன் டைப்ரைட்டரில் டைப் அடிப்பார். (ராஜ்யசபையில் ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உள்துறை அமைச்சர் கே சி பந்த், “சொத்துரிமை குறித்துப் பூபேஷ் குப்தா அக்கறைப்படுவதில் நான் மகிழ்கிறேன்”

என்று கூறியபோது, சுவரில் எறிந்த பந்தாக பூபேஷ் பதிலளித்தார்: “உண்மைதான், என்னிடம் சொத்து இருக்கிறது. நான் வைத்திருக்கும் டைப்ரைட்டர்தான் எனது விலை உயர்ந்த சொத்து” என்றார் (–தி ஹவுஸ் லாப்ஸ், ராஜ்ய சபாவில் அறிவார்ந்த நகைச்சுவையும் சிரிப்பும் என்ற தொகுப்பிலிருந்து). 1981 ஜூலையில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி தீர்மானத்தின் மீது மாஸ்கோவிலிருந்து அவர் எழுதிய கட்டுரை, இறுதிக் கட்டுரையானது. இந்தத் தீர்மானத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு, ‘கலாச்சாரப் புரட்சி’ என அழைக்கப்பட்ட சீனாவில் நடந்த நிகழ்வை விமர்சனம் செய்து, அந்த அழிவுக்கு மாவோதான் பொறுப்பு எனக் கூறியது.

            சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிசி)யிடமிருந்து மாவோயிசத் தத்துவார்த்த மற்றும் அரசியல் தாக்குதல் நடைபெற்ற நாட்களிலும் அதைத் தொடர்ந்து 1964ல் சிபிஐ கட்சி பிளவின்போதும் பூபேஷ் குப்தா பிளவைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்த ஆகச் சிறந்த முயற்சிகளைச் செய்தார்; பிளவிற்குப் பிறகும் மீண்டும் ஒன்றுபடுவதற்கானத் தீர்வுகளைக் கொண்டுவர முயன்றார். ஆனால் அவரது முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம்

            பூபேஷ் குப்தா மிக உறுதியான சர்வதேசியவாதி மற்றும் இனஒதுக்கல் (‘அபார்தீட்’ என்றால் ஆப்ரிகான்ஸ் மொழியில் ‘பிரிவினை ஆட்சி’ – கறுப்பின மக்களுக்கு எதிரான வெள்ளையர் ஆட்சி) எதிர்த்துத் தளர்வின்றிப் போர்புரிந்த போராளி. 1957ல் (ருமேனியா நாட்டின் தலைநகரான) புகாரெஸ்ட் நகரில் சர்வதேச கம்யூனிஸ்ட் மாநாட்டுக்கான தயாரிப்பு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் 1957, 1960 மற்றும் 1969 மாநாடுகளில் சிபிஐ பிரதிநிதிகள் குழு உறுப்பிராக அவர் பங்கேற்றார்.  சிபிஐ பொதுச் செயலாளர் அஜாய் கோஷ் தலைமையில் 1959ல் பீக்கிங் சென்ற சிபிஐ பிரதிநிதிகள் குழுவிலும் இடம் பெற்று மா சே துங் அவர்களைச் சந்தித்தார். உலகச் சமாதானக் கவுன்சிலில் பூபேஷ் குப்தா தீவிரமாக ஈடுபட்டார். உண்மையில், அவர் இறுதியாகக் கலந்து கொண்டது 1981 டெமாஸ்கஸ் நகரில் சிரியா மற்றும் பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) உடன் ஒருமைப்பாட்டிற்கான சர்வதேச மாநாட்டில்தான்.

சீன ஆக்கிரமிப்புக்குக் கண்டனம்

            தேசபக்தியின் ஆகச் சிறந்த வடிவம் கம்யூனிசம் என்பதைப் பூபேஷ்’தா (வங்காள மொழியில் ஜி போன்ற மரியாதைப் பின்னொட்டு) எடுத்துக் காட்டினார். 1962ல் சீன ஆக்கிரமிப்பின்போது ராஜ்யசபாவில் இந்தியப் பாதுகாப்பு மசோதா குறித்த விவாதத்தில் பங்கேற்று அவர் ஆற்றிய உரை கொழுந்துவிட்டு எரியும் அவரது தேசபக்த உணர்வுக்கு மிகச் சிறந்த நிரூபணம். “இந்நாட்டின் பாதுகாப்பை எதிர்க்கும் அல்லது நிகழ்ந்துள்ள ஆக்கிரமிப்புக்குப் பரிவுகாட்டும் எந்தவொரு தொழிற்சங்கத் தலைவர் அல்லது கம்யூனிஸ்டையும் நான் அறியேன் என இம்மாமன்றத்திலிருந்து நான் பிரகடனம் செய்கிறேன். அப்படி யாரேனும் இருந்தால்… தீர்மானத்திற்கும் நாட்டின் தேசபக்த நிலைக்கும் எதிராகச் சென்றால்…அப்படிப்பட்ட நபரின் செயல் ஏற்கமுடியாத ஒன்று, அவர் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இயக்கத்திலிருந்து தன்னையே வெளியே நிறுத்திக் கொள்கிறார்…” என்று உறுதிபட அவர் பிரகடனம் செய்தார்.

            தேசபக்தி மற்றும் பாட்டாளி வர்க்கச் சர்வதேசியத்தின் மார்க்சிய அடிப்படையிலான ஒருமைப்பாட்டின் அடையாளமாக அவர் விளங்கினார்.

கிராமப்புறத் தொழிலாளர்களுக்காகப் பாடுபட்டவர்

            பூபேஷ் குப்தா சமூகத்தின் எளிய பிரிவினராகிய அரிஜனங்கள், ஆதிவாசிகள் பண்ணைத் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் பிற மக்களுக்காகப் பாடுபட்டவர். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும், கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும், அவர்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தியவர். பஞ்சாப், மோகாவில் 1968ல் பாரதிய விவசாயத் தொழிலாளர் சங்கம் (பிகேஎம்யு, பாரதிய கெந்த் மஸ்தூர் சங்கம்) அமைக்கப்பட்டபோது பெரிதும் மகிழ்ந்தார். தமிழ்நாட்டின் மன்னார்குடியில் நடைபெற்ற பிகேஎம்யு அமைப்பின் இரண்டாவது மாநாட்டில் பூபேஷ் தொடக்க உரை ஆற்றினார். (மெட்ராஸ் மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர்மாற்ற வேண்டும் என பூபேஷ் குப்தா மாநிலங்கள் அவையில் 1963ல் தனிநபர் மசோதா கொண்டுவந்ததைத் தமிழ்நாட்டின் மக்கள் என்றென்றும் நன்றியோடு நினைவு கொள்வர்.)

            குறைந்தபட்சக் கூலி சட்டத்தைக் கறாராக அமல்படுத்தல், முறையான வேலைவாய்ப்பு மற்றும் எளிய பிரிவினர்களைப் பாதுகாக்கவும் அவர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பணிநிலைகளை மேம்படுத்துவதற்காகவும் சட்டமியற்றல் முதலிய கோரிக்கைகளை அவர் வலியுறுத்தினார் (ராஜ்யசபா விவாதங்கள், 1962 டிசம்பர் 6.) விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வை முன்னேற்றாமல் கிராமப்புற மேம்பாடு எனப் பேசுவதெல்லாம் பயன்தராது என அவர் அழுத்தமாக எடுத்துரைத்தார்.

பெண்களுக்காகப் பாடுபட்டவர்

            1975ல் சர்வதேசப் பெண்கள் ஆண்டு தொடங்கியபோது நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உணர்ச்சி பொங்கும் உரையில் அவர் அரசைப் பார்த்து, “பெரும் எண்ணிக்கையிலான பெண்களின் சமூக அந்தஸ்தையும் வாழ்வியல் நிலைமையையும் முன்னேற்ற ஆக்கபூர்வமான உறுதியான நடவடிக்கைகள் எடுங்கள், கொண்டாட்டங்களில் மட்டும் மூழ்கிவிடாதீர்கள்” என இடித்துரைத்தார். (ராஜ்யசபா விவாதங்கள், 1975 மே 13). அந்த உரையில் அவர், “பெண்களின் விடுதலை என்பது சமூகத்தின் ஒரு குழுவின் விடுதலை அல்ல. முக்கியமாக அது பெண்குலத்தின் விடுதலை பிரச்சனை … அதுவே அடித்தளமானது என்பதால் இறுதியில் நமது ஒட்டுமொத்தச் சமூக வாழ்வின் விடுதலை பிரச்சனையுமாகும்!” என மேலும் தெரிவித்தார்.

மதச்சார்பின்மை மற்றும் தேசிய ஒருமைப்பாடு குறித்து

            தேசிய ஒருமைப்பாடு குறித்த சிபிஐ மத்திய செயற்குழுவின் துணைக் கமிட்டிக்குப் பூபேஷ் பொறுப்பாளராக இருந்தார். தேசிய ஒருமைப்பாடு நிகழ்முறைக்கு மிகப் பெரிய தடங்கலாக இருப்பது அரிஜனங்களுக்கு எதிரான பாரபட்சமே என அவர் கருதினார். பூபேஷ்  சாத்தியமான ஒவ்வொரு அரங்கத்திலும் நமது நாட்டின் மதசார்பற்ற ஜனநாயக அமைப்பு முறையைப் பாதுகாக்கவும் தேசிய ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தவும் சக்திமிக்க தனது குரலை உயர்த்தினார்.

            தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலில் சுமார் 15 ஆண்டுகள் அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முக்கிய பேச்சாளராக விளங்கினார். நமது நாடு நாகரீகம் அடைந்த மற்றும் முற்போக்கு பார்வை கொண்ட சமூகமாகத் தொடர்ந்து நீடித்திட வகுப்பு வாதத்திற்கு எதிரான போராட்டம் முக்கியமானது என அவர் வலியுறுத்தினார். அத்தகைய வகுப்புவாதச் சக்திகளின் தீயநோக்கமுடைய திட்டங்களை முறியடித்திடவும் மதசார்பற்ற நமது நாட்டின் அமைப்பைப் பாதுகாக்கவும் அவர் உறுதியான ஆக்கபூர்வமான யோசனைகளை மிக கவனமாகத் தீட்டி தேசிய ஒருமைப்பாட்டு குழு கூட்டங்களில் முன்வைத்தார். 1968 ஜூன் மாதம் ஸ்ரீநகரில் நடைபெற்ற ஒருமைப்பாட்டு கவுன்சிலில் முக்கியமான ஒரு யோசனையைக் கூறினார்: அமைதியற்ற கலவரப் பகுதிகளில் உள்ள சிறுபான்மைச் சமூகத்தினர் எந்த ஒரு அலுவலர் மீதும் நம்பிக்கை குறைவு ஏற்பட்டால், முதல் முகாந்திரத்திலேயே அந்த அலுவலரை உடனடியாக மாற்ற வேண்டும். எந்தவொரு பகுதியிலும் மதம் மற்றும் வகுப்பு அமைதி சீர்குலைந்தால், அப்பகுதியின் அனைத்து அதிகாரிகளும் பொறுப்பாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஆற்றல்மிக்க எழுத்தாளர் மற்றும் பேச்சாளர்

            ஆங்கிலத்தில் அவர் எழுதிய எட்டு நூல்கள் அவரது பெருமை பேசும்: 1) விடுதலையும் இரண்டாவது முன்னணியும் 2) டெரர் ஓவர் பெங்கால் 3) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் – ஒரு விமர்சனம் 4) பெரும் கொள்ளை: இந்தியாவில் வெளிநாட்டுச் சுரண்டல் பற்றிய ஆய்வு 5) ஏன் இந்த உணவு நெருக்கடி 6) காமன்வெல்த்தை விட்டு வெளியேறு 7) இந்தியாவும் வியட்நாமின் மீது அமெரிக்க ஆக்கிரமிப்பும்; மற்றும் 8) Right reaction’s bid for power (வலது பிற்போக்குகளின் அதிகாரம் கோரல்). வங்காள மொழியிலும் பூபேஷ்‘தா சில நூல்களை எழுதியுள்ளார்; அவற்றில் உதாரணத்திற்கு : 1) Nehru Sarkarer Swarup (நேரு அரசின் சொரூபம்) 2) Pak-Markin Samarik Chukti 0 Markin Samrajyabad (பாக்கிஸ்தான் –அமெரிக்கா இராணுவ உடன்பாடும் அமெரிக்க ஏகாதிபத்தியமும்) 3) Kala Kanuner Rajatva (கறுப்புச் சட்டத்தின் ஆட்சி). இந்நூல்கள் அவரது அறிவார்ந்த ஞானத்தின் உயரத்திற்கு விரிவான சாட்சியமளிக்கின்றன.

            மேலோர்கள் அவை எனப்படும் மாநிலங்களவை மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக எப்போதும் “துடிப்பானதாகவும் ஜீவன் ததும்பும் அமைப்பாக”வும் விளங்க வேண்டும் என பூபேஷ் வலியுறுத்துவார். உதாரணத்திற்கு அமெரிக்க அரசு பாக்கிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை மீண்டும் தொடங்க உள்ளது பற்றிய ராஜ்யசபா விவாதத்தின்போது பூபேஷ் குப்தா மிகச் சரியாக விமர்சனம் செய்தார்: ”நமது பிராந்தியத்தில் இன்று அமெரிக்கா இராணுவசக்தியின் புதிய அதிகாரச் சமநிலையை ஏற்படுத்தவும் அதற்காக பாக்கிஸ்தானை இராணுவத் தளமாகப் பயன்படுத்தவும் விரும்புகிறது என்பது தெளிவு. எனவே இதனைப் பாக்கிஸ்தான் நாடுதான்  ஆயுதப் போட்டியில் ஆர்வம் கொண்டிருக்கிறது, அமெரிக்காவுக்கு அந்த ஆர்வமெல்லாம் இல்லை, வெறுமே ஆயுதத்தை அமெரிக்கா விற்க மட்டுமே செய்கிறது என எடுத்துக் கொண்டுவிடக் கூடாது. …. இந்தியாவை மிரட்டினால் மட்டுமே, முடக்கி, தொல்லை கொடுத்து அச்சுறுத்திப் பணிய வைக்காதவரை – தெற்காசியாவின் இந்தப் பிராந்தியத்தில் தாங்கள் செல்வாக்கு செலுத்துவது சாத்தியமில்லை என்பதை அமெரிக்கா ஏகாதிபத்தியம் நன்கு அறியும். அதன் காரணமாகவே அவர்கள் நம்மைத் தனியாகக் குறிவைக்கிறார்கள், பாக்கிஸ்தானுக்கு மீண்டும் ஆயுதங்களை வழங்குகிறார்கள்” (காண்க: ராஜ்ய சபாவில் பூபேஷ் குப்தா, ராஜ்ய சபா விவாதங்கள், 1975 மார்ச் 10).

            அவர் அடிக்கடி கிண்டலும் கேலியுமாகப் பேசுவார், ஆனால் ஒருபோதும் எவரையும் தரம் தாழ்த்திக் கொச்சையாகப் பேசியதில்லை; அவரது வாதங்களில் அறிவு மிளிரும் ஆனால் பணிவு இருக்கும்; மக்களின் நலவாழ்வு குறித்த கேள்விகள் எழும்போது அவரது வாதங்களில் அவரே அனுபவித்து ஆர்வமாக ஈடுபடுவார். பூபேஷ் குப்தா, பாடுபடும் லட்சோப லட்சம் மக்களின் கதாநாயகத் தலைவர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் மாபெரும் ஆதரவாளர்.

நாடாளுமன்ற நிபுணர், பூபேஷ்

            நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகளில் பாண்டித்யம் பெற்ற அவர் ஆளும் தரப்பின் சிறிய தவறு, குறைபாட்டையும் பொறுத்துக்கொள்ள மாட்டார். நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் கண்ணியம் மற்றும் மேன்மையைத் தவிர வேறு எதுவும் அவருக்குக் கூடுதல் முக்கியத்துவம் உடையதில்லை. நாடாளுமன்றச் செயல்பாடுகளின் நுட்பத்தில் நிபுணரான பூபேஷ் குப்தா, அது வழங்கும் அனைத்து வாய்ப்புகளையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்துவார்; கவன ஈர்ப்பு (பொது முக்கியத்துமுடைய பிரச்சனையின் மீது அமைச்சரின் பதிலைப் பெறுவதற்காகக் கவனத்தை ஈர்த்தல்), ஸ்பெஷல் மென்ஷன் (பொது முக்கியத்துமுடைய பிரச்சனையின் மீது அவையில் 250 வார்த்தைகளுக்கும் மிகாது ‘சிறப்புக் குறிப்பை’ப் படிக்கும் உரிமை), குறுகிய காலக் கேள்விகளை எழுப்புதல், அரை மணிநேர விவாதம் முதலியவற்றைப் பயன்படுத்தி அவர் தனது கருத்தை அவையினருக்கு விளக்குவார். மேலும், வெளியுறவுக் கொள்கை, குடியரசுத் தலைவர் உரை, நிதி மசோதா, நிதிஒதுக்கீடு மசோதா மற்றும் அமைச்சகங்களின் செயல்பாடு மீது விவாதம் முதலானவற்றைப் பயன்படுத்தி உறுதியான வாதங்களைப் பின்னி மிக அற்புதமான உரைகளை நிகழ்த்துவார்.

சில உதாரணம்

          அதை விளக்க ஒரு நிகழ்வு : 1954 ஏப்ரல்22ல் மாநிலங்களவையில் பிரதமர் ஜவகர்லால் நேரு, “எந்த அயல்நாட்டுப் படையையும் நம் தேசத்தைக் கடந்து செல்ல அல்லது இந்தியாவின் மீது பறந்து செல்ல அனுமதிப்பதில்லை என்பதே கடந்த ஆறு ஆண்டுகளாக அரசின் கொள்கையாக உள்ளது” என்று குறிப்பிட்டார். அப்போது ஒரு நாளிதழின் செய்தியைப் பூபேஷ் குப்தாதான் அவையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அந்தச் செய்தி, “1954 ஏப்ரல் 24ல் ‘குலோப் மாஸ்டர்’ என்ற அமெரிக்க விமானம் பிரெஞ்ச் படைகளை இந்தோ சீனாவிற்கு ஏற்றிக் கொண்டு டம் டம் விமான நிலையத்தில் இறங்கி விமான எரிபொருள் நிரப்பிக் கொண்டு பிறகு சென்றது” என்று தெரிவித்தது.

பூபேஷ் மேலும் ஒரு செய்தியை மேற்கோள் காட்டினார்: “1954 ஏப்ரல் 27ல் பிரெஞ்ச் விமானப் படையைச் சேர்ந்த ‘ஸ்கை-மாஸ்டர்’ விமானம் கல்கத்தாவில் தரை இறங்கி அதன் 36 பிரெஞ்ச் இராணுவ வீரர்கள் கிராண்டு ஹோட்டலின் அறை எண்கள் 315, 320, 466 மற்றும் 490களில் சிலமணிநேரம் வசித்து விடியற்காலையின் 3.30 மணி அளவில் அவர்கள் சென்றனர்” என்று குறிப்பிட்டது. நண்பர்கள், எதிரிகளென வேறுபாடின்றி ஒருவர் போல ஒவ்வொருவரும் பூபேஷ் குப்தாவை நிபுணத்துவம் மிக்க பாராளுமன்றவாதியாக, அவரது தனித்த குணங்களைப் புகழ்ந்தனர். மிகச் சரியாக அவரை ராஜ்ய சபாவின் ‘புயல் கடற்பறவை’ எனக் குறிப்பிட்டனர்.

மறைவு

            மாஸ்கோவின் சென்ட்ரல் கிளினிகல் மருத்துவமனையில் ஜூன் மாத இறுதியில் பூபேஷ் குப்தா அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் ஏற்பட்ட கேன்சருக்காக 1981 ஜூலை 29ல் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்குப் பிறகு தேறிவந்த அவர் கடுமையான மாரடைப்புக் காரணமாக 1981 ஆகஸ்ட் 6ம் நாள் மாஸ்கோவில் இயற்கை எய்தினார்.

      
அவர் மறைவுச் செய்தி கேட்டுப்
பிரதமர் திருமதி இந்திரா காந்தி “…தோழர் பூபேஷ் குப்தா மறைவால், இந்த நாடு மிகுந்த அர்ப்பணிப்பும் ஒப்பற்ற பேச்சாற்றலும் மிக்க மைந்தர்களில் ஒருவரை இழந்து விட்டது” என்று தமது அஞ்சலி உரையில் குறிப்பிட்டார்.

            

                    பூபேஷ் குப்தா மறைவுக்கு நாடு பரவலாக அஞ்சலி செலுத்தியது.

            (உலகம் புகழ, அனைத்து மக்களின் வாழ்வுயர நமது நாடாளுமன்ற அவைகளை, அரசியல் அமைப்புச் சட்ட மாண்புகளின்படி உயர்த்திப் பிடிப்பதே அவருக்கான சரியான அஞ்சலியாகும்!)

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

           

 

 

  

No comments:

Post a Comment