Wednesday 27 October 2021

பருவநிலை மாற்றம் : சில கசப்பான உண்மைகளை அறிவோம்


பருவநிலை மாற்றம் :

சில கசப்பான உண்மைகளை அறிவோம்

--கே ஜெயகுமார்

(கேரள மாநில மேனாள் தலைமைச் செயலர்)

            சென்ற வாரம் பருவம் தப்பிய சில நாட்கள் மழை மனித உயிர்களைப் பலிவாங்கி விட்டது. நிலச்சரிவுகள் மற்றும் சில விபத்துக்களில் சுமார் 100பேர் பலியாக, பல குடும்பங்கள் வீடிழந்து நிற்கின்றன. கேரளா மற்றும் உத்தர்காண்ட் கடும் மழையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அவ்விரண்டு மாநிலங்களும் ஆயிரம் கிமீ தொலைவு பிரிந்து கிடந்தாலும், குறிப்பாக இயற்கை பேரழிவு சம்பந்தமாக அவற்றிடையே சிலப் பொதுத்தன்மைகள் உள்ளன. கேரளா மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலிருந்து மேற்கு நோக்கி சரிந்து அமைந்திருக்கும்போது, உத்தர்காண்ட் மன்னும் இமயமலை நிலச்சாரல் மடியில் தவழ்கிறது. பெரும் மழையோடு மேகவெடிப்புகள் அதைத் தொடர்ந்த நிலச்சரிவுகள், ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவது இம்மாநிலங்களின் பொதுவான போக்காக உள்ளது. சமீபத்திய 2018ன் பெருவெள்ள அனுபவத்தை நினைவில் நிறுத்தி கேரளா இம்முறை வெள்ளம் மற்றும் அணையின் தடுப்புக் கதவுகள் திறப்பது குறித்துக் கூடுதல் எச்சரிக்கையோடு செயல்பட்டது. இருப்பினும் கேரளாவில் மட்டும் சுமார் 40பேர் பலியாயினர். இயற்கைச் சீற்றங்கள் புதிதல்ல என்றாலும் அவை அடிக்கடியும் அபாய அளவிலும் தீவிரத்திலும் பேருரு கொண்டு நிற்பது முற்றிலும் எதிர்பாராதது அல்லவே. சுற்றுச்சூழலியர்களும்  பருவநிலை விஞ்ஞானிகளும் இந்தப் போக்கின் நிச்சயத்தன்மை குறித்து தொடர்ந்து எச்சரித்தே வருகின்றனர். அதுபோலவே பருவநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கு இடையே பேனல் (IPCC) அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் மற்ற விஷங்களோடு தீவிரமான மழை மீண்டும் மீண்டும் ஏற்படும் என்பதை முன்கணித்துக் கூறியுள்ளது.

            புவிக் கோளில் பருவநிலை மாற்றங்கள் அடைந்து வருகிறது என்பதில் விவாதமே இல்லை. ஆனால் துயரம் யாதெனில், பருவநிலை மாற்றத்தின் துன்பமயமான விளைவுகளைச் சமூகத்தின் எளிய பிரிவுகளே அனுபவிக்கின்றன; அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வலிமையான நெருப்புக் கோழிகளோ இப்போதும் உலகில் எல்லாம் நன்றாகவே நடப்பதாக, தங்கள் தலைகளை மண்ணில் புதைத்து, நாடகமாடுகின்றன. பருவநிலை மாற்றம் அடைந்து வருதாகக் கூறுவதைப் பொய்யென நிரூபிப்பதற்கான ஆய்வுகளை நடத்தவும் பெருமளவில் நிதி அளிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அவையெல்லாம் நாளைய வாழ்வைக் காவு கொடுத்துப் பணக்கார நாடுகள் இன்று கொண்டாடுவதற்காக நம்மை நம்ப வைக்க நடத்தப்படும் தந்திரங்களாகும்.

            அதிகாரம் இருப்பதால் அரசுகள் பருவநிலை சீரழிவது குறித்து நீலிக் கண்ணீர் வடித்தபடி, பருவநிலையை மேலும் மோசமாக்கும் தங்கள் நேர்மையற்ற கொள்கைகளையும் திட்டங்களையும் மேலெடுத்துச் செல்வதில் குறியாக உள்ளனர்; அப்போதும் கவனமாகத் தங்கள் திட்டங்களுக்கு நலவாழ்வு, வளர்ச்சி என்றெல்லாம் சொல் அலங்கார ஆடைகளைப் பொருத்தமாக அணிவிக்கத் தவறுவதில்லை. இந்தக் கூற்று அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கும் பொருந்தும்.

            சர்வதேச அமைப்புகளில் அரசுகள் காட்டும் சுற்றுச்சூழல் அக்கறைகள், பாரீஸ் உடன்பாடு குறித்த விவாதங்கள் எல்லாவற்றிலும் உள்ளீடற்ற வெற்று முழக்கமே நிரம்பி உள்ளது; வளர்ந்த நாடுகள் ஏற்படுத்திக் கொண்ட தங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவதில் காட்டும் தயக்கத்திலே அது வெளிப்படுகிறது. உலகின் இந்த முதன்மை நாடுகளை எப்படியும் எட்டிப் பிடித்து விடுவது என வளரும் நாடுகள் தங்கள் உரிமையை திரும்ப வலியுறுத்துகின்றன. இந்த (அறிவற்ற) சுயநலம், புவி வெப்பமயத்துக்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதற்கான கொள்கைகளிலிருந்து, அவற்றைப் பின்வாங்கச் செய்கிறது.

            வளர்ச்சி என்பதன் உண்மையான பொருள் யாது என மறுவரையறை செய்யவும், சுற்றுச் சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்திலிருந்தும் விலகி விட்டுவிடுவதிலும் நாடுகள் சம்மதிக்காதவரை எந்த உடன்பாடும் திறன்மிக்கதாகவோ அன்றி அர்த்தமுள்ளதாகவோ இருக்க இயலாது. ஆனால் வளர்ச்சி என்ற தன்னலக் குழுவால் இயக்கப்படும் அரசியல் நிர்வாகங்கள் அத்தகைய கடினமான முடிவுகளை மேற்கொள்வதில் எப்போதும் போக்குக் காட்டவே செய்யும்; அவர்கள் பொருத்தமற்று பயனற்றுப் போகும்வரை முடிவெடுக்க மாட்டார்கள். ஆனால் அப்போது திருத்த முடியாதபடியான பேரழிவு நிகழ்ந்து முடிந்திருக்கும்.

            பெருந்தொற்றால் மோசமான பொருளாதாரம் சுருங்கியதன் பின்னணியில் எல்லா அரசுகளும் பொருளாதாரத்தை உந்தித் தள்ள தலைபோகும் அவசரத்தில் செயல்படுகின்றன. புத்துயிர்ப்புத் தொகுப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, வங்கிகளை மேலும் கடன்வழங்க வற்புறுத்தி, வணிகச் செயல்பாடுகளை எளிமையாக்குவது என்பதே மந்திரமானது; தேசிய மற்றும் விதேசி முதலீட்டாளர்களைத் தாஜா செய்வதும் பொதுச் செலவுகளை அதிகரிப்பதும் நடக்கிறது. இந்தக் கூச்சலின் மறுபுறத்தில் இருப்பது எது என்பதைக் காண நாம் தவறக்கூடாது.

            வேலைவாய்ப்பின்மை வெருட்டும் சமூகத்தில் அதிகரிக்கும் பசி பட்டினியும், ஊட்டச் சத்துக் குறைபாடும் (மத்திய அரசு இதை வன்மையாக மறுக்கிறது) உற்பத்தி சார்ந்த துறைகளில் முதலீட்டை ஓர் அரசு ஊக்குவிப்பது பெரிதும் நியாயமானதே. ஆனால் இதில் இடறி விழும் தவறின் எல்லைக்கோடு வேறிடத்தில் உள்ளது. முதலீட்டையும் வணிகச் செயல்பாடுகளையும் ஊக்குவிக்கும் உற்சாகத்தில், சுற்றுச் சூழல் சார்ந்த நியாயமான கவலைகளும் அக்கறைகளும் இதயமற்று வீதியில் வீசப்படுகின்றன.

            பொதுவாக எதிர்ப்பைச் சந்திக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு இச்சூழலில் சப்தமில்லாமல் அவசரமாகப் பச்சைக் கொடி காட்டப்படுகின்றன. சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்த ஆய்வுகளுக்கான விதிகள் அப்பட்டமாக நீர்க்கச் செய்யப்படுகின்றன. முதலீட்டை எளிமையாக்க வேண்டும் என்பதற்காகச் சுற்றுச்சூழல் முறைமை பற்றிக் கவலைப்படாமல் பல மாநில அரசுகளும் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறுவதற்கான அளவீடுகளை மாற்றி அமைக்கின்றன. நிலக்கரியை எரித்து மின் உற்பத்தி செய்யும் முறையின் ஆபத்துகளை உலகம் முழுவதும் அங்கீகரித்தாலும் புதைபடிவ எரிபொருளை (ஃபாசில் ஃப்யூயல்) குறைப்பதற்கான மாற்று வழிமுறைகளை நாம் உருவாக்குவதாகத் தெரியவில்லை. இதற்கு மாற்று நிச்சயம் நீர் மின்திட்ட உற்பத்திக்கான அணைக்கட்டுகள் அல்ல.

            மின் உற்பத்தியை அதிகரிக்கும் ஆவலில், இமயமலை ஆறுகளில் மேலும் கூடுதல் அணைக்கட்டுகளைக் கட்ட திட்டமிடப்பட்டது; அப்படி ஏற்கனவே உத்தர்காண்ட் பகுதியில் கட்டிய கூடுதல் அணைகளால் அப்பகுதி மீண்டும் மீண்டும் நிலச்சரிவுகளும் பெரு வெள்ளமும் ஏற்படும் பாதிப்புக்கு எளிதில் உள்ளாகியுள்ளது. (எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் நிரம்பிய நிதி-ஆயோக் உட்பட) எந்தத் தலைவரும் இமயமலை நதிகளிலோ அன்றித் துணை ஆறுகளிலோ மேலும் அணைகள் கட்ட வேண்டாம் என ஒப்புக்கொள்ளும் வகையில் எடுத்துரைக்க முன்வரவில்லை என்பது துரதிருஷ்டமே. சாலைகளை அகலப்படுத்தும் திட்டங்களும் அதுபோலத்தான்; வடக்கே பத்திரி நாத், மேற்கே துவாரகா, கிழக்கே ஜகந்நாத் பூரி மற்றும் தெற்கே இராமேஸ்வரம் எனும் ‘நான்கு புனிதத் தலங்க’ளை (சார் தாம்) இணைக்கும் இணைப்புச் சாலைகளை அகலமாக விரிவாக்கி விரைவுச் சாலைகளாக்கும் திட்டம், பிரம்மாண்டமான திட்டச் செலவு மற்றும் அளக்க முடியாத சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துவதை விலையாகக் கோரும் திட்டமாகும்; அது குறித்துக் கவலையும் எதிர்ப்பும் தெரிவித்த சில குரல் வளைகளையும் முழுமையாக நெறித்து முடக்கி விட்டனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மீது என்ன நடத்தப்படுகிறோ அதைப் பொருத்துத்தான் கேரளாவின் சுற்றுச்சூழல் அடர்த்தி அமையும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு மாதவ் காட்கில் அறிக்கை மிகச் சரியாகவும் நியாயமாகவும் எச்சரித்தது. அந்த அறிக்கை மலைத் தொடரில் நுண்மையும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் எனக் கண்டறியப்பட்ட பல பகுதிகளில் மனித நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தவும் குறைக்கவும் ஒழுங்குபடுத்தவும் விரும்பியது. மலைகளில் கல்வெட்டி எடுப்பதன் பின்விளைவுகள் நாம் காணக்கூடியதாக உள்ளது; எனவே  மேற்குத் தொடர்ச்சி மலையின் அந்த நிலங்களை மனிதக் குடியேற்றத்தை ஏற்படுத்தப் பயன்படுத்தும் திட்டங்களை மறு ஆய்வு செய்யவும் ஒழுங்குபடுத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. மாநில அரசின் சார்பாக மேலும் ஒரு ஆய்வறிக்கை கஸ்தூரி ரங்கன் தலைமையில் தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் தொணியும் வார்த்தைகளும் மென்மையாக இருந்தாலும் கஸ்தூரி ரங்கன் அறிக்கையும்கூட காத்திருக்கும் ஆபத்துக்களை முன்னிலைப்படுத்திச் சுட்டிக் காட்டியது. பல தலைமுறைகளாக அங்கே குடியேறி வசிக்கும் மக்களிடம் (காத்திருக்கும் ஆபத்துகள் காரணமாக) அவர்கள் தங்களின் வசிப்பிடத்தைவிட்டு நீங்கியாக வேண்டும் எனச் சொல்வது இயல்பாகவே அன்பில்லாத ஒன்றே. (எவ்வாறாயினும் அது சொல்லப்பட்டே ஆக வேண்டும்.)

            அரசியல் கட்சிகள் மற்றும் பிரபலமான அரசுகள் மக்களிடம் ஜனரஞ்சகமற்ற உண்மைகளைச் சொல்லச் சிரமப்படுவார்கள். ஆனால் மகிழ்வற்றதாயினும் நம்முன் காத்திருக்கும் எதிர்கால ஆபத்தை மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் தருணம் வந்து விட்டது. நமது மக்கள் அவர்களின் அரசுகளை அவற்றின் சுற்றுச்சூழல் அக்கறையின் நேர்மையைக் கொண்டு தீர்மானிக்கும் உணர்வு பெற வேண்டும்; அதற்கு மாறாக, அரசுகளின் எப்படியும் எந்த வகையிலும் முதலீடுகளை ஈர்ப்பது என்ற கொள்கையை வைத்துத் தீர்மானிக்கலாகாது. ஏனெனில் அந்தக் கொள்கையின் இரட்டை விளைவு, முதலில் குறைந்த காலத்தில் லாபம், அடுத்து நீண்ட கால வேதனை என்பதாகும். உண்மையான பிரச்சனைகளை மூடி மறைக்கும் மேலெழுந்தவாரியான நாடகங்களும் மயக்கமூட்டும் கட்டுக் கதைகளின் சுயபாணி கொண்டாட்டங்களால் கவர நினைக்கும் (ஆள்வோரின்) முயற்சிகள் தோற்கும்போதுதான் ஒரு ஜனநாயகம் உண்மையிலே முதிர்ச்சி அடைந்தது எனக் கூற முடியும்.

            ‘மக்களாகிய நாம்’ நம்மை ஆள்வோர்களிடம் கண்கவரும் காட்சிகளுக்கு மாறாக நீடித்து நிலைத்திருக்கும் (வளர்ச்சிக்) கொள்கைகளையும், கொண்டாட்டங்களுக்கு மாறாக உயிர் வாழ்வதையும் கோர வேண்டிய தருணம் வந்து விட்டது. பருவநிலை மாற்றம் என்பது பேராசை பிடித்த முதலீட்டாளர்கள் மற்றும் எதிர்காலம் குறித்தக் கண்ணோட்டம் இல்லாத பார்வைக் குறை உடைய அரசுகளிடம் விட்டுவிட முடியாதபடி மிகவும் முக்கியமானதாகும்.    

--நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (27-10-21)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்      

 

 

 

  

No comments:

Post a Comment