Tuesday 19 October 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 52 -- சுனில் முகர்ஜி

 

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு –52


சுனில் முகர்ஜி

பீகார் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்

--அனில் ரஜீம்வாலே

-- நியூஏஜ் (அக்.17 – 23)

                

             1939ல் பீகாரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்த முன்னணித் தலைவர்களில் ஒருவர் சுனில் முகர்ஜி. பீகார் பகல்பூர் நகரில் 1914 நவம்வர் 16ம் நாள் தனது தாய் மாமா வீட்டில் பிறந்தார். இளமைக் காலம் மூன்கரில் கழிந்தது. அவருடைய தந்தை நீரபதா முகர்ஜி ஒரு ப்ளீடர், பின்னர் மூன்கரில் வசிக்கத் தொடங்கி தொழிலாளர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவரானார். சுனில் 1921 –22ல் நான்காம் வகுப்பில் பள்ளியில் சேர்ந்தார்.  

            சுனிலின் மாமா தாரபாதா முகர்ஜி ஓர் அஞ்சலகத்தில் பணியாற்றினார். அவர் உறுதியான தேசியவாதியாகவும், பிரிட்டீஷ்க்கு எதிரானவராகவும் இருந்தார். அவருடைய ஆளுமை சுனில் மீது பெரும் செல்வாக்கு செலுத்தியது. தனது அஞ்சல் பணியைவிட்டு பதவி விலகிய தாரபாதா தொழிலாளர்கள் சங்கத்தில் பணியாற்றினார். தாரபாதாவின் மறைவுக்குப் பிறகு சுனிலின் தந்தை நீரபதா முழுமையாக மாறி, தனது பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தனது சொத்து முழுவதையும் சுதந்திரத்திற்காகக் காங்கிரஸ் கட்சியிடம் அளிக்க முடிவு செய்தார். 1930ல் அவர் கைது செய்யப்பட்டார். பின்னாட்களில் பாராளுமன்றச் செயலாளரானார், காங்கிரஸ் அரசுகளில் அமைச்சராக இருந்தார்; பல தேர்தல்களில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றியும் பெற்றார்.

            சுனிலின் தாய் பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் குடும்பத்தைச் சேர்ந்தவர், அவர் அவருடைய மாமா ஆவார்.

யுகாந்தர் கட்சியில்

            வங்கத்தின் யுகாந்தர் கட்சிக்கு மூன்கரிலும் ஒரு குழு இருந்தது, அவர்கள் சுனிலை அடையாளம் கண்டனர். அக்கட்சியின் சியாமா பிரசாத் மஜூம்தார் சுனிலைச் சந்திப்பதை  வழக்கமாகக் கொண்டார். அந்தக் குழுவில் பினோத் பிகாரி முகர்ஜி, அனில் மொய்ரா, ஞான் விகாஸ் மொய்ரா, ஜூவாலா சிங் முதலான பலர் இருந்தனர். அவர்களில் பலர் பின்னர் பீகாரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியதில் பங்கேற்றவர்கள்.

            அத்தருணத்தில் அவர்கள் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் திரட்டி வந்தார்கள். மூன்கர் காவல் நிலையத்தின் மீது அவர்கள் வெடிகுண்டு எறிந்தபோது சுனிலும் அவர்களோடு இருந்தார். மஜூம்தார் புத்தகங்களையும் பிரசுரங்களையும் கொண்டுவந்து வழங்க அவர்கள் ருஷ்யா மற்றும் ஐரீஷ் புரட்சிகள் பற்றிப் படித்தனர். சுனில் உறுதியான புரட்சியாளராகி 1929ல் யுகாந்தர் கட்சி உறுப்பினரானார். அப்போது அவர் மூன்கர் ஜில்லா பள்ளியில் மெட்ரிக் படித்து வந்த மாணவராவார்.

            அதே நேரத்தில் கைதாவதிலிருந்து தப்புவதற்காக சுனில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரசுக்காக 1930 –32 ஆண்டுகளில் பல இரகசிய தலைமறைவு பணிகளை ஆற்றினார். சட்டவிரோதமான பிரசுரங்கள் மற்றும் கையேடுகளைக் கங்கைக்குக் குறுக்கே வடக்கு மூன்கரின் கோக்ரி கிராமத்தில் உள்ள தலைமறைவு அச்சகத்தில் அச்சடித்து எடுத்து வருவார். அவர்கள் ஓர் ஆசிரமமும் நடத்தி வந்தனர்.  

            சுனிலின் தந்தை நீரபதா முகர்ஜி கைது செய்யப்பட்ட பிறகு 1930ல் அவருடைய தாய் ஒரு சிறிய வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். யுகாந்தர் கட்சி ஆயுதங்களைத் திரட்டி வரும் பணியை சுனிலிடம் தந்தது. மூன்கரில் ஒரு துப்பாக்கித் தொழிற்சாலை இருந்தது. கல்கத்தாவுக்கு அனுப்புவதற்காக  அங்கிருந்து ரிவால்வர், கைத்துப்பாக்கிகள் போன்றவற்றைத் திரட்டிவர சுனில் பணிக்கப்பட்டார். 

காங்கிரஸ் அமர்வில்

            ஒரு பகுதியளவே சட்டப்படியான நிலையில் 1932ல் டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டு அமர்வில் சுனில் முகர்ஜி கலந்து கொண்டார். மாநாட்டில் கலந்து கொள்ள அவருடன் வந்திறங்கிய பிரதிநிதிகள் மற்றும் காங்கிரஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 

            11 பிரதிநிதிகளைச் சுனில் தன்னுடன் டெல்லிக்கு அழைத்து வந்தார். காலை 9 மணி அளவில் அவர்கள் அனைவரும் சாந்தினி சௌக்  இடத்திற்கு வந்து ஆவணங்களைப் படிக்கத் தொடங்குமாறு பணிக்கப்பட்டிருந்தனர். ஆயிரக் கணக்கானவர்கள் திரண்டு ஆவணத்தைப் படிக்கத் தொடங்கினர். அவர்கள் காவலர்களால் லத்தி மற்றும் துப்பாக்கி முனைகளால் தாக்கப்பட்டனர். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்தனர். நகருக்கு வெளியே இருந்த முகாம் ஜெயிலுக்குக் கொண்டு சென்று இரண்டு மாதங்கள் அடைத்து வைத்தனர்.

            விடுதலையானதும் கல்கத்தா அடைந்த சுனில் ரிப்பன் பள்ளியில் மெட்ரிகுலேஷன் வகுப்பில் சேர்ந்தார். அவருடைய விடுதி அறை புரட்சிகர செயல்பாடுகளின் மையமாயிற்று. அவர் ‘கார்ன்வாலீஸ் தெரு துப்பாக்கிச் சூடு வழக்கு’ தொடர்பாக 1930ம் ஆண்டின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் தினேஷ் மஜூம்தார் தூக்கிலிடப்பட்டார். ஆனால் சந்தேகத்தின் பலனை அளித்து சுனில் விடுதலை செய்யப்பட்டார்.

            அப்போது வங்கத்தின் கவர்னராக ஆன்டர்சன் மற்றும் போலீஸ் கமிஷனராக அஞ்சுதற்குரிய சார்லஸ் டெகர்ட்டும் இருந்தனர். சுனில் அவரது மாமா இல்லத்திலிருந்து கைது செய்யப்பட்டார். சிறையில் பல நாட்கள் அவர் மோசமாக அடித்துத் துன்புறுத்தப்பட்டார், ஐஸ் பாளங்களில் படுக்க வைத்தனர், நகக் கண்களில் ஊசிகளைச் செருகினர்… இப்படிப் பலவித கொடுமைகள் அவர் மீது நடத்தப்பட்டன. பின் பிரிசிடென்சி சிறைக்கு மாற்றி அவரைத் தனிமைச் சிறையில் அடைத்தனர்.

            அங்கே புகழ்பெற்ற கோபால் ஹால்தர் உட்பட பிரபலமான ஆளுமைகள் பலரைச் சந்தித்தார். அவர்கள் அரசியல் மற்றும் தத்துவார்த்த மறுசிந்தனை விவாதங்களில் ஈடுபட்டனர். அவர்கள் ரஷ்யப் புரட்சி, போல்ஷ்விக் கட்சி மற்றும் மாமேதை லெனின் வாழ்க்கை போன்றவற்றைப் புரிந்து கொள்ள முயன்றனர். அப்துல் ஹலீம் மற்றும் முஸாஃபர் அகமது அவர்களைத் தொடர்பு கொண்டார்.

பூபேஷ் குப்தாவுடன்

            எதிர்காலக் கம்யூனிஸ்ட் தலைவரான பூபேஷ் குப்தாவுடன் சுனில் ஒரே அறையில் அடைக்கப்பட்டார். முழு நான்கு ஆண்டுகள் அவர்கள் ஒன்றாகவே இருந்தது சுனிலின் வாழ்வுக்குத் தீர்மானகரமாக அமைந்தது. அவர்கள் மார்க்ஸின் ‘மூலதனம்’, லெனினின் ’அரசும் புரட்சியும்’ மற்றும் பல இடதுசாரி இலக்கியங்களைப் படித்தனர். இது 1934ம் ஆண்டின் மத்திய காலம் வரை நீடித்தது.

            சிறையில் அமைக்கப்பட்ட ‘கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்பு’ அமைப்பில் சுனில் இணைந்தார். மார்க்ஸியப் படிப்புகளில் சுனில் தொடர்ந்து முறையாக ஈடுபட்டார். தற்போது பங்களாதேசத்தில் உள்ள மைமென்சிங் பகுதியின் புல்வாரியா போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 1937ல் சுனில் ‘கிராமச் சிறை’யில் அடைத்து வைக்கப்பட்டார். சிறப்புத் தேர்வு மையம் ஒன்றில் அவர் மெட்ரிக் தேர்வு பெற்றார். இன்டர் தேர்வில் முதல் வகுப்பில் தேர்வு பெற்றார்.

                விடுதலையானதும் சுனில் பாட்னாவில் உள்ள பாட்னா பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். 1937 தேர்தல்களுக்குப் பிறகு காங்கிரஸ் அமைச்சரவை அமைக்க ஸ்ரீகிருஷ்ணா சின்ஹா பீகார் முதலமைச்சரானார். அவரது வீட்டில்தான் சுனில் தங்கினார். அவர் சுனிலின் தந்தையின் நண்பராவார். முதலில் பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைக்கவில்லை; ஆனால் முதலமைச்சர் சினமுற்று வலியுறுத்தி அனுமதி பெற்றுத் தந்தார்.

            பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் சேர்ந்த சுனிலின் துறைத் தலைவர் டாக்டர் ஞான்சந்த் விரைவில் அவருடைய புரட்சிகர செயல்பாடுகளை அறிந்து அவரைத் தம் பிரிவில் அனுமதித்தார்.

            பாட்னாவில் ஏஐஎஸ்எஃப் தலைவரான அலி அஷ்ரஃப், ஜகந்நாத் சர்க்கார் மற்றும் பிறரைச் சுனில் தொடர்பு கொண்டார்.

            விவசாயி – தொழிலாளி – மாணவர் லீக் ஒன்று 1938 மூன்கரில் ரத்தன் ராய் தலைமையில் அமைக்கப்பட்டது. அவர் பீகார் கட்சியின் ஸ்தானபனத் தலைவர்களில் ஒருவராவார்.

            முதலில் சுனில் முகர்ஜி கல்கத்தா செல்ல விரும்பினார், ஆனால் அவ்வாறு செல்ல வேண்டாம் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. மத்திய கட்சியின் பத்திரிக்கையான ‘நேஷனல் ஃப்ரண்ட்’ (தேசிய முன்னணி) இதழுக்காக அவர் ஒரு ஏஜென்சி தொடங்கினார். பிசி ஜோஷி அவரை 1939 கயாவில் நடந்த கிசான் சபா மாநாட்டிற்கு வருமாறும் பீகாரில் கட்சியை அமைக்கவும் கேட்டுக் கொண்டார்.

பம்பாயில் பயிற்சி முகாம்

            கட்சி செயலாளர்களுக்கான மார்க்ஸியத்தில் மூன்று மாத பயிற்சிக்காக சுனில் பம்பாய்க்கு அழைக்கப்பட்டார். பல விரிவான பொருள்களில் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. பிசி ஜோஷி தவிர டாக்டர் அதிகாரி, அஜாய் கோஷ் மற்றும் ஆர் டி பரத்வாஜ் விரிவுரையாற்றினர். புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் டாக்டர் ஆர் சி மஜூம்தார் அங்கிருந்தார். அவருடன் கேரளாவிலிருந்து பி கிருஷ்ணப்பிள்ளை மற்றும் ஆந்திராவிலிருந்து சந்திரசேகரனும் பங்குபெற்றார்.

பீகாரில் சிபிஐ ஸ்தாபித்தல்

            ஜூலையில் திரும்பி வந்ததும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்கும் தயாரிப்புப் பணிகளைச் சுனில் தொடங்கினார். 1939 செப்டம்பரில் இரண்டாவது உலக யுத்தம் மூண்டது; அந்நிகழ்வின் வளர்ச்சிப் போக்குகளை விளக்குவதில் கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிடையே மோதல் பிளவுபடும் நிலையை அடைந்தது.

            பரஸ்பரம் கலந்து பேசிய பிறகு, அங்கிருந்த தோழர்களைக் கொண்டு 1939 அக்டோபர் 20ல் மூன்கரில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் இருபது (20) தோழர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர் எண்ணிக்கை பற்றி வேறுபட்ட தகவல்கள் சொல்லப்பட்டாலும் 20 தோழர்கள் கலந்து கொண்ட கூட்டம் என்பதே மிகப் பெரிதும் ஏற்கப்பட்டது. சுனில் முகர்ஜியின் மூத்த சகோதரிக்குச் சொந்தமான கங்கை கரையருகே இருந்த சிறிய வீடு ஒன்றில் அக்கூட்டம் நடைபெற்றது. அந்த நாள் தசரா கொண்டாட்டங்கள் நடைபெற்ற நாளாகியதால் மற்றவர்கள் அறியாமல் கூட்டம் நடத்த அது நல்ல மறைவான வாய்ப்பாயிற்று. சிபிஐ கட்சியின் மத்தியக் குழு சார்பாக ஆர்டி பரத்வாஜ் கலந்து கொண்டார். கலந்து கொண்ட இருபது பேரில் நால்வர் கேன்டிடேட் உறுப்பினர்கள் மற்றவர்கள் முழு நேர உறுப்பினர்களாகவும் ஆனார்கள். ஐந்து உறுப்பினர் மாகாணக் குழு (ப்ரொவின்ஷியல் கமிட்டி PC) அமைக்கப்பட்டது: சுனில் முகர்ஜி செயலாளராகக் கொண்ட குழுவில் அலி அஷ்ரஃப், ராகுல் சாங்கிருத்தியாயன், ஞான் பிகாஸ் மொய்ரா மற்றும் பினோத் முகர்ஜி இடம் பெற்றனர்.

            எதிர்காலத்தில் புகழ்பெற்ற பெயராளர்களாகிய சுனில் முகர்ஜி, ரத்தன் ராய், ஷிவ் பச்சன் சிங், ராகுல் சாங்கீர்த்தியயானா, விஸ்வநாத் மாத்தூர் முதலானவர்களும் இருந்தனர்.

            பீகாரில் இருந்த கட்சி 1940 ஜனவரி 26ல் தானே சுதந்திர தினம் என அறிவித்தது. விடுதலையின் நோக்கங்கள், வர்க்கப் போராட்டம், ஏகாதிபத்தியம் மற்றும் பாசிசத்தை எதிர்த்தப் போராட்டம் குறித்து விளக்கி கையேடுகளை அவர்கள் விநியோகித்தனர்.  டால்மியா நகர், கிரிதிக், பாட்னா முதலான இடங்களில் பல்வேறு வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. அப்போது வெளியான நாளிதழ்கள் “ஒரு புதிய, சிகப்பு நட்சத்திரம் பீகார் பிரதேசத்தில் எழுந்துள்ளது” எனக் குறிப்பிட்டன. இந்தப் புதிய ‘அபாயம்’ குறித்து ‘எச்சரித்த’ ஸ்டேட்ஸ்மன் பத்திரிக்கை அது விரைவில் நசுக்கப்பட வேண்டும் என எழுதியது.

            சுனில் முகர்ஜி, அலி அஷ்ரஃப் மற்றும் ராகுல் 1940 மார்ச்சில் கைது செய்யப்பட்டனர். ஜுன் மாதம் 50 தோழர்களுக்கும் மேல் கைது செய்யப்பட்டனர். அந்நேரம் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை ஐம்பதிற்கும் அதிகமாகக் கடந்திருந்தது. சுனில் முகர்ஜி பகல்பூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.

தியோலி தடுப்புக் காவல் முகாம் சிறையில்

            எதிர்மறையில் மோசமாகப் புகழ்பெற்ற தியோலி முகாம் சிறைக்கு 1940ல் சுனில் முகர்ஜி, அலி அஷ்ரஃப், ராகுல் உட்பட 15 தோழர்களுடன் பீகாரிலிருந்து அனுப்பப்பட்டார். அங்கே பிற்காலத்தில் கம்யூனிஸ்ட்டான சந்திரமா சிங் என்ற புரட்சியாளரும், யோகேந்திர சுக்லா, சூர்ய நாராயண சிங் (சோஷலிஸ்ட்) உட்பட பிறரும் இருந்தனர். சுனில் முகர்ஜி முகாம் எண் 2ல் அடைக்கப்பட்டார். எஸ் ஏ டாங்கே, அஜாய் கோஷ், ஆர் டி பரத்பாஜ், சோலி பாட்லிவாலா, எஸ்வி காட்டே, தன்வந்திரி முதலான புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் அங்கிருந்தனர்.

            தியோலி முகாமிற்கு அழைத்து வரும்போதே சுனில் முகர்ஜி உடல்நலம் குன்றி நோயுற்றிருந்தார். அப்பென்டிக்ஸ் (குடல்வால் அழற்சி) அறுவை சிகிச்சைக்காக ஆஜ்மீருக்கு, கார்வால் ரெஜிமெண்ட் பாதுகாவலோடு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர் யங்க் அவருக்குச் சிகிச்சை அளித்தார்.

            பாட்னா மெடிகல் காலேஜ் மற்றும் மருத்துவமனையில் (PMCH) சிகிச்சை முடித்த பிறகு 1942 ஜூலையில் சுனில் விடுவிக்கப்பட்டார். பாட்னா கழஞ்சி தெருவில் மாகாண கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டது. 1942 ஆகஸ்ட் இயக்கப் போராட்டப் பேரணிகள் அந்தத் தெரு வழியே சென்றது. 1943ல் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 336ஆக உயர்ந்திருந்தது. மக்கள் தொடர்ந்து கட்சியில் இணைந்தனர். பின்னாட்களில் அகில இந்திய கிசான் சபாவின் பொதுச் செயலாளரான சகஜானந்த் சரஸ்வதியுடன் அவர் நெருக்கமாக இணைந்து பணியாற்றினார். 1942 – 44ம் ஆண்டுகளில் கிசான் சபா உறுப்பினர்களை அரசியல் ரீதியில் பயிற்சியளித்து உருவாக்குவதில் சுனில் முகர்ஜி அவருக்கு உதவினார்.

            1940ல் கார்யானந்த் சர்மா சிபிஐ கட்சியில் சேர்ந்தார். சுவாமி சகஜானந்த் கோபமுற்று சுனில் முகர்ஜியிடம் கூறினார்: ‘என்னுடைய கேடர்களை (அணி ஆட்களை) நீங்கள் எடுத்துக் கொண்டு விடுகிறீர்கள்!’. சுனில் தான் அவர்களுக்குக் கட்சி மற்றும் கிசான் சபா இரண்டிலும் பயிற்சி அளிப்பதாகப் பதில் கூறினார். அவருடைய பதிலில் திருப்தி அடைந்த சுவாமிஜி அதனை ஒப்புக் கொண்டார். இந்தக் காலகட்டத்தில் யோகேந்திர சர்மா, சதுரானன் மிஸ்ரா, போகேந்திர ஜா, கங்காதர் தாஸ், சந்திரசேகர் சிங் போன்ற ஏராளமான புகழ்பெற்ற ஆளுமைகள் பலர் கட்சியில் இணைந்தனர். 1944 வாகில் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 4000 ஆக வளர்ச்சி பெற்றிருந்தது.

            1943 – 44 வங்காளப் பஞ்சத்தின்போது கட்சி பல பணிகளை ஆற்றியது, அந்தப் பஞ்சம் பீகாரையும் கடுமையாக பாதித்திருந்தது.

            1943 மே மாதத்தில் பம்பாயில் நடைபெற்ற சிபிஐ முதலாவது கட்சி காங்கிரஸ் மாநாட்டில் சுனில் முகர்ஜி கலந்து கொண்டார். அவர் ஜாம்ஷெட்பூர், டால்மியாநகர், கிரிதித் முதலான இடங்களில் தொழிற்சங்க அரங்கில் பணியாற்றி கட்சியைக் கட்டுவதற்கு உதவினார்.

            1947ன் தொடக்கத்தில் கட்சி ‘ஜனசக்தி’ என்ற இந்தி நாளிதழை வெளியிட்டது. 1946முதல் கட்சி உறுப்பினரான ஷிவாணி சாட்டர்ஜியைச் சுனில் 1947 மே மாதம் திருமணம் செய்தார்.

            நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றுவதற்காகச் சுனில் முகர்ஜி தன்பாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எஸ்ஏ டாங்கே தலைவராகவும், சுனில் முகர்ஜி பொதுச் செயலாளராகவும் கொண்டு ‘அனைத்திந்திய நிலக்கரி தொழிலாளர்கள் சம்மேளனம்’ அமைக்கப்பட்டது.

பீகார் சட்டமன்றத்தில்

            1962 பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் கட்சி சுனில் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்தியது. ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 இடங்கள் கிடைத்தன. மேலும் ஜாம்ஷெட்பூர் நாடாளுமன்றத் தொகுதியிலும் வென்றது. சிபிஐ சட்டமன்றக் குழுத் தலைவராகச் சுனில் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் திறமையாகப் பல உரைகளை ஆற்றினார்.

            1964ல் கட்சியில் ஏற்பட்ட பிளவு பீகாரை அதிகம் பாதிக்கவில்லை.  

1964 ஜாம்ஷெட்பூர் வகுப்புவாதக் கலவரங்களில் நிவாரணப் பணி

            1964ல் ஜாம்ஷெட்பூரில் மிகக் கடுமையான வகுப்புவாதக் கலவரங்கள் மூண்டன. அவற்றை வகுப்புவாதச் சக்திகள் துணையோடு டாட்டாக்கள் ஏற்பாடு செய்தனர். மிக மோசமான கலவரங்கள் அவை. அமைதியை ஏற்படுத்த சுனில் முகர்ஜி, கேதார் தாஸ் மற்றவர்கள் மிகக் கடுமையாகப் பாடுபட்டனர். கலவரங்களைத் திட்டமிட்டு நடத்திய வகுப்புவாத உதிரிகள் இருந்த மையங்களை அதிகாரிகளுக்கு அடையாளம் காட்டுவதில் சுனில் உதவினார்.

1965ல் கைது

            1960களில் ஏற்பட்ட காங்கிரஸ் எதிர்ப்பு அலையின்போது சுனில் முகர்ஜி மிகத் தீவிரமாகச் செயல்பட்டார். அவருடன் ராம் மனோகர் லோகியாவும் 1965ல் கைது செய்யப்பட்டார். பாட்னா காந்தி மைதானத்தில் பல தலைவர்களை அடித்துத் தாக்குதல் நடத்திக் கைது செய்தனர்.

            1967ல் காங்கிரசுக்கு எதிராகப் பல கட்சிகளின் கூட்டணி ‘சம்யுக்த விதயக் தள’ (SVD) ஆட்சி அமைந்தன. சுனில் முகர்ஜிக்குப் பீகாரின் முதலமைச்சராகும் வாய்ப்பை டாக்டர் லோகியா வழங்க முன்வந்தார்; ஆனால் சுனில் முகர்ஜி இது கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்தும் எனக் கூறி அதனை ஏற்க மறுத்துவிட்டார்: கூட்டணியில் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி (SSP)தான் பெரிய கட்சி. எஸ்விடி கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் சுனில் முகர்ஜி இல்லத்தில் நடைபெறுவது வழக்கம். சுனில் முகர்ஜிதான் மகாமாயா பண்டிட் சிங் அவர்களை முதலமைச்சர் ஆக்கலாம்  என்ற முடிவை அறிவித்தார்: அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை! சுனில் முகர்ஜியையும் அமைச்சராக்கலாம் என்ற யோசனையை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

            1962 –67 மற்றும் 1969 –77 ஆண்டு காலத்தில் சிபிஐ சட்டமன்றக் குழுத் தலைவராக அவர் இருந்தார். 1973 –77ல் எதிர்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

மீண்டும் கட்சிச் செயலாளராக

          படிண்டா கட்சி காங்கிரஸ் (1978) முடிந்த பிறகு 1978 முதல் 1984வரை சுனில் முகர்ஜி சிபிஐ பீகார் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார். 1978 முதல் 1984 வரை சிபிஐ மத்திய தேசியக் குழு (CEC) உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார். அதற்கு முன் ஒன்றுபட்ட கட்சியின் மத்தியக் கமிட்டி (CC) உறுப்பினராக இருந்தார்.

            பீகார் மாநிலத்தில் இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியை வலிமை வாய்ந்ததாகக் கட்டியெழுப்பிய சுனில் முகர்ஜி, சில காலம் நோய்வாய்பட்டிருந்த பின், 1992 மார்ச் 30ம் தேதி மறைந்தார்.

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

No comments:

Post a Comment