Sunday 24 October 2021

பருவநிலை மாற்ற உச்சிமாநாடு பலன் தருமா?

 


பருவநிலை மாற்ற உச்சிமாநாடு பலன் தருமா?

--டாக்டர் சோமா மார்லா

     இன்று உலகின் தலையாய பிரச்சனை போரோ, அணு ஆயுதமோ அல்ல; புவி வெப்பமயமாதலும் பருவநிலைகள் தாறுமாறாக மாறுவதும்தான். இன்று உலகில் நாம் மிகக் கடுமையான உருக வைக்கும் கோடை வெப்பம், காடுகள் பற்றி எரிதல் மற்றும் பல பகுதிகளில் பொங்கிச் சீறி அழிவை ஏற்படுத்தும் வெள்ளம், பெரும்மழை இவற்றைச் சந்திக்கிறோம். அறிவியலாளர்களின் எச்சரிக்கைகளை அடுத்து ஐ நா மன்றம் 1995 பெர்லின் மாநாடு தொடங்கி ஆண்டுதோறும் பருவநிலை மாற்றம் குறித்த உலகத் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் உச்சி மாநாட்டை நடத்தி வருகிறது. ஐநாவின் அடுத்த பருவநிலை மாற்ற மாநாடு 2021 பிரிட்டன் தேசத்தின் கிளாஸ்கோ நகரில் எதிர்வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை நடக்க உள்ளது. 26வது சர்வதேச மாநாடாகிய இதனை COP26 என்று அழைப்பார்கள் (கான்ஃபெரன்ஸ் ஆஃப் பார்ட்டீஸ், சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் 26வது மாநாடு).

     2015 பாரீஸ் உடன்பாட்டை அடுத்து கூட்டங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. அதில் அரசுத் தலைவர்கள், தூதுவர்கள், வணிகத் தலைவர்கள், தன்னார்வப் பிரச்சாரத் தொண்டர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர். பருவநிலை மாற்றப் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காகச் சென்ற மாநாட்டிலிருந்து அதுவரை எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கின்றனர். அனைவரும் கூட்டாகச் சேர்ந்து உலக வெப்பநிலை உயர்வு 2டிகிரிக்கும் குறைவாக, முடிந்தால் 1.5 டிகிரியில் கட்டுப்படுத்திடும் வகையில் பசுமைக் குடில் வாயுக்கள் வெளியீட்டைக் குறைக்க முயற்சிப்பது என 2015 பாரீஸ் ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. புவி வெப்ப உயர்வு 2டிகிரிக்கும் கீழே குறைக்க வேண்டுமெனில் ஆலைகள், கார்கள் போன்றவை வெளியிடும் 650 ஹிகா டன்கள் கரியமிலவாயு எனப்படும் கார்பன் வாயுவை (ஒரு ஹிகா டன் என்பது 100கோடி டன்களுக்குச் சமமானது) உலக நாடுகள் குறைக்க வேண்டும்; அப்போதுதான் நாம் மீண்டும் 2005 சுற்றுச் சூழல் மட்டத்திற்குத் திரும்பச் செல்ல முடியும்.

     ஒவ்வொரு நாடும் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதில் ‘தேச அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு’ என்ற (NDCs) இலக்கை நிர்ணயித்துச் செயல்பட்டால் மட்டுமே அந்த இலக்கை 2030க்குள் அடைய முடியும். சமுதாயத்தின் மீது பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பு குறிப்பாக வளர்ந்து வரும் ‘உலகின் தென்பகுதி’ (க்ளோபல் சவுத்) நாடுகளில் அபாயகரமாக உள்ளது. இந்த நெருக்கடி வளர்ந்த ‘வசதி பெற்ற நாடு’கள் (‘haves’) வளர்ச்சிபெறாத ‘இல்லாத நாடுகள்’ (‘have nots’) மீது கடுமையாகச் சுமத்துவதாகும். அபரிமிதமான செல்வம் மிகுந்த மேற்குலக நாடுகள் வரலாற்றுபூர்வமாகவே நம்பூமியை மாசுபடுத்தி வருபவர்கள்; இப்பூவுலகின் மீது முக்கியமாகத் தங்கள் ‘கார்பன் காலடித் தட’த்தை (carbon foot prints) ஏற்படுத்தி விட்டுச் செல்கிறார்கள். (கார்பன் தடம் என்பது ஒரு நாடு தன் நடவடிக்கைகளால் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் மீதேன் போன்ற புவி வெப்பமயத்திற்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்களின் மொத்த அளவாகும்.) உலகின் தென்பகுதி நாடுகளின் செல்வாதாரத்தில் 75 சதவீதத்தை மேற்குல நாடுகள் அடைந்து அனுபவிக்கின்றனர்.

     சீனா, ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட கார்பன் வெளியீட்டில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள் உலகின் மொத்த பசுமை இல்ல வாயுகளில் (கிரீன் ஹவுஸ் கேஸஸ், GHG) மூன்றில் இரண்டு பங்கை உமிழ்வதில் காரணமாக உள்ளன; அதே நேரம் ஏழ்மையான 100 தெற்கத்திய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தத்தில் 3.6 சதவீதமான கார்பனை வெளியிடுகின்றன. ஆனால் கடுமையான வறட்சி, காடுகள் அழிக்கப்படுவது, உயிர் பன்மைத்துவம் சுருங்குவது, திடீரென உயிரினங்கள் அழிந்து மறைவது, பருவம் தப்பிய பெரு மழை, கடல் மட்ட உயர்வால் நிலப்பகுதிகள் நீரில் மூழ்குவது போன்ற கடுமையான பேரழிவுகளை இந்த நூறு நாடுகளும் அனுபவிக்கின்றன.

     உலக மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதமே உடைய அமெரிக்கா சுமார் 30 சதவீதமான உலகின் மொத்த இயற்கை செல்வாதாரங்களை நுகர்ந்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, பெரும்பான்மை கார்பன் அடிச்சுவட்டைப் பதிப்பதில் முக்கியமான குற்றவாளியாக நிற்கிறது. பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுவதைக் குறைப்பதில் பொதுவான ஆனால் விகிதாச்சார அடிப்படையில் கூடுதல் பொறுப்புணர்வை (வளர்ந்த நாடுகள்) ஏற்க வேண்டும் என இந்தியாவும் ஏனைய வளரும் நாடுகளும் வற்புறுத்திக் கோரின. இதனால் இறுதியில் ‘பசுமை பருவநிலை நிதியம்’ (கிரீன் க்ளைமேட் ஃபண்டு’ அல்லது கிரீன் கார்பன் ஃபண்டு GCF) எனப்படும் நிதியத்திற்கு மேற்குலக நாடுகள் ஆண்டு தோறும் 100 பில்லியன் டாலர் மதிப்பிற்கு நிதி வழங்கிட ஒப்புக்கொள்ள வேண்டி வந்தது. எளிதில் பாதிக்கப்படும் ஏழை நாடுகள் பருவநிலை மாற்ற பாதிப்புகளை நீக்க சுற்றுச் சூழலில் கார்பன் அடிச்சுவட்டைக் குறைக்கவும் கார்பன் குறைப்புக்கான (மதிப்பெண் வரவு) வெகுமதிகளைப் (carbon credits) பெறவும் அந்த நிதியைக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும். (கார்பன் கிரிடிட் என்பது ஒரு டன் அளவு பசுமை குடில் வாயுவை வெளியிடும் உரிமை பெற்ற வர்த்தகப் பண்டம்). அதே போல குறைந்த அளவு கார்பன் வெளியிடும் எரிசக்தி முறைகள், மரபு சாரா எரிசக்தி உற்பத்தி, பூமிக்கு ஊறு  செய்யாத பாரம்பரிய இயற்கை சுற்றுச் சூழல் நட்பு மிகுந்த உள்நாட்டு உற்பத்தி ஆலைகளுக்கு ஊக்கமளித்தல், எரிசக்தி திறன் மிகுந்த போக்குவரத்து வாகனங்கள் மற்றும் வறட்சியைத் தாங்கும் வேளாண் முறை இவற்றை இந்த நிதி உதவியுடன் ஆதரித்திட உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

நிதியைக் கடத்தல் (ஹைஜாக்கிங்)

     ஆனால் பசுமை கார்பன் நிதி உண்மையில் எவ்வாறெல்லாம் உலகத் தெற்கு நாடுகளிலிருந்து பறந்து சென்றுவிடுகிறது எனப் பார்ப்போம். (36 நாடுகள் பங்கேற்க பாரீஸ் தலைமையகமாகக் கொண்டு செயல்படும்) ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு’ (OECD) 2017ல் சில தரவுகளை வெளியிட்டது; அதன்படி வளரும் நாடுகள் அந்த நிதியில் சுமார் 7.1 பில்லியன் டாலர்களைக் கடனாக மட்டும் பெற முடிகிறது; அந்தத் தொகை உடனடியாகப் பயன்படுத்தும் வகையில் நேரடி நிதிஉதவியாக அளிக்கப்படுவதில்லை. ஆனால் திரும்பப் பயன்படுத்தும் எரிசக்தி உற்பத்தி, பசுமை போக்குவரத்து வாகனத் தொழிற்சாலைகள் போன்ற பசுமைத் தொழிலில் ஈடுபடும் உலகக் கார்ப்பரேட்டுகளின் பகாசுரக் கம்பெனிகள் அந்த நிதியில் ஆகப் பெரும் பகுதியைத் தங்கள் உரிமையாகக் கொள்ளையடிக்கின்றனர். எஞ்சிய குறை பின்னமான 100 பில்லியன் டாலர் நிதி மட்டுமே பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் கிடைக்கிறது.

         உதாரணத்திற்குத் தனியார் சூரிய சக்தி உற்பத்தி நிறுவனமான இந்தியாவின் அதானி சோலார் நிறுவனம் சந்தையில் கூட்டாக 100 பில்லியன் டாலர் அளவு சந்தையை அதிகபட்சமாக வைத்துள்ளது; அதனைக் காரணம் காட்டி பசுமை கார்பன் நிதியத்திலிருந்து கணிசமான நிதி உதவித் தொகையை இலவசமாகப் பெறுகிறது – ஆனால் அதன் முழு விபரம் வெளியில் தெரியவில்லை. அதே நேரம் தெலுங்கானாவின் ‘விஸ்டராகு’ என்ற சிறிய பெண்கள் கூட்டுறவு அமைப்பு (பலாஷ் மர இலைகளிலிருந்து இயற்கை உயிரியல் நட்பு மிகுந்த உணவு உண்ணும் தட்டுக்கள் மற்றும் கோப்பைகளைத் தயாரிக்கும் நிறுவனம்) கார்பன் கிரிடிட் வெகுமதியாக ஒரு டாலர் நிதி உதவியைக் கூட பெற முடியவில்லை. இதற்காகப் பசுமை கார்பன் நிதியத்திலிருந்து உதவிபெற பருவநிலை மாற்ற ஒப்பந்த நாடுகளின் ஐநாவின் COP அமைப்புக்குப் பலமுறை வேண்டுகோள்கள் அனுப்பியும் பயன் இல்லை.

COP26 என்ன செய்ய முடியும்

    பசுமை கார்பன் நிதியை எவ்வாறு செலவிடுவது என்பதில் அரசுகளைப் பொறுப்பாக்கி ஒரு சட்டபூர்வ வழி முறையைக் காண்பதே எதிர்வரும் பருவநிலை உச்சி மாநாட்டு விவாதங்களில் மிகப் பெரிய பிரச்சனையாக இடம் பெற வேண்டும். பசுமை நிதியைப் பிரித்தளிப்பதை ஜனநாயகப்படுத்தவும், நிதியைச் செலவிடுவதில் முழுமையான வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.  

    வெளிப்படைத் தன்மையும் பொறுப்புணர்வும் எதிர்வரும் மாநாட்டில் விவாதத்திற்குரிய பொருளாக இடம்பெற வேண்டும். பசுமை கார்பன் நிதியை ஜனநாயகப்படுத்துவதன் மூலமே நடைமுறை சாத்தியமான பருவநிலை நீதி, நியதியை ஏற்படுத்த முடியும். 

     பாரீஸ் உடன்பாட்டில் ஒப்புக்கொண்ட அளவுக்குட்பட்ட வெப்ப உயர்வு இலக்குகளுக்குப் பிரதானமாகப் பொருந்துமாறு பசுமை இல்ல வாயுகள் குறைப்பின் நடைமுறை சாத்தியமான எதார்த்த இலக்குகளை நிர்ணயித்து அதற்கு ஆதரவு திரட்ட வேண்டியது பருவநிலை மாநாட்டுத் தலைமையின் மற்றொரு முக்கியமான பொறுப்பாகும்.  இதன் பொருள் புவி வெப்பமயமாதலை மட்டுப்படுத்த உலகளாவிய கார்பன்கள் வெளியிடுவதை 2010 மட்டத்திலிருந்து 45 சதவீதம் குறைக்க வேண்டும் என்பதாகும். COP26 மாநாட்டின் விவாதங்கள் மற்றும் முடிவுகள் அனைத்து நாடுகளையும் கட்டுப்படுத்துவதாகவும் ஒவ்வொரு அரசும் மற்ற அரசுகளைச் சட்டபூர்வமாக அதற்கு உட்படச் செய்யும் வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும்.

     பசுமை கார்பன் நிதியைப் பன்னாட்டுக் கார்ப்பரேஷன்கள் ஏகபோகமாக்குவதைப் பசுமை முதலாளித்துவத்தின் நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன; அவை உலகின் ஏழை தென்பகுதி நாடுகளைப் புறக்கணிப்பதைத் தடுத்து முறைப்படுத்த வேண்டும்; குறிப்பாக, மறுசுழற்சி எரிசக்தி தொழில் நுட்பங்கள், வீணாகும் பொருள்களின் மறுசுழற்சிப் பயன்பாடு, பசுமை போக்குவரத்து வாகனங்கள் துறை, கார்பன் கிரிடிட் வர்த்தகம் அல்லது பசுமை சுற்றுச்சூழல் சுற்றுலா (அதாவது சுற்றுலா செல்வோர் செலுத்தும் கட்டணத்தில் ஒருபகுதியை உள்ளூர் சுற்றுச் சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பிற்காகச் செலவிட்டு, பலரும் செல்லாத இடங்களின் சுற்றுச் சூழலைப் பாதுகாத்து அந்த இடங்களுக்கும் சுற்றுலா சென்றுவர வசதி செய்து தருதல்) போன்றவற்றில் தலையிட்டு முறைப்படுத்தல் வேண்டும். பேரளவு உற்பத்தியைத் தடுப்பதற்கு மாறாக, அதீத உயர் லாபத்தைத் தேடி தீவிரமாக இயற்கையை அழித்து நடத்தப்படும் வெறியூட்டும் பைத்தியக்கார நுகர்வுக் கலாச்சாரம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

மார்க்ஸிய சுற்றுச்சூழல் மாற்று வழிமுறைகள்

       மெட்டபோலிக் ரிஃப்ட் (Metabolic rift, வளர்சிதை மாற்றத்தில் பிளவு) என்பது புகழ்பெற்ற சுற்றுசூழலியர் ஜான் பெல்லாமி ஃபோஸ்டர், முதலாளித்துவத்தின் கீழ் சுற்றுச் சூழல் அழிக்கப்படுவது

குறித்த காரல் மார்க்ஸின் புரிதலைச் சுட்டுவதற்காகக் கையாண்ட கலைச் சொல். முதலாளித்துவம் ஆகக் கூடுதலான கொள்ளை லாபம் என்பதைத் தேடி ஓடுவதில் இம்மண்ணின் அடுத்தடுத்துச் செழிக்கச் செய்யும் வளத்தைச் (natural fertility) சுரண்டி பிரம்மாண்ட பொருள் உற்பத்திக்காக இயற்கையின் சாரமான வளத்தின் சுழற்சியை (nutrient cycle) மீண்டும் சீர்செய்ய இயலாதபடி கடுமையாக பாதிக்கிறது – இயற்கையின் இந்தச் சுழற்சிதான் உணவை உற்பத்திச் செய்யவும் (அப்படி உற்பத்திச் செய்யப் பயன்படுத்திய மண்ணின் சாரத்தை) மீண்டும் மறுபுத்துயிர்ப்பு ஆக்கவும் இயற்கைக்குத் துணை நிற்கிறது. இந்த வளப்படுத்தும் சுழற்சியை முதலாளித்துவ உற்பத்தி முறை உடைத்து முறித்து விடுகிறது என சுட்டிக்காட்டிய காரல் மார்க்ஸ் அதுதான் மிகப்பெரிய சுற்றுச் சூழல் நெருக்கடி என்று குறிப்பிட்டார். எனவே சமூகத்திற்கும் இயற்கைக்கும் இடையே ஓர் ஆரோக்கியமான உறவு நீடிக்க வேண்டும்; இயற்கை தன்னைப் புத்துயிர்ப்பு செய்து சமூகத்தின் அடுத்த தலைமுறைக்கான மறுஉற்பத்தி நீடிப்பதற்குத் தேவையான சூழலையும் அனுமதிக்கிறது என்று விளக்கினார். [இயற்கை வளத்தின் சுழற்சி வட்டம் என்பது சக்தி (எனர்ஜி) மற்றும் பொருள்களுக்கு இடையே நடைபெறும் வளர்சிதை மாற்றத்திற்கான உயிரினங்களுக்கும் ஏனைய உயிரற்ற பொருள்களுக்கும் இடையே பரஸ்பரம் நிலவும் உறவைக் குறிக்கிறது. மண்ணிலிருந்து வளத்தை எடுத்துக் கொள்ளும் உயிரினம் (தாவரங்கள் மற்றும் விலங்குகள்), மீண்டும் மண்ணிற்கு அந்தச் சாரத்தை (தங்களது இறந்த உடல்கள் மக்குவதன் மூலம்) வழங்கும் ஓர் இயல்பான வட்ட நிகழ்முறை இது.]

        மார்க்ஸின் புகழ்பெற்ற பழமொழி, “இந்த பூமி தனிப்பட்ட மனிதனின், சமூகத்தின் அல்லது நாட்டிற்குச் சொந்தமானதல்ல; ஏன் மனிதனின் கூட்டுச் சொத்தும் அல்ல. நாம் இந்த பூமிக்கு விருந்தினர்கள் மட்டுமே. பூமியில் நமக்குக் கிடைத்ததைவிட மேம்பட்ட நிலையில் வரும் தலைமுறையினரிடம் இந்தப் பூமியைக் கைமாற்றிக் கொடுக்க வேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கிறது!”

       

இதையே மகாத்மா காந்தியடிகளின் பொன்மொழி, “இந்த உலகம் நம் அனைவருக்கும் தேவையானவற்றை வழங்க வல்லது. ஆனால் எந்த மனிதனின் பேராசையையும் பூர்த்தி செய்யக் கூடியது அல்ல!” வலியுறுத்துகிறது.

        சென்ற பருவநிலை மாநாட்டின் போது இளம் சுற்றுச்சூழல் போராளி கிரேட்டா துன்பர்க் வளர்ச்சியின் பின்னால் கொள்ளை லாபத்திற்காக ஓடும் தலைவர்களைப் பார்த்துப் பூவுலகைக் காக்க வேண்டிய அவர்களின் கடமையை உணர்ச்சி பொங்க எடுத்துரைத்து இந்தப் பூமி எதிர்காலக் குழந்தைகளுடையது, அதன் சுற்றுச் சூழலைப் பாழ்படுத்தாதீர்கள் என அவர்களை எச்சரித்தார்.

        எனவே எதிர்வரும் பருவநிலை மாநாட்டில் நடைமுறை சாத்தியமான பருவநிலை நீதியை நிலைநிறுத்திட பசுமை நிதியைச் செலவிடுவதை ஜனநாயகப்படுத்துவதில் கவனம் குவிக்கப்பட வேண்டும்!

        பூவுலகைப் பாதுகாப்பது நம் அனைவருடைய கடமையாகும்!

--நன்றி: நியூஏஜ் (அக்.24 – 30)

--தமிழாக்கம் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

No comments:

Post a Comment