Wednesday 3 November 2021

நவ.3 தோழர் குருதாஸ் தாஸ்குப்தா பிறந்த நாள் -- AIBEA கட்டுரையின் தமிழாக்கம்

தோழர் குருதாஸ் தாஸ்குப்தா

--மறக்க முடியா மாபெரும் தலைவர்


            தற்போது பங்களாதேஷில் உள்ள பாரிசால் என்ற கிராமத்தில் 1936 நவம்பர் 3ல் பிறந்த தோழர் குருதாஸ் தாஸ்குப்தா கொல்கத்தாவில் கல்வி கற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஆசுதோஷ் கல்லூரியில் வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். சமூக உணர்வுபெற்ற குருதாஸ் மாணவராக இருக்கும்போதே அரசியல் செயற்பாட்டாளராக இருந்தார். 1953ல் தனது இளம் 17வயதிலேயே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

            1954ல் பெங்கால் மாகாண மாணவர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனார். 1958ல் ஆசுதோஷ் கல்லூரி மாணவர் சங்கத்தின் செயலாளரானார். 1967 முதல் 1978வரை மேற்கு வங்க இளைஞர் சங்கப் பொதுச் செயலாளராக இருந்தார். அனைத்திந்திய மாணவர் பேரவை (AISF) மற்றும் அனைத்திந்திய இளைஞர் பேரவை (AIYF) அமைப்புக்களில் ஆர்வத்தோடு ஈடுபட்டவர் அவற்றின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

நாடாளுமன்றத்தில்

            அரசியல் வாழ்வின் ஏற்றத்தில் 1985ல் தோழர் குருதாஸ் தமது 49வது வயதில் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 1988 மற்றும் 1994ல் மாநிலங்களவைக்கும், 2004ம் ஆண்டிலும் 2009லிலும் மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வாறு 5 முறை சுமார் 30 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பணியாற்றியுள்ளார்.  

            அரசின் தவறான கொள்கைகளை எதிர்க்கும் அவரது திறமை, காட்டாற்று வெள்ளமாய் பெருகும் சொற்பொழிவு, உயர் அதிகார இடங்களின் ஊழல்களை அம்பலப்படுத்தும் துணிவு இவற்றால் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகப் புகழ் பெற்றார். நாடாளுமன்றத்தில் திறன்மிக்க பங்களிப்பால் தோழர் குருதாஸ் புகழார்ந்த பெரும் பெயர் பெற்றார்.

            (பங்குச் சந்தையில் பெரும் பொருளாதாரத்) தவறிழைத்த ஹர்ஷத் மேத்தா மோசடி, (கிருஷ்ணா கோதாவரி படுகையில்) ரிலையன்ஸ் எரிவாயு மோசடி, 2-ஜி அலைக்கற்றை மோசடி போன்றவற்றை அம்பலப்படுத்தியதில் அவர் போற்றத்தக்க பங்காற்றினார். அவரது துணிச்சல் மற்றும் குன்றென நிமிர்ந்து நிற்கும் நேர்மை இவற்றிற்காகவே இந்நாட்டு மக்கள் தோழர் குருதாஸ் தாஸ்குப்தாவை என்றென்றும் நினைவில் வைத்திருப்பர்.

            பெரும் துணிச்சல்மிக்க சாகச நாடாளுமன்றவாதியாக அவர் அறியப்படுகிறார்; சிறுமை கண்டு பொங்கி அரசின் மக்கள் விரோத கொள்கைகளைச் சாடுவதில் அவருக்கு வார்த்தை பஞ்சம் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. நாடாளுமன்ற உரைகள் மட்டுமின்றி விவாதங்களின்போது இடைமறித்து மன்றத்தில் அவர் வைக்கும் வாதங்கள் மற்றும் உச்சபட்ச கேள்விகளை எழுப்பியதிலும் அவர் தனித்துவமான சிறப்பிடம் பெறுகிறார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில்

            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் 1986ல் தேசியக்குழு உறுப்பினராகவும் 2015ல் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும் உயர்ந்தார். நாட்டின் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் திரளுக்காக ஓய்வின்றிப் போராடிய விடாப்பிடியான போராளி அவர். பொதுமக்கள் திரளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உரத்துக் குரல் எழுப்பும் தீரர்; எங்கேயும் யாருக்கு அநீதி இழைக்கப்பட்டதென்றால், ‘கெடல் எங்கே மக்கள் நலன் –அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க’ என்பதற்கிணங்க தோழர் குருதாஸ் குரல் அங்கே ஒலிக்கத் தவறியதில்லை.          

            பொதுத்துறை நிறுவனங்களைப் பங்குவிற்பனை செய்யவும், அவற்றைத் தனியார்மயப்படுத்தவும் ஒன்றிய அரசு எடுத்த ஒவ்வொரு முயற்சியையும் 30 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தோழர் குருதாஸ் தாஸ்குப்தா குறிவைத்துத் தாக்கி அரசுக் கொள்கைகளின் தவறுகளை அம்பலப்படுத்தினார்.

            அரசு கொள்கை முடிவெடுக்கும்போது முதலாளிகளுக்கு ஆதரவாக அவர்களின் சார்பாக ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்ட அரசின் (cronyism) கோட்பாட்டை நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் அம்பலப்படுத்தினார்.

தலைவர்கள் போற்றிய தலைவர்

            வானுயர்ந்து நிற்கும்போதும் மண்ணில் கால் ஊன்றி நின்ற தோழர் குருதாஸ், தனது அணுகுமுறைகளில் முற்றும் நடைமுறை சாத்தியமான எதார்த்தத் தலைவராகவே திகழ்ந்தார். நமது நாட்டின் இன்றைய சூழ்நிலையில் இடதுசாரி இயக்கத்தின் வரையறை வரம்பு எல்லைகளை எப்போதும் நன்கு உணர்ந்திருந்தார்; அதற்கேற்பவே தனது நடவடிக்கைகளைத் திட்டமிட்டார். தனது பலவீனங்களை ஒப்புக்கொள்வதில் அவர் ஒருபோதும் வெட்கப்பட்டதில்லை; எனினும், எப்போதும் நம்பிக்கை உறுதியுடன் இருந்தார். அவர், “இடதுசாரிகள் தற்போது பதுங்கிப் பின்வாங்குவது போன்றிருக்கலாம், ஆனால் அது நிச்சயமாகப் பாய்வதற்காகத்தான்” என்று அடிக்கடி சொல்வார்.

            ஆளும் தரப்பு மற்றும் அரசைத் தாக்கும்போதும் ஆளும் கட்சி தலைவர்கள் உட்பட  பல அரசியல் கட்சித் தலைவர்களோடும் அவர் இணக்கமான உறவுகளைப் பேணினார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு அவரைப் பிடிக்கும்; அடிக்கடி அவரைக் ‘குரு தாஸ்குப்தா’ என்றே அழைப்பார். திருணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி, கம்யூனிஸ்ட்களை முதல் எதிரியாகக் கருதியபோதே, தோழர் குருதாஸ் குப்தாவுடன் சிறந்த நல்லுறவு கொண்டிருந்தார்.  பிரதமர் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து குவிந்த புகழ்மிக்கப் பாராட்டுரைகள் ஒவ்வொருவரும் அவரிடம் கொண்ட மதிப்பைக் காட்டுகிறது.

ஊழல்களை அம்பலப்படுத்தியவர்

            2-ஜி அலைக்கற்றை மோசடி குற்றச்சாட்டு பிரச்சனையில் அவரிடம் இருந்த சட்டம் இயற்றும் ஆகச் சிறந்த திறன் வெளிப்பட்டது. 2-ஜி மோசடியை விசாரித்த கூட்டு நாடாளுமன்றக் குழுவில் மிகத் தீவிரமான உறுப்பினராக இருந்தது மட்டுமின்றி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கைக் “கடமை தவறியவர்” என நேரடியாகக் குற்றம் சாட்டிய முதல் இடதுசாரித் தலைவரும் அவரே. பிசி சாக்கோ தலைமையிலான அந்த விசாரணைக் குழு இறுதியாக அளித்த அறிக்கை அரசுக்கு ஆதரவாக இருந்தது; இருப்பினும் மாறுபட்ட தனது கருத்தினை நீண்ட குறிப்புகளாக அந்தக் குழுவிடம் தோழர் குருதாஸ் அளித்தார்.

            அதுபோலவே ஹர்ஷத் மேத்தா பத்திர மோசடி மீதான நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழுவிலும் தீவிரமாகச் செயல்பட்டார். அந்த மோசடி குறித்து “தேசத்திற்கு ஓர் அறிக்கை என்று அவர் எழுதிய நூல் அந்நாட்களில் புயலைக் கிளப்பிய மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

            ஏழைகள் மற்றும் தொழிலாளர்களைச் சுரண்டுவதை அவர் ஒருபோதும் பொறுத்துக் கொண்டதே இல்லை, மக்கள் விரும்பிய தலைவராக அவர் திகழ்ந்தார். மக்களுக்கு எதிரான ஆளும் வர்க்கங்களின் ஒடுக்குமுறை மற்றும் அடக்குமுறையை எதிர்த்துப் போரிடுவதில் அவர் ஒரு முன்னோடி. அவர் உண்மையான கம்யூனிஸ்ட், ஆகச் சிறந்த மனித நேயர். துன்பப்படும் மக்கள் கூட்டத்தின்பால் ஆழமான பரிவுடையவர். அவர் சமரசமற்றக் கிளர்ச்சிப் பிரச்சாரகர், எனவே தனது வாழ்நாள் எல்லாம் போராளியாக வலம் வந்தார்.

தொழிற்சங்க அரங்கில்

 ‘அனைத்திந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸ்’ (ஏஐடியுசி) பேரியக்கத்தின்  ஹைத்தராபாத் மாநாட்டில் 2001 டிசம்பரில் அவர் ஏஐடியுசி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலிருந்து சுமார் 20 ஆண்டுகள் இந்தியத் தொழிற்சங்க அரங்கில் பிரம்மாண்டமான பேருரு சக்தியாக அவர் சுழன்று வீசினார். ஏஐடியுசி அமைப்பைப் பெரும் முன்னணியாக, சக்திமிக்க, தீரமிக்கத் தொழிற்சங்க அமைப்பாக மாற்றி மீண்டும் கட்டியெழுப்பினார். அவர் தலைமை வகித்த காலத்தில் அவருடைய கடுமையான உழைப்பின் காரணமாக ஏஐடியுசி-யின் உறுப்பினர் எண்ணிக்கை 34 லட்சத்திலிருந்து ஒரு கோடியே நாற்பது லட்சமாகத் தற்போது உயர்ந்துள்ளது. அவரது முன்னெடுப்பின் பயனாய் எழுந்து நிற்பதே தற்போதைய ஏஐடியுசி பவன் கட்டடம்.

அவர் அடுத்தடுத்து பல மாநாடுகளில் ஏஐடியுசி பொதுச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்: நவம்பர் 2005 டெல்லி மாநாடு, டிசம்பர் 2008 திருவனந்தபுரம், நவம்பர் 2012 மும்பை, பிப்ரவரி 2016 தமிழ்நாடு கோயம்புத்தூர் மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது உடல் நலம் தவறுகிறது மற்றும் புதிய தலைமையைக் கொண்டுவர வேண்டும் என்பதைக்  காரணம் காட்டி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகி நிற்க அவராக விருப்பம் தெரிவித்தார். 2017 டிசம்பர், ராஞ்சியில் நடைபெற்ற ஏஐடியுசி பொதுக் குழு கூட்டத்தில் முக்கிய பொறுப்பிலிருந்து அவர் விலகினார். 

பொருளாதாரமும் போராட்டங்களும்  

          தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மீது தாக்குதல் குவிக்கப்படுவதற்கு முதலாளிகளுக்கு ஆதரவாகப் பொருளாதாரத்தைத் தாராளமயப்படுத்தும் கொள்கைகளே அடிப்படை காரணம் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். எனவே புதிய தாராளமயம் மற்றும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட தனது சக்திகளை ஒன்று குவித்தார். நாடாளுமன்றத்தின் உள்ளே போரிடுவது போராட்டத்தின் ஒரு கட்டம் மட்டுமே என உணர்ந்த அவர், அழிவேற்படுத்தும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகப் போராட வீதிகளில் மக்களையும் தொழிலாளர்களையும் திரட்டுவதே அந்தக் கொள்கைகளை எதிர்த்து முறியடிப்பதற்கு சிறந்த வழி என்று கூறினார்.

            அத்தகைய கொடூரமான கொள்கைகளை எதிர்த்துப் போரிட சக்திமிக்க முழுமையான பலத்தைத் திரட்டுவது தேவை என உணர்ந்த அவர், அதற்காகத் தொழிற்சங்கங்களை ஒன்றிணைக்கும் முன்முயற்சிகளை மேற்கொண்டார். பொதுவான போராட்டங்களைத் தொடுக்க அனைத்து மத்திய தொழிற்சங்கங்களையும் சுயேச்சையான சம்மேளன அமைப்புகளையும் ஒரு பொது மேடையில் ஒன்றிணைக்கும் முயற்சியில் அவர் வெற்றி பெற்றார்.

            நாம் எதிர்கொள்ளும் சவால்களின் பிரம்மாண்ட அளவு, பரந்துபட்ட ஒற்றுமையையும் தீவிரமான போராட்டங்களையும் கோருகிறது என்பதை எப்போதும் உணர்ந்தவராக இருந்தார். எனவேதான் அவர் மத்திய தொழிற்சங்க அமைப்புகளில் இணையாத தொழிற்சங்கங்கள் – அல்லது அவைகளின் அரசியல் பார்வை வேறாக இருந்தாலும், அவர்களுக்கு அரசியல் நெருக்கடிகள் இருந்தாலும் – அவற்றையும் அணுகுவதற்கு அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. அவருடைய கூர்மையான அறிவு மற்றும் தீர்மானிக்கும் திறன் இவற்றைக் கொண்டு பல்வேறு மாநில அரசுகளை அவரால் வழக்கமாகத் தொடர்பு கொள்வது எளிதாக இருந்தது; அதனைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் போராட்டத்திற்கு --அப்போராட்டங்களின் சிறந்த தாக்கத்தை உறுதிப்படுத்த--  மாநில அரசுகளின் ஆதரவையும் அவரால் திரட்ட முடிந்தது.

            அவரது இவ்வணுகுமுறையால் இந்தியத் தொழிலாளி வர்க்கம் எல்லா அரசியல் தடுப்புகள் மற்றும் குறுகிய சங்க கட்டுப்பாடுகளையும் தாண்டி மாபெரும் பொது வேலைநிலைநிறுத்தங்களில் செலுத்த வழிகோலியது. அவரது நிலைத்த தொடர் முயற்சிகள் மற்றும் முன்னெடுப்புகள் காரணமாகத் தொழிற்சங்கங்களின் பல வேலைநிறுத்தப் போராட்டச் செயல்பாடுகளில் வரலாறு காணாத எண்ணிக்கையில், 20 கோடி முதல் 25 கோடி வரை, தொழிலாளர்கள் பங்குபெற்றனர்.

            ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யூபிஏ) மற்றும் தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஏ) இரு ஆட்சிகளின் கீழும் முன்னெடுக்கப்படும் புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் நெறியற்றவை; அக்கொடுமையான கொள்கைகளை எதிர்த்துத் தொழிலாளர்கள் நடத்தும் பெருந்திரள் கண்டன நடவடிக்கைகளின் பின்னே – அவற்றின் வித்தும் உயிரோட்ட நாளமுமாய்-- இருந்தது தோழர் குருதாஸ் எனக் கூறுவது மிகையல்ல, உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.

            தோழர் குருதாஸ் ஆலைத் தொழிலாளர்கள் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் போராட்டங்களில் மட்டும் ஈடுபட்டவரல்ல. அதே சமமான அளவு விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனைகளிலும் அழுந்தி பங்குபெற்றவர். நாடாளுமன்ற விவாதங்களின்போது பலமுறை வேளாண் துறையின் நெருக்கடி மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் பாடுகளை வலிமையாக எடுத்துக் கூறி முன்வைத்திருக்கிறார். இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் (BKMU) துணைத் தலைவராக இருந்து பல பிரச்சனைகளில் தீவிரமாக மேற்கொண்டார்.  

சர்வதேசத் தொழிலாளர்கள் இயக்கத்தில்

          தோழர் குருதாஸ் சர்வதேச தொழிலாளர் வர்க்க இயக்கத்திலும், போராட்டங்களிலும் ஆர்வம் உடையவராக உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தொழிலாளர் போராட்டங்களை நெருக்கமாக, நுட்பமாக அவதானிக்கும் வழக்கமுடையவராக இருந்தார்; அந்தப் போராட்டங்களிலும் சாதனைகளிலும் எப்போதும் அவர் ஊக்கமும் உற்சாகமும் பெற்றார். அதுபோலவே உலகின் எந்த நாட்டு தொழிலாளர் போராட்டங்களில் பின்னடைவு ஏற்பட்டாலும் அது அவரின் ஊக்கத்தைப் பாதித்து மனதைக் கசியச் செய்தது. அசையாத உறுதிப்பாட்டில் அவர் உண்மையான சர்வதேசவாதியாக விளங்கினார். 

            உலகத் தொழிலாளர் சம்மேளனம் (WFTU), ஏஐடியுசி பேரியக்கத்தின் தலைவர் என்ற வகையில் தோழர் குருதாஸ் தாஸ்குப்தாவை மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருந்தது. பல முறை WFTU அமைப்பின் முக்கிய தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டாலும், அவர் நம்நாட்டில் தொழிலாளர்களைத் திரட்டி அமைக்கும் பணியிலும், போராட்ட இயக்கங்களை முன்னெடுப்பதிலும் மிக ஆழமாக ஈடுபட்டிருந்ததால் அந்த (உயர் பொறுப்பு) வேண்டுகோள்களை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் எப்போதும் அவர் உலகத் தொழிலாளர் சம்மேளனத்தின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தார்.

மற்ற சங்கங்களில் பொறுப்பு

            ஏஐடியுசி பேரியக்கத்தைத் தலைமையேற்று வழிநடத்தியதுடன், பொதுத்துறை மற்றும் நிதிசார்ந்த பிரிவின் பல தொழிற்சங்கங்களுடன் தோழர் குருதாஸ் தொடர்பு கொண்டிருந்தார். அகில இந்திய எல்ஐசி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் பொது காப்பீட்டு ஊழியர்களின் அகில இந்திய கூட்டமைப்பு இவற்றின் துணைத் தலைவராக இருந்தார். மேலும் ஏர் இந்தியா, தேசிய மினரல் வளர்ச்சிக் கழகம் (NMDC), தேசியக் கட்டடக் கட்டுமான கார்ப்பரேஷன் (NBCC) லிமிட், போர்ட் அண்ட் டாக் (துறைமுகம் மற்றும் கப்பல் துறை), டீ தோட்டங்கள் முதலான பிற தொழிற்சங்க அமைப்புகளிலும்  அவர் தலைவராக இருந்தார்.

            சங்கங்களைத் தலைமையேற்று நடத்துவதில் முன்னணியில் இருந்து செயல்படுவதிலேயே அவர் எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தார். மாருதி கார் தொழிற்சாலை, ஹோண்டா ஆலை முதலியவற்றில் தொழிலாளர்களின் வீரம் செறித்த போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தினார். தடியடி என்ற பெயரில் கொடூரமாகத் தாக்கியதில் படுகாயமடைந்த ஹோண்டா தொழிலாளர்களின் இரத்தம் தோய்ந்த ஆடைகளைக் கையில் வீசியபடி அவர் நாடாளுமன்றத்தில் நுழைந்த காட்சியை யாரும் மறக்க முடியாது.

            அரசு இரத்தம் குடிக்கும் காட்டேறியாகிவிட்டது என வெளிப்படையாகக் குற்றம் சாட்டிய அவர் அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார்.

அமைப்புசாரா தொழிலாளர்களோடு

            புதிய தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா பிரிவு உழைக்கும் மக்களைத் திரட்டுவதிலும் அவர் ஆர்வமுடன் ஈடுபட்டார். சங்கம் அமைப்பதில் ஈடுபடும் ஊழியர்கள் அவர்களது முதலாளிகளால் தாக்குதலைச் சந்திக்கும்போது அவர்களோடு களத்தில் நின்று அவர் அவர்களைப் பாதுகாத்தார்.

            எப்போதெல்லாம் தங்களைப் பணியமர்த்திய முதலாளிகளின் மீது குறை மற்றும் குற்றச்சாட்டுகளுடன் தொழிலாளர்கள் அவரைச் சந்திக்கும்போது அவர் எப்போதும் அவர்களிடம் ஆதரவாகக் கூறுவார்: “நான் நிச்சயம் தங்களுக்கு உதவுவேன், ஆனால் நீங்கள் உங்கள் தொழிற் சங்கத்துடன் உறுதியாக நிற்க வேண்டும், போராடத் தயாராக இருக்க வேண்டும்” என்பார்.

ஏஐபிஇஏ அமைப்புடன் உறவு

            ஏஐபிஇஏ வங்கித் தோழர்களான நமக்கு அவர், பாதுகாவலராக, ‘நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்’, நல்வழிகாட்டியுமாய் பெற்றதற்கு யாம் என்ன தவம் செய்து விட்டோம்? வங்கி ஊழியர்களின் பல கூட்டங்கள், மாநாடுகளில் கலந்து கொண்டு அவர் நம்மைப் போராட உற்சாகப்படுத்தியுள்ளார். வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் மிக வலிமையாக அவர் எழுப்பியுள்ளார்; அரசு கொள்கைகள் காரணமாக எழுந்த பல பிரச்சனைகளில்  தீர்வு காண உதவியுள்ளார். வங்கி ஊழியர்களின் ஊதிய மாற்றப் பேச்சு வார்த்தைகளின்போது அரசுடன் உடன்பாடு காண அவர் உற்றுழி உதவும் கரத்தை நீட்டி இணக்கமான உடன்பாட்டிற்கு பேருதவி புரிந்துள்ளார்.

            அவர் வழக்கமாக நமது செயல்பாடுகளையும் போராட்ட இயக்கங்களையும் நெருக்கமாகக் கவனித்து ஏஐபிஇஏ அமைப்பின்பால் சிறந்த பரிவுணர்வு உறவைக் கொண்டிருந்தார். நமது போராட்டங்களுக்கு எப்போதும் உற்சாகமளிக்கும் ஆதர்ச சக்தி அவர். நம்முடன் அவர் கொண்ட தொடர்புகளை, வற்றாது வளம் சுரக்கும் நதியாய் பெருகும் வழிகாட்டல்களை நம் அமைப்பிற்கு அவர் வழங்கியதை எந்நாளும் ஏஐபிஇஏ நெஞ்சில் பொத்தி வைத்துப் போற்றும். 

மாபெரும் தலைவர்

            தோழர் குருதாஸ் தமது வாழ்நாளின்போது ஈடு இணையில்லா பெரும் பங்களிப்புகளைக் குறிப்பாகத் தொழிலாளர் வர்க்கத்திற்கும், பொதுவாக பொதுமக்கள் திரளுக்கும் அளித்ததன் மூலம் வரலாற்று நாயகத் தலைவராக உயர்ந்தார். தொழிலாளர்களுக்கு அநீதி மற்றும் சுரண்டலுக்கு எதிராக அவரது சீற்றம் தடுத்து நிறுத்தவொண்ணாதது; அவற்றை எதிர்த்துத் திருப்பித் தாக்க மக்களையும் தொழிலாளர்களையும் திரட்டும் மலைபோன்ற அவரது திறன்கள் மற்றும் அரசியல் எதார்த்தங்களைப் புரிந்து கொள்வதில் குற்றமற்ற தூய்மை பண்பு, எந்தச் சவாலையும் துணிவுடன் எதிர்த்து நிற்க அவருக்கு உதவியது; இப்படி அவர் ஓர் அபூர்வத் தலைவராக உருவானார்.

            அவரது அரசியல் தெளிவு, தத்துவார்த்த கொள்கை உறுதிப்பாடு, ஏற்ற பணிக்கு உண்மையாக இருத்தல், அரசியல் நேர்மை, நிதி வரவு செலவுகளில் ஒழுக்கம் , பொதுவாழ்வில் முன்னுதாரணமான தூய்மை, துணிச்சல் மற்றும் எதிரிகளோடு மோதுவதில் சாகச இயல்பு அவரை எப்போதும் தலை நிமிர்ந்து நிற்கும் மதிப்புடைய தலைவராக, மற்றவர்கள் பின்பற்றி ஒழுக வேண்டிய உதாரண புருஷனாக ஆக்கியது. தனி வாழ்க்கையில் அவர் எளிய வாழ்வையே மேற்கொண்டார்; ‘காட்சிக்கு எளியனாய் கடும் சொல் அல்லனாய்’ உதவி வேண்டுவோர் யாரும் சுலபமாக நெருங்கக்கூடியவராக அவர் விளங்கினார்.

            அவரது வலிமையான அறைகூவல் மற்றும் முழக்கம், “வாழ்வதற்குப் போராடு, போராடவே வாழ்” (ஜீனே கே லியே லடோ, லட்நே கே லியே ஜியோ), “போராடு, போராடு தொடர்ந்து போராடு” (லடோ, லடுத்தே ரஹோ, லட்த்தே லட்தே ஆஜே ஜோ), மற்றும் ‘தொழிலாளர்களை இடுப்புக்குக் கீழே தாக்கியவனைத் திரும்பத் தாக்கு’ (அடித்தால் திரும்ப அடி) போன்றவை நம் ஒவ்வொருவரையும் இனி வரும் எல்லா காலங்களிலும் வீறு கொண்டு போராட நம்மை உற்சாகப்படுத்தும்.

            நம் அன்பிற்குரிய தலைவர் தோழர் குருதாஸ் தாஸ்குப்தா அவர்களை அவரது 85வது பிறந்தநாளில் நினைவு கொள்வோம்!

            தோழர் குருதாஸ் தாஸ்குப்தா

            எந்தத் தொழிலாளிக்கு அநீதி என்றாலும் எதிர்த்துப் போரிடும் புனிதப் போராளி!

          தொழிலாளர்களைச் சுரண்டுவதைப் பொறுக்காது பொங்கி எழும் போராளி!

          அடக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையை முன்னறிவிக்கும் போராளி!

தோழர் குருதாஸ் தாஸ்குப்தா ஜிந்தாபாத்!

ஒர்க்கர்ஸ் யூனிட்டி ஜிந்தாபாத்!         இன்குலாப் ஜிந்தாபாத்!

--தமிழில் : நீலகண்டன்,

தொலைத் தொடர்பு ஊழியர் சங்கம் NFTE, கடலூர்

வெளியீடு:

அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், AIBEA

 

           

  

No comments:

Post a Comment