Friday 8 October 2021

மகாத்மாவை மறக்கலுமாமே!

 

நியூஏஜ் தலையங்கம் (அக்.10 – 16)


மகாத்மாவை மறக்கலுமாமே!

            சத்தியத்துடன் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தவர் மகாத்மா காந்தி; அவரைப் பொருத்தவரை பூரணத்துவம் அடைந்த முழு உண்மை என்ற ஒன்றில் நம்பிக்கை இல்லாதவர். அவருக்கு உண்மை என்பது தொடர் தேடல். வாழ்நாள் எல்லாம் எந்த உண்மையைத் தேடித் தன் உயிரையும் விட்டாரோ அந்த உண்மையும்கூட மாறிக் கொண்டே இருப்பதுதான். தோட்டாக்கள் மார்பைத் துளைத்தபோழ்து அவர் உதிர்த்த இறுதி வார்த்தை ‘ஹே ராம்’! அது அவலமான அழுகை அல்ல, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் ஆன்மசுத்தி வெளிப்பாட்டின் தன்னேற்புத் துன்பியல் நடவடிக்கை. தன் உயிர் நொறுங்கி மெல்ல வீழும்போது தனக்காக அல்ல; தான் நின்ற அனைத்துக் கொள்கைகளும் முழுமையான மக்கள் கூட்டத்தை இறுதியாகச் சென்று சேரவில்லையே என்ற தவிப்பின் வெளிப்பாடு. அவரது அன்றாட வெள்ளை மேலாடையில் துளிர்த்த இரத்தத் துளிகள் விடுபட்ட பகுதிகள் இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றன என்ற அடையாளத்தின் வெளிப்பாடு. அவரது தொடர்ச்சியான முயற்சிகளையும் மீறி அது, சிறியதோர் கும்பல் எனினும், வலதுசாரியினர் நாட்டில் மெல்ல தலையெடுத்து வந்தனர். தேசத் தந்தை மறைவுடன், எங்கெங்கும் இருள் சூழ்ந்து பரவியது – அவர் மீது கொலைபாதகத்தை நடத்தத் துணிந்தவர்களிடத்தும் இருள் மண்டியது. அவர்கள் எல்லா இடத்தும் கோபமுற்ற மக்கள் கூட்டத்தின் தாக்குதலைச் சந்திக்க நேர்ந்தது.

            இருப்பினும் பாபுஜி மாண்டு போகவில்லை. அவர் நம்முடன் உயிரோடு இருக்கிறார். அக்டோபர் 2ம் நாள் நாடெங்கும் அவரது பிறந்த நாள் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

            ரஷ்யப் பேராசிரியரான உலியநோஸ்கி கூறியதைப் போல வயலில் உழைக்கும் விவசாயிகள் முதல் மக்கள் கூட்டம் ஈறாக முழுமையும் தெளிவாக உணரும் வகையில் அவருடைய கடையனுக்கும் கடைத்தேற்றம் எனும் சமூகச் சமத்துவக் கொள்கைக்கு அவர் உண்மையாக இருந்தார்; தேசிய இயக்கம் முழுமைக்கும் வலிமையான ‘மக்களுக்குச் சார்பான ஆதரவு’ என்ற உள்ளடக்கத்தை வழங்கினார்.

மிகச் சிறந்த உதாரணம் 1921 மலபாரில் நிகழ்ந்த மாப்ளா கிளர்ச்சியில் அங்கே ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியது; அவ்வியக்கம் உச்சத்தில் இருக்கும்போது துன்பத்தில் உழன்ற மாப்ளா (முஸ்லீம்)களுக்குப் பாதுகாப்பு அளித்தார். காந்திஜி கூறினார், “அவர்கள் ‘வீரம் செறிந்த மக்கள்’, மிக மோசமான வன்முறை ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளால் தூண்டப்பட்டு தாக்குதலில் ஈடுபட்டனர்; எனவே ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் தாங்கள் எடுத்துக் கொண்ட அகிம்சை உறுதிமொழியை மீறியதற்கு நான் அவர்களைப் பொறுப்பாக்க மாட்டேன்.” இப்படி உரைத்தவர் சாந்தமான, எதிர்வினை ஆற்றாத எதிர்ப்பைப் போதித்துவந்த காந்தியேதான்.

 அவரைப் பொருத்தவரை ஒரே நிலைபாட்டினைப் பற்றி நிற்றல் என்பது ஒருபோதும் இறுதியானதல்ல, மாற்றம் இயல்பானதே. அகிம்ஸாமூர்த்தி காந்திதான் 1942 இயக்கத்தில் அறைகூவல் விடுத்தார், “செய் அல்லது செத்து மடி!” : ஒன்று, உன் தாய் நாட்டை விடுதலை செய் அல்லது உன் உயிரை விடு!’ அந்த அறைகூவலில் பிரிட்டீஷாருக்கும் ஒரு செய்தி இருந்தது, “இந்தியாவைவிட்டு (வெள்ளையனே) வெளியேறு!” இதில் எங்கேயும் செயலற்று மந்தமாக இருக்கும் தன்மையைக் காண முடியவில்லை. காந்தியின் பெருமையெல்லாம் தொடர்ந்து அவர் பரிணமித்து வந்ததில் இருக்கிறது – அதுதான் தொடர்ச்சியான உண்மையின் தேடல், ‘சத்திய பரிசோதனை.’

இதனைத் தேசிய இயக்கத்திலும் எதிரொலிக்கக் காணலாம். 1930லிருந்து 1936வரையான எல்லா ஆண்டுகளிலும், ஃபைஸ்பூரிலும், 1945 – 46 காலகட்டத்திலும்கூட உண்மை என்பது அவரிடம் தொடர்ந்து பரிணாம மாற்றமடைந்து வந்தது. பூரண ஸ்வராஜ்யம் என்ன என்பதை 1936 டிசம்பர் 27ல் ஃபைஸ்பூரில் விரித்துரைக்கும்போது கூறினார்: ‘வெளிநாட்டுச் சக்திகளின் அன்னிய ஆட்சியிலிருந்து முழுமையாகச் சுதந்திரம் அடைவதுடன், அதன் பொருள் முழுமையான பொருளாதாரச் சுதந்திரம் பெறுவது என்பதும்தான்’, அது இடதுசாரிகளின் கோரிக்கையும் ஆகும். அவருக்கு அதில் அறநெறியும்கூட இணைந்தே இருந்தது – அந்த அறநெறியின் சிறகுகளில் இஸ்லாம், இந்துயிசம் மற்றும் கிருஸ்துவம் என எல்லா மதங்களின் நெறிகளும் இருந்தன; நெறிகளைத் தாண்டிய உண்மையது, அனைத்துள்ளும் நீக்கமற வாழும் உண்மை, இருப்பினும் அது என்றும் மாறிவரும் உண்மையும் கூட என மகாத்மா கூறினார்.

பம்பாய், நாக்பூரில் அளிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டமே அரசியல் விடுதலைக்கான வழிகாட்டு வரைபடம் (ப்ளு பிரிண்ட்) என்றார் அவர். பொருளாதாரச் சுதந்திரத்தை அடிப்படையான பொருளாதார மேம்பாடு என விளக்கினார் காந்திஜி. ஆண்கள் பெண்களுக்கு உடுத்தப் போதுமான ஆடை; பல இலட்சக் கணக்கான மக்களுக்கு மறுக்கப்பட்ட பாலும் வெண்ணையும் உட்பட உண்பதற்குப் போதுமான உணவு (கிடைப்பது) என்பதே அதன் பொருளாகும். “இது நம்மிடம் சோஷலிசத்தைக் கொண்டு வரும். நிலமும் அனைத்து வளங்களும் அதற்காகப் பாடுபட்டு உழைத்தவர்க்கே உரிமையாகும்” என்று கூறினார் அவர்.

கற்பனையில் அந்தப் பொருளாதாரம் எப்படிக் காட்சியாக விரிகிறது என்று பாருங்கள்: அது தற்சார்பு உடையதாய் சுதந்திரமானதாக இருக்கும். தேசிய இயக்கம், காலனியத்திற்கு எதிரான அடிப்படையில் கட்டப்பட்டது; சமூகப் பொருளாதார முறைமைக்கான திட்டத்தின் அடிப்படையிலும் குடிமக்களின் சிவில் உரிமைக்காவும், மதச் சார்பற்ற புரட்சிகரமான கண்ணோட்டத்துடன் நமது விடுதலை இயக்கம் கட்டப்பட்டது. எனவே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் ஏற்பட்ட பொதுவான விழிப்புணர்வு அதனை மக்கள் இயக்கமாக மாற்றியது.

அரசியல் (சிஸ்டம்) முறைமை பற்றிப் பேசும்போது, தனக்கு மேற்கத்திய முறையில் நம்பிக்கை இல்லை என்று மகாத்மா கூறினார் – ஆனால் இறுதியில் அதுதான் வந்து சேர்ந்தது. மேற்கத்திய ஜனநாயகம் அனைவருக்கும் வாக்கு என்ற அடிப்படையில் அமைந்ததாகும்.

புகழ்பெற்ற பிரிட்டீஷ் பத்திரிக்கையாளரான லூயி பிஷருக்கு அளித்த பேட்டியில் காந்திஜி பின்வருமாறு கூறினார்: “இந்தியாவில் எழுநூறு ஆயிரம் (7,00,000) கிராமங்கள் உள்ளன. அந்த ஒவ்வொரு கிராமமும் அதில் வாழும் குடிகளின் விருப்பத்திற்கு ஏற்ப அமைக்கப்படும், அனைவரும் (அதனை) வாக்களித்து முடிவு செய்வார்கள்… (பின்) ஒவ்வொரு கிராமத்திற்கு ஒரு வாக்கு, இதன்படி 7லட்சம் வாக்குகள் இருக்கும் – அது (வாக்களிக்கும் மக்கள் தொகையான) நான்கு கோடி அல்ல” என்று விளக்கத் தொடங்கிய காந்திஜி மேலும் கூறினார்: “ஒவ்வொரு கிராமமும் தனது பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும். அவர்கள் தொடர்ந்து பதிலுக்கு மாகாண அமைப்புப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பர்; அவர்கள் மீண்டும் தங்களுக்கான (குடியரசுத்) தலைவர் அல்லது (பிரதமர் அல்லது முதலமைச்சர் போல) முக்கிய செயலாளரைத் தேர்ந்தெடுப்பர்.” இதைக் கேட்ட லூயி பிஷர் அவரிடம், ‘இது சோவியத் முறைமை போல இருக்கிறது’ எனச் சுட்டிக் காட்டியபோது, காந்திஜி அதுபற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றுரைத்தார்.

காந்திஜி நடத்திய சத்திய சோதனை பயணத்தில் தொடர்ந்து அந்தப் பாதையில் அவருடன் பயணம் செய்தவர்களில் லூயி பிஷர் ஒருவர். 1942 ஜூன் 8ம் நாள் அந்தப் பத்திரிக்கையாளர், ‘எதிர்வரும் ஒத்துழையாமை இயக்கத்தை அவர் எப்படிப் பார்க்கிறார், அது எத்தகைய வடிவத்தை எடுக்குமென’ நினைக்கிறார் என்ற கேள்வியைக் கேட்டார். அதற்குக் காந்திஜி அளித்த மறுமொழி நம்ப முடியாத அளவிற்கு அதிர்ச்சியூட்டும் வியப்பிற்கு உரியது. அவர் கூறினார்: “விவசாயிகள் வரி கட்டுவதை நிறுத்தி விடுவார்கள்; தடையை மீறி உப்பு காய்ச்சுவார்கள். அது சிறிய நடவடிக்கைதான், ஏனெனில் பிரிட்டீஷாருக்கு உப்பு வரி பொருட்படுத்தத் தேவையில்லாத சிறிய  தொகை – ஆனால் விவசாயிகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பது. அதன் பிறகு அவர்கள் பெரிய போராட்டங்களுக்கு, தன்னிச்சையாக சுதந்திரமாகப் போராடவும், தயாராவார்கள்.”

காந்திஜி தொடர்ந்தார், “அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை நிலத்தைக் கைப்பற்றுவது. அப்போது அங்கே வன்முறை நிகழலாம், அல்லது நிலவுடைமையாளர்கள் ஒத்துழைக்கவும் கூடும். அவர்களின் ஒத்துழைப்பு என்பது நிலத்தைவிட்டு நீங்கி ஓடுவதாக இருக்கும்.” அப்போது அங்கே இருந்த ஜவகர்லால் நேரு, ‘நிலத்தைவிட்டு ஓடிய நிலவுடைமையாளர்கள் தங்கள் உடைமைகளைக் கைப்பற்றிய (மாற்றத்திற்கு) ஆதரவளித்தனர் என அதனைக் கொள்ளலாம். இதேபோல 1917ல் சோவியத் யூனியனில் அன்றைய ஆட்சியாளர்களின் ராணுவத்தினர் பதுங்கு குழிகளைவிட்டு வந்தபோது லெனின் கூறியதாக” எடுத்துக் காட்டினார். (அப்படி அவர்கள் வந்தபோது நிலங்கள் விவசாயிகளுக்குச் சொந்தமாக்கப்பட்டிருந்தன. காரணம், புரட்சியை அடுத்து உடனடியாக லெனின் வெளியிட்ட இரண்டு புகழ்பெற்ற உத்தரவு பிரகடனங்களாகும். நிலங்களை விவசாயிகளுக்குச் சொந்தமாக்கியது ஒன்று, மற்றொன்று அமைதிக்கான அறைகூவல்.)

அப்போது வன்முறை ஏற்படுமா என்று காந்தியிடம் கேட்கப்பட்டதற்கு அவர் பதினைந்து நாட்கள் குழப்பம் இருக்கலாமென சொன்னது மட்டுமல்ல, விவசாயிகள் விரைவில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவர் என்றும் பதிலளித்தார். இந்த நிகழ்முறையில் காந்திஜி மிகக் குறிப்பாக, ‘தொழிலாளர்களும் ஆலைகளைவிட்டு வீதிக்கு வருவார்கள்; ரயில் வண்டிகள் ஓடுவது நிற்கும். அது மிகப் பெரிய பொது வேலைநிறுத்தமாக இருக்கும்’ என்று குறிப்பிட்டார். காந்திஜி கூறினார்: “நான் சுதந்திரத்தை விரும்புகிறேன், அவ்வாறுதான் நாடு முழுவதும் விரும்புகிறது. அடிமைகளால் தங்கள் விடுதலைக்காகப் போராட முடியாது

ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு விலகுவதைப் பற்றிய கேள்விக்கு மகாத்மா காந்திஜி இவ்வாறு கூறினார்: “இப்போது அவர்கள் வெளியேற வேண்டும் என நான் விரும்புகிறேன், அப்போதுதான் எங்களால் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் உதவ முடியும். இன்று என் வலிமையைத் திரட்டி அவர்களுக்கு உதவ இயலாமல் இருக்கலாம். இப்போதைக்கு மற்றவர்கள் பார்வையிலிருந்த இந்தியா மறைந்திருக்கலாம். இந்தியாவுக்காக மட்டும் விடுதலை பெறுவதை நான் விரும்பவில்லை.” இதற்கு முன்பு அவர் ஏன் அந்த வகையில் உணரவில்லை என்று தொடர்ந்து வினவியதற்குக் காந்திஜி, “முழுமையான கருத்தாக்கம் தொடர்ந்து என்னுள் மலர்ந்து வந்தது…” என்று பதில் அளித்தார். மீண்டும் மகாத்மாவினுடையது எப்போதும் ஏற்பட்டுவரும் மாற்றமே.

மாற்றமே மாறாதது என்பது சமூக விஞ்ஞானமல்லவா!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

 

                                                                                                       

No comments:

Post a Comment