Friday 22 October 2021

தோழர் ரஞ்சூர், அனைவருக்குமான விடுதலையை வேண்டிய ஒரு கிளர்சிக்காரக் கவிஞர்

 


தோழர் ரஞ்சூர்,

அனைவருக்குமான விடுதலையை வேண்டிய 

ஒரு கிளர்சிக்காரக் கவிஞர்

--குல்ஸார் பட்

ஸ்ரீநகர்: 1917ல் ரஷ்யாவில் போல்ஷ்விக் புரட்சி அலை புரண்டோடி நூற்றுக் கணக்கான ஆண்டுகள் பழைமையான ஏகாதிபத்திய ரொமனோவ் வம்ச ஆட்சியை (1613 --1917)  முடிவுக்குக் கொண்டு வந்தபோது தன் உடம்பில் மார்க்ஸிய இரத்தம் பாய்ந்தோடிய ஒரு குழந்தை பள்ளத்தாக்கின் விவரிக்க இயலாத ஒரு குக்கிராமத்தில் உதித்தது.  

            ஸ்ரீநகருக்கு 44 கிமீ தெற்கே நெருக்கமான ஆப்பிள் தோட்டத்தில் மறைந்ததுபோல உள்ளே அமைந்திருந்த அமைதியான கீகம் கிராமத்தில் அப்துல் சத்தார் ரஞ்சூர் பிறந்தார். இளம் பருவத்திலிருந்தே கவிதைகள் மீது ஆழமான காதலை வளர்த்துக் கொண்டு 17வது வயதிலேயே புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

            காஷ்மீரி மற்றும் உருது கவிதையில் சிறந்து விளங்கிய அவர் எதேச்சிகார டோக்ரா ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சிப் பதாகையை உயர்த்தியவர்களில் ஒருவராவார். இப்படித் தன் தந்தையை நினைவூட்டும் அவரது மகன் மன்சூர் அன்வர் தன் தந்தை எப்போதும் நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு முடிவு கட்டுவதில் குறியாக இருந்தார் என்கிறார்.

            முப்பதுகளின் பாதியில் லாகூர் சென்ற ரஞ்சூர் சில ஆண்டுகள் அங்கே வசித்தார். அங்கு வசித்தபோது புகழ்பெற்ற மரியாதைக்குரிய உருதுக் கவிஞர் சர் முகமது இக்பால் அவர்களை எப்போதும் வழக்கமாகச் சந்தித்து வந்தார். இளம் ரஞ்சூரிடம் புரட்சிகரப் பொறி சுடர்விடுவதைக் கண்ட இக்பால் அவரிடம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும்படி யோசனை கூறினார். ஏற்கனவே போல்ஷ்விக் புரட்சியால் கவரப்பட்டு சோஷலிச இலக்கியங்களை ஏராளம் தீவிரமாகப் படித்திருந்த ரஞ்சூர் பள்ளத்தாக்கிற்குத் திரும்பினார்; ஷேக் முகமது அப்துல்லாவுடன் இணைந்து ஜம்மு காஷ்மீரின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார்.

            1940களின் தொடக்க காலத்தில் காஷ்மீர் விவசாயிகள் இயக்கத்தைத் தலைமை தாங்கியதில் ரஞ்சூர் காரணகர்த்தாவாக இருந்தார். அக்காலத்தில் அன்றைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் விவசாயிகள் ஏதேச்சிகார டோக்ரா ஆட்சியாளர்கள் விதித்த கடும் வரிச்சுமையால் அல்லல்பட்டுக் கொண்டிருந்தனர். “காஷ்மீரில் ஆபத்து” என்ற தமது நூலில் ஜோசப் கோர்பெல்ஸ் டோக்ரா ஆட்சியாளர்களின் சர்வாதிகாரத்தன்மை குறித்துப் பின்வருவாறு எழுதினார்:

            “நிலம் பெரும்பாலும் மகாராஜாவுக்கு அல்லது ஹிந்து நிலஉடைமையாளர்களுக்குச் சொந்தமாக இருந்தது. அந்த நிலத்தில் பாடுபட்ட முஸ்லீம்கள் கட்ட வேண்டிய அதிகமான வரி அவர்களைப் பொருளாதார நெருக்கடி மற்றும் பசி பட்டியினில் தள்ளிவிடுவது வழக்கமான நடைமுறையாயிற்று…அவர்களின் குறைந்தபட்சக் களியாட்டமே அந்தத் திக்கற்றவர்களைத் தொல்லைப்படுத்துவதுதான்…அவர்களை வேட்டையாடத் தங்கள் வேலையாட்களுக்குத் தாராளமாக ஆசி வழங்கி மகிழ்ந்தனர்…” (ஏ ஜி நுரானி, ஃப்ரண்ட் லைன், 2016)

            1946 –47ம் ஆண்டுகளில் போலீஸ் அட்டூழியங்களையும் அவர் எதிர்கொண்டார். “எங்கள் வீட்டைப் போலீஸ்காரர்கள் பலமுறை சோதனையிட்டபோது, ஒரு தடவை அவரைப் பிடித்து விட்டனர்” என நினைவு கூர்கிறார், அன்வர். 

            “புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆஸஃப் அலி டெல்லியிருந்து ரஞ்சூர் சார்பாக நீதிமன்றத்தில் வழக்காட வந்தார்.”

            1949ல் விடுதலையானதும் அவர் தலைமறைவு வாழ்வில் சென்று கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார். மீண்டும் 1951ல் கைதானார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் கொந்தளிப்பான கட்டத்தைக் கடந்து சென்றது. ஜம்மு காஷ்மீரின் பிரதமராகப் பொறுப்பேற்ற 

ஷேக் முகமது அப்துல்லா 1953ல் பதவியிலிருந்து அகற்றப்பட்டு கைது செய்யப்பட்டார். ஜம்மு மற்றும் காஷ்மீர் இரண்டு பிராந்தியங்களிலும் ஷேக் புகழ்பெற்ற தலைவராகவும் உச்சத்தில் வைத்து மதிக்கப்படுபவராகவும் விளங்கினார். எதிர்பாராத நிகழ்வுகள் அப்பகுதிகளில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதுடன் பல லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் காயப்படுத்தியது. ஷேக்கின் அரசியல் துணையாக விளங்கிய பக்க்ஷி     குலாம் முகமதுவும் கைது செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரின் சுயேச்சையான அந்தஸ்து மெல்ல அரிக்கப்படலாயிற்று. ஷேக்கின் நெருங்கிய சகா மிர்ஸா முகமது அஃப்ஸல் பெய்க், ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனைத்து மக்களும் பங்கேற்கும் பொது வாக்கெடுப்பு முன்னணியை (Plebiscite Front) அமைத்து, ஜம்மு காஷ்மீர் அந்தஸ்து குறித்து முடிவுசெய்ய பொது வாக்கெடுப்பு (கருத்துக் கணிப்பு) நடத்தப்பட வேண்டும் என வற்புறுத்தினார். அந்த முயற்சிக்குச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷேக் அப்துல்லாவின் ஆதரவும் இருந்தது.

            ஷேக் – இந்திரா காந்தி இடையே உடன்பாடு ஏற்பட்டு, அம்மாநிலத்தின் முதலமைச்சராக ஷேக் பொறுப்பேற்ற பின் அந்த முன்னணி, 1975ல் கலைக்கப்பட்டது.

            பல பத்தாண்டுகள் நீடித்த ரஞ்சூரின் நீண்ட அரசியல் வாழ்வில் தேர்தல் அரசியலிலும் ஈடுபட்டு பல தேர்தல்களில் ராஜ்பொரா மற்றும் ஷோபியன் சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து போட்டியிட்டார், ஆனால் வெற்றிபெறவில்லை.

கவிஞர் மற்றும் எழுத்தாளராக ரஞ்சூர்

            காஷ்மீரி மற்றும் உருது மொழிகளில் எழுதிக் குவித்த ரஞ்சூர் ஒரு புரட்சிகர இலக்கியகர்த்தா, கவிஞர் மற்றும் எழுத்தாளராவார். “தொடக்கத்தில், மதத்தின் மீது நேசத்தோடு கவிதை புனைவதில் ஈடுபட்டவரின் கவிதை, சோஷலிசக் கவிஞர் சிராக் ஹாசன் ஹஸ்ரத் மற்றும் இக்பாலைச் சந்தித்தப் பிறகு முற்றிலுமாகப் பாதை மாறியது” என்கிறார் அன்வர்.

            அதன் பின் அவர் கவிதை கீழ்ப்படிய மறுப்பது, எதிர்ப்பை வெளிப்படுத்துவது என்றானது. ‘எளிய பதங்கள், எளிய நடை மற்றும் எளிய சந்தம்’ எனப் பாஞ்சாலி சபத முன்னுரையில் பாரதி எழுதியது போல, ரஞ்சூரின் கவிதை மொழி எளிய குழப்பமற்ற தீர்மானகரமான வார்த்தைகள், பிழையற்ற பாட்டு மற்றும் உரைநடை பாணியைப் பின்பற்றியதுடன் ஜம்மு காஷ்மீர் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை உணர்வுகளை இயைந்து வெளிப்படுத்தியது. பெரும்பாலும் அவருடைய கவிதைகள் முழுமையான காஷ்மீரின் வலியையும் உதவியற்ற கையறுநிலையையும் பிரதிபலித்தது. காஷ்மீர் கடந்து வந்த வரலாற்று மற்றும் அரசியல் நிகழ்வுகளின் எதிரொலி எப்போதும் அவரது கவிதைகளில் நிறைந்திருந்தது.

            அடிமைப்பட்ட தேசத்தின் துயரங்கள் பின்வரும் கவிதையில் வெளிப்படுகிறது

“ஆங் குலாம் க்வாம்” (அடிமைப்பட்டதொரு தேசம்)

                “எங்கள் (காஷ்மீர்) நிலத்தை விற்றவர்களும் வாங்கியவர்களும்

               அதை வைத்துச் செய்யப் போவது ஒன்றும் இல்லை,

               அவர்கள் வியாபாரிகள், அன்னியர்கள்

               நான் கடவுளிடம் முறையிட்டுப் பிராத்திப்பேன்,

               இத் தேசத்திற்குச் சுதந்திர உணர்வைத் திரும்ப அளி

               சுதந்திரத்திற்கான ஏக்கப் பரிதவிப்பையும் உணர்வையும்

               எம் மக்களிடம் ஊட்டி நிறைப்பாய்

                இறைவனிடம் வேண்டுவேன்!”

            காஷ்மீரின் உயர் அரசியல் தலைவர்களுக்கான செய்திகளைச் சுருக்கமான நறுக்குத் தெறித்தாற் போன்று அவருடைய பல கவிதைகள் தெரிவித்தது மட்டுமல்ல, ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பதற்கும் விழைவிற்கும் மாறாக அவர்களது முடிவுகள் இருக்குமானால் அதன் கடுமையான பின்விளைவுகளையும் கூறி அக்கவிதைகள் எச்சரித்தன.

            ரஞ்சூரின் நாடி நரம்புகளில் மதவாத, வகுப்புவாதத்திற்கு இடமில்லை. அவற்றின் ஒவ்வொரு அங்குலத் துடிப்பிலும் மதசார்பற்ற ஆன்மா, பெரும் அமைதியைக் காதலித்த நேயம் நிறைந்திருந்தது. 

            தேசப் பிரிவினையின்போது கொழுந்துவிட்டு எரிந்த மதவாத தீ நாக்குகள் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இரண்டு நாடுகளின் ஆயிரக்கணக்கான மக்களைத் தின்று தீர்த்தபோது ரஞ்சூரின் எழுதுகோல் பின்வரும் கவிதையை அரற்றியது:

அம்னுக் பாய்காம் (சமாதானத்தின் செய்தி)

           “விழித்திடுங்கள், தயாராவீர், தேசத்தைக் காத்தல் செய்ய

          உங்கள் பாரம்பரியத்திற்கு இழுக்குத் தேடாதீர்

          இரத்தம் சிந்துவதை ஒருபோதும் உங்களால் நியாயப்படுத்த முடியாது

          கொப்பளிக்கும் அந்தக் குருதி ஒரு இந்துவைச் சேர்ந்ததாக

          அன்றி ஓர் இஸ்லாமியன் அல்லது

          சீக்கியரைச் சேர்ந்ததாயினும் கவலையில்லை,

          அனைவரையும் நீங்கள் அவசியம் பாதுகாக்க வேண்டும்!”

(மூலக் கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தது சன்யா மன்சூர், தமிழில் நீலகண்டன்)

            ரஞ்சூர் தனது வாழ்நாளில் கவிதைகள் உரைநடைகள் என 12க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தார். பல ஆண்டுகளுக்கு ‘ஹமாரா காஷ்மீர்’ என்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்து வெளியிட்டார்.

படுகொலை

90களின் தொடக்கத்தில் பள்ளத்தாக்குகில் தீவிரவாதம் வெடித்தது. ஆயிரக் கணக்கான இளைஞர்கள் பல்வேறு தீவிரவாதக் குழுக்களில் இணைந்தனர். தீவிரவாதிகளால் பல அரசியல் தலைவர்கள் சுடப்பட்டு இறந்தபோது நூற்றுக் கணக்கானவர்கள் உயிர் பிழைக்கப் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறினர்.

பகைமை சூழ்ந்த நிலையிலும் அப்படித் தங்கள் தாய் மண்ணிலிருந்து வெளியேற முடியாது எனக் காஷ்மீர் மண்ணிலேயே தங்கி வாழ்ந்த பல தலைவர்களில் ரஞ்சூரும் ஒருவர்.

1990, மார்ச் 23 அன்று அழுத்தமான பனிப் போர்வை பள்ளத்தாக்கை மூடியிருந்த தருணத்தில், தமது நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட சிறிய அறையில் தோழர் ரஞ்சூர் கம்பளிப் போர்வையில் தன்னைச் சுருட்டிச் சுருண்டு படுத்திருந்தார். அந்த அறைக்குள் ஓர் இளைஞன் நுழைந்தான்; தனது துப்பாக்கியை வெளியே எடுத்து அதனுள் நிறைத்திருந்த தோட்டாக்கள் அத்தனையும் அவருள் அனுப்பிட, கவிஞர் ரஞ்சூரின் உடனடி மரணம் சம்பவித்தது.

“தீவிரவாதிகளிடமிருந்து அவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்தன, என்றாலும் அழகிய காஷ்மீர் மண்ணைவிட்டு செல்ல அவர் சம்மதிக்கவில்லை; தம் உயிரினும் மேலாய் தாய் மண்ணை நேசித்தார்” என அன்வர் பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தார்.

ரஞ்சூரின் புகழ் உடல் அவரது இறுதி விருப்பத்திற்கேற்ப உயர்ந்தோங்கிய பைன் மரங்களின் நிழலுக்குக் கீழே அவரது தோட்டத்தில் புதைக்கப்பட்டது.

--நன்றி : நியூஏஜ் (அக்.3 –9)

--தமிழில் : வெ நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

No comments:

Post a Comment