Thursday 7 October 2021

வரலாற்றுத் தலைவர்கள் 51 --மணிகுந்தளா சென் – தொடக்க காலப் பெண் கம்யூனிஸ்ட்களில் ஒருவர்

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு –51


மணிகுந்தளா சென்

தொடக்க காலப் பெண் கம்யூனிஸ்ட்களில் ஒருவர்

--அனில் ரஜீம்வாலே

-- நியூஏஜ் (அக்.3 – 9)

            1943 பம்பாயில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முதலாவது கட்சிக் காங்கிரஸ் மாநாட்டின் தலைமைக் குழு தோழர்களில் –எஸ் ஏ டாங்கே, முஸாஃபர் அகமது, நர்கீஸ் பாட்லிவாலா முதலான தலைவர்களோடு – ஒருவராக இடம் பெற்றவர் மணிகுந்தளா சென். அவர் இந்தியாவில் தொடக்க காலப் பெண் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராவார்.

            தற்போது பங்களா தேசத்தின் பகுதியாக உள்ள பாரிசால் என்னுமிடத்தில் 1910 டிசம்பர் 11ம் நாள் மணிகுந்தளா பிறந்தார். அந்நாட்களில் (நாகரீகம் மேம்பட்டச் சமூகத்தினரான) பந்த்ரலோக் குடும்பங்கள் மற்றவர்களைவிட கல்வி விழிப்புணர்வு பெற்றவர்களாக இருந்ததால் தங்கள் மகன்கள் மற்றும் மகள்களுக்கு  நல்ல கல்வியை வழங்கிட அவர்களை நகரங்களில் இருக்கும் கல்விச் சாலைகளுக்கு அனுப்பினர். படிப்பதற்காகக் கல்கத்தாவிற்கு அனுப்பட்ட மணிகுந்தளாவும் நகரத்தில் இருக்கும் பெண்களோடு முதன்முறையாக வாழத் தொடங்கினார். பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டம் பெற்றவர் 1938ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்ஏ தத்துவ இயல் முதுகலைத் தேர்வில் தேர்வானார்.

தேசிய இயக்கத்தின் செல்வாக்கு

            பாரிசால் பகுதி நாடக ஆசிரியரான முகுந்த தாஸ் மற்றும் அவருடைய தேசிய ‘ஜத்ரா’ இயக்கத்திற்கு (மதக் கண்காட்சி போன்ற தேசிய விழா) பெயர் போனது.  மணிகுந்தளா குடும்பத்தினரின் நண்பரான அஸ்வினி குமார் தத்தா ஒரு கல்வியாளரும் தேசியவாதியுமாவார். ஜகதீஷ் சந்திர முகோபாத்யாயா கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரஜ்மோகன் கல்லூரி முதல்வராக இருந்தார். அவரின் ஆழமான செல்வாக்குக்கு ஆட்பட்டார் மணிகுந்தளா.  மேலும் கைலாஷ் சந்திரா சென், அமியா தாஸ்குப்தா, அம்ரித் நாக் மற்றும் ஜகதீஷ் ஆச்சார்யா போன்றோரின் ஆளுமையின் செல்வாக்கும் அவர் மீது பதித்தது. 

            1933ல் காந்திஜி பாரிசால் வந்தபோது மணிகுந்தளாவுக்கு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. காந்திஜி அப்போது பாலினத் தொழிலில் ஈடுபட்ட அபலைப் பெண்கள் குழுவினரைத் தேசிய இயக்கத்தில் சேரும்படி வலியுறுத்தி உற்சாகப்படுத்திய முறையைக் காண மணிகுந்தளா ஆழமாக ஈர்க்கப்பட்டார். (மகாத்மாவின் தேசிய இயக்கம் மட்டுமின்றி) பாரிசால் ஆயுதம் தாங்கிய புரட்சிகர அமைப்பான அனுசீலன் சமிதி அதிலிருந்து பிரிந்த புரட்சிகர யுகாந்தர் குழு போன்ற புரட்சிகர குழுவினரின் தீவிர செயற்பாட்டுக் களமாகவும் விளங்கியது.

            தேசிய இயக்கப் பாதிப்பால் மணிகுந்தளா குடும்பம் வெளிநாட்டு இறக்குமதி ஆடைகள் அணிவதை நிறுத்திவிட்டது. பொருளாதாரத் தேசியத்தின் அடையாளமான, இந்தியர்களுக்குச் சொந்தமான பங்கலெட்சுமி ஆலை தயாரித்த துணிகளை ஆதரித்தனர்.

மார்க்ஸியம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி

            பின் மணிகுந்தளாவுக்கு, அப்போது பெண்கள் பள்ளியில் பயிற்றுவித்துக் கொண்டிருந்த, யுகாந்தர் கட்சித் தலைவர் சாந்திசுதா கோஷ் செல்வாக்கின் பாதிப்பு ஏற்பட்டது. அது நடத்திய படிப்பு வட்டங்களில் மார்க்ஸ் மற்றும் லெனின் நூல்கள் படிக்கப்பட்டன. இப்படித்தான் விஞ்ஞான சோஷலிசம் அவருக்கு அறிமுகமானது. போலீஸ்காரர்களால் சாந்திசுதா கோஷ் விசாரிக்கப்பட்டு தொல்லைப்படுத்தப்பட்டதைப் பார்த்ததும் மார்க்ஸ் லெனின் கொள்கைகள் மீதான மணிகுந்தளாவின் நம்பிக்கை மேலும் ஆழமானது. கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. தொடர்ந்து படிக்கக் கல்கத்தா செல்ல குடும்பத்தை வற்புறுத்தினார், அங்கே கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பு கொள்ளலாம் என்ற நம்பிக்கை.

            பிமல்பிரதிபா தேவி அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரானார். அவர் மூலமாக மகிளா சக்தி சங்கம் மற்றும் காங்கிரஸ் பெண் தலைவர்களை அவர் தொடர்பு கொண்டார்.

            விரைவில் சௌமேந்திரநாத் தாகூர் தலைமையிலான புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. பாரிசால் நகரிலேயே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தை அவர் ’கண்டுபிடித்தார்’. மணிகுந்தளா தனது தாயாரைப் பிஸ்வநாத் முகர்ஜியின் கூட்டத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றார்; (விஸ்வநாத், அஜாய் முகர்ஜியின் சகோதரர் ஆவார். அக்கூட்டத்தின் உரையைக் கேட்டுவிட்டு வந்த பல நாட்களுக்கு மணிகுந்தளாவின் தாய் வேறு எதைப் பற்றியும் பேசாமல், பிஸ்வநாத்தின் உரையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். 1939ல் மணிகுந்தளா இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினாரானார்.

சிறையிலிருந்த புரட்சியாளர்களை விடுதலை செய்வதற்கு வற்புறுத்திய இயக்கம் 1938ல் வேகமெடுத்தது. ‘அரசியல் கைதிகளை விடுதலை செய் பிரச்சார இயக்கம்’ எழுச்சி பெற்றது. பெண் அரசியல் செயற்பாட்டாளர்கள் அமைப்பு கல்கத்தா ப்ரேம்சந்த் பரால் தெரு 98ம் இலக்க வீட்டிலிருந்து செயல்பட்டது. அவர்கள் அமைத்த காங்கிரஸ் மகிளா சங்கத்தில் காங்கிரஸ் பெண் செயற்பாட்டாளர்கள், புரட்சியாளர்கள், கம்யூனிஸ்ட்கள் மற்றும் பலர் இணைந்து செயல்பட்டனர். பீனா தாஸ், லீலா ராய், கமலா தாஸ் குப்தா, கமலா சாட்டர்ஜி முதலானவர்கள் அவர்களில் சிலர். முதன் முதலான தெருமுனைக் கூட்டங்களில் ஒன்று கல்கத்தாவின் ராஷ் பிகாரி அவின்யூவில் நடைபெற்றது. தெருமுனைக் கூட்டங்கள் அந்நாட்களில் அபூர்வமான ஒன்று. லீலா சென், கமலா முகர்ஜி மற்றும் மணிகுந்தளா சென் போன்ற பெண் கம்யூனிஸ்ட்கள் தீவிரமான பங்கெடுத்தனர், காந்தியர்கள் பலரும் அது போலவே தீவிரமாகப் பங்காற்றினர். இந்தக் கூட்டத்தில்தான் முதன் முறையாக மணிகுந்தளா சென் உரையாற்றினார், உண்மையிலேயே அது பெரிய சாதனைதான். பெருங் கூட்டம் திரண்டு உரையைக் கேட்டது.  

வங்கத்தின் பஞ்சம், இரண்டாம் உலகப் போர் மற்றும் மகிளா சமிதியில் பணிகள்

          கட்சி அளித்த பணிகளை ஆற்ற அவர் நாட்டுப் புறங்களுக்குப் பயணம் செய்து, பெண்கள் மற்றும் ஏழை விவசாயிகள் மத்தியில் பணியாற்றினார். 1942 –43 வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது பெரும் இன்னல்களைப் பொருத்துக் கொண்டு கடுமையாக உழைத்தார். பாரிசால் முதல் சில்கெட் வரை மற்றும் பர்த்துவான் என மாவட்டம் மாவட்டமாகப் பயணம் மேற்கொண்டார். மற்ற மாணவர்களுடன் இணைந்து நிவாரண சமையற் கூடங்களை நடத்தி, நூற்றுக் கணக்கான ஏழைப் பெண்களுக்குக் ‘கிச்சூரி’ (அரிசி பருப்பு வேக வைத்துத் தயாரிக்கப்படும் கிச்சடி போன்ற வங்கத்தின் சிறப்பு உணவை) சமைத்து வழங்கினார். மாவட்டச் சமிதி (குழு அமைப்பு)களை ஏற்படுத்த உதவினார். ‘பெண்கள் சமிதிகளை அமைப்பது முக்கியமான தேவை, ஏனெனில் ஆண்களால் ஏற்படுத்தப்படும் அமைப்புகளில் ஆண்கள் மட்டுமே இடம் பெற்றனர்’ என அதற்கான காரணத்தை விளக்கினார். பெண்கள் தங்களை மூடி வைக்கும் பர்தாக்களிலிருந்து விடுதலையாகி வெளியே வர வேண்டும், சமூகத்திற்காகப் பணியாற்ற வேண்டுமெனக் கூறினார்.

MARS என்றழைக்கப்படும் ‘மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதி’ (பெண்கள் சுய பாதுகாப்புக் குழு) அமைப்புகளை ஏற்படுத்த 1940களின் தொடக்கத்திலும் இரண்டாம் உலகப் போரின்போதும் உதவினார். பல பிரச்சனைகளில் பெண்கள் தங்களையே காப்பாற்றிக் கொள்ள இது உதவியது. டல்ஹவுஸி பகுதியில் அவரும் அவருடைய நண்பரும் விமானப்படை தாக்குதலில் எப்படி அகப்பட்டு மீண்டோம் என்பதை விரிவாக எழுதியுள்ளார். சில படை வீரர்களால் அவர்கள் மீட்கப் பட்டாலும், காப்பாற்றியதற்குப் பிரதிபலன் ‘கூலி’யாக அந்த வீரர்கள் பெண்களாகிய தங்களிடம் தகாதமுறையில் நடக்க முயன்றதையும் எழுதியுள்ளார். அவர்களிடம் திரும்பப் போராடி மீண்டவர்கள் பிரச்சார எதிர்ப்பு இயக்கம் நடத்தினர். 

1941 டிசம்பரில் போர் ஆசியப் பகுதிக்குப் பரவ ஜப்பானியப் படைகள் முன்னேறி இந்திய எல்லைகளை அடைந்தனர். இதன் மத்தியில் நேச அணிப் படைகள் இந்தியா வழியாகச் செல்லத் தொடங்கியது. வழியெங்கும் பிரிட்டீஷ் அமெரிக்கப் படைவீரர்கள் பெண்கள் மீது நடத்திய கொடூரங்கள் பற்றிய செய்திகள் அதிகரித்தன. இது தவிர விலைவாசியும் மோசமாக உயர்ந்தது, உணவுப் பொருட்களைப் பதுக்குவது அதிகரித்தது; இதனால் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இந்தச் சவாலை பெண் தலைவர்கள் நேருக்கு நேராகச் சந்தித்தனர்; பெண்களைத் திரட்டி அமைத்து இந்நிகழ்வுகள் குறித்த விரிவான தகவல்களை அறிக்கைகளாகவும் ஏராளமான பொதுமக்களின் கையெழுத்துகளைத் திரட்டியும் (அரசுக்கு) அனுப்பினர்.

1942ல் மணிகுந்தளா சென், கமலா சாட்டர்ஜி, ரேணுசக்ரவர்த்தி மற்றும் ஈளா ரெயிட் (Ela Reid) முதலான தலைவர்கள் சந்தித்து ‘மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதி (பெண்கள் சுய பாதுகாப்பு லீக்) அமைப்பது என்று முடிவெடுத்தனர்.

மணிகுந்தளாவின் கூற்றுப்படி, ‘பஞ்சம் என்பது உணவு தானியங்கள் முதலியனவற்றின் பற்றாக்குறையால் ஏற்பட்டது அல்ல; தவறான நிர்வாகத்தின் காரணமாக மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டப் பெருந்துயரம்’ என்று பிரகடனப்படுத்திய முதல் பெண்கள் அமைப்பு அது!

1943 ஏப்ரல் 27 – 28 தேதிகளில் மகிளா சமிதியின் முதலாவது மாநாடு கல்கத்தாவில் நடைபெற்றது. அதில் சுமார் 500 பெண்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் சார்பாகப் பொது அரங்குக் கூட்டம் ஏப்ரல் 28 கல்கத்தா, ஆர்ய சமாஜ் ஹாலில் நடைபெற்றது. மணிகுந்தளா உள்பட பல பெண் தலைவர்கள் தீர்மானங்களின் மீது உரையாற்றினர்.

மகிளா சமிதியின் முதல் மகாண மாநாடு கல்கத்தாவில் 1943 மே 8ம் நாள் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உதவிச் செயலர்களில் மணிகுந்தளாவும் ஒருவர். 1944 மார்ச் 19ல் நடைபெற்ற வங்கத்தின் தம்லுக் மாவட்ட மாநாட்டில் அன்றைய சூழல் மற்றும் எதிர்காலப் பணிகள் பற்றி அவர் உரையாற்றினார். 1945 ஜனவரி 6ல் மகிளா சமிதி, அகில இந்திய பெண்கள்  மாநாடு (AIWC) மற்றும் நாரி சேவா சங்க் மற்றும் 10 அமைப்புகளின் கூட்டம் கல்கத்தா பல்கலைக்கழக இன்ஸ்டிட்யூட் ஹாலில் கூட்டப்பட்டது. வங்கப் பஞ்சத்தின் பின்விளைவுகள், குறிப்பாகப் பெண்களின் மீதான விளைவுகள் குறித்து மகிளா சமிதியின் சார்பாக மணிகுந்தளா அக்கூட்டத்தில் உரையாற்றினார்.

1943 சிபிஐ கட்சி காங்கிரஸில்

            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது கட்சி காங்கிரஸ் மாநாடு 1943 மே மாதம் பம்பாயில் நடைபெற்றது. இந்த நேரத்தில் மணிகுந்தளா நாடறிந்த பெண் கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கினார். மாநாட்டு தலைமைக்குழுவிற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு புகழார்ந்த மூத்த தலைவர்கள் எஸ்ஏ டாங்கே, முஸாஃபர் அகமது, பாயாஜி குல்கர்னி, கிருஷ்ணபிள்ளை, டிஎஸ் வைத்தியா மற்றும் நர்கீஸ் பாட்லிவாலாவுடன் அமர்ந்து மாநாட்டு நிகழ்வுகளை நடத்துவதில் பங்குவகித்தார்.

விடுதலைக்குப் பிறகு

            சிபிஐ சுய-அழிப்பு ‘பிடிஆர் பாதை’யைப் பின்பற்றத் தொடங்கியதற்குப் பிறகு சிபிஐ தடைசெய்யப்பட்ட பின்புலத்தில் 1948ல் மணிகுந்தளா கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். சிறையில் அவர் 1951வரை இருந்தார். சுயஅழிப்பு பிடிஆர் பாதையில் கட்சி குழப்பத்தில் ஆழ்ந்திருந்தபோது அவர் பெருமளவு நேரம் பெண்கள் இயக்கம் மற்றும் ‘சர்வதேசப் பெண்கள் ஜனநாயகச் சம்மேளனம்’ (WIDF) உட்பட பெண்கள் அமைப்புகளில் செலவிடத் தொடங்கினார். இதற்கு முன்பு அவர் அனைத்திந்திய பெண்கள் மாநாடு (AIWC) அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டவர் ஆவார். காஷ்மீரைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டான ஜாலி மோகன் கவுல் என்பவரைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு முன்னணிகளில் தீவிரமாகச் செயல்பட்டனர். ஷாம்பு மித்ரா முதலானவர்களுடன் சேர்ந்து நாடக அரங்கிலும் அவர் நடித்துள்ளார்.

பெண்கள் இயக்கம் கட்டுதல்     

            தேசப் பிரிவினையின்போது நடந்த கொடுமையான மதக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதில் மணிகுந்தளாவும் பிற தலைவர்களும் மிகக் கடுமையாகப் பணியாற்றினர். பல்வேறு அகதிகள் முகாம்களிலும் திடீர் குடியிருப்புகளிலும் பெண்கள் சமிதிகளைக் கட்டியமைக்க உதவினார். அவர் எழுதினார் : “எப்போதும் நாங்கள் நகர்ந்து கொண்டே இருந்தோம். ஒவ்வொரு நாளும் அந்தக் குடியிருப்புகளில் புதிய புதிய நண்பர்களைக் கண்டு பிடித்தேன். கிழக்கு வங்கத்தில் எனக்கு அறிமுகமானவர்களைத் தவிரவும் பல புதிய பெண்களும் எங்கள் சமிதிகளில் தீவிரமாகச் செயலாற்றுவதை நான் அறிந்து கொண்டேன். அந்தக் குடியிருப்புகளில் பல புதிய சமிதிகளும் பணி மையங்களும் முளைத்தபடி இருந்தன…” மதக் கலவரங்களின்போது நிவாரண உதவி மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்வதில் மிகவும் மோசமான நிலைமைகளுக்கு மத்தியில்தான் மற்ற பல பெண் தலைவர்களுடன் கடுமையாகப் பணியாற்றினார்.

            அனைத்திந்திய பெண்கள் மாநாடு (AIWC)லிருந்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் (NFIW) அமைப்பிற்கு வந்து இணைந்த பலருள் மணிகுந்தளா சென்னும் ஒருவர். பின்னர் அவர்கள் ஒன்றிணைந்து NFIW அமைத்தனர். சர்வதேசப் பெண்கள் ஜனநாயக சம்மேளனத்தின் உலகளாவிய மாநாட்டிற்குப் பிரதிநிதிகள் குழு ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் 1953 மார்ச் 10 நாள் டெல்லியில் நடைபெற்றது. அதற்கான தேர்வு கமிட்டியில் மணிகுந்தளாவும்  உறுப்பினராக்கப்பட்டார்.

சட்டமன்றத்திற்கு

            1952ல் மேற்கு வங்கத்தின் (விதான்சபா) சட்டமன்றத்திற்கு மணிகுந்தளா சிபிஐ வேட்பாளராகக் காளிகட் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்கட்சித் துணைத் தலைவராகவும் தேர்வானார். (அப்போது சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஜோதிபாசுவுக்குச் சட்டமன்றத்தில் துணைத் தலைவராக இரண்டு முறை பணியாற்றியவர் மணிகுந்தளா). மணிகுந்தளா பல தருணங்களில் விவாதங்களில் குறுக்கிட்டு, அரசின் கொள்கைகள் பல அம்சங்களில் மக்கள் விரோதமாக இருப்பதை விமர்சித்து,   மிகத் திறமையாக வாதங்களை எடுத்து வைப்பார். அவரால் முன்னெடுக்கப்பட்ட பல பிரச்சனைகளில் சுமார் இரண்டு லட்சம் குழந்தைகள் அகதி முகாம்களில் மடிந்துபோன துயரமான பிரச்சனையும் ஒன்று.

            இந்து கோடு மசோதா மற்றும் பிற முற்போக்கு சட்ட மசோதாக்களுக்காக அவர் விரிவான பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த மசோதா, சட்டப்படி ஒரு பெண் திருமணம் செய்யக்கூடிய வயதை நீட்டித்தது, குழந்தை திருமணத்தையும் பலதார மணத்தையும் தடை செய்தது, இந்து திருமண வழக்கங்கள்படியான கலப்புத் திருமணங்களுக்கு முழுமையான மதிப்பு வழங்கியது மற்றும் பெண்களின் மணவிலக்குப் பெறும் உரிமையை அங்கீகரித்தது.

            பெண்கள் விடுதலையை நோக்கி எடுத்து வைத்த பெரும் நடவடிக்கை அது. மணிகுந்தளா எழுதுகிறார், “பெண்கள் உடம்பில் அவரது கணவன்மார் தாக்கிய வன்முறை அடையாளங்களைக் கண்டபோதும் முன்பு நான் எதுவும் செய்ய முடியாதவளாக, உதவிட இயலாதவளாக இருந்தேன். இப்போது உண்மையில் என்னால் தலையிட்டு உதவ முடியும்.”

            1959 ஒன்றிய அரசு வரதட்சிணை தடை மீது மசோதா ஒன்றை மக்களவையில் அறிமுகம் செய்தது. அதற்கு ஆதரவாக மாதர் சம்மேளனம் நாடுமுழுதும் கையெழுத்து இயக்கம் நடத்தி மக்களிடம் கையெழுத்து திரட்டியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்குக் கடிதங்களும் தபால் அட்டைகளும் அனுப்பப்பட்டன. கையெழுத்து இயக்கத்தில் முன்னணியில் தீவிரமாகச் செயல்பட்ட மணிகுந்தளா வங்கத்தில் மட்டும் 25,000 கையெழுத்துகள் திரட்டினார். அவர் எழுதுகிறார், “வரதட்சிணை தராமல் ஒரு பெண்ணால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றால், பிறகு இந்தச் சட்டத்தை ஆதரிப்பதில் என்ன இருக்கிறது?  நாங்கள் நடத்திய கூட்டங்கள் இயக்கங்களின்போது எவ்வளவு விவசாயக் குடும்பங்கள் அல்லது கீழ்மட்ட மற்றும் மேல் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் தங்கள் மகள்களின் திருமணத்தை நடத்தி முடிக்க முயன்றதில் எத்தனை எத்தனை இழப்புகளைச் சந்தித்தனர் அல்லது திவாலாகி நின்றனர் என்ற கதைகளைக் கேட்டோம்” 

            1958ல் ‘உணவு தானியங்கள் விசாரணைக் குழு’ பரிந்துரைகளை அமலாக்கக் கோரி இயக்கம் வெடித்தது. வங்கம் உட்பட நாடுமுழுவதும் விலைவாசி உயர்வு எதிர்ப்புக் கமிட்டிகள்  அமைக்கப்பட்டு கையெழுத்துகளைத் திரட்டி ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. மணிகுந்தளா அந்த இயக்கங்களில் எங்கெங்கும் எல்லா இடத்திலும் தீவிரமாகச் செயலாற்றினார்.

            1958ம் ஆண்டு செப்டம்பர் 25ம் நாள் கல்கத்தா நகர வீதிகளில் 500 பெண்கள் தங்கள் கைகளில் குழந்தைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகினர். அக்கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரேணுசக்ரவர்த்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மணிகுந்தளா தலைமை வகித்தனர்.

நினைவோடை எழுதுதல்

            மணிகுந்தளா சென் தனது புகழ் பெற்ற நினைவுக் குறிப்புகளைச் ‘செடிநர் கதா’ (அற்றைத் திங்கள் குறித்த நினைவலைகள்) என்ற பெயரில் எழுதினார். வங்கமொழியில்


எழுதப்பட்ட அந்தப் புத்தகம்1984ல் வங்கத்தில் வெளியிடப்பட்டது. அவருடைய மறைவுக்குப் பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “விடுதலையைத் தேடி : ஒரு முடிவுறாத பயணம்” (‘In Search of freedom: An unfinished Journey’) என்ற பெயரில் 2001ல் வெளியிடப்பட்டது. அந்த நூல் பல்வேறுபட்ட பரந்ததொரு காலத்தையும் நிகழ்வுகளையும் உள்ளடக்கியது. பெண்கள் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரச்சனைகளையும், மேலும் பெண் செயற்பாட்டாளர்கள் சமூகத்தில் சந்தித்தப் பிரச்சனைகளையும் அதில் அவர் எழுதினார்.

கட்சி பிளவிற்குப் பிறகு

            1962ல் இந்தியா மீது சீனா தாக்குதல் தொடுத்த பிறகு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சூழ்நிலை தெளிவில்லாத இருள் சூழ்ந்திருந்தது. மிக ஆழமான தத்துவார்த்தப் பிரச்சனைகள் மேலும் கூர்மை அடைந்து, இறுதியில் கட்சிப் பிளவில் போய் முடிந்தது. மணிகுந்தளா மிகவும் நொறுங்கி உடைந்து போனார், செயல்படாது முடங்கினார்.

            அவரது வாழ்வின் இறுதியில் மணிகுந்தளா முழுமையாக அரசியலிலிருந்து விலகினார், ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். அவர் இராமகிருஷ்ணா – விவேகானந்தா பிரிவினரோடு இணைந்தார்.

            தனது கணவர் ஜாலி மோகன் கவுல் அவர்களைத் தவிக்கவிட்டு, மணிகுந்தளா 1987ம் ஆண்டு செப்டம்பர் 11ம் நாள் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.

பிற்சேர்க்கை:

            மணிகுந்தளா சென் இறந்த பிறகு, அவருடைய கணவர் ஜாலி மோகன் கவுல் தனது 100வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு 2020 ஜூன் 29ல் மறைந்தார். அவரும் கம்யூனிட்ஸ்ட் கட்சியின் போற்றுதலுக்கு உரிய ஒரு தலைவராவார். காஷ்மீரியான அவர் வங்கத்தைத் தனது அரசியல் செயல்பாட்டுக் களமாகக் கொண்டு பணியாற்றினார். மற்ற வங்காளிகளைவிடக் கூடுதலான வங்காளியாக வாழ்ந்தவர். பிளவுபடாத இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான கவுல் தனது வாழ்வு இறுதி காலத்தில் மிகவும் மனம் உடைந்து ஏமாற்றமடைந்த மனநிலைக்கு ஆளானார்.

            ‘கட்சி’யைவிட்டுப் பிரிவது எனும் கொடும்வலியை நிச்சயமாகத் தனது நகைச்சுவை உணர்வின் உதவியைக் கொண்டே கடந்தார். 1963 ஜனவரி இறுதியில் மிகவும் மென்மையாக எழுதப்பட்ட தனது கட்சி உறுப்பினர் விலகல் கடிதத்தில், “அண்மையில் இருக்கும் கம்யூனிஸ்ட்

நாடு’ ஒன்று நடந்து கொள்ளும் முறையால் இந்த நாட்டின் ஜனநாயக முற்போக்கு சக்திகளைப் பலவீனப்படுத்துவது” என்று குறிப்பிட்ட ஒன்று போதும் தேசத்திற்குத் துரோகம் இழைத்தல் என்ற உணர்வின் அவரது வேதனையைக் காட்ட, அந்த வேதனை இனியும் வேண்டாம் என விலகி ஆன்மிக சமூகப் பணிகளிலும் எழுத்துப் பணிகளிலும் ஈடுபட்டார். தனது துணைவியாரைப்போல இவரும் ஒரு நினைவோடை நூல் எழுதினார். அதன் தலைப்பு “நல்லதோர் உலகைத் தேடி” (In Search of Better World)

(ஜாலி மோகன் கவுல் குறித்து இணையத்தில் திரட்டி மொழிபெயர்ப்பாளர் இணைத்தது)

--தமிழில்: நீலகண்டன்,

                                                                                                                    என்எப்டிஇ, கடலூர் 

No comments:

Post a Comment