Thursday 19 August 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 46 -- மீனாதாய் சானே

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :                      

சில சித்திரத் சிதறல்கள் - 46

 


மீனாதாய் சானே :
தொடக்கக் கால பெண் கம்யூனிஸ்ட் தலைவர்

--அனில் ரஜீம்வாலே

--நியூ ஏஜ் ஜூலை 18 – 24

            மீனாட்சிதாய் சானே (சர்தேசாய்) மகாராஷ்ட்டிரா மாநில சோலாப்பூரில் 1909 மே 18ல் பிறந்தார். அவர் புகழ்பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எஸ் ஜி சர்தேசாய் அவர்களின் இளைய சகோதரி; இதனால் இயல்பாகவே அவருடைய கருத்தோட்டங்களால் மீனாதாய் செல்வாக்கு பெற்று தனது கருத்துக்களையும் வடிவமைத்துக் கொண்டார். மிகவும் ஆரம்ப காலப் பெண் கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்கள் மற்றும் தலைவர்கள் ஒரு சிலரில் அவரும் ஒருவர்.

            மீனாட்சி இளம் வயதிலேயே தனது தாயைக் காசநோய் காரணமாக இழந்தார். அவர் மறைவதற்கு முன்புவரை மருத்துவச் சிகிச்சைக்காக ஹைத்திராபாத் முதலிய பல்வேறு இடங்களுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் குஜராத் மாநில பில்லிமோராவில் 1911ல் இறந்தார். எனவே மீனாட்சி ஒரு சிறு குழந்தையாகத் தனது தாயின் அன்பும் அரவணைப்பு எதையும் பெற்றதில்லை. மீனாட்சியின் தாய் இந்திராபாய், பிரபலமான கிர்லோஸ்கர் குடும்பத்தைச் சேர்ந்தவர். மீனா (மற்றும் எஸ் ஜி சர்தேசாய் இவர்களின்) தந்தை ஜி எஸ் சர்தேசாய் (கன்பத்ராவ் சர்தேசாய்) ஆவார்.

            தாயின் மறைவுக்குப் பிறகு மீனா பம்பாய்க்குச் சென்றார். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது டாக்டர் கிர்லோஸ்கர் அவரைச் சோலாப்பூர் அழைத்து வந்தார். உடல்நலமின்மை காரணமாகப் பெரும்பகுதி மீனா வீட்டிலேயே படித்தார். ஏழாவது வகுப்பு தேர்ச்சி பெற்றதும் ஹிஜ்சன் பகுதியில் இருந்த மகிளா வித்தியாலயாவில் 8ம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஒருசமயம் ஆளும் கெய்க்குவார்டு மன்னரிடம் உறவினர்கள் பணியாற்றியதால் அவர் பரோடாவிலும் படித்தார்.

அரசியலில்

           அண்ணன் எஸ்ஜி சர்தேசாய் 1925ல் பம்பாய் ஸைடன்ஹாம் கல்லூரியில் சேர்ந்தார். 1920களில் தேசிய இயக்கம் வீறுகொண்டு எழ இளைஞர்கள் புதிய பாதையை நாடத் தொடங்கினர். சர்தேசாய் தனது தங்கை மீனாவிடம் கூறினார்: ‘நாம் இருவரும் வியாபாரத்தில் அல்லது நிரந்தர பணிகளில் சேர்ந்து ஆகப் போவது ஒன்றுமில்லை; எனவே நம்முடைய வாழ்வின் முழு நேரத்தையும் சமூகத்திற்காகவும் தேசத்திற்காகவும் அர்ப்பணிப்பதை நம் வாழ்வின் நோக்கமாகக் கொள்வோம்!

            அநீதி மற்றும் சுரண்டலுக்கு எதிராகப் போராடுவது என்று மீனா முடிவு செய்தார். இந்த விஷயங்களைத் தனது தந்தை கன்பத்ராவ் சர்தேசாய் (‘அபா’) உடன் கடிதத் தொடர்பு மூலம் விவாதித்தார்; அவர் பெர்லின் மாறிச் சென்ற பிறகும் கடிதத் தொடர்பு தொடர்ந்தது.

            கல்லூரியில் சேர்ந்த பிறகு மீனா ‘எனது வாழ்வின் குறிக்கோள்’ என்ற தலைப்பில் 1928 நவம்பர் 29 தேதியிட்ட ஒரு ஆவணத்தைத் தயாரித்தார்.  முக்கியமாக இரண்டு இயக்கங்களில் தான் பங்கேற்கப் போவதாக அதில் எழுதினார்: ஒன்று விவசாயிகள் இயக்கம் மற்றும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது. குறைந்தபட்சம் 4ம் வகுப்பு வரை உள்ள பள்ளிக் கூடம் ஒன்றை ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் கற்பதற்காக தான் நிச்சயம் ஆரம்பிக்க வேண்டும். அவர் எழுதினார்: “எனது லட்சியத்தின் மீது கவனத்தைக் குவிப்பேன், எனது விருப்பதை நிறைவேற்றாமல் நான் சாக மாட்டேன். எனது பிரதிக்ஞையை மறக்கக் கூடாது என்பதற்காக இந்த ஆவணத்தை எப்போதும் எனது கண்களில் படுமாறு வைப்பேன்” – இப்படிக்கு மீனாட்சி சர்தேசாய்!

            அத்தகையது அவருடைய தீர்மானகரமான முடிவு. அவருடைய கல்லூரித் தோழியான பிந்து சப்ரே (பின்னர் பிரமிளா பான்வால்கர் ஆனவர்) அவரைப் பற்றி தனது நினைவுக் குறிப்பில் எழுதும்போது, ‘மீனா புகழ்பெற்ற பெண்ணாக இருந்தார், எப்போதும் மற்றவர்களுக்கு உதவிடத் தயாராக இருப்பார்.’ மீனா தொடர்ந்து ஆஸ்த்துமா நோயால் துன்பப்பட்டார்.  

            சர்தேசாய் மற்றும் கிர்லோஸ்கர் குடும்பங்கள் இரண்டும் சமூகச் சீர்திருத்தக் குடும்பங்கள் ஆனபடியால் அவற்றின் செல்வாக்கு மீனாவிடம் ஆழமாகப் பதிந்தது. தேசிய இயக்கத் தலைவர்கள் பூனாவுக்கு (இப்போது பூனே) விஜயம் செய்து சொற்பொழிவாற்றுவது வழக்கம். மீனா அந்தக் கூட்டங்களுக்குத் தனது நண்பர்களை அழைத்து வருவார்.

            காந்திஜி தனது உப்பு சத்தியாகிரகத்தை 1929 மார்ச் 20ல் தொடங்கினார். காந்திஜியைச் சந்தித்த ஸ்ரீனிவாஸ் சர்தேசாய் (SG சர்தேசாய்) தான் ‘வன சத்தியாகிரக’த்தைத் தொடங்க அனுமதி பெற்றார். காங்கிரஸ் தலைவர் சங்கர் ராவ் தேவ் சத்தியாகிரகத்துக்கான பொறுப்பை அவரிடம் அளித்தார். சத்தியாகிரகம் 1930ல் டிஸ்ரிக்ட் நகரின் சங்கம்நர் என்ற இடத்தில் தொடங்கியது.

            மீனாட்சி தனது இரண்டு தோழிகளுடன் சங்கம்நரை உடனடியாக அடைந்தார்; ஆனால் வந்தவுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் செய்தி நாளிதழ்களில் விரைவாகப் பரவியது. சத்தியாகிரகிகள் போலீசாரிடம், ‘இந்தப் பெண்கள் சத்தியாகிரகத்தைக் காண வந்தவர்களே தவிர, அதில் கலந்து கொள்ள வந்தவர்கள் இல்லை என்றும், விரும்பினால் அவர்கள் சத்தியாகிரகிகளைக் கைது செய்து கொள்ளட்டும்’ என விளக்கினர்.

            இந்த விளக்கம் பலன் அளித்தது, பெண்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். கல்லூரி திரும்பியதும், கல்லூரியின் முதல்வர் அவர்களை மன்னிப்பு கேட்கச் சொன்னார். மீனா மறுத்து விட்டார். மற்ற பெண்களும் தாங்களாகவே அங்கே சென்றதாகவும் யாருடைய வற்புறுத்தலும் இல்லை என்று கூறினர். இந்நிகழ்வுக்குப் பிறகு மீனாட்சி கொண்டாடப்படும் புகழ் பெற்றார்!

            1931ல் எஸ்ஜி சர்தேசாய் விடுதலையானதும் மீனாவைப் பம்பாய்க்கு அழைத்தார். அங்கே மார்க்சியம் குறித்த பல்வேறு அம்சங்களை அவருக்கு விளக்கினார். மார்க்சியம் குறித்த சில நூல்களையும் தந்தார். பம்பாயில் இருந்தபோது மீனா ‘பிரகதி’ (வளர்ச்சி, முன்னேற்றம்) என்ற நாளிதழில் சேர்ந்தார். நல்ல மதிப்பெண் பெற்று அவர் GA தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதன் மத்தியில் அவருக்கு சத்தாராவில் SNDT பள்ளி மற்றும் கல்லூரியில் வேலை கிடைத்து 1931ல் தற்காலிக ‘லேடி சூப்பிரெண்டென்ட்’ ஆனார்.  

            பொதுக் கூட்டங்களில் அவர் சொற்பொழிவாற்றத் தொடங்கினார். கணேஷ் சதுர்த்தி விழாவில் இரண்டு உரைகளை ஆற்றினார். தனியார் சொத்துரிமை குறித்துப் பேசும்போது புக்காரின், லாஃபார்க், பெட்ரென்ட் ரஸ்ஸல் மற்றும் பிற ஆளுமைகளின் கருத்துக்களை அவர் திறமையாக எடுத்துக் காட்டி விளக்கினார். இதனை அறிய வந்த சர்தேசாய் அவரைக் கடிதங்கள் மூலம் பாராட்டினார்.

முழுநேர சிபிஐ கட்சி ஊழியராக

            மேற்படிப்புக்காக மீனாவை அமெரிக்கா அல்லது வேறு ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பும் தயாரிப்புகளில் அவரது குடும்பம் ஈடுபட்டது. ஆனால் இங்கேயே முழு நேரம் அரசியலில் ஈடுபட்டு கட்சி வேலைகளில் தனது நேரத்தை அர்ப்பணிப்பது என்பதே அவரது நோக்கமாக இருந்தது. தனது இலட்சிய நோக்கத்தைத் தந்தையிடம் தெரிவித்தார். தந்தை அவரை வற்புறுத்தாமல் அத்தகைய நடவடிக்கையில் இருக்கும் சாதக பாதகங்களை எடுத்துரைத்தார். முதலில் அவர் பள்ளிப் பணியிலேயே தொடரலாம் என முடிவு செய்தாலும், பம்பாயில் கட்சித் தோழர்களுடன் ஆலோசித்த பிறகு, முழு நேரக் கட்சிப் பணி முடிவைத் தாமதிக்க வேண்டாம் என முடிவு செய்தார். பள்ளி நிர்வாகத்திற்கு மீனா ஒரு மாதம் முன்பே அறிவிப்புக் கொடுத்தார்.

            இந்நடவடிக்கை துணிச்சலானதும் சிரமமானதும் ஆகும். செல்வச் செழிப்புமிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் சுலபமான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்; ஆனால் அவர் தனக்கு மிகவும் விருப்பமான தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றுவதைத் தேர்ந்தெடுத்தார். பெரும்பான்மையான முக்கியத் தலைவர்கள் மீரட் சதி வழக்கு (1929 -- 33) காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்டதால் கட்சி அமைப்பும் அதன் நிதி நிலைமையும் மிக மோசமாக இருந்தது. எனவே முழு நேர கட்சி ஊழியரான அவருக்கு பணரீதியில் உதவி செய்யும் நிலையில் கட்சி இல்லை. இவ்வளவு மோசமான நிலையில் அவருடைய இந்த முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

            புகழ்பெற்ற பிளீடர் (வழக்கறிஞர்) அண்ணா சாகேப் பராவ்லே மற்றும் அவருடைய மனைவி மாய்சாகேப் அவருடைய செலவுகளை ஏற்க முன்வந்தது மட்டுமின்றி அதை அவர்கள் கடைசி வரை செய்தனர். அண்ணா சாகேப் மீனாவை “என் மகளே” என்றழைத்தே கடிதங்களில் எழுதுவார். அது 1932ம் ஆண்டு.

            பம்பாய் வந்திறங்கியதும் தன் வீட்டிற்குச் செல்லாமல் நேரே மாதுங்காவில் இருந்த கட்சி கம்யூன் (குடியிருப்பு) சென்றார். ஒருக்கால் இதுவே பம்பாயில் அமைக்கப்பட்ட முதலாவது கம்யூனாக இருக்கக் கூடும். ஜம்பேகார், கர்காட்கர், சர்தேசாய், அதிகாரி, கோல்ஹட்கர் முதலான தலைவர்கள் அங்கே தங்குவது வழக்கம். இப்போது மீனாவும் கூட அவர்களோடு சேர்ந்து கொண்டார்.

            தொழிலாளர்கள் காலனிகளுக்குச் செல்லத் தொடங்கியவர், அங்கே தொழிலாளர்களை – குறிப்பாக– பெண் தொழிலாளர்களைச் சந்தித்தார். மதன்புரா போன்ற இழிவுக்குப் பெயர்போன பஸ்தீஸ் எனப்படும் நெருக்கம் அதிகமான குடியிருப்புகளுக்குக் கூட சென்றார். கிர்ணி காம்கர் யூனியன் (ஜிகேயு) பல கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது.

            முழுநேர ஊழியர்கள் ஏறத்தாழ கையில் தம்படி காசில்லாமல் இருந்தார்கள். இருப்பினும் எப்படியோ 2 ரூபாய்க்குக் கிடைக்கும் மலிவான ‘ரைஸ் –பிளேட்’ மற்றும் சில ‘சாய் போ’ (சமோசா போன்ற உணவு) இவற்றைக் கொண்டு வாழ்வை ஓட்டினார்கள். கூட்டங்களின்போது சில தோழர்கள் அவரை டீ தயாரிக்கும்படி கூறுவதை அவர் விரும்புவதில்லை. ‘உங்களில் ஒவ்வொருவருக்கும் டீ போடத் தெரியும். பிறகு ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்? நான் பெண் என்பதால்தானே!’ என அவர்களிடம் திருப்பிக் கேட்பார். அவர்கள் வாயடைத்து நிற்பார்கள்.

            அவருக்குக் கம்யூனில் தங்கியிருந்த ரகுநாத் கர்காட்கர் என்பவருடன் நெருக்கமான நட்பு வளர்ந்தது. ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த அவர் ஜிகேயு சங்கத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். அவர் கம்யூனிஸ்ட் கொள்கைகளில் ஆழமான புலமை பெற்றிருந்தார். 1932 டிசம்பரில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வழிநடத்த ஒரு வாரத்திற்குள் அவர்கள் சோலாப்பூர் விரைந்தனர். அங்கே மோசமான நிலையில் வாழ்ந்த தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்ட நேரம் உழைக்க நிர்பந்திக்கப்பட்டனர். சிறையில் வழங்கப்படும் உணவைவிட வீணாகிப் போன மோசமான உணவே அவர்களுக்கு வழங்கப்பட்டது. முதலாவது வேலைநிறுத்தம் 1920 ஜனவரி 16ல் நடந்தது. அதனைத் திலகர் ஆதரித்தார். தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தத்துடன் அனுபவம் இல்லாத காரணத்தால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை ‘giving adda’என்று அழைத்தனர். லால் பாவ்டா ஜிகேயு சோலாப்பூரில் 1928ல் அமைக்கப்பட்டது.

            ஸ்டேஷனுக்கு வந்ததும் கர்காட்கர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். மீனாவுக்கு நாளிதழ்களில் அதிக விளம்பரம் கிடைத்தது. ‘சோலாப்பூர் சமாச்சார்’ என்ற பத்திரிக்கையின் 1933 டிசம்பர் 9ம் தேதி இதழில் வெளிவந்த செய்தியில், மீனாதாய் தொழிலாளர்கள் கூட்டத்தில் முழக்கங்களை எழுப்பியதாகவும் நாட்டின் தொழிலாளர் இயக்கம் பற்றி சிறிய உரை நிகழ்த்தி அறிக்கை தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

தொழிற்சங்க இயக்கத்தில்

            மீனாதாய் முக்கிய தலைவராக உருவானதும், மக்கள் அவர் யார் என அறிய முற்பட்டபோது அவரைப் பற்றிய பிற விஷயங்களோடு அவர் டாக்டர் BK கிர்லோஸ்கரின் பேத்தி என்பதையும் சொல்வார்கள். கிர்லோஸ்கர் புகழ்பெற்ற சமூகச் சீர்திருத்தவாதி. தனது பேரன் ஸ்ரீனிவாஸ் (ஸ்ரீனிவாஸ் கணேஷ் சர்தேசாய்) மற்றும் பேத்தி மீனாட்சி மேற்கொண்ட (மார்க்சிய) பாதையைப் புரிந்து கொள்ள கிர்லோஸ்கர் தனது 70வது வயதில் மார்க்சியத்தைப் படித்தவர். பின்னர் அவரே இறுதியில் மார்க்சியவாதியாக மாறி கம்யூனிஸ்ட்களுக்கு உதவியவர். 

     மீனாட்சி அடிக்கடி தொழிலாளர்களின் பஸ்தீஸ்களில் தங்கி இரகசிய கூட்டங்களை நடத்துவார். 1934ல் மூன்று மாதங்கள் நீடித்த வேலைநிறுத்தம் காரணமாக அவர், கர்காட்கர், பாட்லிவாலா, விபூதே முதலானவர்களோடு கைது செய்யப்பட்டார். பீஜாபூர் சிறையில் ஆறு மாதங்கள் அடைக்கப்பட்டனர். இதுவே அவர் சிறைக்குச் சென்ற முதல் அனுபவம். அப்போது தாய்மை நிலையில் இருந்த அவருக்கு மாஜிஸ்ட்ரேட் ‘பி’ கிளாஸ் வகுப்பு அளித்த பிறகும் கடுங்காவல் சிறைதண்டனை வழங்கப்பட்டது. இதனைப் பரவலாகப் பலரும் கண்டித்தனர்.

          1934 அக்டோபரில் மீனாட்சியும் கர்காட்கரும் விடுவிக்கப்பட்டனர். 1935ல் அவர்களுக்கு

ஒரு மகன் பிறந்தான், அவனுக்குப் புகழ்பெற்ற புரட்சியாளர் ஜதின் பெயராக ஜதீந்திரா எனப் பெயர் சூட்டினர். (வங்கப் புரட்சிகர அமைப்பான அனுசீலன் சமிதியைச் சேர்ந்த ஜதின் தாஸ் எனப்படும் ஜதீந்திரநாத் தாஸ் பானர்ஜி. லாகூர் சிறையில் 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 1929 செப்டம்பர் 13ல் தமது 25வது வயதில் உயிர் நீத்தப் புரட்சியாளர்). கூட்டங்களில் உரையாற்றும்போது ஒரு கூட்டத்தில் ‘கம்யூனிசம் குறித்த ஆனா ஆவன்னா’ என்ற தலைப்பில் மீனாட்சி ஆற்றிய உரை ஒருக்கால் சோலப்பூரில் நடந்த அத்தகைய கூட்டங்களில் முதல் வகையானதாக இருக்கலாம். தனது மகனை முதுகில் சுமந்து சென்றபடியே அவர் தொழிலாளர்களோடு பணியாற்றுவார்.

            இதன் மத்தியில் மிக மோசமான நிலையில் இருந்த பீடித் தொழிலாளர்களை, குறிப்பாகப் பெண் தொழிலாளர்களை அணி திரட்டத் தொடங்கினார். முதுகைக் குனிந்தபடியே, இடுப்பும் முதுகும் ஒடியுமாறு, 10 மணி நேரம் அவர்கள் பீடி சுற்ற வேண்டியிருந்தது. அது பொறுக்க முடியாத வலியை ஏற்படுத்தும். 1000 பீடிகளுக்குக் கூலியாக வெறும் 5 அணாக்கள் – அதையும் பலநேரம் முழுமையாகத் தராமல் பல விதங்களில் பிடித்தங்களைச் செய்து குறைவாகக் கூலியைத் தருவார்கள்.

            சிஷ்கரண் மங்கிலால் பீடி ஆலையில் ஐந்து ஆணாவுக்குப் பதில் எட்டணா கூலி கேட்டு 125 பெண் தொழிலாளர்கள் 1934 அக்டோபர் 29ல் வேலைநிறுத்தம் செய்தனர். இந்த வேலைநிறுத்தம்தான் அமைப்பு சாரா தொழில் பிரிவில் இந்தியாவில் நடத்தப்பட்ட முதலாவது வேலைநிறுத்தமாக இருக்கக் கூடும். அதன் தலைவர் மீனாட்சி. ஆண் தொழிலாளர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து ஒன்றிணைந்து பெண் தொழிலாளர்கள் போராடினர்.  

            அந்நாட்களில் தொழிலாளர்கள், அவர்களின் தலைவர்கள் மற்றும் சங்கங்களுக்கும்  வாடகைக்குக் குடியிருக்கவோ அலுவலகம் நடத்தவோ சுலபமாக இடம் கிடைக்காது. புகழ்பெற்ற மராத்தி எழுத்தாளர் என்சி பாட்கே சோலாப்பூருக்கு விஜயம் செய்து தானே நேரில் பார்த்து கிர்லோஸ்கர் மாத இதழில் (மராத்தி) தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை மற்றும் போராட்டங்கள் குறித்து எழுதினார். அந்த இதழை ஷங்கர் லால் கிர்லோஸ்கர் வெளியிட்டு வந்தார். அவர்கள் வீட்டை அடைந்த உடன் வெளியே பெருமுழக்கங்கள் எதிரொலிப்பதைக் கேட்டனர். வீட்டின் உச்சியிலிருந்து பார்த்தபோது சிகப்புக் கொடிகளைத் தாஙகி வரும் தொழிலாளர்கள் ஊர்வலத்திற்கு தலைமையேற்றபடி மீனாட்சி பெருங்குரலில் முழக்கங்கள் எழுப்புவதைப் பார்த்தனர். சர்தேசாயும் மீனாட்சியும் ஊர்வலம் முடிந்த பிறகு வீடு திரும்பியவர்கள் அது குறித்து நெடுநேரம் பேசினர்.

1937 பொதுத் தேர்தல்கள்

            1935 அரசியலமைப்புச் சட்டத்தின்படி 1937 பிப்ரவரியில் நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. டெக்ஸ்டைல் சங்கங்களும் காங்கிரசும் இணைந்து போட்டியிடுவது என முடிவெடுத்தன. கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சங்கங்கள் ஆதரவுடன் தொழிலாளர்கள் தொகுதியில் ஹெட்கிகர் (சுதந்திரப் போராட்ட வீரர், பின்னர் சன்னியாசம் பெற்று சுவாமி இராமானந்த தீர்த்தர் ஆனவர்) நிறுத்தப்பட்டார். மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் அவர் வென்றார். ‘என்ஜின்’ சின்னத்தில் நின்ற அவர் 7719 வாக்குகள் பெற, எதிர்த்து நின்ற Shபகாலே 973 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்த வெற்றி தொழிலாளர்கள் மத்தியில் ஈடு இணையில்லா உற்சாகத்தை எழுப்பியது.

            ‘ஏக்ஜூட்’ (ஒருமைப்பாடு) என்ற தொழிலாளர்களின் வாராந்திர இதழில் மீனாதாய் தீவிரமாகப் பங்கேற்றார். 1930 பிப்ரவரி 14 ‘கைதிகள் தின’த்தின்போது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். கர்காட்கர், விபுதே முதலானவர்களுடன் அவர் ஏரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

புதிய கட்டத்தில் நுழைவு

            சிறையில் தன் வாழ்வு குறித்து அவர் மறு சிந்தனை செய்ய முற்பட்டார். தனது குழந்தைக்கும் குடும்பத்திற்கும் கூடுதல் அக்கறையும் கவனிப்பும் வழங்க வேண்டிய தேவையை உணர்ந்தார். அதோடு மட்டுமில்லாமல் தன் கணவர் கர்காட்கருடன் அவருக்குக் கருத்து வேறுபாடு அதிகரித்து விலக ஆரம்பித்தார். விடுதலை ஆனவுடன் அவர்களுக்குள் மணமுறிவு நடந்தது. சானே என்பவருடன் நட்பு வளர அவர்கள் 1950ல் திருமணம் செய்து கொண்டனர்.

            1938ல் விடுதலையானவுடன் மீனாதாய் இரயில்வே நிலையத்தில் அன்புடன் வரவேற்கப் பட்டார். ‘மத்திய பிராந்த்’ (மத்திய மாகாணம் அல்லது CP) பீடி காம்கர் பரீட்சத் தலைவராக அவர் 1938 நவம்பர் 21ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 அக்டோபர் 3ல் சோலாப்பூரில் ‘போர் எதிர்ப்பு நாள்’ அனுசரிக்க நடந்த கூட்டத்தில் சானே, சர்தேசாய் முதலானவர்களுடன் அவரும் சொற்பொழிவாற்றினார். 1939 டிசம்பர் 5 – 7 தேதிகளில் நடத்தப்பட்ட ‘மகாராஷ்ட்டிரா மகிளா பரீட்ஷத்’ (பெண்கள் சபை)  மாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவராகப் பணியாற்றினார்.

            1940 மே மாதம் இந்தியப் பாதுகாப்பு விதிகளின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்ட மீனாதாய் 1942வரை சிறையில் அடைக்கப்பட்டார்.

BTR காலமும் மீனாதாய் ராஜினாமாவும்

            மீனாட்சிதாய் பிடிஆர் காலத்தில் மீண்டும் கைதாகி எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். கட்சிக்குள் நடைபெற்ற மயிர் பிளக்கும் வாதங்களால் அவர் மிகவும் சோர்வடைந்தார். இந்தப் பூசல்களுக்கு ஒரு முடிவு கட்டுமாறு ஏழு பக்க வேண்டுகோள் கடிதம் ஒன்றை அவர் எழுதினார். அதனால் பலன் ஏதும் விளையாத நிலையில் வெறுத்துப் போய் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார்.  

            1950ல் விடுதலையான அவர் தொடர்ந்து கட்சியுடன் இருந்தார். தீவிரமாகப் பல முன்னரங்குகளில் பணியாற்றிய அவர் தீவிரமான கல்விப் பணியை மேற்கொண்டார்; முனிசிபல் பள்ளிக் கல்வி போர்டில் பொறுப்பு வகித்தார், 1952 -53 களில் பஞ்ச நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, பெண்கள் சம்மேளனத்தில் பணியாற்றினார். 1980 நவம்பர் 14 -15ல் அவுரங்காபாத்தில் நடைபெற்ற மகாராஷ்ட்டிரா மாநில மகிளா சம்மேளன மாநாட்டில் தலைமை வகித்தார்.

            பின்னர் பூனேக்கு அவருகே டெலிகௌன் பிராந்தியத்திற்கு மாறினார். ‘மகிளா ஆந்தோலன் பத்ரிகா’ (பெண்கள் முன்னேற்ற இதழ்) அமைய உதவினார்.

            கொண்ட கொள்கையில் தளராத முன்னத்தி பெண் கம்யூனிஸ்ட் தலைவர் மற்றும் செயற்பாட்டாளரான மீனாதாய் சானே தனது 80வது வயதில் 1989 ஆகஸ்ட் 17ல் மறைந்தார்.

            அவர் நினைவைப் போற்றுவோம்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment