Thursday 12 August 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 45 பாலச்சந்திர திரிவேதி

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :                      

சில சித்திரத் சிதறல்கள் - 45

பாலச்சந்திர திரிவேதி :

தொழிற்சங்க மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்

--அனில் ரஜீம்வாலே

--நியூ ஏஜ் ஜூலை 04 – 10

          பாலச்சந்திர திரிவேதி 1923 பிப்ரவரி 13ல் குஜராத்தில் பிறந்தார். அவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள். அவரது தந்தை பாபுஜி ஸ்ரீ ஹர்சங்கர் ஆத்மாராம் திரிவேதி குஜராத் பள்ளியின் முதல்வராக இருந்தார். அவரது தாய் திருமதி சூலிபென் தன் மகன் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என விரும்பினார். சுக்லாதீர்த் என்ற இடத்தில் இருந்த குஜராத்திப் பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றவர் பின்னர் அங்கலேஷ்வரில் இருந்த குருகுல நர்மதா பள்ளியில் படித்தார். பாலச்சந்திரா இளம்வயதிலேயே தந்தையை இழந்தார்.

அரசியலில்

            அவருடைய சகோதரர் ராமச்சந்திரா அவரை அப்போது சமஸ்தானமாக இருந்த பரோடாவுக்கு (தற்போது வதோதரா) அழைத்து வந்தார். அங்கே ஷ்ரோஃப் நினைவுப் பள்ளியிலும் பிறகு ஜெயஸ்ரீ மாடல் உயர்நிலைப் பள்ளியிலும் பாலச்சந்திரா சேர்க்கப்பட்டார். 1940ல் மெட்ரிக் தேர்வை முதல் வகுப்பில் தேறினார். படிக்கும் காலத்தில் தேசிய மற்றும் விடுதலை இயக்கக் கருத்துகள் அவருள் பதிந்தன. அவர் கதர் ஆடை அணியத் தொடங்கினார்.

 1939ல் அவர் மாடல் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சங்கம் அமைத்தார். இன்டர்- சயின்ஸ் கல்வியை முடித்த பிறகு அகமதாபாத் மருத்துவக் கல்லூரியில் சேர பாலச்சந்திராவுக்கு அனுமதி கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு. மாணவர்கள் குறைவு என்பதால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது என நினைப்பதற்குக் காரணமே இல்லை. பாலச்சந்திரா மட்டும் மற்றவர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்திருந்தால் நிச்சயம் அவர் அக்கல்லூரியில் சேர்ந்திருப்பார். ஆனால் என்ன அறிவுரை தரப்பட்டது? கதர் ஆடை அணியாதே! அதனை ஏற்று நடக்க பாலச்சந்திராவால் இயலவில்லை. அத்தகைய எல்லா ‘நல்ல’ வார்த்தைகளையும் மீறி, நேர்முக போர்டின் முன் அவர் கதர் ஆடை அணிந்து ஆஜர் ஆனார்!! இயல்பாகவே அவரைக் கல்லூரியில் அனுமதிக்கவில்லை.

பாலச்சந்திராவுக்குக் குடும்ப வழக்கப்படி ‘ஜனேயு’ (யக்யோபவீதம், புனிதப் பூணூல்) அணிவிக்கப்பட்டது; முன்நெற்றியில் ‘சிறிது’ (ஸோட்டி) முடியை மழித்து எடுத்துவிடும் சடங்கும் இளம்வயதில் செய்யப்பட்டது. இந்தப் பழங்காலப் பழக்க வழக்கங்கள் மீது அவருக்குச் சீற்றம் உண்டாயிற்று.

படிப்பில் மிகக் கூர்மையான அறிவாற்றல் உடையவர்; ஆனால் அதில் கவனத்தைச் செலுத்தி நேரத்தை ஒதுக்க முடியவில்லை. காரணம், அவருடைய அதிகமான ஆர்வம் தீவிரமான சமூக மற்றும் அரசியல் வாழ்வைச் சுற்றி வந்தது. தனது கல்வியை அவர் பம்பாய் பல்கலைக்கழகத்தோடு இணைந்த பரோடா கல்லூரியில் தொடர்ந்தார். குடும்பத்தினரைப் பகைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.

மாணவர் பெருமன்றம் மற்றும் கட்சியில்

சமூகத்தின் அணுகுமுறை மற்றும் ஏழைகளுக்கு எதிரான அதன் சுரண்டும் பழக்க வழக்கங்களைப் பார்த்துச் சமூகத்தின மீதான அவரது கோபம் வளர்ந்தது. அவர் எப்போதும் புரட்சியைப் பற்றிப் பேசுவதையும் அதிக நேரத்தைத் தொழிலாளர்கள் மத்தியில் கழிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். மார்க்ஸ் மற்றும் லெனின் படைப்புகள் மீது அவர் விருப்பத்தை வளர்த்துக் கொண்டார்.

1942ல் பாலச்சந்திரா ஏஐஎஸ்எஃப் (அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்) அமைப்பில் தீவிரமாகப் பங்கேற்றார். அவருடைய ஏஐஎஸ்எஃப் இயக்கத் தோழரான தீனநாத் திவான், ‘படிப்பில் அவர் ஒரு முதல் மாணவர் ஆனால் படிப்பில் கவனம் செலுத்தாதவர்; அதற்கு பதில் அவர் அதிக நேரத்தை மாணவர் இயக்கத்தில் செலவிட்டார்’ என அவரைப் பற்றி கூறியுள்ளார்.

1943ல் பாலச்சந்திரா இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்தார்.

அவருக்கு நிர்வாகத்தில் தொழில் பழகுநர் பதவி கிடைத்தும் அவர் மறுத்துவிட்டார். விரைவில் இரயில்வே தொழிலாளர்களுடன் பணியாற்றத் தொடங்கினார். அந்த நாட்களில் இரயில்வே, பரோடா சமஸ்தான அரசில் ‘கெய்க்குவார் பரோடா ஸ்டேட் இரயில்வே’ (ஜிபிஎஸ் இரயில்வே) என்று வழங்கப்பட்டது. அங்கே தொழிற்சங்க அமைப்பைக் கட்டுவதில் பாலச்சந்திரா முக்கிய பங்காற்றினார். ரசூல் கான் பதான், ஹெச் ஆர் கோகலே (பின்னர் ஒன்றிய சட்ட அமைச்சரானவர்), போட்தார், சிமன்பாய் அம்பாலால் பட்டேல், ஜோஷி, சாந்தாராம் சப்னீஸ் முதலிய தலைவர்களோடு இணைந்து தொழிலாளர்களைத் திரட்டினார்.

அந்த காலத்தைக் குறிப்பிடும்போது பாலச்சந்திரா எழுதியுள்ளார், ‘அந்நாட்களில் மத வேறுபாடுகள் குறித்து மக்கள் பொருட்படுத்துவதில்லை.’ ரசூல் கான் ஜிபிஸ் இரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார். சில காலத்திற்குப் பிறகு பரோடா அரசில் ரசூல் கான் ‘உள்ளூர் திவானா’க நியமிக்கப்பட்டார். அப்படி நியமிக்கப்பட்டதும் அவர் செய்த முதல் பணி இரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோஷி உட்பட வேலைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களையும் மறுநியமனம் செய்ததுதான். கெய்க்குவார்டு ஆட்சி தொழிலாளர்களின் எல்லா கோரிக்கைகளையும் ஏற்றது.

மகாத்மா படுகொலையும் பரோடாவும்

1948 ஜனவரி 30 அன்று மகாத்மா காந்திஜி படுகொலை செய்யப்பட்டார். சுற்றிலும் கோபக்கனல் மூண்டது, மக்கள் கையறுநிலையில் சீற்றத்தோடு இருந்தார்கள். பாலச்சந்திரா இணைந்து பணியாற்றிய ‘முற்போக்கு இளைஞர் சங்கம்’ மிகப் பெரிய கண்டனப் பேரணியை நடத்தியது. விடுதலை அடைந்த பிறகும் பரோடா சமஸ்தானம் இந்திய ஒன்றியத்தோடு இணையாமல் தனித்து இருந்தது. மகாத்மா படுகொலையின் மீது வருத்தம் தெரிவித்து இயக்கம் நடத்துபவர்கள் மீது சமஸ்தான நிர்வாகம் அடக்குமுறை அணுகுமுறையை ஏவியது. போலீசார் கண்டனப் பேரணியை மகாராணி சாந்திதேவி டாக்கீஸ் அருகே தடுத்து நிறுத்த முயன்றனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது ஆர்எஸ்எஸ் ஆட்கள் தாக்குதல் நடத்தி கற்களை வீசித் தாக்கினர். உண்மையில் காந்திஜி படுகொலை செய்யப்பட்டதை ஆர்எஸ்எஸ் கும்பல் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டாடியது. பல பகுதிகளில் இனிப்புகள்கூட வழங்கி மகிழ்ந்தனர். பாலச்சந்திரா, மனுராவ், வசந்த் ஜோக்லேக்ர், சாந்தாராம் சப்னீஸ், கோகலே முதலிய எண்ணற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை மிக மோசமான இராணுவச் சிறைகளில் அடைத்தனர். மறுநாள் அவர்களை மத்திய சிறைக்கு மாற்றினர். சமூக விரோதச் செயல்பாடுகள் காரணமாகச் சில ஆர்எஸ்எஸ் ஆட்களையும்கூட கைதுசெய்யப்பட வேண்டி வந்தது. இராணுவச் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் நிலைக்கு மாறாக, இவர்களை வசதியான இடங்களில் தங்க வைத்தனர்.

தொழிற்சங்க இயக்த்தில் தீவிரமாக

பாலச்சந்திராவைச் சுருக்கமாக ‘பால்’ என்று அழைப்பார்கள் மேலும் சில நேரங்களில் எதிரிகளுக்கு அவர் ‘பாலா’ (ஈட்டி எனும் ஆயுதம்) ஆகிடுவார்!

அவர் விடுதலைக்கு முன்பு ஏற்கனவே ஏஐஆர்எஃப் (அனைத்திந்திய இரயில்வேமென் சம்மேளனம்) அமைப்பில் தீவிரமாக ஈடுப்ட்டிருந்தார். இரயில்வே தொழிலாளர்களின் தலைவர்களான ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் ஜோதி பாசுவுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. 1946 ஜனவரி 1ம் தேதி முதல் வேலைநிறுத்தத்திற்கு அந்தச் சம்மேளனம் அழைப்பு விடுத்தது. அதன் தயாரிப்புப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்ற அவர், நீண்ட பயணங்களை மேற்கொள்ள, பரோடா முதல் பாரூச் வரை சைக்கிளில்கூட பயணம் செய்தார்! பில்லிமாரா, நவ்சாரி உட்பட பல இடங்களில் அவர் கூட்டங்களில் உரையாற்றினார்.

ஏஐஆர்எஃப்-இன் அகில இந்திய மாநாடு 1947 ஜூன் 6, 7 இரு தினங்கள் கோரக்பூரில் நடந்தது. அதில் பாலச்சந்திரா குஜராத் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டார்; ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைவராகவும், ஜோதிபாசு துணைத் தலைவர்களில் ஒருவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏஐஆர்எஃப் 1947 ஜூன் 27ம் தினத்தை ‘இரயில்வே தொழிலாளர்கள் நாள்’ என அனுசரிப்பது  என முடிவெடுத்தது. பாலச்சந்திரா அவ்வியக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தார்.

ஜிபிஎஸ் இரயில்வேமென் சங்கத்தை அமைப்பதில் பாலச்சந்திர திரிவேதி முக்கிய காரணியாக இருந்தார். 1947ல் அச்சங்கத்தில் 1000 உறுப்பினர்கள் இருந்தனர். பாலச்சந்திரா அந்த முழுப் பகுதிகளிலும் சுற்றித் திரிந்து சங்கம் கட்டி, பெருந்திரள் இயக்கங்களுக்குத் தயார் செய்தார். அன்றைய நாட்களில் சுலபமாகச் சென்றுவர போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் அவர் கார்பா, பாஜ்வா, கராச்சியா, உன்தேஷ் மற்றும் பல கிராமங்களுக்கும் சென்றார். பல நேரங்களில், இரவுப் பொழுதுகளிலும், பாம்புகளும் தேள்களும் சாதாரணமாக அதிகமாக இருக்கும் பகுதிகளின் ஊடாகப் பயணம் செய்வார். சைக்கிள்தான் வாகனம்.

சித்தாபூர், பில்லிமாராவில் 1945ல் 22 மைல்கள் ஒரு மாதம் நீடித்த வேலைநிறுத்தத்தை அவர் தலைமையேற்று நடத்தினார். தொழிலாளர்கள் போராட்ட இயக்க வரலாற்றில் பரோடா சமஸ்தானத்தில் அந்த வேலைநிறுத்தம் ஒரு மைல்கல்.

குஜராத் வட்டாரத் தொழிற்சங்கக் குழுவின் மூன்றாவது மாநாடு 1945 மே மாதம் அகமதாபாத்தில் நடைபெற்றது. 19 சங்கங்களிலிருந்து சுமார் 80 பிரதிநிதிகள் பங்கேற்றனர். டெக்ஸ்டைல் தொழிலில் ஒப்பந்தத் தொழிலாளர் முறைக்கு முடிவு கட்டவும்; பிரிட்டீஷ் இந்தியாவில் உள்ளது போல தொழிலாளர் மற்றும் தொழிற்சாலை சட்டங்களைப் பரோடா சமஸ்தானத்தில் அறிமுகப்படுத்தவும்; கூலி மற்றும் ஊதியத்தை 33% அதிகரித்து வாழத் தக்க குறைந்த பட்ச வாழ்க்கை ஊதியத்தை வழங்கவும் தீர்மானங்கள் மற்றும் பிற ஆவணங்கள் வழியாக மாநாடு கோரிக்கைகளை நிறைவேற்றியது. இம்முயற்சிகளிலும் இயக்கங்களிலும் முன்னே நின்றார்  பாலச்சந்திரா.

1950 வாக்கில் பரோடா மற்றும் இரயில்வே இந்தியாவின் ஒரு பகுதியாக இணைந்தன.

தலைமறைவு வாழ்வு காலம்

            (பிடிஆர் காலத்தில்) 1948ல் தலைமறைவாகச் சென்ற பாலச்சந்திரா திரிவேதி 1951 வரை தலைமறைவாகவே இருந்தார். 1951ல் அவர் வெளியே வந்தபோது தொழிலாளர்கள் அவரை அன்போடு வரவேற்றார்கள். தலைமறைவின்போது அவர் ‘டேவிட்’ என்ற பெயரில், குறிப்பாகக் கிருஸ்துவர்கள் மத்தியில் சுற்றி வந்தார். டேவிட் பாய் (சகோதரர் டேவிட்) என்று பிரபலமானார். அவர் ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டது மட்டுமல்ல, கழுத்தில் சிலுவையும் அணிந்தார். ஏழைத் தொழிலாளர்கள் அதிகமாக நெருக்கமாய்க் குடியிருக்கும் (பஸ்தி) பகுதிகளில் தங்கள் தோற்றங்களை மாற்றிக் கொண்டு அவரும் சந்திரகாந்த்தும் வாழ்ந்தனர். ரயில்வே கார்டு மனுபாய் தேவ் என்பவரது உதவியைப் பெற்று வசந்த் ஜோக்லேக்கர் தப்புவதற்கு உதவினர். அடையாளம் காணமுடியாதபடி பாலச்சந்திராவும் ஜோக்லேக்கரும் கார்டின் வண்டியிலேயே தங்கி இருந்தனர்.

            பாலச்சந்திரா மேலும் அலம்பிக் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஹூயூம் பைப் தொழிலாளர்கள் சங்கம் அமைத்தார். இந்தச் சங்கங்கள் நடத்திய நெடிய போராட்டங்கள் தொழிற்சங்க வரலாற்றில் இடம் பெற்றன.

திருமண வாழ்வு

            1961ல் தாத்ரேயா அம்ரித் ராவ் பெட்டிவாலே என்ற பரோடா சமஸ்தானத்தின் ஜெயிலரின் மகளைப் பாலச்சந்திர திரிவேதி திருமணம் செய்தார். மனைவி பெயர் சுசீலா. அவர் கம்யூனிச இயக்கத்தில் தீவிரமாக இருந்தவர். அவரது தந்தையார் மகள் ஒரு கம்யூனிஸ்ட்டைத் திருமணம் செய்து கொள்வதைக் கடுமையாக எதிர்த்தார். இருப்பினும் சுசீலா தன் முடிவில் உறுதியாக இருந்து பாலச்சந்திராவைத் திருமணம் செய்து கொண்டார்.

மகாகுஜராத் இயக்கத்தில் பங்கேற்பு

            பாலச்சந்திர திரிவேதி புகழ்பெற்ற மகாகுஜராத் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். அந்த இயக்கம் நடந்த அதே நேரத்தில் 1960களில் சம்யுக்த மகாராஷ்ட்டிரா இயக்கமும் நடந்தது. (அன்றைய மராட்டியத்தை மராத்தி, குஜராத்தி மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்க மக்கள் நடத்திய போராட்டம்.)  இந்த இயக்கம் இந்துலால் யக்னிக் மற்றும் முன்னணித் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. இரண்டாவது அணி சத்யாகிரகிகள் படைக்குப் பாலச்சந்திர திரிவேதி தலைமை வகித்தார். கைதான பிறகு அவர் சிறையிலிருந்து தப்பினார்.

கட்சியில் வகித்த பொறுப்புகள்

            இதன் மத்தியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் குஜராத் மாநிலக் குழுவின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாலச்சந்திரா நீண்ட காலம் அப்பொறுப்பில் இருந்தார். 1923—54ல் மதுரையில் நடைபெற்ற மூன்றாவது கட்சி காங்கிரஸில் கலந்து கொண்டார். 1964 கட்சிப் பிளவுக்குப் பிறகு அவர் சிபிஐ கட்சியில் நீடித்தார். அவர் கொச்சின் (1971), விஜயவாடா(1974), படின்டா (1978) மற்றும் வாரணாசி (1983) கட்சி காங்கிரஸ் மாநாடுகளில் கலந்து கொண்டார். 1978ல் கட்சி தேசியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல வெற்றிகரமான மக்கள் இயக்கங்களில் குஜராத் மாநிலக் கட்சியை வழி நடத்தினார்.

            சோவியத் யூனியன், கிழக்கு ஜெர்மனி, கியூபா, நேபாளம், அங்கேரி, ஸ்வீசர்லாந்து முதலான பல நாடுகளில் பாலச்சந்திர திரிவேதி பயணம் செய்தார்.

வேலைநிறுத்தங்களில்

            லாக்-அவுட் கதவடைப்பை எதிர்த்துக் குஜராத் டிராக்டர் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைப் பாலச்சந்திரா தலைமையேற்று நடத்தினார். நவீனோ பேட்டரீஸ் வேலைநிறுத்தத்தை வழிநடத்தினார். மகர்புராவில் இரண்டு தருணங்களில் பந்த் அனுசரித்தது. இந்துஸ்தான் பிரௌன் போவெரி (ஹெச்பிபி) ஆலையின் தலைவராக அனைவராலும் பாலச்சந்திரா ஏற்றுக் கொள்ளப்பட்டார். இஇசி-யில் ஐஎன்டியுசி தோல்வி அடைந்த பின், தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை அவர் ஏஐடியுசி தலைமையின் கீழ் நடத்தினார். சபர்மதி மெஷினரியில் 1981ல் 7நாட்கள் வேலைநிறுத்தத்தை நடத்தினார். பிறகு அவர் 15 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அதற்கு ஆதரவாக பரோடா பந்த் நடத்தப்பட்டது. ஸ்டார் ஸ்டீல் ஆலையில் லாக்-அவுட்டை எதிர்த்துப் போராடினார்.

அதிகாரபூர்வ அமைப்புகளில்

            குஜராத் மாநில தொழிலாளர் ஆலோசனைக் குழு, தொழிற்சாலை கன்சல்டேட்டிவ் அமைப்பு போன்ற பல்வேறு அதிகாரபூர்வ குழுக்களில் உறுப்பினராகவும்; என்ஜினியரிங் தொழிற்சாலைகளில் குறைந்த பட்ச ஊதியத்திற்கான முத்தரப்புக் குழு உறுப்பினர், குஜராத் பிராவிடெண்ட் பண்டு உறுப்பினர் என பல பொறுப்புகளில் பாலச்சந்திரா பங்கு வகித்தார். வோர்ல்டு மார்க்ஸிஸ்ட் ரெவியு இதழின் குஜராத் மொழி பதிப்பை ஆசிரியராக இருந்து வெளியிட்டார். நவி துனியா (புதிய உலகம்), ஷ்ரம் யுக் (தொழிலாளர் யுகம்) போன்ற இதழ்களோடும் தொடர்பில் இருந்து பணியாற்றினார். இஸ்கஸ் (இந்திய சோவியத் நட்புறவுக் கழகம்) அமைப்பின் துணைத் தலைவராக இருந்தார். அகில இந்திய வானொலியிலும், மாஸ்கோ வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் உரையாற்றியுள்ளார். (WFTU) உலக தொழிற்சங்கச் சம்மேளனத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்து பணியாற்றினார்.

            பாலச்சந்திர திரிவேதி 1992 செப்டம்பர் 23ல் இயற்கை எய்தினார்.

            குஜராத்தின் ஆக்கபூர்வமான தொழிற்சங்கத் தலைவர் நினைவைப் போற்றுவோம்!

-- தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

 

No comments:

Post a Comment