Saturday 14 August 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 47 -- மௌலானா ஹஸ்ரத் மொஹானி

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :                      

சில சித்திரத் சிதறல்கள் - 47


மௌலானா ஹஸ்ரத் மொஹானி : சிபிஐ கட்சி நிறுவிய தலைவர்களில் ஒருவர்


--அனில் ரஜீம்வாலே

--நியூ ஏஜ் ஆகஸ்ட் 01 – 07

          மௌலானா ஹஸ்ரத் மொஹானி மிகவும் வித்தியாசமான, பன்முக ஆற்றலுடைய ஆளுமை; ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ முழக்க உருவாக்கத்தில் தொடர்புடையவர்; காங்கிரஸ் மாநாட்டில் முதன் முறையாக முழு சுதந்திரம் கோரிக்கையை முன்மொழிந்தவர்.

            மௌலானா ஹஸ்ரத் மொஹானி உத்தரப்பிரதேச ஐக்கிய மாகாணத்தின் உனாவ் மாவட்ட மொஹான் என்ற கிராமத்தில் சையத் ஃபஸ்ல் உல் ஹசனாக 1875ம் ஆண்டு ஜனவரி 1தேதி பிறந்தார். வரலாற்றில் அவர் பிறந்த தேதி குறித்த சில குழப்பம் உள்ளது. மொஹானி பகுதியில் நிலவிய கல்வி கேள்விகளில் சிறந்த அறிவார்ந்த சூழலின் காரணமாக அப்பகுதியை உ.பி.யின் ‘கிரேக்கம்’ (கிரீஸ்) எனக் கருதப்பட்டது. மௌலானா குடும்பத்தின் பெண்களும்கூட கற்றவர்களாக, நுட்பமான இலக்கிய நுகர்வில் சுவை உடையவர்களாக இருந்தார்கள். கல்வி, இலக்கிய விருப்பம் மட்டுமின்றி இந்திய மறுமலர்ச்சியின் செல்வாக்கும் அங்கு இருந்தது. 1875ல்தான் சர் சையத் அகமத் ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்க, அதுவே ‘அலிகார் இயக்க’த்தின் தொடக்கமாயிற்று.

            ஹஸ்ரத் மௌஹானியின் முன்னோர்கள் இரான் நிஷாபூர் பகுதியிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள்.  

            கிராமத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றவர், மொஹான் நகரின் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் ஃபதேபூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் சேர்க்கப்பட்டார்.

            இக்காலத்தில்தான் அவர் உருது கவிதைகளில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு தனக்கு ‘ஹஸ்ரத் மொஹானி’ என்ற புனைப் பெயரைச் சூட்டிக்கொண்டார். ஹஸ்ரத் புனைப்பெயரின் (பொருள் ‘விழைவு’, ‘விருப்பம்’) பின்னொட்டாக வரும் மொஹானி  அவரது பிறந்த இடமான மொஹானியைக் குறிக்கிறது. புகழ்பெற்ற கஸல் பாடலான ‘சுப்கே சுப்கே ராத் தின்’ (‘பகலும் இரவும் இரகசியமாக நான் மெல்ல அழுது கரைவது இன்னும் என் நினைவில்’) அவர் எழுதிய காதல் கவிதையாகும். (பல புகழ்பெற்ற பாடகர்கள் பாக்கிஸ்தானின் குலாம் அலி, இந்தியப் பாடகர் ஆஷா போஸ்லே, கஸல் பாடகர் ஜக்ஜித் சிங் முதலானோர் தங்கள் குரல்களில் பாடியுள்ளனர். சினிமாவிலும் இடம் பெற்றுள்ளது). இதே கால கட்டத்தில் மாணவர் இயக்கச் செயல்பாடுகளில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

            படிப்பில் புத்திசாலி மாணவரான அவர் இரண்டு நுழைவுத் தேர்வுகளை இரண்டு இடங்களில் எழுதி இரண்டிலும் முதலாவதாக வந்தார். அலிகாரைச் சேர்ந்த சர் ஜியாவுதீன், அலிகார் கல்வி நிறுவன கெஜட்டில் அவரது சாதனைகளைப் பார்த்து, ஹஸ்ரத்தை உடனடியாக அலிகார் விரையும்படி கூற, அங்கே மொகம்மதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி (MAO)யில் அனுமதிக்கப்பட்டார். அக்கல்லூரி பின்னாட்களில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகமாயிற்று.

‘உருது-இ-மௌலா’

           இது அவர் லக்னோவிலிருந்து தொடங்கிய உருது பத்திரிக்கை; இந்த இதழ் அவரது வாழ்விலும், விடுதலை இயக்கத்திலும் முக்கிய பங்கு வகித்தது. (ஷாஜஹான் ஆட்சி காலத்தில் ‘உருது-இ-மௌலா’ என்ற துருக்கிய வார்த்தையான உருது, ஷாஜஹான்பூர் (டெல்லி) பகுதி மக்கள் பேசிய மொழியைக் குறித்தது. எனவே உருதுமொழி பத்திரிக்கை). அலிகாரில் படிப்பை முடித்த பிறகு சட்டத் தொழிலைப் பயிற்சி செய்ய அவர் முயன்றாலும் பிரிட்டீஷ் அரசு அதை அனுமதிக்கவில்லை. எனவே தன் வாழ்க்கை வருமானத்திற்காக இந்த இதழைத் தொடங்கினார். சிறிய அச்சுக்கூடத்தை நிறுவி மரத்தால் செய்யப்பட்ட அழுத்தும் உருளைகளை (பலகைகளை) அவரும் அவருடைய மனைவியுமாக காகிதங்களை வைத்து அச்சடித்து இயக்குவார்கள். அந்தப் பத்திரிக்கையில் பிரிட்டீஷ் அரசின் துருக்கி மற்றும் பிற கொள்கைகளை விமர்சனம் செய்து கட்டுரைகள் வெளியிட்டதற்காக அவரைத் தண்டிக்க வேண்டி அச்சுக் கூடத்தை அதிகாரிகள் நாசப்படுத்தினார்கள்.

            அந்த இதழில் சோஷலிசத்தை ஆதரித்துப் பல கட்டுரைகளை அவர் எழுதினார்; அதன் தலைப்புகளாவன : சோஷலிசம் என்ன விரும்புகிறது?, ரஷ்யாவின் புதிய தலைமுறையின் வளர்ச்சி, பண்டித நேருவும் சோஷலிசமும் முதலியன. சில மத குருமார்கள் மற்றும் மௌலானாக்கள் சோஷலிசத்தைப் பற்றிக் கேட்கவே விரும்பாதபோது, மௌலானா ஹஸ்ரத் ‘மிக வெளிப்படையாகத் தன்னை ஒரு ‘முஸ்லீம் கம்யூனிஸ்ட்’ என அழைத்துக் கொண்டார் என பாக்கிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான சையத் சிப்தே ஹசன் 1970ல் எழுதியுள்ளார். சிப்தே மேலும் எழுதும்போது, “இந்த இயக்கப் போராளி தனது நடவடிக்கைகளை ஒருபோதும் லாப-நஷ்டம் என்ற தராசில் வைத்துப் பார்த்ததே இல்லை… அவருக்குச் சொந்தமாக ஒரு வீடோ, காரோ ஏன் தொழிற்சாலைகளில் பங்கோ வைத்துக் கொண்டதில்லை… அவருடைய பையில் தம்படி காசில்லாமல் காலியாக இருக்கும், இதயமோ தாராள குணத்தால் நிரம்பி இருக்கும்.”  

காங்கிரஸ் இயக்கத்தில்

            1899ல் மெக்ரிக் தேர்வை முதல் வகுப்பில் தேறியதும், ஹஸ்ரத் கிளர்ந்தெழுந்த தேசிய இயக்க உணர்வில் அடித்துச் செல்லப்பட்டார். தேசியவாத மற்றும் சுதந்திரப் போராட்ட முழக்கங்களை எழுப்பியதற்காக அவர் எம்ஓஏ கல்லூரியிலிருந்து மூன்று முறை துரத்தி வீசப்பட்டார். அவரை அறிந்த எவரும் அவர் விடுதலை மற்றும் சுதந்திர தாகத்தால் பித்துப் பிடித்திருந்தார் என்றே கூறுவர். அதனையும் மீறி எப்படியோ பிஏ பட்டப்படிப்பை முடித்தார்.

            பாலகங்காதர திலகரால் ஆதர்சம் பெற்ற அவர் அவரையே தனது ‘குரு’வாகக் கருதினார். திலகரின் அறிவுரையின்படியே 1904ல் அவர் காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸ் இயக்கத்தின் புகழ்பெற்ற (1907) சூரத் மாநாட்டில் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்; மிதவாதிகளான கோபால கிருஷ்ண கோகலே, மோதிலால் நேரு முதலிய மிதவாதத் தலைவர்களை எதிர்த்துத் திலகரோடு இணைந்து போராடினார். திலகர், லாலா லஜபதி ராய் மற்றும் அரவிந்த கோஷ் உடன் இருந்த அவர் திலகரோடு காங்கிரஸைவிட்டு வெளியேறினார்.

            மௌலானா சுதேசித் தலைவராகி, அயல்நாட்டுத் துணிகளைப் புறக்கணிக்கும் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டார். அவர் மிகவும் மோசமான பொருளாதார நிலையில் இருந்தார். அலிகாரில் சுதேசி கிளாஃபத் கிளாத் ஸ்டோர் ஒன்றை ரஸ்ஸல் தெருவில் ஹஸ்ரத் ஆரம்பித்தார். மௌலானா சிப்லி நோமணி சிபார்சு செய்ய பம்பாயின் வியாபாரியான சர் ஃபஸூல்பாய் கரீம்பாய் அவருக்கு வியாபாரம் செய்வதற்கான பொருள்களைக் கடனுக்கு வழங்கினார். ஹஸ்ரத்தும் அவரது மனைவி நிஷாதுன்னிஸா அங்கே உட்கார்ந்து துணி வியாபாரம் செய்தபடி சுதேசி செய்திகளையும் பிரச்சாரம் செய்தனர். உண்மையில் இந்தக் கடையை அவர் காந்திஜியின் ‘யங் இந்தியா’ இதழுக்கு ஆதரவாகவே தொடங்கினார். (‘கிளாஃபத்’ என்ற சொல்லுக்கு நேரடியான பொருள் ‘கலிபா’ எனினும் அதன் விரிந்த பொருள் ‘வாரிசு’ என்பதாகும். அதாவது குறிப்பாக, இறைத்தூதர் மறைவுக்குப் பிறகு, இஸ்லாமிய சமூகத்தின் தலைமை என்பதாகும்.)

            சுதேசி இயக்கத்திற்கு ஆதரவாக அவர் ‘உருது-இ-மோல்லா’ என்ற இதழை எழுதி வெளியிட்டார். அந்த இதழில் ‘எகிப்திய தேசபக்தர், முஸ்தஃபா கமால் இறப்பு மீதான’ பிரிட்டிஷ் அரசின் கொள்கையை எதிர்த்து மிகக் காட்டமான விமர்சனக் கட்டுரை –எழுதியவர் பெயர் இல்லாமல் – 1908ல் வெளிவந்தது. பிரிட்டீஷ் அரசு கடும் சீற்றம் அடைந்தது. அந்தக் கட்டுரையை இக்பால் ஷுகைல் என்ற அழம்கார்க் பகுதியின் வழக்கறிஞரான தேசியத் தலைவர் எழுதி இருந்தார். ஆனால் ஹஸ்ரத் அதைத் தான் எழுதியதாகப் பொறுப்பேற்க அவர் மீது ராஜ துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இரண்டாண்டுகள் கடுங்காவல் தணைடனையும் 500 ரூபாய் அபராதக் கட்டணமும் விதிக்கப்பட்டார்.

            சிறையில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களைப் பற்றி எழுதினார். அவர் கைது செய்யப்பட்டபோது அவரது கைக்குழந்தையான மகள் நீமா மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். ஆனால் பேகம் நிஷாதுன்னிஸா வீட்டு நிலைமை குறித்துக் கவலைப்பட வேண்டாம் என அவருக்குக் கடிதம் எழுதினார்.

           

நிஷாதுன்னிஸா அம்மையார் எஃகு போன்ற உறுதி கொண்ட நெஞ்சினர். முகத்தை மூடும் பர்தா முகத்திரைசீலையையும் உடம்பையும் தலையையும் முழுமையாக மூடும் புர்க்கா ஆடை அணிவதையும் கைவிட்டவர் (பொதுவாக இவ்வழக்கம் முஸ்லீம் பெண்களைத் தங்கள் வீட்டிற்கு வெளியே அவளது தனிப்பட்ட மற்றும் சமூக, பொருளாதாரச் செயல்பாடுகளில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவதாகும்); ஆனால் அவரோ மிக வெளிப்படையாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்; அனைத்திந்திய பெண்கள் மாநாட்டின் தலைவராகவும் பெரெய்லி உட்பட பல இடங்களில் பெண்களைத் திரட்டியும் காங்கிரஸ் மாநாடுகளில் பங்கேற்றும் செயல்பட்டவர். அதனை 1921ல் காந்திஜி ‘யங் இந்தியா’ பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டு எழுதினார்.

            சிறையில் இருந்த காலம் முழுவதும் தினமும் ஒரு மணங்கு கோதுமையை மாவாக அரைக்கும்படி ஹஸ்ரத் கட்டாயப்படுத்தப்பட்டார். எதார்த்தத்தில் அவருக்கு ஒரு வசதியும் இல்லை. அவருடைய எல்லா புத்தகங்களும் எரிக்கப்பட்டன. அபராதத் தொகையை வசூலிக்க அலிகாரில் அவரது பெரிய நூலகத்தின் நூல்கள் அனைத்தும் வண்டி வண்டியாக விற்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டன. வெள்ளைஇன கைதிகளுக்குக் குளியலறை இணைக்கப்பட்ட வசதியான அறைகள் கொடுக்கப்பட்டன, ஆனால் இந்தியக் கைதிகள் அவர்களுக்குச் சேவை செய்ய வேலைக்காரர்களாகப் பயன்படுத்தப்பட்டனர்.

           
1910ல் அவர் விடுதலையானார். 1911ல் திரிபோலி யுத்தம் ஆரம்பித்து, இத்தாலி ஆக்கிரமிக்கப்பட்டது. அதனை எதிர்த்த ஹஸ்ரத்
‘சிகப்புப் பிறை’ (ரெட் கிரசண்ட்) இயக்கத்தில் இணைந்தார். 1913ல் அவருடைய அச்சுக்கூடம் பறிமுதல் செய்யப்பட்டது. மௌலானாவும் பேகமும் ஒரு நாளைக்கு முழுவதாக இரண்டு வேளை உணவுகூட இன்றிச் சிரமப்பட்டனர். அவர்களின் நிலையைப் பற்றி ‘அல்-ஹிலால்’ இதழில் எழுதிய மௌலானா ஆஸாத் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “…ஆனால் அவர்கள் விடுதலை என்ற மதுவை மாந்தி, உண்மை என்ற சாஸ்வதமான இசையில் தங்களைத் தொலைத்து ஆசிர்வதிக்கப்பட்ட பெருமகிழ்ச்சியில் திளைத்தனர்…”

            1915ம் ஆண்டு காபூலில் ராஜா மகேந்திர பிரதாப்  அதிபராகவும் ஒபைதுல்லா சிந்தி பிரதமராகவும் கொண்ட புரொவிஷனல் இந்திய அரசு அமைக்கப்பட்டது. அந்நிகழ்வை ஹஸ்ரத் வாழ்த்தினார்; ஒபைதுல்லா ஹஸ்ரத்திடம் அவரது மிகச் சிறந்த ஆற்றலைக் கொண்டு தங்களுக்கு உதவுமாறு வேண்டினார். விரைவில் ஹஸ்ரத் கைது செய்யப்பட்டு லலித்பூரிலிருந்து ஜான்ஸி, பின்னர் பிரதாப்கார்க், லக்னோ, ஃபைசாபாத் மற்றும் மீரட் என்று சிறைகளுக்கு மாற்றப்பட்டார். 1918 மே 22ல்  அவர் விடுதலையானார்.

            விடுதலையானதும் மௌலானா முஸ்லீம் லீக் கூட்ட அமர்வுகளில் கலந்து கொண்டது மட்டுமின்றி ஒரு கூட்டத் தொடரைத் தலைமை தாங்கவும் செய்தார். ஆனால் அவர்களோடு அவரால் இணங்கிச் செல்ல இயலவில்லை. முழு விடுதலை கோரிக்கையை வலியுறுத்தினார்.

            1920ல் பேகமும் மௌலானா ஹஸ்ரத்தும் கான்பூருக்கு மாறினர். ஒரு தூதுக்குழுவாகச் சென்றபோது வைஸ்ராயுடன் கைகுலுக்க மறுத்தவர், அதனைத் தவிர்க்க மெல்ல நழுவிவிட்டார்.

காங்கிரஸ் மாநாட்டில் பூரணச் சுதந்திரத் தீர்மானம்

            1921ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஹஸ்ரத் மொஹானியும் நிஷாதுன்னிஸாவும் கலந்து கொண்டனர். பேகம் ஓர் செயற்குழு உறுப்பினர். சரித்திரப் புகழ் வாய்ந்த பூரணச் சுதந்திரம் தீர்மானத்தை ஹஸ்ரத் மொஹானி முன்மொழிந்தார். எதிர்காலத்தில் கம்யூனிஸ்ட்டாக விளங்கிய சுவாமி குமாரானந்த்தும் இணைந்து கொண்டார். இந்நிகழ்வின்போது அங்கிருந்த சையத் சுலிமான் நித்வி எழுதுகிறார்: ‘திடீரென்று இரண்டு தொண்டர்கள் காந்திஜியிடம் ஓடி வந்தவர்கள் அவரிடம் மொஹானி பொருளாய்வுக் குழுவில் தீர்மானத்தைக் கொண்டு வந்து பிடிவாதமாக இருக்கிறார்’ என்று கூறினார்கள். காந்திஜி கூட்ட அரங்கிற்கு விரைந்தார். இணங்க மறுத்த மௌலானா பொது அரங்கில் பூரணச் சுதந்திரம் கோரிக்கையைக் கொண்டு வந்தார். (காந்திஜி முதலானவர்கள் தீர்மானத்தை ஆதரிக்காத நிலையில்) இயல்பாகவே தீர்மானம் அகமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் இறுதியில் காங்கிரஸே பூரணச் சுதந்திரக் கோரிக்கை நோக்கத்தை 1929ல் நிறைவேற்றியது.

            


அகமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் (1925 கக்கோரி சதி வழக்கில் சம்பந்தப்பட்ட  புரட்சியாளர், உருது மற்றும் இந்தி தேசபக்தி 
கவிதைகளை எழுதிய கவிஞர், ஆர்யசமாஜ ஈடுபாடு உடையவரும் புரட்சிகர இந்துஸ்தான் ரிபப்ளிக் அஸோசியேஷன் அமைப்பை  நிறுவியவர்களில் ஒருவரும் 1927 டிசம்பர் 19ல் தூக்கிலிடப்பட்டவருமான) ராம் பிரஸாத் பிஸ்மில் மற்றும் அஷ்வகுல்லா கலந்து கொண்டனர்.


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு மாநாடு, 1925

            ரஷ்யப் புரட்சியின் செல்வாக்கால் ஹஸ்ரத் மொஹானி பெரிதும் ஈர்க்கப்பட்டார். கான்பூரில் இருந்த அவருடைய வீடுதான் 1925 டிசம்பரில் நடந்த முதலாவது கம்யூனிஸ்ட் மாநாட்டிற்கான தயாரிப்புப் பணிகளின் மையமாக விளங்கியது. கேஎன் ஜோக்லேக்கர் தனது நினைவோடை நூலில் எழுதுகிறார்: “விஹெச் ஜோஷி மூலம் பம்பாய் குழுவும் அவரும் கான்பூர் சிறையில் இருந்த டாங்கே அவர்களைச் சந்திக்க இருப்பதாகவும், மேலும் சத்யபக்தா, ஹஸ்ரத் மொஹானி மற்றும் சிலர் 1925 டிசம்பரில் கம்யூனிஸ்ட் மாநாடு ஒன்றைக் கூட்டயிருப்பதான தகவலை அறிய வந்தது. பம்பாய் குழு தனது ஆதரவை வழங்கியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

            மாநாட்டு வரவேற்புக்குழுவின் தலைவராக ஹஸ்ரத் மொஹானி தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் பந்தலுக்கு வெளியே பந்தல் அமைக்க அவர் உதவினார். (அப்போது அந்நகரில் காங்கிரஸ் மாநாடும் நடைபெற்று வந்தது). வரவேற்புக் குழுவின் உறுப்பினர் கட்டணம் ரூ5/-. சிறிது நிதி சேர்க்கப்பட்டது, மொஹானி நிதி திரட்ட தன்னால் ஆனப் பணிகளைச் செய்தார். சுமார் 300பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பேகமும் ஹஸ்ரத் மொஹானி இருவரும் தொழிலாளர்கள் பேரணியின் முன்னே பங்கேற்றபடி காங்கிரஸ் பந்தலுக்குள் நுழைந்தனர்.

            வரவேற்புக் குழுவின் தலைவராக உரையாற்றிய ஹஸ்ரத் மொஹானி கூறினார்: “கம்யூனிஸ்ட் இயக்கம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் இயக்கம். அந்த இயக்கத்தின் தத்துவம், கொள்கைகள், நோக்கம் மற்றும் குறிக்கோளுடன் இந்திய மக்கள் பொதுவாக உடன்பட்டு ஏற்கின்றனர்…சில பலகீனமானவர்களும் பயந்த சுபாவம் உள்ளவர்களும்தான் கம்யூனிசம் என்ற பெயரைக் கேட்டாலே அச்சமடைகின்றனர். ஆனால் அப்படி அவர்கள் அச்சமடைவதற்கான தவறான புரிதல்கள் ஒரு நோக்கத்தோடு முதலாளித்துவவாதிகளால் வேண்டுமென்று ஏற்படுத்தப்படுவதாகும்.”

            கம்யூனிஸ்ட்கள் அன்னிய தேசங்களுக்கு விஸ்வாசமானவர்கள் என்ற குற்றச்சாட்டைப் பலமாக மறுத்த ஹஸ்ரத் மொஹானி கூறினார்: “எங்களுடைய அமைப்பு சுத்தமாய் இந்தியத் தன்மை உடையது…பிற தேசங்களில் உள்ள இதே போன்ற கட்சிகளுடான எங்கள் உறவு பொதுவாக இந்த எல்லா மனநிலைக்கும் ஒத்த உடன்பாடும் பரிவுணர்வு ஆதரவும் குறிப்பாக மூன்றாவது அகிலத்துடன் கொண்டது. நாங்கள் அவர்களுடன் ஒன்றாய் பயணிக்கும் பயணிகள் மட்டுமே…நாங்கள் அவர்களுடைய அடிமைகள் அல்ல.”

            இயக்கத்தின் இலட்சியத்தையும் நோக்கத்தையும் அவர் பின்வருமாறு விளக்கினார்:

            “சாத்தியமான அனைத்துச் சரியான வழிமுறைகளில் சுயராஜ்ஜியத்தை அல்லது பூரண விடுதலையை நிறுவுவது…”

            “…விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் அனைத்து வகையிலும் பணியாற்றுவது; இதற்காக இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளோடு –மேலே குறிப்பிட்ட நோக்கங்களை மேம்படுத்த அவர்கள் எந்த அளவு உதவுவார்களோ அந்த அளவு – அவர்களோடு ஒத்துழைப்பது”.

            “கம்யூனிசத் தத்துவங்களைப் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்வது…”

            “மதங்களைப் பொருத்த அளவு மிகத் தீவிரமான சகிப்புத்தன்மையில் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.” இஸ்லாம் முதலாளித்துவத்திற்கு எதிரானது என எப்போதும் ஹஸ்ரத் சொல்வது வழக்கம். மேலும் “ரஷ்ய வார்த்தையான ‘சோவியத்’ என்பது உண்மையில் அரபு மொழியில் சமத்துவம் எனப் பொருள்படும் ‘சோவியத்’ என்ற வார்த்தையே” என அவர் வலியுறுத்துவதும் வழக்கம்.

            “கம்யூனிசம் மதத்திற்கு எதிரானது என சிலர் பழி தூற்றுகின்றனர். உண்மையில் மத விஷயங்களைப் பொருத்த அளவு சாத்தியமான விரிந்த இடத்தையும் சகிப்புத் தன்மையையும் நாங்கள் அனுமதிக்கிறோம். எங்கள் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்கள் யாராயினும் அவர்களைக் கட்சியில் உறுப்பினராக ஏற்கிறோம் – அவர் ஒரு முஸ்லீமாக, இந்துவாக, கிருஸ்துவராக, பௌத்தராக அல்லது யாராயினும், மத நம்பிக்கையுடனோ அல்லது நம்பிக்கை இல்லாமலோ இருந்தாலும் சரி”, (அவர்கள் கட்சியின் கோட்பாடுகளை ஏற்பவர்களாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்).

            “கம்யூனிசம் இஸ்லாமுக்கு எதிரானது என ஆதாரமில்லாமல் நமது சில முஸ்லீம் தலைவர்கள் கம்யூனிசத்தைச் சித்தரிக்கின்றனர். ஆனால் உண்மை இதற்கு முற்றிலும் மாறானது.”

            ஹஸ்ரத் மொஹானி மேலும் தெளிவாக விளக்குகிறார். “கம்யூனிசம் தனிநபருக்கு எதிராகக் குறிவைத்ததல்ல, ஆனால் தனிச் சொத்துடைமைக்கு எதிரானது.”

            கான்பூர் மாநாட்டில் ஹஸ்ரத் மொஹானி கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1927ல் விரிவுபடுத்தப்பட்ட கூட்டத்தில் அவர் மீண்டும் தேர்வாகி மத்திய செயற்குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

            தொடர்ந்த சில ஆண்டுகளில் ஹஸ்ரத் மொஹானிக்குக் கட்சியுடன் சில தத்துவார்த்த மற்றும் நடைமுறை முரண்பாடுகள் வளர அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு குழுவாகச் செயல்பட்டதுடன், முஸ்லீம் லீக் கட்சிக்குள் குழுவாகச் செயல்பட அவர் வற்புறுத்தினார். கட்சி அந்த யோசனைக்குச் சம்மதிக்கவில்லை. ஆனால் லீக் கட்சிக்குள்ளும் அவரால் இயல்பாக இருக்க இயலவில்லை; அவர் இரண்டு தேசக் கொள்கையோடு முரண்பட்டார். ஒன்றுபட்ட தேசம் பிளக்கப்படுவதை அவர் உறுதியாக எதிர்த்தார். லீக் தலைமையுடன் அவருக்குத் தீவிரமாக முரண்பாடுகள் முற்றின. சொந்தமாக அவர் தனியே ‘ஆஸாத் கட்சி’யை அமைத்தார்.

            பின்னர் 1936 லக்னோவில் ‘முற்போக்கு எழுத்தாளர்கள் கூட்டமைப்பு’ (PWA) முதலாவது அமைப்புநிலை மாநாட்டில் ஹஸ்ரத் மொஹானி கலந்து கொண்டார்.

            அவர் எப்போதுமே புகைவண்டியில் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்வார்; ஏன் அப்படி என அவரிடம் வினவியபோது அவர் கூறிய பதிலாவது: ‘ஏனெனில், நான்காம் வகுப்பொன்று இல்லையே!’

இந்து – முஸ்லீம் ஒற்றுமை

            ஹஸ்ரத் மொஹானி இந்து – முஸ்லீம் ஒற்றுமையின் மிகப் பெரிய ஆதரவாளர், அதை மேம்படுத்தும் செயற்பாட்டாளர். அவர் ‘இஸ்லாமிய கம்யூனிஸ்ட்’ என்று அறியப்பட்டார். ஹஜ் புனித யாத்திரைக்குத் தவறாது செல்வார், யாத்திரை முடித்துத் திரும்பும் ஒவ்வொரு முறையும் அவர் மதுரா – பிருந்தாவனத்திற்குச் சென்று பகவான் கிருஷ்ணரை வழிபட்டு அவரைப் புகழ்ந்து பாடல்கள் எழுதுவார்! மேலும் அவர் பகவான் கிருஷ்ணரை ஒரு ‘பைகம்பரா’கக்கூட (இறைத்தூதர், ப்ராபட் எனக்) கருதுவார்.

அரசியலமைப்புச் சட்டக் குழுவின் உறுப்பினர்

                    ஹஸ்ரத் மொஹானி முஸ்லீம் லீக் சார்பாக 1946ல் இந்திய அரசியலமைப்புச் சட்டக் குழுவின் ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் அண்ணல் அம்பேத்கருடன் அவரும் உறுப்பினர். ஆனால் பெரும்பான்மை பிரச்சனை/ விஷயங்களில் அவர்களோடு அவர் உடன்படவில்லை. நாடு இரண்டாகப் பிரிக்கப்படுவதை அவர் உறுதியாக எதிர்த்ததுடன், மத ரீதியான எந்தவிதப் பிரதிநிதித்துவத்திற்கும் எதிராக இருந்தார். பல பிரச்சனைகளில் டாக்டர் அம்பேத்கருடன் அவர் கடுமையாக முரண்பட்டார். அரசியலமைப்புச் சட்டம் பல அசலான இந்திய அம்சங்களில் போதாமையுடன் இருப்பதாகவும் உலக அரசியலமைப்புச் சட்டங்களைச் சார்ந்து இருப்பதாகவும் அவர் அபிப்பிராயப்பட்டார். சோவியத் அமைப்பு மாதிரி கூட்டமைப்பு அரசியல் முறையை அவர் விரும்பினார். (சமமான அதிகாரம் உரிமைகளுடன் மாநிலங்கள் கூட்டமைப்பாக இணைந்து இருப்பதற்குப் பதிலாகத் தற்போது பலமான மத்திய அரசைச் சார்ந்து மாநிலங்கள் அமைக்கப்பட்டுள்ளன).

           

மௌலானா ஹஸ்ரத் மொஹானி 1951 மே 13ம் நாள் மறைந்தார். காந்திஜி அவரை ‘முஸ்லீம் சமுதாயத்தின் விலைமதிப்பில்லாத அபூர்வ இரத்தினம்’ என்று அழைத்தார்.

            அந்த அபூர்வ இரத்தினத்தின் நினைவாக பல ஞாபகச் சின்னங்கள், பள்ளிகள் மற்றும் நூலகங்கள் நம் தேசத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

            இந்திய நாட்டின் சுதந்திர தினப் பவளவிழாவின்போது பூரண சுதந்திரத்திற்கான முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்த இந்தியத் தாயின் பெருமகனை நினைந்து போற்றுவோம்!

            ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ முழக்கம் தந்த ஹஸ்ரத் மொஹானிக்கு ஜிந்தாபாத்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

                                                     

 

                                                     

    

No comments:

Post a Comment