Monday 23 August 2021

75வது சுதந்திர தினச் சிறப்புக் கட்டுரை --அமர்ஜித் கவுர்

 


75வது சுதந்திர தினச் சிறப்புக் கட்டுரை

ஆகஸ்ட் 15, கடந்து வந்த காலத்தை அசைபோடும் நாள்




--அமர்ஜித் கவுர்

பொதுச் செயலாளர் ஏஐடியுசி

            1947ஆகஸ்ட்15ல் இந்தியா விடுதலையைச் சாதித்தது –போராட்டங்களும் தியாகங்களும் அதன் இறுதி லட்சியத்தை அடைந்தது. அன்றிலிருந்து அடிப்படைக் கட்டமைப்பு, விஞ்ஞானத் தொழில்நுட்பம், இயற்கை செல்வாதாரங்களை அகழ்ந்தெடுத்தல், பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட தேசியச் சொத்துக்கள் உருவாக்கம் என பல துறைகளிலும் வளர்ச்சியின் பல எல்லைகளைச் சாதித்து இந்தியா செம்மாந்து நடைபோட்டு வருகிறது.

விடுதலைக்குப் பின் சாதனைகள்

            இந்தச் சாதனையில் விவசாயிகள், தொழிலாளர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், அறிவியல் துறை வல்லுநர்கள் என மக்களின் பங்களிப்பு அளப்பரியது. 1942 -- 43 வங்கத்தில் பெரும் பஞ்சம், விடுதலைக்குப் பிறகு அமெரிக்காவின் பிஎல்480 திட்டத்தைச் சார்ந்திருத்தல் என்ற நிலையிலிருந்து இந்தியா மீண்டெழுந்தது; வேளாண் பிரிவில் நம் தேவைக்கு ஓரளவு சுய சார்பு நிலையை அடைந்தோம்; இடதுசாரி முற்போக்கு சக்திகள் முக்கிய பங்காற்ற அவர்களின் ஆதரவோடு தொழிலாளர்கள் போராட்டம் வங்கி மற்றும் காப்பீடு துறை தேசியமயத்தைச் சாதித்து வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்குச் செலுத்தியது. தேசியமயத்தால் நடுத்தர, சிறு மற்றும் குறு தொழில்கள் நிறுவப்பட்டு புது உற்சாகம் பெற்றது; இதனால் பல பத்து லட்சம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு புதிய வாய்ப்புகள் திறந்தன. வளர்ச்சியின் ஆதார மையமாகப் பொதுத் துறைகள் விளங்கின.

எதிர்ப்பும் ஆதரவும்

            1950களிலிருந்தே சுய சார்பு பொருளாதார மாடல் கொள்கைகளுக்கும் அவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் போதும் எப்போதும் கடுமையான எதிர்ப்பு இருந்தே வந்துள்ளது. இதை எதிர்த்தவர்கள் அன்றைய பாரதிய ஜன சங் (பாஜகவின் அந்தநாள் அவதாரம்), காங்கிரசின் சில பகுதியினர் மற்றும் பழமைவாத சக்திகள்; அதே நேரத்தில் நமது நாட்டின் இயற்கை மற்றும் தேசிய செல்வாதாரங்கள் அவற்றின் வளர்ச்சி மீதான தேசத்தின் இறையாண்மையைக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க இயக்கம் உறுதியாக ஆதரித்தன. உழைக்கும் மக்கள் கூட்டம் மற்றும் விவசாயிகளின் உழைப்பு மற்றும் பங்களிப்பால் உருவான பெரும் செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிய, பாடுபட்டு உழைத்த மக்களின் வாழ்வில் உழைப்புக்கேற்ற பெரியதொரு பயன் வந்து சேரவில்லை என்பதும் உண்மையே – காரணம் செல்வாதாரம் பாரபட்சமாகச் சமமின்றி பகிரப்பட்டதுதான்.

சாதனைகளுக்குத் தடை

            மற்றொரு புறத்தில் இந்தியா பல்வேறு துறைகளில் புதிய உச்சங்ககளை எட்டிச் சாதித்து வந்தது: பொறியியல், உற்பத்தி, அகழ்வாராய்ச்சி, அணு மற்றும் நியூக்ளியர் விஞ்ஞானம், விண்வெளி முதலான துறைகளிலும்; மற்றும் அதே நேரத்தில் கல்வி, பயிற்சி, வேலைவாய்ப்பு, பணியிடப் பாதுகாப்பு, ஏற்கத்தக்க கவுரவமான ஊதியம் முதலியவற்றில் சம வாய்ப்புக்கான இயக்கம்; மற்றும் சமூகப் பாதுகாப்பு பலம் பொருந்தியதாக வளர்ச்சி பெற்று பல தொழிலாளர் உரிமைகள், சட்டப்படியான தகுதிப்பாடுகள் மற்றும் சலுகைகள் சாதிக்கப்பட்டன. ஆனால் சுதந்திரமான சந்தை பொருளாதாரச் சக்திகளுக்கு ஆதரவான 1991ன் புதிய தாராளமயப் பொருளாதார மாடல் வாழ்வின் சகல பகுதிகளிலும் சமத்துவமான வாய்ப்புகள் மற்றும் அனைவருக்கும் நீதியை உறுதிப்படுத்தும் நிகழ்நிரல்கள் பின் தள்ளப்பட்டன.

            சர்வதேச நிதி நிறுவனம் (IMF), உலக வங்கி மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) கூட்டாகக் கட்டளையிடக் கொண்டுவரப்பட்ட புதிய தாராளமய நிகழ்ச்சித் திட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கம் மெல்ல வலிமை பெற, தொழிற்சங்கங்கள் முக்கிய பங்காற்றின.

இன்றைய நிலை

            கடந்த 30 ஆண்டுகளின் நிகழ்வுகளையும் மாற்றங்களையும் விரிவாக விவரிக்கத் தேவையில்லை, இப்போது நாடு எங்கே வந்து சேர்ந்துள்ளது என்பதைப் பார்த்தாலே போதும். இந்நிலைக்குக் கொண்டு வந்த அதே சக்திகளின் முழு கட்டுப்பாட்டில் ஆட்சியதிகாரம் உள்ளது; அவர்கள் அப்படியே நிதிமூலதனம், இந்திய மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்ச்சிநிரல் திட்டங்களோடு உடன்பட்டு நிற்கிறார்கள். அவர்களோ இந்தியச் சந்தைகள், வர்த்தகம், இயற்கை செல்வாதாரம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கயையும் சொத்துகளையும் கைப்பற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அதற்கு வசதியாக ஆட்சியில் இருப்பவர்கள் தொழிலாளர் வர்க்கம் மற்றும் அவற்றின் சங்கங்கள் சாதித்த உரிமைகளைப் பறிப்பது; அதற்காகத் தொழிலாளர் சீர்திருத்தங்களைத் திணிப்பதன் மூலம் தொழிலாளர் சட்டங்களை 4 குறுங்குறிகளாகச் சுருக்குவது, விவசாய நிலங்களை ஏகபோக கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக கார்ப்பரேட்மயப்படுத்துவது என இறங்கியுள்ளனர். இதனால் விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் ஏதுமற்றவர்களாக திவாலாக்கவும் துணிந்து விட்டனர்.

அனைத்தும் விற்பனைக்கு

            இந்த மோடி ஆட்சி விற்பனைப் பட்டியலில் இல்லாத துறையில்லை, அது பொதுத்துறை அல்லது அரசுத் துறைகளாக இருந்தாலும் சரி, எதுவும் விட்டு வைக்கப்படவில்லை. லாபம் ஈட்டும் துறையோ ஈட்டாததோ, கேந்திரமானதோ அல்லாததோ அனைத்தும் உள்ளடக்கியது என்பதை நிதியமைச்சரின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது. இரயில்வேயிலிருந்து, ரயில் நிலைய பிளாட்வாரம் வரை, விமான நிலையங்கள், துறைமுகங்கள் கிடங்குகள், எரிசக்தித் துறையில் எண்ணெய், எரிவாயு, மின்சாரம், ஸ்டீல், நிலக்கரி, செம்பு, டெலிகாம், அஞ்சல் துறைகள், பாதுகாப்பு, நிதிப் பிரிவில் வங்கிகள் மற்றும் காப்பீடு, அணுசக்தி, விண்வெளி விஞ்ஞானம் முதலிய அனைத்தும் இந்த ஆட்சியின் கீழ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

            இத்தேசத்தின் விடுதலைப் போராட்ட இயக்கத்திலோ அல்லது சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டைக் கட்டியமைக்கும் சுயச்சார்பு பொருளாதாரக் கொள்கைகளிலோ இன்றைய ஆளும் கட்சிக்கும் அதன் சங்க் பரிவார் கும்பலுக்கும் எந்தப் பங்கும் கிடையாது; அவர்கள் எப்போதுமே சுதந்திரச் சந்தை சக்திகளின் ஆதரவாளர்களும் பிரச்சாரகர்களும் ஆவார்கள்; அவர்களின் எவருக்கும் அடிப்படை மனித உரிமைகள் குறித்துத் தாங்கள் அறநெறி தவறுவதாக எந்தப் பதற்றமும் கிடையாது. அவர்கள் பின்பற்றும் இலட்சிய முழக்கம், ‘நட்டத்தைச் சமூகமயப்படுத்தி பொதுவாக்குவது, தனியார் கார்ப்பரேட்டுகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் லாபத்தை உட்சபட்சமாக அதிகமாக்குவது’

பொதுமக்களுக்கு எதிர்காலம் எதை வைத்திருக்கிறது?

விலைஉயர்வு

          அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைப் பொருத்தவரை அது பொதுமக்களின் கைகளை மீறிச் சென்றுவிட்டது; பெட்ரோல் ரூ 62 லிருந்து 112, டீசல் 55 லிருந்து 200, சமையல் எரிவாயு உருளை 414 லிருந்து 834, பருப்பு 60 –70லிருந்து 190 – 220, பால் 30 லிருந்து 60, ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் ரூ 5லிருந்து 50, ரயில் பயணக் கட்டணம் அரை மடங்கிலிருந்து இரண்டு மடங்காக உயர்ந்துள்ளன. எரிபொருட்களின் விலை உயர்வால் போக்குவரத்துக் கட்டணங்கள் உயர அதன் தொடர்விளைவாய் எல்லாப் பொருட்களின் விலை உயர்கின்றன.

            வேலைவாய்ப்பு

            நிரந்தர ஊழியராகவோ கூலி வேலையோ வேலைவாய்ப்புப் பிரிவிலும் மக்களின் வாழ்வாதார சூழலிலும் நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத உயர்ந்த அளவாக வேலையின்மை விகிதம் ஏற்கனவே 2019ல் 7.4 சதவீதமாக இருந்தது கோவிட் தொற்றுக்கு முன்பு 2020 மார்ச்சில் 8.1 சதவீதமாக உயர்ந்தது. தொற்றுக்குப் பிறகு இந்நிலை இன்னும் மோசமாகும். பண மதிப்பிழப்பு மற்றும் தவறாக அவசரமாக அமல்படுத்தித் திணிக்கப்பட்ட (ஜிஎஸ்டி)  சரக்குப் போக்குவரத்து வரி காரணமாக பொருளாதார வீழ்ச்சிநிலை இன்னும் ஆழமானது; மேலும் 2020 மார்ச்சில் திடீரென அமல்படுத்திய ஊரடங்கால் அநேகமாக வேலையில் இருந்த 45 கோடி பேர் தூக்கியெறியப்பட்டு வாழ்வாதாரம் இழந்தனர்.

            புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

            மாநிலத்திற்குள்ளும், பிற மாநிலங்களுக்கும் 20 கோடிக்கும் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்--ஊரடங்கின் காரணமாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால்-- உச்சபட்ச இன்னல்களுக்கு ஆளாயினர். உணவுப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட 84 கோடி பேரில், 10கோடிக்கும் அதிகமானவர்களின் ரேஷன் அட்டைகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப் படாததால் அவர்களால் ரேஷன் உணவுப் பொருட்கள் பெற இயலவில்லை.

            கோவிட் தொற்று முதல் அலையின் ஊரடங்கின்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் பரிதவித்தபோது நடத்தப்பட்ட கள ஆய்வு அவர்களில் 94 சதவீதமானவர்கள் ரேஷன் பொருட்களைப் பெறவில்லை என்றும், 78 சதவீதமானவர்கள் தங்களுக்குச் சமைத்த உணவு கிடைக்கவில்லை என்றும் 74 சதவீதமானவர்கள் கையில் வெறும் 300 ரூபாய்க்கும் குறைவான இருப்பு இருந்ததாகக் கூறியதாகவும் தெரிவிக்கிறது. அவர்கள் பலநூறு மைல்கள் வெயிலிலும் மழையிலும் நடந்தே சென்ற கொடுமையை உலகமே பார்த்தது.

            ஊரடங்கு முடிவுக்கு வந்தபிறகு வேலையின்மை விகிதம் ஏறத்தாழ 27 சதவீதம் உயர்ந்தது. 2020 ஏப்ரலில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம் மக்கள் வேலையிழந்தனர்.

            சிறு குறு தொழில் பிரிவுகள்

            உற்பத்தியாளர் கூட்டுறவின் ஆய்வின்படி நடுத்தர, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் (MSMEs) மீண்டும் தொழில்களைச் செயல்படுத்தத் தொடங்கும்போது நிலைமை மோசமாகவே இருந்தது. 6.3கோடி நிறுவனங்களில் 34.4 சதவீதம் மட்டுமே மீண்டும் செயல்படக் கூடியதாக இருந்தன; 33 சதவீதம் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன; 33 சதவீதம் 2020 ஆண்டின் இறுதியிலோ 2021ம் ஆண்டின் முதல் காலாண்டிலோ தொடங்கப்பட இயலலாம் என்ற நிலையில் இருந்தன. இரண்டாவது அலைத் தொற்று நிலைமையை மேலும் மோசமாக்கியது.

            இந்த ஜூன் ஜூலையில் (மாத ஊதியம் அல்லாத) ஊதியம் அல்லது கூலி தொடர்பான வேலைகளில்  இழப்பு 80 லட்சம். இது அத்தகைய வேலைகளில் இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம்(CMIE) வெளியிட்ட புள்ளிவிபரமான 3 கோடி வேலை இழப்புக்களைத் தவிர வேறு. அதில் இளைஞர்களின் வேலையிழப்பு விகிதாசாரத்தில் அதிகமானது. 15லிருந்து 25 வயதுடைய பிரிவில் வேலையின்மை 54 சதவீதம் என்பது அவர்கள் வாழ்க்கைக்கு மட்டுமின்றி தேசத்திற்கும் நட்டமாகும்.

அரசு மற்றும் கார்ப்பரேட் கூட்டு

            முதல் மற்றும் இரண்டாவது அலை தொற்றின்போது அரசு வெளியிட்ட மீட்புத் தொகுப்புத் திட்டம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானது; அதில் அவர்கள் கோரிய வரிச் சலுகை வழங்கப்பட்டது. கடந்த இருபது ஆண்டுகளாகப் படிப்படியாகக் குறைக்கப்படும் வரியானது 35 சதவீதத்திலிருந்து தற்போது 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது, இந்த ஆட்சியின் போது மட்டும் 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக்கப்பட்டது. இங்கே சில பெரும் கொள்ளைக்காரர்கள் பொதுத்துறை வங்கிகளிலிருந்து மக்கள் பணத்தைக் கடானகப் பெற்றுவிட்டுத் தப்பிச் செல்ல விடப்பட்டுள்ளனர்; அந்தக் கொள்ளைக்காரர்களிடம் அவர்கள் கொள்ளை அடித்த பணத்தைச் சட்டபூர்வமான இன்சால்வன்சி குறுங்குறி மூலம் சரிசெய்து கொள்ளச் சமாதானக் கொடியை நீட்டுகிறது அரசு.

            மோடி ஆட்சி காலத்தில் மட்டும் இதுவரை வங்கிகளின் செயல்படாத சொத்து எனப்படும் (NPA)மோசமான வாராக் கடன் கணக்கிலிருந்து அநேகமாக 8.3 லட்சம் கோடி வங்கி ஆவணங்களில்  தள்ளுபடி என்ற பெயரில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் மத்திய தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட மேடையிலிருந்து, வருமான வரி கணக்கு வரம்பிற்குள் வராத ஏழைகள், குறைந்த மற்றும் நடுத்தர வருமானப் பிரிவு மக்களுக்கு ரூ7500 ரொக்கமாக வழக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை; அல்லது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் (MGNREGA) கீழ் உள்ள தொழிலாளர்களின் வேலை நாட்களையும் ஊதியத்தையும் அதிகரிக்கக் கோரிய கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது. அதற்கு மாறாக பல வழிகளில் பொதுமக்களின் மீதான வரிகளை அறிமுகப்படுத்தியது; மேலும் பிரதமரின் செல்லத் திட்டமான (புது பாராளுமன்ற வளாகம் கட்டும்) சென்ட்ரல் விஸ்டா திட்டச் செலவுக்குக்--கடுமையான ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த சூடோடு-- 20ஆயிரம் கோடி பட்ஜெட் அனுமதியை அறிவித்துள்ளது.

            குழந்தைகள் மீது பாதிப்பு

            ஐஎல்ஓ மற்றும் யுனெஸ்கோ அமைப்புகள் குழந்தைகள் மீதான மோசமான பாதிப்பைப் பட்டியலிட்டுள்ளன. தொற்று மற்றும் ஊரடங்கால் மேலும் அதிகமாகச் சுமார் 4.9 கோடி குழந்தைகள் கல்வியை இழந்து உழைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்னர். இ-வழி கல்வி அனைவருக்கும் சாத்தியமாகாத நிலையில் கல்வியில் சமூகம் ஏற்கனவே பிளவுபட்டு பாதிக்கப்பட்டிருக்கிறது. பத்து சதவீத குடும்பங்களுக்கே இணைதள வசதி பெற்றிருக்கும்போது, நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரும்பாலோரால் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் செல் போன் வாங்கித்தரவும் ஆன்-லைன் கல்வியை வழங்கவும் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். குழந்தைத் தொழிலாளர்களில் 70 சதவீதமானவர்கள் கிராமப் பகுதிகளிலிருந்து வருகிறார்கள் என்றும் 20சதவீதம் சேவைப் பிரிவிலும் பத்து சதவீதம் தொழிற்சாலைகளிலும் உழைப்பதாக இதுவரை கிடைத்துள்ள தரவுகள் குறிப்பிடுகின்றன. அவர்களில் 28% ஐந்து முதல் 11 வயதுப் பிரிவிலும் 35 சதவீதமானவர்கள் 12 முதல் 14 வயதுடையவர்களாகவும் உள்ளனர்.

            பெண்கள் மீதான பாதிப்பு

            அதிக சதவீதத்தினர் வேலைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்தது மட்டுமின்றி அதிகரித்த வீட்டு வன்முறைகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே. கோவிட் பாதிப்பு காலத்தில் குழந்தைத் திருமண நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. பொருளாதாரம் மீண்டும் செயல்படத் தொடங்கிய பிறகு மீண்டும் வேலையில் சேர்வதில் பெண்களின் சதவீதமே மிகக் குறைவு. பெண்கள் செய்துவரும் பணிகள் போன்றவற்றிற்கு அவசரமில்லை; எனவே தொழிலை மீண்டும் தொடங்கும் துவக்க நிலையிலேயே அவர்களைப் பணிக்கு எடுக்கத் தேவையில்லை என வேலைவழங்கும் உரிமையாளர்கள் நினைக்கிறார்கள்.

            அதிகரிக்கும் சமத்துவமின்மை

            சமத்துவமின்மை நிலை நாட்டில் மோசமாகி வருகிறது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பான ஐஎல்ஓ புள்ளிவிபரத்தின்படி தொற்றுக்கு முந்தைய காலத்தைவிடத் தற்போது 40 கோடி இந்தியர்கள் ஏழைகளாகியுள்ளனர். ஆண்களில் ஏறத்தாழ 35 சதவீதத்தினரும் பெண்களில் 50 சதவீதத்தினரும் வேலையில் மீண்டும் சேரவில்லை. ஏழைக் குடும்பங்களின் வருமானம் மேலும் குறைந்து ஊதிய இடைவெளி அதிகரிக்கிறது; ஊதிய வெட்டு மற்றும் முன்பு பெற்ற பலன்களைவிட குறைவான பலன்களையுமே உரிமையாளர்கள் தரப்பு தருகிறது. ஊரடங்கில் மூடப்பட்ட காலத்திற்கான ஊதியம் மறுக்கப்பட்டு ஆட்குறைப்பு தொடர்கிறது.

            மறுபுறத்தில், மார்ச் 2020 முதல் மார்ச் 2021வரை முகேஷ் அம்பானி 128 சதவீதமும், அதானி 480 சதவீதமும் தங்கள் சொத்தை அதிகரித்துள்ளனர். நூறு கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு உடைய பில்லியனர்கள் எண்ணிக்கை இதே காலகட்டத்தில் 100லிருந்து 140 ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பில்லியனர்கள் தங்கள் சொத்தை 12.97 லட்சம் கோடி அதிகரித்த நேரத்தில் மக்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும், வென்டிலேட்டர், மருத்துவப் படுக்கைகள் அல்லது மருந்துகள் கிடைக்காத காரணத்தால் செத்துக் கொண்டிருந்தார்கள். மருத்துவச் சுகாதாரப் பிரிவில் 24 கார்ப்பரேட் குழுமங்கள் தினமும் 500 கோடி சம்பாதித்தன. அதன் உச்சமாக, தடுப்பூசி வணிகத்தில் லாபத்தைக் குவிக்க மோடி அரசு மும்முரமாக உள்ளது.  ஆனால் இதற்கு முந்தைய அரசுகள் இந்தியாவில் தடுப்பூசிகளை எப்போதும் இலவசமாகவே வழங்கியதைப் பரவலாக அனைவரும் அறிவோம். இந்தத் தொகையை மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டதில் செலவிடுவோம் என்றால் அது அத்திட்டத்தைப் பத்தாண்டுகள் செயல்படுத்துவதற்கான பட்ஜெட்டுக்குப் போதுமானது. மக்கள் தொகையில் மேலே இருக்கும் ஒரு சதவீதத்தினர் நாட்டின் 70 சதவீதச் செல்வத்திற்கு உரிமையாளர்களாக உள்ளனர் என ஆய்வுகள் காட்டுகின்றன. வேளாண் சட்டங்களும் தொழிலாளர் குறுங்குறிச் சட்டங்களும் அமல்படுத்தப்படுமானால் இடைவெளியும் சமத்துவமின்மையும் மேலும் அதிகரிக்கும்.

            நாட்டின் மீது சட்டங்களின் தாக்குதல்

            ஆனால் சாதாரண மக்களுக்கும் தேசத்திற்கும் எதிரான தங்கள் நிகழ்ச்சிநிரலைத் தொடர்ந்து திணிப்பதில் மோடி அரசு பிடிவாதமாக உள்ளது. இந்தக் கொள்கைகளுக்கு எதிரான எந்தக் கண்டன எதிர்ப்பையும் தேசத் துரோகம் என முத்திரரை குத்தி அவர்களது குரல்களை நெறிக்கப் பல்வேறு நிர்வாக முகமைகளைத் தவறாகப் பயன்படுத்தி, பல்வேறு சட்டங்களின்கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இந்தியக் குற்றப்புலனாய்வு அமைப்பு (CBI), தீவிரவாதத்திற்கு எதிரான தேசியப் புலனாய்வு முகமை (NIA), சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA), தேசத் துரோகச் சட்டம், தேசியப் பாதுகாப்பு முகமை (NSA) மற்றும் செயலாக்கத் துறை (ED) முதலானவற்றைப் பயன்படுத்தி மக்களைச் சிறையில் அடைப்பது மட்டுமின்றி அத்தியாவசியப் பாதுகாப்புச் சேவை மசோதாவைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அந்தக் கொடுமையான சட்டத்தைப் பயன்படுத்தி மேலும் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம்  உட்பட கூட்டுபேர உரிமைகளையும் பறிக்கிறார்கள்.

            உளவுச் செயலி கருவி

            உளவுச் செயலியான பெகாசஸ் இத்தாலிய மென்பொருளைப் பயன்படுத்தி இந்திய அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், சிந்தனையாளர்கள், நீதித் துறையைச் சார்ந்தோர், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் முதலியவர்களின் தொலைபேசி உரையாடல் தகவல்கள் களவாடப்படும் நபர்கள் பட்டியலில் இருந்தது தவிர எதிர்காலத்தில் கண்காணிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்களும் அடங்கி இருந்தது.  இது தொடர்பான உண்மைகளைத் தேசம் அறிய விரும்புகிறபோது ஒன்றிய அரசு வெட்கமில்லாமல் மௌனமாக இருக்கிறது. சங்க் பரிவார் கும்பலால் போஷிக்கப்படும் உதிரி அமைப்புகள் -- அரசின் அதிகார மிக்கவர்களின் ஆசி மற்றும் ஆதரவோடு -- வெறுப்பைப் பரப்புவதுடன் மதம், சாதி, மொழி முதலானவற்றின் அடிப்படையில் சமூகத்தைத் துருவங்களாகப் பிளவுபடுத்தும் தங்கள் நிகழ்ச்சி நிரல் திட்டங்களைத் தொடர்வதில் மும்முரமாக இருக்கிறார்கள்.

            இது பிரித்தாளும் சூழ்ச்சி அரசியல் மட்டுமல்ல; ஆனால், பல நூற்றாண்டுகளாக இணக்கமாக வாழும் நமது சமூகத்தையும், விடுதலை இயக்கத்தின் சாதனைகளையும், நமது தேசியச் சொத்துக்கள் மற்றும் இயற்கை செல்வாதார சொத்துரிமையையும், இந்திய அரசியல் சட்டத்தின் மையமான விழுமியங்களையும் நன்நெறி உணர்வுகளையும்  பிரித்தெறியும் நோக்கம் கொண்டவை. நாம் விழிப்புடன் இருத்தல் முக்கியம்.

தேசம் காத்தல் நம் கடமை

            மேற்கண்ட பின்னணியிலும் நமது தேசத்தைச் சூழ்ந்துள்ள கடுமையான ஆபத்தை உணர்ந்ததாலும் மத்தியத் தொழிற்சங்கங்களின் இணைந்த மேடை பிரிவுவாரி சம்மேளனங்களுடன் இணைந்து வெள்ளையனே வெளியேறு இயக்க தினமான ஆகஸ்ட் 9ம் நாளை “இந்தியாவைப் பாதுகாப்போம் தினம்” என அனுசரிக்குமாறு அறைகூவல் விடுத்தது. சம்யுக்த கிசான் மோர்ச்சா எனப்படும் விவசாயப் பெருங்குடியினர் கூட்டமைப்பு இந்த நாளை “விவசாயிகளைப் பாதுகாப்போம், இந்தியாவைப் பாதுகாப்போம் தினம்” என அனுசரித்தது.

            இந்திய விடுதலைத் திருநாளின் 75வது ஆண்டு பவள விழா தருணத்தில் நாம் சபதம் ஏற்போம்! தேசத்தைப் பின்னோக்கி இழுக்கும் பிற்போக்கு சக்திகளைத் திரும்ப எதிர்த்துப் போரிடுவோம்! பிரித்துப் பிளவுபடுத்தும் சக்திகளை, வெறுப்பை விதைக்கும் மனிதநேயத்திற்கு எதிரான சக்திகளை, பழமைவாத மூடநம்பிக்கை பரப்பும் சக்திகளை, பன்மைத்துவ நம்பிக்கைக்கு எதிரானவர்களை, பால், இனம், சாதி எனப் பாகுபடுத்துபவர்களை எதிர்த்துப் போரிடுவோம்! மாற்றுக் கருத்துரைக்கும் உரிமை மற்றும் பேச்சுரிமைக்கு எதிரான சக்திகளை எதிர்த்து ஒன்றுபட்டுச் சமர் புரிவோம் எனச் சபதம் ஏற்போம்!

            அச்சம் தவிர்! ஒற்றுமை வலிமையாம்!

 கீழோர்க்கு அஞ்சேல்! தீயோர்க்கு அஞ்சேல்!

 தேசம் காத்தல் செய்!”        மகாகவி பாரதியார்

            தேசம் காப்போம்!

--நன்றி : நியூஏஜ் (ஆகஸ்ட் 15 –21)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

     

 

 

             

 

No comments:

Post a Comment