Friday 6 August 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 44 -- ஏகேஜி எனும் ஏ கே கோபாலன் :

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :                      

சில சித்திரத் சிதறல்கள் - 44


ஏ கே கோபாலன் : 
எதிர்கட்சித் தலைவர், 
கேரளாவின் அமைப்பாளர்


--அனில் ரஜீம்வாலே

--நியூ ஏஜ் ஜூன் 20 – 26

          அயிலியாத் குட்டியாரி (குற்றியேரி) கோபாலன், வடக்கு மலபாரின் (கேரளா) கண்ணூர் மாவட்டம், சிரக்கல் துணை மாவட்ட, பேரளசேரியில் மவிலாயி-யின் மக்கேரி என்ற கிராமத்தில் 1904 அக்டோபர் 1ம் தேதி பிறந்தார். அப்பகுதியின் ஆளும் குடும்பமான நாயர் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்; முந்தைய காலங்களில் ‘முழு மரியாதை’, ‘பாதி மரியாதை’ முதலிய பாரம்பரியமான அந்தஸ்தை வகித்த அக்குடும்பத்திற்குப் பல்வேறு வகையான வசதிகள் கிழக்கிந்திய கம்பெனியால் செய்து தரப்பட்டன. அதன் பொருள், அவர்களுடைய சொத்துக்களில் சிலவற்றின் மீது வரி கிடையாது, வேறு சிலவற்றின் மீது பகுதி வரி மட்டுமே விதிக்கப்பட்டது.

            பல அதிகார மட்டங்களில் அக்குடும்பத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் பங்காற்றினர். எந்த அளவு கூட்டமான பெரும் குடும்பம் எனில், சகோதரர்களே ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொள்ள வேண்டி வரும்! அவருடைய குடும்பம் தாய்வழிப்பட்ட குடும்பம். குடும்பத் தலைவியே நிலவரி வசூல் செய்வார். ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆண்டுக்கு 265 சேர் (முகத்தல் அளவை) அரிசியும் 25ரூபாயும் பெற்றனர். அந்தக் குடும்பத்திற்குத் தனியே சொந்தமான வைத்தியர், முடி திருத்துபவர் மற்றும் சலவைத் தொழிலாளி இருந்தனர்.

            கோபாலன் தனது தந்தையான வி கே இராய்ரூ நம்பியாருடன் தங்குவது வழக்கம். அவர் வித்தியாசமான மனிதர், அவர் காலத்திய சமூகச் சீர்திருத்தவாதிகளில் ஒருவர். கோபாலன் பொது வாழ்விற்கு வந்ததற்கு அவரே காரணம். வடக்கு மலபாரில் (கண்ணூர் மாவட்டம்) கடசிரா என்னும் இடத்தில் அவர் ஆங்கில நடுநிலைப் பள்ளியை நிறுவினார். அவரது சகோதரிகளும்கூட –சமூகத்தினர் எதிர்ப்பையும் மீறி -- அங்கே படிக்கச் சென்றனர். சாதி முறைக்கு எதிராகப் போராடிய அவர் தந்தை, ஒரு இதழின் ஆசிரியராக இருந்தார். தாய் சாதாரண இல்லத் தலைவி.

            கோபாலன் படிப்பில் ஆர்வம் இல்லாதவராக இருந்தார். அக்கிராமத்தின் வழியாகச் சென்ற குருவாயூர் ஆலய நுழைவு போராட்ட இயக்க ஊர்வலம் கோபாலனை ஈர்த்தது.

            தெல்லிசேரி பாசல் இவன்ஜிலிகல் மிஷன் பார்சி உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் தெல்லிசேரி அரசு பிரென்னன் கல்லூரியிலும் கோபாலன் படித்தார்.

            மாணவப் பருவ நாட்களில் அவர் ‘இலக்கிய அமைப்பு’ (சொசைட்டி)களை ஏற்படுத்தி அதில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்தார். கையால் எழுதி செய்திப் பத்திரிக்கைகளையும் வெளியிட்டார். பாடங்களில் நேரத்தைச் செலவிடுவதைவிட மக்கள் மத்தியில் பணியாற்ற அவர் மிகவும் விரும்பினார். எனவே அவர் என்ன செய்தார் எனில், பள்ளி செல்வதை நிறுத்தி விட்டார். தந்தையின் வற்புறுத்தலால், ஆசிரியர் பணியை மேற்கொண்டார். மாணவ நாட்களில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு அவரிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி அவரின் எதிர்காலத் திசைவழியை முடிவு செய்ய உதவியது. யாகூப் ஹாசன், கோபால் மேனன், மாதவன் நாயர் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு தலைசேரி வந்தபோது அவர்களுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டதைக் கோபாலனும் நண்பர்களும் பார்த்தனர். அன்று கடற்கரை பக்கம் ஒரு நடந்த பொதுக்கூட்டத்தில் அத்தலைவர்கள் பேசுவதைக் கேட்க கோபாலனும் நண்பர்களும் வகுப்புகளைவிட்டு வெளியேறி விரைந்தனர். அச்செயலுக்காக ஆசிரியர்களின் கோபத்தை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது.

            கோபாலன் 7 ஆண்டுகள் ஆரம்பப்பள்ளி ஆசிரியராகக் கற்பித்தார். அப்பணி அவருக்குப் பிடித்திருந்தது. இரண்டு ஆண்டுகள் பேரளசேரி போர்டு பள்ளியில் கற்பித்தார். அவருடைய மூத்த சகோதரர் அப்பள்ளியின் தலைமையாசிரியர். கோபாலன் மாணவர்களைப் பிரம்பால் அடிப்பதும் வழக்கம்!

            காதி மற்றும் காந்தி குல்லா மீது கோபாலனுக்குப் பெருவிழைவு இருந்தது. 1924ல் ‘வைக்கம் சத்யாகிரகம்’ இயக்கத்தில் சேர்ந்து கொள்ள அவர் விரும்பினார். அவருடைய மனு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், குடும்பத்தினர் தந்த அழுத்தத்தால் அவர் மனுவைத் திரும்பப் பெற வேண்டியிருந்தது.

            ‘நம்பியார் மாஸ்ட’ருடைய செல்வாக்கு காரணமாக கோபாலன் மாணவர்களை அடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டார். கிருஷ்ணப் பணிக்கருடன் தொடர்பு கொண்டவர் அவருடன் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.  

            காதி கதர் ஆடைகள் பிரச்சாரம் மற்றும் அயல்நாட்டு துணி பகிஷ்கரிப்பு இயக்கங்களில் பங்கேற்றார். விடுமுறை காலங்களில் காதி மற்றும் சுதேசி பொருட்கள் பிரச்சாரத்தைக் கிராமங்களில் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஸ்ரீதரனிடமிருந்து செயலூக்கமுள்ள ஒத்துழைப்பு அவருக்குக் கிடைத்தது. அவர்கள் கதர் நூல் நூற்று அதனைத் தலைமையகத்துக்கு அனுப்பி வைத்தனர்.         

1930, காங்கிரஸ் இயக்கம்

            1930-32 ஒத்துழையாமை இயக்கம் கோபாலன் மனதில் ஆழமான பதிவை ஏற்படுத்தியது. 1930 மார்ச் 12ல் காந்திஜி புகழ்மிக்க தண்டி யாத்திரையைத் தொடங்கினார். கேரளாவிலும் கே கேளப்பன் தலைமையில் கோழிக்கோட்டிலிருந்து பையனூர் வரை ஊர்வலம் நடத்தப்பட்டது. பிரம்மாண்டமான அளவில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அவரது மனதில் சிந்தனை மோதல்கள் வளர்ந்தன. ‘பாரத மாதாவின் நல்ல மைந்த’னாக அவர் விரும்பினார்!

            கோபாலன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டார். தனது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விடைபெற்றார். குடும்பத்தில் பலரும் அவரது முடிவை விரும்பவில்லை.

            பணிவிலகிய இரண்டு நாட்களில் கோபாலன் ரகசியமாக கண்ணணூர் சென்று சத்தியாகிரகத்தில் இணைந்தார். பல இளைஞர்களைத் திரட்டினார். கைது செய்யப்பட்ட அவர் முதலில் கண்ணணூர் சிறைக்கும் பின்னர் வேலூர் சிறைக்கும் அனுப்பப்பட்டார். அங்கே டாக்டர்கள், வழக்கறிஞர்கள், வேலையில்லாதவர்கள், நல்ல வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என சுமார் 400 அரசியல் கைதிகள் இருந்தார்கள். அதில் ஒருவராக இருந்த கேளப்பனைக் கோபாலன் பெரிதும் மதித்தார்.

            அவர் கைது செய்யப்பட்டதை அறிந்த உடன் கோபாலன் கிராம மாணவர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். காந்தி – இர்வின் உடன்பாட்டிற்குப் பிறகு 1932ல் அவர்கள் அனைவரும் விடுதலை ஆனார்கள். அவரிடம் பணமும் இல்லை, சரியான ஆடைகளோ உணவோ இல்லை. பேருந்து கட்டணம் செலவு செய்ய முடியாததால் தினமும் 25 முதல் 30 மைல் தூரம் நடந்தே ஊருக்கு வந்தார்.

ஆலய நுழைவு இயக்கம்

            கேளப்பன் தலைமையில் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி ஆலய நுழைவு இயக்கத்தைத் தொடங்கியது. தொண்டர் குழாமுக்குக் கோபாலன் ‘கேப்டன்’ ஆக நியமிக்கப்பட்டார். அவர் பையனூர் செல்லும் வழியில் கண்டோத் என்னுமிடத்தில் அரிசன மக்களின் பேரணியைத் திரட்டினார். அந்த இடத்தின் அருகே ஆலயம் இருந்ததால் அந்தத் தெருக்களின் வழியே அரிசன மக்கள் நடந்து செல்ல உரிமை மறுக்கப்பட்டது. மக்கள் (அவ்வூர் பழக்க வழக்கங்களை மீறிய) கேரளீயன், கோபாலன் மற்றும் பிறரையும் அடித்து உதைத்தனர். அவர்கள் இருவரும் மூர்ச்சையாகி மயங்கி விழுந்தனர்.

            ஏகேஜி-யின் முன்முயற்சியால்தான் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி குருவாயூர் ஆலய நுழைவு இயக்கத் தீர்மானத்தை 1931ல் நிறைவேற்றியது. ஆலயத்திற்கு முன் சத்தியாகிரகிகள் கூடாரங்கள் அமைத்தனர். அவர் கைதாகி 6 மாத சிறை தண்டனையில் கண்ணணூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்; அங்கே மிக மோசமாகச் சித்தரவதை செய்யப்பட்டார்.

            விடுதலையானதும் கேரளா முழுவதும் “ஓராயிரம் மைல் யாத்திரை”யில் பங்குபெற்றார். மீண்டும் கைது செய்து அவரைச் சங்கிலியால் பிணைத்துக் கடுமையான வேலைகளைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார். 1933ல் வேலூர் சிறையிலிருந்து விடுதலையானார்.

சோஷலிசத்தை நோக்கி

            இத்தருணத்தில் ஏகேஜி காந்திய அரசிலிலிருந்து மாறத் தொடங்கினார். கிருஷ்ணபிள்ளை, கேபிஆர், கோபாலன், இஎம்எஸ் முதலான தலைவர்களைச் சிறையில் சந்தித்தார். விடுதலையான பின் அவர்கள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியைக் கேரளாவில் அமைத்தனர். அது மலபாரில் தொழிலாளர் இயக்கத்திற்கு வித்திட்டு நெசவாளர்கள் சங்கம் அமைக்கப்பட்டது. பீடி, டெக்ஸ்டைல், கயிறு, டைல்ஸ் (ஓடு), சோப், முனிசிபல் மற்றும் பிற தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றி அவர்களுடன் வசிக்கத் தொடங்கினார் கோபாலன். எஸ்ஏ டாங்கே, சுந்தரையா போன்ற தலைவர்கள் வேலைநிறுத்தத்திற்கு உதவ கேரளா விஜயம் செய்தனர்.

            இந்நேரத்தில் ஏஐசிசி உறுப்பினரான கோபாலன் காங்கிரஸின் ஹரிபுரா மற்றும் திரிபுரி மாநாட்டு அமர்வுகளில் கலந்து கொண்டார். அகில இந்திய காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1934ல் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உறுப்பினர்களைக் கட்சியில் சேர்க்க அவர் இப்பொறுப்பில் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்களில் பயணம் செய்தார்.

            தொழிலாளர்கள், விவசாயிகள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் என பல பிரிவு மக்களை அவர் திரட்டினார். தெல்லிசேரி கோட்ட அலுவலகம் முன் வேலைவாய்ப்பு இல்லாதவர்களைப் பெரும் எண்ணிக்கையில் திரட்டி கூட்டம் நடத்தினார். பின்னர்


கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சரித்திரப் புகழ்மிக்க ‘மெட்ராஸை நோக்கிப் பேரணி’ இயக்கத்தை அறிவித்தார். அது நிகழ்ந்தது 1936ல். பல்வேறு வழித்தடங்களில் 966 கிமீ தூரத்தைப் பல வாரங்கள் நடந்து சென்று அவர்கள் சட்டமன்றத்தைச் சூழ்ந்தபோது பெரும் எண்ணிக்கையிலான போலீசார் நிறுத்தப்பட்டிருப்பதை எதிர்கொண்டனர். தமிழ்நாடு சோஷலிசக் கட்சி பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஏகேஜி கைது செய்யப்பட்டார்.

            பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக ஏகேஜியும் சந்த்ரோத்தும் சிஎஸ்பி கட்சியிலிருந்து விலகினர்.

கம்யூனிஸ்ட் கட்சியில்

            திருவிதாங்கூர் மற்றும் கொச்சியைப் பொருத்த அளவு 1938ம் ஆண்டு முக்கியமானது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பேரணியைத் தலைமையேற்றுச் சென்ற ஏகேஜி ஆல்வேயில் கைது செய்யப்பட்டார். விடுதலையானவுடன் “பிரபாதம்” (‘விடியல்’ என்று பொருள்படும்) செய்தித்தாள் இதழுக்காக நிதி திரட்ட அவர் சிலோன், சிங்கப்பூர், மலேயா நாடுகளுக்குச் சென்றார். (இஎம்எஸ் ஆசிரியராக இருந்த பிரபாதம் பத்திரிக்கை, இன்றைய சிபிஐ(எம்) கட்சியின் ‘மாத்ருபூமி’ பத்திரிக்கையின் முன்னோடியாகும்)

            1938ல் பினராயில் நடைபெற்ற கேரளா சிஎஸ்பி கூட்டத்தில் அந்தக் கட்சிக் கிளையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பாக மாற்றுவதென முடிவெடுக்கப்பட்டது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் கிருஷ்ணப்பிள்ளை, ஏகேஜி, இஎம்எஸ் மூவரும் இருந்தனர். ஏகேஜி தொழிலாளர்களிடையே பணியாற்றக் கண்ணூர் மற்றும் வங்காளத்திற்குச் சென்றார். 1940ல் தலைமறைவு வாழ்வில் சென்றவர் திருச்சிராப்பள்ளியில் 1941 மார்ச் 24ல் கைதானார். மீண்டும் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். கே தாமோதரன், டாக்டர் KB கிருஷ்ணன், PK பாலன், பாலசந்திர மேனன் முதலானவர்களை அவர் அங்கே சந்தித்தார்.

சிறையிலிருந்து தப்பித்தல்

            1941 செப்டம்பரில் ஏகேஜி மற்றும் சந்தோரத் இருவரையும் வேறு சிறைக்கு மாற்றுவதாக இருந்தது. அதே இரவில் ‘பெரும் தப்பித்தல்’ (சாகசத்தை) நிகழ்த்த மற்றவர்களோடு சேர்ந்து திட்டமிட்டனர். சில கருவிகளைச் சேகரித்து வெளியே தாண்டிச் செல்லப் போதுமான அளவு கற்சுவரில் துளையைத் தோண்டினர். நீண்ட நேரம் பெய்து கொண்டிருந்த பெருமழை அவர்களுக்குத் தோதான மறைவைத் தந்தது. காவற்காரர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். முள் வேலிகளைத் தாண்டிச் செல்லும் அம்முயற்சியில் அவர்கள் தங்களை மோசமாகக் காயப்படுத்திக் கொண்டு எப்படியோ தப்பிச் சென்றனர். வேகமாக ஓடினார்கள், கருமையான இரவுப் பொழுதுகளில் காடுகள் வழியாகவும் நடந்து கொண்டே இருந்தார்கள். இப்படியாக 14 நாட்கள் சிரமப்பட்டார்கள். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் முழுமையாக ஏகேஜி தலைமறைவாக இருந்தார்.

            அவர் 1945ல் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

சுதந்திரத்திற்குப் பின் : ஏகேஜி எதிர் மெட்ராஸ் உயர்நீதி மன்றம்

            இந்தியா விடுதலை அடைந்த 1947 ஆகஸ்ட் 15ம் நாள் ஏ கே கோபாலன் சிறையில் இருந்தார். மெட்ராசில் காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு 1947 அக்டோபரில் விடுதலையானார். ஆனால் காலனிய மிச்ச சொச்ச சட்டமான மெட்ராஸ் பொது அமைதி பராமரிப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். கோபாலன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு தள்ளுபடியானது. மீண்டும் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்திலேயே ரிட் தாக்கல் செய்து, அவர் தன் வழக்கில் தானே வாதாடினார். அந்த வழக்கு விசாரணையை நடத்தியவர் நீதிபதி சத்திய நாராயண ராவ். அரசியல் அமைப்புச் சட்டதில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மெட்ராஸ் பொதுஅமைதி சட்டம் மீறி இருப்பது பற்றிய கேள்விகளை உச்சநீதி மன்றத்திலும் உயர்நீதி மன்றத்திலும் ஏகேஜி எழுப்பினார். விசாரணையில் வாதங்கள் நிறைவடைந்த இறுதி நாளில் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் விடுதலையாகி சிறையின் கதவுகளைத் தாண்டி வெளியே வந்த உடன் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு கடலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். 1951ல் மீண்டும் ஒரு ரிட் பெட்டிஷன் மூலம் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரைத் தொடக் கூடாது என போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

           


1952 செப்டம்பர் 10ம் நாள் அவர் தோழியர் சுசீலாவை மணந்தார். அனைத்திந்திய கிசான் சபாவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1950களில் நடைபெற்ற சம்யுக்த மகாராஷ்ட்ரா மற்றும் மகா குஜராத் இயக்கங்களில் ஏகேஜி பங்கெடுத்தார்.      

தொழிலாளர் இயக்கத்தில்

            வடக்குக் கேரளாவில் பீடித் தொழிலாளர்கள் மத்தியில் கோபாலன் பணி செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர், ‘பீடி மற்றும் சுருட்டுத் தொழிலாளர்கள் (பணி நிலைமைகள்) மசோதா’வை 1966ல் கொண்டுவரத் துணை நின்றார். அப்போது செயல்திறன் மிக்க சிறப்பான உரையாற்றினார். நாடாளுமன்றத்திற்கு முன்பு முதன் முறையாக டெல்லி மார்ச் (டெல்லி பேரணி) 1962 செப்டம்பர் 13ம் நாள் நடைபெற்றது. சுமார் இரண்டு லட்சம் மக்கள் நாடாளுமன்றத்திற்குப் பேரணியாகச் சென்று ஒரு கோடி மக்களிடமிருந்து தாங்கள் சேகரித்த  கையெழுத்துக்களைச் சமர்ப்பித்தனர். அந்தப் பேரணியில் சிபிஐ சேர்மன் எஸ் ஏ டாங்கே மற்றும் மக்களவையில் கம்யூனிஸ்ட் குழுவின் தலைவரான ஏ கே கோபாலனும் உரையாற்றினர்.

நாடாளுமன்றத்தில்

            ஏ கே கோபாலன் மக்களவைக்கு நடந்த 1952 மற்றும் 1957 தேர்தல்களில் கண்ணூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். முதலாவது மக்களவையிலேயே அவர் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் குழுவின் தலைவராக, நீண்ட காலம் எதிர்கட்சித் தலைவராகவும் செயலாற்றினார். ‘கேட்டார் பிணிக்கும்’ சொல்லாற்றல் மிக்க பேச்சாளர் அவர்.

            சோவியத் யூனியன், சீனா உட்பட பல நாடுகளில் அவர் பயணம் செய்தார். பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒரு புத்தகமான “கேரளா – முந்தைய காலமும் நிகழ் காலமும்” என்ற நூலை ‘லாரன்ஸ் அண்ட் விஷ்ஆர்ட்’ பதிப்பகம் 1959ல் வெளியிட்டது.

கட்சியில் வகித்த பொறுப்புகள்

            1948ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது கட்சி காங்கிரஸ் நடந்தபோது சிறையில் இருந்த காரணத்தால் ஏகேஜி அதில் கலந்து கொள்ளவில்லை; எனினும் அவர் கட்சியின் மத்திய கமிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954 மற்றும் 1956 கட்சி காங்கிரஸ் மாநாடுகளிலும் ஏகேஜி மீண்டும் மத்திய கமிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

            கட்சி அமைப்பில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட பிறகு அமிர்தசரஸ் மாநாட்டில் (1958) அவர் மத்திய செகரெட்ரியேட்டுக்கும், 1961 விஜயவாடா காங்கிரஸில் மத்திய செயற்குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

            1964ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்ட பிறகு ஏகேஜி, சிபிஐ(எம்) கட்சியில் இணைந்தார். ஏகேஜி சிபிஐ(எம்) கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராகத் தொடர்ந்து இருந்தார்.

           


1977 மார்ச் 22ல் ஏகேஜி மறைந்தார். 1990 அக்டோபரில் இந்திய அரசு அவர் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டு அவரைக் கவுரவித்தது. கேரளாவின் அப்பெருமகன் –அவர் விரும்பியபடி ‘பாரத மாதாவின் நல்ல மைந்த’னாகி நாட்டில் பரவலாக நினைவில் நிறுத்திக் கொண்டாடப்படுகிறார்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

 

No comments:

Post a Comment