Tuesday 3 August 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 43 -- யக்ஞ தத் சர்மா

                                                                                                                                                        நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :                      

சில சித்திரத் சிதறல்கள் - 43


யக்ஞ தத் சர்மா:  மாணவர், தொழிற்சங்க

மற்றும் கம்யூனிச இயக்கத்தைக் கட்டி எழுப்பியவர்


--அனில் ரஜீம்வாலே

--நியூ ஏஜ் ஜூன் 06—12

            யக்ஞ தத் சர்மா தற்போது அரியானாவில் உள்ள ரோடக் மாவட்ட ஜாகவுளி கிராமத்தில் (அப்போது பஞ்சாப் மாநிலத்தின் பகுதியாய் இருந்தது) 1918 மார்ச் 1ம் தேதி பிறந்தார். தாய் பார்வதி, தந்தை மன்சரம் இருவரும் ஆசிரியர்கள். 1930ல் டெல்லிக்கு இடம் மாறியவர், அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த அவரது மூத்த சகோதரர் ஜனார்த்தன் சர்மாவுடன் தங்கினார். அவர்தான் அக்கிராமத்தின் முதலாவது பீளிடரும் (வழக்கறிஞர்) காங்கிரஸ் வட்டாரச் செயலாளருமாக இருந்தார். 1937ல் ஸ்ரீராம் வணிகக் கல்லூரியிலிருந்து யக்ஞ தத் இளங்கலை பட்டம் பெற்றார். 1940ல் பொருளாதாரப் பாடத்தில் முதுகலை எம்ஏ பட்டத்தை முதல் வகுப்பில் சிறப்பாகத் தேறினார். அக்கிராமத்திலிருந்து முதுகலைப் பட்டம் பெற்ற முதலாவது மனிதரவர். டெல்லி ராம்ஜாஸ் கல்லூரியில் பொருளாதாரம் கற்பிக்கும் விரிவுரையாளராக அப்போது பணியாற்றினார். செயின்ட் ஸ்டீபன் கல்லூரியிலேயே அப்போது படித்த எம் ஃபாரூக்கி பிற்காலத்தில் ஏஐஎஸ்எஃப் மாணவர் பெருமன்றம் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரானவர். அப்போது அவர்கள் இருவரிடையே தொடங்கிய நட்பு இறுதி வரை நீடித்தது.

யக்ஞ தத் சர்மா ‘ஒய்.டி’ எனப் புகழ்பெற்றார்

            1936ல் டெல்லியில் சுதேசி லீக் அமைப்பை ஒய்டி சர்மா, ஷங்கரா, கன்வர்லால் சர்மாவும் பிறரும் அமைத்தனர்.

            1936 ஆகஸ்ட்டில் நிறுவப்பட்ட மாணவர் பெருமன்ற அமைப்பு (ஏஐஎஸ்எஃப்) நாடு முழுவதும் மாணவர்கள் இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1936 நவம்பரில் லாகூரில் நடந்த  இரண்டாவது மாநாட்டில் ஒய்டி சர்மா பங்கேற்றார். அவ்வருட நவம்பரிலேயே ஸ்ரீராம் வணிகக் கல்லூரியில் மாணவர்கள் சங்கத்தை நிறுவிய அவர், சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏறத்தாழ ஒரே நேரத்தில் டெல்லியில் நிறுவப்பட்ட மாகாண மட்ட மாணவர்கள் சங்கம் பிற்காலத்தில் (DPSF) ‘டெல்லி புரொவின்சியல் மாணவர்கள் சம்மேளனம்’ என்றானது. அந்த அமைப்பில் உருவானவர்கள்தான் மிர் முஷ்டாக், இஷ் சந்திரா, KP ஷங்கரா, கன்வர்லால் சர்மா, ஹுக்கும் சிங் ராணா போன்ற பிற முக்கிய தலைவர்கள். ய்க்ஞ தத் சர்மா அதன் துணைத் தலைவர். 1937 –41 காலகட்டத்தில் அவர் DPSF அமைப்பின் பொதுச் செயலாளர் ஆனார். அந்நாட்களில் அலி சர்தார் ஜாஃப்ரி டெல்லியில் இருந்த ஆங்கில – அரேபிய கல்லூரியில் படித்து வந்தார்.

            அக்காலத்தில் மாணவர்கள் சம்மேளனத்தின் அலுவலகம் சாந்தினி சௌக் அருகே பாகீரத் அரண்மனையில் இருந்தது. 1938 ஜனவரி 1 முதல் 3 வரை மெட்ராசில் நடைபெற்ற ஏஐஎஸ்எஃப் மூன்றாவது மாநாட்டில் ஒய்டி சர்மா DPSF அமைப்பின் தலைவராகக் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் மாணவர் பெருமன்றத்தின் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

            1938 நவம்பர் 12 --14 ல் DPSF-ன் இரண்டாவது மாநாடு நடந்தது. டெல்லியில் 1940 ஜனவரி 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெற்ற AISF ஐந்தாவது மாநாட்டின் அமைப்பு ஏற்பாடுகளில் மிகத் தீவிரமாக ஒய்டி செயல்பட்டார். அப்போது அவர் சிபிஐ பொதுச் செயலாளர் பிசி ஜோஷி மற்றும் பிற தலைவர்களைப் பற்றி அறிந்து கொண்டார். ஒய்டி (YD) கம்யூனிஸ்ட் பிராக்க்ஷன் (சிறு குழுவாக, பெரும்பாலும் இரகசியமாகச் செயல்படும் அமைப்பு) களிலும் செயல்பட்டார்.

கம்யூனிச அரசியலில்

            ஒய்டி மாணவப் பருவ நாட்களிலிருந்தே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். ஏஐஎஸ்எஃப் செயல்பாடுகளில் மிகவும் தீவிரமாக இருந்தார். அவருடைய இயல்பான ஈர்ப்பு காங்கிரஸ்பால் இருந்தது. டெல்லியில் சிபிஐ அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான பாகல் சிங், அவரை 1939 மார்ச்சில் நடைபெற்ற திரிபுரி காங்கிரஸ் மாநாட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது பாகல் சிங் காங்கிரஸ் தலைவராகவும் டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்தார். அங்கே ‘தேசிய முன்னணி’ என்ற பெயரில் கம்யூனிஸ்ட்கள் குழு ஒன்று இருந்தது. அங்கே பிசி ஜோஷி, இசட் ஏ அகமது, கே எம் அஷ்ரஃப் முதலான எண்ணற்ற கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சர்மா சந்தித்தார்.

            ஒய்டி சர்மா, பாபா ராம்சந்திரா முதலான பிறர் 1939 ஜூலை 2, 3 தேதிகளில் நடைபெற்ற காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி (சிஎஸ்பி)யின் டெல்லி பிரதேச மாநாடு அமைப்பாளர்களாகச் செயல்பட்டனர். அம்மாநாட்டிற்கு மினு மசானி தலைமை தாங்கினார்.

 டெல்லியில் சிபிஐ அமைப்பு

            1939 டெல்லியில் சிபிஐ அமைப்புக் குழு (OC) ஒன்று அமைக்கப்பட்டது. டெல்லி கம்யூனிஸ்ட் தோழர்களோடு பிசி ஜோஷி மற்றும் ஆர்டி பரத்வாஜ் தொடர்பு கொண்டனர். அதன் தயாரிப்புப் பணிகளில் ஒய்டி, எம் ஃபாரூக்கி, பாகல் சிங் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியில் இருந்த பாகல் சிங் அமைப்புக் குழு செயலாளர் ஆனார்.

            நாக்பூரில் மிகப் பெரிய அளவில் 1939 அக்டோபரில் அனைத்திந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. ஒய்டி, ஃபாரூக்கி, பாகல் சிங் பங்கேற்றனர். அம்மாநாட்டின் முடிவுகளை அமல்படுத்த ஒய்டி உள்பட மாணவத் தோழர்களைப் பாகல் சிங் தனது காங்கிரஸ் அலுவலகத்திற்கு அழைத்தார்.

            1940 ஜனவரி 26ல் டெல்லியில் பெரிய அளவில் (இரண்டாவது உலகப் போருக்கு எதிரான) ‘போர் எதிர்ப்பு தினம்’ அனுசரிக்கப்பட்டது. யக்ஞ தத் அதில் தீவிரமாகப் பங்கேற்றார். புலனாய்வு அதிகாரி DIR அறிக்கைபடி அவருக்கு எதிரான கைது வாரண்ட் ஜனவரி 25ல்  பிறப்பிக்கப்பட்டது. அவருடைய சகோதரர் ஜனார்த்தன் சர்மா வீட்டில் திடீர் சோதனை நடத்திய போலீசார் பிப்ரவரி 4ல் ஒய்டி-யைக் கைது செய்தனர். அப்போது அவர் டெல்லி கட்சியின் செயலாளராக இருந்தார். டெல்லியில் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட பிறகு முதலில் கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் அவராவார். ஏராளனமாக கம்யூனிஸ்ட் நூல்கள் அறிக்கைகள் மற்றும் தலைமறைவு காலத்தில் வெளியிடப்பட்ட ‘கம்யூனிஸ்ட்’ என்ற மாத இதழின் சைக்ளோஸ்டைல் நகல் வெளியீடுகள் கைப்பற்றப்பட்டன.  

            தோழர்கள் முயற்சிகளால் ஒய்டி பிணையில் விடுதலையானார். அப்போதுதான் அவரால் எம் ஏ தேர்வை எழுத முடியும் என்பதே காரணம்; அத்தேர்வுகளில் முதல் வகுப்பில் தேறினார். வழக்கு பலமற்று இருந்ததால் அரசு வழக்கைத் திரும்பப்பெற வேண்டியதாயிற்று. அதற்குச் சில நாட்கள் முன்புதான் தனது தேர்வுகளை எழுதி முடித்த இந்திரஜித் குப்தா செயின்ட் ஸ்டீபன் கல்லூரியிலிருந்து வெளியே வந்திருந்தார். சர்மாவுக்கும் அவருக்குமிடையே இருந்த வேறுபாடு இந்திரஜித் குப்தா இன்னும் தீவிரமாக அரசியலில் ஈடுபடவில்லை என்பதே – பின்னர் அவரும் விரைவில் சேர்ந்தார். அவருடைய உதவியால் தடைசெய்யப்பட்ட அறிக்கை இதழ்களை அருண் போஸ் கல்லூரிக்குள் கொண்டு வருவது வழக்கம். ஓர் உதாரணம், சிபிஐ கட்சி இதழான தி நேஷனல் பிரண்ட் (தேசிய முன்னணி) இரகசியமாகக் கொண்டு வந்து சுமார் 80 பிரதிகளை விற்றது, அந்த நாட்களில், அந்த சட்டவிரோத கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஒரு சாதனை.

            எம்ஏ பட்டத் தேர்வில் தேறிய பிறகு ஒய்டி சர்மா, ஜவகர்லால் நேரு கைதானதை எதிர்த்து நடத்த வேலைநிறுத்தத்தில் மிகத் தீவிரமாகப் பங்கேற்றார். ஏஐஎஸ்எஃப் இயக்கம் அதில் முன்னணிப் பங்கு வகித்தது.

1940 ஏஐஎஸ்எஃப் நாக்பூர் மாநாட்டில் பங்கேற்பு

            ஏஐஎஸ்எஃப் நாக்பூர் மாநாட்டில் பங்கேற்றபோது அவர் கம்யூனிஸ்ட் பிராக்க்ஷன் செயல்பாடுகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அது ஒரு கடினமான மாநாடு, அதில்தான் மாணவர் அமைப்பில் பிளவு ஏற்பட்டது. இக்கட்டுரை ஆசிரியரிடம் (அனில் ரஜீம்வாலே) ஒரு பேட்டியில் ஒய்டி தெரிவித்தார்: ஏஐஎஸ்எஃப் பொதுச் செயலாளராக எம் எல் ஷா ஆவதைத் தடுக்க எம் ஃபாரூக்கி ஒரு கம்யூனிஸ்ட் குழுவை அமைத்தார். அப்போது 1940 மௌரீஸ் காயர் (Maurice Gwyer) வழக்கு தொடர்பாக ஃபாரூக்கி மிகவும் புகழ் பெற்றிருந்தார். டெல்லி பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரான மௌரீஸ் காயர் கொடும்பாவியை எரித்தது தொடர்பான அவ்வழக்கில் அவர் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதும் அல்லாமல் அவருடைய பட்டமும் ரத்து செய்யப்பட்டது. அந்தப் பட்டத்தை இந்தியா விடுதலை அடைந்த பல ஆண்டுகளுக்குப் பிறகே மீண்டும் திரும்பப் பெற்றார்.

            1939 ஜூலையில் மூன்று நாட்களுக்குக் கோடைக்கால அரசியல் பள்ளி நடத்தப்பட்டது.

            1941 மே 24 –26 தேதிகளில் டெல்லி மாணவர்கள் சம்மேளத்தின் மூன்றாவது மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்குத் தலைமை கே எம் அஷ்ரஃப், மாநாட்டைத் தொடங்கி வைத்தவர் பேராசிரியர் ரண்தீர் சிங். 1941 டேராடூனில் நடைபெற்ற அரசியல் பள்ளியில் சர்மாவும் கலந்து கொண்டார். பாட்னாவில் 1941 டிசம்பர் 31 முதல் நடைபெற்ற ஏஐஎஸ்எஃப் மாநாட்டில் ஒய்டி DPSF அமைப்பின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.

            1942 ஏப்ரலில் இந்தியா வந்த சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களை டெல்லியில் ஒய்டி, ஃபாரூக்கி மற்றும் கேஎம் அஷ்ரஃப் சந்தித்தனர்.

            ஒய்டி அப்போது கட்சிக் கல்விக்குப் பொறுப்பாளராக இருந்தார். கட்சி வகுப்புகள் பலவற்றை ஏற்பாடு செய்து நடத்தியதுடன் படிப்பகங்கள் (ஸ்டடி சர்கிள்ஸ்) பல அமைத்தார்.

            கட்சி மீது விதிக்கப்பட்ட தடை 1942 ஜூலை 24ல் ரத்தானது. 1942 செப்டம்பரில் கட்சியின் சிறப்புப் பிளீனம் பம்பாயில் நடத்தப்பட்டபோது, ஒய்டி டெல்லி கட்சியின் அமைப்புக் குழுவின் (OC) செயலாளராகக் கலந்து கொண்டார்.  சுதந்திரப் போரின் 1942 இயக்கத்தை ஒட்டி கட்சியும் மாணவர் பெருமன்றமும் பேரணியை நடத்தினர். அதில் போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதுடன் பிறகு துப்பாக்கிச் சூடு தாக்குதலும் நடத்தப்பட்டது.

ஒய்டி சோவியத் நண்பர்கள் அமைப்பிலும் (FSU) தீவிரமாகச் செயலாற்றினார்.

1943 பம்பாயில் நடைபெற்ற சிபிஐ முதலாவது கட்சிக் காங்கிரஸ் மாநாட்டில் ஒய்டி மற்றும் பாகல் சிங் கலந்து கொண்டனர்.

அவர்கள் திரும்பும் வழியில் 1943 டிசம்பர் 12ல் காந்தி மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான கூட்டத்தில் ஒய்டி, பாகல் சிங் மற்றும் முகமது யாசின் உரையாற்றினர். அந்தக் கூட்டம் வங்காளப் பஞ்சம் குறித்த பிரிட்டிஷ் கொள்கைகள், ஜப்பானிய ஆக்கிரமிப்பு தாக்குதல் முதலான பிரச்சனைகளை எதிர்த்து நடத்தப்பட்டது. 

அவர்கள் திரும்பி வந்த பிறகு டெல்லி காந்தி மைதானத்தில் 1944 ஜனவரி 23 முதல் 25 வரை டெல்லி கட்சியின் முதலாவது மாநாடு நடத்தப்பட்டது. அதை இராகுல சாங்கிருத்தியாயன் தொடங்கி வைத்தார். பின்னர் 1944 ஜூலையில் அவர் டெல்லி பிரதேச தொழிற்சங்கங்கள் கவுன்சிலின் (PTUC) பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1945ல் அவர் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கான தேர்தல்களில் போட்டியிட்டார்.  

1945 –47 காலகட்டத்தில் பல்வேறு பிரிவுகள் மற்றும் வர்க்கங்களின் பெருந்திரள் இயக்கங்கள் நடைபெற்றன. டெல்லியிலும் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 1946ல் தபால் தந்தித் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் ஒய்டி கைது செய்யப்பட்டார். அவர் பிறருடன் சேர்ந்து காசியாபாத் இரயில்வே வேலைநிறுத்தத்தத்திற்கும் தலைமையேற்றார்.

விடுதலைக்கு முன் சிபிஐயின் கடைசி மத்தியக் குழு கூட்டம் டெல்லி கட்சி கம்யூன் இடத்தில் நடைபெற்றது. அது ஒய்டி சர்மாவின் வீடாகும். அங்கே பர்மா கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்கால உறுப்பினரான தேயின் (Thein) அவரைச் சந்திப்பது வழக்கம். டெல்லியில் அவர் ஒரு பத்திரிக்கையாளராக வாழ்ந்தார்.

விடுதலைக்குப் பிறகு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியாவின் விடுதலை சாதனையை வரவேற்றது. விரைவில் பிடிஆர் பாதை கட்சித் தலைமையில் ஆதிக்கம் செலுத்த பி டி ரணதிவே பொதுச் செயலாளர் ஆனார். அதனைத் தொடர்ந்து ஒய்டி சர்மா, எம் ஃபாரூக்கி, சரளா சர்மா மற்றும் ஷகில் அகமது டெல்லிக் கட்சியின் தலைமையிலிருந்து நீக்கப்பட்டனர். 1949 மார்ச் 4ல் ஒய்டி கைதானார். 1949 ஆகஸ்ட் மாதம் அவருடைய முதல் மனைவி மறைவுக்காக ஒரு மாதம் பரோலில் விடுதலையானார். கட்சியின் உத்தரவை ஏற்று அவர் உடனடியாகத் தலைமறைவு வாழ்வில் சென்றார். 1950 மார்ச் 20 வரை அவர் அவ்வாறே இருந்து, கட்சி சொன்ன பிறகு சரணடைந்தார். அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

1951ல் கல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் தலைமறைவு மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். கட்சியின் பாதை மாற்றத்துக்கு உள்ளாகி, அஜாய் கோஷ் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது யோசனைக்கு ஏற்ப ஒய்டி சர்மா கட்சி மத்திய குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார். 1953 மற்றும் 1956 கட்சி காங்கிரஸ் மாநாடுகளில் மீண்டும் மத்திய குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1958 அமிர்தசரஸ் கட்சி காங்கிரஸில், கட்சி அமைப்பு நிலைகளில் மாறுதல் செய்யப்பட்ட பிறகு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சில் உறுப்பினராக ஒய்டி சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆசியா –பசிபிக் (பகுதியைச் சுற்றியுள்ள) விளிம்பு நாடுகளின் அமைதி மாநாடு (Asia-Pacific Rim Countries’ Peace Conference) 1952ல் பீக்கிங் (தற்போதைய பீஜிங்)கில் நடந்தபோது அம்மாநாட்டில் ஒய்டி சர்மா பார்வையாளராகக் கலந்து கொண்டார்.

தொழிற்சங்க இயக்கத்தில்

            1952க்கு பிறகு பெரும்பகுதி நேரத்தைத் தொழிற்சங்க இயக்கத்திற்கு அர்ப்பணித்தார்; அவர் ஏற்கனவே விடுதலைக்கு முன்பிருந்தே தொழிற்சங்க இயக்கத்தில் இருந்தவர்தான். எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பிரிவில் தொழிற்சங்க இயக்கம் கட்டுவதில் அவர் மிகப் பெரும் பங்களிப்பை வழங்கினார். பெட்ரோலியம் துறை தொழிலாளர்கள் சங்கத்தில் அவர் முன்னணித் தலைவராக இருந்தார். எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் தொழிற்பிரிவில் இந்தியா, சோவியத் யூனியன், ரூமானியா, போலந்து முதலான நாடுகளில் எஸ்ஏ டாங்கே மற்றும் பிறருடன் இணைந்து அவர் ஆய்வுகளை நடத்தி, இத்துறைப் பிரிவில் பொதுத்துறை நிறுவனத்தைக் கட்டியெழுப்ப விரிவான திட்டங்களைத் தயாரித்து அளித்தார். கச்சா எண்ணெய் எடுத்தல், அதனைச் சுத்திகரித்தல் மற்றும் எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் உற்பத்தி முதலிய பிரிவுகளில் ஆய்வுகளை நடத்தினார். இத்துறையைத் தேசியமயப்படுத்துவதில் அவர் அளப்பறிய பங்காற்றினார்.

            அது தவிர, தேயிலை, என்ஜினியரிங், டயர், காப்பீடு, ஹோட்டல் மற்றும் பிற தொழிற்துறை பிரிவுகளிலும் ஒய்டி பணியாற்றினார். 1954ல் அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) பேரியக்கத்தின் பொதுக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1973 மற்றும் 1984 காலகட்டத்தில் ஏஐடியுசி செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அதன் துணைத் தலைவரானார். டெல்லி மாகாணத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் (PTUC) செயலாளராகவும், தலைவராகவும் ஒய்டி சர்மா 15 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். அவரது உதவி மற்றும் முயற்சியால் டெல்லி கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.

            1953ல் அவர் சரளா சர்மா அம்மையாரை மணந்தார்.

            இந்திய விடுதலையின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் விடுதலை வீரர்களுக்கான ‘தாமிரப் பத்திரம்’ வழங்கி அவர் கவுரவிக்கப்பட்டார்.

            மாணவர் இயக்கங்கள் மற்றும் தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டியெழுப்பிய யக்ஞ தத் சர்மா (ஒய்டி சர்மா) 2004ம் ஆண்டு ஜனவரி 11ம் நாள் மறைந்தார்.

அவரது புகழ் நீடு வாழ்க!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

    

 

 

No comments:

Post a Comment