Tuesday 27 July 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 42 சந்திரா சிங் கார்வாலி

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :                      

சில சித்திரத் சிதறல்கள் - 42


சந்திரா சிங் கார்வாலி : 

அமைதியான 1930 பெஷாவர் கிளர்ச்சியின் கதாநாயகன்

--அனில் ரஜீம்வாலே

--நியூ ஏஜ் மே 23—29

            

           1930 பெஷாவரில் சந்திரா சிங் கார்வாலியால் தலைமை தாங்கி நடந்தப்பட்ட பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த ராயல் கார்வால் ரைபிள்ஸ் பிரிவின் அமைதியான கிளர்ச்சி பெரிதும் அறியப்படாத ஒன்று;  ஒருக்கால் பிரிட்டிஷ் இராணுவத்தில் அவர்தான் முதல் கிளர்ச்சிக்காரராக இருக்கக் கூடும். சந்திரா சிங் பிற்காலத்தில் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட்டாக மாறினார்.

            சந்திரா சிங் கார்வாலி தற்போதைய உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்வால் மாவட்ட தாளிசய்ன் தாலுக்கா, பட்டி சௌதான், சாய்னி மேரா மாசா கிராமத்தில் 1891 செப்டம்பர் 25ல் பிறந்தார். (டிசம்பர் 25 என்று இணைய கட்டுரைகள் சிலவற்றில் காணப்படுகிறது). தந்தை ஜதாலி சிங் பண்டாரி. அப்பகுதியில் கற்க வசதி இல்லாததால் சந்திரா சிங் முறைசாரா கல்வி பயின்றார். தனது தாயைப் பற்றி எழுதும்போது, ‘அவர் படிப்பறிவு இல்லாதவராயினும் தாய்தான் ஆழமாக தன்னிடம் தாக்கத்தைச் செலுத்தி தனது நேர்மறையான நற்குணங்களுக்குக் காரணமானார்’ என்று குறிப்பிடுகிறார். அழகு கொஞ்சும் சுற்றுச்சூழல் அற்புதமாகச் சூழ்ந்திருக்க அவர் வாழ்ந்தார். அங்கே மரங்களால் மூடப்பட்ட மலைகள், எங்கும் வண்ண மலர்கள், பாடித் திரியும் பறவைகள் நிறைந்திருந்தன. அந்த இயற்கை அவரிடம் ஆழமான செல்வாக்கைச் செலுத்தி அவருடைய ஆளுமையை வடிவமைத்தது.

            இளமையிலேயே திருமணம் முடித்து, நிலப்பிரபுத்துவத்தோடு பிரிட்டிஷ் காலனிய பழக்க வழக்கங்களின் சுரண்டல் கொடுமைகளை ஏராளம் அனுபவித்தார். அந்த வழக்கங்களைப் பொதுவாக ‘வர்தாஸ்ட்’ (‘vardast’) (நால்வர்ண முறையா என்பது மொழிபெயர்ப்பாளருக்கு நிச்சயமில்லை) என்பார்கள்; அதற்குப் பிரிட்டிஷாரின் ஆதரவும் இருந்தது. அதன்படி அரசு அலுவலர்கள், அது சாதாரண பியூன் (சர்பாசி)யாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் அவர்கள் தங்குவதற்கு இடம், உணவு, துணி துவைத்துக் கொடுத்தல் முதலான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். அதில் சிறிது தவறு ஏற்பட்டாலும் அனைத்து கிராமவாசிகளும் அவமானங்கள், தண்டனைகளை அனுபவித்தாக வேண்டும். இந்த அனைத்துக் கொடுமைகளையும் சந்திரா சிங் நேரடியாக அனுபவித்தார்.

முதல் உலகப்போர் இராணுவத்தில்

            அப்போது 1914ல் முதல் உலகப் போர் தொடங்கிய நேரம். பெரும் எண்ணிக்கையிலான கார்வாலி இன மக்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டு ஐரோப்பா உட்பட பல முன்னணி போர்க் களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவ்வூரின் மலைகளைச் சுற்றி இளம் போர்வீரர்கள் இராணுவச் சீருடை அணிந்து விரைப்பாக நடந்து சென்றபோது அவர்களின் தொப்பி மேல்நோக்கி ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வளைந்து இருந்ததும் இளம் சந்திரா சிங்கை வெகுவாக ஈர்த்தது! அவனை அவர்கள் இராணுவத்தில் சேருமாறு அழைத்தனர், இலவசமாக உணவு, இலவசமாக தங்கும் இடம் மற்றும் உலகத்தைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்குமென்றனர்! சந்திரா சிங்கும் அவர்களின் அந்தக் கவர்ச்சி வார்த்தைகளுக்கு மயங்கி வாய்ப்புக்காகக் காத்திருக்கத் தொடங்கினான்.

1914 செப்டம்பர் 1தேதி ஆளெடுக்கும் ஹவில்தார் ஒருவர் கிராமத்திற்கு வந்தார். சந்திரா சிங்கின் வீடுதான் வரிசைகளில் முதலில் இருந்தபடியால் அதிருஷ்டம் விழுந்தது போலாயிற்று. தந்தையின் உத்தரவுக்கு இணங்க சந்திரா சிங் ஹவில்தார் உணவைத் தயாரித்துக் கொள்ள வசதியாகப் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களைத் தயாரித்து அளித்தார். ஹவில்தாரிடம் தான் இராணுவத்தில் சேர முடியுமா என அவன் வினவ, ஹவில்தார் ஆமோதித்தபோது அவன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். சந்திரா சிங் அந்த ஹவில்தாருடன் செப்டம்பர் 3ம் தேதி விடியற் காலையில் இரகசியமாகக் கலோதன்டா (லேன்ஸ்ட்வுண்) என்ற இடத்திற்கு வீட்டைவிட்டுப் புறப்பட்டார். 2/39 கார்வாலி ரைபிள்ஸ் (துப்பாக்கிப்) பிரிவின் 6வது கம்பெனி 12வது பிரிவில் சந்திரா சிங் சேர்ந்தார். இராணுவத்தில் சேர பெற்றோர்களின் ஆசியையும் பெற்றார்.

பிரான்ஸ் போர்க்களம் (1915)

            75 கார்வால் ரைபிள்ஸ் ஜவான்களுடன் சந்திரா சிங் 1915 ஜூலை 6ல் பம்பாய் புறப்பட்டார். வழியில் படைகள் கடுமையான காலராவால் பாதிக்கப்பட்டு 15 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டனர். 300 கார்வாலிய வீரர்கள் உட்பட 700 ஜவான்களுடன் ‘கோகநாடா’ கப்பலில் 1915 ஆகஸ்ட் 1ல் அவர்கள் விக்டோரியா பண்டருக்குப் புறப்பட்டனர். ஆகஸ்ட் 14ம் நாள் ஆடென் மற்றும் போர்ட் சயித் வழியாக (பிரான்சின்) மார்ஷிலெஸ் (Marseilles) அடைந்தனர்.

அது முற்றிலும் வேறு உலகம், சந்திரா சிங் அங்கே பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய வாழ்க்கை முறையை அனுபவித்தார். ஜெர்மானியர்களுக்கு எதிரான சில கோரமான மிகக் கடினமான பதுங்குகுழி போர்முறை யுத்தங்களில் அவர் பங்கேற்றார்; எந்திரத் துப்பாக்கிகளால் தோட்டாக்களைப் பொழிந்து வெடி குண்டுகளை வீசி, துப்பாக்கி மற்றும் துப்பாக்கி பயோநெட் கூர்முனைக் கத்திகளால் குத்திக் கிழித்துப் போரிட்டு அழிவுகளை ஏற்படுத்தியபடி போரிட்டார். அவற்றில் சாவிலிருந்து நூலிழைகளில் தப்பினார் என்றுதான் கூற வேண்டும். அந்தப் போர்களை ராகுல சாங்கிருத்தியாயன் மிக விரிவாக விவரித்துள்ளார். பிரான்சில் இரண்டு மாதங்கள் மற்றும் எட்டு நாட்கள் தங்கியிருந்தது அவரை முழுமையாக மாற்றியது.

சந்திரா சிங்கும் ஏனைய வீரர்களும் 1915 அக்டோபரில் இந்தியாவுக்குப் புறப்பட்டு 1916 பிப்ரவரியில் இந்தியா வந்தடைந்தனர். வரும் வழிகளில் பதுங்கு குழிகளை வெட்டுவது போன்ற பல கடமைகளைச் செய்ய வேண்டியிருந்தது.  

சந்திரா சிங் லான்ஸ் நாயக் பதவி உயர்வு பெற்று 12வது ப்ளாட்டூனின் 4வது பிரிவின் கமாண்டர் ஆனார். அவர்கள் 1917ல் மெசபடோமியா சென்று அங்கே துருக்கியர்களுக்கு எதிரான  பஸ்ரா மற்றும் ராமதீ (ஈராக்) போர்களில் தகிக்கும் வெப்பத்தில் போரிட்டனர்.

மனைவி இறந்து போனதும் இரண்டாவது முறை அவர் மணம் செய்து கொண்டார்.

தேசிய இயக்கத்தில்

            ஒருமுறை இரண்டு அரசியல் கைதிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உத்தரவுகளுக்கு மாறாக அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார் சந்திரா சிங். அப்போதுதான் முதன் முறையாக அரசியல் அறிமுகம் ஏற்பட்டு தேசிய இயக்கம் பற்றிய பல உண்மைகளை அறிந்து கொண்டார். அதில் வயதுமுதிர்ந்த கைதி, ‘தனது மகனும்கூட இராணுவதில்தான் இருப்பதாகத்’ தெரிவித்தார்; ஒரு மகன் தனது தந்தையைக் கைது செய்தால் சந்திரா சிங் எப்படிப்பட்ட உணர்வில் இருப்பார் என அவர் கேட்டார். இவ்விவாதம் அவருள் மின்னல் கீற்றைப் பாய்ச்சியது.

            கோவிந்த் வல்ல பந்த், ஹர்கோவிந்த் பந்த் பிறருடன் சேர்ந்து குமாவுன் பரிஷத் (Kumaon Parishad குமாவுன் பகுதியின் சபை) அமைத்து நிலவுடைமை முறையை எதிர்த்தனர்.  (உத்தர்காண்டின் குமாவுன் இடத்தின் பெயருக்குக் கூர்மாவதாரம் பிறந்த மண் என்று அர்த்தம்) அல்மோராவில் மிகப் பெரிய பேரணி நடத்தப்பட்டது. அந்த இடம் முழுவதும் ‘காந்திஜிக்கு ஜெய்’ என்ற முழக்கம் விண்ணதிர எதிரொலித்தது. (அந்த இயக்கம் சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது. ஹர்கோவிந்த் பந்த் சபையின் முதல் தலைவர்)

            போருக்குப் பின் படைப் பிரிவுகளைக் கலைத்தது நெருக்கடிகளை ஏற்படுத்தியது. உணவுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட பட்டினியால் சிலநேரம் மக்கள் இறந்தார்கள். போர் வீரர்கள் வேலை இழந்தார்கள். பிரான்சில் 13ஆயிரம் கார்வாலியர்கள் இறந்து போக, அவர்தம் குடும்பம் நிர்கதியானது. அப்பிராந்தியத்தைப் பிளேக், காலரா, மலேரியா சூழ்ந்தது.

            சந்திரா சிங்கும் மற்றவர்களும் தாங்கள் சாதாரண வீரர்களாகப் பதவி இறக்கப்பட்டதை எதிர்த்தனர். காந்திஜியைச் சந்திக்க விரும்பி அவர் டேராடூன் மற்றும் ஜகத்ரீ சென்றபோது அவரால் சந்திக்க இயலவில்லை. அவர் அங்கே சந்தித்தது மோதிலால் நேருவைத்தான் என்பதைப் பின்னரே அறிந்து கொண்டார். மோதிலாலிடம் தான் ‘காந்திஜியின் படை’யின் ஒரு வீரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டபோது சந்திரா சிங் முதலில் பிரிட்டிஷ் இராணுவத்திலிருந்து விலக வேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் அவரைக் கொடுமைப்படுத்துவர் என்று அறிவுறுத்தினார்.

            இதன் மத்தியில் வாஸிரிஸ்தான் மற்றும் கைபர் கணவாய்க்கு அனுப்பப்பட்டபோது சந்திரா சிங் கம்பெனி குவார்டர் மாஸ்டர் பதவியில் இருந்தார். அங்கிருந்து திரும்பும்போது அவர் ஒரு ஆர்ய சமாஜ் உறுப்பினராக மாறியிருந்தார். இப்போது அவர் சரளமாகப் பத்திரிக்கைகளைத் தினமும் படித்துக் கான்பூர் போல்ஷ்விக் சதி வழங்குகளைப் பற்றியும் எஸ் ஏ டாங்கே மற்றும் பிற தலைவர்கள் பற்றியும் தெரிந்து கொண்டார். இராணுவத்தில் செயல்பட்ட இரகசிய கூட்டங்களில் பங்கேற்றவர் காங்கிரஸில் சேரும் இலட்சியம் கொண்டவராக இருந்தார்.  

            கார்வால் திரும்பிய சந்திரா சிங்குக்கு ஒரு கூட்டத்தில் காந்திஜி தனது கைகளாலேயே காங்கிரஸ் ‘குல்லா’ வழங்கினார்.

சரித்திரப் புகழ் வாய்ந்த பெஷாவர் கிளர்ச்சி (1930)

          

  காந்திஜி புகழார்ந்த தண்டி யாத்திரையை 1930 மார்ச் 12ல் தொடங்கினார். பெஷாவர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் காங்கிரஸின் விரிவான இயக்கமும் ‘எல்லை காந்தி’ எனப் புகழப்படும் கான் அப்துல் கப்பார் கான் அவர்களின் குதை கித்மத்கர் (இறைவனின் தொண்டர்கள்) என்ற போராட்ட இயக்கமும் வீறுகொண்டு எழுந்தன. 1930 ஏப்ரலில் சந்திரா சிங்கின் 2/18 கார்வால் ரைபிள் பிரிவு பெஷாவருக்கு வெளியே தயாராக நிறுத்தப்பட்டனர்.

            ஏப்ரல் 23ல் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. சந்திரா சிங்கின் படைப் பிரிவு காலையிலேயே அங்கு கொண்டுவரப்பட்டு, தேவையெனில் கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட உத்தரவிடும்படி பணிக்கப்பட்டிருந்தனர். 22ம் தேதி மாலை சந்திரா சிங் நடத்திய இரகசிய கூட்டத்தில் கம்பெனிகளிலிருந்து பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுடும்படி உத்தரவிட்டால், அவ்வாறு சுடுவதற்கு மறுப்பது என முடிவு செய்தனர்.

            கிஸ்ஸா காவானி பஜாரில் (கதை சொல்லிகள் சந்தை) காங்கிரசும் குதை கித்மத்கர் இயக்கத்தினரும் ஏப்ரல் 23ல் நடத்திய கூட்டத்தில் படைகள் வரிசையாய் நிறுத்தப்பட்டன. கார்வாலி ரைபிள்ஸ் அங்கே செல்லுமாறு உத்தரவிட்டபோது, சந்திரா சிங் உட்பட 36 பேர் பின்னே நிறுத்தப்பட்டு விட்டனர். படைப் பிரிவுகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் சாக்கில் அந்த இடத்திற்குச் செல்ல மேஜர் பி போவெல் அவர்களிடம் அனுமதி பெற்றுவிட்டார். சில கழுதைகளை ஏற்பாடு செய்த சந்திரா சிங் வழியெல்லாம் தண்ணீர் சுமந்து சென்றார்.

            கூட்டம் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. கலைந்து சென்றுவிடுமாறும், இல்லையெனில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடுவேன் எனக் கேப்டன் ரிக்கெட் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களை நோக்கி உத்தரவிட்டான். அவருக்கு அடுத்து சந்திரா சிங் நின்று கொண்டிருந்தார். ரிக்கெட் ‘ஃபையர்’ என ‘சுடு’வதற்கு உத்தரவிட, பக்கத்தில் இருந்த சந்திரா சிங்  ‘சீஸ் ஃபையர்’ (சுட வேண்டாம், துப்பாக்கிச் சூட்டை நிறுத்துங்கள்) என மாற்று உத்தரவைப் பிறப்பித்தார். உத்தரவு மற்ற கம்பெனிகளுக்கும் அனுப்பப்பட்டது. பிரிட்டிஷ்காரர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். என்ன செய்கிறாய் எனக் கேட்டபோது சந்திரா சிங் இவ்வாறு பதில் அளித்தார்: “நாங்கள் ஆயுதமற்ற நிராயுதபாணிகளைச் சுட மாட்டோம்”. கார்வாலி வீரர்கள் தங்கள் ரைபிள்களைக் கீழே வைத்து விட்டனர்.

            எனவே பிரிட்டிஷ் படைவீரர்கள் திரட்டப்பட்டனர். அடுத்து அங்கே நடந்தது மற்றுமொரு ‘ஜாலியன்வாலா பாக்’. கண்டபடிச் சுடத் தொடங்கியவர்கள் கவச வண்டிகளால் மக்களை நசுக்கினர். இயந்திரத் துப்பாக்கிகள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன. மைதானம் முழுவதும், வீதிகள், சந்துகள் எல்லாம் இறந்த உடல்கள் இறைந்து கிடந்தன. 300க்கும் மேற்பட்டவர்கள் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டனர். கைகளில் எது கிடைத்ததோ அதைக் கொண்டு மக்கள் எதிர்க்கத் தொடங்கினர்.  

பிரித்தானிய படைவீரர்களுக்கும் அறவழி சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 1930 ஏப்ரல் 23ல் பெஷாவர் நகரில் படைவீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக் கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்ட இத்துயர நிகழ்வே கதை சொல்லிகள் சந்தைப் படுகொலை அல்லது கிஸ்ஸா காவானி பஜார் படுகொலை என்றழைக்கப்படுகிறது.

இராணுவக் கோர்ட்டு விசாரணை

            மக்களும் வீரர்களும் சந்திரா சிங்கைச் சூழ்ந்து கொண்டு வாழ்த்துக் கூறினர். கார்வாலி வீரர்களை முகாம்களுக்கு அழைத்துச் சென்று ஆயுதங்களை அகற்றி அவர்கள் மீது இராணுவக் கோர்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

            அடுத்த நாள் மீண்டும் கார்வாலி ரைபிள்ஸ் வீரர்களை அங்கே செல்லுமாறும் அதற்கு மாறாக உத்தரவுகளை மீறினால் சுடப்படுவார்கள் என்றும்  எச்சரிக்கப்பட்டனர். அவர்கள் மிகச் சாதாரணமாக இராணுவ டிரக் வண்டியில் ஏற மறுத்து விட்டனர். 67 ஜவான்கள் சந்திரா சிங் தலைமையில் கடிதத்தில் கையெழுத்திட்டு பதவி விலகினர். அவர்கள் அனைவரும் அபோட்டாபாத் அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு வகையான ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டனர். சந்திரா சிங்குக்கு ஆயுள் தண்டனை. இறுதியில் அவர் 1930 ஜூன் 12ம் நாள் அப்போட்டாபாத் அனுப்பப்பட்டு மிக மோசமான, வெளிச்சம் இல்லாத, சிறியதொரு சிறைக் கொட்டகையில் மூன்றடிக்கு ஆறரை அடி அளவில் இருந்த பிளாட்பார்ம் போன்ற இடத்தில் அடைக்கப்பட்டார்; தரையில் மாவு அறைக்கும் எந்திரம் (சக்கி), நாற்றமெடுக்கும் கழிவறைப் பொந்து மற்றும் எல்லா இடத்திலும் சாகடிக்கும் பூச்சிகள் நிறைந்த இடம்!

            மறுநாள் சந்திரா சிங் இரும்புச் சங்கிலியால் (பெடீ தண்டா) பிணைக்கப்பட்டார். அந்தச் சங்கிலியைச் சுமந்தபடிதான் தொடர்ந்து 6 ஆண்டுகள் இருந்தார்! அந்தச் சங்கிலிகள் 1936 ஜூன் 21ம் நாள் பெய்ரேலி சிறையில் துண்டிக்கப்பட்டது! இப்படி 11 ஆண்டுகள், மூன்று மாதம் மற்றும் 16 நாட்கள் இடைவெளியின்றி அவர் சிறையில் இருந்தார்.

கம்யூனிஸ்ட்களுடன் தொடர்பு

            இந்த 11 ஆண்டுகளில் நைனி, லக்னோ, அல்மோரா, டெராடூன், பெய்ரேலி முதலான பல்வேறு சிறைகளுக்குப் பயணம் செய்து சொல்லொண்ணா கொடுமைகளையும் அவமானங்களையும் அனுபவித்தார்; (அதனை எதிர்த்து) உண்ணாவிரதப் போராட்டங்களிலும் ஈடுபட்டார். யஷ்பால், இரமேஷ் சந்திரா குப்தா, நேரு, சுபாஷ் போஸ், ஜ்வாலா பிரசாத் குப்தா, ஜெய் பகதூர் சிங், ஆச்சார்ய நரேந்திர தேவ், பண்டிட் சுந்தர்லால் மற்றும் எண்ணிறந்த பலரையும் சந்தித்தார். அவர்கள் அவரைக் கம்யூனிச இயக்கத்தின்பால் வடிவமைத்தனர். தற்போது அவர் ‘படே பாய்இ’ (மூத்த சகோதரர்) ஆனார். 

            1941 செப்டம்பர் 26ல் அவர் விடுதலை செய்யப்பட்டாலும் கார்வாலில் நுழையத் தடை விதிக்கப்பட்டார். நேருவின் வேண்டுகோளை ஏற்று அலகாபாத் காங்கிரஸ் தலைமையகமாய் இருந்த ஆனந்த பவனத்தில் அவரும் அவரது குடும்பத்தினரும் தங்கினர்; அதன் பிறகு காந்திஜி அவரை வார்தா ஆசிரமத்துக்கு அழைக்க, அங்கே காந்திஜியுடன் நெருங்கிய நட்பு வளர்ந்தது.

1942 இயக்கத்தில்

            பின்னர் அவர் அலகாபாத்துக்கும் வாரணாசிக்கும் திரும்பியபோது நாடு வெள்ளையனே வெளியேறு 1942 இயக்கத்தில் சென்று கொண்டிருந்தது. மிகப் பிரம்மாண்டமான மாணவர்கள் கூட்டமொன்றில் இயக்கத்தின் ‘கமாண்டர் இன் சீப்’ என அவரும் ‘சர்வாதிகாரி’யாக டாக்டர் கௌரலாவும் நியமிக்கப்பட்டனர். இளைஞர்களை அவர் தொலைபேசிக் கம்பிகளை வெட்டுவது எப்படி மற்றும் ரயில்வே தண்டவாளங்களை அடியோடு அகற்றுவது முதலானவற்றில் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். 1942 அக்டோபர் 6ல் கைதான அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு மிர்ஸாபூருக்கு அனுப்பப்பட்டார். சிறையில் அங்கே சிவ் வர்மா உள்பட பல கம்யூனிஸ்ட்களைச் சந்தித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக

            1945ல் விடுதலையான பிறகு சிபிஐ பொதுச் செயலாளர் பிசி ஜோஷியோடு தொடர்பு கொண்டார்; பிசி ஜோஷி அவருக்கு 100ரூபாய் அனுப்பி அவரைப் பம்பாய்க்கு வருமாறு அழைத்தார். குவியல் குவியலாக மார்க்சிய நூல்களைப் படிப்பதற்காக அளித்த ஜோஷி அவருக்கு மார்க்சியத்தில் பயிற்சி அளித்தார். பயிற்சி முடிந்த 6 மாதங்களில் தொழிலாளர் வர்க்கத்தினர் நிறைந்த பகுதிகளில் பணியாற்ற அவர் அனுப்பி வைக்கப்பட்டார். கட்சி தலைமையகத்தில் 72 தோழர்களுடன் அமைந்த கம்யூன் வாழ்க்கை சந்திரா சிங்கை ஆழமாக ஈர்த்தது. ஜோஷி அவரை அகில இந்திய கிசான் சபாவின் நேத்ரகோனா (வங்காளம்) மாநாட்டிற்கு அழைத்துச் சென்றார்.

            அப்போது சந்திரா சிங் ‘பெஷாவர் எழுச்சியின் கதாநாயகன்’ என்ற புகழோடு அறியப்பட்டு ‘சந்திரா சிங் பாபா கி ஜெய்’ என்ற முழக்கத்துடன் வாழ்த்திசைக்கப்பட்டார்.

            கட்சி தலைமையகத்தில் நடந்த சிறு கூட்டத்தில் பிசி ஜோஷி உரையாற்றி சந்திரா சிங்குக்குக் கட்சி உறுப்பினர் சிகப்பு அட்டை வழங்கினார். கட்சிப் பணிக்காகச் சந்திரா சிங் லக்னோவுக்கு திரும்ப அனுப்பப்பட்டார். ராணிகெட் பகுதியில் பணியாற்ற அவருக்குப்  பொறுப்பளிக்கப்பட்டது.

            இதன் மத்தியில் 1946 தேர்தல்கள் நடத்தப்பட்டதில் இடைக்கால அரசு உருவானது. சந்திரா சிங்கைத் தேர்தலில் நிறுத்த சிபிஐ முடிவு செய்தாலும் அவர் கார்வாலில் இருந்து போட்டியிடத் தடைசெய்யப்பட்டிருந்தார். கோர்ட் மார்ஷல் உத்தரவு நகலைப் பெற்று தேர்தலில் போட்டியிட கவர்னரின் அனுமதியைப் பெற அவர் அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்பட்டார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு 1946 டிசம்பர் 22ல் அவர் கோட்வார் (Kotdwar) அடைந்தபோது அவருக்கு எழுச்சி மிக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கான அனுமதிக் கடித ஆவணங்களை வேண்டுமென்றே கவர்னர் தாமதப்படுத்தினர்; தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால கெடு முடிந்த அரை மணி நேரம் அழித்தே அனுமதிக் கடித்தை வழங்கினார். எனவே கட்சி, காங்கிரஸ் கட்சியின் முற்போக்கு வேட்பாளர் டாக்டர் கௌரலாவை ஆதரித்தது; அவருடைய வெற்றிக்காகச் சந்திரா சிங்கே தேர்தல் பணியாற்றினார். 

டெஹ்ரி சமஸ்தான அரசை எதிர்த்துப் போராட்டம்

          பௌரி கட்சி மையமாக்கப்பட்டது. சந்திரா சிங், சக்லானியும் மற்றவர்களும் கட்சிக்காகவும் டெஹ்ரி சமஸ்தான அரசை (Tehri princely state) எதிர்த்தப் போராட்டங்களுக்காகவும் கடுமையாக உழைத்தார்கள். 1948 ஜனவரி 11ல் சக்லானி சுடப்பட்டு மாண்டார், மோலு சிங்கும் களபலி ஆனார். கொல்லப்பட்ட அவர்களின் உடல்களைச் சுமந்து கொண்டு மிகப் பிரம்மாண்டமான பேரணி மலைகளின் ஊடாகப் பல நாட்களுக்குச் சந்திரா சிங் மற்றும் பிறர் தலைமையில் நடந்து சென்றது. இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு சந்திரா சிங் பிரகடனப்படுத்தினார் : “டெஹ்ரி விடுதலை ஆனது!”

            இதன் பிறகு சில காரணங்களால் சந்திரா சிங் கட்சி உறுப்பினரிலிருந்து விலகினார். 1952ல் கோட்வார் வந்த பிசி ஜோஷி அவரைச் சமாதானப்படுத்தி உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்கச் செய்தார். அதன்படியே அவரும் மீண்டும் கட்சி உறுப்பினர் ஆனார். 1979 ஆகஸ்டில் கோட்வாரில் சந்திரா சிங் மிகக் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். ஒரு மருத்துவமனையில் 1979 அக்டோபர் 1ம் தேதி அந்த வீரத் திருமகன் உயிர் நீத்தார்.

            அவருடைய நினைவாக இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது.

            மகாத்மா காந்தி ஒருமுறை கூறினார் : “என்னிடம் மட்டும் நான்கு சந்திரா சிங் கார்வாலிகள் இருப்பார்கள் என்றால், தேசம் பல ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை பெற்றிருக்கும்!

-- தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment