Wednesday 7 October 2020

ஏங்கல்ஸ் 200வது பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

ஏங்கல்ஸ் 200வது பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை

பாராளுமன்ற அமைப்புகள், பொது வாக்குரிமை பற்றி

பிடெரிக் ஏங்கல்ஸ்



--அனில் ரஜீம்வாலே

(நியூஏஜ் அக்.4 – 10 இதழ்)

            இந்த ஆண்டு பிடெரிக் ஏங்கல்ஸ் அவர்களின் 200வது பிறந்தநாளை (1820 நவம்பர் 28 …1895 ஆகஸ்ட்5) கொண்டாடி வருகிறோம். அவர் காரல் மார்க்சுடன் சேர்ந்து மார்க்ஸியத்தை உருவாக்கிய இணைபடைப்பாளியும் தலைச்சிறந்த கோட்பாட்டாளரும் ஆவார். அவருடைய நூல்கள், கட்டுரைகள் மற்றும் பங்களிப்புகள் தற்போதுதான் உரிய முக்கியத்தும் பெறுகின்றன. இதுவரை அவர் மார்க்சின் பேருரு நிழலில் மறைவாய் இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் ஒருபோதும் அவர் புகழ்வெளிச்சத்திற்கு விரும்பியதில்லை என்பது மட்டுமல்ல, எப்போதும் பின்னணியிலேயே தன்னை இருத்திக் கொண்டு, தனது உயிர் நண்பர் மார்க்சிற்கே முக்கியத்துவம் அளித்தார். உண்மையில் எந்த நூல் படைப்புகளுமே தனியாக மார்க்ஸ் அல்லது ஏங்கல்ஸால் தனியாக எழுதப்பட்டதில்லை; அநேகமாக அவர்களுடைய எழுத்துகள் எல்லாம் கூட்டுப் படைப்புகளே.  

            ஏங்கல்ஸ் மற்றும் மார்க்ஸ் கருத்துகளில் ஏராளமானவை இன்றைக்குப் பொருந்துவதாக உள்ளன. இன்றைய உலகில் பொதுவாகவும், குறிப்பாக இந்திய நிலைமையில் மிகவும் பொருத்தமுடையது, அனைவருக்கும் பொது வாக்குரிமை மற்றும் பாராளுமன்ற அமைப்புகளின் முக்கியத்துவம் குறித்து அவர்கள் எழுதியுள்ள கருத்துகள். அமைதி வழியிலான (சமூக) மாற்றங்கள் மற்றும் ஜனநாயக, பாராளுமன்ற அமைப்புக்களைப் பயன்படுத்துவது பற்றி ஏங்கல்ஸ் எழுதி உள்ளவை ஜனநாயகம் பற்றிய ஏங்கல்சின் மிகப் பெரிய பங்களிப்பு எனலாம். ஆனால் துரதிருஷ்டம் இந்தப் பங்களிப்புகள் போதுமான உரிய கவனம் பெறவில்லை என்பதைவிட, பொதுவாக அது குறித்து அறிந்து கொள்ளப்படவே இல்லை. ஆனால் இந்தத் துறையில் அவரது உழைப்பும் பங்களிப்பும் அசாதாரணமானது. உண்மையில் அவரது போதனைகள் இன்றைக்குக் கூடுதல் பொருத்தப்பாடு உடையதாகிறது; (காரணம்,) உலகெங்கிலும் பாராளுமன்ற மற்றும் ஜனநாயக அமைப்புகள் பரவி உள்ளதும், புரட்சியாளர்கள் அதனை மக்கள் நலனுக்காக எப்படித் திறமையாகப் பயன்படுத்துவது என்பதைக் கற்றும்  வந்துள்ளார்கள் என்பதே.

பாராளுமன்ற வடிவிலான போராட்ட முறைகளுக்கு உரிய கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கவில்லை என்பதே மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் பற்றிய பரவலான தவறான அபிப்பிராயம். இது முற்றிலும் மிக மிகத் தவறானது, எப்படி என்று (கட்டுரையில் தொடர்ந்து) பார்ப்போம்:

பாராளுமன்ற வழிமுறைகளில் போராட்டம் குறித்து ஏங்கல்ஸ்

தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை, பாராளுமன்ற அமைப்புகளைப் பயன்படுத்தல் குறித்து மார்க்ஸ், ஏங்கல்ஸ் இருவரும் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளனர். “புரட்சிகர பாட்டாளி வர்க்கக் கடமைகளில் முதலாவதும் முக்கியமானதுமான, ‘ஜனநாயகத்தில் பொது வாக்குரிமையை வென்றடைவது’ எனக் கம்யூனிஸ்ட் அறிக்கை ஏற்கனவே பிரகடனப்படுத்தி உள்ளது” என மார்க்ஸ் எழுதிய ‘பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள்’ என்ற நூலுக்கு 1895ல் எழுதிய முகவுரையில் பிடெரிக் ஏங்கல்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து தெளிவாவது, தொழிலாளி வர்க்கம் மற்றும் அதன் அரசியல் கட்சிகளுக்குப் பொது வாக்குரிமை என்பதன் முக்கியத்தும் குறித்து ஏங்கல்ஸ் மற்றும் மார்க்ஸ் கேள்வி எழுப்பி, அதன் மீதான கம்யூனிஸ்ட்களின் அணுகுமுறை குறித்தும் விளக்கி உள்ளனர் என்பதே.

மார்க்சும் ஏங்கல்சும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்கள் மற்றும் ஜனநாயக முறைகளிலான போராட்ட வடிவங்களுக்குப் பெரும் முக்கியத்தும் அளித்தனர். ஆனால் பெரும்பாலான மக்களிடம், ‘அவர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் பெரும் ஆதரவாளர்கள்’ என்று பதிந்துள்ள கருத்து, முற்றிலும் தவறானது. இக்கருத்து உண்மைக்கு முற்றிலும் மாறானது, உண்மைக்கு வெகு தொலைவில் இருப்பது. ஆயுதப் போராட்டத்தைப் பரிந்துரைத்த ஒரு தருணம், ஒற்றை மேற்கோள் அவர்களுடைய நூல்களில் ஒரு இடத்தில்கூட காணப்படவில்லை. 1830கள் மற்றும் 40களில் இங்கிலாந்து தொழிலாளர்கள் நடத்திய வரலாற்றுப் புகழ்மிக்கச் ‘சாசன இயக்கம்’ (Chartist movement) குறித்த அவர்களின் மதிப்பீடுகளிலிருந்து மார்க்ஸ் மற்றும் ஏங்கல்சின் அணுகுமுறை மிகத் தெளிவாகிறது.      

இங்கிலாந்தின் மக்கள் உரிமை சாசன இயக்கம் (Chartist Movement)

            (சாசன இயக்கம் என்பது 1836ல் துவங்கிய தொழிலாளர் வர்க்க இயக்கமாகும்; 1848வரை தீவிரமாகச் செயல்பட்டது. சாசனவாதிகளின் நோக்கம், தொழிலாளர் வர்க்கம் செல்வாக்கும் அரசியல் உரிமையும் பெற வேண்டும். ‘சார்ட்டர்’ (சட்டபூர்வமான ஆவணம்) என்ற சொல்லில் இருந்து இந்தப் பெயர் வந்தது. தங்கள் நோக்கங்களை 6 கோரிக்கைகளாகப் பட்டியலிட்டனர்)

            சாசன இயக்கம் இரண்டு முக்கியமான அரசியல் கோரிக்கைகளை முன்வைத்தது: ஒரு நாளைக்கு 10 மணிநேரம் மட்டுமே வேலை, மற்றும், தொழிலாளர்களுக்கு வாக்கு அளிக்கும் உரிமை. இந்தக் கோரிக்கைகளை மார்க்சும் ஏங்கல்சும் கேந்திரமான ஜனநாயகக் கோரிக்கைகள் என்று உயர்வாக மதிப்பிட்டனர்.

            ஏங்கல்சின் ‘இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்க நிலைமை’ (1845) என்ற வீரிய வித்தான படைப்பாக்கத்தில், லண்டன் பொதுத் தொழிலாளர்கள் அஸோசியேஷனின் குழு ஒன்று, வில்லியம் லவ்ட் என்ற பெட்டிகள் செய்பவர் தலைமையில், 1838ல் மக்கள் உரிமை சாசனத்தை வரைந்ததைக் குறிப்பிடுகிறார். சாசனத்தின் 6 முக்கியமான கோரிக்கைகள், 21 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை, இரகசிய வாக்குச் சீட்டு, (சொத்துடைமை தகுதி நிபந்தனையை நீக்கி) சொத்து இல்லாத நபரும்கூட பாராளுமன்ற உறுப்பினர் ஆதல், ஆண்டுதோறும் பாராளுமன்ற கூட்டங்களை நடத்துதல் இவற்றோடு சமமான தேர்தல் தொகுதி மாவட்டங்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்கல்  என்பன.

            ஏங்கல்ஸ் அதே படைப்பில் சாசனயிசம், சமூக மற்றும் வர்க்க இயக்கமுமாகும் என்று கூறியுள்ளார். மக்கள் சாசன இயக்கத்தின் இந்த ‘ஆறு அம்சங்கள்’தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் கோருவதற்குத் தொடக்கமாயின. எதிர்கால இலட்சியங்களை முழுமையாக அடைய சாசனம் ஒரு கருவியானது என ஏங்கல்ஸ் வலியுறுத்துகிறார்.

            வளர்ந்து வரும் தொழிலாளி வர்க்கம் தனது கருத்துகளை ஜனநாயக அமைப்பின் தளங்களில் வெளிப்படையாக வைக்க வேண்டும் என வலியுறுத்தும் மார்க்சும் ஏங்கல்சும், தொழிலாளர் இயக்கங்கள் இரகசியமாகச் செயல்படுவதற்குக் கடுமையாக எதிரானவர்கள். மக்கள் சாசன இயக்கம் வெகு அதிக காலம், ஏறத்தாழ 1836 முதல் 1844வரை, நடைபெற்ற நீண்டதொரு போராட்டம். தொழிலாளர்கள் அனைவருக்கும் பொது வாக்குரிமை கோரி எண்ணற்ற வேலைநிறுத்தங்கள், ஆர்பாட்டங்கள் இங்கிலாந்து முழுவதும் நடைபெற்றன. ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்தியக்கம் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடைபெற்றது. பேரணியில் வண்டி வண்டியாகப் பல இலட்சக் கணக்கான பேர்களின் கையெழுத்திட்ட கோரிக்கை மனுக்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று முக்கிய பெட்டிஷன்கள்

            1839 ஜூனில் 13 லட்சம் கையெழுத்துகள்; 1842 மே மாதத்தில் 33 லட்சம் கையெழுத்துகள்;  மற்றும் 1848 ஏப்ரலில் சுமார் 60 லட்சம் கையெழுத்துகள் சமர்ப்பிக்கப்பட்டன. மூன்றாவது முறை 1848ல் சமர்ப்பிக்கப்பட்ட கையெழுத்துகள் அன்றைய பிரிட்டன் மக்கள் தொகையில் 20 சதவீதம்! கடைசி பெட்டிஷன் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. அந்த இயக்கத்தை முன்னின்று அமைத்து நடத்திய லண்டன் வொர்க்கிங்மென் அஸோசியேஷன் மற்றும் நேஷனல் சார்ட்டிஸ்ட் அஸோசியேஷன் அமைப்புகளின் புகழ்பெற்ற தலைவர்களான ஜூலியன் ஹார்நே மற்றும் ஓ’கான்னார் முக்கியமானவர்கள். இதில் ஓ’கான்னார் (O’Connor) சாசன இயக்கத்தின் சார்பில் 1842ல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பாராளுமன்ற உறுப்பினர். வில்லியம் கஃப்பி மற்றும் ஜான் ஃப்ராஸ்ட் மற்ற தலைவர்கள்.

            ஏங்கல்ஸ் தனது (1847) அறிக்கையில், ’ஃபிரடேர்னல் டெமாகிரட்ஸ்’ (சகோதர ஜனநாயகவாதிகள்) அமைப்பினர், மக்கள் சாசன இயக்கத்தோடுச் சேர்ந்து பணியாற்றியதை உயர்வாகப் புகழ்ந்துரைத்தார்.

            ‘லீக் ஆஃப் ஜஸ்ட்’ (நியாயவாதிகள் கழகம்) அமைப்பு (1836 --47) இரகசியமான தனது செயல்பாடுகளைக் கைவிட்டு, வெளிப்படையான அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்பதே அந்த அமைப்பில் இணைவதற்கு மார்க்சும் ஏங்கல்சும் விதித்த நிபந்தனை. இந்த லீக் 1847ல் கம்யூனிஸ்ட் லீக் (கட்சி) என்று மாற்றம் பெற்றது. பல தலைவர்கள் குறிப்பாக அராஜகவாதிகள் (அனார்க்கிஸ்ட்) இரகசியமாகச் செயல்படத் தலைப்பட்டது மட்டுமல்ல, வெளிச் சூழல் (இயல்பாக இருந்து) கோராதபோதே ‘தலைமறைவு’ வாழ்க்கைக்கு அறைகூவல் விடுத்தனர். அவர்களை ஏங்கல்சும் மார்க்சும் மிகக் கூர்மையாக விமர்சித்தனர்.

ஜெர்மன் தொழிலாளர்களின் கட்சியின் தேர்தல் வெற்றிகள் குறித்து ஏங்கல்ஸ்

 [இரண்டு கலைச் சொற்கள் UNIVERSAL ADULT SUFFRAGE மற்றும் UNIVERSAL ADULT FRANCHISE. இரண்டும் ஒரே அர்த்தம் உடையதாகத் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நுட்பமாக முதலாவது (வேலையில்லாதவர்கள் மற்றும் பெண்களைத் தவிர்த்து) வயது வந்த வேலையில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் வாக்குரிமை என்றும்; இரண்டாவது, தற்போதுள்ள வயது வந்த அனைவருக்கும், ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி, வாக்குரிமை என்றும் சொல்லப்படுகிறது. – மொழிபெயர்ப்பாளர் இணைத்தது]

வயது வந்தோர் அனைவருக்கும் வாக்கு உரிமையை ஜெர்மன் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் கட்சியான ‘ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி’ (SDP) சிறப்பாகப் பயன்படுத்தியது குறித்து ஏங்கல்ஸ் மிக விரிவாக ஆராய்ந்துள்ளார். அந்தக் குறிப்பு ‘பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள்’ என்ற மார்க்சின் நூலுக்கு அவர் எழுதிய முகவுரையில் (1895) இடம் பெற்றுள்ளது. பாட்டாளிகளின் போராட்டத்தில் அனைவருக்கும் வாக்குரிமை என்பது முற்றிலும் புதிய முறை என்று கருதும் ஏங்கல்ஸ், அது மிகவும் ஆற்றல் மிக்கது, அதன் மூலம் தொழிலாளர் வர்க்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து அரசமைப்பது மட்டுமல்ல, அதன் உதவியோடு சோஷலிசத்திற்கான தொடர்சியான மாறுதல்களைச் சமூகத்தில் ஏற்படுத்தவும் முடியும் என்று கூறுகிறார். மேலும் ஏங்கல்ஸ், ஜெர்மன் தொழிலாளர்கள், “பிற நாடுகளில் இருக்கும் தங்கள் தோழர்களுக்கு ஒரு புதிய ஆயுதத்தை, மிகக் கூர்மையான ஆயுதத்தை, அனைவருக்கும் வாக்குரிமையை எப்படிப் பயன்படுத்துவது என்பதை எடுத்துக்காட்டி” மிகப் பெரிய சேவையை ஆற்றியிருக்கிறார்கள் என்று புகழ்ந்து எழுதியுள்ளார்.

அனைவருக்கும் வாக்குரிமையை அறிவார்ந்த முறையில் ஜெர்மன் தொழிலாளர்கள் பயன்படுத்தியதால், அவர்களுடைய கட்சியிலும் (SDP) பிரமிப்பூட்டும் வளர்ச்சி ஏற்பட்டது என ஏங்கல்ஸ் விமர்சனக் குறிப்பில் குறிப்பிடுகிறார். SDP-ன் மறுக்க முடியாத ஓட்டு எண்ணிக்கை உயர்விலிருந்து இது தெளிவாகிறது: 1871: 1,02,000; 1874: 3,52,000; 1877: 4,93,000.  சோஷலிச எதிர்ப்புச் சட்டம் ஜெர்மனியில் 1878ல் கொண்டு வரப்பட்டது. SDP கட்சி அமைப்புகள், வெகுஜன தொழிலாளர் அமைப்புகள், தொழிலாளர்களின் அச்சகம் தடை செய்யப்பட்டு, சோஷலிசப் பிரசுரங்கள் பறிமுதலுக்கு உள்ளாயின. 1890ல் கடுமையான பெருந்திரள் தொழிலாளர் போராட்ட இயக்கங்கள் தந்த நெருக்கடியால் அந்தத் தடை நீக்கப்பட்டது. 1881ல் தற்காலிக பின்னடைவுக்குப் பிறகு SDP கட்சி, அந்தச் சட்டம் இருந்தபோதும், தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்தது. 1884ல் 5,50,000 வாக்குகளும் 1887ல் 7,63,000; 1890ல் 14,27,000 வாக்குகளும் பெற்றது. இப்படி அதிகரித்த வாக்குகள் ஏங்கல்ஸ் உயிரோடு இருந்த காலத்தில் (அவர் 1895 ஆக.5ல் மறைந்தார்) 17 லட்சத்து 87ஆயிரம் வரை அல்லது பதிவான மொத்த வாக்குகளில் கால் பங்கு என அதிகரித்தது.

SDP ஜெர்மனியில் பலம் பொருந்திய கட்சிகளில் ஒன்றானது. அது பெற்ற வாக்குகள் சதவீதம் 1898ல் 27.2% (30லட்சம் வாக்குகளுக்கு மேல்) 1912ல் 34.8% (40 லட்சம் வாக்குகளுக்கு மேல்). ஜெர்மன் SDP கட்சி பெருந்திரள் அமைப்பாகவும் நாட்டின் மிகப் பெரிய கட்சியாகவும் ஆனது. 1907ல் அந்தக் கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட தினசரி நாளிதழ்களை நடத்தியது!

ஜெர்மானிய SDP கட்சி தேசியத் தேர்தல்களில் அடைந்த வெற்றி குறித்த பிடெரிக் ஏங்கல்சின் விமர்சனக் குறிப்புகளும் ஆய்வுகளும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் கூரியதாகவும் உள்ளன. அவை தேர்தல் நிகழ்முறைகள் மற்றும் பாராளுமன்ற அமைப்புகள் பற்றிய மார்க்சியத்தின் அடிப்படைக் கொள்கைகளின் கண்ணோட்டம் என்ற பகுதியாக இடம் பெறுகின்றன.

வாக்குப் பெட்டியை அறிவார்ந்த முறையில் சிறப்பாகப் பயன்படுத்தியதற்காக ஜெர்மன் தொழிலாளி வர்க்கத்தை ஏங்கல்ஸ் உயர்வாகப் புகழ்கின்றார். மேற்கண்ட முன்னுரையில், வெற்றிகரமாக வாக்குரிமை பயன்படுத்தியதன் மூலம், “முற்றிலும் புதியதான பாட்டாளிகளின் போராட்ட முறை பயன்பாட்டிற்கு வந்து விட்டது” என்று கூறினார். இந்த முறை விரைவாக மேலும் வளர்ச்சி அடைந்தது. அரசு அமைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்குத் தொழிலாளி வர்க்கத்திற்குப் புதிய வாய்ப்புகளும் புதிய ஆயுதங்களும் கிடைத்துள்ளன. தொழிலாளர்கள் டயட் எனப்படும் அரசு மன்றங்கள், நகராட்சி கவுன்சில்கள் மற்றும் தொழிலாளர் நீதிமன்றங்களுக்கான தேர்தல்களில் பங்கு பெறுகின்றனர். முதலாளிகள் மற்றும் அரசுகள் தொழிலாளர் கட்சியின் சட்டவிரோத செயல்பாடுகளுக்குப் பதில், தற்போது அதன் சட்டப்படியான போராட்டங்களுக்கு –“தொழிலாளர் கட்சியின் கலகத்தைவிட, தேர்தல் முடிவுகளில் அதுபெறும் வெற்றி”களைக் குறித்து -- அதிகமாக அச்சப்படுகின்றன. தெருச்சண்டைகள் மற்றும் தடைகளை ஏற்படுத்திப் போராடுவது மற்றும் பொதுவாக ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் மீதான மாயையை விட்டொழிக்க ஏங்கல்ஸ் அறைகூவல் விடுகிறார். தற்போது நவீன சாலைகள் முன்பைவிட அகலமாகி இருப்பதையும், பெரிய நகரங்கள் இன்னும் பெரியதாக மாறி இருப்பததையும், அரசுப் படைகள் முன்னிலும் பெருத்ததாகவும் அதிநவீனமாக்கப்பட்டிருப்பதையும் ஏங்கல்ஸ் மிக அறிவார்ந்த முறையில் சுட்டிக்காட்டுகிறார். எனவே புரட்சியாளர்கள் ஆயுதப் புரட்சியை மேற்கொள்வது பைத்தியக்காரத்தனமாக முடியும்; ஆயுதப் போராட்டம் இறுதியில், மிக அரிதாகவே, ஒருக்கால் தேவைப் பட்டால் மட்டுமே.

மிகுந்த பொருள் பொதிந்த முறையில், ஒரு வகையில் எச்சரிப்பதாகவும் ஏங்கல்ஸ் கூறுவார், “நாம் அவ்வளவு முட்டாள்கள் இல்லை” எவ்வாறு, “எங்கே துப்பாக்கிகள் சுடும், பட்டாக்கத்திகள் வெட்டும்” அந்த இடத்திற்கு,  எதிரிகள் விரும்புகிற மாதிரி,  நாம் சென்று அகப்பட்டுக் கொள்வதற்கு. (ஆளும் வர்க்க எதிரிகள் தொழிலாளி வர்க்கத்தை ஆத்திரமூட்டி, ஆயுதப் புரட்சிக்கு உந்தித் தள்ளும் பிரச்சனையில் தொழிலாளி வர்க்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஏங்கல்ஸ் எச்சரிக்கிறார்.)

            “மிகுந்த வலிமையும், மிகச் சிறந்த கட்டுப்பாடும், அதிவிரைவாக வளரும் சோஷலிசக் கட்சி” என ஜெர்மன் SDP கட்சியை ஏங்கல்ஸ் உயர்வாகப் புகழ்ந்துரைக்கிறார். மேலும், ஜெர்மன் SDP கட்சி தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் சிறப்பான பங்கும் சிறப்பான கடமையும் –அதாவது நிதானமாக ஆட்சி அதிகாரத்தை நோக்கி முன்னேறுவதை – கொண்டுள்ளது என்று கூறுவார். ஜெர்மன் SDP கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்கள் உலகத் தொழிலாளர் இயக்கத்தின் “அதிர்வு உந்து சக்தி” என ஏங்கல்ஸ் அதன் குணாம்சத்தை விரித்துரைப்பார்: “வாக்குப் பெட்டியில் விழுந்த 20 லட்சம் வாக்குகளும், அந்த வாக்காளர்களோடு உடன் நின்ற வாக்குரிமை இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்களுமாகச் சேர்ந்து மிகப் பிரம்மாண்டமான திரளாக, ‘சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் படை’யினுடைய முடிவை நிச்சயிக்கும் ஆற்றல்மிக்க “அதிர்வு உந்து சக்தி” ஆவர். ஏற்கனவே இவர்கள், வாக்களித்த மொத்த வாக்காளர்களில் 25 சதவீதத்தினர் என்ற அளவிளானவர்கள். ரீச்ஸ்டாக் (ஜெர்மன் பாராளுமன்ற) இடைத் தேர்தல்கள், மாநிலங்களின் டயட் சபை தேர்தல்கள், மற்றும் கீழமை அமைப்புகளின் தேர்தல்களில் தொழிலாளர் இயக்கம் தொடர்ந்து வளர்ச்சியை அடைந்து வந்தது. இந்த வளர்ச்சியை ஏங்கல்ஸ் பின்வருமாறு, “இந்த வளர்ச்சி தன்னியல்பாக, நிதானமாக, எதிர்க்க முடியாதபடி மற்றும் அதே நேரத்தில் அமைதியான இயல்பான நிகழ்வாய் முன்னேறி வருகிறது” குறிப்பிட்டுள்ளார். இந்த வளர்ச்சிக்கு எதிரான அரசின் தலையீடு பலமற்றதாக ஆனது என மேலும் கூறுவார். இந்த வளர்ச்சி இதே போக்கில் தொடருமானால், இந்த நூற்றாண்டின் முடிவில், “சமூகத்தின் பெரும்பான்மையான நடுத்தர (வர்க்கப்) பகுதிகளையும், சிறு முதலாளிகள் மற்றும் சிறு விவசாயிகள் ஆதரவை வெல்ல முடியும்; இந்த மண்ணின் கேந்திரமான முடிவெடுக்கும் சக்தியாக வளர்வதுடன், அந்தச் சக்தியின் முன் ஏனைய பிற சக்திகளெல்லாம் –அவர்கள் விரும்புகிறார்களோ, இல்லையோ– பணியத்தான் வேண்டும்” என (நூல் முகவுரையில்) குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏங்கல்ஸ் மிகவும் பொருள் பொதிந்து, ‘எப்படி இந்தச் சக்தியை -–தலையீடு இன்றி-- கெட்டியாக ஒருங்கிணைத்து, தற்போது அமலில் இருக்கும் சிஸ்டத்தின் முறைமையைத் தாண்டிச் செல்லும் வரை எடுத்துச் செல்வது’ என்பது பற்றி ஆலோசனைகள் கூறுவார். அதில் தடைப்படுத்த முடியாத இந்த (வளர்ச்சி) நிகழ்முறையில் இடையூறு செய்து தடைப்படுத்தக் கூடிய ஒரே வழி என்பது பற்றிய ஏங்கல்சின் மிக முக்கியமான அறிக்கை: “இராணுவத்தோடு மிகப்பெரிய அளவில், 1871 பாரீசில் இரத்த ஆறு ஓடியதைப் போன்று, மோதலில் ஈடுபடுவது” (அதாவது அத்தகைய மோதல் ஒன்றே ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் வளர்ச்சியைத் தடுப்பதில் முடியும்).  எனவே பாட்டாளி வர்க்கத்தையும் அதன் கட்சியையும் அதீத அவசரம், தேவையற்ற – சிந்தனை அற்ற நடவடிக்கை, ஆத்திரப்பட்டு இராணுவத்தோடு அதீத சாகசமாக மோதலில் ஈடுபடுவது இவற்றிற்கு எதிராக ஏங்கல்ஸ் எச்சரிக்கிறார். அதீத பைத்தியக்கார ஆர்வத்தோடு தெருச் சண்டையில் இறங்குவது போன்ற எல்லைக்குச் சென்றுவிடலாகாது எனப் புரட்சியாளர்களை ஏங்கல்ஸ் கேட்டுக் கொள்கிறார். [இதை மொழிபெயர்க்கும் போது வரலாற்றுத் தலைவர்கள் வரிசை கட்டுரைகளில் 1948 இந்தியச் செக்டேரியன் போக்குகளால் சிபிஐக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து தோழர் அனில் ரஜீம்வாலே குறிப்பிடுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. விடுதலை அடைந்த இந்தியாவில் காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சியாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது என்பதை ஜெர்மன் SDPகட்சி வளர்ச்சியோடு ஒப்பிட முடிகிறது. –மொழிபெயர்ப்பாளர்]

“உலக வரலாற்றின் முரண்நகை அனைத்தையும் மேல் கீழாகப் புரட்டிவிடுகிறது” : புரட்சியாளர்கள், (பழையவற்றை) ‘புரட்டி வீசிஎறிபவர்கள்’, அந்தச் சட்டவிரோதமான முறையான தூக்கி வீசிஎறிதலுக்குப் பதிலாகச் சட்டவழியிலான முறைகளில் அடைவதை மேலானதாக எண்ணுகிறார்கள் என எழுதும் ஏங்கல்ஸ் மேலும் கூறுவார்: “(ஆளும் வர்க்க) எதிரிகளை மகிழ்விக்கும் வகையில், பைத்தியக்காரத்தனமாக நாம் தெருச் சண்டைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருப்போமானால், இறுதியில் அந்தச் சட்ட திட்டங்களின் காரணமாகத் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதைத் தவிர, அவர்களுக்குச் செய்வதற்கு எதுவும் எஞ்சியிருக்காது.”

வாக்குப் பெட்டியின் மூலம் ஜனநாயக உரிமைகளைச் சாதித்த பிறகு, சோஷலிசப் புரட்சியை அடைவதற்கான சாதனமாக மார்க்சும் ஏங்கல்சும் வாக்குப் பெட்டியைப் பார்த்தனர்.

இப்போது ஏங்கல்ஸ் போதனைகளின் முக்கியத்துவம்

           இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகான சகாப்தத்தில், குறிப்பாக 21ம் நூற்றாண்டில், பாராளுமன்ற அமைப்புகள், வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை --  முன்பு எப்போதுமில்லாத அளவு பரவியுள்ளது. ஜனநாயகம், வாக்குரிமை, கருத்துரிமை மற்றும் ஊடக உரிமை, அரசியலமைப்பைப் பாதுகாப்பது என்பதற்கான போராட்டங்கள், நமது நாட்டில் காணப்படுவது போலவே, முக்கியத்துவம் அடைந்துள்ளன. லத்தீன் அமெரிக்கா, நேபாளம், மேற்கு ஐரோப்பா மற்றும் பல நாடுகளின் நிகழ்வுகள் ஜனநாயகம் மற்றும் சோஷலிச அமைப்புகளின் மாறுதல்களைச் சுட்டிக் காட்டுகின்றன; அவை கடந்த காலத்திலிருந்து தீவிரமாக வேறுபடுகின்றன. 12க்கும் மேற்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி ஜனநாயக சக்திகள் கடந்த இருபது ஆண்டுகளாகப் பெருந்திரள் மக்கள் இயக்கங்களின் ஆதரவோடு தேர்தல்கள் மூலம் ஆட்சிஅதிகாரத்திற்குத் தொடர்ச்சியாக வந்து அரசு அமைப்பதைப் பார்க்கின்றோம். இது (இந்த வெற்றி) நிச்சயம் இன்னும் சோஷலிசம் அல்ல, ஆனால் சோஷலிசத்திற்கான அஸ்திவாரத்தை நிச்சயம் இது நிறுவும்.

21ம் நூற்றாண்டில் ஜனநாயகம் மற்றும் சோஷலிசத்திற்கான மாற்றம் --ரஷ்யா, சீனா, கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளில் ஏற்பட்டதிலிருந்து --குணாம்ச ரீதியில் வேறுபட்டதாக இருக்கும். எப்போதையும் விட இன்று ஜனநாயகப் புரட்சி பேரளவிலான முக்கியத்தும் உடையது. இது குறித்தக் கேள்விகளுக்கு மார்க்ஸ் மற்றும் ஏங்கல்சின் போதனைகள் இன்றைக்கு மேலும் பொருத்தமுடையது. அதன் பின் புதிய அம்சங்களை நாமும்கூட சேர்க்க வேண்டிய தேவை உள்ளது.

   --தமிழில் : நீலகண்டன்,

 என்எப்டிஇ, கடலூர்

பின்குறிப்பு : பீகார் தேர்தல் நிதி வழங்கி விட்டீர்களா? 

No comments:

Post a Comment